Friday, September 11, 2020

Kangana Ranaut VS SHIV SENA VS ?????

 Kangana Ranaut VS Shiv Sena - Bully-wood Mafia Exposed - Tahir Gora & Anis  Farooqui @TAG TV - YouTube

 

 அரசியலுக்கு ஆள்பலம் வேண்டும்.

லாரியில மக்களை ஏற்றிக்கொண்டு வந்து
கூட்டத்தைக் கூட்டிக்காட்டும் ஆள் தேவை.
அதோடு அதாக கொஞ்சம் தட்டிட்டு வாடானா 
வெட்டிட்டு வருகிறவன் வேணும்..
இப்படியானவர்களை வைத்துக்கொண்டு 
அரசியல் செய்தாக வேண்டியதிருக்கிறது. 
இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல..
 
ஆனால் அடியாட்களை வைத்திருந்த 
அரசியல் கட்சிகள் இன்ற அடியாட்களின் 
அரசியல் கட்சிகளாகமாறிவிட்டன…
கடந்தல் செய்பவன், போதைப்பொருள் விற்பவன், 
சாராயம் காய்ச்சுபவனெல்லாம் அரசியல்வாதியாகி 
விட்ட நிலையில்… 
 
மும்பையில் .. ஒரு யுத்தம் நடக்கிறது..
இந்த யுத்தம் பல்வேறு தளங்களில் பல்வேறு
முகமூடியுடன் நடக்கிறது..
புலன் விசாரணையில் யார் பெரியவன் என்று
 இரண்டு ஊடகங்கள் 24/7 
அலறிக்கொண்டிருக்கின்றன.
நடிகரின் தற்கொலையா கொலையா என்ற 
முதல் செய்தியை மறக்கும் அளவுக்கு 
பல்வேறு திருப்பங்கள்..
இப்போ லேட்டஸ்டாக நடிகை கங்கனாவின் 
வீடு/ ஆபீஸ் அறை சட்டவிரோதமாக 
(after renovation) நீட்டிக் கொண்டு இருப்பதாக 
சொல்லி மாநகராட்சி புல்டோசர்
வைத்து இடித்து தள்ளி இருக்கிறது… 
 
இந்தக் காட்சி அரங்கேறும் வரை 
ஊடகங்களின் விளையாட்டை மட்டுமே 
கண்டு கொண்டிருந்த மும்பைவாசிகள்
யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சட்டவிரோதமான கட்டிடங்கள், 
after renovation என்னவெல்லாம்
செய்திருப்பார்கள் என்பதற்கு பழகிப்போன 
மும்பைக்கு இந்தப் புல்டோசர் கதை ..
 அரசியலின் இன்னொரு கதையை
காட்டிவிட்ட து. 
 
இடிந்துப்போயிருப்பது ஒரு நடிகையின் 
வீடோ ஆபிஸொ அல்ல. 
சரிந்திருப்பது மராட்டிய அரசின் நிலைப்பாடு.
சிவசேனா அரசியல் சரிவை நோக்கி…
இதைத் திட்டமிட்டு 
நடுவண் பிஜேபி செய்கிறதா ?? !!
மா நில கட்சிகள் தங்கள் பாக்கெட்டில் 
மட்டுமே இருக்க வேண்டும்.. 
அதைவிட்டு வெளியில் துருத்திக் கொண்டு தெரிய ஆரம்பித்தால் கூட.. மா நிலக் கட்சிகள்
தூக்கி வீசப்படும்.. 
இந்த அரசியல் விளையாட்டில்..
அடிபடப்போவது சிப்பாய்கள் மட்டுமல்ல..
ராணியை அடித்து வீழ்த்தி ஆட்டத்தை 
முடித்துவிடுவார்களோ
அல்லது பேரத்தில் பாக்கெட்டுக்குள் 
படியுமோ சீறும் சிறுத்தைகள்…!


Sunday, September 6, 2020

ஈழப்போராட்டம்.. இன்னொரு பக்கம் குமிழியாக

 

குமிழி = எல்லா பொய்களையும் நம்பிய உண்மை

இண்டைக்கும் அதே கனவா, அப்பா?
தலைமுடியை வருடி கேட்கும் மகளிடம்
என்ன சொல்வது?
மகளே…
கனவுகள் என்னைத் துரத்துகின்றன என்றா?
கனவுகளைத் தொலைத்த நினைவுகள்
துரத்துகின்றன என்றா?
வாழ்க்கையைக் கனவுகளில் தொலைத்துப்போன
எங்கள் தலைமுறையின் கதறலை
இரவைக்கிழிக்கும் ஈனக்குரலை..
தலைகீழாக தொங்கவிடப்பட்டு கிழிந்து
தொங்கிய மதனின் உடலில்
நானும் இருந்தேன் என்றா,,!
மகளே..
எதைச் சொல்வது..?
எதைச் சொல்லாமல் விடுவது?
சொன்னால் புரியுமா உனக்கு?
எனக்கே இன்னும் புரியாத குமிழியை
அப்படியே உன் கைகளில் தருவதற்குள்
உடைந்துப் போகிறது குமிழியின் முகம்.
மகளே, அறிவாயோ அந்த மந்திரக்கிழவி
வாசலில் வந்து நிற்பதை? அவளுக்குள் நான்
நுழைந்துவிடும் போது..
மகளே..
நான் இப்போ என்னவாக இருக்கிறேன்,
யாராக இருக்கிறேன். அவள் எனது கதையை
கிழித்து தொங்கும் சிலந்தி வலையாய் அவளே விரித்து போட்டுவிட்டு சென்றுவிட்டாள்…”
 
குமிழி…
நாவலா
சுயசரிதையின் முதல் அத்தியாயமா
நாவலெனில் எது புனைவு?
சுயசரிதை எனில் எது குமிழி?!
 
நீ காணாமல் போய்விட்ட தாக நினைத்திருந்தேன்”
“எனக்கு அழிவில்லை”
“வெற்றிகளுக்கு பொறுப்பேற்கும் உசாருடன் போன நீ இப்போ தோல்விகளுக்கு பொறுப்பேற்காமல் நழுவுவது
என்ன நியாயம்?”
“களைத்துவிட்டேன்,
நம்பிக்கையை தொலைத்துவிட்டேன்.
நான் எனது உயிர் குறித்தே இப்போ 
கவலைப்படுகிறேன். 
நான் வாழ வேண்டும். 
எனக்கு இருத்தல் மீது ஆசை வந்திருக்கிறது. 
மரணத்தை வெறுக்கிறேன்”
“நானும் தான்”
ஆடை களைவது போல் எல்லாவற்றையும்
களைத்துவிட்டு ஒரு வெற்று மனிதனாக 
வாழ இலகுவில் உன்னால் முடியாது. 
எனக்கு உன்னை நன்றாகவே தெரியும். 
நொருங்கிப் போவாய்..”
(பக் 208)
ஈழப்போராட்டம் இயக்கங்களின் வரலாறு
முகாம்களில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த இளைஞர்கள்..
இயக்கங்களில் வைக்கப்பட்ட அவர்களின்
பெயர்களுக்கும் செயல்களுக்கும் சம்பந்தமே
இல்லை… என்பதுடன் முடிந்துவிடுகிறதா..
இயக்கங்கள் பேசிய சமத்துவத்திற்கும்
இயக்கங்களில் புழங்கிய “அண்ணே, பெரிசு,
பெரியவர்” இவைகளுக்கும் கூட தொடர்பில்லை.
“எல்லா பொய்களையும் நம்பியது கூட பொய்யில்லை”
எது உண்மை?
உண்மை பொய்களால் கட்டமைக்கப்பட்ட தா?
பொய்களை உண்மைகளாக்க முடியுமா?
உண்மைகள் ஏன் பொய்களின் முகங்களில்
குமிழியாக ஒட்டிக்கொண்டன?
உண்மைகள் ஏன் குமிழியாகிவிட்டன?
துருத்திக்கொண்டு தெரியும் புடைப்பாக
வீக்கமாக நீர்மேல் குமிழியாக 
ஒரு தலைமுறையின் இளமை… 
கரும்புள்ளிகள் துரத்த வேகமெடுத்து 
ஆரம்பித்த பயணம்…
பனிப்பிரதேசத்தின் கனவுகள் துரத்த
விழித்துக்கொள்கிறது.
 
நான் கட்ட டக்கலைஞனாகி பின்
 எனது உழைப்பால் இந்தக் குடும்பத்தைத் 
தாங்குவது , எனது சகோதரிகளுக்கான
சீதனத்தால் அவர்களை மீட்பது போன்றவற்றுக்கான சாத்தியத்தைவிட ஒரு சுதந்திர சோசலிச தமிழீழம் உருவாகினால் என் போன்றே எல்லோருக்கும் மீட்சி
கிடைக்கும் என்று நம்பியதும் பொய்யில்லை.
 எனது என்ஜினியர் கனவை பழிவாங்கிய அரசுக்கு எதிராக கோபம் கொண்டடதும் பொய்யில்லை. 
 கொலையுண்ட சகமாணவர்களில் என்னைக் கண்ட தும் பொய்யில்லை.மண்ணுக்காய் மரித்தவர்களின் 
சாம்பலிலிருந்து தமிழன்என்ற அடையாளத்துடன் நான் எழுந்ததும் பொய்யில்லை. வண்ணை ஆனந்தனின் வெளவால்கள் எனக்கு திசைகாட்டியதும் பொய்யில்லை. எல்லா பொய்களையும்நம்பியதும் பொய்யில்லை”
 
ஆம்…குமிழி… உண்மைகள் பொய்யான கதை.
குமிழி.. கனவுகள் குமிழியாக உடைந்துப்போன 
வரலாற்றின் ஒரு துண்டு.
குமிழி.. புனைவல்ல.
குமிழி.. நிஜம்.
உடைந்து உடைந்து .. உண்மைகளும் உடைந்து 
எல்லாமே உடைந்துப் போன காலத்தில் 
மந்திரக்கிழவி வந்து கனவுகளின் திரைகளை விலக்கி வைத்திருக்கிறாள்.
ரகு, மதன், பாண்டி, லெனின், கஸ்ரோ,
உமாமகேஸ்வரன், ஜோன், சந்த தியார்,
சேகர், சதா எல்லோரும் வருகிறார்கள்..
 
“அரசியல் அறிவூட்டப்படாத இராணுவம்
ஒரு போதும் சோசலிச விடுதலையைப் பெற்றுத் தரப்போவதில்லை. வெறும் இராணுவ அதிகாரம் சொந்த மக்களுக்கு எதிராகவே தனது துப்பாக்கியைத்
திருப்பக்கூடியது. அது விடுதலை அடைந்தால் கூட 
அதைச் செய்யும்” (பக் 93)
இராணுவத்தால் கட்டமைக்கப்படும் ஒவ்வொரு தேசமும் சொந்த மக்களுக்கு குமிழியாகிவிடுகிறது.
தன் மக்களையே கொன்று குவித்து இராணுவ 
ரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்கிறது 
அரசாங்கம். மொழி எல்லைகளைக் கடந்து தேசத்தின் எல்லைக்கோடுகளைக் கிழித்துக்கொண்டு 
 குமிழி பயணிக்கும் இடங்கள் ஒரு தேர்ந்த 
அரசியல் பாடமாக தன்னை எழுதிப் பார்த்திருக்கிறது. சித்தாந்தங்களை அனுபவத்துடன் உரசிப் பார்க்கும் போது
எது குமிழி ஆகிறது? 
அனுபவங்களா அல்லது
அரசியல் சித்தாந்தங்களா! 
 
கரும்புள்ளிகளாக துரத்தும் குமிழியின்
பின்னணி பாடலாக இப்போதும் ஒலித்துக்
கொண்டே இருக்கிறது..
“தோல்வி நிலையேன நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…”