Monday, March 6, 2017

அரைநூற்றாண்டு திராவிட ஆட்சி


திராவிட இயக்கம் வேறு திராவிட அரசியல் கட்சிகள் வேறு.
திராவிட இயக்கத்தின் பலனை அனுபவித்தவர்கள்
 திராவிட அரசியலை விமர்சிப்பது செய்நன்றி கொன்ற குற்றமாக
 கருதுவது எவ்வகையான பகுத்தறிவு ?!!
*
'
1967ல் திராவிட அரசியல், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதைத்
 தொடர்ந்து இந்த அரைநூற்றாண்டு திராவிட அரசியலின்
 விளைவுகளை அனைவரும் பேசுகிறார்கள். இந்த விளைவுகளுக்குப்
பொறுப்பு திமுகவும் அதிமுகவும் என்றாலும் அதிகமாக
 விமர்சனத்திற்கு உள்ளாவது திமுக மட்டுமே! 
இதுவே திமுகவுக்கு இன்று எஞ்சியிருக்கும் ஆகச்சிறந்த பெருமை,
 மதிப்பு, மரியாதை, வெகுமதி..எல்லாமே..
அதிமுகவில் பெயரளவில் மட்டுமே அண்ணாவும் 
திராவிடக்கட்சியின் அடையாளமும் இருக்கிறது என்பதால் தான்
 விமர்சனங்கள் அனைத்தும் திமுக வை நோக்கியே பாய்கிறது 
என்பது திமுக வுக்கான + பாயிண்ட் தானே!

திமுகவினர் விமர்சனங்களை ஆதாரத்துடன் எதிர்கொள்வதற்கு
 மாறாக மீண்டும் மீண்டும் உணர்ச்சி அரசியல் மட்டுமே
 நடத்திக் கொண்டிருப்பது ஏன்?

திராவிட கட்சிகளின் விளைவுகளை விமர்சனம் 
செய்யும் போதெல்லாம் தமிழகத்தில் நிகழ்ந்த வரலாற்று
 சிறப்புமிக்க சமூக மாற்றங்கள் -
சமஸ்கிருதம் கட்டாயப்பாடமாக இருந்தது நீக்கப்பட்டது முதல் 
பேருந்தில் ஒடுக்கப்பட்டவர்கள் பயணிக்கலாம் என்ற அரசாணை வரை
அனைத்தையும் சட்டமாக்கி முன் உதாரணமாக இருந்தது நீதிக்கட்சி.

நீதிக்கட்சியின் செயல்பாடுகளை இன்று இவர்கள் பேசும் போது
மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்டதை காங்கிரசு கட்சி பேசுவது போலவே இருக்கிறது ...
 நீதிக்கட்சி செய்தவற்றை ..அதே உதாரணங்களை மட்டுமே 
உரத்தக் குரலில் ஒலிப்பதை நிறுத்திவிட்டு 
அண்ணாவின் மறைவுக்குப் பின் திமுகவும் அண்ணாவின் பெயரைச் சொல்லிஆட்சிக்கு வந்த அதிமுகவும் 2017 வரை தமிழக அரசியலில் கொண்டுவந்த சிறந்த
திட்டங்களை .. வெளிப்படையாகப் பேசுங்கள். 
நீங்கள் இலவசமாக கொடுத்தப் பட்டியலை நினைவூட்டி 
பிச்சைக்காரப்புத்தியை வளர்த்ததை தயவுசெய்து
உங்கள் சாதனைகளாக சொல்லாதீர்கள். ப்ளீஸ்.

திராவிட இயக்கம் தமிழ்ச்சமூகத்திற்கு எவ்வளவோ
 நன்மைகளை செய்திருக்கிறது.
திராவிட இயக்கத் தொண்டர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் 
இன்றும் கோடை மழையாய் இருக்கின்றன.
 அதனாலேயே திராவிட அரசியலை விமர்சிக்கவே கூடாது என்பதும் 
அப்படி விமர்சிப்பது "செய்நன்றி கொன்ற குற்றமாக" சித்தரிக்கப்படுவதும் 
பகுத்தறிவுக்கு ஏற்றதா? 
திராவிட இயக்கம் வேறு. திராவிட அரசியல் கட்சிகள் வேறு.
 திராவிட இயக்கத்தின் கொள்கைகளை எல்லாம் நீர்த்து போக வைத்ததற்கு திராவிட அரசியல் கட்சிகளே காரணம்.
ஓர் அரசியல் கட்சி 50 ஆண்டுகளுக்கு முன் சொன்னதை மட்டுமே
 வைத்துக்கொண்டு மாறி வரும் அரசியல் சூழலில் தேர்தலை
 எதிர்கொள்ள முடியாது என்பதை என்னைப் போன்றவர்கள்
 ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது
 இவர்கள் ஊறுகாய் மாதிரி மாநில சுயாட்சியைத் தொட்டுக் கொள்வதும்
ஆரிய திராவிட சிக்கன் 60 சாப்பிடுவதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.
இனியாவது மக்கள் மன்றத்தில் ஆதாரங்களுடன் வாருங்கள். அத்துடன், திமுக, அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், ஆட்சிக்கு வந்தப் பின்
திராவிட அரசியல் கட்சி தலைவர்கள் மாவட்ட வட்டங்கள்
 சட்டசபை நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் சொத்துக்கணக்கை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் மன்றத்தில் வையுங்கள்.
இவர்களைத் தவிர திராவிட என்ற அடையாளத்துடன்
கட்சி ஆரம்பித்து கடையில் இன்றுவரை ஜோராக வியாபாரம்
 செய்துக்கொண்டிருக்கும் மதிமுக, தேதிமுக காரர்களும்
 கட்சி ஆரம்பிப்பதற்கு முன், கட்சி ஆரம்பித்தப் பின்
உங்கள் சொத்துக்கணக்கை வெளியிடுங்கள். 
அப்போதுதான் கூட்டணிகளின் சாயம் வெளுக்கும்!
மக்கள் தீர்மானிக்கட்டும்.
நீங்கள் தானே அடிக்கடி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்..

1 comment:

  1. செய்நன்றி கொன்ற குற்றம் - அப்படியென்றால்...? யாருக்கும் புரியாது...

    ReplyDelete