#உணர்ச்சி வழிபாடு அரசியல்#
துள்ளு தமிழ் நடை தமிழ் மேடையை கைப்பற்றி
தமிழ் மக்களை க்கர கர குரலுக்கு மயக்கி
அரசியல் தளத்தில் தனியிடம் பெற்று
பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களையும்
வெற்றி கொண்ட போது
அந்த மாற்றத்தை தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட
மிகப்பெரிய மாற்றமாக கருதினோம். கொண்டாடினோம்.
அப்படிக்கொண்டாடியவர்களில் நானும் ஒருத்தி.
தமிழ் மொழி, தமிழினம், தமிழ்க் கலாச்சாரம் என்ற
தனித்துவ அடையாளங்களும் திராவிட நாடு, திராவிடதேசம்
என்பெதெல்லாம் சுருங்கி மாநில சுயாட்சியாக மாறியபோதும்
அதையும் தமிழ்த் தேசிய அடையாளமாகவும்
இடதுசாரித் தமிழ்த்தேசியமாகவும் கொண்டாடினோம்.
தந்தை பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியமாகவே
என்னைப் போன்றவர்கள் எண்ணி எண்ணி அதுகுறித்த
வாசிப்புகளிலும் தேடல்களிலும் இருந்ததும் உண்டு.
திராவிட அரசியல் களத்தில் மேற்குறிப்பிட்ட அனைத்தும்
எதற்காகப் பயன்படுத்தப்பட்டது, ஏன் பயன்படுத்தினார்கள்,
அப்படி பயன்படுத்தியதால் யாருக்கு லாபம்?
இதைப் பேசியவர்களும் பேசியவர்களின் வாரிசுகளும்
தலைவர்களானதும் இக்கருத்தியலை நம்பியவர்கள்
கொண்டாடியவர்கள் ஏமாற்றப்பட்டதும் கடந்த கால
அரசியல் வரலாறு.
இன்று திராவிட அரசியலை பிற அரசியல்
கட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும்
எந்த ஒரு தனித்துவமும்
தனித்துவமான தத்துவக் கூறுகளும் இல்லை.
இல்லை. இல்லவே இல்லை.
இதையும் தாண்டிய அவலம் என்னவென்றால்
மேலே குறிப்பிட்ட சொற்களை
வெறும் சொற்களாக மட்டுமே அறிந்திருக்கும்
பெரும் கூட்டத்தை இன்றைய தலைமைகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அரசியல் களத்தில் நாற்காலிகளைக் காப்பாற்றிக் கொள்ள
என்ன தேவை, எது தேவையில்லை என்பது மட்டுமே
முன்னிலை வகிக்கிறது.
ஆனால் எந்த விதை விதைக்கப்பட்டதோ அந்த விதையின்
அறுவடை காட்சிகள் தான் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
உணர்ச்சிகள் உணர்ச்சிகள் உணர்ச்சிகள்
அதீத உணர்வுகளை ஊட்டுவதில் தேர்ந்தவர் எவரோ
அவரே மக்கள் மன்றத்தில் வலம் வருகிறார்.
சொற்கள் வெறும் ஒலிக்குப்பைகளாகி அரசியல்
களத்தில் குப்பைத்தொட்டிகளில் நாற்றம்..
நாற்றமெடுக்கிறது என்று சொன்னவர்களின்
நாசிகளை வெட்டி எரிந்தார்கள்.
அடையாளங்களுக்காக அலைந்த உடல்களில்
பால்வினை வியாதிகள் பரவியது.
புத்தனின் சிதைக்கப்பட்ட சிற்பங்களைப் போல
முடிந்துப்போனது அதிகாரவெளியை எதிர்த்தவர்களில்
வாழ்க்கை.
கவிதைகள் வாழ்த்துப்பாக்களாக மாறின.
விவாதங்கள் பட்டிமன்ற மேடைகளாகி இரண்டு
பக்கமும் கை தட்டும் அரங்கத்தை உருவாக்கினார்கள்.
மேடைகளில் முழக்கமிட்ட தமிழில் பாலாறும் தேனாறும்
ஓடின.
எவ்வளவுதான் யதார்த்தநிலை அவர்கள் சொல்வதிலிருந்து
முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும்
அது பொதுப்புத்தியில் உறைப்பதில்லை.
இதை வளர்தெடுப்பதில் காட்சி
ஊடகங்கள் பெரும்பங்காற்றின.
பருவம் தவறி பெய்யும் மழையில்
துளிர்க்கும் பச்சை இலைகளையும்
பெயர்த்தெரியாத காட்டுப்பூக்களையும்
ஏன் பட்டுப்போன மரத்தில் துளிர்த்த இலைகளையும்
ஆட்டுமந்தைகளுக்குத் தீனியாக்குவதில்
மந்தையை மேய்ப்பவர்கள் கவனம் செலுத்தினார்கள்.
கலை இலக்கிய தளமும் இந்த அரசியல் வேட்டையில்
தன்னை இழந்ததும் அரசியல் வேட்டைக்கு உதவும்
நாய்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டு
நாய்கள் குரைப்பதும் வாலை ஆட்டுவதும் மட்டுமே
ஆகச்சிறந்த கலை இலக்கியமாக மாறிப்போன அவலமும்
தமிழ்நாட்டில் மட்டுமே கடந்து அரைநூற்றாண்டுகளாக
நடந்திருக்கிறது...
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்
இம்மாதிரியான அதீத உணர்வுகளின் மந்தைவெளிகள்
உருவாக்கப்பட வில்லை
. மண்ணின் மைந்தர்கள் கொள்கையை வளர்த்தெடுத்ததன் மூலம்
அரசியல் களத்தில் இடம்பெற்ற சிவசேனா கூட
அதீத உணர்வுகளின் மந்தைவெளியை உருவாக்கவில்லை.
இந்த அதீத உணர்வுகளின் மந்தைவெளியில் ஆடுகளை
மேய்ப்பவனுக்கு அதீத உணர்வுகளுக்கு தீனிப்போட
தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவன் அவுட்.
அதனால் தான் எளிமையானவர்கள், திறமையானவர்கள்,
சிந்தனையாளர்கள் ஒதுக்கப்ட்டுவிட்டார்கள்,
தீண்டத்தாகதவர்களாக ஒடுக்கப்பட்டுவிட்டார்கள்.
அவர்களில் சிலரின் சிந்தனைகளும் எண்ணங்களும்
காயடிக்கப்பட்டுவிட்டன.
இனி... அதீத உணர்வுகளின் மந்தைவெளி...
மெரீனாவில் கூடி தமிழர் கலாச்சாரத்தைக் காப்பாற்றுங்கள்.
மெரீனாவில் தியானம் செய்து விழித்துக்கொள்ளுங்கள்.
நாற்காலி ஆசையில் உப்பிட்டவனைக் கொலை செய்யுங்கள்.
அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை,
தலைவி தோழி , அப்பா மகன் பேரன் மனைவி துணைவி,
தலைவர் தொண்டர்...
எல்லோரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு
கைகளில் மறைத்து வைத்திருக்கும் புலிநகத்தால்
ஒருவர் வயிற்றை ஒருவர் கிழித்து ரத்தம் குடியுங்கள்.
எல்லாம் முடிந்ததா...
இறுதியாக...
உங்கள் நீதிமன்றங்களில் இளைப்பாறிக்கொண்டிருக்கும்
ஆயுள்தண்டனைப் பெற்ற கைதிக்கு
முடிசூட்டுங்கள்.
...
இன்றைய நிலை இதுதான். இனி வேறு எந்த கொள்கைகளை முன் வைப்பது என்றும் எழுதுங்கள்
ReplyDelete