Saturday, March 27, 2010

ஆதவன் தீட்சண்யா - 20


ஆதவன் தீட்சண்யாவைப் பற்றிய அறிமுகவுரை ஆற்றும்படி
என்னைப் பணித்தார்கள் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள்.
இந்த அனுபவம் ரொம்பவும் விந்தையானது.
விநோதங்கள் நிறைந்த எங்கள் மும்பை வாழ்க்கையில்
இதெல்லாம் ரொம்பவும் சர்வ சாதாரணமான ஆச்சரியங்கள்தான்.

தவமாய் தவமிருந்து தமிழ்த்தாய் பெற்றேடுத்த தவப்புதல்வன் என்றெல்லாம்
ஆ.தீ பற்றி சொல்லிக்கொள்ள எதுமில்லை என்பதால் அவருடைய பிறப்பு,
வளர்ப்பு அத்தியாயங்களை வாசிக்காமல் விட்டுவிடலாம்.

இத்தனைக் கதைகள், கவிதைகள் கட்டுரைகள் என்றெல்லாம் கணக்கெடுப்பு
நடத்தி பட்டியல் போட்டு தொங்க விடுவதால் மட்டுமே இலக்கிய உலகில்
இடம் பிடித்துவிடலாம் என்றால் அதற்கு தமிழ்நாட்டில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் இவர் நிச்சயமாக இல்லை.

ஆதவன் சொன்னதை ஆதவனின் பொன்மொழிகள் என்று தொகுத்து
உங்களிடம் வாசித்துவிடலாம் என்றால் இதுவரை தொகுக்கப்பட்ட
வாசிக்கப்பட்ட பொன்மொழிகளை வைத்துக்கொண்டு ஒரு பிஸ்கோத்தும்
வாங்க முடியவில்லை என்பதால் ஆ.தி. 20 என்ற தலைப்பில் அவரைப்
பற்றிய சிறப்பு அம்சங்களைத் தொகுத்து அவருடைய மொழியிலேயே
உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
(அது என்ன ஆதி 20 என்று யாராவது மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ள
வேண்டாம். இன்றைக்கு மார்ச் 20 என்பதால் ஒரு நினைவுக்காக, அம்புட்டுதான்)

இனி,


*என் எழுத்துகளின் இலக்கு,
நிச்சயமாக எந்த பீடத்தையும் அலங்கரிப்பதற்காகவோ ஏதாவது விருது வாங்குவதற்காகவோ அல்ல. என் மக்களின் துன்ப துயரங்களைச் சொல்லி
என்மக்களிடமே ஒப்பாரி வைப்பதும் என் நோக்கமல்ல. எழுதப்படிக்கத்
தெரிந்தவர்களில் பெரும்பாலோர் தலித்தல்லாதவர்கள் என்கிற நிலையில்
அவர்களது வாசிப்புக்கு செல்கிற எனது ஆக்கங்கள், அவர்களது மனசாட்சியோடு
ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
கொஞ்சம் அகங்காரம் போல தெரிந்தாலும் நான் மனிதன், நீ யார் என்று
ஒவ்வொரு ஒடுக்குமுறையாளரையும் என் படைப்பின் வழியே கேட்க விரும்புகிறேன்.

*
இலக்கியத்தின் மீது புனிதக்கலவையை பூசி மெழுகுகிற கொத்தனார்கள் சிலபேர்
என்னிடம் "ஆண்ட்டி லிட்டரேச்சர் டோன்" இருப்பதாக குற்றம் சாட்டுவதுண்டு.
என்னையும் என் மக்களையும் பொருட்படுத்தாமல் எழுதப்பட்ட எழுதப்படுகிற
குப்பைகளை அவர்கள் இலக்கியம் என்று கொண்டாடுவார்களேயானால் அந்த
இலக்கியத்திற்கு எதிராக நான் செயல்படுகிறவந்தான்.

*
கம்பராமாயணத்தை மொழி ஆளுமைக்காகவும் கம்பனின் கற்பனைக்காகவும்
இலக்கியம் என்ற ளவில் ரசிக்கலாம். அதைவிட்டு கற்பனைக் கதையை
உண்மை என்று நம்பி ராமன் எப்பேர்பட்டவன் தெரியுமா? என்று பேசுபவர்களோடு
நான் உடன்படவில்லை.

*
ஜீவா இலக்கியங்களை நிராகரிக்கும் போக்கு ஏற்பட்டபோது அதைத் தூக்கிப்
பிடித்தார். அதற்காக ராமனைக் கொண்டாடவோ அவனை வழிபடவோ செய்யவில்லை.

*
ராமன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று வாதாடப் புகுந்தவர்கள் ராவணனை திராவிடன்
என்றும் ஆரியத்தை எதிர்த்த உண்மையான மாவீரன் என்றும் கொண்டாடத் துவங்கிய
அபத்தமும் இங்கு நிகழ்ந்தது. ராமன் கற்பனை என்றால் ராவணனும் கற்பனைதான்
என்கிற குறைந்தபட்சப் புரிதலையும் கைவிட்டிருந்தனர்.

*
வர்க்க நீக்கம் ( declassification) செய்து கொள்வது போலவே சாதிநீக்கம் (decastification) என்பதன் அவசியத்தை இடதுசாரிகள் புரிஞ்சிருக்காங்க. கன்னட பார்ப்பனரான சீனிவாசராவி போய்தானே தஞ்சாவூரிலே மக்க்ளைத் திரட்டறாரு. அவரு சாதிய கைவிட்டுவிட்டுதானே போறாரு.

*
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் எல்லாமே
ஒடுக்கப்பட்டவர்களிடம் மட்டும்தான் பேசின. ஆனால் ஒடுக்கிறவர்களிடமே
தாக்குதல் நடத்தியவர் பெரியார் ஒருவர்தான். ஒடுக்குகிறவனைப் பார்த்து
நீ அவனை ஒடுக்குகிறாய் என்று சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டும்தான்
இருந்தது.

*
அன்றைக்கு உண்ணாவிரதம் என்று தன்னைத்தானே வருத்திக் கொண்டு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது பிரிட்டிஷ்காரர்களே பயந்தார்கள்.
இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. ஒரு லட்சம் விவசாயிகள்
பட்டினியால் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு மனமிரங்காத அரசும்
அதிகாரிகளும் ஒருவேளை பட்டினிப் போராட்டதைப் பார்த்தா மனமிரங்கப்
போகிறார்கள்? இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற
போராட்ட வடிவங்களை நாம் கண்டெடுக்க வேண்டும்.

*
சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டு தன்னைக் கொண்டாட வேண்டும் என்று
எதிர்ப்பார்ப்பது அபத்தமான காரியம்.

*
கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால்
உழவனையோ தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டுவிடுமா?

*
ஒரு புத்தகம் 1200 பிரதிகள் அச்சிடப்பட்டால் அதைப் பற்றி 1200 பேர் பேசலாம்.
ஆனால் தமிழ்ச்சமூகம் 7கோடி மக்களைக் கொண்டது. இந்த இலக்கியம் குறித்து
தெரியாமலேயே பெரும்பகுதி சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களோடு
எப்படி பொருந்துவது என்றுதான் யோசிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு
நான் மேதாவி, அறிவுஜீவி என்று தனியாக உட்கார்ந்துவிட்டால் எந்த மாற்றமும்
நடக்காது.

*
நீ எங்கள் பக்கம் இல்லை என்றால் பின்லேடன் பக்கம் தான் என்கிற ஜார்ஜ்
புஷ்சைப் போல இங்கும் சிலர் கேலிக்கூத்தான ஒரு வகைப் பிரிப்பை செய்து
கொண்டுள்ளனர். ஒருவர் பெரியாரிஸ்டாகவோ அம்பேத்காரிஸ்டாகவோ மார்க்சிஸ்டாகவோ தான் இருக்கமுடியுமே தவிர மூவரது சிந்தனைகளையும்
உள்வாங்கிச் செயல்படுகிறவராக இருக்கவே முடியாது என்கிறார்கள்.
அம்பேத்காரையும் பெரியாரையும் மார்க்சையும் எதிரெதிராக களமிறக்கும்
இந்த வித்தைக்காரர்கள் மைதானம் முழுக்க நிரம்பி இருக்கிறார்கள்.
ஆட்டத்தை இனிமேல்தான் நாம் கவனமாக தொடர வேண்டியிருக்கிறது.

*
மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் .. இந்த மூன்றின் பொதுப்பண்புகளை
உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் நம் புரிதலே யன்றி மூன்றும்
ஒன்றுதான் என்பதல்ல. அவற்றுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பகைமுரண்கள்
அல்ல.

*

பெரியாரியம் மார்க்சியம் அம்பேத்கரியம் இணைந்து செயல்படும் தளம்
வெறும் கனவாய் முடிந்துவிடுமோ என்கிற என் போன்ற திராவிடர் இயக்காரர்களின்
உணர்வுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாய் உள்ளது ஆதவனின் கருத்துகள்
என்கிறார் நீலகண்டன்.

*
அழியாக் கவிதை நோக்கி ஆதவனின் பேனா அசைகிறது : என்கிறார்
ச.தமிழ்ச்செல்வன்.

*
தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த 10 சிறுகதைகளைத் தொகுத்தால்
அதில் ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை இடம்பெறும் என்கிறார்
எழுத்தாளர் பிரபஞ்சன்.

* அடியில் கையொப்பமிட்டு ஆ.தீ.வாகிய நான் பூரண சித்த சுவாதீனத்துடன்
எழுதிய கவிதைகள் என்று அவர் உறுதிமொழி தந்திருக்கும் கவிதைகளிலிருந்து
3 கவிதைகள்.


மூன்று கவிதைகள் உங்களுக்காக..

கவிதையின் தலைப்பு: ஆமென்.

மரமாக வளர்ந்தது
தண்டனைக்குரிய குற்றமில்லை
ஈராயிரமாண்டுகளின்
துருவேறிய ஆணிகளைப் பிடுங்கி
விடுவியுங்கள்
சிலுவைகளை.

*

கவிதையின் தலைப்பு: வரம்.

ஆத்தா மகமாயி
உம் புண்ணியத்துல பையனாப் பொறந்துட்டா]
கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்.

ஏண்டா கும்புடறதுக்கு பொம்பளசாமி
கொழந்த மட்டும் ஆம்பளயா
எனக்கு உங்கெடாவும் வேணாம்
ஒரு மயிரும் வேணாம்.

*

கவிதை தலைப்பு: கவனமாய் கடக்கவும்.

துர்சொப்பனங்களில் நெரிப்பில்
படுக்கையில் மூச்சா போய்விடும் குழந்தைகளும்
அதிர்ந்து பேசும் சுபாவமற்ற இருதய பலஹீனர்களும்
இக்கவிதையைப் படிக்க வேண்டாமென
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்சென்று படிக்க நேரிட்டால்
வளைந்து ஒடுங்கி விறைத்திருக்கும் எழுத்துருக்கள்
விபத்தில் சிதைந்தவர்களைப் போல அச்சமூட்டக்கூடும்.
எழுத்திலிருந்து துண்டித்து மேலே தெரியும்
மெய்யெழுத்துப் புள்ளி
தலைவேறு முண்டம்வேறாய் தரிக்கப்பட்ட
மேலவளவு முருகேசனை நினைவுபடுத்தும்.

ஒவ்வொரு வரியும்
கேட்பாரற்று மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டிருக்கும்
பிரேதங்களைப் போல தெரியும்.

என்கவுண்டரில் தெறித்த ரத்தத்துளி போல்
சிதறிக்கிடக்கும் முற்றுப்புள்ளிகள்
நடுக்கற்களை நினைவூட்டும் நிறுத்தற்குறிகள்

ஒரே ஊரின்
வெவ்வேறு சாதி சுடுகாடுகளைப் போலிருக்கும்
அடுத்தடுத்த பக்கங்களில்
வெட்டுப்பட்டு மொக்கையான
கன்னங்கரிய எழுத்துகளாலாகி
நீங்கள் யாவரும் வெறுக்கத்தக்கவொரு
கவிதை இருக்கிறது.

----

ஆதவன் தீட்சண்யாவின் கவனமாய் கடக்கவும் என்ற எச்சரிக்கை வரிகளை
நினைவூட்டி உங்களை அச்சப்படுத்துவது என் நோக்கமல்ல.
ஆதவன் தீட்சண்யா அற்புதமான காதல் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்
என்பதை என் செய்தியாக பதிவு செய்து விடை பெறுகிறேன்.

1 comment: