Wednesday, May 28, 2014

காணாமல் போன தண்ணீர் கூஜா








மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்வது எங்கள்

 வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிகழ்வு. எங்களில் பலருக்கு  

அந்த ஒரு சில நாட்களில்  வாழ்வதற்காகவே மற்ற நாட்கள் 

 எல்லாம் சாக்கடை ஓரத்தில்  கழிகிறது.  



எங்கள் வீடுகளில் அப்போதெல்லாம் தண்ணீர் கூஜா கட்டாயம்

இருக்கும். பெண்ணுக்குத் திருமணமாகிப் போகும் போது கொடுக்கும்

சீர்வரிசையில் இந்த தண்ணீர் கூஜாவும் இடம் பெறும் என்றால்

பார்த்துக் கொள்ளுங்கள் தண்ணீர் கூஜாவின் முக்கியத்துவத்தை!


அப்போதெல்லாம் ஜனதா டிரையினில் பயணிப்போம். 

ஜனதா டிரெயின்  காலையில் வி. டி ஸ்டேஷனிலிருந்து  

புறப்படும்.  மூட்டை முடிச்சுகள்,    டிரங்க்பெட்டி அத்துடன்  

ஹோல்டால் என்று சொல்லப்படும் படுக்கை

மறக்காமல் தண்ணீர் கூஜா வைத்திருப்போம். அத்துடன் தண்ணீர்

காலியானவுடன் டிரையின் நிற்கும் ஸ்டேஷன்களில் இறங்கி

தண்ணீர் கூஜாவை நிரப்பிக் கொள்வோம். டிரெயின் நிற்கும் போது

தண்ணீர் கூஜாவை நிரப்புவதும் ஓடி வந்து டிரையினில் ஏறுவதும்

சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும். 

அந்த தண்ணீரைக் குடித்த எங்கள் யாருக்கும் 

 ஊருக்குப் போனவுடன் எந்தவிதமான உடல் நலக்குறைவும்

ஏற்பட்டதில்லை.  1



10 நாட்களுக்கு முன் நீண்ட இடைவெளியில் சென்னைக்கு

டிரெயினில் பயணித்தேன்.  ரயில் நீர் பாட்டிலில் அடைத்து

விற்பனைக்கு  வந்துவிட்டது.   நான்  பயணங்களின் போது இறங்கி

தண்ணீர் நிரப்பிய குழாய்கள் உடைந்து போயிருந்தன.

சில இடங்களில் காணாமல் போடிருந்தன.  தண்ணீர்க் கூஜாவின் நினைவு

என்னை அலைக்கழித்தது. மீண்டும் மும்பைக்குத் திரும்பியவுடன்

என் தண்ணீர்க் கூஜாவைத் தேடிப் பார்த்தேன். அதைக் காணவில்லை.


என் தாய்வீட்டு சீதனமாக என் அம்மா ஆசையுடன் கொடுத்த அந்த


தண்ணீர்க் கூஜாவைக் காணவில்லை.



ஃபிரிட்ஜ் வாட்டர், மினரல் வாட்டர் , அத்துடன் பலவகையான பழரசங்கள்

எவ்வளவோ குடித்துப் பார்த்து விட்டேன், அடங்கவில்லை என்

தண்ணீர்த்தாகம்.  என் தண்ணீர்க்கூஜாவை இனி நான் பார்க்கவே முடியாதா?

பெற்ற தாயை  இழந்த தருணத்தில் அழுதக் கண்ணீர் மீண்டும்

என் விழி இமைகளை நனைக்கிறது.   என் தண்ணீர்க் கூஜாவை நான்

இழந்துவிட்டேன்.  எப்போது மரணம் சம்பவித்தது என் தண்ணீர்க் கூஜாவுக்கு?

யாரிடம் பறி கொடுத்தேன்  என் தாய் கொடுத்த தண்ணீர் கூஜாவை?

இதோ... என் தொண்டையை யாரோ அமுக்கி என்னைக் கொலை

செய்ய வருகிறார்கள்.  தண்ணீரைக் கூஜாவில் நிரப்பிக் கொண்டு

பயணங்களில் சாகசங்களுடன் வாழ்ந்த அந்தச் சிறுமியின் பயணம்

முடிந்து விட்டது.


இனி என்னால் கண்டு பிடிக்கவே முடியாது,

காணமல் போன என் தண்ணீர் கூஜாவை.


------







Thursday, May 22, 2014

ஸ்டாலினைத் தோற்கடித்தது எதிர்க்கட்சி அல்ல..





நடந்து முடிந்த தேர்தல் களத்தில் திமுக வின் படுதோல்வி திமுக என்ற அரசியல் கட்சியின் தோல்வி என்பதைவிட  ஸ்டாலினின் தோல்வியாகவே முன்வைக்கப்படுகிறது. இப்படியான ஒரு கருத்தைப் பரப்புவதன் மூலம் திமுக வுக்கும் அதன் வாரிசு அரசியலுக்கும்   கூட ஏதாவது சுயலாபங்கள் இருக்கலாம்! ஆனால் உண்மை அதுவல்ல.

அண்மைக்காலங்களில் திமுக வின் வாரிசு அரசியலை ஊழலை ஈழப்போராட்டத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியதும் எழுதியதும் நான். (கோவையின் டிசம்பர் 2013 பேசியது, திண்ணையில் வெளிவந்துக்கொண்டிருக்கும் என் கட்டுரை மற்றும் பல கட்டுரைகள்)  ஆனாலும் தனிப்பட்ட முறையில் இன்று ஸ்டாலின் மீது வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு எவ்வளவு போலியானது என்பதை எழுதுவதிலும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏனேனில் இந்தியாவின் வாரிசு அரசியலில் ஸ்டாலின் மட்டுமே திமுக வின் தலைவர் கருணாநிதியின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக அரசியலில் அங்கீகாரம் பெற்றவரில்லை. கட்சியில் அதற்காக உழைத்தவர். படிப்படியாக முன்னுக்கு வந்தவர். 

வாரிசு அரசியலில் இந்தியாவில் ஸ்டாலின் மட்டுமே இந்த வகையில் விதிவிலக்கானவர் என்பதை என்றும் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.
ஆனால் அதே வாரிசு அரசியல் வேறு ஏதோ ஒரு வகையில் திமுகவை கரையானைப் போல அரித்து
தின்றுவிட்ட நிலையில் பொறுப்புக்கு வந்தவர்
ஸ்டாலின். கலைஞரின் குடும்ப அரசியல் திமுகவில்  நுழையாமல் இருந்திருந்தால் ஸ்டாலின் உழைப்பும் காத்திருப்பும் இன்றைக்கு இப்படி வீணாகி இருக்காது!

ஸ்டாலின் தன் பள்ளிப்படிப்பு காலத்தில் (1960களில் என்று நினைக்கிறேன்) அறிஞர் அண்ணாவும் கலைஞரும் பேசும் கூட்டங்களில் மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருப்பாராம். தலைவர்களின்
பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்துக்கொண்டிருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மறுநாள் அவர் பதிவு செய்திருப்பது அப்படியே முரசொலியில் வெளிவந்துக் கொண்டிருந்தது.

அறிஞர் அண்ணாவின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை எம்ஜிஆரின் திரைப்படம் போட்டு  நிதி வசூலித்து ஸ்டாலின்  கொண்டாடிய காலம் முதல்  அவரை உன்னிப்பாக  கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

வாரிசு அரசியலில் எமர்ஜென்சி கொடுமையில் மிசா கைதியாக சிறைப்பட்ட ஒரே அரசியல் வாரிசும் ஸ்டாலின் மட்டும் தான். அப்போது அவருக்கு வயது 23, திருமணமாகி 5 மாதங்கள் தான் ஆகி இருந்தது. சிறையில் அவர் அனுபவித்தக் கொடுமைகளை இன்றைய முகநூல் இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. என் போன்றவர்களுக்கு அந்தச் சம்பவம் நன்றாக நினைவில் இருக்கிறது.
சிறையில் ஸ்டாலினைச் சந்திக்க பெற்றோரும் மனைவியும் வருகிறார்கள். சிறைக்காவலர்கள் ஸ்டாலினுக்கு முழுக்கைச்சட்டை கொடுத்து அணிந்துக் கொள்ள செய்கிறார்கள். சிறையில் அடிபட்ட காயங்கள் வெளியில் தெரியாமல் இருக்க மட்டுமல்ல, வெளியில் சொல்லவும் கூடாது என்று அவருக்கு சிறை அதிகாரி
ஆணை இடுகிறார். ஸ்டாலினும் அப்படியே நடந்து கொண்டார். 

ஸ்டாலினின் நிர்வாகத் திறமைகளை திமுக பயன்படுத்திக் கொண்டு எங்கேயோ போயிருக்க முடியும்! பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரைத் தேக்கிவைத்து பாசனம் செய்ய தவறியது திமுகவின் தலைமை. ஸ்டாலினின் உழைப்பையும் தியாகத்தையும்
முன்னிலைப் படுத்தாமல் அவரை வாரிசு அரசியலின் அடையாளமாக  மட்டுமே முன்னிறுத்தியவர்கள் திமுகவின் அரசியல் எதிரிகளோ அல்லது ஊடகமோ அல்ல. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அரசியல் விமர்சகர் சோ ராமசாமி கூட ஸ்டாலின் 20 வருடங்கள் தன்னை திமுக வில் இணைத்துக் கொண்டு படிப்படியாக முன்னுக்கு வந்தவர் என்பதை ஒத்துக் கொள்கிறார். எனவே வாரிசு அரசியல் என்ற தோள்களில் தொற்றிக்கொண்டு வந்தவர் அல்ல ஸ்டாலின். எதிர்க்கட்சியினரும் ஏற்றுக்கொண்ட இந்த உண்மையை கருணாநிதியின் குடும்பமும்  குடும்ப அரசியலும் ஏற்றுக் கொள்ள தவறியது. குடும்பத்தலைவர் என்ற முறையில் கருணாநிதியின்
நெஞ்சுக்கு நீதி செய்த அநீதி இது
ஸ்டாலின் என்ற தொண்டனுக்குச் செய்த துரோகம் இது!

ஸ்டாலின் மேயராகப் பதவி ஏற்ற போது நடந்தப் பாராட்டு விழாவில் அன்றைய காங்கிரஸ் தலைவர் மூப்பனார் "ஸ்டாலினை நான் இப்போது பாராட்ட மாட்டேன், மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்த பின்னர் தான் பாராட்டுவேன்" என்றார். அதுபோலவே 1996க்குப் பிறகுதான் மாநகராட்சி பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதி தேறியவர்களின் எண்ணிக்கை 55 % லிருந்து 78 % உயர்ந்தது என்பதும்
உண்மை. ஸ்டாலின் மேயராக இருந்தப் போது சரியாக காலை 9 மணிக்கு மாநகராட்சிக்கு வருவார், மாலை 6 மணிக்கும் வருவார், இரவு 9 மணி வரை இருந்து பணிகளைக் கவனிப்பார் " என்று மாநகராட்சி ஊழியர்கள் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.

2ஜி யில் சம்பந்தப்பட்டவர்கள் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் 2ஜி பற்றி யாருக்குத் தெரியும்? என்று மமதையுடன்! ஆனால் தேர்தல் களத்தில் அவர்கள் நிற்கும் போதும் பிரச்சாரம் செய்யும் போதும்
2ஜி குறித்து மறந்துப் போனவர்கள் கூட அதை மறக்கவோ மன்னிக்கவோ முடியாமல் செய்ததில் 
எதிர்க்கட்சிக்கு எந்தப் பங்கும் இல்லை. தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வது என்பது இதுதானோ! 

மிசா  சிறைக்கைதியின் தியாகத்தை
2ஜியின்  சிறைவாசம் காவு வாங்கிவிட்டது.
இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத வரை 
வெளிப்படையாக தெரியும் இந்தக் கட்டியை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாத வரை திமுக வை எவராலும் காப்பாற்ற முடியாது.
இதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது ஸ்டாலினும்
ஸ்டாலின் எதிர்காலமும்.

---

Monday, May 12, 2014

நாம்தியோ தாசலும் மல்லிகா அமர்ஷேக்கும்



இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் நாம்தியோ தாசல்.
மராத்திய கவிதைகளுக்கு உலக அரங்கில் மிக முக்கியமான இடத்தைக்
கொடுத்ததில் நாம்தியோ தாசலின் பங்கு மகத்தானது.

நாம்தியோ தாசலின் காதல் மனைவி மல்லிகா அமர்ஷேக்.
இருவரும் கவிஞர்கள் என்பது  நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய
புள்ளி.

இந்த இரு கவிஞர்களும் ஒருவரில் ஒருவர் அடங்க மறுக்கின்றார்கள்.
இருவருக்குமான அடையாளங்கள் தனித்து அவரவர் சுயத்துடன் நிற்கின்றன.
அதனால் தான் என்னால் நாம்தியோ தாசலும் அவர் மனைவி மல்லிகா அமர்ஷேக்கும் என்று எழுத முடியவில்லை. அண்மையில் புதுவிசைக்காக
இருவரின் கவிதைகளில் நான் விரும்பியதை மொழியாக்கம் செய்திருந்தேன்.
(புதுவிசை இதழ்  ஏபரல் -ஜூன் 2104) அதிலிருந்து இரு கவிதைகள்:



நாம்தியோ தாசல்:




அவள் போன அந்த நாளில்....
----------------------------------------------------

அவள் போன அந்த நாளில்
என் முகத்தில் கறுப்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டேன்.
கொடூரமான மூளைக்கோளாறு பிடித்தக் காற்றை
ஓங்கி அறைந்தேன்.
என் வாழ்க்கையின் சிறிய துண்டுகளைப் பொறுக்கி
எடுத்துக் கொண்டேன்.
உடைந்தக் கண்ணாடியின் முன்னால் நிர்வாணமாக நின்றேன்.
என்னை நானே பழிவாங்கிக்கொள்ள அனுமதித்தேன்.
"நீ பைத்தியமா?" என்று பாவப்பட்டு சூரியனைப் பார்த்து கேட்டேன்.
கனவுகளை ஓவியங்களாகத் தீட்டிய கலைஞர்கள் மீது
சாபங்களை அர்ச்சித்தேன்.
கிழக்கிலிருந்து மேற்காக நடந்தேன்.
வழியில் அகப்பட்ட கற்களைப் பொறுக்கி
என் மீதே வீசிக்கொண்டேன்.
மலைகள், பள்ளத்தாக்குகளின் ஊடாக
அளவான புன்னகையுடன் பறவையைப் போல ஓடும் தண்ணீர்
எந்தக் கடலைத் தேடி சந்திக்க அலைகிறது?
அல்லது கடல் மட்டத்தில் கசிந்து ஒழுகி மண்ணுக்குள் போய்விடுமோ?
நான் எனக்குச் சொந்தமானவன் தானா?
அவளுடைய இறந்த உடலை நெஞ்சோடு அணைத்து
இதயம்வெடிக்க கதறி அழ என்னால் முடியவில்லை.
அவள் போன அந்த நாளில்
என் முகத்தில் கறுப்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டேன்.

----------



மல்லிகா அமர்ஷேக் கவிதை:



பெருநகரம் 1
-------------------


அவள் பெண்
கருப்பையால் முழுமையான பெண்
நிறைவான மழைக்காலம்
குறைவில்லா குளிர்காலம்
ஓர் ஆகாயம்
ஓரு கடல்.


அவள் முலைகளிலும் தொடைகளிலும்
நீ
வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடி 
அலைகிறாய்.
விடைத்தெரியாத உன் கேள்விகளுக்கு
அவளிடம்
விடைகாணத் துடிக்கிறாய்.

அவள் அமுதக்கலசமோ?
மாறிவிடும் தோற்றமோ?
மனைவி
காதலி
விலைமாது
இவர்களுக்குள்
என்ன வேறுபாடு கண்டாய்?
எண்ணிக்கையத் தவிர.


அந்த உடல்களுக்கு அப்பால்
உயிர்ப்புடனிருக்கும் 'அவள்களை'
நீ வேண்டுமென்றே
உதாசீனப்படுத்துகிறாய்.

உண்மையில்
உன் கேள்விகளுக்கெல்லாம்
படுக்கையறை மட்டுமே
பதிலாக முடியுமா?


உன் காமம் தணிந்த இரவில்
உன்னோடு உறங்கிய அவளை
அறிந்திருக்கவில்லை நீ.
.அவள் பெண்ணோ
ஊத்தைக் கண்ணோ
மாயப்பிசாசோ
இத்தருணத்தில்
கவிதைகளைப் பற்றிய
உன் பேச்சு
ஆச்சரியம்தான்.
ஆனால்
வருத்தமாகவும் இருக்கிறது
இன்னும் எத்தனைக் காலங்கள்
அர்த்தமில்லாத சொற்குவியலாய்
மரப்பாச்சி வாழ்க்கையில்
பொய்யான கீரிடத்தைச்
சுமந்து கொண்டு
திரியப் போகிறாய்?


உன் படகுகள்
பெண்ணின் தொடைகளைச் சுற்றிவந்து
பாய்மரத்தை விரிக்கின்றன
கருப்பை என்ற கைக்குட்டையை
பெண்கள் அசைக்கிறார்கள்
'பாவம் அவன் தீவை
அவன் கண்டடையட்டும்!'
என்கிறார்கள்.
மூன்றாவது கடற்கரையாக
அவர்கள் மாறுகிறார்களோ
இல்லை
அவர்கள் முலைக்காம்புகளில்
உன் படகு இளைப்பாறுகிறதோ..
சத்தமாகப் பாடுகின்றாய்.

அமெரிக்கா அமெரிக்கா
உரேக்கா யுரேக்கா..
இப்படியாக ஏதோ ஒரு பாடலை
கடலலைப் போன்ற அவள் கூந்தலில்
உன் சரீரம்
தொங்கிக்கொண்டிருக்கிறது.


அவள் கண் இமைகளில் ஈர உதடுகளில்
காய வைக்கிறாய்
உன் சுவையான அதிகப்படியான
தர்க்க நியாயங்களை.


மகிழ்ச்சி அலையின் உச்சக்கட்டத்தில்
நிறைவுகளின் விளிம்பில் நீ.


இப்போதும்
நான் சொல்லவரவில்லை
அவள் தேவதை என்று!
ஆனால்
அரைநிர்வாணமாகிப் போன
உன் ஆன்மாவுக்கு
அவள் மட்டுமே
ஆடையாக முடியும்!.

---------------------






Tuesday, May 6, 2014

தமிழ்ச்...சா..தீ கால்டுவெல்லுக்கு செய்த துரோகம்







நாளை - 07 மே - 2014 கால்டுவெல்லின் 200 வது ஆண்டுவிழா.
07-5-1814ல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் சமயப்பணி ஆற்ற
தமிழகம் வந்தார். எங்கள் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில்
தங்கினார். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் இருந்த மொழியறிஞர்
திராவிட மொழிகளுடன் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, ஜெர்மன், பிரஞ்சு
மொழிகளிலும் புலமைப் பெற்றவர். 18 மொழிகள் அறிந்த மொழியறிஞர்.

இந்திய சமூகத்தின் தலைவிதியை மொழி தளத்திலும் இன அடிப்படையிலும்
மாற்றியவரும் மிக அதிகமான பாதிப்புகளைக் கொடுத்தவரும் இவர் தான்.


கால்டுவெல் 1856இல் "திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப
மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravadian or
South Indian family of Languages) என்னும் தலைப்பில் தன் நூலை
வெளியிடுகிறார். உள்ளடக்கமும் தலைப்பும் ஒன்றுக்கொன்று
இணக்கமாய்ப் பொருந்தியிருந்த முதல் பதிப்பு அது. தலைப்பில் உள்ள "திராவிடம்” என்னும் சொல்லும், "திராவிட மொழிகள்” என்னும் கருத்தாக்கமும் கால்டுவெல்லின் கண்டுபிடிப்புகளல்ல. ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துவிட்ட சொற்கள் அவை. 1801க்கு முன்பே "திராவிட மொழிகள்” சிலவும் அவற்றைக் குறிக்கும் அப்பெயரும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்திலுருந்து வந்தவை தான் என்றே நம்பினார்கள்.
அந்த  நம்பிக்கையை கருத்துருவாக்கத்தைக் குழிதோண்டி புதைத்தவர் கால்டுவெல்.

1856 - முதல் பதிப்பு

1875 - இரண்டாம் பதிப்பு (19 ஆண்டுகளுக்குப் பின்)

இரண்டாம் பதிப்பில் 19 ஆண்டுகளில் அவர் கண்டறிந்த மேலும் சில உண்மைகளையும் சிலர் கேள்விகளுக்குப் பதிலையும் அடிக்குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

1913 ல் மூன்றாம் பதிப்பு.

மூன்றாவது பதிப்பில் கால்டுவெல் புத்தகத்திலிருந்து தங்களுக்கு வேண்டாதவைகளை, நூலின் மையக்கருத்துக்குத் தேவையற்றவை என்று
சொல்லி சில பக்கங்களை நீக்குகிறார்கள். அதன் பின் நீக்கப்பட்ட அந்தப் பக்கங்கள் எவர் பார்வைக்கும் வந்து விடாமல் தமிழ்ச் சாதி சமூகம்
தன் ஆதிக்கச் சாதி முகத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறது..

அப்படி நீக்கப்பட்ட பக்கங்கள்:
நீக்கப்பட்ட பகுதிகள்:

1. The relative antiquity of Dravidan Literature என்னும் தலைப்பின் கீழ் வரும் 34 பக்கங்களுள்ள முழுப்பகுதியும்

2. பின்னிணைப்புகளில்,

II Remarks on the Philological portion of Mr,Gover’s “Folk songs of Southern India”
III, Sundara Pandya
IV, Are the Pariars (Pareiyas) of Sourthern India Dravidans?
V, Are the Neilghery (Nilagiri) Tudas Dravidans?
VI, Dravidian physical Type
VII. Ancient Religion of the Dravidians

இந்த 6 தலைப்புகளில் மொத்தம் 76 பக்கங்கள்.

3. அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்ட 507 வரிகள்.

4. நூலின் உட்பகுதிகளிலிருந்து அங்கங்கே பத்திகளாகவும் பக்கங்களாகவும் (குறிப்பாக Introduction பகுதியிலிருந்து).

மொத்தம் நீக்கப்பட்ட பகுதிகள் மூன்றாம் பதிப்பின் அச்சு வடிவத்தில் 160 பக்கங்கள் வரக்கூடியவை. இதில் வெறும் 48 பக்கங்கள் உள்ள இரண்டு பகுதிகளை நீக்கியதற்கான காரணங்களை மட்டும் தருகின்றனர். 1. "திராவிட இலக்கியங்களின் பழமை”ப் பகுதியை நீக்கக் காரணம்: "அது நூலின் மையக்கருத்துக்குத் தேவையில்லாதது. பழங்கால நூல்களுக்கு கால்டுவெல் கணித்த காலங்கள் பலவும் காலாவதியாகிவிட்டன (இது உண்மை).” 2. பின்னிணைப்பில் கோவருக்கு கால்டுவெல் தரும் பதிலை மட்டும் குறிப்பிட்டு அதை நீக்கியதற்கான காரணம்: "கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையற்ற அல்லது காணாமல் போய்விட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கு கால்டுவெல் பெரும் சிரமம் எடுத்துக் கொண்டு பல பக்கங்களில் கூறும் அவை வீண் சர்ச்சைக்குரிய விஷயங்கள்.”மீதமுள்ள 70 சதவீதப் பக்கங்களை நீக்கியதற்கு அவர்கள் வெளிப்படையாக ஒரு காரணமும் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, அப்பகுதிகளைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதைக் கூட வெகு சாமர்த்தியமாகத் தவிர்த்துவிடுகின்றனர்.

I have added an excurses on ‘Sundara Pandia’. and I have endeavoured to answer the question. “Are the Paraiyas and Tudas Dravidians?” and have adjoined some remarks “on the Dravidian Physical Type”. and “on the Religion of the ancient Dravidian Tribes,”

மூன்றாம் பதிப்புச் செய்தவர்களுக்கு இந்த வாக்கியம்தான் பிரச்சினையே. 
காரணம் பறையர் மற்றும் தோடா இன மக்களை கால்டுவெல் திராவிடர்கள்தான் என்றல்லவா சொல்லி இருக்கிறார்!
 தமிழ் ஆதிக்கச் சாதிக்கு இதுதான் ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிடர், திராவிடம் என்று தமிழ்நாட்டில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் சகல ஜாம்பவான்களும் இந்தக் கள்ளமவுனத்தின் காவலர்கள் தான்.


இதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற அய்யா கவிதாசரண்
கால்டுவெல் பதிப்பித்த இரண்டாம் பதிப்பையும் பின்னர்
பதிப்பிக்கப்பட்ட மூன்றாம் பதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்த
அதிர்ச்சி தரும் உண்மையை,  தமிழ்ச்சாதியின் சாதி அகம்பாவத்தை
வெளிக்கொணர்ந்தார். "அப்படியா?" என்று ரொம்பவும் அதிர்ச்சி அடைந்தது போல கேட்டுக்கொண்டார்களாம் பல்கலை கழக தமிழ்ப் பேராசிரியர்கள்

கவிதாசரண் அவர்கள் தான் குடியிருந்த வீட்டை அடமானம் வைத்து கால்டுவெல்லின் இரண்டாம் பதிப்பை முழுமையாக வெளியிட்டார்.
அந்தப் பதிப்பில் அவர் எழுதியிருக்கும் சில வரிகள்:

THESE EDITORS  HAD CARVED A TEXT BOOK OUT OF IT FOR THE CLASS ROOM
SCHOLARS, LOYAL TO THE SAGACITY OF THE INDIAN HYPOCRISY WITH CASTE BASED TRAITS. THE ELITE DRAVIDIANS HAVE ALL ALONG BEEN ACCEPTING IT AS THEIR BEST SUITED TREASURE, NOT KNOWING WHAT THEY ARE DOING OR STRIVING FOR.

OUR ENDEAVOUR OF BRINGING THIS EDITION TO ITS REVIVAL IS NOT ONLY TO ACCLAIM CALDWELL WTH NEW UNDERSTANDING FOR HE WAS MORE THAN HUNDRED YEARS AHEAD OF HIS TIME BY QUESTIONING THE INDIAN SOCIAL ORDER, BUT ALSO
TO RECLAIM THE FIRE TO GLOW FOR EVER IN THE AIR OF FREEDOM.

கால்டுவெல்,
எங்களை மன்னித்துவிடுங்கள்...
காந்திக்கு துப்பாக்கி குண்டுகளைப்
பரிசாகக் கொடுத்த
மதவாதிகளை விடக் கொடியவர்கள் நாங்கள்.
இன்றுவரை எல்லா மேடைகளிலும்
உங்கள் பக்கங்களை
வாசிக்கமாலேயே உரக்கப் பேசுவதற்காக
எங்களை மன்னித்த மாமனிதரே..
எங்கள் சாதித்தமிழன்
அறிந்தே செய்த இந்த தவறுகளுக்காகவும் சேர்த்தே
அவர்களை மன்னித்தருளும்.

ஆமென்.

Saturday, May 3, 2014

எல்லோரும் வணங்குவோம் அம்பானியை!








ரிலையன்ஸ் நமஹ!

இனி. எல்லோரும்
அம்பானியை வணங்குவோம்.
வாழ்க அம்பானி.


சர்வம் அம்பானி மயம்.
நீ சாப்பிடுகிற சாப்பாட்டிலிருந்து
உன் வீட்டில் எரிகிற லைட் வரை
அம்பானி,
உன் கைபேசி அம்பானி.
உன் திரைப்படம் அம்பானி
நீ பார்க்கும் தொலைக்காட்சி அம்பானி
நீ வாசிக்கும் நாளிதழ் அம்பானி
நீ நுழையும் தியேட்டர் அம்பானி
நீ போட்டிருக்கும் உடை அம்பானி

நாளை நீ சுவாசிக்கும் காற்றுக்கும் வேண்டும்
அம்பானியின் அனுமதி.

அம்பானி தான் இந்தியா.
இந்தியாவில் எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும்
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
உன்னையும் என்னையும் ஆண்டு கொண்டிருப்பது
அம்பானி.

செய்திகளின் ஊடாக சொல்ல வரும்
செய்திகள் சொல்லாத செய்தி சாராம்சம் இதுதான்:


தேர்தல் விறுவிறுபான செய்திகளைத் தின்று ஊடகங்கள்
கொழுத்துப் போயிருக்கின்றன.
ராகுல், பிரியங்கா, சோனியா , மோதி, மேடம் ஜெ, மயாவதி,
மம்தா திதீ, மோதி, லல்லு பிரசாத் , கெஜ்ரிவால் இதற்கிடையில்
திமுக குடும்பத்தின் கெட்டக்குமாரனாக சித்தரிக்கப்பட்டுவிட்ட
அழகிரி மனம் திறக்கிறார் என்ற இன்றைய தந்தி சேனல்
வரை... எங்குப் பார்த்தாலும் தேர்தல் மயம்.
இந்த நாடகத்தில் ஒரு துன்பியல் காட்சி போல நடந்து முடிந்துவிட்டது
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு.
அப்பாவி மக்களின் உயிர் உடமைகள் இழப்புக்கு நடுவில்
குளிர்க்காயும் அரசியல் கட்சிகள்.
சங்கர்லால் துப்பறியும் கதை ரேஞ்சுக்கு இதில் எங்களிடம்
துப்புக் கிடைத்துவிட்டது என்று பரபரப்பான செய்திகளைத் தந்துக்
கொண்டிருக்கும் காவல்துறை..
இந்தக் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் உரிமை மாநில அரசுக்கா
மத்திய அரசுக்கா என்ற நேர்ப்படப்பேசு....

இத்தனைக்கும் நடுவில் ஒப்பந்தம் ஆகிவிட்டது பாரத ஸ்டேட் வங்கியுடன்
அனில் அம்பானிக்கான குத்தகை உரிமை. இதைக் கவனிக்க எவருக்கும்
நேரமில்லை. எனக்குப் பல நேரங்களில் தோன்றுகிறது... இம்மாதிரியான
பரபரப்பான காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் போது அல்லது பரபரப்பான
காட்சிகளைத் திட்டமிட்டு ஓடவிட்டு அத்தருணத்தில் எல்லோரின் கவனமும்
அதில் இருக்க திரைமறைவில் இந்தியாவைக் குத்தகைக்கு விடும் ஏலவிற்பனை அரங்கேறிக் கொண்டிருக்கிறதோ என்று.
இந்த ஏலச்சந்தையில் எல்லா கட்சிகளும் கூட்டுக்கள்ளன்கள்!
ப்ரியங்காவை மகள் போல  என்று மோதி சொன்னதைக் கூட
பல்வேறு கோணங்களில் அனைத்துக் கட்சிகளும் ஆய்வு செய்துக் கொண்டிருக்கும் கூர்மையான தருணத்தில் இதைப் பற்றிய செய்தியை
எந்த ஒரு அரசியல் கட்சியோ கட்சியின் தலைவர்களோ
வலது இடது தோழர்களோ கண்டு கொள்ளாமல் இருப்பதை
என்னவென்று சொல்லட்டும்?

இந்திய வங்கிகளின் தலைமை வங்கியாக இருப்பது ரிசர்வ் பேங்க்.
ரிசர்வ் பேங்க் இல்லாத இடங்களில் அந்தப் பொறுப்பை ஏற்பது
பாரத ஸ்டேட் பேங்க். அரசு மயமான 26 வங்கிகளும் இந்தியாவின்
ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி கிளைகள் திறக்க அனுமதி இல்லை.
இந்திய ரூபாயின் மதிப்பைத் தீர்மானிப்பதும் ரிசர்வ் பேங்க்.

தங்கள் சேமிப்புகளுக்கு தனியார் வங்கிகளும் பன்னாட்டு வங்கிகளும்
அதிக வட்டி கொடுத்தாலும் எங்களைப் போன்ற பலர் பாரத ஸ்டேட் வங்கியில்
எங்கள் சேமிப்பை வைப்பதில் பெருமை அடைகின்றோம்.
எங்கள் கணக்கும் எங்கள் சேமிப்பும் பத்திரமாக இருக்கிறது என்பது
முதல் காரணம் என்றாலும் இதற்கெல்லாம் அப்பால் எங்கள் கடின
உழைப்பில் சேர்த்திருக்கும் சேமிப்பு பணம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு
ஏதோ ஒரு வகையில் அரசு வங்கிகளில் இருக்கும் போது பயன்படுகிறது
என்று நம்புகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை எல்லாம் வீணாகிவிட்டது.
நான் வங்கியில் வேலைப் பார்த்தவள். என்னால் இதை நம்ப முடியவில்லை,
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி அனில் அம்பானியின் குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் பணப்பரிவர்த்தனை நிறுவனத்துடன் செய்திருக்கும் ஒப்பந்தம்!


அந்த ஒப்பந்தத்தின்படி, 
கடன் விண்ணப்பங்களை அளிப்பது, இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், ஓய்வூதியப் பலன்கள், வீட்டுக் கடன்கள், சொத்துகள் மீதான கடன்கள், வாகனக் கடன்கள், தங்க கடன்கள், சிறு தொழில்களுக்கான கடன்கள், கடன் அட்டைகள், விவசாயக் கடன் அட்டைகள், நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் போன்ற பாரத ஸ்டேட் வங்கியின் சேவைகள் ரிலையன்ஸ் பணப் பரிவர்த்தனை மூலம் நடைபெறும். 
மேலும் , கடன் பத்திரங்களை வாங்குவது மட்டுமல்ல, யாருக்கு கடன் கொடுக்கலாம் என்பதையும் இனி ரிலையன்ஸ் தீர்மானிக்கும்.
கொடுத்தக் கடனை எப்படி வாங்குவது என்பதையும் ரிலையன்ஸே
முடிவெடுக்கும். இப்படி வங்கியின் சேவைப்பணிகளில் கைவைப்பது போல
வங்கியின் முடிவெடுக்கும் அதிகாரத்திலும் ரிலையன்ஸின் கை
மட்டுமே இருக்கும்.

எதை எல்லாம் இதற்கு முன் பாரத ஸ்டேட் வங்கி செய்துக்கொண்டிருந்ததோ
அதை எல்லாம் ரிலையன்சும் செய்துக் கொண்டுதான் இருந்தது. குறிப்பாக
MUTUAL FUND, LIFE INSURANCE, GENERAL INSURANCE, TREASURY INSURANCE, PROJECT FINANCE, RETAIL LOANS ஆகிய தளங்களில் பாரத ஸ்டேட் வங்கியின் போட்டியாளர் ரிலையன்ஸ். ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரசு வங்கி
தனியார் நிறுவனத்துடன் தரமான போட்டியில் களத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்வதை விட்டுவிட்டு...

அம்பானி நமஹ
ரிலையன்ஸ் நமஹ

என்று தானே போட்டியிலிருந்து விலகியதுடன் அப்படியே தங்கத்தட்டில் வைத்து அம்பானி கையில் கொடுத்து இனி இந்தியாவின் சர்வமும்
அம்பானி மயம் என்று சொல்லி இருக்கிறது. இது வெட்க கேடு!
கேட்டால் சொல்கிறார்கள்... இப்படி அவுட் சோர்சிங் செய்தால்
செலவு குறையுமாம், ... சேவையில் தனிக்கவனம் செலுத்தப்படுமாம்!
எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்கள் சொல்லும் காரணங்கள்..?

யாருக்குச் செலவு குறையும்?
யாருக்கு இதில் கொள்ளை லாபம்?
வங்கி கணக்குகள், கடன்களுக்கான சேவைக் கட்டணங்களை நீ அம்பானிக்கு
கொடுத்துவிட்டால், அதன் பின் NON FUND INCOME பூஜ்யமாகிவிடுமே வங்கிக்கு,
அத்தனையும் மொத்தமாகக் கொள்ளை அடிப்பதுடன், அதைத் தீர்மானிக்கும்
சக்தியாகவும் ரிலையன்ஸ் மாறுமே! அதனால் பாதிக்கப்படுவது யார்?


வங்கி கிளைகள் திறக்க ரிசர்வ் வங்கியின் அனுமதி வேண்டும் என்று
சொல்லிவிட்டு இப்படி அம்பானிக்கும் அவன் மச்சானுக்கும் அவுச் சோர்சிங் என்ற பெயரில் புறவாசல் வழியாக திறந்துவிட்டு கிளைகள் திறப்பதும்
பாரத ஸ்டேட் வங்கியைப் பின்பற்றி பிற அரசு வங்கிகளும் அவுட் சோர்சிங்
செய்ய வழிகாட்டுவதும் வங்கிகளை தனியார் மயமாக்குவதில் கொண்டு போய் முடியும். அதையும் விட ஆபத்தான தனிநபர் மயமாக்குவதில் கொண்டு
விடும்!


வங்கியில் வைக்கும் கணக்குகளும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களும் வங்கிக்கும் அந்த வாடிக்கையாளருக்கும் மட்டும் தெரிந்தவை. அதை இனி
ரிலையன்சும் தெரிந்து கொள்ளுமே! வங்கி வாடிக்கையாளரின் உரிமையை
விற்கும் அதிகாரத்தை வங்கிக்கு கொடுத்தது யார்?

வேலையில்லா திண்டாட்டம் பெருகி இருக்கும் இந்திய சூழலில் இந்தியாவின்
மிகப்பெரிய வங்கி எடுத்திருக்கும் இந்த முடிவு , இந்திய இளைஞர்களின்
எதிர்காலத்தைப் பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் தாந்தோன்றித்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து வங்கியில் பணி புரிபவர்களுக்கோ
வங்கி யூனியனுக்கோ எதுவும் தெரியவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.


பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிபவர்களை விட ரிலையன்ஸில் பணிபுரிபவர்கள் மிகச் சிறந்த மக்கள் சேவையைக் கொடுப்பார்கள்
என்று சொன்னால், இது அரசின் நிர்வாகத் திறமை இன்மையைக் காட்டுகிறதே தவிர இது ஒரு தீர்வல்ல.  ஆடத்தெரியாதவன் தெருக்கோணல் என்று சொன்னானாம்! இதே புத்தி நாளைக்கு வருமான வரித்துறை முதல்
காவல்துறை வரைக் கூட போகலாமே! இதே காரணத்தைச் சொல்லி
வருமான வரித்துறையை இன்னொரு அம்பானிக்கும் ரயில்வே பராமரிப்பு மற்றும் சேவையை அம்பானி மச்சான் மாப்பிள்ளைகளுக்கும்  ஒட்டு மொத்தமாக விற்று விடுங்களேன்!

வங்கியின் சேவைகள் விரிவடைந்திருந்தால் அதற்கான பணி இடங்களை நிரப்புவதும் படித்த நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதன் மூலம் பெருக்குவதும் ஒரு அரசின் அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த அடிப்படைகள் சரிந்து நொறுங்குகிறது.

வங்கியின் கிளைகள் இல்லாத இடங்களில் வங்கி சேவைகளைச் செய்ய படித்த இளைஞர்களையும் வங்கிப்பணியில் அனுபவம் கொண்டவர்களையும்
பயன்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தார்கள். அதைப் பற்றி அன்றைய  நிதித்துறை நடுவண அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி
(இன்றைய ஜனாதிபதி) 2011, பட்ஜெட் தொடரில் பேசினார்,
" TO REACH THE BENEFITS OF BANKING SERVICES TO THE 'AAM AADMI ' THE RBI HAD SET UP A HIGH LEVEL COMITTEE ON THE LEAD BANK SCHEME" என்று பெருமையாகப் பேசினாரே, அது என்ன ஆனது? ஆம் ஆத்மிக்கு வங்கிச் சேவை
வேண்டும் என்று எண்ணியவர்கள் அம்பானி வந்தால் வங்கிச் சேவை மேலும் சிறப்படையும் என்று சொல்கிறார்களே, என்ன துணிச்சல் இருக்கிறது இவர்களுக்கு? எல்லோரையும் கேணையன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? 

பேசாமல் இந்த தேர்தல் பரபரப்புக்கு நடுவில் கமுக்கமாக இந்திய ரிசர்வ் வங்கியிலும் மொத்தமாக அவுட் சோர்சிங்கிற்கு விட்(ற்)டு விடுங்கள்,
அதோடு சேர்த்து,

இந்திய தபால் துறை,
உளவுத்துறை,
காவல் துறை
நீதித் துறை
வருமான வரித்துறை
இந்தியன் ரயில்வே
முடிந்தால் இந்திய நதிகளையும்.....
அம்பானி வகையாறாக்களுக்கு
 ஒவ்வொருவருக்கும் பட்டா போட்டு
அவுட் சோர்சிங் என்ற பெயரில் 999 வருடங்களுக்கு மொத்தமாகக்  குத்தகைக்கு விட்டு விடுங்கள். 

அரோகரா...

Friday, May 2, 2014

குண்டு வெடிப்புக்குப் பின்...








சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு..

குண்டு வெடிப்பு செய்திகளைப் பார்த்துக் கொண்டே சாப்பாடு
மேசையில் இப்போதெல்லாம் எங்களால் சாப்பிட முடிவதில்லை.
ஏனேனில் மும்பையில் வாழும் நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு
வகையில் இதனால் பாதிக்கப்பட்டோம், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அந்தப் பாதிப்பின் அழுதக் கண்ணீரின் சுவடுகளும் இன்னும்
காய்ந்துவிடவில்லை.. தமிழகத்தில் வாழும் உங்கள் அனைவருக்கும்
சொல்ல விரும்பவதெல்லாம்.....


> பலியானவர்களின் ரத்தத்தின் மீது எவரும் அரசியல் நடத்த'
இடம் கொடுத்துவிடாதீர்கள்.

> எந்த ஒரு தனிப்பட்ட இனம், மதம் குறித்தும் பரப்பப்படும்
ஊகங்களும் ஊடகங்களின் பரபரப்பான செய்திகளுக்கும்
இரையாகிவிடாதீர்கள்.

> ரயில் நிலையங்கள் போன்ற பொதுஜன நடமாட்டம் அதிகமிருக்கும்
இடங்களில் இன்னார் நினைத்தால் தடுத்திருக்கலாம் என்றெல்லாம்
வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நம்பாதீர்கள்.

> ஆளும் அரசையோ காவல்துறையையோ கண்டிப்பதாலோ அவர்களின் கவனக்குறைவால் நடந்ததாகவோ பேசுவதைத் தவிர்க்கவும்.
நடைமுறை சாத்தியக்கூறுகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

> பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியுடன், ரத்ததானம், உறவினர்களுக்கு
அறிவித்தல் இத்தியாதி நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதில்
கவனம் செலுத்துங்கள்.

> மொத்தத்தில் எவரும் இம்மாதிரியான களத்தில் நின்று கொண்டு அரசியல் நடத்துவதை அனுமதிக்காதீர்கள். இதை நடத்திக் காட்டினால் தான்
இம்மாதிரியான நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கும் ஆபத்தான
அரசியலை முறியடிக்க முடியும்.