Monday, October 7, 2019

தேவியும் கங்குபாயும்

Related image
என்னடீ தேவி , இன்னும் என்ன மெளனம்?
தண்டியா கோலாட்டம் கால்களின் குதியாட்டம்
ஒலி வெள்ளத்தில் மிதக்கிறது பெரு நகரம்.
தேவி… .. ஏனடி சிரிக்கிறாய்..?
பத்து நாட்கள் பதினொரு அடிமைகள்
ஆஹா .. போதுமா உன் பசி தீர்க்க?
கங்குபாய் காலடிப்பட்ட மண்
உனக்கு மட்டும் புண்ணிய பூமியா!
புரியவில்லை தாயே..
கோலாட்டம் .. பூமியைச் சுற்றி சுற்றி கோலாட்டம்.
ஆடுகிறாள் ஆடுகிறான்
கழுத்தில் நெளியும் பாம்புகளும் ஆடுகின்றன.
அமுதம்.. விஷம்.. காதல் கனவு நிஜம் பொய்
சுற்றி சுற்றி வலம் வருகின்றன.
ஆடி ஆடி களைத்துப்போகிறது இரவு.
மேகங்கள் கூந்தலை வருடிக்கொடுக்கின்றன.
தேவி..
விடியும் போது மயக்கம் தெளியலாம்.
சிவப்பு விளக்கின் பச்சை ஒளியில்
கங்குபாய் சிரிக்கிறாள்.
கனவுகள் வராமலிருக்க கதவுகளை
இழுத்துப் பூட்டுகிறேன்.


பிகு:
தேவியின் சிலைகள் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து
 அப்பெண்கள் காலடிப் பட்ட மண்ணால் மட்டுமே 
பூரணத்துவம் பெறுகின்றன!
கங்குபாய் இம்மாதிரியான சிவப்பு விளக்குப்
பகுதியில் – மும்பையின் காமட்டிப்புரத்தில்
வாழ்ந்தப் பெண்.

Sunday, October 6, 2019

பாலுறவு வறட்சி


பாலுறவு வறட்சி தான் குற்றங்களுக்கெல்லாம் காரணம்
என்ற  நிலைக்கு சமூகம் போய்க்கொண்டிருக்கிறதா?

நேற்று ஒரு விடீயோ காட்சி.. 15 வயது இருக்கலாம் அந்தப்
பெண்ணுக்கு. அவளை கூட்டுப்பாலியல் வன்முறை செய்து
அதைக் கைபேசியில் விடியோ எடுத்து … இதைச் செய்யும்
ஆண்பிள்ளைகள் அனைவரும் விடலைப் பருவத்தினர்.
அன்த விடீயோவைப் பார்த்தால் ஓரளவு விலை உயர்ந்த
கைபேசியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் மாற்றி
ஒருவர்… அந்தப் பெண் “பையா  என்னை விட்டுவிடுவீர்களா ..”
என்று கெஞ்சுகிறாள்.. இது இந்தியாவில் தான் நடக்கிறது.
ஆள் நடமாட்டமில்லாத பாறைகளிருக்கும் ஒதுக்குப்புறத்தில்
நடந்திருப்பதாக தெரிகிறது. அப்பெண் என்னவானாள்?
பத்துபேருக்கும் மேலாக ஒருபெண்ணை வல்லாங்கு செய்தால்
அவள் பிழைத்திருப்பாளா..? 
அந்த விடீயோவை என்னால் முழுவதும்
பார்க்க முடியவில்லை! 1 நிமிடம் கூட என்னால் பார்க்க முடியாமல்
உடம்பெல்லாம் வேர்த்து கைகால் நடுங்க ஆரம்பித்துவிட்ட து!
அதன் பின்  ஏற்பட்ட தலைவலி.. இரவு 11 மணிக்குப் பின் தனியாக
கீழே போய் நடந்து பார்த்தேன்.
 கொஞ்ச நேரம் வாட்டர் டேங்க் மீது
உட்கார்ந்து கொண்டு ஓவென அழுதுவிடலாமா 
என்று கூட யோசனை வந்த து! 
வாட்ச் மேன் என்ன நினைக்க கூடும் என்று 
நினைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்.. 
குளிர்ந்தக் காற்று .. மெல்ல.. முகத்தில் படர்ந்து
என்னைத் தழுவிக்கொண்ட து கொஞ்சம் ஆறுதலாக இருந்த து.

கதறி அடங்கிப்போன அந்தப் பெண்ணுக்காக அழுதேனா..
அல்லது..
அவளைச் சுற்றி நின்று அவள் உடலை மேய்ந்த
 அந்த விடலைகளின்
அம்மாக்களுக்காக அழுதேனா.. ?
யாருக்காக நான் அழுதேன்,,?
அவன் களின் முகம்.. 
என்னைச் சுற்றி வல்லூறு போல
வட்டமிடுகிறது…
தாய்க்கோழியாய் சிறகுகள் விரித்து
அணைப்பாளோ பராசக்தி..
Friday, October 4, 2019

சிவதாண்டவம்


Image result for shiva modern artஊர்த்துவத் தாண்டவத்தில்
உன்னிடம் தோற்றுப்போன
சந்திரகாந்த தேவி அல்லவே நான்.
இதோ..
நானும் காலைத் தூக்கிவிட்டேன்.

உன் பிரணவ ஒலியில் கரைந்துவிட
உ ன் உமையல்ல நான்.
அண்ட சாரசரங்களை
எனக்குள் அடக்கும்
யோனி பீட த்தில்
உன் நெற்றிக்கண் தீப்பிழம்பாய்
எரிந்து சாம்பாலாகிப் போனது.
அந்தச் சாம்பலிலிருந்து
உன் ஆட்ட த்திற்குள் அடங்கும்
காத்யாயனி தேவியைக்
கண்டுபிடித்திருக்கிறாய்.
அவளோடு நீயாடும்
சிருங்காரதாண்டவம்
உனக்காக என்னை
ஏங்கித் தவிக்கவிடும்
கனவுகளில் நீ
கங்காதேவியையும்
துணைக்கு அழைக்கிறாய்.!
பித்தனே.. மறந்துவிடாதே.
பாற்கடலில் நீயுண்ட நஞ்சை
ஸ்கந்தமாதாவின் கைப்பிடிக்குள்
பத்திரமாக வைத்திருக்கிறேன் என்பதை.

மகாப்பிரளயம் சாட்சியாக
நீ ஆடப்போகும்
ஊழிக்கூத்துக்கு ஒத்திகைப் பார்க்க
என்னை அழைக்காதே.

என் கருமுட்டையிலிருந்து
நீ கற்றுக்கொண்ட பாடம்
ஆக்கலும் அழித்தலும்.
என்னில் சரிபாதியாக
நீ கொண்ட
அர்த்த நாரீஸ்வர கோலம்
உனக்கு நான் போட்ட
காதல் பிச்சை.

போதும்..
சிவதாண்டவ வேடங்களைக் களைந்து
வெளியில் வா..
காத்திருக்கிறேன் காதலியாக.
உன் நெற்றிக்கண்ணுக்கு
மட்டுமே தெரியும்
மூன்றாவது முலையோடு.

(மெளனத்தின் பிளிறல்- கவிதை தொகுப்பிலிருந்து)

Wednesday, October 2, 2019

THE UNSUNG HERO of Indian Politics
Image result for SHASTRI THE UNSUNG HERO
மறக்கப்பட்ட மாமனிதர் .. லால் பகதூர் சாஸ்திரி..
இப்படியும் ஒரு மனிதர் ஆட்சி அதிகாரத்தில் இந்தியாவில் இருந்திருக்கிறார். காங்கிரசுக்கார ர்கள் இவரை மறக்கலாம்.
ஆனால் நாம்..? !
• நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்த நேரம். ரயில் விபத்து ஏற்பட்ட து. அதற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று பதவி விலக
முன்வந்தவர். (இப்போ இதைச் சொன்ன பொழைக்கத் தெரியாதவர்னு சொல்லிடுவாங்க.)
அவர் பிரதமராக இருந்தப் போது கடுமையான பஞ்சம். அவர் அவர் தன் வீட்டு பின்புறத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் வேண்டிய காய்கறிகளைப் பயிரிட்டார். ஒரு வேளை உணவை சேமிக்கும் வகையில் தானும் தன் குடும்பத்தாரும் ஒரு வேளை உணவைஉண்பதில்லை என்ற தங்கள் முடிவை வானொலியில் அற்வித்து அதைக் கடைப்பிடித்தார்.
அவர் பிரதமராக இருக்கும் போது அவருடைய மகன் அவரின் அலுவலக வண்டியை (கார்) தன் சொந்தப் பயன்பாட்டுக்கு அவரை அறியாமல் பயன்படுத்திவிட்ட தை அறிந்த சாஸ்திரி தன் மகன் எத்தனை கிலோ மீட்டருக்கு அந்த வண்டியைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று கணக்குப் பார்த்து அத்தொகையை அரசு கணக்கில் செலுத்தினார்.
17 மாதங்கள் பிரதமராக இருந்திருக்கிறார். அதற்கு முன் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் இருந்த சாஸ்திரி இறக்கும் போது அவருக்குச் சொந்த வீடு இல்லை.சொந்தமாக ரியல் எஸ்டேட் இல்லை. நிலமில்லை. பினாமி பெயரில் சொத்துகள் இல்லை. வங்கிக் கணக்கில் பணமில்லை. அவர் விட்டு சென்றது ஒரு பழைய FIAT கார் தான்! அதுவும் வங்கியில் கடன் வாங்கி வாங்கிய கார். அந்தக் கடனை அவர் மனைவி அவர் இறந்தப் பின்
அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்திலிருந்து தவணைகள் செலுத்தினார்!
இன்று அவர் பிறந்த நாள் (02 அக்டோபர்)
இப்படியும் ஒரு பிரதமர் இந்தியாவில் இருந்திருக்கிறார்.
Shastri, the unsung hero of Indian history.

Saturday, September 28, 2019

வனத்தின் வாசம்

Single white bird feather float in the air. Premium Photo

 வனத்திலிருந்து  வேரோடு
பிடுங்கிச் சென்ற போது
காற்றும் மழையும் கதறித் தீர்த்தன.
வனவிலங்குகள் புணர்ச்சியை விலக்கி
எட்டிப்பார்த்தன.
குகைகளுக்குள்  உன்னைத் தேடிப் பார்த்த இருள்
விடியலில் சரணடைந்து விட்ட தாக
மரம் தாவிய குரங்குகள் பேசிக் கொண்டன.
அழகான தொட்டியில் அடைக்கப்பட்ட து
உன் மண்ணின் வாசனையுடன்  வேர்கள்.
தொட்டிச்செடியில் பூப்பதும் காய்ப்பதும்
சூரியனுக்காக உயிர்ப்பதுமாய்
அடங்கிப்போனதோ காலம்?
வனத்திலிருந்து பறந்து வரும்
பறவைகளின் மொழியை அறியுமோ
தொட்டிச்செடியின்   சன்னல்கள்?
காற்றில் பறந்து விழும் சிறகு ஒன்று
எதையோ சொல்ல வருகிறது.
கைகளை நீட்டுகிறேன்..
மின்னல் வெளிச்சத்தில்
வேர்களை முத்தமிட்டு
கடந்து செல்கிறது வனமும் வானமும்.

28 sept 5.03 pm

Monday, September 23, 2019

குப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்

குப்பை குமாரும் சுவட்ச் பாரத் தும்
ஒரு குப்பைக் கதை
இது சென்ற ஆண்டு வெளிவந்த சினிமா.
அதனாலென்ன.. இப்போதும் பேசலாம் அதைப் பற்றி.
இந்த ஓராண்டில் அப்படி ஒன்றும் தலைகீழ் மாற்றங்கள்
 வந்துவிடவில்லை.
வீடுகளில் உணவுகள் உற்பத்தியாவதில்லை.
ஆனால் எல்லா வீடுகளிலும் குப்பைகள்..
உற்பத்தியாகின்றன.
எந்த வீடாவது இதற்கு விதிவிலக்கா?!
அம்பானி மிட்டல் வீடுகளிலும் குப்பைகளை
அகற்றியே ஆகவேண்டும்.
சாலையோரத்தில் குடியிருக்கும் அவர்களும் தினமும்
குப்பைகளை வாரி எடுத்துக் கொட்டிக் கொண்டுதான்
 இருக்கிறார்கள்.
வளர்ந்த நாடுகளும் வல்லரசு நாடுகளும்
மூன்றாம் நாடுகளைக் குப்பைத் தொட்டிகளாக
பாவிப்பது என்பது அயலுறவு கொள்கையின்
இருண்ட பக்கத்தில் இருக்கிறது.
அதெல்லாம் பெரிய இட த்து விசயங்கள்.
நமக்கு குப்பை குமாரின் கதையும் நம் சமூகம் பற்றிய 
தூய்மைவாதங்களும் தான்!
ஒரு குப்பைக் கதை என்ற தலைப்பில் சினிமாவாக
திரைக்கு வந்த தும் தற்கானசிலாகிப்புகள் 
என்ன மாதிரி எல்லாம் இருந்தது என்பது மட்டும் தான்.
“குப்பைக் கதையை பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்”
என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் வைகோ.
இன்னொரு விமர்சனக்கர்த்தா.. குப்பைக் கதை
 “அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட
 பெண்கள் கதி என்னவாகும்?”
என்ற நீதி நெறிப் புகட்டும் கதை என்று சொல்லி
கதையின் மையப் புள்ளியை பெண்ணின்
 கள்ளக்காதல் கதையுடன் – அதாவது திருமணத்திற்கு 
அப்பாற்பட்ட உறவாகவும் ஒரு பெண் படிதாண்டி விட்டால் 
அவளை மற்ற ஆண்கள் எப்படி எல்லாம் பார்க்க கூடும்
 என்பதற்காக எடுக்கப்பட்ட து போலவும்.. பயமுறுத்துகிறார்கள்.
இதெல்லாம் கதையில் இல்லையா? என்று கேட்டால்
இருக்கிறது. ஆனால் இதுவல்ல கதையின் மையப்புள்ளி.
படிதாண்டிய உறவுகளைப் பற்றி கதை எடுப்பதற்கு
குப்பை குமார் வேண்டியதில்லை.

குப்பை குமார்களை நம் சமூகம் எந்த நிலையில்
வைத்து பார்க்கிறது என்பதை மட்டுமே மையமாக்கி
அதற்கான உபகதைகளாக சில முடிச்சுகளைப் போடுகிறது.
ஏன்… குப்பைகளை தவிர்க்கவே முடியாத நம் சமூகம்
குப்பை குமார்களை மட்டும் தவிர்க்க நினைக்கிறது!
தூயமை வாதம் என்று சொல்லி கழண்டு கொள்வது எளிது.
சரி .. குப்பை குமார்களுக்கு கழிவின் நாற்றத்திலிருந்து
 விடுபட முடியாது என்பதாக நாம் நினைக்கிறோம்.
குப்பைனா நாற்றமெடுக்கத்தான் செய்யும்.. 
என்று சமாதானம் செய்து கொள்கிறோம்…
ஆனால்… நம்ம நாட்டு குப்பை வண்டி/ குப்பை லாரியிலிருந்து
 வரும் நாற்றம் மேலை நாட்டு குப்பைவண்டி/ குப்பை லாரியிலிருந்து
வருவதில்லை. 
 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 6 மாதங்கள் தங்கி இருந்தப் போது
அங்கு வரும் குப்பை லாரிகளை கவனிப்பதுண்டு.
குப்பைகளை ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட் பகுதியிலிருந்தும் எடுத்து கொட்டிக்கொண்டு செல்லும் அந்தக் குப்பைலாரிகள்
மற்ற லாரிகளைப் போல .. சாலையில் ..
அது எப்படி..?!!!!
எல்லா எழவுக்கும் அமெரிக்கா மாதிரி அமெரிக்கா மாதிரினு சொல்லிக் கொண்டிருக்கும் நம் அரசும் நம் மக்களும் இந்தக் குப்பை லாரி
 மெட்டரை ஏன் யோசிப்பதில்லை!
இதை நான் அங்கு என்னைச் சந்தித்த நண்பர்களிடம்
ச” யு.எஸ் வந்துட்டு குப்பை லாரி பற்றி
யோசித்த ஓரே ஆளு நீங்க தான்!!!” 
(இதை அவர் பாராட்டா சொன்னாரா ..
 கிண்டலடிச்சாரானு இன்னிக்கு வரை தெரியல!)
இன்னொருவர் சொன்னார்…
“குப்பை லாரியைப் பற்றி யோசிக்கும் தலைமுறை
அமெரிக்கா வரலைங்க.. வந்தவர்களும் .
. நவீன பிராமணிய வேடங்களைத் தரிப்பதில் 
காட்டும் முனைப்பை..இதில் காட்டுவதில்லை!”
ஒரு நாள் வீட்டில் டப் அடைத்துக் கொண்ட து. 
அதைச் சரி செய்ய வந்தவர் தன் வாகனத்திலிருந்து 
ஒரு நீண்ட டுயூப் மாதிரி ஒரு குழாயை எடுத்து
வந்து கழிவு நீர்ப் போகும் பகுதியில் போட்டு
காற்றை உறிஞ்சி கழிவுகளை அகற்றிவிட்டு ..
 தங்கள் வாகனத்தில் ஏறி சென்றார்கள். 
சீருடை, சரியான காலணிகள், கையுறைகள், 
வாகன வசதி, வீட்டுக்குள் நுழையும் போது 
அவர்கள் ஒரு ப்ளாஸ்டிக்
பையை (பை மாதிரி) காலில் மாட்டிக் கொண்டு 
ஹால் வழியாக நுழைந்தது...
. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
இதில் 50% இந்தியாவில் கொண்டுவர முடியவில்லை.
ஆனால் நம்ம பிரதமர்கள் அமெரிக்கா போவதையும்
 வருவதையும் நாமும் பெருமையுடன் 
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குப்பைகளுக்கு சாதிகள் இல்லை.
எல்லா சாதி வீடுகளிலும் குப்பைகள் உண்டு.
ஆனால் எல்லா சாதி வீடுகளிலும் குப்பைகளை
 எடுத்துச் செல்கின்ற குமாருக்கு சாதி உண்டு.
அது .. குப்பையை விட அதிக நாற்றமெடுக்கிறது.

க்ளார்க் வேலை .. ப்யூன் வேல.. ஒகே.
ஆனா குப்பைலாரியில் குப்பையை அள்ளிக்கொண்டு
 போகும் வேலைன்னா மட்டும் நமக்கு குமட்டிக் கொண்டு
வருகிறது!
இதில் நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு புள்ளியில்
அந்த தூய்மை வாத த்திற்குள் தள்ளப்படுகிறோம்.

என்னையே சுயவிமர்சனம் செய்து கொள்கிற மாதிரி

ஒரு கதை “காலியான பாட்டில்கள்” எழுதி இருந்தேன்.
மறைந்த பிரபஞ்சன் அவர்களுக்கு ரொம்பவும் 
பிடித்தக் கதை அது.

சுவட்ச் பாரத் - தூய்மை இந்தியா

நமக்கானது.. பொதுமக்களுக்கானது
என்பதை வெளிச்சப்படுத்தும் அரசும்
அறிவுஜீவிகளும் சுவட்ச் பாரத் திட்டம்
குப்பை குமாருக்கானதும் தான் என்பதை
உணர்ந்திருக்கிறார்களா?
குப்பைக் கதையைக் கிளறினால்..
நமக்குள்ளும் குப்பையின் நாற்றம்..

Saturday, September 21, 2019

கீழடி ஆதன் , குவிரன் ஆத ..

தமிழ் பிராமி எழுத்துகளில் ஆதன், குவிரன் ஆதன் என எழுதப்பட்ட பானை ஓடுகள்.

ஆதன் ,குவிரன் ஆத ..
அடேங்கப்பா.
நம்ம ஆதிக்கிழவனுக்கெல்லாம் ஒரு ஜெ போடுவோம்.

இந்த எழுத்துருவங்கள் பிராமி, தமிழி, தமிழ் பிராமி 
என்று அழைக்கப்படுகின்றன.
அதாவது தமிழ் மொழியிலிருந்து தெலுங்கு கன்னடம்
மலையாளம் துளு கிளைத்து பிரிவதற்கு முன்பு
வழக்கில் இருந்த தமிழி..
இந்த தமிழியின் பெருமையை சரியாக
தென்னிந்தியாவின் பெருமையாக அரசியல் படுத்த
வேண்டிய காலமிது. 

(அரசியல் படுத்த வேண்டும் என்ற சொல்வது
 தேர்தல் வாக்குவங்கி அரசியலை அல்ல)
2600 ஆண்டுகள் பழமையானது தமிழரின் நாகரீகம்
என்று சொல்கிற போது அந்த தமிழர் என்பதில்
யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையும்
சேர்த்து பேசியாக வேண்டும்.
தமிழில் மட்டுமின்றி கன்னடம் மலையாளத்திலும்
தொலைக்காட்சி சேனல்கள் வைத்திருப்பவர்கள் 
நினைத்தால் இக்கருத்தை மிக எளிதில் பரப்பலாம்!
கீழடியின் பெருமையில் பங்காளிகளுக்கும்
 பங்கு இருக்கிறது என்பது மட்டும் தான் நாம் செய்ய வேண்டியது.

நிராகரிப்புImage result for rainy day lonely woman
நிராகரிப்பின் முத்தங்கள் சுடுகின்றன.
நினைவுகளை மீட்டெடுப்பதில்
இறந்தகாலம் திரும்புவதில்லை.
நரைமுடிகளை இனி மறைப்பதற்கில்லை.
தண்டவாளங்கள் பிரிந்திருப்பதே உத்தம ம்.
ரயில் வண்டியின் ஓட்ட த்தில்
தூக்கி எறியப்படுகின்றன
நினைவுகளைச் சுமந்திருக்கும்
மண்டையோடுகள்.
இந்த முடிவை நாம் விரும்பவில்லை
இந்த முடிவு நம்மை விரும்புகிறது.
மழைவெள்ளத்தில்
தண்டவாளத்தைக் காணமுடியாமல்
தடம் புரளும் ரயில்.
பயணிகள் பலியானர்களா
உயிர்ப்பிழைத்தார்களா
நீ என்னவானாய்?
பாவி மனசு பதறுகிறது.
தேடி அலைகிறது
கையில் பிடித்திருந்தக் குடை
காற்றில் பறக்கிறது.
முகத்தில் அறையும் மழைத்துளியில்
உன் வாசம்
ஓ வென கதறி அழுகிறது
சன்னலில் தெரியும் என் வானம்.

Wednesday, September 18, 2019

ஆண்டாள் தேசம்

Image result for ஆண்டாள் ஓவியம்
ஆண்டாளுக்கு வளைகாப்பு
வெண்சங்குகள் சிரித்தன..
ஆண்டாள் தன் புருஷனின் காதில்
கிசு கிசுத்தாள்.
பிறக்கப்போகும் குழந்தைக்கு
நீயே தகப்பன் என்று
ஊரார் அறிய .. வளைகாப்பு..
பாற்கடல் விழித்துக்கொண்ட து.
அதானாலென்ன?
எல்லா பெண்களின் கருவறை விந்துகளிலும்
நானே இருக்கிறேன்.. அதிலென்ன சந்தேகம்?
மயிலிறகால் அவள் சூல் வயிற்தைத்
தடவிக்கொடுத்தான்.
"பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர்
வைக்கலாம்..?
சொல்லுங்கள் நாதா…"
"ஹரியின் பிள்ளை தானே அவன்.
ஹரிஜன் என்று பெயர் வை.."
அவள் வயிற்றிலிருந்த குழந்தை
காலால் உதைத்த து.
அந்த வலியில்…
அவள் கருவறை வெடித்து
அவன் பிறந்தான் ..
ஆண்டாள் தேசத்தில்
தொட்டில் குழந்தைகள்
திட்டம் அறிமுகமானது.

(பாலைத்திணை தொகுப்பிலிருந்து)

Monday, September 16, 2019

பெரியாரின் சமூக அரசியல்

Image result for பெரியாரின் பொன்மொழிகள்

காங்கிரசார் முன்வைத்த சுயராஜ்யம் என்பதற்கு மாற்றாக
 சமூக அரசியல் தளத்தில் தந்தை பெரியார் 
“சுயமரியாதை” என்ற கருத்துருவாக்கதை முன்வைக்கிறார்.

சுயராஜ்யம் என்பது டொமினிக் அந்தஸ்து/ அரசாட்சி உரிமை,
 அதிகாரத்தை தன் வசப்படுத்தல் என்ற
 அரசியல் சூழலில் பெரியார் தனி மனிதனின்
உரிமையை முன்வைக்கும் சுயமரியாதை 
என்ற கருத்துருவாக்கத்தை அரசியலாக்குகிறார்
 என்பதைக் கவனிக்க வேண்டும்.
சாதியின் பெயரால் பிறவி இழிவைச் சுமந்து
வாழும் சமூகத்திற்கு சுயராஜ்யத்தின் அதிகாரம்
 எதையும் வழங்க முடியாது என்பது பெரியாரின் பட்டறிவு.
 தன் அனுபவங்களிலிருந்து
தான் பெரியார் தன் கருத்துருவாக்கங்களை வைக்கிறார்.


பெரியாரின் பகுத்தறிவு கூட மேற்கத்தியர்கள் பேசிய 

analytical school என்பதிலிருந்து வந்த தாக
 எடுத்துக் கொள்வதை விட பெரியார் தான் முன்வைத்த
 பகுத்தறிவு என்பதற்கு மனிதத்தன்மையுடன் அணுகுதல்,
இயற்கைக்கு முரணானதை விலக்குதல்,
 தன் பட்டறிவுக்குட்பட்ட தை மட்டுமே முன்வைத்தல்
 என்பதான கருத்து நிலையுடன் செயல்பட்டிருக்கிறார். 
அவர் மேற்கத்திய சிந்தனைகளை வாசித்திருக்கவில்லை
 என்பதல்ல இதன் பொருள். 

அவர் தன் பரப்புரைகளில்
எப்போதுமே எவரையுமே குறிப்பிட்டு அந்த மேதை 

அப்படி சொன்னார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்
 என்றெல்லாம் சொல்வதில்லை.
மக்களின் மொழியில் பேசினார்.
தனக்கு சரி என்று பட்ட தை எவ்வித
சமரசமும் இல்லாமல் எந்த இட த்திலும்
முன்வைத்த ஒரே தலைவர்
தந்தை பெரியார் தான்.


#periyar_politics


Saturday, September 14, 2019

அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம்

Image result for அறிஞர் அண்ணா
இந்தியப் பொருளாதர கட்டமைப்பில் 
சாதி, வர்க்கம், வடக்கு-தெற்கு
எல்லாம் சேர்ந்து வினையாற்றுகின்றன. 
இக்கருத்தை நான் முதன் முதலில்
வாசித்த து அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம் 
கட்டுரைகளில் தான்.
இந்தியப் பிரதமர் மோதி அவர்கள்
உலக வரைபட த்தில் ஒவ்வொரு
நாடாக தேடி அலைந்து இந்தியாவின் 
பொருளாதரத்தைத் தூக்கி
நிறுத்த ஓடும் ஓட் ட த்தில்
 யார் இந்த இந்திய முதலாளிகள் என்பதையும்
அவர்களின் அசல் முகமும் ஒரே மாதிரி 
இருட்டிலும் தெரிகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கூடவா 
ஒரு தமிழ் தொழிலதிபர்
இல்லாமல் போய்விட்டார்? 
 இந்திய தொழில்துறை, இந்திய முதலாளித்துவம் .. 
இதைக் கொண்டு கட்டமைக்கப்படும்
இந்தியப் பொருளாதாரம்.. யாருடைய முகமாக இருக்கிறது?
இதை ஓரளவு அன்றே தன் பொருளாதர அரசியலாக முன்
வைத்திருக்கிறார் அறிஞர் அண்ணா . ஆனால் என்ன செய்வது..?
இதைப் பற்றி எல்லாம் அண்ணாவின் அரசியல் வாரிசுகள்
தம்பிமார்கள், 
உடன்பிறப்புகள்,
 ரத்த த்தின் ரத்தங்கள் 
அறிவார்களா..!
ஒருவேளை அண்ணாவே அறியாத இன்னொரு
 ஊழல் பொருளாதரத்தைக்
கண்டுப்பிடித்த பெருமையில்.. 
வலம் வருகிறார்களா.
(பணத்தோட்டம் மீள்வாசிப்பு செய்தாக வேண்டும்…
வழக்கம் போல புத்தகம் தொலைந்துவிட்ட து!)


Friday, September 13, 2019

கனவாகிப் போன புத்தக அலமாரி

நான் சபிக்கப்பட்டிருக்கிறேன்..
உங்களில் பலருக்கு நான் அனுபவிக்கும்
 இந்த வேதனையை/ உணர்வைப் புரிந்து கொள்ள முடியுமா..?
 என் வாழ்க்கையில் நான் இல்லை
எனக்கான இடம் இல்லை..
என் எழுத்துகள் … இல்லவே இல்லை! 
வாசிப்பு பைத்தியத்திற்கு கிடைத்த
 ஆயுள் தண்டனை இது!

வாசித்த எதையும் சேர்த்து வைக்க 
எனக்கு இடமில்லை.
 கல்லூரியில் வாங்கிய புத்தகங்கள் 
எழுதிய மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள்…
 மதுரையிலிருந்து திரு நெல்வேலி
வந்த து. ஒரு டிரங்க் பெட்டியில் வைத்து
 பூட்டி வைத்துவிட்டு நான் வழக்கம் போல 
மும்பை வந்தேன். இந்த அரபிக்கடல்
 என்னை அடித்துப் போட்டு 
தன் கரையில் ஒதுக்கித் தள்ளியது.

மும்பை சாலையோரத்து புத்தகங்களை 
இரவலாக வாங்கி வாசித்து பசியாறிய நாட்களுண்டு…’
எழுத மறந்த காலங்களும் உண்டு…
ஓடி ஓடி ஓடி… திரும்பி பார்க்கும் போது
‘என்னைக் காணவில்லை.
எனக்கான இட த்தில் நான் இல்லை!

உண்டு உறங்கி கால் நீட்டி படுப்பதுவே
வாழ்க்கையின் அதிகப்பட்ச தேவையாகிப்போனது..
தீப்பெட்டி மாதிரி
 அடுக்கி வைத்திருக்கும் வீட்டில் 
நீங்கள் கால்களை மடக்கி வைத்துக் கொண்டு 
படுத்திருக்கிறீர்களா..
எனக்கு அந்த அனுபவம் உண்டு.

மிக மிக குறைந்த தேவைகளுடன் வாழ விரும்பும் நான்
ஆசைப்பட்ட தெல்லாம் 
ஒரே ஒரு புத்தக அலமாரிக்குத்தான்!அது கூட இன்றுவரை எனக்கு எட்டாத கனவுதான்.
இன்று நண்பர் பொன்.குமார் என் புத்தகவரிசை,
2006ல் நான் எழுதிய கடிதம்..
தன் முக நூல் பக்கத்தில் போட்டு 
என்னை அழ வைத்துவிட்டார்.
.
ஆம்.. கண்களை மூடிக் கொண்டு
 ஒரு கனவு காணுகிறேன்..
ஒரு சின்ன அறை.
அதில் ஓரமாக ஒரு மேசையும் நாற்காலியும்.
நாலு பக்கமும் சுவரை ஓட்டி புத்தக அலமாரி..
வரிசையாக புத்தகங்கள்..
புத்தகங்களின் சுவாசத்துடன் நான் ..
இது இந்தப் பிறவியில் எனக்கு கனவு மட்டும்தான்.
என் வாழ்க்கை…. இப்படித்தான் சபிக்கப்பட்டிருக்கிறது.

மும்பையில் தொட்டிச்செடியாகிப் போன நான்

ஆலமர நிழலுக்கு ஆசைப்படுவது பேராசை தான்.
(மகா.. உன் தோள்களில் சாய்ந்து அழ வேண்டும்.
என் இயலாமைகளை உனையன்றி யாரறிவார் தோழி?)

Wednesday, September 11, 2019

அரபிக்கடலுக்கு ஆணையிடுங்கள் அமித்ஷா ஜிImage result for amit shah with ganpati
மதிப்பிற்குரிய அமித்ஷா அவர்களுக்கு
நமஸ்தே.
வழக்கமாக எல்லோரும் மோதிஜியை முன்னிறுத்தி
 தான் எல்லாவற்றையும் பார்க்கும் சூழலில் நான்
 உங்களுக்கு எழுதும் கடிதம் உங்களை
ஆச்சரியப்படுத்தாது…
அதிகாரத்தின் முகம் நீங்கள் தான்.
நீங்கள் தான் மோதிஜியின் அரசியல் வாழ்வின் சூத்திரதாரி.
கோத்ராவிலிருந்து காஷ்மீர் வரை கோடு போட்டு
கட்டம் போட்டு பிஜேபிக்கு அசுரபலம் தந்தவர்
நீங்கள் நீங்கள் நீங்களே தான்…
உங்கள் முன்னால் மோதிஜி கூட காற்றடைத்த வெறும் பலூன்..
அது பறப்பதும் திசை மாறுவதும் உங்கள் கைகளில்
இருக்கும் மந்திர சக்தியால்…
ஆகையினால்.. உங்களுக்கு இக்கோரிக்கையை
வைக்க முன்வருகிறேன்.
காரணம் உங்களால் மட்டுமே
இதை நடைமுறை படுத்த முடியும் என்பதால் தான்!
உங்கள் புத்திசாலித்தனம், அதிரடி நடவடிக்கைகள்
அகண்ட பாரதக் கனவுகளின் பக்கங்கள் எல்லாம்
நடந்த து, நடப்பது , நடக்கப்போவது
அனைத்துக்கும் நீங்களே சூத்திரதாரி என்பதை
உணர்த்துகின்றன.
மதிப்பிற்குரிய அமித்ஷா அவர்களே…
கண்பதி உற் சவத்தின் அரசியலுக்குள் போக விரும்பவில்லை.
மும்பையில் கனமான மிகப்பெரிய கணபதி சிலைகளை
 உற்சவத்தில் எடுக்கிறார்கள். 
அந்தச் சிலைகள் களிமண்ணால்
செய்யப்பட்டவை அல்ல. 
அவை POP statues.
Giant size statues made of Plaster of Paris (POP) with toxic paints of 
LORD GANESH are bring dumped in the river, lakes and sea.
 Won’t this POP made statues increase the water level of the river?
 AT Lalbaug in MUMBAI, as giant size GANESH STATUES 
have been Dropped in sea, the ARABIAN sea has entered
 into the PAREL AREA, and this flooding has happened
 without rain and up-tide of the ocean.

பாலாகங்காதிர திலகர் எதற்காக 
இந்த கண்பதியை இப்படி ஊர்வலமாக்கினார் 
என்பதையோ அந்த அரசியலையோ 
பேசுவது உங்களை எரிச்சலூட்டும்.
அப்படி எதுவும் செய்ய விருப்பமில்லை.
நீங்கள் கோப ப்பட்டால் என்னவாகும்?

சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
. POP சிலைகள் கரைவதில்லை, 
Toxic நீர் நிலை உயிர்களுக்கு ஆபத்தானது 
என்றெல்லாம் இத்தனை ஆண்டுகள் பேசியாகிவிட்ட து
. எனவே நான் அதை எல்லாம் பேசப்போவதில்லை.

இன்று பெரிய பெரிய கண்பதிகளை 
கரைத்தாக வேண்டும். எனக்கு அச்சமாக இருக்கிறது..
ஏற்கனவே இம்மாதிரி ஒரு பெரிய கண்பதியை
 எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யும் போது
 மேடை சரிந்து சிலை உடைந்து பக்தனின் 
கால் உடைந்து 3 உயிர்கள் எங்கள் தாராவிப்பகுதியில்.. . 3 உயிர் 
சரி வேண்டாம் அதெல்லாம் .. 3 உயிர் என்ன 
3000 உயிர் இதெல்லாம் நீங்கள் பார்க்காதாதா..
 அறியாததா…
கோமாதாவை வணங்கும் நீங்கள் அதன் சாணத்தின்
மகிமையை அறிவீர்கள். 
சாணத்தால் பிடித்து வைக்கும் கண்பதிகள்
 எங்களுக்குப் புதிதல்ல
உங்கள் வானளாவிய அதிகாரத்தால் 
இனிமேல் சாணி + களிமண்ணால் செய்யப்பட்ட 
கணபதியை மட்டுமே உற்சவத்தில் எடுத்துவர வேண்டும்
என்று ஆணையிட முடியுமா..
இந்த மகா மகா கண்பதி சிலை வியாபாரம் , 
அலங்காரம் இதை ஒட்டி நடக்கும் வியாபாரம் 
முடங்கி விட்டால் 
அது நம்ம பொருளாதரத்தின் GDP ஐ பாதித்துவிடுமே…!

ஆகையினால்.. ப்ளீஸ்..
இந்த அரபிக்கடலுக்கு ஆணை இடுங்கள்..

எதைக் கொண்டு போட்டாலும் சரி
எதைக் கொட்டினாலும் சரி..
பொங்கி கரைக்கு வரக்கூடாது என்று
ஆணையிடுங்கள்..
உங்களால் முடியும் அமித்ஷாஜி..
அது எப்படி நீங்கள் சொல்லி
உங்கள் ஆணையை மீறி
கடலலை கரைக்கு வந்துவிடும்?????
உங்களால் மட்டுமே முடியும்..
எதையாவது செய்து
ஆர்ப்பரிக்கும் இந்தக் கடலைக்கொஞ்சம்
அடக்கி வையுங்கள்…
ஓம் கண்பதி நமஹ..
அமித்ஷா வாழ்க..