Saturday, May 13, 2017

டாக்டர்னா பெருமை., நர்ஸ்னா ???

Image result for nurse day

உலகத்தின் எந்த ஓரு மூலைக்குப் போனாலும்
அங்கே ஒரு நாயர் டீ கடை இருக்கும் என்று சொல்லுவார்கள்.
அதைப் போல தான் எந்த ஒரு மருத்துவமனைக்குப் போனாலும்
 நம்ம நாட்டவன் நம்ம சேச்சி அங்கே செவிலியராக இருப்பார்கள்.
கேரளத்தின் தேசியத்தொழில் செவிலியர் வேலைதான்
 என்று சொல்லும் அளவுக்கு ...
இங்கே மும்பையில் கூட அவர்கள் இல்லாத
ஒரு மருத்துவமனை கூட கிடையாது.
அதற்காக இங்கே வேலைப்பார்க்கும் செவிலியர் அனைவரும்
இங்கே மகாராஷ்டிராவில் நர்ஸ் தொழில் படிப்பு
படித்தவர்களா என்று கேட்டால் அதுவுமில்லை
என்பது ஆச்சரியம். நம்ம நாட்டவன் அங்கே படிச்சிட்டு வந்து
இங்கே இருக்கும் ஆகச்சிறந்த ஆஸ்பத்திரியிலும் புகுந்து
தன் திறமையைக் காட்டி உன்னதமான ஓரிடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது
 பெருமையாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் நர்ஸ் வேலை என்று சொன்னால் ரொம்பவும் கஷ்டப்பட்டவர்களும் சாதி வர்க்க நிலையில்
விளிம்பு நிலையில் வாழும் மக்களும் அதிலும் குறிப்பாக
 கிறிஸ்தவ மெஷினரி தொடர்பில் படித்தவர்களும்
மட்டுமே இத்தொழில் இருக்கிறார்கள்.
இன்றுவரை செவிலியர் தின வாழ்த்துகள் சொல்லியும்
 நைட்டிங்கேல் பற்றி விலாவரியாகப் புகழ்ந்து நாம்
எழுதிவிடலாம். ஆனால் நம் வீட்டிலிருந்து டாக்டர்கள்
 வந்திருக்கிறார்கள் என்று சொல்வதில் அடையும்
 பெருமிதத்தை என் வீட்டிலிருந்து ஒரு நர்ஸ் வந்திருக்கிறார்
என்று சொல்வதில் நாம் பெறுவதில்லை என்பது தான் உண்மை
. நான் உட்பட இதில் அடக்கம்.
என் குடும்பத்திலும் யாரும் இதுவரை இத்தொழில்
படிப்புக்கு வரவில்லை என்று நினைத்துப் பார்க்கும் போது
 எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது.
ஏன்..?
 எங்கள் குடியிருப்பில் வாழும் ஒரு கேரள பெண்மணி,
சாதி வர்க்க ரீதியாக உயர்மட்ட நிலையிலிருக்கும்
குடும்பத்தைச் சார்ந்தவர்,.. அவரும் நர்ஸாக இருந்தவர்.
தன் மூன்று பெண்மக்களையும் நர்ஸ் தொழிலுக்கே அனுப்பினார்.
நர்ஸ் தொழிலில் முதுகலை படித்த அவருடைய பெண்கள்
 மும்பையின் புகழ்மிக்க இந்துஜா மருத்துவமனை,
வொர்க்காட் மருத்துவமனை, மூன்றாமவர் துபாயில் என்று
இத்தொழிலில் ஆளுமைமிக்கவர்களாக தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது
இந்தியாவில் நுரையீரல் அறுவைச்சிகிச்சை மாதிரியான
அறுவைச்சிகிச்சை மற்ற நகரங்களில் நடக்கும் போது டாக்டர்களுடன் அவர்களும் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
எனக்கும் கூட மருத்துவமனைக்குப் போனால்
நம்ம சேச்சிகளைப் பார்த்தால் ஒரு நிம்மதியாக
இருக்கும்... பொறுப்பாக தன் வேலையைச் செய்வார்கள்
என்ற நம்பிக்கை வரும்.
ஆபரேஷன் தியேட்டரில் சேரநன்னாட்டிளம் பெண்களும்
 ஆண்களும்... அவர்களைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கும்...
டாக்டர் தொழிலைப் பெருமையாக நினைக்கும் தமிழர்களாகிய நாம் டாக்டர்களுக்கு இடக்கரமாக வலக்கரமாக இருக்கும் இத்தொழிலை
ஏன் பெருமைக்குரியதாக நினைக்கவில்லை?
தமிழர்களாகிய நமக்குள் இருக்கும் சாதி உளவியல் ,
மற்றும் ஆணாதிக்க மனநிலையில் பார்க்கும்
 பெண் உறவு சார்ந்த  பார்வைகள்...
இதெல்லாம் தான் காரணமா?

*
சேச்சிகளுக்கு நன்றி.

9 comments:

  1. மிகப் பெரிய விதயத்தை மிகவும் எளிமையாகவும் அதே நேரம் சிந்தையில் தைக்கும்படியும் கூறியமைக்கு மிக்க நன்றி கவிஞரே!

    எனக்குத் தெரிந்தும், உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இதே போல் முன்னாள் தாதியாக இருந்திருக்கிறார். அவரிடம் இதுவரை கேட்டதில்லை என்றாலும் எனக்கும் மனதிற்குள் வியப்புத்தான், இவர் எதற்காகத் தாதித் தொழிலுக்குப் படித்தார், பெற்றோர் எப்படி ஒப்புக் கொண்டார்கள் என.

    நாம் இன்னும் நிறைய மாற வேண்டியிருக்கிறதுதான். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. யதார்த்த நிலையை
    அருமையாகச் சுட்டிக் காட்டி
    எழுதியது மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. மலையாளிகளிலும் முஸ்லீம் பெண்கள் நர்ஸ் வேலைக்கு வருவதில்லை. தமிழில், வீட்டில் இல்லாமல் வெளியில் தங்கநேரும்படியான தொழில்களில் தமது பெண்களை விடுவதற்கு, தமிழ் அன்னையர் விரும்புவதில்லை. இதனால் தான், திரைப்படங்களில் நடிகைகளாகவோ, பாடகிகளாகவோ, பிற தொழில்நுட்பக் கலைஞர்களாகவோ தமிழ்ப்பெண்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இல்லை. இதே காரணத்தால்தான் ஆஸ்பத்திரி சம்பந்தமான தொழில்களுக்கு வரவும் அவர்கள் தயாரில்லை.(2) கேரளப்பெண்கள் நர்ஸ் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு காரணம், ஒன்று, கேரளாவை விட்டு வெளியில்போனால் மட்டுமே பிழைக்கமுடியும். அந்த மாநிலத்தில் தொழில்வளம் இல்லை. அதற்கு நர்ஸ் தொழில் எளிதாக உதவும். இரண்டு, கேரளத்தவர்களின் ஒரே கனவு, மத்தியகிழக்கு நாடுகளில் சென்று பணியாற்றுவதே. அதற்கான லைசென்ஸ் தான் நர்ஸ் தொழில். (3) இந்தியாவில், தமிழ்நாடு மட்டுமல், வேறு எந்த மாநிலத்திலுமே, கிறித்தவர்கள் மட்டுமே நர்ஸ் தொழிலை அதிகம் ஆதரிக்கிறார்கள். இதனால் கேரளா கிறித்தவ நர்ஸ்களுக்கு இந்தியா முழுவதும் உடனே வேலை கிடைத்துவிடுகிறது. (4) மலையாளி நர்ஸ்கள் தமக்கு நடுவே வேறொரு மொழியைச் சேர்ந்த நர்ஸ்களை வளர விடுவதில்லை. (ஆனால்இது நர்ஸ் தொழிலில் மட்டுமல்ல என்பது பம்பாய்வாசியான உங்களுக்குத் தெரியாததா?)

    இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    ReplyDelete
    Replies
    1. அருமையான அலசல்.இரவு நேர வேலை வெளியில் தங்குவது காரணிகளாக இன்று சொல்வதற்கில்லை. ஐடி, கால்செண்டர் இரவு பணியில் பெண்களை வெளியூர் அனுப்பும் அன்னையர்! One more reason the strong social background of kerala due to Communist movements, we have to see this social political reasons also, there is no studies on this, rest all points i too agree with u, thank you fir taking this page further,

      Delete
  4. சேச்சிகளுக்கு மட்டுமல்ல.செவிலியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Yes , our wishes to all our sisters in this profession, thank you,

      Delete