Friday, January 29, 2021

சின்னம்மாவா ராஜமாதாவா...

 

சின்னம்மா…. திரும்புகிறார்…

சின்னம்மாவின் வருகை அதிமுக கரைவேட்டிகளுக்கு

கஷ்டகாலம்தான். கடந்தக்காலத்தை அவ்வளவு எளிதில்

மறந்துவிடமுடியாமல் அவஸ்தைப்படலாம். 

அரசியல்வாதிகளும் மனிதர்கள் தானே! 

அதிமுகவில்  சின்னம்மாவின் அருள்வாக்கு வேண்டி 

நிற்காதவர்கள் வெகுசிலர். சின்னம்மாவின் சிஎம் கனவுகளை

 சிறைவாசம் தின்று ஏப்பம் விட்டிருந்தால் நல்லது. 

அவரை ஒரு ராஜமாதாவாக ஏற்று அடிபணிய 

எப்போதும் அதிமுக தயார் தான்.அதை அவர் ஆரம்பத்திலேயே தெளிவாக்கிவிடுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல,

 திமுகவுக்கும் நல்லது!

அரசியலில் எதுவும் நடக்கும்.

 சின்னம்மா சிறைதண்டனை முடிந்து வெளியில் வருவதால் 

அவர் குற்றவாளி இல்லை என்றாகிவிடுமா? 

இந்தக் கேள்வி அரசியலில் அர்த்தமில்லாத து.

 உயிருடன் இருந்திருந்தால் ஜெயல ிதாவும் 

சசிகலாவுடன் சேர்ந்து விடுதலையாகி வரும் நாளாகத்தானே

இருந்திருக்கும். 

ஜெயலலிதாவின் கல்லறையை கட்டி வழிபடுகின்ற அரசுக்கு, 

அதை ஏற்றுக்கொண்டிருக்கும் தமிழக அரசியல் 

மற்றும் தமிழக மக்களுக்கும்

 சசிகலாவை மட்டும் குற்றவாளி என்று சொல்லும் தகுதி

இருக்கிறதா என்ன?

 எடப்பாடி தனிமைப்படுத்தப்படலாம். 

மீண்டும் ஓபிஎஸ் சின் மனசாட்சி ிழித்துக்கொள்ளலாம்.

 மெரினா கடல் அலைகளுக்கு  இன்னும் சில 

சத்தியங்களைக் காணும் அபாக்கியம் நேரலாம்.. 

பாவம் அதிமுக தொண்டர்கள் தான். அதைவிட பாவம் திமுக.

தமிழக அரசியலைப் பொறுத்தவரையில்  காங்கிரசு 

திமுகவின் கிளையாகி,  இருக்கிறதா இல்லையா 

என்ற நிலையில் இருக்கிறது.

அதிமுக அரசியலில் ஒரு பேட்டரி போடாத ரிமோட்டாக 

சின்னம்மா இருக்கலாம். அதைத்தாண்டினால் 

அது அதிமுக என்ற அரசியல்கட்சியை  மலை உச்சியிலிருந்து 

உருட்டிவிட்ட கதைதான்!

பலனடையப்போவது பிஜேபி. எப்படி என்றால் 

திமுக வின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக

 இருந்த நிலை மாறி அந்த இட த்தில் பிஜேபி வந்துவிடும்.

இது பிஜேபி புறவாசல் வழியாக நுழையும் அரசியல்.

 இதை மிகவும் சரியாக கணக்கிட்டு பிஜேபி

 ஆட்ட த்தை ஆடுகிறது.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பிஜேபி மாறுவது … 

திமுக வுக்கும் பெரிய தலைவலிதான். 

இதை எதிர்க்கொள்ளும் அளவுக்கு 

அரசியல்வித்தகர்கள் திமுகவில் இருக்கிறார்களா என்ன?!

போகப்போகத் தெரியும்.

Saturday, January 9, 2021

இந்தியா ப்ரிட்ஜ்.. (India Bridge @ kutch)



இந்திய மகள் பாகிஸ்தானில் மருமகளாக..
அந்த பாகிஸ்தானி மகள் நம் வீட்டு மருமகளாக...
எல்லைக்கோடுகளைத் தாண்டி தொடரும் உறவுகள்..
.. இரவும் பகலும் படைவீரர்களின் காவல்..
"ஜெய் ஹிந்த்"
புகைப்படம் எடுக்காதீர்கள்.
புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை..
இம்மாதிரியான அறிவிப்புகளை பல இடங்களில்
கண்டும் வாசித்தும் கடந்து செல்வது யாருக்கும்
புதிதல்ல. இதை நானும் செய்கிறேன்.
நீங்களும் செய்திருப்பீர்கள்!
அதுவும் கைபேசியில் காமிரா வந்தப் பிறகு
இதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.
ஆனால்… அந்த இட த்தில் மட்டும் அவர்கள் சொன்னவுடன்
உடனடியாக எங்கள் காமிராக்களும்
கைபேசிகளும் முடங்கின.
அத்தருணத்தில் அவர்களின் அந்த ஒற்றைச் சொல்
மந்திரம் போல எங்களை ஆட்டுவித்தது..
இரவும் பகல் கோடை வெயில் பனி..
எதுவுமற்ற பாலை வனம் பரந்து விரிந்திருக்கிறது.
அவர்கள் காவல் இருக்கிறார்கள்.
அந்த இடம் தான் “இந்தியா பிரிட்ஜ் .. “ கச் - குஜராத் பாலைவனம் .
முன் அனுமதிப் பெற்ற ரசீதைக் காட்டிவிட்டு
அவர்கள் அனுமதி தந்தவுடன் மெல்ல எங்கள் வாகனம்
அந்தப் பாலத்தில் ஊர்கிறது. இந்தப் பாலத்தை தான்
எத்தனை எத்தனை சினிமா காட்சிகளில் செட் போட்டு
படமாக்கி இருக்கிறார்கள்! என்ற நினைவுகளும்
வந்து சென்றது. அந்தப் பாலத்தைக் கடந்து..
கொஞ்ச தூரம் பயணித்தால் எல்லைக்கோடு..
எல்லைக்கோடுகளின் முள்கம்பிகள்.. நீண்டு இருக்கும்.
நான் போயிருந்தப்போது கோவிட்19 காரணமாக
அதிக தூரம் பயணிப்பதற்கு அனுமதி இல்லை.
கொஞ்ச தூரம் பயணித்துவிட்டு திரும்பும்போது
அவர்களைப் பார்த்து எங்களையும் அறியாமல்
கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னோம்.
கட்ச் பகுதியின் அந்த இடம் பாகிஸ்தான் கராச்சிக்கும்
பாகிஸ்தான் ஹைதராபாத் பகுதிக்கும் மிகவும் அருகில்.
. இப்போதும் கட்ச் பகுதி இந்திய கிராமத்து மக்கள்
பாகிஸ்தான் கட்ச் அருகில் இருக்கும் கிராமத்தில்
பெண் எடுப்பதும் கொடுப்பதும் தொடர்கிறது.
நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
எல்லைக்கோடுகளின் ஒப்பந்தங்களைத் தாண்டிய
திருமண உறவுகள். நம் அரசியல் விரிசல்களுக்கு
அப்பால் திவீரவாதம் போர் சண்டை ஒப்பந்தங்கள்
இவை அனைத்துக்கும் அப்பால்…
இதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதுவும் இரு நாடுகளின் ஒப்புதல்களோடு!
எல்லைக்கோடுகளை
நாம் கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதும்
அவர்கள் எப்படி ஊடுருவினார்கள் என்பதும்
நம் செயற்கோகோள்களின் தோல்வி என்று
அலசி ஆராய்வதும்..
எதுவுமே அர்த்தமில்லாமல் போய்விடுகிறது..
இந்தப் பூகோள எல்லையைத் தொட்டு தரிசிக்கும்போது.
இந்தியா ப்ரிட்ஜ்..
அதைக் காத்து நிற்கும் நம் படைவீரர்கள்..
அவர்களின் ஒவ்வொரு சொல்லும் மந்திரம்..

ஜெய் ஹிந்த். 



Friday, January 8, 2021

பாலைவனத்தின் பெருமூச்சு

 பாலைவனத்தின் வண்ணங்கள் எப்போதும் கண்ணைக் கவர்கின்றன. பளிச்சென தெரியும் நிறங்கள். மிக நுணுக்கமான கைவேலைப்பாடுகள்.

வேறு தொழில் எதுவும் இல்லை. துணியில் கை வேலைப்பாடுகளும் இயற்கை வண்ணக்கலவையில் “டை’ தயாரித்து துணிகளை அலங்கரிப்பதும்
துணிகளில் அவர்களே தயாரிக்கும் வண்ண கலரை (பெயிண்ட்) வைத்து வரைவதும்… இதில் துணிகளில் கை வேலைப்பாடு செய்பவர்கள் அனைவரும்
பெரும்பாலும் அவர்கள் வீட்டுப்பெண்களாகவே இருக்கிறார்கள். ஆண்கள் அத்துணிகளுக்கான கச்சா துணிகளை வாங்கிவருவது, பெண்களின் தயாரிப்புகளை ஒன்றுசேர்த்து சந்தையில் விற்பனக்கு கொண்டுவருவது..
இன்னும் சில இடங்களில் அவர்களின் பிரிண்ட்ட் துணிகளை ரெடிமேட் ஆடைகளைத் தைக்கும் பணியில் ஆண்கள்.
இப்படியாக பாலைவனத்தின் வாழ்க்கை. இரவு 8 மணிக்கெல்லாம் ஊரடங்கிவிடுகிறது. தெருவிளக்குகள் இல்லை. நட்சத்திரங்களின் வெளிச்சமே போதுமானதாக இருக்கிறது! பள்ளிக்கூடம், மருத்துவமனை இத்தியாதியான அடிப்படை வசதிகள் அருகில் இல்லை.
(சற்று தொலைவில் இருக்கலாம்)
சிந்து வெளி நாகரிகத்தின் கூறுகள்..
மிக அருகில் கூப்பிடு தொலைவில் அண்டை நாடான பாகிஸ்தான்..
கச் பாலைவனத்தில் டிசம்பர் ஜனவரி மாதங்களில் அந்த நீர் வற்றி உப்பாகி வெள்ளைப்படிகம் போல கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளைமணல் போல காட்சியளிக்கிறது. டிசம்பர் ஜனவரி
முழு நிலவு நாட்களில் நிலவொளியில் உப்பு நீலம் படிந்த வைரம்போல ஜொலிக்கும் அழகு… அதைப் பார்க்க மட்டுமே பயணிகள் வருகிறார்கள்.
பயணிகள் தங்குவதற்கான கூடார வசதிகளும் மண்வீடுகளும்..
அங்கே இம்மாதிரியான கைவேலைப்பாடு செய்வதில் புகழ்ப்பெற்ற ராம்ஜி தேவ்ராஜ் இல்லத்திற்குப் போனேன். நான் தங்கியிருந்த இடத்துக்கு
அருகில் தான் அவர்கள் வீடு.
மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள்.. ஊசியும் நூலுமாய்.. வீட்டுவாசலில் குடும்ப பெண்கள் ஒன்றாக உட்கார்ந்து எதையாவது செய்து கொண்டே
இருக்கிறார்கள். பெரிய முற்றம். ராம்ஜியும் அவருடன் பிறந்த 6 சகோதரர்களும் தனித்தனி மண்குடிசை. குடிசையில் மண்ணாலான திண்ணையை கட்டில் போல பயனபடுத்துகிறார்கள். வீடு வட்ட வடிவமாக
இருக்கிறது. வீட்டில் தனியாக அறைகள் வேறு எதுவும் கிடையாது!
சகோதரர்கள் தனித்தனி வீட்டில் குடித்தனம். ஆனால் பெண்கள் சேர்ந்து கைத்தொழிலை செய்கிறார்கள்.
சிறிய சன்னல்கள்.. அந்த வீட்டுப்பெண்கள் பெண் சிறுமிகள்.. புகைப்படம் எடுப்பதை விரும்புவதில்லை காரணம் சமூக வலைத்தளங்களில் பெண்களின் முகம் … தெரியக்கூடாது. முக்காடு விலக்கி அவளை
அடுத்த ஆண் பார்ப்பதை அவர்கள் விரும்புவதில்லை.
ஆனாலும் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
அதை நான் அவர்கள் விரும்பியபடியே சமூக வலைத்தளத்தில் போடமாட்டேன். என்னளவில் எனக்கு அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
என்றாலும் அவர்களை நான் மதிக்கிறேன். ராம்ஜியின் அம்மா மட்டும் புகைப்படம் போட அனுமதி தந்தார்.
ராம்ஜியின் மனைவிக்கு இந்திய அரசு விருது கொடுத்து பாராட்டி இருக்கிறது. ராம்ஜிக்கு 4 பெண் குழந்தைகள். ராம்ஜி மும்பை பெங்களூர் டில்லி கல்கத்தா மற்றும் அமெரிக்க நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறார்.
ஆனால் இனிமேலாவது உங்கள் மகள்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னேன். உலகத்தைப் பார்க்கட்டும் உங்கள் புதல்வியர்.
புதிது புதிதாக இன்றைய பெண்களின் தேவையை அவர்கள் அறியட்டும்.
அதற்கேற்ப ஆடைகள் தயாரிக்கட்டும் ..அதற்காகவாவது அழைத்துச் செல்லுங்கள் ராம்ஜி என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். மும்பை
வந்தால் அழைத்து வாருங்கள் என்றும் சொன்னேன். எல்லாவற்றுக்கும் ஒரு புன்னகை, ஒரு தலையாட்டால்…
ராம்ஜியின் முற்றத்தில் பரப்பி இருந்த பெட் ஷீட, குஷன் உறை..
எல்லாவற்றிலும் பெரிய ப்ராண்டுகளின் ஸ்டீக்கர் வைத்து தைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது FAB INDIA காட்டன் துணிகள் இங்கிருந்து வருகின்றன.
World trade centre நட்சத்திர ஹோட்டல்களில் விற்பனைக்கு இருக்கும் ரெடிமேட் காட்டன் ஆடைகள்..ராம்ஜி வீட்டு பெண்களின் கைவண்ணம்.
இனி, FAB INDIA பார்க்கும் போதெல்லாம் ராம்ஜியும் ராம்ஜி வீட்டுப்பெண்களும் தான் எனக்கு கண்முன்னே வருவார்கள்.
ராம்ஜியிடம் இந்த நிறுவன ங்கள் என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று நான் கேட்கவில்லை. ஆனால் தெரியும்…. குளிரிலும் வெயிலிலும்
பாலைவனத்தின் பெருமூச்சு….

Saturday, January 2, 2021

பெண்களில்லாத கிருஷ்ணனா??



 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்

புல்லாங்குழலின் மவுனம் என்னைச் சுற்றி"
பெண்களை விலக்கிய கிருஷ்ணனை
கற்பனை செய்ய முடியவில்லை!
பளிங்குகற்களால் கட்டப்பட்டிருக்கிறது
சுவாமி நாராயணமந்திர். புஜ், குஜராத்.
பொதுமக்கள் தங்குவதற்கு வசதி. மிகவும் குறைந்த
வாடகையில் அனைத்து வசதிகளும். வாடகைக் கொடுக்கமுடியாத யாத்திரீகர்களும் தங்கிச் செல்லும் வசதி.
பளிங்குச்சிலைகள், தூண்கள்.. நுணுக்கமான வேலைப்பாடு.
இதை ரசித்துக்கொண்டே விடியலில் பாதங்களில்
சில்லென்று குளிர் ஏற பளிங்குகற்களின்
வசீகரத்தில் நுழைகிறேன்.
உள்ளே கிருஷ்ணன்.. அலங்காரத்தில் ஜொலிக்கிறான்.
ஒரு சில்வர் கம்பி போட்டு தடுத்துவைத்திருக்கிறார்கள்.
அதைத் தாண்டி மக்கள் அவனருகில் சென்று பார்க்கும் தூரம்.
நானும் அருகில் செல்கிறேன்.
ஒருவர் ஓடிவந்து பெண்கள் இந்தக் கம்பி வளையத்தைத்
தாண்டி உள்ளே வர அனுமதி இல்லை என்று சொல்கிறார்.
அப்போதுதான் கவனிக்கிறேன். கிருஷ்ணனின் கோபியர்
அனைவரும் கம்பி வளையத்தைத் தாண்ட முடியாமல்
தரையில் உட்கார்ந்து கண்களை மூடி அவனோடு
பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஏனோ .. அதன் பின் அந்தப் பளிங்குகற்களின் அழகும் கம்பீரமும்
நீர்க்குமிழியைப் போல உடைந்துப் போகிறது.

அவனைத் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து
வெளியில் வருகிறேன்….
படிக்கட்டுகளில் இறங்கிவரும்போது
அவன் என் துப்பட்டாவைப் பிடித்து இழுக்கிறான்.
அவனும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்
கொள்கிறோம்.
பெண்களை விலக்கிய கிருஷ்ணனை
என்னால் கற்பனை செய்ய முடியவில்லை!...


கோவிலின் வெளியே சிவனின் சிலை.
அவன் தலையில் கங்கை பொங்கிப் பிரவகித்து கொட்டுகிறாள்.
அவன் கைகளிரண்டையும் உயரே தூக்கி ஆகாயத்தைப்
பார்த்து “ஓ”வென உரக்க குரல் கொடுக்கிறான்.
பூமியின் அதிர்வுகளை … என் பாதங்கள் உணர்கின்றன.
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
புல்லாங்குழலின் மவுனம்.. என்னைச் சுற்றி.
ஆண்டாளின் குரல்:
.குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.