Thursday, April 2, 2020

கரிச்சான் குருவி

பெருநகரப் புறாக்களுடன் உறவாடியமனம்
கரிச்சான் குருவிகளின் பாஷையை
எழுத்துக்கூட்டி வாசிப்பதற்குள்
திணறிப் போய்விடுகிறது.

முருங்கைமரக் கொம்பில்
நெல்லிமரங்களுக்கு நடுவில்
தென்னங்கீற்றுகளின் மீதேறி
எதையோ சொல்ல வருகிறது.
தந்திக்கம்பங்களில் தொங்கிக் கொண்டிருக்கும்
மின்சாரக்கம்பிகளில் பாயும்
அதன் விழிகளின் வெளிச்சம்
என் மீது பரவுகிறது.
கண்கள் கூசுகின்றன.
கதவுகளை அடைத்துக் கொள்கிறேன்.
மவுனம் உறைந்துப்போன அதிகாலையில்
இருளைத் தின்று தின்று
பசியாறிய கனவுகளுடன்
கரிச்சான்குருவிக்காக காத்திருக்கிறேன்.
சிறகுகள் உதிர்க்கும் எழுத்துகளை
மண்ணில் விழுவதற்குள்
மடியில் கட்டிக்கொள்ள...

No comments:

Post a Comment