Thursday, February 28, 2019

பூகோள அரசியல்

இன்று வெளியுறவு கொள்கையைத் தீர்மானிப்பதில்
பெரும்பங்கு வகிப்பது பூகோள அரசியல்.
அதாவது நம் அண்டை நாடுகள். நாம் எதை வேண்டுமானாலும்மாற்றிக்கொள்ளலாம். ஆனால் நம் அண்டை நாடுகளைபூகோள வரைப்பட த்தில் மாற்றிக்கொள்ள முடியாது!
இந்த மாற்ற முடியாத யதார்த்த நிலை நம் வெளியுறவு கொள்கையில் அதிமுக்கியத்துவம் பெறுகிறது.

நியாயம், தர்ம ம், அரசியல் அறம், மனித நேயம்,
சகோதரத்துவம், இவை எல்லாம் உன்னதமானவை என்றாலும்
நம் வெளியுறவு கொள்கையில் இவை இரண்டாம் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. சில சமயம் காணாமல் கூட போய்விடுகின்றன.

இரண்டாவது உலக மகாயுத்த த்திற்குப் பின் ஆசிய நாடுகளின்சகோதரத்துவத்தை முன்வைத்த பாரதப்பிரதமர் நேருவின் பஞ்ச சீலா
கொள்கையும் அதன் சிதைவுகளும் நம் அறம் சார்ந்த வெளியுறவுகொள்கைக்கு கிடைத்த அடி. 
(Realities of power politics) அதிகாரப்போட்டி அரசியலின் யதார்த்தம் என்ன என்பதை நேச நாடுகளாக இருந்து எதிரி நாடுகளாக மாறியவர்கள் தான் இந்தியாவுக்கு கற்றுக்கொடுத்தார்கள.

அதன்பின் 1970வாக்கில் இந்தியா அறம் சார்ந்த வெளியுறவு கொள்கையை கைவிட்டு அதே நேரத்தில் முழுக்கவும் தன் சுயநலம் சார்ந்த வெளியுறவு கொள்கைக்குள் வராமல் ஒரு இடைப்பட்ட நிலையில் இருந்தது எனலாம். இக்காலத்தில் இந்தியா கூட்டுச்சேரா கொள்கையைக் கைவிட்டு சோவிய வல்லரசின் நேச நாடாகிவிட்டது. இராணுவம், தொழில்நுட்பம் வளர்ச்சிகளின் சோவியத்தின் உதவி. சோசலிஷ பொருளாதரக் கொள்கை என்ற அரசின் பிரகடனம். தனியார் நிறுவனங்கள் அரசு மயமாக்கப்பட்ட நிலை.
1971ல் பாகிஸ்தானைப் பிரித்து வங்கதேசத்தை உருவாக்கியதில்இந்தியாவின் பங்கு.
1974ல் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனையில் வெற்றி பெற்று இந்தியா
தன்னை அணுஆயுத நாடாக காட்டிய வல்லரசு முகம். 
1991ல் சோவியத் வல்லரசு உடைந்த தை அடுத்து சோஷலிச கொள்கை 
அடிப்படையில் இந்தியாவும் சீனாவும் கை கோர்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் ஆசியாவின் நிலப்பரப்பில் ஒரு வல்லரசு தான் என்ற நிலைப்பாடு.
அது சீனாவா இந்தியா என்ற போட்டி. இந்தியா அமெரிக்காவின் பக்கம்
தலைசாய்க்க வேண்டிய கட்டாயம்.

பிரிவினை நாளிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடுவில்
தொடரும் பனிப்போரும் நிஜப்போர்களும் எல்லைக்கோடுகளின் ஒப்பந்தங்களும்
மீறல்களுமாக தொடரும் பதட்டம்..

இந்திய பாகிஸ்தான் உறவு ஆயுத விற்பனை சந்தையின் ஏஜெண்டுகளுக்குதீனிப்போட்ட து. 
உள் நாட்டு அரசியலில் போரும் போரின் வெற்றிகளும் கொடுக்கும் “இமேஜ்” … அதைக் கட்டமைக்கும் இந்திய மக்களின்
உளவியல்… இதை இரு நாடுகளின் ஆட்சி அதிகார அரசியல் பயன்படுத்திக் கொள்ள
தவறவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

உலக அரங்கில் தீவிரவாத த்திற்கு எதிரான போர்… சூழ்ந்திருக்கிறது உண்மை.
ஆனால் யார் இந்த தீவிரவாதிகளை உருவாக்கினார்கள்?
எந்தப் பொருளாதார அடியாளின் முகமூடி இதைச் செய்கிறது?
இந்தக் கேள்வி பல முடிச்சுகளைக் கொண்ட து.
ஒரு முடிச்சை அவிழ்க்கும் போது அதுவே இன்னும் பல முடிச்சுகளைப்போட்டுவிடும். 
குரூட் ஆயில் ஒப்பந்தம் முதல் பருத்தி ஒப்பந்தம் வரை
அதற்கு அரசு தீர்மானிக்கும் ஏற்றுமதி இறக்குமதி வரி விகிதம்..
இத்தியாதி பல காரணங்கள் இன்றைய சூழலில் எல்லையில்குண்டுவெடிப்புகளுக்கான காரணங்களில் ஒன்றாகிவிடுகின்றன..

இவை அனைத்தையும் தாண்டி.. எந்த அரசு ஆட்சி செய்தாலும்வெளியில் சொல்ல முடியாத காரணங்கள், அரசியல் நெருக்கடிகள்
வெளி நாட்டு அரசியல் என்று வாசிக்கவும் இருக்கின்றன.
எனவே…..
பதட்டமான சூழல் நிலவும் போது எடுத்தேன் கவிழ்த்தேன்
என்று வீர வசனம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை.
(அப்படியான நிறைய முக நூல் பதிவுகளை வாசித்து
இது அவர்களின் புரிதலா அல்லது இம்மாதிரியான
எதிர்வினைகளுக்கே நாம் பழகிவிட்டோமா ..
என்ற அச்சம் வந்த து.)

மேலும் லோக்கல் அரசியல் களத்தை மாம்பழம்,
பம்பரம், உதிர்ந்த இலை, அஸ்தமிக்கும் /ஆஸ்தமிக்காத சூரியன்
என்று நையாண்டி அரசியல் செய்வது போல் அல்ல வெளியுறவு பன்னாட்டு அரசியல் தளமும் களமும். 
இந்தியா பாகிஸ்தானுக்கிடையே யுத்தம் வரக்கூடாது என்றுகராச்சியிலிருந்து பத்திரிகையாளர்களின் குரல் மும்பைப்பத்திரிகையாளர்களின் குரலுடன் சேர்ந்து ஒலித்த து

பாகிஸ்தானில் நிலையான ஆட்சி இருந்தால் தான் இந்தியாவின்எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் நல்லது என்பதையும் 
பாகிஸ்தான் என்ற தேசம் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும்
நடுவில் இருக்கும் பூகோள அமைப்பை இந்திய அரசு பல்வேறுகோணங்களில் அணுகும் நிலையில் இருக்கிறது...
இப்படி பல கோணங்களில் நாம் அணுக வேண்டியதிருக்கிறது.

இராணுவ இரகசியங்கள் எப்போதுமே
‘இராணுவ இரகசியங்கள் தான்.
அவை ரகசியமாகவே இருக்கட்டும், இருக்க வேண்டும்.
எந்த ஒரு கட்சியும் தங்கள் லோக்கல் அரசியலுக்கு/ஓட்டு அரசியலுக்கு
நம் இராணுவ வீர்ர்களின் தியாகத்தை விலையாக்கினால்
அதை தடுப்பதிலும் அதற்கு எதிராக குரல் கொடுப்பதிலும்
மட்டுமே நம் கவனம் இருப்பது இத்தருணத்தில்  நல்லது.




Monday, February 25, 2019

பரியேறும் பெருமாளும் சில வழக்குகளும்


பரியேறும் பெருமாளை நமக்குத் திரையில் கொண்டுவந்த மாரிசெல்வராஜ் அவர்கள் நன்றாகவே பேசுகிறார். அந்தப் பேச்சின் ஊடாக இன்னும் சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர் தன்னை ஒரு கலைஞன் என்று பிரகடனப்படுத்திக் கொள்வதில் எவருக்கும் வருத்தமில்லை. ஆனால் அக்கலைகளின் ஊடாக அவர் முன்வைக்கும் கருத்துகளுக்கும் அக்கலைஞன் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் தவறு என்ன?
பரியேறும் பெருமாள் ஏன் திருப்பி அடிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் நிறைய யோசிக்க வைத்தது.
“ என் பெற்றோர்கள் என்னை அப்படி வளர்க்கவில்லை. திருப்பி அடிக்கச் சொல்லவில்லை. ஜெயித்துக் காட்டு என்றார்கள்."
"சாதி இந்து என் நண்பன். அவனுடன் நான் எப்படிப் பேசுவது? இதுதான் என் படம்…”
"வெற்றி என்பது திருப்பி அடிப்பதல்ல; என் கருத்தை என் பார்வையை எதிராளிக்கு கொண்டு செல்வது தான் வெற்றி..."
"பொதுவாக சினிமாவில் கதாநாயகன் தனியாளாக நின்று எதிர்ப்பவனை திருப்பி அடிக்கும் காட்சிகளையே பார்த்தவர்களின் உளவியல் தான் இக்கேள்விகளை எழுப்புகிறது."
"பரியேறும் பெருமாள் ஒரு கலைவடிவம்… நான் ஒரு சினிமா கலைஞன்"
இப்படியாக மாரி செல்வராஜ் தன் பொன்மொழிகளைச் சொன்னபோது கேட்க சுகமாகவும் இதமாகவும் இருந்தது, கைதட்டினோம்.
படம் வெளிவந்து மும்பையில் கொடுத்தது போல பாராட்டு பத்திரம்/ விருது பத்திரம் 150 க்கும் மேலாக வாங்கி விட்ட தாக அவர் சொன்னபோதும் கைதட்டினோம். ஆனால் அப்படிக் கொடுத்த அந்த 150 அமைப்புகள் யார்? யார்? என்பது அவருக்குத் தெரியும். அதை அவர் நன்றாகவே புரிந்து கொண்டுமிருப்பார் என்பதும் புரிந்தது.
காரணம் அவர் தன் உரையாடலின் ஒரிட த்தில் நம் சமூகம் மூன்று வகையான மக்களைக் கொண்டிருக்கிறது.
1) சாதி வெறி பிடித்தவன் (சாதி இந்து என்று நான் புரிந்து கொண்டேன்)
2) சாதியால் ஒடுக்கப்படுபவன்
3) இந்த இரண்டு பேரையும் பார்த்துக் கொண்டு நமக்கென்ன என்று கடந்து செல்பவன்.
இந்த மூன்றாவது வகை மனிதர்கள் தான் ஆபத்தானவர்கள் என்று சொன்னார் மாரி.
பரியேறும் பெருமாள் இந்த மூன்றாம் வகை மனிதர்களிடம் என்ன மாதிரியான சின்ன அசைவலையை உருவாக்கி இருக்கிறது!
சரிதானே… இந்த த் தம்பி சொல்வது சரிதானே! என்ற எண்ணத்தைக் கட்டமைத்து இருக்கிறது என்று மாரி சொல்ல வருகிறார். இதைத்தான் அவர் தன் சாதி இந்து நண்பனுடன் நான் நட த்தும் உரையாடல் என்று முன்வைப்பதாகப் புரிந்து கொண்டேன்.
இதற்காக மாரி கொடுத்திருக்கும் விலை என்ன?
சட்டக்கல்லூரி களம், சாதி மோதல்கள், ஒடுக்கப்பட்டவன் மீது மூத்திரம் அடிக்கும் சாதி வெறி, அண்மையில் கவனிப்புக்குள்ளான ஆணவக் கொலைகள், அதன் பின்னணி, அதற்கு எழுந்த குரல்கள், கறுப்பி, நீல நிறம்… இப்படியாக தன் கலைவடிவம் கவனிப்புக்குள்ளாகும் ஒர் அரசியலை மாரி வைக்கிறார். ஆனால் அதே அரசியல் சார்ந்தக் கேள்விகள் வரும் போது கலை என்ற போர்வைக்குள் தன்னைப் பத்திரப்படுத்திக் கொள்கிறார்.. இது சினிமா உலகில் இருத்தலுக்கான போராட்டம் என்பதையாவது அவர் ஒத்துக் கொண்டிருக்கலாம்!
ஒரு பார்வையாளன் கதையின் கதா நாயகன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்று காட்டும்போது அதே சமூகத்தைச் சார்ந்தவன் அக்கதையின் ஊடாக மாரி வைக்கும் சில வசனங்களை காட்சிகளை எப்படி உள்வாங்கி இருப்பான் என்ற புரிதல் மாரிக்கு இருக்கிறது. ஆனால் அவன் அவரை நோக்கி வைக்கும் சில தன் உணர்ச்சியான கேள்விகள் மட்டும் அவரைத் தொந்தரவு செய்கின்றன.
நான் வைத்தக் கேள்வி…
கதையில் சாதி இந்து கதாநாயகியின் அப்பா பரியேறும் பெருமாளிடம் சொல்லும் ஒரு வசனம்..
“ நல்லா படிங்க தம்பி.. எதிர்காலத்தில எது வேணும்னா மாறலாம் இல்லியா..”
இந்த அறிவுரை… அப்படியே பாபாசாகிப் அம்பேத்கரின் வாசகத்துடன் சேர்ந்து பார்வையாளனுக்குள் போகிறது. என்னவோ ஒடுக்கப்பட்டவன் எல்லாம் படிச்சிட்டா சாதி மாறிடும் என்ற சாதி இந்துவின் அறிவுரை… அவன் சாதி என்ற கட்டமைப்புக்கு வைக்கும் அறிவுரை மாதிரி ஒரு தோற்றம்.. அதுதான் படிச்சா மாறிடும் என்று சொல்லும் புத்திசாலித்தனம்…
இன்னும் சிலர் சொல்வார்கள்… இப்போல்லாம் யாரு சாதிப் பார்க்கா?
நீங்க ஏன் மேடம் சாதிக்கொடுமை தலித் என்றெல்லாம் பேசவேண்டும்?
என்னிக்காவது நாங்க உங்கள தலித்துனு நினைச்சிருக்குமோ இல்ல அப்படி நட த்தி இருக்கோமா…’
இந்த டயலாக் தான் சாதி இந்துவின் இந்த அறிவுரைக்குள் ஒளிந்திருக்கிறது. அம்பேத்கார் சொன்னார்... “கல்வி தான் ஒடுக்கப்பட்டவனுக்கான ஒரே ஆயுதம்" என்று. கல்வி தான் அவனை முன்னேற்றும், கல்வி தான் அவனுக்கு பொருளாதர வலிமையைக் கொடுத்து வயிற்றுப் பாட்டுக்காக அடிமையாக இருக்கும் நிலையை மாற்றும். இக்கல்வி தான் சாதிக்கொடுமைகளுக்கு எதிராக போராடும் மனவலிமையை, உடல் வலிமையை, அதிகார வலிமையை, அரசியல் வலிமையைக் கொடுக்கும். இவ்வளவும் அம்பேத்கர் சொன்ன "நீ படி" என்பதற்குப் பின்னாலிருக்கும் அரசியல்.
இதே அர்த்தம் தொனிக்கும் வசனத்தை ஒரு சாதி இந்து, ஒடுக்கப்பட்டவனைப் பார்த்து சொல்லும் போது அதற்கான அர்த்தங்கள் என்ன? இதைப் பரியேறும் பெருமாள் தான் புரிந்து கொள்ள வேண்டும்…
என்னவோ அம்பேத்கர் மாதிரி படிச்சிட்டா… சாதி இந்து அப்பா தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்திடுவார்னு ஒரு தட்டையான சமன்பாட்டுக்கு வந்திடக்கூடாது.
ஒடுக்கப்பட்டவனைப் பார்த்து இதைச் சொல்கிறவர் யார் என்பதைப் பொருத்து அதற்கான பொருள் தானே வந்தடைகிறது ! இச்சமூகம் நாள் தோறும் நட த்திக் கொண்டிருக்கும் இந்த அறிவுரைகள் சாதி என்ற கட்டுமானத்தின் மீது நாய் தன் காலைத் தூக்கிக் கொண்டு அடிக்கும் மூத்திரம் மாதிரி தான்!
இங்கே நம் பரியேறும் பெருமாளுக்கு இருக்கும் பிரச்சனை கல்வியோ, தகுதியோ அல்ல; அதையும் தாண்டிய வேறு ஒன்று. அதை நேர்கொள்ள முடியாமல் வைக்கும் அறிவுரைகள் யாரைத் திருப்திபடுத்த..?
இன்னொரு கேள்வி… இக்கதையில் மிகவும் சிறப்பான ஒருவரின் நடிப்பு, பரியேறும்பெருமாளின் அப்பா. அந்த நாட்டுப்புற கூத்துக்கலைஞன். இப்பட த்தில் அவன் பெண் வேடமிட்டு ஆடும் கலைஞனாக காட்டப்பட்டு, அதனால் ஏற்படும் சமூகத்தின் இழிந்த பார்வையை எதிர்கொள்ளும் கலைஞன். நாட்டுப்புறக்கூத்து கலைஞன் பாத்திரங்கள் எண்ணற்றவை இருக்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் காட்டுவது ஏன்? இப்படியான ஒரு கதாபாத்திரம் கூடாது என்றோ அல்லது இழிவு என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் இக்கதாபாத்திரம் ஏன் இப்படி காட்டப்படுகிறது?
இக்கதையுடன் சேர்த்துப் பார்க்காமல் தனியாகப் பார்க்கும் போது மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இக்கதாபாத்திரம், இக்கதைக்கு அதுவும் ஒடுக்கப்பட்ட கதாநாயகனின் அப்பா என்ற பாத்திரத்திற்கு என்ன பின்னணியைக் கொடுக்கிறது? அதே நேரத்தில் சாதி இந்து கதாநாயகியின் அப்பாவின் தோற்றம் எப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது? இந்த இரண்டு காட்சிகளுக்கும் நடுவில் பெரிய பள்ளதாக்கு மாதிரி ஏற்றத்தாழ்வுகளை மாரி ஏன் காட்ட வேண்டும்? இன்றைய சாதி சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கும் உளவியல் தானே இதெல்லாம்..! தலித் என்றால் இப்படித்தான் இருப்பான்.. தலித் வீட்டில் நம்ம பொண்ணுக போய் குடித்தனம் நட த்த முடியுமா? என்ற பொதுப்புத்திக்கு இக்காட்சிகளும் தீனி போடுகின்றன.
உதிரியாக வரும் கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் அவர்களின் வசனங்கள் தான் பரியேறும் பெருமாளைத் தூக்கி நிறுத்தி பரிமேல் சவாரி செய்ய வைத்திருக்கின்றன. சாதி இந்துவுடன் மட்டுமல்ல சாதி கிறித்தவன், சாதி இசுலாமியர் எல்லோரும் நமக்கு நண்பர்கள் தான். அனைவருடனும் நாம் உரையாடுவோம். உரையாடத்தான் வேண்டும். ரொம்பவும் கவனமாக.. நிதானமாக உரையாடத்தான் வேண்டும். உரையாடலில் தெறிக்கும் நம் ஒவ்வொரு சொல்லிலும் ஒட்டிக் கொண்டிருக்கிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அச்சொற்கள் கடந்து வந்த பாதையும்….
கறுப்பி என்பது ஆன்மா மட்டுமல்ல
கறுப்பி என்பது கலை மட்டுமல்ல
கறுப்பி என்பது அழகியல் குறியீடு மட்டுமல்ல
கறுப்பி என்பது ஒரு வரலாறு.
பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்துகள்.
மாரி செல்வராஜ் அவர்களைச் சந்திக்கவும் உரையாடல் நட த்தவும் களம் அமைத்துக் கொடுத்த மும்பை விழித்தெழு இயக்கம் தோழர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
( நன்றி. கீற்று இணையதளம்)

Friday, February 22, 2019

ஆளுமைகள் இல்லாத அரசியல் களம்

அப்பா இல்லாமல் தேர்தலைச் சந்திக்கும் வாரிசு
அம்மா இல்லாமல் தேர்தலைச் சந்திக்கும்  பக்தன்..

மொத்தத்தில் ஆளுமைகள் இல்லாமல் தேர்தலைச்
சந்திக்க இருக்கும் வாக்காளர்கள்..
எனவே இந்த தேர்தலில் மக்கள் தங்கள் வேட்பாளர்களை 
எப்படி தேர்வு செய்வார்கள்..?

கூடுகின்ற கூட்டத்தை வைத்து தேர்தல் கணிப்புகளைச்
 சொல்லிவிட முடியாது.
கூட்டணிகளின் வாக்குவிகிதத்தை வைத்தும்
 தேர்தல் கணக்கை கணித்துவிட முடியாது.
பெரிசா கொள்கை எல்லாம் பார்த்து மக்கள் 
வாக்களிப்பார்கள் என்று இன்னும் யாராவது 
மார்த்தட்டி சொல்லிக்கொள்ள முடியாது... காரணம்
கொள்கை மண்ணாங்க்கட்டி வெங்காயம் எல்லாம்
உரித்துப் பார்த்துவிட்ட மக்கள் தான் .
..

ஒவ்வொரு தொகுதியிலும் தரமான மனிதர்களை..

ஆம்... சமூகத்தளத்தில் 'இவரு நல்ல மனுசன் பா.." 
என்று பெயர் எடுத்திருக்கும் வேட்பாளரை
 மக்கள் தேர்ந்தெடுக்கும் மன நிலையில் இருப்பார்கள்..
அதை அறிந்து வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டும்..
. அப்படி எல்லாம் நீங்க சொல்லுகிற மாதிரி 
நல்ல மனுஷன் களெல்லாம் எந்தக் கட்சியில்
இருக்காங்கனு கேட்டா என்னிடம் அதற்குப் 
பதிலில்லை தான். 
இதை விட்டுட்டு எவன் தொகுதியில் அதிகம் பணம்
செலவழிப்பான், யாரு குட்டிச்சாக்குப் போட்டு 
பண்ணத்தைக் கொண்டு கட்சிக்கு கொடுப்பாங்கனு
திட்டம் போட்டா... அம்போ தான்...
யோசிக்கிற நேரத்தில... சும்மா .. ஒவ்வொருவரையா
மாறி மாறி சந்திச்சிக்கிட்டு..

சரவணா... இன்னும் எவ்வளவு நாட்களுக்கு 

இப்படியே பயந்துக்கிட்டு இருக்க முடியும் சொல்லு?!
எனக்குத் தனியா பயம்மா இருக்கு மச்சி..நீயும் எங்க்கூட
 பாத்ரூம் போக வர்றியானு .. தொடை நடுங்கிக் கேட்கிறதைப் பார்த்து .. வாக்களர்களும் பயந்துவிடக் கூடாது பாரு..... \

என்னவோ போ.. சரவணா..

உன் பயத்தைப் போக்க வாக்களர்கள் தான்
எலுமிச்சைப் பழத்தோட வரணும்னு
அடம் பிடிக்காதே.

Thursday, February 21, 2019

கூண்டுக்குள் சிறுத்தை


சிறுத்தைச் சீறுவது
சிறுத்தைக்கு அழகு.
சிறுத்தையைப் பலர் ரசிப்பதும்
சிறுத்தையைச் சிலர் எதிர்ப்பதும்
சிறுத்தையின் சீற்றத்திற்காகவே.
சிறுத்தையை அடக்குவதில் தோற்றுப்போனவர்கள்
சிறுத்தையைப் பிடிக்க  
விதம் விதமாக கூண்டுகளைச் செய்தார்கள்.
தேர்தல் கூண்டு, கூட்டணி கூண்டு…
 எங்குப்பார்த்தாலும் கூண்டுகளின் கூடாரம்.
கூண்டுகளை எட்டிப்பார்த்த சிறுத்தை
கூண்டுக்குள் இருந்துகொண்டு சீறியது.
கோமாளிகள் கையில் கம்புடன்
சிறுத்தையின் சீற்றத்தைக் காட்டி
சர்க்கஸ் நட த்தினார்கள்.
காசு கொடுத்து பார்க்க வந்தவர்கள்
ஆராவாரமாக கை தட்டினார்கள்.
சிறுத்தைக்கு உற்சாகம் … பீறிட்ட து.
கூண்டுக்குள் சீறுவதும் ஏறுவதுமாக
வித்தைகள் காட்ட ஆரம்பித்த து.
சிறுத்தையைக் காதலித்து 
பித்துப்பிடித்த வனமோகினி
 காட்டுத்தீயில் காதலை எரித்து
தன்னையும் எரித்துக்கொண்டாள்.

Monday, February 18, 2019

கமலின் கிழியாத சட்டையும் ஸ்டாலின் கிழிந்தச் சட்டையும்



Image result for கமலஹாசன் ஸ்டாலின்
கமலஹாசன் தன் சட்டையைக்
 கிழித்துக்கொள்ளாதது
அது மனிதக்காதல் அல்ல…
திமுக ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக்
கொண்ட தும் மனிதக்காதல் அல்ல.
அதையும் தாண்டி புனிதமானது..
அட டா…
இதில் யார் கதா நாயகன் ?
யார் வில்லன்?

இந்தியன் 2 ஆரம்பித்துவிட்ட தா..!
க்ளைமாக்ஸ் சீனில் கமல் சொன்ன
சட்டைக்கிழிப்பு வசனம் முடிந்தவுடன்
அடுத்தக் காட்சியில் ஸ்டாலின் வருகிறார்.
கமல் சொன்னதைப் பற்றி கேட்கிறார்கள்..
“நான் இப்போது அரசியல் பேசிக்கொண்டு
இருக்கிறேன்” என்று பஞ்ச்ச் டயலாக்.
அப்படியே உடன்பிறப்புகளின் விசில் சத்தம்
காதைப் பிளக்கிறது..
“அய்யா… நீங்க அப்படியே உங்க அப்பா
மாதிரி பதில் சொல்லிட்டீகளே “என்று
வயதானப் பாட்டி வந்து ஒரு பாட்டுப்
பாடுகிறார்.
இந்தியன் 2 வைப் பார்க்கும் ரசிகர்களுக்கு
குழப்பமா இருக்கு…

திடீர்னு கதையில் திருப்பம்.

ஒரு ப்ளாஷ்பேக் காட்சி ஓடுகிறது.
(பிப்ரவரி 9) டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில்
காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் கூட்டம் 
நடைபெறும் காட்சியைக் காட்டுகிறார்கள்!
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய 
கே.எஸ்.அழகிரி, ‘கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு
 வரவேண்டும்.அவர் மதச்சார்பற்ற கொள்கை உடையவர். 
அவர் தனித்துப் போட்டியிடுவதால், 
மதச்சார்பற்ற வாக்குகள்தான் சிதறும்னு
சொல்லிட்டு போறாரு. இவரோட ரோல் தமிழ் நாட்டின்
 காங்கிரசுக் கட்சி தலைவர்…
யப்பா... அப்புறமா.. ..
இன்னும் டிடிவி தினகரன் சீன்ல வரல.
வந்தப்பிறகு தான் யாரு ஹீரோ என்று தெரியும்..
அதுவரை.. டைரக்டருக்கே தெரியாதாம்.!

என்னவோ .. இந்தியன் 2 திரையில் வருவதற்கு
 முன்பே இப்படியாக டயலாக் எல்லாம் ரிலீஸ் ஆகி …
 ஒரே பரபரப்பா இருக்கு… 
ஹேய்… டிவிக்காரங்களுக்கு கொண்டாட்டம் தான்.

நமக்கும் கமல் பேசறது காமெடியா
 பஞ்ச்ச் டயலாக்கா னு
புரியமாட்டேங்குது!
ஏன்னா.. தமிழ் நாட்டில் அவர் நடித்த 
இன்னொரு திரைப்படம் அதிகமா 
யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
REPUBLIC TV யில் போட்டாங்க.
அதில உலக நாயகன் ரோல் ரொம்ப வீக்கா இருந்திச்சி.
ஸ்ம்ருதி இரானி தான் போடு போடுனு 
போட்டுத்தள்ளினாங்க.
இப்போ… கமல்… யாரு..
அவரோட ரோல் என்ன?
உங்க யாருக்காவது எதாவது புரியுதா..
புரிந்தா சொல்லிடுங்க ப்ளீஸ்…
... சட்டையைக் கிழித்து ஓராண்டு நிறைவு பெற்றதை
இப்படிக் கொண்டாடுகிறார்கள்
 என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.

Wednesday, February 13, 2019

நொண்டிச்சிந்து காதலன்





உன்னைப் பலர் காதலித்திருக்கலாம்
நீயும் சிலரைக் காதலித்தாய்.
உன் கண்ணம்மாவுக்காக
உருகி உருகி கவிதைகள் எழுதினாய்
பலரைப் பைத்தியமாக்கினாய்
தாசனுமாக்கினாய்.
ஆனாலும் என்னை மட்டும் தான்
எவரும் அறியாமல்  காதலித்தாய்..
உன்  காதலின்  வாசனையை
அந்தியில் மலரும் பூக்களிடம்
ரகசியமாக மறைத்து வைத்திருந்தாய்
உன் நடை உடை மீசை முண்டாசு..
அட ஏதோ ஒன்று
இப்போதும் என்னைத் தொந்தரவு செய்கிறது.
என்னைக் காதலித்தப் பலரும்
நான் காதலித்த சிலரும்
மழைக்காலத்தின் ஈரமாய்
வருகிறார்கள் .. நனைகிறார்கள்
போய்விடுகிறார்கள்..
நீ மட்டும் ஏன்
வெயிலைப் போல  நிரந்தரமாய்
என் காதல் பூமியின்
நிழலாகத் தொடர்கிறாய்?
பாடிக் கலந்திட துடிக்கிறாய்
தவம் பண்ணியது இல்லையடி
என்று அழைக்கிறாய்
என் செய்வேன்..?
எமகாதகா.. என் காதலா..
உன் முண்டாசு அவிழட்டும்.
என் முந்தாணியாய் விரியட்டும்..
வா..
காணி  நிலம் , முழு நிலவு
பத்தினிப் பெண் கேட்ட உன் காதலை
என்னைச் சந்திக்க வரும்போது
எடுத்து வராதே.
மலைத்தேனும் திணைமாவும்
உனக்காக காத்திருக்கிறது.
இதுவரை நீ அறியாத சுவை
உன் கவிதைக்குள் அடங்காத அருவி
என் காதல் வனம்..
வாபாரதி.. வா
நொண்டி சிந்து பாடுவோம். வா.

Monday, February 11, 2019

கறுப்பி நான்..

நான் கறுப்பு பெண்
இந்தப் ‘பெண்” - நான் பெண் என்று சொல்வதிலிருந்து
வித்தியாசமானது.
நான் “கறுப்பு” என்று சொல்வதிலிருந்தும்
வித்தியாசமானது.
‘கறுப்பி’ என்று சொன்னால்
என் சருமத்தின் நிறத்தைச் சொல்வதல்ல அது.
நான் கறுப்பி.
கறுப்பு நான் என்பதால்
அணுகுவதற்கு கடினமானவள் என்பதல்ல.
கறுப்பு நான் என்பதால்
காதுவளையத்தைப் பிடித்து திருக தயாராக வேண்டும் என்பதல்ல.
நான் கறுப்பு என்பதால்
கற்பித்தல் கடினம் என்பதல்ல.
நான் கறுப்பு என்றால் என்ன பொருள்
தெரியுமா?
எல்லாவகையிலும் தனித்துவமானவள்
என்னால் முடியாத து எதுவுமில்லை
நீங்கள் அறியாத தையும் அறிந்து கொள்ளும்
தகுதிப்படைத்தவள்.
நான் தனித்துவமானவள்.
நான் கறுப்பு பெண்.
‘கறுப்பு” என்ற சொல்லை அழுத்தமாகச் சொல்லும்போது
அது வெறும் இனக்குறியீடு மட்டுமல்ல.
அது நான் வாழும் எங்கள் வாழ்க்கையின் அர்த்தம்.
எதைச் செய்து பழக வேண்டும்
எதைச் செய்யக்கூடாது
என்ற எதிர்ப்பார்ப்புகளில்
கறுப்பு என்றால் என்னவென்று
இந்த உலகத்திற்கு பாடம் புகட்ட
நாங்கள் தயாராகிறோம்.
எப்படி என்றால்…
சில கடைவீதிகளில் நீங்கள்
ஓரக்கண்ணால் பார்க்கும் பார்வை,
மின் தூக்கியில் அவளைக் கண்டவுடன்
உங்கள் பணப்பையை இறுகப்பிடித்துக் கொள்ளும் தருணம்..
இலக்கணப்பிழையின்றி பேசினால்
‘வெள்ளையர்களைப் போல நடிப்பதாக’
உங்கள் விமர்சனம்.
மிடுக்கான உடையில் அறைக்குள் நுழைந்தவுடன்
ஆச்சரியமாகப் பார்க்கும் உங்கள் முகங்கள்
மூன்றாம் வகுப்பு சரித்திரப்பாட த்தில்
‘அடிமைகள்’ அத்தியாயம் வந்தவுடன்
திரும்பிப் பார்க்கும் உங்கள் பார்வை…
கறுப்பு பெண் நான்.
நான் கறுப்பி என்பதால்
உங்கள் தகுதிப்படி நிலையில் என்னைப் பொருத்திக்கொள்ள
கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது.
பரந்த உலகத்தில் எனக்கான இட த்தைக்
கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது.
இனிப்பு க் குச்சி மீது பரவிய
ஒரே ஒரு கறுப்பு சாக்லெட்டாய் நான்.
இந்தக் கறுப்பு இனத்தின் ஒரே அடையாளம்
நான் மட்டுமா?
புரிந்து கொள்ள முடியாத இந்தக் குழப்பத்திலிருந்து
வெளியில் வந்துவிட்டேன்.
சிலரால் இன்னும் வரமுடியவில்லை.
எனக்கு கிடைத்த ஆதரவு
அவர்களுக்கு இல்லாமல் போய்விட்ட தே!
எல்லோரும் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும்
கறுப்பு ஆளுமையாய் இருப்பது
சாத்தியமில்லை தான்.
எல்லோருக்கும் வரப்போகும் ஆபத்துகளிலிருந்து
பாதுகாக்கும் பெற்றோரின் கரங்கள் கிடைப்பதில்லை.
வளர்ச்சியைச் செதுக்கும் வளர்ப்பு
வளரும் பருவத்தில்
வாய்ப்பதில்லை எல்லோருக்கும்.
வாய்த்துவிடுவதில்லை எல்லோருக்கும்
என்னைப் போல வாய்ப்புகளும்
நான் கறுப்பு பெண்.
ஆம்…
கடைவீதியிலோ மால்களிலோ
கேட்கிறது அவர்களின் குரல்.
எனக்குப் புரிகிறது
என்னிடம் இருக்கும் எதோ ஒன்றை
அவர்கள் விரும்புகிறார்கள் என்பது.
அது என்னிடம் இருக்கிறது என்பதால்
அதை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள
வேண்டுமா என்ன?
எனக்கு வயது 16… என்பதும்
இன்னும் இந்த வயதுக்கான அது நடக்கவில்லை
என்பதும்
அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
எனக்குத் தெரியும்
நான் மற்றவர்களைப் போல இல்லை.
ஆனால் எனக்குப் புரியவில்லை
இதற்காக ஏன் வருத்தப்படுகிறேன் என்று.
நான் கறுப்பு பெண்..
ஆதலால்
கடந்த காலத்தை வெளியிலிருந்து பார்க்க
கடினமாக இருக்கிறது.
ஆனால் சற்று யோசித்துப் பார்த்தால்
குழப்பம் தெளிகிறது.
“இந்த உலகம் என் வரவுக்காக காத்திருக்கிறது”
பணம் சம்பாதிக்க கடவுள் என்ன கொடுத்திருக்கிறார்?
நான் வேலிகளைத் தாண்டுவேனா?
உலக மேன்மைக்காக அமையுமா என் வாழ்க்கை?
இப்படியாக நான் என்னவாகப் போகிறேன்
என்று அறிந்துகொள்ள
இந்த உலகமே ஆர்வமாக இருக்கிறது.
நான் கறுப்பு பெண்.
என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு
நானே வழிகாட்டி.
மாதா பிதாவுக்கு
அவர்களின் இலட்சிய வடிவம்.
வயதுக்கு மீறிய அறிவானவள் நான்.
இருண்ட அறையில் வெளிச்சம் நான்
உங்கள் விழிகளின் மகிழ்ச்சி நான்.
உள்ளத்தில் எரியும் அணையா நெருப்பு நான்.
என் குடும்பத்தின் விடுதலை கீதம் நான்.
எனக்கு முன் வாழ்ந்தவர்களின் உழைப்பு நான்.
கடினமான காலமும் நான்.
மகிழ்ச்சியான நேரமும் நான்.
தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் நான்.
ஏனேனில்…
நான் வலிமையானவள்
சுதந்திரமானவள்
கறுப்பி.
நான்…
இதுதான் நான்.
இந்தக் கவிதையின் நான்..
என்னைப் பற்றியது தான்.
( நன்றி.. POWER POETRY.ORG.
 .. IAM A BLACK GIRL)
இந்த மாதம் - பிப்ரவரி - கறுப்பு இனத்தின் சிறப்பு மாதம்.
அப்பெண்ணின் இனத்தின் கறுப்பு கவிதையை
 மொழியாக்கம் செய்திருக்கிறேன்..அவள் முகம்
 என்னுடன் பயணிக்கும் இருள் சூழந்த
 இரவு நேரம் 12.24... நாளை விடியும் தானே.
. நம்பிக்கையுடன் அவளுடன் நானும் ...

Saturday, February 9, 2019

சுதா மூர்த்தி

சுதா மூர்த்தி
Image result for sudha murthy

இந்தப் பெண் எனக்கு மிகவும் நெருக்கமானவள்.
இன்றுவரை இப்பெண்ணை நான் சந்திக்கவில்லை.
சந்திக்க வேண்டும் என்றெல்லாம் பெரிதாக
எதுவும் முயற்சிக்கவும் இல்லை!
சுதா எழுதியதை எல்லாம் கொண்டாடுகின்றேனா
என்று கேட்டால்… இல்லை என்பது தான் என் பதிலாக
இருக்கும். ஆனால் சுதாவை நான் கவனிக்கிறேன்.
கவனித்துக் கொண்டே இருக்கிறேன்…
பொதுவாக விலை உயர்ந்த ஆடை அணிகலன் கள்
நான் விரும்புவதில்லை.
சுதாவும் அப்படித்தான் என்று அறிந்தப்பின்
சுதாவை ரொம்பவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேனா
தெரியவில்லை!
எனக்குள் சுதாவைக் கண்டேனா என்பதும்
இன்னும் புரியாத புள்ளி தான்.
சுதாவின் வாழ்க்கையில் அந்த ஆரம்பம் 
எனக்குப் பிடித்திருக்கலாம்..
டாடா மோட்டார்ஸ் வேலைக்கான தகுதியில்
 “ஆண்கள் மட்டும்”என்று விளம்பரம் வருகிறது. 
( LADY CANDITATE NEED NOT APPLY )
சுதா அதை வாசிக்கிறார். ஓர் அஞ்சல்
அட்டையில் டாடாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 
டாடாவிடமும் அக்கடிதம் போய் சேர்ந்துவிடுகிறது.. 
டாடா சுதாவை அழைக்கிறார்.
அவருக்கான நேர்காணல்.. 
டாடா மோட்டார்ஸ்சில் சுதா என்ற பெண்ணும்
 நியமிக்கப்படுகிறாள்…
இப்படியாக ஆரம்பிக்கும் சுதாவின் வாழ்க்கையில்
மூர்த்தியுடனான அவர் காதல்…
மூர்த்தி யின் இன்றைய இன்போஷிஸ் 
அன்று புனாவில் தொடங்கப்பட்ட போது
 சுதாவின் உழைப்பு
சுதா…
எனக்கு இப்போது ஆண் பெண் உறவு நிலையில்
பெண்ணின் சமபங்கினை எப்படி கொடுக்க வேண்டும்
 என்று சொல்லாமல் சொல்கிறார்.
அதே சுதா … கண்வன் மனைவி இருவரும் 
ஒரே நிறுவனத்தில் இருப்பதா என்ற நிலையில்
 மூர்த்திக்காக மூர்த்தியின் கனவுலக
இன்போஷிசை விட்டு வெளியில் வருகிறார்.
இன்போஷிஸ் மூர்த்திக்கு மட்டும் தான் கனவா?
சுதாவுக்கு…?
இதை அறிய வரும் போது துடித்துப் போகிறேன் நான்..
பெண்களுக்கு சுதாவின் இந்த முடிவு
ஒரு தவறான முன் உதாரணமாகிவிட்ட்தே
என்று கவலைப்பட்டிருக்கிறேன்…
..
ஆனால்.. சுதா தன்னை இழந்துவிடவில்லை.

“மூர்த்தியின் விசுவரூபத்திற்கு முன்னால்
 நான் தொலைந்துப் போய்விட்டேனா?
ந் நோ. நான் மூர்த்தியின் மனைவியாக இருக்கலாம்,
 என் குழந்தைகளுக்குத் தாயாக இருக்கலாம், 
இன்போஷிஸ் பவுண்டேசன் டிரஸ்டியாக இருக்கலாம்.
ஆனால் நான் சுதா..
எல்லா பெண்களையும் போலவே 
எனக்கும் பல கடமைகள் பல முகங்கள்..
அதனாலேயே நான் என் சுயத்தை
என் அடையாளத்தை
இழந்துவிட்டேன் என்று அர்த்தமல்ல…
சரியான தேர்வுகளைச் சரியான
நேரத்த்தில் செய்யும் போது நாம்
 நம் சுதந்திரத்தை இழப்பதில்லை
(OUR CHOICE DICTATED BY US, NOT BY THE WORLD)
இன்று நம் பெண்கள் மிகவும் அதிகமாக
சுதாமூர்த்தி போன்றவர்கள்
ஆரம்பித்து வைத்த ஐடி நிறுவன ங்களில்
 வேலைப் பார்க்கிறார்கள்.
ஆனால் அவர்களில் யாருமே
ஏன் சுதாவைப் போல இல்லை!..
சுதா ஒன்றும் கடந்த காலமல்ல.
சுதாமூர்த்தி கற்பனையும் அல்ல.
இப்போதும் எனக்கு சுதா என்ற பெண்ணை
ரொம்ப ரொம்ப பிடிக்கும்…
I LOVE YOU SUDHA.

SUI DHAGA - HINDI MOVIE

காதறுந்த ஊசி... காணாமல் போன நூல்..
SUI DHAGA .. திரைப்படத்தை முன்வைத்து..
. வருண் தவானும் அனுஷ்க சர்மாவும் நடித்திருக்கிறார்கள்.
இயல்பான அவர்களின் நடிப்பு சில காட்சிகளில் ஒரு கவிதையைப்போல விரிகிறது. எங்கே போனார்கள் நம் தையல்கார ர்கள்?
தையல் என்பது வெறும் தொழில் அல்ல.
தையல் என்பது கலை நுணுக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு தொழிலாக இந்தியாவில் இருந்த து. அதை எல்லாம் இன்று கார்ப்பரேட் முதலைகள்
விழுங்கிவிட்டன. ஆடைகளைத் தயாரிக்கும் எந்திரங்களாக தையல்கார ர்களை
மாற்றிவிட்டோம்.
தையல்கார ர்களை விலைக்கு வாங்கி இன்று ஆடைகளின் உலகத்தில்
ஒரு பெரும் புரட்சி நடந்துவிட்ட தான
ஒரு மாயையில் இருக்கிறோம்..
(SMALL, MEDIUM, LARGE, EXTRA LARGE , EXTRA EXTRA LARGE, TRIPLE EXTRA LARGE,
FREE SIZE…) S , M, L, XL, XXL, XXXl இப்படியாக அவர்கள் தயாரிக்கும் ஆடைகளின்
அளவுக்குள் நம் உடலைத் திணிக்கப் பெரும்பாடு
படுகிறோம். ஆடைகளை யாருக்குத் தயாரிக்கிறோம், அவர் உடல்
அளவு என்ன எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை
தையல்கார ர்களுக்கு. யாரோ ஒருவர்
கட் செய்வார்… ஒரே அளவில்
ஆயிரக்கணக்கான ஆடைகளை.
சில நூறுபேர்கள் வரிசையாக
உட்கார்ந்து மெசினின் தைப்பார்கள்…
அந்த ஆடைகள் உள் நாட்டிலும்
வெளி நாட்டிலும் பெரிய கம்பேனிகளின் முத்திரையுடன் சந்தையில் விறபனைக்கு வரும்… இங்கே தையல் என்ற
கலைத்தொழில் வெறும் உடல் உழைப்பு
சார்ந்த இன்னொரு தொழிலாகி இருக்கிறது.
தையல் காரனின் தொழில் நுட்பமும்
டிசைனும் புதிது புதிதாக
படைக்கும் படைப்பாற்றாலும்
அவனுக்குத் தெரியாமல்
களவாடப்பட்டிருக்கின்றன.
FAB INDIA டிசைன் ஆடைகளைப் பார்க்கும் போதெல்லாம்
எந்த ஆதிவாசிகளின் ஆடையிலிருந்து இந்த டிசைனைத் திருடி இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
அதாவது ஒரு டிசைனை உருவாக்கியவனிடன் அதை அடிமாட்டுக்கு விலைக்கு வாங்கியோ/
திருடியோ உலகப் பணக்கார ர்களாகி விடுகிறார்கள்.
இம்மாதிரியான கனமான செய்திகளை ஒரு திரைப்பட த்தில்
காட்டியதில் இத்திரைப்படம் தனித்து நிற்கிறது.
பெண்களின் பளவுஸ் கொஞ்சம் லூசா இருந்தால் கூட
அவர்களின் ஆடை அலங்காரத்தில் குறையாகிவிடும்.
அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் என்னைப் போல
லூசா ப்ளவுஸ் போட்டுக்கொண்டு அலைபவர்களை
இன்றும் கொஞ்சல் லூசு இந்தப் பொம்பள என்று
பார்க்கும் மன நிலை இருப்பதால் தான் ஒன்றிரண்டு
தையல்கார ர்களின் தையல் மிசின் தனித்துவத்துடன்
ஓடிக்கொண்டிருக்கிறது.
அதிலும் கூட ரெடிமேட் ப்ளவுஸ் வந்துவிட்ட து…
என்னவோ போங்கள்…

Thursday, February 7, 2019

திட்டியின் விஷமோ தவக்கோலம்?


காமத்தை நீ சூடிய மலர்களின்
வாசனையாய் தெளித்து வைத்திருந்தாய்
காமத்தை உன் ஆடலின் அசைவுகளில்
மறைத்து வைத்திருந்தாய்.
காமத்தை உன் இசையின் பெருவெள்ளமாய்
நதிகளில் நிரப்பினாய்
காமத்தை ஆடிப் பாடி
அலைகளில் நீராடி
மூழ்கி முத்தெடுத்து
பயணித்தவள் நீ..
உன் மகளை
மாபெரும் பத்தினி மகள்
என்று உன்னிடமிருந்து விலக்கியவள் நீ
அருந்தவப் படுத்தும் அதிகாரத்தை மட்டும்
திருந்தாச் செய்கை என தெளியாத து ஏன்?
இராகுலன் அவன்..
இலக்குமி நான்.
திட்டியின் விஷமோ
என் தவக்கோலம் தாயே?
பிச்சைப் பாத்திரங்கள்
நிரம்பி வழிகின்றன.
உதயக்குமரனின் தேரோசை
அமுத சுரபி அறியாத பிச்சைப்பாத்திரம்
கருவறை பிளக்கும் பெருவலி
பளிக்கறை கதவுகள் திறக்கின்றன..
பெரும்பசி என்னை எரிக்கிறது.
இதுவோ இதுவோ அது..
காம ம் அறியாமல்
காமத்தைக் கடந்துவிட்ட தாக
நானும்
கடந்துவிடுவாள் என்று நீயும்
நடித்துக் கொண்டிருக்கிறோம் தாயே.
பிச்சைப்பாத்திரத்துடன்
நானும் சபிக்கப்பட்டிருக்கிறேன்.
என் முலைப்பால் அருந்தும்
திட்டியின் குஞ்சுகளை
காயச்சண்டிகையின் கணவன்
என் செய்வான்?
சித்தார்த்தனின் தாகம் தீர்க்க
போதிமரத்தின் வேர்கள்
நீர்த்துளிகளைத் தேடி பயணிக்கின்றன.
கந்திற்பாவைகளை அனுப்பி
என்னை அழைக்காதே…
”காம ம் கடந்த வாய்மையள் “
என்று சுதமதி சொன்னது போதும்.
மதுரையில் கூல வணிகனின் கடைவீதிகள்
இரவுகளில் விழித்திருக்கின்றன.
இதுவே ஆயின் கெடுக அதன் திறன்
என அங்கிருந்து புறப்படுகிறேன்.
அதுவரை…
உதயக்குமரனின் அமுதசுரபியாய்..
(திட்டி.. இராகுலனை தீண்டிய விஷப்பாம்பு)

Wednesday, February 6, 2019

நன்றி ஓ ஹென்றி


 நன்றி.. ஓ ..ஹென்றி..
ஹென்றி பழைய பக்கம் தான் என்றாலும்
புத்தகமாக கையில் கிடைக்கும் போது
ஒரு தனி சந்தோஷம் வரத்தான் செய்கிறது.
நன்றி ஓ ஹென்றி..

பெண்ணியம் பேசுகிறேன் பேர்வழி என்று
சொல்லிக்கொண்டு சொற்களை மட்டுமே
திருடி தின்று அதுவும் செரிக்காமல் வாந்தி
எடுக்கும் எல்லாமும் இப்போதெல்லாம்
மிகுந்த ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
  நல்லவேளை ஓ ஹென்றி அப்படியல்ல.
தீபாவளிக்கு பஜாரில் புதுசு புதுசாக
கடைகள் முளைத்துவிடுகின்றன.
இந்தக் காட்சி ஒவ்வொரு ஆண்டும்
எல்லோருக்கும் இன்றுவரை காணக்கிடைக்கும்
காட்சி தான். நம்ம ஹென்றிக்கு மட்டும்
“அகலமான பஜார் தெருவே கோமண
சைசுக்கு ஆகிவிட்ட து” என்று  சொல்லத்
தெரிகிறது. கோமணத்தை அறியாதவர்
யார்?!! ஆனாலும் பஜார் கோமண சைசுக்கு
ஆவதைக் கவனிப்பவர் யார்! இதை ஒரு
பெண் எழுத முடியாது. அவளுக்கு கோமணம்
எல்லாம் நினைவுக்கு வருமா ..? எனக்கு
சந்தேகமா தான் இருக்கு. அவளுக்கு வேறு
எதாவது நினைவுக்கு வந்து தொலைக்கலாம்.
ஆனாலும் ஹென்றி.. தன் பார்வையில்
தனித்து நிற்கும் இடம் இது தான்.
நல்லாவே இருக்கு ஹென்றி..

இனி…
ஹென்றியைப் பற்றி நான் எப்போதும்
சொல்ல வேண்டும் என்று  நினைத்து
சொல்லாமல் இருக்கும் இன்னொரு கதை..
ஹென்றியின் கதைகளை விட ரொம்பவும்
சுவராஸ்யமானது…
ஹென்றி அவர் வீட்டு உறவினர் திருமணத்தில்
கலந்து கொள்ள மும்பை வந்திருந்தார்..
எங்களை அழைத்தார். 
(என்னுடன் கே ஆர் மணி மற்றும் மதி)
 ஓ ஹென்றி.. நாங்கள்
எப்படி வரமுடியும் உங்கள் உறவினர் வீட்டு
திருமணத்திற்கு? என்று நாங்களும் கேட்கவில்லை!
அப்படியான எதுவும் இல்லாமல் (சொல்லப்போனால்
வெட்கமில்லாமல்..!) நாங்கள் ஹென்றியைச்
சந்திக்கப் புறப்பட்டு விட்டோம். எங்களைப்
பார்த்த தில் ஹென்றிக்கும் ஏக க் கொண்டாட்டம்!
மாடியில் திருமண வீட்டாரின் சடங்குகள்
நடந்து கொண்டிருந்தன. நாங்கள் ஹாலில்
அதாவது டைனிங்க்  ஹாலில்.. ஒதுக்குப்புறமாக
இட த்தைப் பிடித்து உட்கார்ந்துவிட்டோம்.
ஹென்றி பெண் வீட்டுக்கார ரா?
மாப்பிள்ளை வீட்டுக்கார ரா?
எங்களுக்குத் தெரியாது.
ஆனால் சென்னையிலிருந்து திருமணத்திற்கு
குடும்பத்துடன் வந்திருக்கும் முக்கியமானவர்
என்பது மட்டும் புரிந்த து.
டைனிங்க் ஹாலில் பரிமாறுபவர்கள் எங்களுக்குச்
சூடான காஃபி, பஜ்ஜி, கேசரி, வடை என்று
பரிமாறிக்கொண்டே இருந்தார்கள்…
பஜ்ஜி கேசரிக்கு ஏற்ற மாதிரி எங்கள்
இலக்கியமும் தன் வாசலைத் திறந்து கொண்டு
வெள்ளமென பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த து.
ஹென்றி… ரொம்பவும் மூடில் இருந்தார்.
அப்போது… ரொம்பவும் வெள்ளந்தியாக
அவரிடம் கேட்டு வைத்தேன்..
ஓ ஹென்றி… இதெல்லாம் இருக்கட்டும்..
நம்ம பாட்டிகளுக்கும் இப்படியான
நிறைய காதல் இருந்திருக்குமா?!!! “ என்று.
ஹென்றிக்கு இன்னும் உற்சாகம் அதிகமாகி
விட்ட து. பாட்டியிடம் இதை எல்லாம் நாம்
பேசுவதில்லை. பேசிப் பாருங்கள்.. இன்றைய
பெண்ணியத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு
விடுவார்கள் நம் பாட்டிகள் “ என்றார்.
ஹென்றி இப்படி சொன்னாலும் சொன்னார்..
எனக்கு அப்போதே எந்தப் பாட்டியிடம்
எதைக் கேட்கலாம் என்ற எண்ணம் வந்த து.
ஸ்கூல் , கல்லூரி, ஏன் ஆபிஸ் போகும் போது கூட
அடிக்கடி பாட்டிகளை சாவடித்து லீவு கேட்ட
 நான் என் பாட்டிகளின் மறைவுக்காக முதன்
முதலாக உண்மையாகவே வருத்தப்பட்டேன்
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

இப்படியாக நான் பாட்டிகளைத் தேட
ஆரம்பித் த்தில் ஹென்றி தான் எனக்கு
 குருவாக இருந்தார்…
அப்படி ஒரு பாட்டியை.. அதுவும் என்
மகளின் திருமணத்தில் சந்தித்தேன்.
அந்தப் பாட்டியிடம் போய் கதை எல்லாம்
கேட்கவில்லை. ஆனாலும் அந்தப் பாட்டி
செய்த சில விளையாட்டுகள் பாட்டியின்
கதையை என் புனைவுகளுக்குள் கொண்டுவந்த து.
இப்படியாகத் தான்
“பாட்டி என்ன சொல்லி விட்டாள்?!”
என்ற சிறுகதையை எழுதினேன்.
இந்தக் கதையை ஹென்றியிடம் சொல்ல
வேண்டும் என்று  நினைத்தேன்.
நன்றி ஓ ஹென்றி..

டியர்.. ஹென்றி..
மும்பையில் இருக்கும் உறவினர் வீட்டு
விசேஷங்களுக்கு .. இப்போதெல்லாம்
வருவதில்லையா என்ன..
ஹென்றியுடன் கதைப் பேசுவதும்
கதைக் கேட்பதும் சுவராஸ்யமான அனுபவம்.
  நன்றி.. ஓ.. ஹென்றி..
(எழுத்தாளர் எஸ். சங்கர நாராயணன் அவர்களுக்கு
நன்றியுடன்.. )