Friday, February 27, 2015

முதலாளித்துவ ஜனநாயகத்தில் நாம்



இந்தியாவில் எனக்கும் ஒரு ஒட்டு.
சாலை ஓரத்தில்வ் வாழும் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை
இத்தியாதி எந்த அடையாள அட்டையும் இல்லாதவனுக்கும் ஒரு
ஓட்டு. அம்பானிக்கும் ஒரு ஓட்டு.
அதாகப்பட்டது ஒவ்வொரு குடிமகனுக்கு இருக்கும் பாராளுமன்ற
அதிகாரம் ஒன்றுதான். ஒரே ஒரு ஓட்டு.
அப்போ... நானும் அம்பானியும் சம் உரிமை உள்ளவர்களா?
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது எபதை ஒத்துக் கொள்கிறோம்.
அப்போது, 1947ல் 200 கோடிக்கு அதிபர்களாக இருந்த இந்தியாவின்
டாப் 10 முதலாளிகளின் இன்றைய சொத்து மதிப்பு 168,000 கோடி.
ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்கள் தொகை
50% மேலாக இருக்கிறது.
எல்லோரும் இருக்கும் அதிகாரம் ஒரே ஒரு ஓட்டு தான்.
எங்கேயே கணக்கு இடிக்கிறதே. !
உலகம் முழுவதும் இருக்கும் ஆட்சி அதிகாரத்திற்கு
எந்தப் பெயரும் இருக்கலாம்.
மக்களாட்சி, ராணுவ ஆட்சி, பாசிச ஆட்சி, முடியாட்சி.
ஆனால் திரைமறைவில் உருவாகி இருக்கும் உண்மையான அரசு
முதலாளி வர்க்கம் தான். அனைத்து அரசுகளின் நீதி, நிர்வாகம்,
ராணுவம், போலீஸ் எல்லாம் முதலாளிகளுடன் தொடர்பே
இல்லாதது போல மக்கள் நம்பும் விதமாக ஒரு விலக்கமுடியாத
திரைப் போடப்பட்டிருக்கிறது.
1956ல் ஆவடியில் நடந்தக் காங்கிரசு மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசு
கட்சியின் இலட்சியம் சோசலிஷம் தான் என்று சொன்னார்கள். அன்றைய
பிரதமர் பண்டித் ஜவஹர்லால் நேருவும் அடிக்கடி சோசலிஷம் பேசினார்.
பேசினார், பேசினார். அவ்வளவுதான். சோசலிஷம் வரவில்லை.
காங்கிரசு பேசிய சோசலிஷத்தால் நாடு முன்னேறவில்லை
அதனால் இனி தனியார்மயமாதலை ஊக்குவிப்போம் என்று
சொல்லும் பிஜேபிக்கும் தெரியும் காங்கிரசு பேசிய சோசலிஷம்
என்னவென்று. முதலாமவர் சோசலிஷம் பேசினார். இரண்டாமவர்
பேசவில்லை. மற்றபடி இருவருமே ஒரே பொருளாதரக் கொள்கை
உடையவர்கள் தான். நம் ஜனநாயகத்திற்குப் பெயர் முதலாளித்துவ
ஜனநாயகம்.
இத்தருணத்தில் இன்னொரு செய்தியும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
அதிமுக ஆரம்பித்த நேரம். அண்ணாயிசம் தான் தங்கள்
கட்சியின் கொள்கை என்று அறிவித்திருந்தார். லண்டன் பிபிசி
எம்ஜியாருடன் நேர்காணல் நடத்தியது.
அண்ணாயிசம் என்றால் என்ன? என்று பிபிசி நிருபர் கேட்டதற்கு
எம்ஜியார் சொன்னார் பதில்:
"கேபிடலிசம், சோசலிசம், கம்யூனிசம் மூன்றும் சேர்ந்ததுதான்
அண்ணாயிசம்"..(!!!!!! ?????!!!!!!)
முதாளித்துவ ஜனநாயகத்தில் ஊடகங்கள் - பத்திரிகை, சினிமா,
மெகாதொடர்கள், தொலைக்காட்சி, இணையதளம்...- எல்லாம்
சேர்ந்து மக்களின் மனங்களை முதலாளித்துவத்திற்கு சாதகமாக
பண்படுத்துகின்றன.

ஆண்டவன் உலகத்தில் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி- எம்ஜியார் பாட்டு.

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி - ரஜினிகாந்த் பாட்டு

எங்க முதலாளி நல்ல முதலாளி - விஜயகாந்த் பாட்டு.

உடம்பால் தொழிலாளியாக இருக்கும் நாம்
உள்ளத்தால் முதலாளிக்கு ஆதரவாக அனைத்து தரப்பிலிருந்தும்
செம்மையாக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்..
நம்மை அறியாமலேயே...

Friday, February 20, 2015

ஒபாமா காலை உணவும் மோதியின் வயிற்றுவலியும்



சிவப்புக்கம்பள வரவேற்பு..
பரந்து விரிந்த பாரத தேசத்தில் என்ன வேண்டும்?
எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி..
இப்படி என்னவெல்லோமோ
செய்து "ஐஸ்" வைத்துப்பார்த்தாகிவிட்டது.. குளிரமாட்டேன்
என்று அடம்பிடிக்கிறாரே நம்ம வல்லரசு பெரியண்ணாச்சி.
இந்தியா வந்திருந்தப்போது இந்திய அரசியல் சட்டத்தின்
25 ஆவது பிரிவு குறித்து (மத சுதந்திரத்தை வலியுறுத்தும் சட்டம்)
பேசியது ஏதோ போகிற போக்கில் தன் பெரியண்ணன் புத்தியைக்
காட்ட " உச்சந்தலையில் ஓங்கி ஒரு குட்டு" வைக்கும்
சண்டியர் புத்தி என்று தான் பலரும் நினைத்தார்கள்.
ஏன், நம்ம பிரதமர் மோதி கூட அப்படி நினைத்துதான்
ஓபாமாவின் பேச்சுக்கு மவுனம் சாதித்தார். அப்புறம்
வெள்ளைமாளிகையிலிருந்து ஒரு அறிக்கை வெளிவர
வைத்தார்.. "அதாகப்பட்டது... ஒபாமாவின் பேச்சை
இந்திய ஊடகங்கள் திரித்து சொல்வதாக" சொல்ல வைத்தார்.
வெள்ளைமாளிகை இந்தியாவில் இருப்பதெல்லாம்
வெள்ளைக்காக்கைகள் என்று சொன்னால் கூட
ஏற்றுக்கொள்ளும் ஊடகங்கள் வாய்த்திறக்கவில்லை.

இப்போது மண்சட்டியைப் போட்டு உடைத்தது போல
ஓபாமா தேசிய வழிபாடு காலை உணவு நிகழ்ச்சியில்
எழுதி வைத்துப் பேசிய பேச்சில் மோதிக்கு வயிற்றுவலி
வந்தது மட்டுமல்ல... ஒரு குட்டிக்கரணமே போட
வைத்துவிட்டது.. ..

பெரியண்ணா டீம் எப்போதும் ஓர் ஆண்டறிக்கை வாசிபபார்களாம்.
அந்த ஆண்டறிக்கை உலகநாடுகளைப் பற்றிய ரேட்டிங்.
2013 மற்றும் 2014ஆம் ஆண்டு அறிக்கையில் முசாபர் நகர் கலவரம்
மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்களை பதிவு செய்திருந்தது
உலக நாடுகளின் மத சுதந்திரம்’ பற்றி அமெரிக்கா, கடந்த ஆண்டு
வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவை ஆப்கானிஸ்தானோடு சேர்ந்து
மதப் பதட்டம் நிறைந்த நாடகவே அறிவித்திருந்தது.
2015 ஆம ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க வெளியிட
இருக்கும் இத்தருணத்தில் வெள்ளைமாளிகையில்
காலை உணவில் ஓபாமா எழுதி வைத்து பேசியிருப்பதைப் பார்த்தால்
டெல்லியில் மரபை மீறி நம் பிரதமரே விமான நிலையத்துக்குப் போய்
வரவேற்பு கொடுத்ததெல்லாம் " வெஸ்ட்" !
பெரியண்ணன் மத சுதந்திரம் மறுக்கப்படும் நாடாக இந்த ஆண்டும்
இந்தியாவை அறிவித்துவிட்டால் அன்னிய முதலீடுகள் இந்தியாவுக்கு
வருவதில் சிக்கல்கள் உருவாகலாம் என்று டில்லி வட்டாரம்
வயிற்றுவலி வந்து வயிற்றுப்போக்கில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஒரு தகவலுக்காக வெள்ளைமாளிகை & டில்லி செய்திகள்

வெள்ளைமாளிகை: The White House
Office of the Press Secretary - Feb 5, 2015

Michelle and I returned from India -- an incredible, beautiful country,
full of magnificent diversity -- but a place where, in past years,
religious faiths of all types have, on occasion, been targeted by other peoples of faith,
simply due to their heritage and their beliefs --
acts of intolerance that would have shocked Gandhiji, the person who helped to liberate that nation.

So this is not unique to one group or one religion. There is a tendency in us,
a sinful tendency that can pervert and distort our faith. In today’s world,
when hate groups have their own Twitter accounts and bigotry can fester in hidden places
in cyberspace, it can be even harder to counteract such intolerance.

டில்லி செய்தி 17 பிப் 2015

Prime Minister Narendra Modi today made a strong speech on religious tolerance at a function in Delhi,
which has seen a number of attacks on churches recently
. The event was organised by the Syro Malabar Church to honour two saints.

Here are the top 10 quotes from his speech:

My government will ensure that there is complete freedom of faith
.
The government will not allow any religious group, belonging to
majority or minority to incite hatred against others overtly or covertly.

Everyone has the undeniable right to retain or adopt the religion of his
or her choice, without coercion or undue influence.

Unity strengthens us. Division weakens us. I sincerely request all Indians
and all of you present here to support me in this huge task
.
The world is increasingly witnessing division and hostility on religious lines.
This has become a matter of global concern.

Mother India gave birth to many religious and spiritual streams
. Some of them have even travelled beyond Indian borders.

The tradition of welcoming, respecting and honouring all faiths is as old as India itself.

As Swami Vivekananda said- We believe not only in universal toleration
but we accept all religions as true
.
This principle of equal respect and treatment for all faiths
has been a part of India's ethos for thousands of years.

The ancient Indian plea of mutual respect for all faiths
is now beginning to manifest in global discourse.


THANK YOU OBAMA, FOR YOUR SHOCK TREATMENT






Thursday, February 19, 2015

கேள்வியைத் தேடும் பதில்கள்



உங்கள் கேள்வியும் நானே.. பதிலும் நானே
சரணம் சரணம் சண்முகா சரணம்.

கவிஞர் ஜெயதேவனின் க்டவுளும் நிலமும் 16/2/15 முகநூல் பதிவை
முன்வைத்து..

கே: முருகன் மணந்தது இந்திராணியையா?
இந்திரனின் மகள் தெய்வானையை அல்லவா முருகன்\
மணந்தார்?

இந்திரனுக்கு மகளே கிடையாது. ஸ்கந்த புராணத்தில்
விஷ்ணுவின் புதல்வியர் தேவசேனையும் வள்ளியும்.
தேவசேனை அம்ரிதவ்லலியில் பிறக்கிறாள். இந்து மதம்
சொல்லியிருக்கும் பூஜை மந்திரங்களைத் தவறாது செய்து
வருகிறாள். அப்பெண்ணை இந்திரன் "தத்தெடுத்துக் கொள்கிறான்"
அப்பெண்ணையே தேவசேனாதிபதிக்கு... அதாவது தேவலோகத்தின்
அரசனான இந்திரன் தன் சேனாதிபதிக்கு அப்பெண்ணை
திருமணம் செய்து கொடுக்கிறான்.
ஆனால் கந்தபுராணத்தில் இந்திரன் தத்தெடுத்த கதை மிஸ்ஸிங்.

தேவசேனா என்பதே தெய்வானையின் பெயர். தேவசேனா என்றால்
தேவர்களின் படை ARMY OF GODS என்ற பொருள்.
தேவ்சேனா பிராஜபதி தக்ஷாவின் பெண். அவளை அசுரகேசி
சிறைப்ப்டித்தான். இந்திரன் அவளை சிறையிலிருந்து மீட்டபோது
அவள் வீராதிவீரனையே மணப்பேன் என்று சொல்கிறாள்.
இந்திரன் பிரம்மனிடம் போய் அறிவுரை கேட்க பிரமன்
அக்னியின் புத்திரனே வீராதிவீரனாக முடியும் என்று சொல்ல
அக்னிபுத்திரன் அவதரிக்கிறான்.
இவ்விடத்து அக்னி என்பது சிவனையும் குறிக்கும்.
அதனால் முருகவழிபாட்டில் சிவனின் இடக்கண், வலக்கண் என்று
முருகனின் இரண்டு மனைவியரும் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து
அவதரித்தவர் முருகன் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.

கே: நீங்கள் இன்னும் இந்திராணி க்கே வரவில்லை//!?

பொறுங்கள்.. இந்திர வழிபாடு தமிழ்ச்சமூகத்திலும் வடவரின்
ரிக் வேதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இருவரும் ஒருவரா?
இந்தக் கற்பனையைப் புரிந்து கொள்வதற்கு "ரிக்" வேதத்தில்
இந்திரன் என்னென்ன பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறான்
என்பதை முதலில் பார்க்க வேண்டும். (பார்க்க விக்கிப்பீடியா)
கலாச்சார கலப்பு.. கலாச்சார ஆக்கிரமிப்பு என்ற மனித இன
வரலாற்றில் இக்கலப்புகளை அக்காலத்தில்
கற்பனையில் புராண இதிகாசக்கதைகளாகவும் நம் நடோடிபாடல்கள்
கதை வழியாகவும் தெரிந்து கொள்ள முடியும்.
ரிக் வேதத்தில் இந்திரன் தான் எம். ஏ பட்டதாரி.
ஆமால் மாஸ்டர் ஆஃப் ஆல்.. பிற்கால கடவுள்,
கடவுளர்களின் வாகனம் பிள்ளைக்குட்டிகள் எல்லாம்
இதற்குள் அடக்கமாகிவிடும். அப்படி ஒரு விசாலமான
திருநாமங்களுக்குரிய்வர் இந்திரபகவான் .

இதில் பாருங்கள்.. நமக்கோ முருகன் தான் தமிழ்க்கடவுள்.
இப்போது முருக வழிபாட்டில் எலலாவற்றையும் கொண்டு
அடைத்தாக வேண்டும். இப்படித்தான் நம் முருகன்
அவர்களின் தேவசேனாதிபதியாகிறான்...

கே: முருகன் தேவசேனாதிபதியானதற்கும் இந்திராணிக்கும்
என்ன தொடர்பு?
இருக்கிறதே.. அதனால்தானே எப்போதும் நேரடியாக பதிலுக்கு
வந்துவிடும் என்னாலும் இவ்வளவு சுற்றி வ்ளைக்க வேண்டி
இருக்கிறது.
வடக்கே இருந்த தேவசேனாதிபதி கார்த்திக்/ கார்த்திகேயன்.
கார்த்திக மாபெரும் வீரன். ஆனால் அவன் பிரம்மச்சாரி.
இன்றும் ஹரியானா மாநிலத்தில் கார்த்திகேயனை பெண்கள்
நேரடியாக தரிசனம் செய்யக்கூடாது. நவிமும்பையில் இருக்கும்
கார்த்திக்கேயன் ஆலயத்திலும் திரை போட்டு மறைத்துவைத்திருப்பார்கள்
கார்த்திகேயனை. பெண்முகம் பார்க்க மறுக்கும் பிரம்மச்சாரி அவன்!
பகவத்கீதையில் கிருஷ்ணன், "நானே ஸ்கந்தன், யுத்தங்களின்
தலைவன்.. iam skanda, the lord of war " என்று சொல்வதும்
நினைவுக்கு வருகிறது.

கார்த்திகேயன் வழிபாடும் குமாரகுபதன், ஸ்கந்த குபதன் என்ற
குப்த வ்மசத்து அரசர்களின் பெயர்களும் இக்கதையுடன் தொடர்புடையவை.
மவுரியர் காலத்திலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
முருகனின் மயில்வாகனம் மவுரியருடன் தொட்ர்புடையது.
கிரேக்க படை எடுப்பு, மாவீரன் அலெக்ஸ்டாண்டர் வட
இந்திய அரசுகளுடன் போரிட்டது.. இந்த வீரவரலாற்றின்
புராண புனைவுகளும் கார்த்திகேயனின் கதைகளுடன்
இணைகின்றன. கிரேக்க ரோம புராணக்கதைகளில் இருக்கும்
போர்க்கடவுளும் இந்திரனும் ஆசிய நாடுகளில் வழிபாட்டில்
இருக்கும் கார்த்திகேயன் அடையாளங்களும் இக்கதைகளின்
ஊடாக நம்மை விசா இல்லாமல் நாடு கடந்து பயணிக்க வைக்கும்.
இந்திரன் அர்ஜூணனின் தந்தை, சூரியபகவானின் மகன்.
அதே இந்திரன் பவுத்தமதத்தில் சக்ரா/சாக்கா.
சமண மதத்தில் தீர்த்தங்கரர்களின் தொண்டன் சவுந்தரமெந்தர.
எனவே வீரத்தின் அடையாளமாக இந்திரனுனும் கார்த்திகேயனும்.
இதில் கார்த்திகேயன் முழுமையாக முருக வழிபாட்டில்
ஐக்கியமாகி முருகனே கார்த்திகேயன் என்ற நேர்க்கோட்டில்
வந்துவிடுகிறார்கள்.
இதில் கார்த்திகேயனும் இந்திரனும் வீரத்தின் அடையாளம்
என்ற புள்ளியில் இணைந்ததில் இணைந்தும் இணையாமலும்
இந்திரனும் முருகனும். இந்திரன் காப்பாற்றிய /தத்து எடுத்த
தேவசேனை என்ற தேவசேனாதிபதியின் மனைவி
தமிழ்க்கடவுள் முருகனின் மனைவி அந்தஸ்த்தைப் பெறுகிறாள்.
கலாச்சார கலப்பு என்பது கலாச்சார படை எடுப்பாகி
தமிழ்ப்பெண் வள்ளி முருகனின் துணைவியாகி
சின்னவீடாகி சிறுமையடைகிறாள்.

இன்னொரு விநோதமான கடவுள் வழிபாட்டின் ஊடுருவலும்
வந்து சேருகிறது.

கே: அது என்ன கதை?

அதுதான் நம் முருகனின் அண்ணனான விநாயகன்/கணேசன்.
வடநாட்டில் பிள்ளையாருக்கு 2 மனைவியர். சில கதைகளில்
3 மனைவியர் . அவர்கள் புத்தி, சித்தி, விருத்தி.இதில் யார் புத்தி,
யார் ஷித்தி , யார் விருத்தி என்பதற்கும் பல கதைகள் உண்டு.
பிள்ளையாரின் மகள் சந்தோஷிமாதா என்ற கதையும் உண்டு.

நம் தமிழ்ச்சமூகத்திற்கு வரும்போது பிள்ளையார் முருகனின்
அண்ணன் ஆகிவிடுகிறார். அத்துடன் வடக்கே இருந்த கார்த்திகேயனின்
பிரம்மசாரியம் தெற்கின் பிள்ளையார் மீது சுமத்தப்படுகிறது.
எனவே பிள்ளையாரின் மனைவியர் இடம் மாற்றம் பெற்று
முருகனின் கதைக்குள் வந்துவிடுகிறார்கள்!
சைவம் தெய்வானையை க்ரிய சக்தி என்றும் வள்ளியை
இச்ச சக்தி என்றும் சொல்வது இதனால் தானோ என்னவோ!
வடக்கில் பிள்ளையாரின் இடது தொடையில் இருந்த மனைவி
அதே ஆடை அலங்காரங்களுடன் முருகனின் இடதுபக்கத்தில்
உட்காருகிறாள். ஆடை ஆபரணங்கள் கையில் தாமரை மலர்
சகிதம் காட்சி தரும் தெய்வானை.

இன்னொரு கதை என்னவென்றால் இந்திரனை வென்ற கார்த்திகேயன்.
அப்போது இந்திரன் எல்லாம் இழந்துவிடுகிறான். மனைவியும்
ஓர் ஆணின் சொத்து, உரிமைப்பொருள் என்ற பின்னணியில்
இந்திரன் இழந்தது என்னவெல்லாம் என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும். ஆனால் வெற்றி கொண்ட் கார்த்திகேயன் இந்திரனின்
ராஜ்ஜியத்தை அவனுக்கே திருப்பிக்கொடுத்துவிட்டான் என்ற கதையின்
பின்னணியில் இந்திராணியின் முகமும் தெரிகிறது.

இந்திரனின் வீரத்தை தமிழ் இனக்குழுத்தலைவன்
முருகனிடம் சேர்த்துக்கொண்ட தமிழ்ச்சமூகம்
இந்திராணியை இந்திரனின் மகளாக்கி முருகனை அவன்
மருமகனாக்கியது. ஆனால் உறவு முறையில் அவன் திருமாலின்
மருமகன். திருமாலின் நாபிக்கமலத்தில் பிறந்தவனே பிரம்மன்.
இப்படிச் சுற்றி சுற்றி வருகிறது புராணக்கற்பனைகள்.

வீரத்தின் அடையாளமான இந்திரன் கார்த்திகேயனில் சங்கம்ம் ஆகி
கார்த்திகேயன் முருகனாகும் போது முருகனின் அடையாளம்
பிரம்மச்சாரி, கிரஹஸ்தன், சன்யாசி என்ற 3 நிலையிலும்
காணப்படுகிறது. முருகனுக்கு மட்டுமே இந்த 3 நிலைகளும்
உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திர வழிபாடு வீழ்ச்சியடைந்தது பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டியதாகும்.
உலோகப் பயன்பாட்டுப் பண்பாட்டு நிலையில் வஜ்ராயுதம் வழக்கிழந்து போனதை,
முருகன் தேவசேனாபதியான புராணக் கதையுடன் இணைத்து நா. வானமாமலை அவர்கள் விளக்கியுள்ளார்.
மாயோன் - வாலியோன் (கண்ணன் - பலராமன்) வழிபாட்டு வளர்ச்சியின் பின்னணியில் நதிநீர்ப் பாசன முயற்சிகள், உழவு மாடுகளைப் பயன்படுத்திக் கலப்பை விவசாயம் மேற்கொள்ளப் பட்டமை - ஆகியவற்றின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும். விவசாயத் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக மாயோனின் மனைவியராக நிலமகளும் திருமகளும் (பூதேவியும் ஸ்ரீதேவியும்) அங்கீகரிக்கப்படும் நிலை தோன்றிவிட்டது. திருமகள் ‘இந்திரா' என்றே வடமொழியில் குறிப்பிடப்படுகிறாள். உற்பத்தி சக்திகள் புதிய கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாட்டின் தலைமைக் குடிகளிடமிருந்து ‘வம்ப வேந்தர்கள்' கைக்குச் சென்றுவிட்டன என்பதை இவை உணர்த்துகின்றன. இந்திரனின் படைத்தளபதியாக இருந்த வடபுல ருத்ரன் - தமிழகக் கூற்றுத் தெய்வத்தின் அம்சங்களையும் சுவீகரித்து கங்காதரராகவும் காளை வாகனராகவும் வளர்ந்து, நதிநீர்ப் பாசனத்தாலும் உழவு மாடுகளாலும் வளர்ச்சியடைந்த விவசாயப் பொருளாதார நிலையின் யஜமானனாக யக்ஞத் தலைவனாக - வேரூன்றிவிட்ட நிலையைப் பக்தி இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இத்தகைய சமூகவியல் நிகழ்வுகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், இந்திரியம் என்ற ஜீவசக்திக்குள் புதைந்திருக்கும் வித்து (விந்து, அணு) என்பது பிரம்மாவாக (அண்ட விதையாக) அடையாளம் காணப்பட்டது. இது அல் பிரஹ்மா அல்லது ஆப்ரஹாம் என்ற மனிதகுல மூதாதை பற்றிய செமித்திய சிந்தனைத் தாக்கத்தின் விளைவு ஆகலாம். தத்துவ மட்டத்திலும் இந்திரனின் தனித்தன்மை கேள்விக்குரியதாயிற்று. இந்திர வழிபாட்டின் வீழ்ச்சியை இத் தத்துவச் சிந்தனை மேலும் விரைவுபடுத்திற்று என்பதில் ஐயமில்லை.


வேறு ஏதேனும் நேரடி சான்றுகள் உள்ளதா?

இருக்கிறது. அதுதான் கொஞ்சம் உண்மைக்கு நெருக்கமானது என்பது
என் வாசிப்பில் நான் கண்டது. இந்தியா முழுவது, தாய் தெய்வ
வழிபாடே இருந்தது என்பதை குஜராத், மத்திய பிரதேசம் ,மகாராஷ்டிரா
மற்றும் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் (நான் பயணித்த மாநிலங்கள்)
கிராமங்களில் இன்றும்
நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அவர்களை சப்தகன்னியர் என்றும்
அழைக்கலாம்.

மிகப்பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டிய முதல் பிரகாரத்தில் தென்புறமுள்ள
தென்முகக் கடவுளான தெட்சிணா மூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த மங்கையர் இருக்கக்
காணலாம். வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில்
ஏழு தேவியரும் காட்சி தருவார்கள். சில இடங்களில் தனித்தனி சிற்பமாகவும்,
சில கோவில்களில் நீண்ட செவ்வகக்கல்லில் அடுத்தடுத்தும் இத்தேவியர் சிற்பங்கள் காணப்படுகின்றன

ஆனால் பேரரசுகள் வந்தப்பின் ஆணாதிக்க சிந்தனையில் பெருந்தெய்வ வழிபாட்டில்
பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மூன்று ஆண்கடவுளரின் மனைவியராக - சக்தியாக-
இந்த சப்தகன்னியரின் இடம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

சப்த கன்னியர் 7 பேர் : பிராம்மி, மகேசுவரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி அம்மன்,
இந்திராணி, சாமுண்டி. (எண்ணிக்கையில் சில மாறுதல்கள் இருக்கலாம்)
இதில் இந்திராணி , இந்திரனுடன் சம்பந்தப்பட்ட இந்திராணி முருகனின்
இடதுபக்கம் அமர்கிறாள். முருகனின் 5வது 6 வது கைகள் தான் வேலைப்
பிடித்து சுழற்றும் கைகள். அதே கைகள் முருகனின் இடதுப்பக்கம்.
அவள் கைகளில் வைத்திருக்கும் தாமரைப்பூ ஒரு வகையில்
திருமகளின் அடையாளம். திருமகளுக்கு இந்திராணி என்ற பெயரும்
உண்டு. திருமகள் தான் பூதேவியாகவும் ஸ்ரீதேவியாகவும் இருக்கிறாள்.

இத்தனைக் குழப்பங்களுடனும் தான் இந்திராணி தமிழ்ச்சமூகத்தில்
நுழைகிறாள். தமிழ்ச்சமூகத்தின் ஒழுக்க நெறிக்கும் வாழ்வியலுக்கும்
அவள் இந்திரனின் மகள் என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக
இருப்பதால் அந்த ஒற்றைப்பார்வையே நமக்குப் போதுமானது
என்று நாம் இருந்துவிட்டோம். !

மேலும் இந்திராணி என்றவுடன் இந்திரனின் மனைவி மட்டும் தானா?
இந்திரனின் மகளாக இருக்கவே முடியாதா! (இது தற்கால பெண்ணியப்பார்வை
என்று நீங்கள் நினைக்கலாம்...!)

கே: இந்திரனை பிரம்மன் என்று சொன்னதன் பின்னணி..?
இது ஒரு குறியீடு. நிலமும் நிலம் சார்ந்த வாழ்வுமே
உற்பத்தியின் அடையாளம். மருத நிலக்கடவுள்
இந்திரன். நிலமே உற்பத்தியின் அடையாளம்.
உற்பத்தியின் கடவுள் - படைப்பு சிருஷ்டி பிரம்மன்.
பிரம்மனின் சிருஷ்டி , உற்பத்தி மருத நிலத்தின்
இந்திரனின் ராஜாங்கத்தின் அடையாளம்.
ஒன்றின் அடையாளன் இன்னொன்றின் அடையாளத்தின் மீது
தத்துவரீதியாக காரண காரியங்களுடன் கலக்கும்போது
அதில் ஏதாவது ஒன்று காலப்போக்கில் மங்கி
மறைந்துவிடும். இந்திரன் எப்போதும் ஆட்சி அதிகாரத்தின்
அடையாளமும் கூட.

கே: இறுதியாக ஒரு கேள்வி..
அடிப்படையில் பெரியாரை ஏற்றுக்கொண்டிருக்கும் நீங்கள் எப்படி
இவ்வளவு புராண இதிகாச கதைகளுடன்..

சென்ற மாதம் கோரேகான் தமிழ்ச்சங்கத்தில் "பெண்களும் கண்டுப்பிடிப்புகளும்"
என்ற தலைப்பில் பேசினேன். அப்போதும் என்னிடம் இதே கேள்வி
வேறொரு தோரணையில் வந்தது. அவர்களிடம் சொன்ன அதே பதிலை
உங்களுக்கும்...
பெரியாரிடமிருந்து தான் நான் இதைக் கற்றுக்கொண்டேன்.
ப்ரசுராமனின் கதையில் தந்தையின் சொல் கேட்டு தாயைக் கொன்ற
மகனின் கதை வெறும் கதையல்ல. அதுதான் தாய்வழி சமூகம்
தந்தை வழி ஆணாதிக்க சமூகமாக மாறும் புள்ளி.
புராண இதிகாச கதைகளின் ஊடாக மனித நாகரிகத்தின்
வளர்ச்சி, வாழ்க்கை, கலாச்சார கலப்பு, கலாச்சார எதிர்ப்பு,
கலாச்சார ஆதிக்க படை எடுப்பு ... என்று மறுவாசிப்பு
செய்வது அவசியம் என்பது என் எண்ணம்.

கவிஞ்ர் ஜெயதேவனின் முகநூல் பக்கத்திற்கு என் பின்னூட்டமும்
அதைத் தொடர்ந்த பின்னூட்டங்களும் பதிவுகளுக்கும் நன்றி.
மேலே சொன்னதில் சில வரலாறு. பல புனைவுகள்.
எல்லாம் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளவும்
மீண்டும் நன்றி.

Tuesday, February 17, 2015

மனநிலை பிறழ்ந்தவர்கள்.. யார்?




மனநிலைப் பிறழ்ந்தவர்களை நம் சட்டம் எந்த அளவுக்குப்
பாதுகாக்கிறது? அவர்களுக்கு உடல் ரீதியாக இழைக்கப்படும்
கொடுமைகளை அவர்களால் உணர முடியாது..யார் தன்னை
இந்த நிலைக்கு ஆளாக்கினார்கள் எனப்தை அவர்களால்
அடையாளம் காட்டமுடியாது..ஏன்.. தனக்கு என்னன் நடந்திருக்கிறது
என்பதையும் அவர்களால் முழுமையாக உணர்ந்து கொள்ளவும்
முடியாது. இந்த "எல்லா முடியாது" களும் நம் சமூகத்தில்
சட்டம் அவர்களைப் பாதுகாக்க "முடியாது " என்று
சொல்வதற்கும் காரணமாக இருக்கிறது. இது சரியா..?

இந்த "முடியாதுகளின்" இன்னொரு பககத்தில் மிகவும்
கோரமாகத் தெரிகிறது பெண்களைத் தெய்வமாகக்
கொண்டாடும் நம் சமூகத்தின் கொடூரமான முகம்.
BANYAN அமைப்பின் கள ஆய்வு தமிழகத்தில்
இம்மாதிரி பாதிக்கப்பட்ட பெண்கள் எய்ட்ஸ் மற்றும்
சில பால்வினை வியாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
என்று சொல்கிறது. சில பெண்கள் கர்ப்பமடைந்திருக்கிறார்கள்.
50% மேலான் பெண்களின் நிலை இதுதான்.என்று உறுதி
செய்கிறார் இந்த அமைப்பின் வந்தனா கோபி குமார்.
மேலும் இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தான்
இப்பெண்கள் மிகவும் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
என்று டாடா நிறுவனத்தின் சமூகவியல் ஆய்வுக்குழு
புள்ளிவிவரத்துடன் தங்கள் முடிவுகளை முன்வைத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட இப்பெண்களின் வழக்குகளை எந்தக் காவ்ல்நிலையமும்
எடுத்துக்க்கொள்ள தயாராக இருப்பதில்லை. அவர்கள் நிராகரிக்கும்
ஒரே காரணம்.. "ப்ப்பாகல் ஹை.. அவ பைத்தியக்காரி.., கிறாக்கு.."

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தீர்வு காண நியமிக்கப்பட்ட
வர்மா கமிட்டி சில பரிந்துரைகளை வைத்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் இருப்பிடத்திற்கு பெண் போலீஸ்
அதிகாரி வரவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருக்கும்
உடல்/மன நிலையைக் கருத்தில் கொண்டு பயிற்சிப் பெற்ற
பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கபப்ட்டிருக்க வேண்டும்.
இவை அனைத்தும் வீடியோ காட்சியாகவும் பதிவு
செய்யப்பட்டிருக்க வேண்டும்.. என்று சில மாற்றங்கள்
criminal Law Amendment Act 2013 ல் இடம் பெற்றிருக்கின்றன.
எனினும் , NPRD (National Platform for the Rights of the Disabled)
 அமைப்பின் தலைவர் முரளிதரன்
"மாற்றுத்திறனாளிகளுக்கு நீதி
கிடைக்கச்செய்வது என்பது இப்போதும் கடினமான
செயலாகவே இருக்கிறது " என்கிறார்.

மனநிலைப் பிறழ்ந்தப் பெண்ணின் உடலையும்
வேட்டையாடும் மனிதர்களை என்ன செய்யலாம்?
எப்படி இவர்களை நம்மில் ஒருவராக ஏற்றுக்கொள்வது?
எனக்கு உண்மையிலேயே சந்தேகமாக இருக்கிறது,
உண்மையில் , யார் மனநிலை பிறழ்ந்தவர்கள்?

Sunday, February 15, 2015

வராக அவதாரமும் ஃபன்றி திரைப்படமும்




. நேற்று (சனிக்கிழமை)மும்பை விழுத்தெழு இயக்கம் தோழர்கள்
"அரசியல் எனக்குப் பிடிக்கும் " என்ற ச. தமிழ்செல்வன் அவர்களின்
புத்தகத்தை அறிமுகம் செய்து அதன் பின் fandry  - ஃபன்றி
என்ற மராத்தி திரைப்படத்தை திரையிட்டார்கள்.

விளிம்புநிலை மக்களின் கதையை ஒவ்வொரு காட்சியிலும்
கொண்டுவந்ததில் இத்திரைப்படம் முழு வெற்றி பெற்றிருக்கிறது.
மெட்ராஸ் திரைப்படத்தின் இயக்குநர்

 mainstream சினிமாவில் எந்த மாதிரியான கதைகள் சொல்லப்படும்,
 எந்த மாதிரியான கதைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற விதிமுறைகள்
 இருக்கிறது. இங்கு முழுக்க முழுக்க வியாபாரம் என்கிற பொழுது,
 இதுவரைக்குமான தலித் சூழலை மையமாகக்கொண்ட படங்களோ,
 தலித் வாழ்வியலை மையமாகக் கொண்ட படங்களோ அதிக அளவில்
 வெற்றிபெற்றதேயில்லை. இதன் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கு தமிழ்சினிமா என்ன மாதிரியாக இருக்கிறது.
என்ன மாதிரியான கதைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
. என்பதையும் பார்க்க வேண்டும். ’
அம்பேத்கர்’ என்ற பெயரை நேரடியாக வசனத்தில் இடம்பெற
வைப்பதை தடை செய்கின்ற ஆட்களையும் நான் சந்தித்திருக்கின்றேன்.
 முதலில் அந்த வசனத்தை கதையிலிருந்து எடுங்கள்
என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த வசனத்தை எடுத்துவிடுங்கள்,
 இதெல்லாம் இங்கு ஓடாது, இங்கு வேறுமாதிரியான படங்கள் தான் ஓடுகின்றது”
 என்று சொல்கிறார்கள். அச்சூழலில் தலித் வாழ்வியல்
சார்ந்த படங்கள் எடுக்கவே முடியாது
 என்ற இக்கட்டான தருணத்தில் நாம் படமெடுக்கின்றோம்,
 இங்கு என்ன மாதிரியான காட்சி வைக்க முடியும்
, எதெல்லாம் வைக்க முடியாது என்று நிறைய தடைகள் இருக்கிறது.
இதுவரைக்கும் தலித் வாழ்வியலை சொன்ன சினிமாக்களே கிடையாது
 என்பதுதான் இங்கு நடப்பது. ”வெண்ணிலா கபடி குழு” போன்ற
 சில படங்கள் மேலோட்டமான தலித் வாழ்வியலை சொல்லிச் செல்கிறது
இந்தமாதிரியாக சிலபடங்களில் சில விஷயங்களை தமிழ்சினிமாவில்
முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் நேரடியான தலித்
படங்கள் ஏதும் வந்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை
என்று சொல்லவேண்டும். எனக்குத்தெரியாமல் ஓரிரண்டு படங்கள்
 இருந்தாலும் அவை வணிக ரீதியாக வெற்றிபெற்றிருக்கிறதா?
என்று கேட்டால். சத்தியமாக இல்லை. ’என்று தன் நேர்காணலில்
மெட்ராஸ் திரைப்படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் சொல்லியிருப்பது
நினைவுக்கு வருகிறது.

ஃபன்றி திரைப்படத்திலிருந்து...


காட்சி 1
------------

ஜபயா என்ற தலித் சிறுவனின் குடும்பம், அந்தக் கிராமம்.
கிராமத்தில் ஜபயாவுக்கு கல்வி க்டைசி பெஞ்சில் உட்கார்ந்தாவது
கிடைக்கிறது. பள்ளிக்கூடத்தின் சுவர்களில் பாபாசாகிப் அம்பேத்கரின்
திருவுருவம் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் பள்ளிக்கூடமும்
அங்கு கற்பிக்கப்படும் கல்வியும் சக மாணவர்களும்?

காட்சி 2
--------

இன்னொரு காட்சி இத்திரைப்படத்தின் இந்திய முகத்தை புரட்டிப்போடும்
ஜனகணமன...
பன்றிப்பிடிக்கும் ஜபயாவின் குடும்பம்.. இடைவேளைக்குப் பின்
படம் முழுக்கவும் பன்றியை விரட்டும் ஜபயா, அவன் அம்மா, அப்பா,
இரு சகோதரிகள். அக்காட்சியை ரசித்துப் பார்க்கும் ஊர் வாலிபர்கள்,
குறிப்பாக ஜபயாவுடன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் சக மாணவ மாணவியர்.
ஜபயா என்ற இரண்டும்கெட்டான் வயதுள்ள பள்ளி சிறுவனுக்கு
அவன் விரும்பும் ( ஆமாம் அவன் மட்டுமே ரகசியமாக விரும்பும்
அவனுடன் படிக்கும் மாணவி) அந்தப் பெண் அவன் பன்றியை விரட்டிப்
பிடிப்பதைப் பார்த்துவிடக் கூடாதே என்று சுவரோரம் மறைந்து நிற்கும்
போது.. அந்தப் பதின்ம வயதில் அச்சிறுவனின் மனநிலை
அழமுடியாத ஒரு சோகத்தை பார்வையாளனுக்கு ஏற்படுத்திவிடுகிறது.

அதையும் மீறி ஜபயாவின் அப்பா ஜபயா பன்றியை விரட்டாமல்
ஒளிந்துக்கொண்டிருப்பதை அறிந்து அவனைக் கோபத்தில் திட்டி
அடித்து இழுக்கவும் அப்பாவுடன் சேர்ந்து மீண்டும் பன்றியை விரட்டும்
ஓட்டத்தில் பன்றி ஜபயாவின் கம்பு கயிற்று சுருக்கில் மாட்டிக்கொள்ளும்
தருணத்தில் பள்ளிக்கூடம் முடிந்து இந்திய தேசிய கீதம் ஒலிக்கிறது
"ஜன கண் மன கதி நாயகே ஜெயஹெ
பாரத பாக்ய விதாதா..."
தேசிய கீதத்திற்கு மதிப்பளித்து ஜபயா அட்டன்ஷன் பொசிஷனில் நிற்கிறான்.
மகன் அசைவற்று நிற்பதைக் கவனிக்கும் அப்பாவுக்கு இப்போது
அவனை எதுவும் சொல்ல முடியவில்லை... இத்தனை மணி நேர
ஓட்டமும் வீணாகிவிடுமோ.. பன்றி அவர்களிடமிருந்து தப்பித்துவிடுமோ..
பன்றிப் பிடிக்கின்ற வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தாலும்
ஜபயாவும் ஜபயாவின் குடும்பமும் இந்தியர்கள் என்பதை
வேறு எப்படித்தான் காட்ட முடியும்? தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பதில்
அவர்கள் தாங்களும் இந்தியர்கள் என்பதைக் காட்டுகிறார்கள்!???
அல்லது ஜன கணமன .. வெற்று ஒலிகளில் அவர்கள் இந்தியர்கள்
என்பது இந்த மண்ணில் ஒலித்துக்கொண்டே இருக்கிறதா..?

இந்த இரு காட்சிகளும் ஃப்னறி திரைப்படத்தின் வெற்றி.
ஃபன்றி திரைப்படத்தின் அந்தக் கிராமம் தான் இந்திய சமூகம்.
அம்பேத்கரின் திருவுருவம் வரையப்பட்ட அப்பள்ளிக்கூடம் தான்
இந்தியாவின் கல்விக்கூடம். கோவில் திருவிழாவில் கூட்டத்துடன்
கூட்டமாக ஜபயாவைச் சேர்த்தும் விலக்கியும் ஆடும் பக்தர்கள் தான்
இந்தியாவின் பெருமை மிக்க இறைவழிபாடு..

< வராக அவதாரம் (பன்றி அவதாரம்)
 விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும்.
பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற
 இரணியனின் தம்பியான் இரண்யாட்சன் என்ற அசுரனுடன்
 வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள்
 போர்செய்து வென்றார் .>

என்று தங்கள் புராணத்தில் எழுதி வைத்திருக்கும் இந்தியாவின் அவதார
கதைகளைக் கொண்டாடும் இந்திய சமூகம் ஜபயா என்ற சிறுவனும்
அவன் குடும்பமும் பன்றியை விரட்டிப்பிடிப்பதைப் பார்த்து அவர்களை
ஏளனமாக பேசும் சமூகம்..
அவர்களின்  வராக அவதாரத்திற்கு இரண்யாட்சனைப் பிடிக்க ஆயிரம்
ஆண்டுகள் ஆகிறதாம். ஜபயாவுக்கும் அவன் குடும்பத்திற்கும்
அரை மணி நேர ஓட்டம் போதுமானதாக இருக்கிறது!
இந்த ஆட்டத்தில் வராக அவதாரம் தோற்றுப்போகிறது.
இரணியனின் வாரிசுகள் ஜெயிக்கிறார்கள்.

கேலியும் கிண்டலும் செய்பவர்களைப் பார்த்து ஜபயா படத்தின் இறுதியில்
வீசுவானே ஒரு கல்...

அந்தக் கல் ,

இந்திய சாதி முகத்தின் மீது அவன் வீசி எறிந்திருக்கும் கல்.

வராக அவதார பக்தர்களை நோக்கி வீசி இருக்கும் கல்.

ஜன கண மன..

மன ஜன கண




Tuesday, February 10, 2015

கண்ணாடி நகரத்தில் சிதையும் என் பிம்பங்கள்



முகநூல் வழியாக கவிஞர் ஜெயதேவன் என் முகவரி பெற்று
கண்ணாடி நகரம் - அவர் கவிதை தொகுப்பை அனுப்பித்தந்தார்.
செளந்தர சுகன் ,மற்றும் கல்வெட்டுப்பேசுகிறது ஆகிய சிற்றிதழ்களில்
கவிஞர் ஜெயதேவன் கவிதைகள் அறிமுகம் ஏற்கனவே எனக்குண்டு.
அப்போதெல்லாம் அவர் கவிதைகளில் தென்படும் வானம்பாடிகளின்
வாடையை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவர் கவிதை தொகுப்பிற்கு
கவிஞர் யவனிகா கொடுத்திருக்கும் அணிந்துரையில் அவர் வானம்பாடிக்
கவிஞர் என்பதையும் மாறிவரும் இலக்கியப்பரப்பில் அவர் தன்னை
நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் முயற்சிகளையும் தெளிவாக
உணர்த்திவிடுகிறார். அவருடைய விமர்சனங்கள் கண்ணாடி
நகரத்தின் உடைபடாத பிம்பங்களை மிகவும் தெளிவாகக்
காட்டிவிடுகிறது.

96 பக்கங்களில் நம் வாசிப்புக்கு வரும் கண்ணாடி நகரத்தின்
16 பக்கங்களில் நான்கு பேர் இவர் கவிதைகள் குறித்து
அணிந்துரையாகவும் அவர்களில் அமிர்தம் சூர்யா மட்டும்
விதிவிலக்காக சில விமர்சனப்பார்வைகளையும் வைத்திருக்கிறார்.
கவிதைகளில் பார்க்கும் கண்ணாடி நகரத்தின் 4 வீதிகளிலும்
இந்த நால்வரும் நடந்திருக்கிறார்கள். கண்ணாடி நகரம் குறித்த
ஒட்டு மொத்தப் பார்வையையும் இவர்களின் பதிவுகள்
மொத்தமாக அடக்கிவிடுகின்றன.

பொதுவாக கவிதை நூலுக்கு ஆர்வக்கோளாறில் நாம் இணைக்கும்
அதிகப்படியான அணிந்துரைகள் கூட வாசகனுக்கு ஒரு தற்காலிக
இடையுறாகி அவன் பார்வையை மறைக்கும் ஆபத்தை விளைவிக்கிறது
கண்ணாடி நகரத்தில் எவ்வளவொ முயற்சி செய்தும் என் வாசிப்பில்
அந்த அணிந்துரைகளின் பார்வை அடிக்கடி வந்து இடையூறு செய்தது
என்பதால் இதை எழுத வேண்டியதாகிவிட்டது!.


வானம்பாடிகளின் பலமும் பலகீனமும் அவர்களின் சொல்லாடல்களும்
சொல்லாடல்களின் ஊடாக அவர்கள் கொண்டுவர எத்தனிக்கும்
கருத்தாடல்களும் தான். முதலாளித்துவத்திற்கும் உலகமயமாதலுக்கும்
எதிரான தம் கருத்துகளை ஒட்டு மொத்தமாக பதிவு செய்யவே
இவர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். இன்றைய சூழலில்
மூன்றாம் உலகப் பிரச்சனைகள் சவால்கள் முன் நிற்கின்றன.
நவீன காலனி ஆதிக்கத்திலிருந்தும் புதிய பழைய ஆதிக்கத்தில்
இருந்தும் தங்களையும் தங்கள் கவிதைகளையும் விடுவித்துக்கொள்ள
இவர்கள் தொடர்ந்துப் போராடுகிறார்கள். இப்போராட்டத்தில் தங்களையும்
தங்கள் இருப்பையும் அடித்து நொறுக்கும் அதிகாரம், அமைப்பு ஆகியவை
அறிவியல் என்ற பெயரில் தங்களிடமும் செயல்படுவதை இவர்கள்
உணர்ந்திருக்கிறார்கள். தங்களிடம் தங்களுக்காக மிஞ்சி இருக்கும்
தங்கள் சொற்களை , ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சொற்களைச் சேகரித்து
தனக்கான கவிதையைக் கண்டு கொள்ள முனையும் போது சொற்கள்
மீண்டும் தற்காலிக இணைப்பை விட்டு தகர்ந்துப் போகின்றன.
இதைக் கவிஞ்ர்களின் இயலாமை என்று சொல்ல முடியாது.
ஏற்கனவே இருக்கும் சொற்களை வைத்துக்கொண்டு
புதிய உலகத்திற்குள் நுழையும் தருணத்தில் அந்தப் புதிய
உலகத்தின் இயலாமையை அதன் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை
வெளிககாட்ட முனையும் ஒவ்வொரு முதல் பயணியும்
சந்திக்க வேண்டிய புள்ளிகள். அதனால் தான் சொற்களும்
கருத்துகளும் கலந்து ஒட்டு மொத்தமாக ஒரு இலக்கிய
ரசவாத வித்தையை செய்யமுடியாமல் போய்விடுகிறது.

கண்ணாடி நகரத்தில் கவிஞர் ஜெயதேவன் ஒரு தேர்ந்தப் படைபபாளராக
வெற்றி பெற்றிருக்கும் புள்ளிகள் உண்டு. சில வரிகளிலும கவிதைகளிலும்
அது சாத்தியப்படாமலும் போயிருக்கிறது.
வீட்டுக்கு வராத வெளி, முதல் தகவல் அறிக்கை, காலிக்கோப்பைகள்
என்ற மூன்று கவிதைகளிலும் சொற்களும் படிமங்களும்
கண்ணாடி நகரத்தில் கவிஞனின் பிம்பங்கள்.

"இது கணினிகள் கர்ப்பம் சுமக்கும் காலம்"
என்ற வரியிலிருந்து மீள்வதற்கு சில மணி நேரங்கள் ஆனது.

கவிஞரின் கூர்மையான வரிகள் கவிதைகளில்
ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.

மின் காந்த அலைகளை உண்டு வாழும் வாழ்க்கையில்
"அவள் இப்போது மறந்துவிட்டாள்
ஒரு ஆணை முத்தமிடுவது எப்படி என்பதை"
என்று இன்றைய ஐடி அடிமை வாழ்க்கையில் இயல்பான
காதலும் ஆண் பெண் உறவும் தொலைந்துப் போனதை
மிக அருமையாக தன் கவிதைகளில் கொண்டுவந்திருக்கிறார்.

கவிதை வெறும் அழகியல் அல்ல.
கவிதை வாழ்க்கை. வாழ்க்கையின் ஓர் அங்கம்.
கவிதை வாழ்க்கையின் கனவு மட்டும் அல்ல.
கவிதை நாம் வாழ விரும்பும் உலகைக் கண்டு களிக்கும் கனவு.
கவிதையும் கவிஞ்னும் வேறு வேறு அல்ல.
உயிரைப் போல ஒவ்வொரு சொல்லும் கவிஞனிடம்.
வாசிப்பவனை சில வரிகள் மயக்கும். சில வரிகள் சிந்திக்க வைக்கும்.
சில வரிகள் இயலாமைகளை மட்டுமே சொல்லி மவுனத்தில் அழும்
சில வரிகள் எப்பொதும் தத்துவ விசாரணைக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும்.
வானம்பாடிக் கவிஞர்கள் தெத்தியடியாக சில உண்மைகளை
உடைத்து சொல்லிவிடுவார்கள். அந்த உண்மை உண்மையை
நேசிக்கும் வாசகனைச் சுடும். கண்ணாடி நகரத்தில்
அப்படியான சில அனல் பறக்கும் வார்த்தைகளில்
நானும் என்னைச் சுட்டுக்கொண்டிருக்கிறேன்.

பொங்கள் உழவர் திருநாள், தமிழர் திருநாள்..
அதனால் தான் அந்த நாளை நாம் கொண்டாட வேண்டும்
என்று என் மகனிடம் பொங்கல் திருநாள் குறித்து
விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த
என் மகன். என்னிடம் கேட்டான்...

உழவும் உழவர்களும் இவ்வளவு பெருமைக்குரியவர்கள்,
போற்றுதலுக்குரியவர்கள், கொண்டாடப்பட வேண்டியவர்கள்..
என்றால்...
ஏன் அம்மா...
நீயும் தந்தையும் உழவர்களாக இல்லை?
ஏனம்மா என்னை நீ ஒரு உழவனாக்கவில்லை?

என் மகன் கேட்ட அதே கேள்வியை கவிஞர் ஜெயதேவன்
தன் கவிதைகளின் ஊடாக என்னிடமும் ...

"செடி பார்க்க வேண்டுமென்றால்
நீ செடியாகு..

இல்லை நட்டு வை உன் மகளை/மகனை
உன் களத்து மேட்டு ஈரமண்ணில்
அவள் நிச்சயம் பார்ப்பாள் குளம்..

கண்ணாடி நகரம் என்னையும் என் வாழ்க்கையையும்
என் வாழ்க்கையின் கீறல்களையும் எனக்கு காட்டியது.
இதுவே கண்ணாடி நகரத்தில் என் பிம்பம்.

----


நூல்: கண்ணாடி நகரம் - கவிதை தொகுப்பு
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை.
பக்: 96  விலை ரூ.70/

Thursday, February 5, 2015

தண்ணீர்க்கொள்ளையில் தாமிரபரணி




சிப்காட் நிறுவனம்  தண்ணீர் தூய்மை செய்கிற நிலையத்தை
பாட்டிலிங் கம்பேனியிடம் ஒப்படைத்தது. இதற்காக சிப்காட்
நிறுவ்னம் 1543 ஏக்கர் நிலத்தை  ஒதுக்கியது.
இத்தொழிற்சாலைக்கு தண்ணீர் மூலாதாரம் தாமிரபரணி.
தாமிரபரணி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு நாளொன்றுக்கு
900,000 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொண்டிருந்த கோக்
கம்பேனி 2014 லிருந்து நாளொன்றுக்கு 18,00,000 லிட்டர்
தண்ணீரை எடுக்க ஆரமபித்துவிட்டது. 
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் விவசாயமும்
குடிநீர் வ்சதியும் தாமிரபரணி ஆற்றை மட்டுமே நம்பி
இருக்கும் சூழலில் கோக் இதே அளவில் தண்ணீரை
ஒவ்வொரு நாளும் எடுக்க ஆரமபித்தால் இவ்விரு
மாவட்டங்களும் வ்றண்ட பாழ் நிலங்களாக விரைவில்
மாறிவிடும்.
உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்கள் கோக் தண்ணீர்க்கொள்ளையைத்
தடுக்க தங்கள் மாநிலங்களில் கோக் கம்பேனிக்கு லைசன்ஸ்
வழங்கவில்லை! ஆனால் தமிழ்நாட்டில் எவ்வித சலசலப்பும் இல்லை!
தென் மாநிலங்களில் அக்வாஃபினா என்ற நிறுவனம் மட்டும்
1800 இடங்களில் தண்ணீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளை
அமைத்துள்ளது. அதில் 615 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில்
இருக்கின்றன. தென்மாவட்டங்களில் ஒரு பக்கெட் தண்ணீர்
ரூ 3 முதல் 5 வரை விற்பனைக்கு வந்துவிட்டது.
தண்ணீருக்காக ஆற்றை நம்பிவாழ்ந்த மக்கள் இப்போது
தண்ணீர் லாரியை எதிர்ப்பார்க்கும் நிலை வந்துவிட்டது.

கோக் கம்பேனி தண்ணீர் வியாபாரத்தில் அடிக்கும் பகற்கொள்ளை
எவ்வளவு தெரியுமா?

தாமிரபரணி ஆற்றிலிருந்து ஒரு நாளுக்கு 18 லட்சம் லிட்டர் தண்ணீர்
எடுக்க கோக் , அரசுக்கு கொடுக்கும் விலை 1000 லிட்டருக்கு 13 ரூபாய் 50 காசு.
அதாவது 18 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க கொடுக்கும் விலை மொத்தம்
ரூபாய் 24,300/ மட்டும்.ஆனால் பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரை
ரூபாய் 25க்கு விற்கிறது!

சின்னதா ஒரு மனக்கணக்குப் போட்டுப்பாருங்கள்.

1800,000 லிட்டர் தண்ணீரைத் தூய்மைப்படுத்த, பாட்டிலில்
அடைக்க, விளம்ப்ரப்படுத்த , வாகனச்செலவு இத்தியாதிக்கு
ஒரு நாளைக்கு 50 லட்சம் செலவு செய்தாலும் கூட
கோக் ஒரு நாளைக்கு 4 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது.
நம்ம ஊரு தண்ணீரை எடுத்து நம்மிடமே பாட்டிலில் அடைத்துக்
கொடுத்து விலைக்கு வாங்க வைத்து, நம்ம வயலை வறண்ட
நிலமாக்கி, நம்ம ஊரில் குடி நீர்ப்பஞ்சம் உண்டாக்கி..
நம்ம நீர்வளத்தைக் கொள்ளை அடித்து...
நம் அனைவ்ரையும் அடி முட்டாள்களாக்கி..
... என்ன நடக்கிறது நம்ம ஊரில்.. நம்ம நாட்டில்..

பார்லே, பிஸ்லரி, கோக், பெப்சி, பார்லே அக்ரோ, மோகன் மிக்சிகன்ஸ்..
இந்த வெளிநாட்டு தண்ணீர்க்கொள்ளையர்களுடன் நம் உள்நாட்டு
தண்ணீர்க்கொள்ளையர்கள் ரிலையன்ஸ் அமபானி வகையறா..

மூன்றாவது உலகப்போர் நடந்தால் அது தண்ணீருக்கான
யுத்தமாகத்தான் இருக்கும். இயற்கை வளமாக இருந்த
தண்ணீரை சில ஆண்டுகளுக்கு முன் உலக வங்கி
ஏன் விற்பனைக்குரிய வர்த்தகப்பொருளாக மாற்றியது
என்பது இப்போது புரிகிறது. ரொம்பவும் தாமதமாக...




Monday, February 2, 2015

அறிஞர் அண்ணாவின் நினைவுகள்



தினமும் அழுகை வருகிறது..அழ முடியவில்லை.
அன்றும் 1969 இதே நாளில்
அழுகை வந்தது. அழுது தீர்த்தேன்.
ஆனால் அன்று ஏன் அழுதேன் என்பதெல்லாம்
புரியவில்லை.
அண்ணா போய்விட்டார்... என்று கதறிக்கொண்டு
அப்பாவின் நண்பர்கள் அழுதார்கள்..
இழப்பின் வேதனை என்னவென்று தெரியவில்லை.
அவ்ர்களுடன் சேர்ந்து நானும் அழுதேன்.
இன்று இழப்பின் வேதனை என்ன்வென்று புரிகிறது.
அழுகை வருகிறது... அழவேண்டும்..
என்னைக் கொஞ்சம் அழவிடுங்கள்.

என் அழுகையில் கரைந்திருக்கிறது
இந்த இயக்கதிற்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த'
ஒரு தலைமுறையின் சோகம்

*அண்ணா உயிருடன் இருக்கும்வரை திமுக வின் தலைமை
நாற்காலி காலியாகவே இருந்தது.

*தான் வகித்த தி.மு.க பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில்
பலருக்கும் போகவேண்டும் என்று நினைத்தார்,
 "தலைமையிடம் அதிகாரம் குவியக் கூடாது.
 எந்த தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது" என்றார்!.

*அண்ணா இறந்தபோது அவரிடம் இருந்த சொத்துகள்
இறந்த மாதத்தில் சென்னை நுங்கம் பாக்கம் இந்தியன் வங்கியில்
 5,000 ரூபாய் மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய்
இதுதவிர..காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம்,
காஞ்சிபுரத்தில் ஒரு வீடு,  சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு
மூன்றும் தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!

அண்ணா ...இப்படி என்னவெல்லாமோ நினைவுக்கு வருகிறது

என் நினைவுகளின் சுவடுகளில் உன்னை அழிப்பதோ
மறப்பதோ அவ்வளவு எளிதல்ல.
உன் நினைவுநாளில் மட்டும் உன்னை நினைக்கும்
தலைவர்களின் கூட்டத்திலோ
அவ்ர்கள் வாரிசுகளின் வரிசையிலோ நானில்லை.

அண்ணா ...என்னை மன்னித்துவிடு..
நீ கொண்டாடிய உன் தம்பியரை - (என் தந்தை உட்பட)
நானும் கொண்டாட விருப்பம் தான்.
ஆனால் முடியவில்லை.
காரணம் நானல்ல
அவர்கள் தான் என்பதை
அவர்கள் மறுக்கலாம்.!
நீ..?