Saturday, March 4, 2017

யுகங்களை கடந்துவரும் கைரேகைகள்




தினையரிசியும் பாலும் கலந்து பால்சோறு, அவரைப்பருப்பும் அரிசியும் கலந்த பருப்புச் சோறு, இறைச்சியும் அரிசியும் கலந்து ஊன்துவை அடிசில், புளியும் மோரும் மூங்கிலரிசியோடு கலந்து ஆக்கப்பட்ட புளியங்கூழ் ஆகியன சங்ககால உணவு வகைகைகள் . அதாவது சற்றொப்ப 2500 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கண்ட உணவு தயாரிப்புகளை நாம்  அறிந்திருக்கிறோம்.
இந்த அடிப்படையிலிருந்து தான் இன்றைய பால்சோறு, பாயாசம், பால் கலந்த பிற இனிப்புகள், காய்கறிச்சோறு
(வெஜிடபுள் பிரியாணி/புலாவ்) மட்டன் சிக்கன் பிரியாணி,
புளிச்சோறு, தயிர்ச்சாதம் வகையறாவெல்லாம் கிட்சன்
கில்லாடிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
உணவு என்பதும் உணவு முறை என்பதும் திணை
சார்ந்து பிரிக்கப்பட்டிருப்பது இடம் காலம் சார்ந்த சுற்றுப்புறச்சூழலைக் கணக்கில் கொள்ளும் உணவுமுறை.
உணவு உண்ணும் முறைகளைத் தமிழர் பன்னிரெண்டாக வகுத்திருந்தனர்.

• அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
• உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
• உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
• குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
• தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
• துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
• நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
• நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
• பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
• மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
• மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
• விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.
உணவும் உணவு சார்ந்த அறிவும் துய்ப்புணர்வும்
தமிழரின் வாழ்வியலின் ஓர் அங்கமாகவே தொடர்ந்து
வந்திருக்கிறது. பாலைக் காய்ச்சி உறை மோர் விட்டு
புளிக்க வைத்து தயிராக்கும் முறையையும் அந்த தயிரை
மோராகக் கடைந்து விற்கும் ஆயர்குலப் பெண்களைப்
பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அழகிய காட்சி.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.”    கு.தொ. 167
குறுந்தொகை விவரிக்கும் இக்காட்சி ஒரு பெண் தன் மணவாளனுக்கு முளிதயிர்ப்பிசைந்த தீம்புளிப் பாகரை
எத்துணை ஈடுபாட்டுடன் சமைத்தாள் என்பதையும்
சொல்கிறது. சமையலும் சமைத்தலும் பெண்ணுடன்
சேர்ந்தே  சமூகத்தில் தொடர்கின்றன. அத்தொடர்ச்சியை
வளமைமிக்க தமிழ் உணவு மரபை தன் கவிதைக்குள்
எடுத்துவரும் மு. ஆனந்தனின் தலைப்புக் கவிதை
"யுகங்களின் புளிப்பு நாவுகள்".
அம்மாவின் ரேகையில் முளிதயிர்ப் பிசைந்த குறுந்தொகை
தலைவியின் கைரேகை இருக்கிறது. ஆனால் அம்மாவிடம்
அவள் அணிந்திருந்த கழுவுறு கலிங்கமில்லை. அம்மாவின் விரலும் காந்தள் மென்விரல்களாயில்லை.
ஓரிரவில் மோர் ஊற்றிய பால் தயிராகிறது
"ஓர் யாமத்தில்
கலவியாடி கருத்தரித்து
புலரியில் பெற்றெடுக்கிறது காலம்
புதுத்தயிரை" என்று கவிதையாகும் போது கவிதை வரிகளின் ஊடாக  வாசிக்க முடிகிறது ,
காதலும் காமமும் ஓர் யாமத்தில் கலவியில் கருத்தரிக்கின்றன என்பதையும் . விடியலாக தொடக்கமாக புதுதயிர் உருவாகிவிட்டது என்பதையும்..
அது என்ன புதுதயிர்?
தயிர் என்று சொன்னாலே போதுமே? ஏன் புதுத்தயிர்?
இது வெறும் தயிரல்ல. காலம் காலமாய் தொடர்ந்து
வரும் மோருடன் தசாப்த பாலின் சூலகத்தில் கருத்தரித்து
பிறந்திருப்பதால் இது "புதுதயிர்"
பசுமாடு வளர்ப்பும் பால் விற்பனையும் மோர்க்கடைந்து விற்ற முல்லை நிலப்பெண்ணும் அறியாத புதுத்தயிர்.
என்றைக்கு நம் மண்ணில்  ஆவின்பால் நிறுவனமயமாகி தொழில்மயமாகி பசுமாடுகள் எல்லாம் கறவைமாடுகளாக பால்மாடுகளாக மாறியதோ அன்று முதல், 
"அந்த தசாப்த பாலில் சூலகத்தில்
சதாப்த மோர் கருத்தரித்து" கிடைக்கும் புதுத்தயிர்.
(தசாப்தம் - பத்து ஆண்டுகள், சதாப்தம் - நூறு ஆண்டுகள்,
சஹஸ்ரம் - ஆயிரம் ஆண்டுகள்)
இந்த தயிரைக் கடையும் போது தயிர் மத்தின் சலசலப்பில்
கடந்த கால முல்லை நிலமும் ஆயர் குலப் பெண்ணும்
அவள் முளிதயிரும் ஏன் அணிந்திருந்த ஆடையும்
 பின்னோக்கி இழுத்துச் செல்லும் நினைவுக் கடைசலில்
வெண்ணெய்யாக திரளுகின்றன..
அதனால் தான் மோர்க்கடையும் கலயச்சுவர்களை
முகம் சுழிக்கின்றனவாம்!
"பின்னோக்கி  கடையும்
தயிர் மத்தின் சலசலப்பில்
காலாதி காலங்கள் பிரசவித்த
மோர்த்துளி சந்ததிகளின் விந்தணுக்கள்
கலையச்சுவர்களை  முண்டிச் சுழிக்கிறது"
என்று பூடகமாக சொல்கிறார் கவிஞர்.
இந்த மோரில் இருக்கும் புளிப்பு சுவைக்கும் யுகங்கள்
பலவுண்டு. மோரைக் கலையத்தில் கடையும் அவளும்
யுகங்களைக் கடந்து இன்றும் தயிரை மோராகக் கடைந்து
கொண்டிருக்கிறாள். அந்த மோரை ருசிக்கும் நாவுகளும்
யுகங்கள் கடந்து  புளிப்பு ருசியை உறை மோராக
தயிரில் கலந்து வருகின்றன. விளைவு... புதுப்புது
தயிரும் புதுப்புது மோரும்... மாறியும் மாறாமலும்
தொடர்கிறது யுகங்களின் புளிப்பு ருசி என்று ஒரு
முரணையும் விவரிக்கிறார் கவிஞர்.
ஆவின் பால் அமுல்  பாலாகி அமுல் தயிராக மாறிய இன்றைய சமூக அரசியல் சூழலில்  கவிதையின் இறுதி
வரிகள் சமூக அரசியலைப் பேசுகின்றன.
"உறை மோரின் நீர்மையில்
ஊடுபாவிக்கிடக்கிறது
யுகங்களின் புளிப்பு நாவுகள் "
என்கிறார் கவிஞர் மு. ஆனந்தன் அவர்கள்.
----

யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதைத் தொகுப்பில்
நான் மிகவும் விரும்பி வாசித்தக் கவிதைகள் இன்னும் சில உண்டு. குறிப்பாக தீக்கூடு, என் மகள் பெரியவளாகி,
கொழுவு எருத்து, திருமஞ்சன நீராட, அப்பாக்களின் முலைகள், நான் சொல்வதெல்லாம் பொய்  என்ற தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளைக்
குறிப்பிட்டு சொல்லலாம். இக்கவிதைகள் குறித்து கவிதை நூலிலேயே பேசப்பட்டிருப்பதால் என் விமர்சனத்தை
தலைப்புக் கவிதைக்கு திருப்பினேன்.
ஒரு கவிதை தொகுப்புக்கு தலைப்புக் கவிதையாகும் கவிதை
அக்கவிதை தொகுப்பின் ஒட்டுமொத்த கவிதைகளின் ஊடாக கலந்திருக்கும் மொழி என்பது என் எண்ணம்.
மோரின் புளிப்பு சுவை நாவுகளுடன்  இக்கவிதை வாசிப்பில் என்னருகில் அரூபமாக பயணித்த
யுகங்களைக் கடந்த அந்தக் கலித்தொகை, குறுந்தொகை
ஆதித்தாய்களுடன் சேர்ந்து  வாழ்த்துகிறேன் நானும்...
---

விமர்சனத்திற்கு அப்பால் இன்னும் சில..
அண்மைக் காலமாக எனக்கு வரும் கவிதை தொகுப்புகளை வாசித்து வாசித்து..
இப்போது இதைப் பேசியே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். அண்மைக்காலமாக இப்போக்கு அதிகரித்து வருகிறது.என்பதால். இதற்கு இக்கவிதைதொகுப்பு மட்டுமே கார ணமல்ல. ஆனால் செறிவான ஒரு கவிதைகளுக்கு இதெல்லாம் ஏன் என்ற அக்கறையுடன்.
.கவிதை நூலுக்கு ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் அணிந்துரை கொடுக்கும் போது அதுவே வாசகர்களுக்கு இடையூறாக இருப்பதுடன் அக்கவிதை நூலை விமர்சனத்திற்கு வரும் போது விமர்சனம் செய்பவருக்கு பெரிதும் இடையூறாகவே இருக்கிறது.
ஒரு புத்தகத்தை முதல் அட்டை முதல் கடைசி அட்டைப்படம் வரை வாசிக்கும் என் போன்ற 
வாசகர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்!





3 comments:

  1. வாசித்துவிட்டேன்...... மிகச்சிறந்த அவதானிப்பு..... அந்த கவிதையில் உள்ள நுட்பங்களை அரசியலை மிகசரியாக அடையாளம் கண்டு அதனை சங்ககால இலக்கியத்துடன் ஒப்பிட்டுள்ளது கூடுதல் சிறப்பு.... அந்தக் கவிதை எழுதும் போது என் மனதில் ஊடாடியதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். முன்னுரை குறித்த உங்களின் விமர்சனமும் கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.....

    ReplyDelete
  2. சிறந்த திறனாய்வுக் கண்ணோட்டம்

    ReplyDelete
  3. ஆழமாக இரண்டொரு முறை மாறுபடியும் வாசிக்க வேண்டும்...
    முதல் முறை வாசிப்பிலேயே "புளிப்பின் " சுவை குறித்தான சுவாரசியம் கூடி விட்டது உண்மை... அருமை...

    ReplyDelete