டிசம்பர் 06 (1956) பாபாசாகிப் அம்பேத்கரின்
நினைவு நாள்.
இன்று தாதர் சைதன்யபூமியில்
கூடுகின்ற கூட்டம் அரசியல்கட்சிகள்
அனைத்தும் இன்றுவரை அச்சத்துடன்
பார்க்கும் கூட்டம். காரணம் இவர்களுக்கு
ஒரே அரசியல் கொடி எல்லாம் கிடையாது.
ஒரே ஒரு ஈர்ப்புவிசையாக இருப்பவர்
பாபாசாகிப் அம்பேத்கர் .. அம்பேத்கர் மட்டும்தான்.
அதனால் தான் இன்று இந்தியாவிலிருக்கும்
அனைத்து கட்சிகளின் பாதாகைகளும்
சம்பந்தமே இல்லாமல் அம்பேத்கருடன்
பொய்யாக புன்னகைக்கும் போஸ்டர்கள்
தாதர் எங்கும் காட்சியளிக்கின்றன.
இங்கே திரளுகின்ற மக்களில்
சரிபாதியாக பெண்களும் இருக்கிறார்கள் என்பது
இன்னும் கூடுதல் கவனத்திற்குரியது.
தாதர் சைதன்யபூமி கோவில் அல்ல.
இங்கே வந்தால் போகிற இடத்திற்குப் புண்ணியமோ
அல்லது கேட்டவரமோ கிடைப்பதில்லை.
இங்கே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு
கடைப்பரப்பி இருக்கும். ஒரு அம்பேத்கரிய புத்தகக் கண்காட்சி
என்று இதைச் சொல்லலாம். ஸ்டால் கிடைக்காதவர்கள்
சாலையில் ஒரு ப்ளாஸ்டிக் விரிப்பை விரித்து
அதில் புத்தகங்களைப் பரப்பி வைத்திருப்பார்கள்.
இங்கே விற்பனைக்கு வந்திருக்கும் புத்தகங்கள்
90% எந்த ஒரு புத்தகக் கடையிலும் கிடைக்காத
புத்தகங்களாக இருக்கும். பெரும்பாலும் மராத்தி,
இந்தி, ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருக்கும்
புத்தகங்களும் குறுந்தகடுகளும் ..
இந்தப் புத்தக அலைகளுக்கு நடுவில் இன்னொருவர்
புத்தகங்கள் ஆங்காங்கே வெண்தாடியுடனும்
கருப்புச்சட்டையுடனும் காணப்படும் காட்சி..
தந்தை பெரியார் ஒருவர் மட்டும்தான்.
அதைப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம்..!
அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
மும்பை தமிழர்களுக்கும் புரட்சியாளர் அம்பேத்கருக்கும்
அவர் வாழ்ந்தக் காலத்தில் ஒரு இணைப்பு பாலமாக
தந்தை பெரியார் இருந்திருக்கிறார்.
பெரியாரும் அம்பேத்கரும் கலந்து கொண்ட தாராவி
நிகழ்வுகள் வட நாட்டில் பெரியார் என்ற புத்தகத்தில்
ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவிலிருந்து மட்டுமல்ல,
பீகார், மத்தியபிரதேசம். ஒரிஷா, உத்திரபிரதேசம்,
அசாம் , ஆந்திரா பகுதியிலிருந்து சைதன்யபூமிக்கு
வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
இந்த ஆண்டும் மும்பை மாநகராட்சியும் அரசும்
பலத்த முன்னேற்பாடுகளுடன் எதிர் நோக்கி
இருப்பதைச் செய்திகள் சொல்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சைதன்யபூமிக்கு சத்தமில்லாமல்
போய்விட்டு வருவேன். அந்தச் சில மணி நேரங்கள்
என்னை “”ரீசார்ஜ்” செய்து கொள்ள எனக்கு
உதவி இருக்கின்றன.
நேற்று நானும் அர்ஜூன் டாங்களேவும்
எப்படியாவது தாதர் போய்விட ஒரு திட்டம் போட்டோம்.
இரண்டு வீட்டாரும் கொரொனாவைக் காட்டி
எங்களைச் சிறைவைத்திருக்கிறார்கள்.!!!
(House arrest)
தப்பித்து வெளியேற முடியுமா?
தெரியவில்லை!
கொரொனாவின் பெயரால் இன்னும்
என்னவெல்லாம்தான் அனுபவிக்க வேண்டுமோ?
No comments:
Post a Comment