Saturday, December 25, 2021

பிச்சி



 பிச்சி:

கருவறை இருளின் வெளிச்சத்தில்
திரி ஒன்று சுடரில் கரைகிறது.
அவள் கர்ப்பஹிரகத்திலிருந்து
தப்பித்து வெளியேறுகிறாள்.
அலைபாயும் விழிகளுக்கு நடுவில்
பெருநகரம் அசைகிறது.
காத்திருப்புகளின் வரிசையில்
நின்றவளைக் காணவில்லை.
சாலையோரத்து புத்தகவரிசையில்
ஓரமாக
அவன் விழிகளுக்காகவும்
விரல்களின் தொடுதலுக்காகவும்
மலர்ந்த பிச்சி..
ஜன நெரிசலில் உதிர்ந்துப்போனது
தெரியாமல்
குப்பைகளை அள்ளிக் கொண்டிருக்கிறது
பெரு நகரம்.
+++
அவளை உலகம் பைத்தியக்காரி என்று விளித்தது.
படித்தவர்கள் அதையே அவர்கள் மொழியில்
மனப்பிறழ்வு என்று அழைத்தார்கள்.
அவள் ஆடைகள் எப்போதுமே கிழிந்து தொங்கியது
இல்லை. அவள் கூந்தலில் சிடுக்குகள் இல்லை.
அவள் யாரிடமு கையேந்தி பிச்சை
எடுக்கவும் இல்லை. அவளைப் பார்க்கும்போது
கோவில் சிலை ஒன்று கர்ப்பஹிரகத்திலிருந்து
தப்பிவந்து நடுரோட்டில் வழித்தெரியாமல்
அங்குமிங்கும் அலைபாயும் விழிகளோடு
தவிப்பதுபோலிருக்கும்.

அவள் காலையிலேயே குளித்துவிட்டாள் என்பதை
அவள் முகமும் தோள்வரைப் புரண்டு காற்றில்
அசையும் கூந்தலும் காட்டும்.
எப்போதும் அவள் புடவையில்தான் இருப்பாள்.
புடவைக்கு மேட்சிங்கான ப்ளவுசும் உள்பாவாடையும்
அணிந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன்.
அவளும் நானும் எப்போதும் ஒரே நேரத்தில்
அந்த சிக்னலைக் கடந்திருக்கிறோம்.
ஒரு நாள் அல்ல,
சற்றொப்ப 10 ஆண்டுகள் தினமும்
காலையில் அலுவலகத்திற்கு முன்னால்
அந்த ஹைகோர்ட் திருப்பத்தில் இருக்கும்
சிக்னலை இருவரும் ஒன்றாகவே கடந்திருக்கிறோம்.
அதனால்தான் மற்றவர்கள் கவனிக்காதவற்றை
நான் கவனித்தேனா தெரியாது.

ஆரம்பத்தில் அவள் என்னுடன் சேர்ந்து கிட்டத்தட்ட
என்னருகில் வரும்போது சின்னதாக ஒரு பயம் வந்தது.
ஆனால் அவளைக் கண்டு பயம்கொள்ள
வேண்டியதில்லை என்பதை இரண்டொரு நாட்களில்
உள்மனம் உணர்ந்து கொண்டது.
அவள் உதடுகள் அசைந்து கொண்டே இருக்கும்.
அவள் யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை
புரிந்து கொள்ள முடியும். அவள் தோளில் ஒரு லெதர்
பை தொங்கிக் கொண்டிருக்கும். அதில் புத்தகங்கள்
முகம் துடைக்கும் டவல் சில நேரங்களில் மதிய
உணவு டப்பா இப்படி எதாவது எட்டிப் பார்க்கும்.
அவள் அந்த சிக்னலை தினமும் வேகம் வேகமாக
கடந்து ஆபிஸ்க்கு ஓடிக்கொண்டிருக்கும் பெண்களில்
ஒருத்தியாக இருந்திருப்பாளோ..
அவளும் நானும் இப்படியாக
ஒரே நேரத்தில் சிவப்பு விளக்கிற்காக காத்திருந்து
ஓடிக்கொண்டிருந்தோம்.
அவள் ஒரு திசையிலும் நான் என் திசையிலும்.

10 ஆண்டுகளுக்குப் பின் எனக்கு செம்பூர் கிளைக்கு
மாற்றலாகியது. அதன் பின் 8 ஆண்டுகள் கழித்து
மீண்டும் மெயின் ஆபிஸ் வந்தப் பிறகு அவளைக் காணவில்லை.
அவளைக் காணவில்லை என்பதை
எங்கள் பரபரப்பான வாழ்க்கையில்
நினைத்துப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை.
அவள் யார்? வசதியான வீட்டுப் பெண்ணா?
தெரியவில்லை...
அவளை அடைத்து வைத்திருந்தால்
இன்னும் மோசமாகிவிடுவாள் என்று
அவளுக்கு விடுதலை கொடுத்தவர்கள்
மனசில் ஈரமிகுந்தவர்களாக இருக்க வேண்டும்.
அவள் எப்போதும் காலை 9 மணி முதல்
11 மணிவரை மட்டும் தான் அந்தப் பகுதியில்
தென்படுவாள். அதன் பின் அவள் தானே வீட்டுக்குப்
போய்விடுவாளாக இருக்கும். அல்லது யாராவது
அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்களா
தெரியாது.

அதீத நம்பிக்கையை அடுத்தவர் மீது வைக்கும்போது
அதில் விழுந்துவிடும் கீறலில்
மனம் உடைந்துவிடுகிறது.
அவளுக்கும் இப்படியாக
எதோ ஒன்று நடந்திருக்க வேண்டும்.
அவள் சிக்னலைக் கடந்து
அந்தச் சாலையோரத்து புத்தகங்கள் பக்கமாக
வந்து நின்று கொண்டு
யாருக்காகவோ காத்திருப்பாள்.
அப்போது அந்த விழிகளை நேர்கொண்டு சந்திக்க
முடியாது. அதில் பக்கத்திலிருக்கும் அரபிக்கடலின்
அலைகள் மோதிக்கொண்டிருக்கும்.
நேரம் செல்ல செல்ல அவள் உடல் தளரும்.
அவள் உதடுகள் உறையும்.
அவள் மெளனத்தில் உறைபனியாகி ஒரு ஜடம்போல
திரும்புவதாக அந்தப் புத்தகங்கள் சொல்லும்.
அவளை எல்லோரையும் போல
நானும் மறந்துவிட்டேன்.
நேற்றிரவு அவள் எங்கிருந்தோ வந்தாள்.
நானும் அவளும் ஒன்றாக அதே சிக்னலைக்
கடந்தோம் . சிவப்பு விளக்கு பச்சைவிளக்காவதற்குள்
அவளைக் காணவில்லை.
அவள் முகத்தில் அவள் உடையில் அவள் நடையில்
அவள் உதடுகளின் அசைவில்.. நான்..
அதே சாலையோரத்து புத்தக வரிசையில்
ஓரமாக காத்திருக்கிறேன்.
யாருக்காக என்று தெரியாமல்!

Thursday, December 23, 2021

தாராவியில் பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே மேடையில்

 


தாராவியில் தந்தை பெரியாரும்

பாபாசாகிப் அம்பேத்கரும் ஒரே மேடையில்
இளைஞர் அண்ணாவுடன்..
07 ஜனவரி 1940
நம்மில் பலர் பிறக்கவில்லை.
அன்று மாலை அண்ணல் அம்பேத்கர் அளித்த
தே நீர் விருந்தில் பத்திரிகையாளர்களையும்
பம்பாய் அமெம்பிளி மெம்பர்களையும் சந்தித்த
தந்தை பெரியாரும் அம்பேத்கரும் நேராக
அங்கிருந்து புறப்பட்டு தாராவிக்கு 7 மணிக்கு வந்தார்கள்.
தாராவியில் மாபெரும் பொதுக்கூட்டம்.
பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில்
நடந்த அக்கூட்ட த்தில் தன் தலைமை உரையில்
அக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பதை தனக்கு கிடைத்த
மாபெரும்பாக்கியம் என்றும் தம் வாழ்க்கையில்
தொடர்ந்து பெரியாருடன் கருத்தியல் தளத்தில்
இணைந்து செயல்படுவேன் என்று பேசினார்.

இந்த மேடையின் இன்னொரு சிறப்பு
அண்ணல் அம்பேத்கரின் பேச்சை
அண்ணா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்.
அதே கூட்டத்தில் தந்தை பெரியாரின் பேச்சை
அங்கு வந்திருந்த தமிழரல்லாதவர்களுக்காக
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் அன்றைய
இளைஞர் அண்ணாதான்.
இப்படியாக தாராவியில் ஒரு கருத்தியல்
கூட்டணி உருவானது.
மும்பை தமிழர்கள் வாழ்க்கையில் இன்றும்
தொடர்கின்றன இக்கூட்டணியின் எச்சங்கள்.
அதில் ஒரு துளியாய் நானும்..
இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள்.
24 டிசம்பர்

ஊழலற்ற அரசியல்வாதியின் நினைவு நாள்


 

இன்று கக்கனின் நினைவு நாள்.

ஊழலற்ற அரசியல்வாதி என்பதை மொழிபெயர்த்தால்

அதில் கக்கன் என்று எழுதி இருக்கும்.

கக்கன் என்று சொன்னவுடன் காமராசர்  அமைச்சரவையில்

அமைச்சராக இருந்தவர் , காங்கிரசு கட்சியின் தலைவர்,

எளிமையாக வாழ்ந்தவர், மதுரை கோவிலில் ஒடுக்கப்பட்ட

மக்களுடன் ஆலயப்போராட்டம் செய்து வழிபட்ட  கலகக்காரர்.

அமைச்சர் பதவியில் இருந்தக் காலத்தில் ஒருமுறைக்கூட

தன் பதவியை முறைகேடாக பயன்படுத்தவில்லை,

அரசு தனக்கு ஒதுக்கி இருந்த வீட்டில்

அவர் உறவினர்களுக்கு அனுமதி இல்லை, அரசு அவருக்கு

கொடுத்திருந்த வாகனத்தில் அவர் உறவினர்கள் பயணிக்க

அவர் அனுமதித்தது இல்லை. மதுரை அரசு மருத்துவமனையில்

தரையில் படுத்து சிகிச்சை பெற்ற ஒரே அமைச்சர்.

 சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்கள்

சிகிச்சைப் பலனின்றி 1981, டிச 23ல் மறைந்தார்.

இன்று கக்கனின் நினைவு நாள்.

கக்கன் என்று சொன்னவுடன் அவருடைய மேற்கண்ட எதுவும்

முன்னிலை பெறாமல் அவர் சாதி அடையாளம் மட்டுமே

முதல்வரியாக நினைவுக்கு வரும் சாதி உளவியலில் இருந்து

நாம் விடுதலை பெறவில்லை.

அம்பேத்கரும் கக்கனும் இன்னும் சாதி கடந்து

கொண்டாடப்படவில்லை.

 

Tuesday, December 21, 2021

அண்ணாவின் அசாத்தியமான உழைப்பு


 

"ஒரு மாதத்தில் 145 கூட்டங்கள்,

ஒரு நாளில் 27 கூட்டங்கள்!

ஒரு மனிதனின் அசாத்திய உழைப்பு"

அண்ணா நெல்லையில் பேசுவதைக் கேட்பார்கள்,
அதன் பின் தென்காசியில் கூட்டம் என்றால்
தம்பிகள் மட்டுமல்ல, கட்சி சார்பில்லாதவர்களும்
தென்காசி கூட்டத்திற்கு வாடகைக் காரில் ஏறிக்கொண்டு
சாலையில் பறப்பார்கள். காரின் பின்பக்கத்தில்
இருக்கும் இருக்கைகளை எடுத்துவிடுவார்கள்.
இருக்கை இருந்தால் அதில் மிஞ்சிப்போனால்
நாலு அல்லது ஐந்துபேர்தான் பயணிக்க முடியும்.
இருக்கையை எடுத்துவிட்டால்
பத்து முதல் பதினைந்துபேர் பயணிக்க முடியும்.
எப்படினு அன்று புரியவில்லை.
ஆனால் மும்பை டிரெயினில் தினமும் பயணிக்கும்போது
வாழ்க்கை அதையும் கற்றுக்கொடுத்தது!
ஏன் ஒரே மனிதர் பேசுகின்ற எல்லா கூட்டத்திற்கும்
இந்த மனிதர்கள் ஓடினார்கள்? கட்சிகள்
இன்று பிரியாணி பொட்டலமும் தினக்கூலியும்
கொடுத்து சேர்க்கின்ற கூட்டத்தை மட்டுமே
அறிந்தவர்களுக்கு நான் சொல்லும் கூட்டம்
நம்ப முடியாததாகக் கூட இருக்கும்.
இன்று அவர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்..
அண்ணாவைக் கடுமையாக விமர்சித்தவர்களும் கூட
அவருடைய கூட்டத்தில் அவர் பேசுவதைக் கேட்க ஓடினார்கள்.


இன்று தலைவர்களுக்கு உரைகள் தயாரிக்கப்படுகின்றன.
பயிற்சி கொடுக்கப்படுகிறது.
சொற்பொழிவாளர்களாக ஒரு சொற்பொழிவுக்கு
இலட்சக்கணக்கில் வாங்குபவர்களும்
கதைகள் , உதாரணங்கள் , அவ்வப்போது சொல்லும்
மேற்கோள்கள் என்று ஒரு டைரி வைத்திருப்பார்களோ
என்னவோ..
அதே அரைத்தமாவை அரைத்துக்கொண்டிருப்பார்கள்.
நமக்கு அதெல்லாம் பழகிவிட்டது.
ரசிக்கவும் பழகிவிட்டோம்.
ஆனால்...அண்ணாவின் மேடைப்பேச்சு
மிகவும் தனித்துவமானது.
அவர் ஓர் ஊரில் பேசிய விஷ்யத்தை
இன்னொரு ஊரில் பேசியதில்லை.
பேசியதை திரும்ப திரும்ப பேசும் வழக்கம்
அவரிடம் இல்லை, இல்லவே இல்லை.
ஆனால் அவர் ஒரே அரசியல் கருத்தைத்தான்
எல்லா மேடைகளில் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த மேடையில் நெப்போலியன் என்றால்
அடுத்த மேடையில் ரஷ்ய புரட்சியைப் பற்றிப் பேசுவார்.
(இதெல்லாம் பிற்காலத்தில் அப்பாவும்
அப்பாவின் நண்பர்களும் தங்களுக்குள்
பேசிப்பேசி அசைப்போட்டுக்கொண்ட
உரையாடல்கள் வழி அறிந்தது . )
அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றில்
நான் இப்போதும் பிரமிப்புடன் காணும் நிகழ்வுகள்
பல உண்டு. அதில் ஒன்று :
1949 செப்டம்பரில் திமுகவை என்ற அரசியல் கட்சியை
உருவாக்கிய அண்ணா, 1950 மே மாதத்திற்குள் ,
அதாவது 9 மாதங்களில் 2300 க்கும் அதிகமான
கூட்டங்களில் பேசி இருக்கிறார்.
கணக்குப் பார்த்தால் ஒரு மாதத்திற்கு 145 கூட்டம்,
ஒரு நாளில் 27 கூட்டங்களில் பேசி இருக்கிறார்..
காலை 5 மணிக்கு அவர் பேசிய கூட்டங்கள் உண்டு.
நான் அறிந்தவரை இந்தளவுக்கு பரப்புரை செய்த
ஒர் அரசியல் கட்சி தலைவர் யாருமில்லை!
அவருடைய உழைப்பு என்பது அசாத்தியமானது.
எனக்கு இன்று நினைத்தாலும்
பிரமிப்பாக இருக்கிறது.

என்ன திடீர்னு அண்ணா பற்றி ?
சரவணா...
அண்ணா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல.
இதைச் சொல்வதற்கு எனக்கு நாள் கிழமை எல்லாம்
பார்க்க வேண்டியதில்லை.
மறந்துகொண்டே இருப்பது தமிழன் இயல்பு.
மறந்ததை நினைவூட்டிக்கொண்டே இருப்பது
எம் கடமை.

Thursday, December 16, 2021

ரஜினிகாந்த் .. தனித்துவம்.


 

  நானும் ரஜினிகாந்தை ரசிக்கும் ஒரு புள்ளி உண்டு.

இப்போதும் அவர் அதில் தனித்து நிற்கிறார்.

அவர் சினிமா உலகின் சில  நட்சத்திர பிம்பங்களை

பொதுவெளியில் உடைத்தவர். அதற்கு தனித்துணிச்சல்

வேண்டும். அது எப்படி வந்தது???

சினிமா நடிகர் என்றால்…

சிவப்பா இருக்கனும்.

முகச்சுருக்கமே இருக்க முடியாது.

நரைமுடி அவர்களுக்கு எட்டிக்கூடப் பார்க்காது.

எப்பொதும் பளபளனு இருக்கனும்

அதைத் தொடர்ந்து காப்பாற்றியாகனும்.

இப்படி எல்லாம் திரையில் மட்டுமல்ல

பொதுவெளியிலும் தன்னை மேக்கப்புடன்

காட்டுவதில் அதீத அக்கறை கொண்டிருக்கவேண்டும்.

இதெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

ஆனால் இவை அனைத்தையும் உடைத்தவர்

ரஜினிகாந்த் மட்டும் தான்.

அவர் பொதுவெளியில் முன்வழுக்கையுடன்

மேக்கப் போடாத முகத்துடன் ஏறி நிற்கிறார்.

அவருடைய ரசிகர்கள் அதைக் கொண்டாடி

விசில் அடிக்கிறார்கள். அப்போதுமட்டும் அவருடைய

ரசிகர்களையும் எனக்குப் பிடிக்கிறது.

சரவணா… சிரிக்காதே!

இதில் கொண்டாடவும் ரசிக்கவும் என்ன இருக்கிறது?

என்று நினைக்கிறாயா..?

தமிழ் நாட்டில் தலைவர்கள் இன்றும் தலையில்

“விக்” அணிந்து கொள்கிறார்கள்.

இந்த விக் அணியும்போது காதோரம்

நரைத்த மயிர் (அது என்னய்யா..கிருதாவா)

எட்டிப்பார்ப்பது கொஞ்சம்

விசித்திரமாக இருக்கிறது.

இன்னும் சில இரண்டாம் மூன்றாம் நிலை

தலைவர்கள்… வயிற்றை பெல்ட் போட்டு இறுக்கி

மூச்சடக்கி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது

அதைவிட பரிதாபமாக இருக்கிறது.

தலைவர்களின் தலைமுடி கலைந்திருப்பதே

இல்லை. (என்ன ஜெல் பயன்படுத்துகிறார்கள்

என்று தெரியவில்லை!)

இப்படியான சமூகத்தில் தோற்றம் முக்கியத்துவம்

பெறும் சினிமா உலகின் (சூப்பர் ஸ்டார்) நடிகர்

அதை உடைத்திருப்பது அவருடைய தனித்துவம்.

அவருடைய தன்னம்பிக்கை.

இதுவும் அவர் ரசிகர்களின் உளவியலுடன் தொடர்புடையது

என்பது இதன் அடுத்தக்கட்டம்.

60, 70 வயதில் நம் நடிகர்கள் இளம்வயது நடிகையுடன்

டூயுட் பாடவைத்து அவர்களை சினிமா உலகம்

தொடர்ந்து வீணடித்துக்கொண்டிருக்கிறது.

அவர்கள் வயதுக்கும் அனுபவத்திற்குமான கதைகள்

சினிமா உலகில் எட்டிப்பார்க்க இயக்கு நர்கள்

அனுமதிப்பதில்லையா? தெரியவில்லை.

அந்த வகையில் இந்தி திரையுலகில் நடிகர்

அமிதாப்பச்சனின் வயதிற்கேற்ற கதைப்பாத்திரங்கள்

உருவாக்கப்பட்டு அதில் அவர் இரண்டாவது இன்னிங்க்ஸ்

கொண்டாடப்பட்டது. பாவம்  நம் தமிழ் கதா நாயகர்களும்!

 

 

 

Tuesday, December 14, 2021

சத்ரபதி சிவாஜி மகாராஜாவும் பால்காரியும்


 சத்ரபதி சிவாஜி மகாராஜாவும் அவளும்.

சத்ரபதி சிவாஜி மகாராஜாவை கோட்டைகளின் மன்னாதி மன்னன்

என்று வரலாறு சொல்வது மிகவும் சரி. அவர் ஆட்சிக்கு உட்பட்டவை சற்றொப்ப 360 கோட்டைகள் ) ஒவ்வொரு கோட்டைகளும்

அதைச் சுற்றி அவர் அமைத்திருந்த பாதுகாப்பு அரண்களும்

கோட்டை மதில்களும் அகழிகளும் மலையின் உயரமும் பூகோள

அமைப்பும் பிரமிப்பு தருகின்றன. தன் நாட்டின் பூகோள ரீதியான

அமைப்பை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு

தன் சாம்ராஜ்யத்தை  நிறுவிய அரசனாக சிவாஜி இந்திய வரலாற்றில்

முதன்மையானவராக சிவாஜியை முன்னிறுத்தலாம்.

இன்றும் அவர் கோட்டைகள் பார்வையாளர்களுக்கு பிரமிப்பூட்டுகின்றன.

ஆனால் சிவாஜியின் கோட்டைகளை அதன் உயரங்களை அதன் காவல்

அரண்களை ஒரு சாதாரண பெண் வென்றெடுத்தாள் என்பதும் அதை

சிவாஜி கொண்டாடியதுடன் அவள் பெயரால் அதே கோட்டையில்

அவள் கடந்து சென்று பகுதியில் ஒரு மதில் சுவறைக்கட்டினார் என்பதும்

புனைவல்ல, வரலாறு. இது சிவாஜியின் தலை நகரான ராய்காட் கோட்டையின் கதை.

    அவள் பெயர் ஹிர்கானி (Hirkani). அவள் ஆயர்குலப்பெண். ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்திலிருந்து பால் மற்றும் மோர் தலையில் சுமந்து வந்து கோட்டையில் கொண்டுவந்து விற்றுவிட்டு மாலையில் தன் மலையடிவார குடியிருப்புக்கு போய்க்கொண்டிருந்தவள், ஒவ்வொரு நாளும் மாலையில் கோட்டையின் கதவுகள் சூரிய அஸ்தமனத்திற்கு முன் சற்றொப்ப மாலை 6 மணியளவில் மூடப்பட்டுவிடும். அதற்குள் மலையடிவாரத்திலிருந்து கோட்டைக்கு வந்தவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு அந்த வாயில் வழியாக இறங்கிவிடுவார்கள். ஒரு நாள் எதோ ஒரு காரணத்தால் பால்காரி ஹிர்கானிக்கு சற்று தாமதமாகிவிடுகிறது. கோட்டை வாயில்கள் மூடப்பட்டு’விட்டன. அவள் வாயில்காவலர்களிடம் மன்றாடுகிறாள்.ஆனால் பாதுகாப்பு மன்னரின் ஆணையை மீறமுடியாது என்று அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். வீட்டில் அவள் கைக்குழந்தையை விட்டுவிட்டு வந்திருக்கிறாள். அவள் செய்வதறியாது திகைக்கிறாள். அவளுக்கு எப்படியும்

தன் வீட்டுக்குத் திரும்பியாக வேண்டும். 

அவள் குழந்தையிடம் போயாக வேண்டும். 

அவள் அந்தக் கோட்டையின் மறுபக்கம் வருகிறாள். 

இருட்டிவிடுகிறது !

அங்கே மதில்கள் இல்லை. 

காரணம் யாரும் ஏறவொ இறங்கவோ கற்பனை

கூட செய்யமுடியாத செங்குத்தான கரடுமுரடான மலைப்பகுதி அது.

அவள்  மலையேறி பயிற்சி பெற்றவளும் அல்ல. 

ஆனாலும் அவள் குழந்தையின் முகம் 

அந்த அழுகுரல் அவளை எதுவும் யோசிக்கவிடவில்லை.

அவள் அந்த ஆபத்தான பகுதியின் வழியாக இறங்கி தன் வீட்டுக்குப் போய்விடுகிறாள்.. ! மறு நாள் காலை கோட்டையில் வாயில் கதவு திறக்கும்போது அவளை அடையாளம் கண்டுவிட்ட கோட்டை வாயில்

காவலர்கள் நேற்று கோட்டை கதவடைத்தப் பிறகு இவள் எப்படி

மலையடிவாரத்திற்கு சென்றிருக்க முடியும் ?என்று ஐயுறுகிறார்கள்.

ஒரு பெண் .. ஒரு பால்காரி மலை இறங்கி சென்றாள் என்பதை நம்ப

மறுக்கிறார்கள். 




அவளை அரசன் முன் கொண்டு நிறுத்துகிறார்கள்.

சிவாஜி மகாராஜா அவள் மலை இறங்கிய கதையைக் கேட்கிறார்.

அப்பகுதியைப் பார்வையிடுகிறார். எவராலும் ஏறவோ இறங்கவோ’

முடியாத மலைப்பகுதி என்று எதுவுமில்லை என்பதை அப்பெண்

அவருக்கு உணர்த்திவிட்டாள். தாய்மையின் பெருமையாகவும்

இதை மராட்டியர்கள் தங்கள் பாடல்களில் கூத்துகளில் கொண்டாடுகிறார்கள்.




இன்றும் ராய்காட் கோட்டையில் அவள் இறங்கிய பகுதியில் கட்டப்பட்ட

மதில்சுவருக்கு ஹிர்கானி மதில் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

ஹிர்கானிகள் – பெண்கள் - சாதாரணமானவர்கள் தான்.

ஆனால் தேவைப்படும்போது அவர்களின் செயல்

அசாதாரணமானதாகிவிடும்!

 

 

Thursday, December 9, 2021

மனித உரிமையும் மதமும் (டிச10, மனித உரிமை நாள்)

 ஓர் இசுலாமியனாக இருந்துப் பார்,

அப்போதுதான் அந்த வலியும் வேதனையும் புரியும்”
இன்று டிசம்பர் 10 மனித உரிமைகள் நாள்.
இன்று இதைப் பேசித்தான் ஆகவேண்டும்.
காரணம்… இதை இன்று பேசாவிட்டால்
வேறு எந்த நாளில் தான் பேசிவிட முடியும்?
ஆயுள் தண்டனை கைதிகள் மனித நேய அடிப்படையில்
விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அரசாணை
பாராட்டுதலுக்குரியது.

20ஆண்டுகாலம் சிறைவாசம் முடித்தவர்கள் மட்டுமல்ல,
10ஆண்டுகள் நிறைவு செய்தவர்களையும் விடுதலை
செய்வதற்கான விதிமுறைகள் இந்த ஆணையில்
சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அறிக்கையில்
இருக்கும் ஒரு கண்டிஷன்.. ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.
இங்கே மனித நேய அடிப்படையில் கொடுக்கப்படும்
விடுதலையில் “மதம்” தன் இந்துத்துவ முகத்தை
வெளிப்படுத்தி இருக்கிறது.
அதாவது “சாதி” யை விட மதம் தான் ஆகப்பெரும்
மன்னிக்க முடியாத குற்றமாக வரையறுக்கப்பட்டு
இருக்கிறது.
கீழவெண்மணியில் 44பேர் படுகொலை செய்யப்பட்ட
வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களும்,
மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில்
தண்டிக்கப்பட்டவர்களும் 10 ஆண்டுகளில் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர்., என்ற சிறைக்கைதிகள்
விடுதலை வரலாறு இதே தமிழ் நாட்டில் தான்
நடந்திருக்கிறது.
அதை மனித நேய அடிப்படையில்
ஏற்றுக்கொண்டோம். இதை அதே மனித நேய
அடிப்படையில் மறுத்திருக்கிறோம்.
ஏன்?
நாம் என்னவாக இருக்கிறோம்?!!
14 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவு பெற்ற கைதிகளை
விடுதலை செய்வது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது
என்பதைக் கூட வசதியாக மறந்தும் மறைத்தும்
நம் மனித நேயத்தைக்
காப்பாற்றிக் கொள்கிறோம்.
மனித நேய இந்துத்துவ அரசியல்:
டிசம்பர் 06 பாபர் மசூதி இடிப்பு.. என்பது
வெறும் நிகழ்வல்ல. இந்திய சட்டத்திற்கு
விடப்பட்ட மிகப்பெரிய சவால் அது.
அதன் விளைவுகளை வெளிப்படையாக பேசவோ
எழுதவோ முடியாது என்பது தான் நிதர்சனம்.
ஒருவன் இந்துவாக இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால் இந்துத்துவவாதியாக இருப்பது மனித
நேயத்திற்கு எதிரான பாசிச அதிகாரவெளி .
இந்துத்துவ என்ற கருத்தியலை உருவாக்கிய
சாவர்க்கர் இந்துத்துவ என்பதன் அதிகாரவெளியை
முன்னிலைப்படுத்துகிறார்.

காந்தி இந்து. ஆனால் அவர் இந்துத்துவவாதி அல்ல.
ஆனால்… அரசு அதிகாரம் இந்துவாக மட்டுமில்லாமல்
இந்துத்துவவாதியாக இருக்கிறது.
ஒருவகையில் இந்துத்துவ என்பதன் அதிகார முகம்
இப்படியாக வந்து விடுகிறது.
(For the liberals hInduism comes first and then Hindutva.
For the Nationalists, Hindutva comes first, and then Hinduism.
– Arvind Sharma)
இதை எல்லாம் எழுதக் கூடாது,
பேசக்கூடாது என்றுதான் நானும்
சில மாதங்கள் மெளனமாக இருந்தேன்.,
நேற்று ஒரு மசாலா படத்தில் ஒரு காட்சி :

/எதற்காக இதை எல்லாம் செய்கின்றீர்கள்?
இதில் என்ன கிடைக்கிறது? என்ற கேள்வி
ஒரு போலீஸ் அதிகாரி தான் கைது செய்யும்
இசுலாமியரிடம் கேட்கிறார்.
அதற்கு அவர் சொன்ன பதில்:
“ஓர் இசுலாமியனாக இருந்துப் பார்,
அப்போதுதான் அந்த வலியும் வேதனையும் புரியும்.. “/

இதை வெறும் சினிமா வசனமாக எண்ணி
கடந்து சென்றுவிட முடியவில்லை…
இன்று டிசம்பர் 10, மனித உரிமை நாள்.
எல்லாமாக இருந்துவிட முடிகிறது.
மனிதனாக இருப்பது மட்டும் தான்
இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும்
மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

Sunday, December 5, 2021

அறிவாயுதம் - ஜெய்பீம்


 


டிசம்பர் 06 (1956) பாபாசாகிப் அம்பேத்கரின்

நினைவு நாள்.

இன்று தாதர் சைதன்யபூமியில்
கூடுகின்ற கூட்டம் அரசியல்கட்சிகள்
அனைத்தும் இன்றுவரை அச்சத்துடன்
பார்க்கும் கூட்டம். காரணம் இவர்களுக்கு
ஒரே அரசியல் கொடி எல்லாம் கிடையாது.
ஒரே ஒரு ஈர்ப்புவிசையாக இருப்பவர்
பாபாசாகிப் அம்பேத்கர் .. அம்பேத்கர் மட்டும்தான்.
அதனால் தான் இன்று இந்தியாவிலிருக்கும்
அனைத்து கட்சிகளின் பாதாகைகளும்
சம்பந்தமே இல்லாமல் அம்பேத்கருடன்
பொய்யாக புன்னகைக்கும் போஸ்டர்கள்
தாதர் எங்கும் காட்சியளிக்கின்றன.
இங்கே திரளுகின்ற மக்களில்
சரிபாதியாக பெண்களும் இருக்கிறார்கள் என்பது
இன்னும் கூடுதல் கவனத்திற்குரியது.
தாதர் சைதன்யபூமி கோவில் அல்ல.
இங்கே வந்தால் போகிற இடத்திற்குப் புண்ணியமோ
அல்லது கேட்டவரமோ கிடைப்பதில்லை.
இங்கே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு
கடைப்பரப்பி இருக்கும். ஒரு அம்பேத்கரிய புத்தகக் கண்காட்சி
என்று இதைச் சொல்லலாம். ஸ்டால் கிடைக்காதவர்கள்
சாலையில் ஒரு ப்ளாஸ்டிக் விரிப்பை விரித்து
அதில் புத்தகங்களைப் பரப்பி வைத்திருப்பார்கள்.
இங்கே விற்பனைக்கு வந்திருக்கும் புத்தகங்கள்
90% எந்த ஒரு புத்தகக் கடையிலும் கிடைக்காத
புத்தகங்களாக இருக்கும். பெரும்பாலும் மராத்தி,
இந்தி, ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருக்கும்
புத்தகங்களும் குறுந்தகடுகளும் ..
இந்தப் புத்தக அலைகளுக்கு நடுவில் இன்னொருவர்
புத்தகங்கள் ஆங்காங்கே வெண்தாடியுடனும்
கருப்புச்சட்டையுடனும் காணப்படும் காட்சி..
தந்தை பெரியார் ஒருவர் மட்டும்தான்.
அதைப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம்..!
அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
மும்பை தமிழர்களுக்கும் புரட்சியாளர் அம்பேத்கருக்கும்
அவர் வாழ்ந்தக் காலத்தில் ஒரு இணைப்பு பாலமாக
தந்தை பெரியார் இருந்திருக்கிறார்.
பெரியாரும் அம்பேத்கரும் கலந்து கொண்ட தாராவி
நிகழ்வுகள் வட நாட்டில் பெரியார் என்ற புத்தகத்தில்
ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவிலிருந்து மட்டுமல்ல,
பீகார், மத்தியபிரதேசம். ஒரிஷா, உத்திரபிரதேசம்,
அசாம் , ஆந்திரா பகுதியிலிருந்து சைதன்யபூமிக்கு
வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
இந்த ஆண்டும் மும்பை மாநகராட்சியும் அரசும்
பலத்த முன்னேற்பாடுகளுடன் எதிர் நோக்கி
இருப்பதைச் செய்திகள் சொல்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சைதன்யபூமிக்கு சத்தமில்லாமல்
போய்விட்டு வருவேன். அந்தச் சில மணி நேரங்கள்
என்னை “”ரீசார்ஜ்” செய்து கொள்ள எனக்கு
உதவி இருக்கின்றன.
நேற்று நானும் அர்ஜூன் டாங்களேவும்
எப்படியாவது தாதர் போய்விட ஒரு திட்டம் போட்டோம்.
இரண்டு வீட்டாரும் கொரொனாவைக் காட்டி
எங்களைச் சிறைவைத்திருக்கிறார்கள்.!!!
(House arrest)
தப்பித்து வெளியேற முடியுமா?
தெரியவில்லை!
கொரொனாவின் பெயரால் இன்னும்
என்னவெல்லாம்தான் அனுபவிக்க வேண்டுமோ?