Saturday, April 18, 2020

ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய


தமிழ் மெய்யியல் குறியீடு ஓம் நமசிவாய.
அறிவு சார்ந்த தமிழ்ச் சமூகத்தின் குறியீடு ஓம் நமசிவாய.
கலாச்சார போர்க்களத்தில் தமிழன் ஏந்திய போராயுதம் ஓம் நமச்சிவாய.
பெண்ணை க் காலடியில் அமர்த்திய சமூகத்திற்கு எதிராக தமிழ்ச் சமூகம் ஏந்திய போர்க்கொடி ஓம் நமசிவாய.
பெண்ணை அலங்காரம் பொம்மையாக்கி அந்தப்புரத்தில் வைத்த சமூகத்திற்கு பாடம் புகட்ட அதே பெண்ணைப் போர்க்களம் அனுப்பி பரணி பாடிய பண்பாட்டின் அடையாளம் ஓம் நமச்சிவாய.
பெண்ணை சக மனுஷியாக மதித்து கொண்டாடிய நம் சமூகத்தின் குறியீடு ஓம் நமசிவாய.
ஆண்மைய சமூகத்தில் பெண்ணை நுகர் பொருளாக மட்டுமே வைத்திருக்கும் கலாச்சாரத்தைக் கட்டுடைக்கும் குறியீடு ஓம் நமசிவாய.
பெண் என்றால் மென்மை என்ற பொய் முகத்தை தூக்கி வீசிய நம் பழையோளின்
குறியீடு ஓம் நமசிவாய.
மருதம் திரிந்த பாலையில் தாகம் தணிக்கும் ஈரத்தின் குறியீடு ஓம் நமசிவாய.
அவன் கழுத்தில் ஆபரணமாய் ஆடுகிறது
பாம்பு. அவன் இடையில் நெளிகிறது பாம்பு. அவன் காலடியில் சுருண்டு படுத்திருக்கிறது அதே பாம்பு.
பெண்ணை பெண்ணுடலை பெண்ணின் காமத்தை பெண்ணின் நுண்ணிய உணர்வுகளைப் புறக்கணிக்காத ஆண்மையின் குறியீடு ஓம் நமசிவாய.
பெரியாருக்கு முன் வாழ்ந்தப் பெரியாரின் அடையாளம்ஓம் நமசிவாய
இவை அனைத்தும் ஒன்றாகி என்னை என் நனவிலி மனதில் மரபின் எச்சமாய் யுகம் யுகமாக கடத்தப்பட்டு இருக்கும் என் ஆதி சமூகத்தின் குறியீடு ஓம் நமச்சிவாய

****

அவள் பிரபஞ்சம். மற்றவையெல்லாம் இந்த பிரபஞ்சத்தைச் சுற்றிவரும் தூசிகள் அவளே சக்தி அவளே இயக்கம் அவள் என்ற பால்வீதியின் மந்திரச் சொல்லாய் ஓம் நமசிவாய.

அவள் எப்போதும் அவளாக மட்டுமே இருப்பதில்லை. அவளுக்குள் பிரபஞ்சத்தின் கோடானக் கோடி அவள்களும் குடியிருக்கிறார்கள். அந்த அவள்களின் குரலாய் அவளே இருக்கிறாள்.

பேய் உருக்கொண்டு அலைந்த புனிதவதியின் ஏக்கமும் கோபமும் அவளிடம் உண்டு.
புனிதவதியாய் அவள் செய்த குற்றம் என்ன? அறிவு சார்ந்த புனிதவதியை அவன் கண்டு ஏன் அச்சப்பட்டான்?
நீயும் உன்னிடம் வந்தவளை 'அம்மையே' என்றழைத்து ஏன் ஒதுக்கி வைத்தாய்?
'சகியே 'என்று அவளை அழைக்காமல் எது தடுத்தது? தோழி என்றழைத்து துணை வந்திருக்கலாமே?! ஹே அர்த்தநாரீஸ்வரா.. பேய் உருக்கொண்டு அவளை அலைய விட்டது ஏன்?
ஓம் நமசிவாய ...கதறுகிறேன்...
துடிக்கிறேன்.. உன் முகமூடியைக் கிழிக்கிறேன்! ஆத்திரம் தீருமட்டும்
கொற்றவை யாய் நானும் அலைகிறேன்!

மேகங்களில் நீ மறைந்து இருக்கும் போது நான் லல்லா வாகி உன்னை கைநீட்டி அழைக்கிறேன்.
அரண்மனையை சொகுசு வாழ்க்கையை விட்டு வெளியேறி பொதுவெளியில் கலக்கும்போது அக்கா மகாதேவி யாகி விடுகிறேன். பிச்சியாகி
அலையும் போதெல்லாம் என் நிர்வாண மறைக்கும் ஆடையாய் தத்துவமாய் ஓம் நமசிவாய..
பிரபஞ்சத்தில் இயங்கு சக்தியாய் எனக்கு முளைக்கும் சிறகுகள் ஓம் நமசிவாய..
ஒளி குறைந்த இருளும் ஓம் நமசிவாய
சுட்டு எரிக்கும் வெயிலும் ஓம் நமசிவாய.
புரிந்தது புரியாதது
அறிந்தது அறியாதது
ஓம் நமசிவாய.
ஐந்திணையும் ஓம் நமசிவாய
பெருந்திணை யாய் இருப்பதுவும் ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாய


உன் நெற்றிக்கண்ணாக இருப்பதும் நான் தானே.. ஓம் நமசிவாய..
உன் சிவகாமியை
உன் கங்கையை
இந்த தாமிரபரணியிடம் தேடித்தேடி தோற்றுப் போகாதே! ஓம் நமசிவாய.

பஃ றுளியின் மகள் நான் என்பதையும் மறந்துவிடாதே ஓம் நமசிவாய..

ஓம் ஓம் ஓம்
ஓம் நமசிவாய











1 comment:

  1. ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete