Wednesday, June 21, 2017

பிச்சிப்பூ

எல்லாமே சொல்லித்தான் ஆகவேண்டுமென்பதில்லை.
சொல்லிவிடவும் முடிவதில்லை.
பிச்சிப்பூ வாசனையை எப்படி சொல்வேன்?!"

flow-300x150.jpg (300×150)

அவள் எழுதிக்கொண்டே இருந்தாள்.
பக்கம் பக்கமாக.
எல்லாவற்றையும் எழுதுவாள்.
சிரித்ததை அழுததை சண்டைப் போட்டதை.. குறைந்தது 
பத்துக் கேள்விகள் அவள் கடிதத்தில் இருக்கும்.
அவளுக்கென்ன வேலை வெட்டி இல்லாதவள்.
நினைத்த நேரத்தில் உட்கார்ந்து எழுதிவிட முடியும்.
என்னைப் போல அலுவல், மீட்டிங், தொழிற்சங்கம், அரசியல்
 என்று ஆயிரம் வேலைகள் அவளுக்கு அப்படி இல்லை.
அதனால் தான் அவள் எழுதிக் கொண்டே இருந்தாள்.
சில சமயம் எரிச்சல் வரும் அவளின் குழந்தைதனமானக் கேள்விகளால்.
சில சமயம் கோபம் வரும் அவள் புரிந்தும் புரியாமல் கேள்விகேட்பதால்.
சில சமயம் குழப்பமாய் இருக்கும் இதை ஏன் அவள் எனக்கு
 எழுத வேண்டும் என்று.
சில சமயம் சின்னதாக ஒரு பூ பூக்கும்.. சின்ன பிச்சிப்பூ
 மொட்டுவிரியும்போது அந்தச் சன்னல் வழியாக வீசும் காற்றில்
 மணம் கலந்து உடல் தழுவும்போது
சிலிர்க்குமே அப்படி சின்னச் சின்ன செயல்களில் 
அவள் அன்பு மொட்டவிழும். அப்போதெல்லாம் ஒடிப்போய் 
அவளைப் பார்க்க வேண்டும் என்று உள்ளம் பரபரக்கும்.
‘என்னடா ‘ என்று அவள் கைப்பிடித்து கல் பெஞ்சில் 
அமர்ந்து கதைப் பேச வேண்டும் போலிருக்கும்.
அதை வெளியில் அவளிடம் காட்டிக்கொள்ள 
நினைக்கும்போதெல்லாம்
‘சரிதான் அவள் சரியான அரைலூஸு ‘ என்று மனசு 
சாவியாகி பூட்டி வைத்துவிடும்.
அவள் எவ்வளவு இறங்கி வந்தாலும் 
‘என் வாழ்வில் உனக்கு எப்போதும் தனி இடம் உண்டு ‘ 
என்று சொல்லாமல் மனசு சண்டித்தனம் பண்ணும்.
அவளைப் பார்க்க வேண்டும்.. 
எப்படித்தான் அவளுக்கு இவ்வளவு நேரமிருக்கின்றதோ
 எழுதவும் படிக்கவும். காலையில் மடல் எழுதியிருந்தால்
 மாலையின் மின்னஞ்சலில் அவள் பதில் எழுதியிருப்பாள்..
‘என்ன வேகம் இவளிடம்.. ‘
அதனால்தான் முணுக்கு முணுக்கென்று
 அவளுக்கு என்னிடம் கோபம்வரும்.
ஆபிஸ் விசயமாக அகமதாபாத் போக வேண்டி இருந்தது. அவளைப் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்தேன்.
சொல்லக் கூடாது சர்ப்ரைஸ்சாக போய் நிற்க வேண்டும்.
அவள் சந்தோஷத்தை அப்போது பார்க்க வேண்டும் என்று
 ஒரு வினோதமான ஆசை.
அப்படித்தான் ஏர்போர்ட்டிலிருந்து ஒரு டாக்சிப் பிடித்து
 அவள் வீட்டுக்குப் போனபோது பொழுது விடிய ஆரம்பித்திருந்தது.
அவள் கிட்சனில் மட்டும் விளக்கு எரிந்தது.
வாட்மேனிடம் விவரமெல்லாம் சொல்லிவிட்டு உள்ளே 
டாக்சி நுழைந்தது.அவள் வீட்டுக் கதவின் காலிங்க்பெல்லைஅழுத்தியபோது
 அவள்தான் வந்து திறந்தாள்.
குளிருக்காக ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தாள்.
அவள் குடும்பத்தில் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினாள்.
கணவன், குழந்தைகள், மாமியார், நாத்தனார் பிள்ளை, தங்கையின் மகள்..
ஒரு கூட்டமே இருந்தது.
ஒவ்வொருவருக்கும் அவர்கள் எழுந்து வரவர அவள் சுடச்சுட கையில்
ட்டீயா காபியா என்று கேட்டு கொடுத்துக்கொண்டிருந்தாள்.
7 மணியிலிருந்து காலை உணவுக்காக டைனிங் டேபிளில் அவர்கள்
உட்காரும்போது தோசைக்கு சாம்பாரா, சட்னியா, பொடியா
 என்று கேட்டுக் கேட்டு அவள் பரிமாறிக்கொண்டிருந்தாள்.
அப்போதெல்லாம் என்னைப் பார்த்து மெளத்தில் 
விசாரித்துக்கொண்டிருந்தாள்
‘நலந்தானே ‘ என்று.
ஒவ்வொருவருக்கும் மதியச் சாப்பாடு..
 டிபன் பாக்ஸை பிளாஸ்டிக் பையில் சுற்றி டைனிங் டேபிளில்.
கடைசியாக அவள் கணவர் கிளம்பிப்போகும்போது மணி 10 ஆகிவிடுகின்றது.
அதன்பின் கிட்சனில் குவிந்து கிடக்கும் பாத்திரங்களை வேலைக்காரிக்காக ஒதுங்க வைத்து விட்டு மாமியாருக்கு குளிக்க வெந்நீர் தயார் செய்தாள்.
மாமியார் ஏதோ நடமாடிக் கொண்டார். பக்கவாதம் வந்ததில் முக்கால் வாசி போய்விட்ட கையும் காலும்.,
அவர்களைக் குளிக்க வைத்து சுடச்சுட தோசை..
இடையில் இன்சுலின் ஊசி வேறு.
11.30 மணிக்கு நவதானியங்கள் போட்ட கஞ்சி தயாரித்து
 மாமியாருக்கு குடிக்கின்ற சூட்டில் பதமாக கொடுத்துவிட்டு 
குளிக்க ஓடினாள்.
அவசரம் அவசரமாக குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்.
தலை முடியிலிருந்து இன்னும் சொட்டுச்சொட்டாக
 தண்ணீர் முத்துக்கள்.
பக்கத்தில் போய் அவள் தலை முடியை துவட்டி விட வேண்டும்
 போலிருந்தது.
அதெல்லாம் முடியாதுதான்.
நினைப்பதை எல்லாம் அவள் வாழ்க்கையில்
 என்னால் செய்ய முடியாதுதான்.
எந்த உறவின் பெயரில் அவளை நான்
நெருங்க முடியும் ?
மெளனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு அரை மணிநேரம் காய்கறி நறுக்கும்போது டைனிங் டேபுளில் 
உட்கார்ந்து கொண்டே என்னிடம் சுகச் செய்திகளைக் கேட்டாள்.
12.30 க்கு மாமியாருக்கு பத்தியச் சாப்பாடு.
1.30லிருந்து ஸ்கூலில் இருந்து தங்கை மகளும் அவள் மகனும் வந்தார்கள்.
அவர்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு என்னையும் சாப்பிடச் சொன்னாள்.
நான் சாப்பிட உட்கார்ந்த உடன் உள்ளேயிருந்து
 மாமியார் கூப்பிட  ‘என்ன வேண்டும் ‘ என்று ஓடினாள்.
எனக்குச் சாப்பாடு கொடுக்கும்போது நான்குதடவை அவள் மாமியார் கூப்பிட்டார்கள்.
அவர்கள் அவளை வேண்டுமென்றே அழைப்பது போலிருந்தது.
நான் பயண அசதியில் ஒரு மணி நேரம் கண்ணயர்ந்தேன்.
மணி 3.30 தாண்டி விட்டது.
கல்லூரி போனவர்க
ளும் வந்தாகிவிட்டது ..
மாலை டீ , டிபன்…
இடையில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் தொலைபேசி..
7 மணிக்கு ஆரம்பிக்கும் இரவு உணவு வேலை
8.30 லிருந்து ஒவ்வொருவராக இரவு உணவு சாப்பிட உட்காருவது..
அவள் கிட்சனிலிருந்து வெளியில் வரும் போது மணி 11.30..
நான் தூங்கி விட்டேனா என்று என் அருகில் வந்து பார்த்தாள்.
எனக்குத் தூக்கம் வரவில்லை.
ஆனாலும் தூங்கவில்லை என்று அவளிடம் காட்ட விருப்பமில்லை.
மெதுவாக ஒரு மெல்லிய போர்வையை எடுத்து என் கால்களை மூடி சன்னல் கண்ணாடிகளை இழுத்து அடைத்துவிட்டு பேஃன் வேகத்தைக்
குறைத்துவிட்டு அவள் போகும்போது 
என் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள்
தலையணையை ஈரமாக்கியது.
மறுநாள் அவள் கணவர் ஆபிஸ் காரிலியே 
என்னை ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அவளிடன் போய் வருகின்றேன் என்று சொன்னபோது
அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.
சத்தம் கொடுத்தால் எங்கே உடைந்து போன குரல் உள்ளத்தைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்று என் கண்களைச் சந்திக்காமலேயே
அவள் விடை கொடுத்தாள்.
வீட்டுக்குப் போனவுடன் என்ம னைவிக் கேட்டாள்..
எனக்கு என்ன வாங்கி வந்தீர்கள் என்று . நேரமில்லை
 என்று சொன்னவுடன் கோபம்.. 
அது சாப்பாடு மேசையில் கரண்டியில் ஒலித்தது.
நான்கு நாட்களில் எதுவும் வைத்த இடத்தில் இல்லை.
எங்கே என்று கேட்டால் ‘ எனக்கென்னப்பா தெரியும் ?
 எனக்கு இப்போ ஆபிஸ் விட்டு வரவே ரொம்ப லேட்டாயிடுது.. ‘
நான்கு நாட்கள் பிரிவில் மனைவியின் மடிக்கு
 மனசு ஏங்க தொட்டவுடன்
‘ப்ளீஸ்ப்பா என்னாலே முடியாது.. ஆபிஸ்லே நிறைய வேலைப்பா.. ‘
முகத்தை திருப்பிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்..
துணி துவைப்பதலிருந்து பிள்ளைகளுக்கு மதிய உணவு தயாரிப்பதுவரை வேலையாள்தான். 
அப்படியும்மென்னதான் டயர்டோ ?
ஏங்கும்போது கிடைக்காது என்தர்மபத்தினியிடம்  எதுவும்….
எழுந்து கொல்லைப்பக்கமாகப் போய்நின்று கொண்டு சிகிரெட் புகையை
இழுத்து விடும்போது அவள் முகம் நினைவில்…!!!
அவள் கண்கள்.. புரியாத பாஷையில் என்னவோ பேசியது.
சிகிரெட் முனையின் சின்னக் கங்கு விரல் நுனியைச் சுட்டபோது
அனிச்சையாகக் கூட கத்த மறந்துபோனது.
‘தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா..உன்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.. ‘
என்று சம்மந்தா சம்மந்தமில்லாமல் பாரதிப் பாட்டு நினைவுக்கு வந்தது.
இப்போதெல்லாம் அவள் கடிதங்களுக்குப் பக்கம் பக்கமாக பதில் எழுதுவதில் தனி இன்பம்.
தினமும் இரண்டு மூன்று கடிதங்கள்..
அவள் கடிதம் வந்திருப்பதை கைபேசி சொல்லியுடன்
கைபேசியிலேயே மின்னஞ்சலில் அவள் கடிதத்தை
வாசித்துவிடும் அவசரம்..
உடன் பதில்.. அதிலொரு இனம்புரியாத மகிழ்ச்சி
இந்த எழுதும் கைகள் இருக்கும்வரை..
வாசிக்க கண்கள் இருக்கும்வரை…
கைகளும் கண்ணும் நோய்நொடி இல்லாமல் இருக்கும்வரை..
எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்..
அப்போதுதான் எழுத முடியாத ஒரு காலமும் வந்துவிட்டால்,
எழுதிய நினைவுகளில், வாசித்த நினைவுகளில் அந்த மெல்லியப் பிச்சிப்பூவின் வாசனையைக் கடைசிவரை உணர்ந்து கொண்டே இருக்க முடியும் என்ற
உயிர்ப்பூ சொல்லுகின்றது.
என் நீண்ட கடிதங்கள், உடன் பதில் .. இதிலெல்லாம் அவள் திக்கு முக்காடிப்போய் சந்தோஷத்தில் இருப்பாள் என்று நினைக்கும் போதே மனசு றக்கைக் கட்டிக்கொண்டு வானத்தில் பறப்பது போலிருந்தது.
நண்பன் சொன்னான்..
‘டேய்.. நீ உன்னையும் அறியாமல் அவளைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டே ‘
அவனுக்கு என்ன தெரியும் நான் பலமுறை பலரைக் காதலித்து இருக்கின்றேன். அதனால் எனக்கு அவனைவிடக் காதலைப் பற்றி அதிகமாகவே தெரியும்.
இது வெறும் காதல் இல்லை…
அதுக்கும் மேலே ஒன்னு.. சொல்லத்தெரியலை…
எல்லாமே சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதுமில்லை.
எல்லாமே சொல்லில்தான் வாழ வேண்டும் என்பதுமில்லை.
அனுபவிக்கறவனுக்கு மட்டும்தான் பிச்சிப்பூ வாசனைத் தெரியும்
என்னதான் சொல்லில் கொண்டுவர முயற்சி செய்தாலும்
பிச்சிப்பூவின் வாசனையை வார்த்தைகள் தந்துவிட முடியுமா ?
—————————————————————————
மீள்பதிவு. 2004 ஜனவரியில் எழுதிய கதை.

Monday, June 19, 2017

அம்ச்சி தாராவி

அம்ச்சி தாராவி

Plastic-recycling-factory-roof-Dharavi-slum-Mumbai-India1.jpg (1600×899)

தாராவி ஆசியாவின் குடிசை, உலகின் மிகப்பெரிய குடிசைகள்
 வரிசையில் 3வது இடத்தில் இருக்கிறது 
  தாராவியின் சாக்கடைகளை, சால்களை, குடிசைகளை
 அடிப்படை வசிதிகள் இல்லாத வாழ்விடங்களைக் காட்டுவதில்
 அனைத்து ஊடகங்களும் அன்று முதல் இன்றுவரை
 போட்டிப்போடுகின்றன. ஆஸ்கார் விருது பெற்ற படம் வேறு
 இதில் பெரும்பாங்காற்றி இருக்கிறது.
இதெல்லாம் பொய்யல்ல. ஆனால் இவை மட்டுமல்ல தாராவி.
தாராவிக்கு இன்னொரு முகம் உண்டு.
என்னைப் போல தாராவியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு 
அந்த முகம் புதிதல்ல.
இந்த தாராவியில் தான்  பெயரில்லாத 20,000 குடிசைத் தொழில் 
யுனிட்டுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 
மிகவும் முக்கியமானது  recycling units 
மறு சுழற்சி முறை தொழிற்கூடங்கள். 
அதுவும் மாராட்டிய மண்ணின் கழிவுப்பொருட்கள் மட்டுமல்ல, பிறநாடுகளின் கழிப்பொருட்களும் வந்து இறங்குகின்றன.
 உடைந்த பொம்மைகள் கூழாகி மீண்டும் பணக்கார குழந்தைகள் விளையாடும் பார்பி டால்களுக்கான 
கச்சாப்பொருளாகின்றன.
மண்ணால் செய்யப்படும் மண்பாண்டங்கள், அகல்விளக்குகள்,
 தண்ணீர் கூஜாக்கள், சமையல் பாண்டங்க்கள் 
என்று மண்பாண்ட தொழில்,
தோல் பதனிடும் தொழிற்சாலையில் வளர்ச்சியில் உருவாகும் 
தோல்பை, பர்ஸ், செருப்பு வகைகள், சூட்கேஷ்கள் இன்னொரு பக்கம்..
இத்தொழில்களின் ஓராண்டு வருமானம் மட்டும்
 665 மில்லியன் டாலர் !
200க்கும் அதிகமான e-commerce விற்பனை தளங்கள்
 இன்றைய தாராவி இளைஞர்கள் கையில்.

அண்மையில் தாராவியில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டேன். இளைஞர்களின் ராக் இசை, , தாராவி கானா பாடல்கள், 
ஹிப்பப் டான்ஸ்.. என்று கலக்குகிறார்கள். இன்னும் அணையாத அக்னிக்குஞ்சுகளாக அவர்கள்
நம்பிக்கை நட்சத்திரமாக தென்பட்டார்கள்.
தாராவியின் எதிர்காலத்தின் குரலாக
முகமாக  முகவரியாக  இவர்கள் அனைவரும் இருப்பார்கள்,
Friday, June 16, 2017

காந்தியின் மனம்

காந்தியின் மனம்..
THE MIND OF MAHATMA GANDHI புத்தக வாசிப்பு அனுபவத்தில்..
naj754.jpg (354×550)
நமக்கெல்லாம் கனவுகள் விடிவதற்குள் முடிந்துவிடுகின்றன.
சிலருக்கு கனவுகளின் மயக்கம் அன்றைய பொழுதில்
ஏதோ ஒரு வகையில் நீடிக்கிறது. இதில் கவிஞர்களின்
 கனவுலகம் அலாதியானது. கனவுக்கும் நிஜத்திற்கும் நடுவில்
 கவிஞன் ஊசலாடுகிறான்.
அவன் மொழியுலகம் அதனால் தான் வித்தியாசப்படுகிறது.
கனவுகளை நோக்கி ய பயணத்தில் சமூகமும் 
சமூகவிலங்காக அவன் பெறும் அனுபவமும்
 அவன் மொழியை மொழியின் பொருளை ஆழப்படுத்துகின்றன.
 அவன் என்பது அவனாக மட்டுமின்றி அங்கே சமூகமும்
 அவனிடமிருந்து தன்னைப் பிரதி எடுத்துக்கொள்கிறது.
அதனால் தான் எப்போதுமே வாசகன் அவன் எழுத்துகளில்எங்கேயோ
 ஒரு புள்ளியில் தன்னையும் அடையாளம் காணுகிறான்.
இதில் ஒரே புள்ளிக்கு பல்வேறு அடையாளங்களும்
 ஒவ்வொருவருக்குமான வரிகள் வெவ்வேறாகவும் அமைந்து 
அவன் எழுத்தின் அடிமுதல் முடிவரை
தேடிச்செல்லும் பயணத்தை உருவாக்கி விடுகின்றன.
ஆனால் அவன் 24X7 கனவுகளுடன் வாழ்வதில்லை! 
இன்னும் சொல்லப்போனால்
அவன் 24X7 கவிஞனாக எழுத்தாளனாக ஓவியனாக இருக்க வேண்டியதில்லை.
இருப்பதும் இல்லை! ( சில விதிவிலக்குகள் இதிலும் உண்டு)
ஆனால் தலைவர்கள் அப்படி இருந்தால்..!
அண்மையில் வாசித்த புத்தகம் THE MIND OF MAHATMA GANDHI .
காந்தி தன்னைப் பற்றியும் தன் சமூக நிலைப்பாடு குறித்தும்
 எழுதியவைகளின் தொகுப்பு நூல். 1945ல் முதல் பதிப்பு வெளிவந்தது.
முதல் அத்தியாயத்தில் காந்தி தன்னைப் பற்றி எழுதி இருக்கும் 
சுயவிமர்சனங்கள் கவித்துவமாக வந்து விழுகின்றன.
மொழியாளுமை நம்மை வசீகரிக்கிறது..
>Neither saint nor sinner –
>I will not be a atraitor to God to please the whole world –
>I have no secret methods, I know no diplomacy save that of truth. I have no weapon but
Non violence.
>My life has been an open book. I have no secrets and I encourage no secrets.
I have been known as a crank, faddist, amd man. Evidently the reputation is well deserved.
>My mahatmaship is worthless. It is due to my outward activities , due to my politics which
Is the least part of me and is, therefore, evanescent.
 I do not want to die….of a creeping paralysis of my faculties – a defeated man. AN ASSASSIN’S BULLET MAY PUT AN END TO MY LIFE , I WOULD WELCOME IT.
 I AM NOT AFRAID TO DIE IN MY MISSION, IF that is to be the fate.
 Iam an optimist beause I expect many things from myself. I have not got them,
As Iam not yet a perfect being.
இப்படியாக சுயவிமர்சனங்களைத் தாண்டி
ஒரு சமூகவிடுதலைக்கான அரசியல் களத்தில் 
அவருடைய அதீதமான கனவுலகம் நம்மைப் பயமுறுத்துகிறது
. சில நேரங்களில் எரிச்சல் கூட வருகிறது.
ராமராஜ்யம் என்று நான் சொல்வது இந்து ராஜ்யம் அல்ல 
என்று வெவ்வேரு இடங்களில் தொடர்ந்து சொல்லி வந்துள்ளார் காந்தி. 
ஆனால் ராமன் என்ற பெயர்ச்சொல்லுக்கு இருக்கும்
 மரபான புராதான புராண மத அடையாளங்களை 
அறியாதவர் அல்ல காந்தி. 
காந்தி தேசம், சத்தியாகிரக தேசம், ஏன் அஹிம்சை தேசம் என்று கூட
 அவர் தன் கனவு ராஜ்யத்திற்கு பெயர் சூட்டி இருக்கலாம்.
 அப்படி எல்லாம் செய்யாமல் பல நூறு ஆண்டுகள் மக்கள்
நம்பிக்கையில் இருக்கும் ராமன் என்ற இந்துக்கடவுளின்
 அடையாளத்தை எடுத்துக்கொண்டு நான் சொல்லும் 
ராமராஜ்யம் இப்படிப்பட்டது என்று பலநூறு பக்கங்கள்
 எழுதினாலும் பேசினாலும் ராமனின் அடையாளம்
பொதுஜனப்புத்தியில் மாறிவிடப்போவதில்லை.
 மாற்றம் பெறவுமில்லை.
தீவிரமான காந்தியவாதிகள் கூட காந்தி பேசிய ராமராஜ்யத்தை
 எந்தளவுக்குப் பொருட்படுத்தினார்கள் என்பதை
 எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது.
நேரு வெளிப்படையாகவே காந்தியின் ராமராஜ்யத்தை
 எதிர்த்து வந்தார்.
இன்றைக்கு பிஜேபி காரர்கள் மாட்டிறைச்சி அரசியல் செய்வதை 
எதிர்க்கிறோம். ஆனால் இந்த மாட்டிறைச்சி அரசியல் காந்தியத்தில்
கொண்டாடப்பட்டிருக்கிறது
. Cow protection is the gift of Hinduism to the world. And Hinduism will live so long as there are Hindus to protect cow…
Hindus will be judged not by their tilaks, not by the correct chanting of mantras, not by their pilgrimages, not by their most punctilious observances of caste, rules but their ability to protect COW ( pg 388)
மாட்டிறைச்சி பக்கத்தில் காந்தி காட்டும் இந்துவும்
 ராமராஜ்யத்தில் ராமனும் ரஹீமும் ஒன்றே என்று பேசுவதும்.. .. ? ???
எச்சரிக்கை.. .
ஒரே நாளில் இந்த இரண்டு பக்கத்தையும் சேர்த்து வாசித்தால்..
வாசிக்கிறவனுக்கு யோசிக்கும் திறன் பிறழ்ந்துவிடும் அபாயம் உண்டு.
இன்றைய அரசியல் இந்துத்துவ அரசியல் முகமாக
நாம் காணும் ராமர்கோவில் முதல் மாட்டிறைச்சி தடை
வரை.. காந்தியின் காந்தியத்திலிருந்து ஒழுகி
வந்திருக்கிறது என்பதை உணரும் போது அந்த
அஹிம்சைவாதியின் அரசியல் நம்மை அச்சுறுத்துகிறது !
அதீத கனவுநிலை தனிமனித அனுபவமாக வெளிப்படும் 
போது ரசிக்கவும் கொண்டாடவும் முடிகிறது. 
அதுவே சமூக அரசியலில் தீர்வுக்கான முன்மொழிதலாக
 இடம் பெறும் போது யதார்த்த நிலையிலிருந்தும்
களத்திலிருந்தும் முழுவதுமாக விலகி ஒரு மாய உலகத்தை 
மட்டுமே காட்டுகிறது.
காந்தி சொல்ல விரும்பிய கருத்துகள் அவருடைய 
மேற்பார்வையில் அவர் இசைவுக்குப் பிறகு புத்தகமாக
 வெளிவந்திருக்கிறது என்ற குறிப்பு
 இப்புத்தகத்தைக் கவனிப்புக்குரியதாக்குகிறது.

Thursday, June 15, 2017

மாநகரத்தின் பொறுமைmumbai-potloes759.jpg (759×422)

குண்டும் குழியுமான வாழ்க்கை.
வாழ்க்கை மேடு பள்ளங்கள் கொண்டது
என்ற வாழ்க்கையின் ஆகச்சிறந்த தத்துவத்தை
அம்ச்சி மும்பை பெருநகரம் நாங்கள் மறந்துவிடாமல் இருக்க
 ஒவ்வொரு மழைக்காலத்திலும் தத்துவமாக
குடை விரித்து கற்பித்துக் கொண்டிருக்கிறது.
நானும் மழைக்கோட்டு மாட்டிக்கொண்டு சீருடை அணிந்து
 சிறுவர் பள்ளிக்குப் போன நாள் முதல் இன்று வரை…
இதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவிட்டேன்.
ஆனால் இந்த குண்டும் குழியும் மாறவே இல்லை.
அவ்வளவு சிறந்த சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இம்மாநகரம். !!

கோடை வெயிலில் நடுரோட்டைத் தோண்டுவார்கள். 
மின்சாரவாரியம், தண்ணீர் வாரியம், தொலைபேசி வாரியம்,’
 எரிவாயு வாரியம்… இப்படியாக ஒருவர் மாற்றி ஒருவர் 
ரோட்டைத் தோண்டுவதும் மூடுவதுமாக இருப்பார்கள்.
யார் எதற்கு தோண்டுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது.
இதற்கெல்லாம் மும்பை மக்கள் பழகிவிட்டார்கள்!
மழைக்காலம் வரும் முன் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள்
 ஊடகங்கள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு
 போட்டோ போட்டு மும்பை சாலைகளின் அவலத்தைப்
 பற்றி தீவிரமாக பேசுவார்கள் பேசுவார்கள் பேசிக்கொண்டே
இருப்பார்கள். அவர்கள் பேசுவதைப் பார்த்தால்
நம்ம டிவி ஸ்கீரினே சூடேறி இருக்கும்..!
இத்தனைக்கும் இந்த மும்பை மாநகரம்
 இந்தியாவின் வணிகத்தலைநகரம்.
இந்த மும்பை மாநகரத்தின் வருமானம்
 இந்தியாவின் சில மாநிலங்க்களின் மொத்த வருமானத்தை விட அதிகம்.
 மும்பை மாநகரத்தின் பட்ஜெட் மட்டுமே
 இந்தியாவின் 9 மாநிலங்களின் பட்ட்ஜெட்டை விட அதிகமானது!
வருமானவரி, சுங்கவரியின் 50% மும்பை. மாநகரம் கொடுக்கிறது. 
மத்திய அரசுக்கு 40,000 கோடி வரியாக செலுத்துகிறது.
இப்படியாகபபட்ட வருமானங்களைக் கொட்டித்தரும் 
பணக்கார மும்பை மாநகரத்தின் சாலைகள்
என்பதையும் சேர்த்து வாசிக்க வேண்டும்.
இந்த இலட்சணத்தில் இன்னொரு புதுப்பிரச்சனை
 அண்மைக்காலங்களில்.
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும்னு
 சொல்ற மாதிரிதான் இதுவும். 
மும்பை மாநகராட்சி சிவசேனா கையிலும்
மராட்டிய மாநிலம் பிஜேபி கையிலும்.. 
அதாவது அத்தொகுதி சட்டசபை உறுப்பினர் 
பிஜேபிக்காரராக இருப்பார்.. 
கவுன்சிலர் சிவசேனாக்காரராக இருப்பார்.
என்னவோ .. இதற்கெல்லாம் நாங்கள் பழகிவிட்டோம்
பொறுமையாக இவைகளைக் கடந்து செல்கிறோம்.
எங்கள் மும்பைக்கருக்கு கோபமே வராதா என்று
நீங்கள் கேட்கக்கூடாது! வரும்..
கிரிக்கெட்டில் இந்தியா சரியாக விளையாடவில்லை என்றால்
மட்டும் எங்களுக்கு ரொம்ப ரொம்ப கோவம் வரும். !!

Tuesday, June 13, 2017

மழைவாசனை


நீ வந்துவிட்டுப் போனதற்கான அடையாளம்
விடியலில் என்னைப் பரவசப்படுத்துகிறது.
தோட்டத்தின் புல்வெளிகளில் நெட்டிலிங்க மரத்தின்
இலைகளில் உன் அடையாளங்கள் அப்படியே இருக்கின்றன.
சாலையின் குழிகளில் தண்ணீர் கெட்டி
சளீர் சளீர் என்று வாகனச்சக்கரத்தில் பட்டுத் தெறிக்கிறது.
நீ வந்துவிட்டாய். வந்துவிட்டாய்.
சாளரக்கதவுகளை திறந்து என்னை எட்டிப்பார்த்திருப்பாய்.
எனக்குத் தெரியும்.
மெல்லிய இரவு வெளிச்சத்தில் என்னருகில் வந்து பார்த்தாயா?
அந்த மழைக்காலத்தில் உன் மழையில் ஆடியவளை
நீ தேடினாயா?
இவள் அவளில்லை என்று உள்ளம் மாறினாயா!
நேற்றைய மழையில் நீ இருந்தாயா..?
 மழைவாசனைக்காக சன்னல் கம்பிகளூடாக எட்டிப் பார்க்கிறேன்.
கூடுகள் களைக்கப்பட்ட ஜோடிப் புறாக்கள்
அங்கே ஒதுங்கி இருக்கின்றன.
புறாக்கள் அங்கேயே இருக்கட்டும்.
மழையில் நனைவதும் மழைக்கு ஒதுங்குவதும்
குடைகளின் ரகசிய மொழிகள் .
கம்பிகள் உடைந்த குடையை விரிக்கமுடியாமல்
தடுமாறுகிறேன். வேகமாகக் காற்றடிக்கிறது.
கண்ணாடிக் கதவுகள் மூடிக்கொள்கின்றன.
இருமல் துரத்துகிறது.
கொடியில் காய்ந்துக் கொண்டிருந்த புடவை
கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறது.
நாளை அந்தப் புடவையை எடுத்து ..
உன் வாசனை இப்போதே என்னைச் சுற்றி..


 rainy-days.png (658×448)


Sunday, June 11, 2017

நாய் வால்

நாய் வால்

எல்லா நாய்களையும் விலைக்கு வாங்கி விடுவதில்
போட்டி நடக்கிறது.
நாய்களைப் பிடித்து வருவதற்கு ஏரியா வாரியாக
ஏஜண்டுகள் இருக்கிறார்கள்.
கிரிக்கெட் வீரர்களை ஏலத்திற்கு எடுப்பது போல
விலைப் பேசப்படலாம் நாய்கள்.
குரைப்பது  கடிப்பது காவல்காப்பது
இதற்கெல்லாம் கறுப்புபூனைகள் காத்திருப்பதால்
இனி, நாய்கள் வாலை மட்டும் ஆட்டினால் போதும்.
இடமாகவா வலமாகவா உயர்த்தியா தாழ்த்தியா
கவலைப்பட வேண்டாம்  நாய்கள்
நாய்களுக்குப் பயிற்சி கொடுக்க
பைரவர்கள் காத்திருக்கிறார்கள்.
தேய்பிறை அஷ்டமி திதியில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்
பைரவரை அணுகினால் பலன் உண்டு. 
எது நடந்தாலும் சரி,,
ராமன் ஆண்டால் இராவணன் ஆண்டால் என்ன
பழையமொழி தான்
நமக்குத் தெரிந்தது
நாய்களுக்கும் தெரிந்திருக்கும்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Saturday, June 10, 2017

சொற்களே .. என்னை மன்னித்துவிடுங்கள்

சொற்களே என்னை மன்னித்துவிடுங்கள்
Image result for கல்வெட்டுகள்
யுகங்களின் பனிக்குடம் உடைந்து பிரசவிக்கப்பட்ட ஓசைகள்
சொற்களின் முதல்மொழி. அத்தாய்மொழி  ஈன்ற சிசுக்கள்
காலவீதியில் தொட்டில் கட்டி சமூகவெளியில் நடைப்பயின்று
வளர்ந்து ஆளாகி பருவமெய்தி
வினையுடன் புணர்ந்து வினைச்சொல்லாகி
ஊர் ஊராக பயணித்து
செய்தொழிலால் ஆகுபெயராகி
காடுகளில் மேடுகளில் அலைந்து
 தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும்.
அகராதிக்குள் நுழைவதற்கு சொற்களும் பேரணி நடத்தி இருக்கும்.
எல்லா மொழியிலும் எல்லா சொற்களும் பொருளுடைத்தே என்ப.
"என் தாய் புழங்கிய சொற்களை என் மனைவி அறிந்திருந்தாள்.
ஆனால் புழங்கியதில்லை.
என் பிள்ளைகள் அவர்கள் தாய் அறிந்த அச்சொற்களை
அறிந்திருக்கவில்லை"
என்று சொற்களின் மரணத்தைப் பற்றி
 எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதியிருப்பார்.
 ஆனால் சொற்களை வன்புணர்வு செய்தவர்களைப் பற்றி
நாம் பேசுவதில்லை.
செம்மொழியின் சொற்கள் சிதைக்கப்பட்டு அரசியல் மேடையில்
சந்தைப் பொருளாகி விற்கப்பட்டதைப் பற்றி நாம் பேசுவதில்லை.
அதை எல்லாம் பேசினால்
அது அரசியலாகிவிடும் என்பதாலா?
இல்லை அதிகார அரசியலின்
 ஆதாயங்கள் கிட்டாமல் போய்விடும் என்பதாலா?
எல்லா சொற்களும் பொருளுடைத்தே!
ஆனால் அச்சொற்கள் அதற்கான பொருளை இழத்தல் என்பது
எவ்வளவு கொடுமை! என்னமாதிரியான ஒரு சமூகப் படுகொலை.
சமூகப் பண்பாட்டு அரசியலின் சிதைவு.
சொற்களே.. என்னை மன்னித்துவிடுங்கள் .

Friday, June 9, 2017

பயணிப்புறா

Image result for பயணிப்புறா
கருக்கலின் மெல்லிய வெளிச்சத்தில்
உன் மெலிந்தக் கைகளைத் தொட்டுத் தடவிக்கொண்டிருக்கிறேன்.
உனக்குப் பிடித்தமான நெருடா கவிதைகளை எடுத்து வாசிக்கிறேன்.
அன்றிருந்த நாம் அன்றிருந்தவர்கள் அல்ல..
புல்வெளியில் விழும் பனித்துளிப் போல...
நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த வரிகளை
என் ஆன்மா அவளை இழந்ததால் நிறைவுற்றது
என் குரல் கம்மியது.
நீ இருமினாய். உன் எச்சிலில் சளியும் இரத்தமும் கலந்திருந்தன.
துருத்திக்கொண்டிருக்கும் உன் நெஞ்சு எலும்புகள்
ஈட்டியைப் போல அவ்விருளைக் கிழித்துக்கொண்டு வெளிவந்தன.
மூடிய விழிகளை மெதுவாக திறக்கிறாய்.
நானும் நெருடாவும் நனைகிறோம்.
வறண்ட உன் இதழ்களிலிருந்து காய்ந்துப் போன சருகுகளைப் போல
முத்தங்கள் உதிர்கின்றன.
விதைகள் தற்கொலை செய்து கொண்ட  என் பூமியில்
மழைப் பெய்தால் என்ன?
பொய்த்தால் என்ன?
ஏறி இறங்கும் உன் மூச்சுக்கூட்டிலிருந்து
வாலையும் சிறகுகள் போல விரித்து
பறந்து செல்கிறது பயணிப்புறா.
வல்லரசுகளின் துப்பாக்கிகள் வரிசையாக
வெடிக்கின்றன.
பயணிப்புறாவின் கடைசிப் பயணத்தைப் பார்க்க முடியாமல்
காடுகள் பற்றி எரிகின்றன.


Wednesday, June 7, 2017

சண்டிராணி

Image result for சண்டிராணி படம்

ஓர் ஆணை சண்டியர் என்று சொன்னால் ஆண்கள் அதை
பெருமையாக கருதுகிறார்களா என்னவென்று எனக்குத் தெரியாது
. ஆனால் ஒரு பெண்ணை எவராவது " சண்டிராணி "
என்றழைத்தால் மெல்லிய ஒரு புன்னகை
எங்கள் முகத்தில் எட்டிப்பார்க்கிறது. பெருமையாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல்
சொல்லிச் செல்கிறது..
வாழ்க சண்டிராணியர்.
சண்டிராணி என்று சொன் னவுடன் எனக்கு நடிப்பு அரசி பானுமதி அம்மா நினைவுக்கு வருகிறார் உங்களுக்கு?!!
. திரையுலகில் எம்ஜிஆரிடன் அவர் சவால் விட்டதும் கொடுத்த சம்பள பணத்தை திருப்பி அனுப்பியதும்சினிமாக் கதையல்ல.
நிஜம். அதற்காக பானுமதி அம்மாவை எம்ஜிஆர் அவர்கள்
சண்டிராணி என்று அழைக்கவில்லை!
சண்டிராணி மீது கொண்ட அச்சமா மரியாதையானு தெரியல!
சண்டிராணி என்ற திரைப்படத்தை எடுத்தவர் பானுமதி. அவரே அதில் இரட்டை வேடத்தில் நடித்தார். அதில் ஒரு வேடம் சண்டிராணி! இந்த சண்டிராணி தான் இசையுலக மேதை எம்.எஸ், விசுவநாதனை இசையமைப்பாளராக இனம் கண்டு தன் சண்டிராணி
படத்தில் இசையமைக்க அழைத்தவர். அதுமட்டுமல்ல, எம் எஸ் வீ யுடன் ராமமூர்த்தியையும் இணைத்து
இசையுலகில் எம் எஸ் வி இராமமூர்த்தி இரட்டையர்களை
சண்டிராணி படத்தில் கொண்டுவந்தவர்.
சண்டித்தனம் / சண்டித்தனமுள்ளவன் /
சண்டிமாடு / சண்டியன்/ சண்டிவாளம் சண்டீனம்/ சண்டு / சண்டேசுரநாயனார் / சண்டேசுரப்பெருவிலை சண்டேசுரர்/ சண்டேஸ்வர நாயனார்/ சண்டை சண்டைக்கப்பல்/ சண்டைக்கழைத்தல்/
சண்டைக்காரன்/சண்டைக்காரி சண்டியர்/ சண்டிராணி... வாழ்க சண்டிராணியர்..

Friday, June 2, 2017

நேருவின் மனசாட்சி

 யார் தான் தவறுகள் செய்யவில்லை?!
சிலர்தான் தன் தவறுகளை ஒத்துக் கொள்கிறார்கள்.
அப்படி ஒத்துக்கொள்வதற்கே ஒரு துணிச்சல் வேண்டும்.
நடந்து முடிந்ததை மறைக்கவோ அல்லது வரலாற்றைத்
திரிப்பதோ அவர்கள் செய்வதில்லை. 
 
அவர்களிடம் மனசாட்சி கடைசிவரை உயிர்ப்புடன் ...
  
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேருவை
ஒரே ஒரு காரணத்திற்காக பாரட்டத்தான் வேண்டும்.

1962 இந்தியா சீனா யுத்தத்தில் இந்தியா தோற்றுப்போனது.
அதற்கான காரணங்களை 50 ஆண்டுகள் கடந்தும் இன்றும்
பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்திய இராணுவத்திடம் கொட்டும் பனியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் காலணிகள் கூட இல்லை. 
அப்படி ஒரு நிலையில் தான் இந்திய இராணுவம் இருந்திருக்கிறது. போர்க்களத்தின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் டில்லியிலிருந்து ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரியின் தவறான வழிநடத்தல்,
“சீனா இப்படி செய்யும்னு எனக்கென்ன தெரியும் ?” என்று கடைசியில்
கையை விரித்த வெளித்துறை அமைச்சகம், இராணுவ உதவிக் கேட்டு
அமெரிக்க நாட்டின் தலைவர் கென்னடிக்கு நேரு எழுதிய கடிதம்..
இப்படியாக சர்ச்சைகளும் விவரங்களும் தொடர்ந்து வெளிவந்துக்
கொண்டிருக்கின்றன.
காலனிய ஆதிக்கத்தின் எல்லைக்கோட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்த
சீன அரசு யுத்தத்திற்கு காரணம் இந்தியா தான் என்று இன்றும் சொல்கிறது.
இந்தியாவுக்கு ஒரு பாடம் கற்பிப்பது மட்டுமே எங்கள் நோக்கம் என்ற
கருத்தையே போருக்கான முன்னெடுப்பாக சொல்கிறது.
இப்படியாக சொல்லப்படும் அனைத்தையும் தாண்டி
ஒரு புள்ளியில் அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால்
நேரு ஒரு தனிமனிதனாக கம்பீரமாக…
ஆம்… போரில் இந்தியாவின் தோல்விக்கு யார் காரணம் என்பதை விடவும்
அத்தோல்வி சிறிது சிறிதாக அவருடைய உடல்நிலையைப் பாதிக்கும்
அளவுக்குப் போனது. அவருடைய மரணத்திற்கு காரணமானது.
தவறுகள் செய்யாத தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?
தனிமனிதர்கள் எடுக்கும் முடிவுகளை விட தலைவர்கள்  எடுக்கும்
முடிவுகள் எத்துணை முக்கியமானவை. அதன் விளைவுகள் ஒட்டுமொத்த
சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதை உணர்ந்தவர்கள் வெகுசிலர்.
நேருவுக்கு அந்த மனசாட்சி இருந்தது.
அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்  என்ற எண்ணினேன்.
அவ்வளவுதான்.