Tuesday, April 14, 2020

பாம்பின் விளையாட்டு

பாம்புகள் ஊர்ந்து சென்ற பாதையில்
விடியலில் என் பாதங்கள் பதிய நடக்கிறேன்.
பாம்பு உரித்துப் போட்ட ஆடைகளை போர்த்திக்கொள்கிறேன்.
உடல் நெளிகிறது.
புதருக்குள் ஓடி ஒளிந்து விளையாடுவது
புதிய அனுபவமாய்...
புத்துணர்ச்சி தருகிறது.
குதித்து ஓடும் தவளைகளைப்
பிடிப்பதும் விடுவதும்
தவளைகள் மரண பயத்தில்
துள்ளி ஓடுவதை ரசிப்பதும்
விநோதமான விளையாட்டாகிவிடுகிறது.
வீட்டு நினைவில் வாசலில் நுழைகிறேன்.
"பாம்பு பாம்பு விடாதே..ஒரெ போடா
மண்டையில போடு.."
தடியும் காம்புமாய் தாக்க வருகிறார்கள்.
சர்ரென்று வெளியில் வந்து
உரக்குழியில் மண்டிக்கிடக்கும்
குப்பைச் செடிகளுக்குள் முகம் புதைக்கிறேன்.
பாம்பின் ஆடைகளைக் கழட்டி வீசிவிடவா..வேண்டாம்.
பாம்பு என்றால் படையும் நடுங்குமாமே..
அவன் நடுங்க மாட்டானா!
அவன் தனித்திருக்கும் போதெல்லாம்
அவனருகில் செல்கிறேன்.
நடனமாடுகிறேன்.
என்னைக் கண்டவுடன் அலறிக் கொண்டு
தலைத் தெறிக்க ஓடுகிறான்.
ரசனையான விளையாட்டு..
பாம்புகளின் உலகத்தில்
ஏமாற்றங்கள் இல்லை
நிராகரிப்புகள் இல்லை
துரோகங்கள் இல்லை.
பயமில்லாமல் பயணிக்கிறேன்.

ஓம் நமசிவாய...

1 comment:

  1. விளை(னை)யாட்டை ரசித்தேன்

    ReplyDelete