ஆபரேஷன் சக்சஸ் நோயாளி மரணம்.
இதுதான் நாம் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கும்
சொத்துக்குவிப்பு வழக்கின் வரலாற்று புகழ்மிக்க ( அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்) தீர்ப்பின் முடிவு.
ஊழலுக்கு எதிரான அரசியல்வாதிகள் இனி அச்சப்படுவார்கள் என்பதும் அரசியலில் இனி ஊழலே இருக்காது என்பதும் என்னளவில் இந்திய
அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும்போது
ஒரு மாயக்கனவுலக எண்ணமாகவே - (UTOPIAN THOUGHT) இருக்கிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முதல்
குற்றவாளி மறைந்த "ஜெ" அவர்களின் மறைவும்
மக்கள் மனநிலையும் தலைவர்களின் அஞ்சலி செய்திகளுக்கு அப்பால் சொல்லப்பட்ட வார்த்தைகளும் ஒரு ஃப்ளாஷ்பேக் போல ஓடிக்கொண்டிருக்கின்றன. சசிகலா & அவர் உறவினர்கள் தண்டனைக்குரியவர்கள் தாம் என்பதை
ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் இதையும் சேர்த்தே வாசிக்க
வேண்டி இருக்கிறது.
அதிமுக கட்சியை உடைத்ததும் குழப்பம் ஏற்படுத்தியதும்
பிஜேபிதான் என்று சொல்லும் கருத்துடன் எனக்கு முழுமையான உடன்பாடில்லை.
ஏனேனில் பதவி ஆசைக் காரணமாக முதல்வர் பதவியை
சசிகலா கேட்டிருக்காவிட்டால் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்? சசிகலாவின் முதல்வர் நாற்காலி ஆசை இன்னும் கொஞ்சகாலம் கடந்து வந்திருந்தால் கூட அதிமுகவின் நிலை வேறுமாதிரி இருந்திருக்கும்.
சசிகலாவிடன் இப்படி ஒரு தேவையற்ற விருப்பத்தை
விபரீத ஆசையை அவருடைய பலநாள் கனவை
மிகவும் தவறான நேரத்தில் வெளிப்படுத்த சொன்னது யார்?
பிஜேபியா? திமுக வா? யார்?
இங்குதான் அதிமுக தன்னைத்தானே படுகுழியில்
தள்ளிக்கொண்டிருக்கிறது. இந்தச் சரிவில் வந்து
பந்து விளையாடுவது இந்திய அரசியல் போக்கில்
எப்போதும் நடுவண் அரசில் இருப்பவர்கள் நடத்தும்
விளையாட்டு. காங்கிரசு இருந்தாலும் இதைத்தான் செய்திருக்கும் தோழர்களே.
பிஜேபி வந்துவிடும் வந்துவிடும் என்று இன்றைக்கு
முகநூலில் பலர் அச்சத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
பிஜேபி என்ற ஒரு அரசியல் கட்சி வரவேண்டும் என்றால்
அந்தக் கட்சியின் சில கொள்கைகள் தமிழ்நாட்டில் பெரியார் வாழ்ந்த மண்ணில் வாழும் மக்களிடம் இருக்க வெண்டும்.
பிஜேபியும் இந்துத்துவாவும் பிரிக்க முடியாதவை.
பிஜேபியும் அதை விரும்புவதில்லை. ஆனால் தமிழகத்தில்
மண்சோறு தின்பதும் அலகு குத்துவதும் மொட்டை அடிப்பதுமாக தன் விசுவாசத்தைக் காட்டும் தொண்டர்களை
உருவாக்கி வைத்திருப்பதற்கு பிஜேபி காரணமா அல்லது
இங்கிருக்கும் அரசியல்வாதிகள் காரணமா ? ஊடகங்கள் காரணமா?
சமூகப்புரட்சி செய்த மகான்கள் பலர் இருக்க மதத்தில்
புரட்சி செய்த மகானைத் தேடிக் கண்டுப்பிடித்து அதை
காட்சி வடிவத்தில் காட்டி சொர்க்கவாசல்
கதவைத் தட்டிவிடலாம் என்று நினைக்கும்/ நினைத்தவர்கள்
காரணமா?
1999ல் திமுக பிஜேபியின் அரசியல் கூட்டணியை
ஏப்ரல் 26, 1999 அவுட்லுக் தன் கவர்ஸ்டோரியில்
"ஒரு சகாப்தம் முடிந்தது" this is the end of an era அப்போது அந்த கூட்டணியை அரசியல் சாணக்கியம் என்று சொன்னவர்களும் உண்டுதானே!
சொத்துக்குவிப்பு வழக்கின் நோக்கம் ஊழலுக்கு எதிரானது என்று மட்டுமே புரிந்து கொள்வது ஆபத்தானது. இப்படி சொல்வதால் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவகள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்பதல்ல. அதிகாரம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனையும் போது நீதிமன்ற வாசல்களில் நீதிதேவனின்
தரிசனம் கொடுக்கப்பட்டு புனித நீர் தெளிக்கப்படுகிறது.
அதே அதிகாரம் தனக்குத் தேவை என்றால்
ஊழலின் ராஜாங்கத்திற்கு பத்மவிபுஷன் விருது கொடுத்து
தன்னைக் கவுரவித்தும் கொள்கிறது
. இரண்டு மாறுபட்ட காட்சிகளும் அரசியல் நோக்கம் கொண்டவை.
இந்த சொத்துக்குவிப்பு வழக்கிற்கு அரசியல் நோக்கமில்லை என்று சொல்லிவிட முடியாது. வழக்குத் தொடுத்தவர்களுக்கு வெற்றி என்றாலும் கூட இந்த வெற்றியை அவர்களால் கொண்டாட முடியவில்லை.
ஏனேனில் 'ஜெ"யின் மரணம் முந்திக்கொண்டது.
ஜெ தன்னுடைய மரணத்தின் மூலம் இந்த வழக்கில்
அவர்களை வெற்றி கொண்டுவிட்டார்.
இதுவே ஜெ வின் விசுவாசிகளுக்கு
பெரும் ஆறுதலாக இருக்கிறது.
மாநில அரசுகளை மாநில அரசியல்வாதிகளை அடக்குவதற்கும் மாநிலக்கட்சிகளை உடைத்து சிதைப்பதற்கும்
இந்த வழக்கின் தீர்ப்பை நடுவண் அரசினர்
எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும்
ஆபத்தும் இருக்கிறது.
1000 கட்சிகள் .. அவற்றின் தலைவர்கள்.
ஊழலில் ஊறிப்போயிருக்கும் சமூகம்.
இங்கே எந்த ஒரு அரசியல்கட்சியும் சரி,
அரசியல்வாதியும் சரி, ஊழலற்றவர் என்று
சொல்லிவிட முடியாத நிலையில்
மாநிலக்கட்சிகளின் நிலைப்பாட்டை
இந்திய இறையாண்மையை கவலையுடன்
அணுக வேண்டி இருக்கிறது.
இம்மாதிரியான குழப்பமான சூழலில் தான்
சமூகம் தனக்கான தலைவரை அடையாளம் காணும்
என்பதும் சமூக அரசியல் இயக்கம் உருவாகும் என்பதும்
சமூகவியலாரின் கருத்து.
காளைமாட்டுக்காக காளைமாட்டில் தமிழர் கலாச்சாரம்
காப்பாற்ற எழுந்த இளைஞர்கள் இனி தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளியாக எழுவார்களா?
மாற்று அரசியலை உருவாக்குவார்களா?
களம் காண்பார்களா?
இல்லை வழக்கம்போல...
மாறி மாறி ஓட்டுப்போட்டு
மாறி மாறி ஓட்டுப்போட்டு
தங்கள் ஜனநாயகக்கடமையை
நிறைவேற்றியதாக நினைத்து
எப்போதாவது மெரீனாவில் கூடி தங்கள்
இருத்தலைக் காட்டிக்கொள்வதுடன் நிறுத்திக் கொள்வார்களா..?
இனி,,,
அரசியல் இளைஞர்கள் வசப்படட்டும்.
ஒளி படைத்த கண்ணினாய் வா வாவா...
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா...
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா...
சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா...
#மாற்று அரசியலுக்கான தருணம் இது#
நல்ல பதிவு.
ReplyDeleteதமிழகத்தில் மண்சோறு தின்பதும், அலகு குத்துவதும் மொட்டை அடிப்பதுமாக தன் விசுவாசத்தைக் காட்டும் தொண்டர்களை உருவாக்கி வைத்திருப்பதற்கு யார் கரணம். நியாயம் கொண்ட கேள்விகள்.