Monday, January 29, 2018

THE SAINTS OF SIN

THE SAINTS OF SIN -
(இன்று 15TH MIFF 2018 முதல்நாள்)
இன்று பார்த்த ஆவணப்படத்தில் இப்படம் என்னை ஏமாற்றவில்லை.
3 ஆண்டுகள் இப்படத்தை தயாரிக்க எடுத்துக் கொண்டேன்
 என்று சொன்ன இயக்குநர் அனிருத்த சென் 
இக்கதைகள் அப்பெண்களின் நிஜக்கதைகள் என்பதையும்
 சேர்த்தே அரங்கில் பதிவு செய்தார்.

பெண் அனுபவிக்கும் பாலியல் சார்ந்த கொடுமைகளும்
 பிரச்சனைகளும் ஆரம்பிக்கும் இடம் குடும்பம் என்ற 
அமைப்பிலிருந்துதான் என்பதை அப்பெண்கள் 
வெளிப்படையாக பேசினார்கள். ஒவ்வொரு பெண்ணும்
எப்படி தன் சார்ந்த பிரச்சனையை அணுகினார்கள் என்பதும்
 அவர்கள் கடந்து வந்தப் பாதையும் கண் இமைகளில்
 முட்டிக்கொண்டிருந்த அவர்களின் கண்ணீர்த்
துளிகளைப் போல சூடாக இருந்தது.
காசு பணம் கார் பங்களா குழந்தைகள் இப்படியாக வாழ்வின்
சகல வசதிகளும் இருக்கும் போது இபெண்களின் வாழ்க்கை
 ஏன் அதற்குள் தன்னைக் கரைத்துக்கொண்டு
 "இல்லத்தரசி"யாக இச்சமூகம் வரையறுத்திருக்கும் இலட்சுமண கோட்டைத்தாண்டாமல் வாழ முடியவில்லை?
எது இவர்களை விரட்டுகிறது?
பெண் என்பவள் சார்புநிலையைத் தாண்டிய
 ஒரு ஜீவன் என்பதும்
அவளுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ,
 புறம் சார்ந்தும் அகம் சார்ந்தும் இருக்கும் என்பதும்
 இப்பெண்கள் சொல்லும் உண்மை.
பக்தை மீரா அரண்மனையை விட்டு வீதிகளில் பஜனைப் பாடி
ஆடியதும் இம்ம்மாதிரியான ஒரு தேடல் தான்.
. கோபம், காதல், காமம், புணர்ச்சி, அழுகை, வேண்டியதை எல்லாம்
அடைய நினைக்கும் இயல்பு, மொத்தத்தில்
எதற்காகவும் யாருக்காகவும் இப்பெண்கள் 
தங்களை தங்கள் உணர்வுகளை
 ஏமாற்றிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. 
அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் விருப்பப்படி,
 யாரையும் ஏமாற்றாமல் தங்க்ளையும் ஏமாற்றிக் கொள்ளாமல் 
வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
 அவர்கள் தங்களுக்கான் அப்பாதையை
 தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். 
படக்காட்சிகளின் ஊடாக பாடிய பாடல்
கனிந்து குழைந்து அழுது அரற்றி சினந்து சீறி விலகி... காற்றில் மிதந்து... கொண்டிருந்தது.
 இனி, அப்பெண்களின் முகத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

Saturday, January 27, 2018

உங்கள் ஜாதகத்தை எழுதும் சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்களில் உங்கள் ஜாதகம்
--------------------------------------------------------
Image result for negative effects of facebook

ஜன்ம நட்சத்திர ஜாதக கணிப்புகள் செய்யமுடியாத 
வித்தைகளையும் சேர்த்தே செய்துவிடுகிறது
உங்கள் கணினி தரவுகள். 
உங்களுக்குப் பிடித்தமானவற்றை
எப்போதும் காட்டிக்கொண்டே இருக்கிறது.
உங்கள் பயணங்கள், டிக்கெட் விவரங்கள்,
சாப்பிட்ட ஹோட்டல், சுற்றிப்பார்த்த நாடுகள்
என்று உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள்
டைரியிய போல முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் பாதுகாத்துவைத்திருக்கின்றன.
இதெல்லாம் கணினியின் பயன்பாடுகள் தானே என்று
சொல்ல வருகிறீர்களா..?
இதில் அவர்களுக்கு என்ன இலாபம்? என்று யோசித்துப் பாருங்கள்.
இத்தகவல்களைக் கொண்டு நம்மை எளிதில்
விற்பனை பண்டமாக்கி கோடிக்கணக்கில்
முதலீடே இல்லாமல் அவர்கள் வியாபாரம்
செய்கிறார்கள்!
கட்டணமே இல்லாமல் முகநூல் போன்ற 

இணைய தளங்கள் இலாபகரமாக இயங்கிக் கொ ண்டிருப்பதன்
 காரணம் இதுதான்.
இதை நமக்கான பயனிலையாக எடுத்துக்கொண்டு

 போக முடியாதா என்றால் அங்கேயும் 
ஏற்படும் சிக்கல்கள் உளவியல் சார்ந்ததாக
 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
லைக்ஸ் கள் , பின்னூட்டங்கள், மொள்ளமாரித்தனம்,
மொண்ணையான எழுத்துகள், மவுன யுத்தங்கள்,
இனம் புரியாத குழப்பங்கள்,
இப்படியாக எல்லோரையும்
டென்சனாக்கி தன்னைச் சுற்றி ஓட வைத்து
அதன் மூலம் தன் வியாபரத்தளத்தை உறுதியாக

 நிலைநிறுத்திக் கொள்கிறது சமூக வலைத்தளங்கள்.
பொய்யான தகவல்கள் மற்றும் செய்திகளை

 உருவாக்குவதிலும் சமுக வலைத்தளங்கள்
 முன்னணியில் நிற்கின்றன.
சமூக வலைத்தளங்களுக்கு யார் அதிகம் 

தீனிப் போடுகிறார்களோ அவர்களை அணுகி
 தங்கள் முகவர்களாக்கி கொள்கிறது இன்னும்
ஆபத்தாக இருக்கிறது.
அண்மையில் கிளம்பிய ஆண்டாள் சர்ச்சை
கூட இப்படியான ஒரு பரபரப்பு வியாதிக்குப் போட்ட

 தீனியோ என்ற சந்தேகம் எழுகிறது.
விளக்கு வெளிச்சத்தில்
சுற்றி சுற்றி வந்து செத்துமடியும்

 விட்டில்பூச்சிகளாகிவிட்டோமோ?
உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டு
அதிலும் வியாபாரம் செய்த அரசியல் கட்சிகளின் 

அதே ஃபார்மூலவை இன்று உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள் 
சமூக வலைத்தளங்கள் மூலம் மிகவும் எளிதாக செய்துவிடுகிறார்கள்.
விருப்பமானதை மட்டும் எழுது என்பதில் இருந்த
சுயம் காயடிக்கப்பட்டு
மற்றவர்களுக்கு விருப்பமானதை மட்டும் எழுது
 

என்று எந்த ஓரு வெளிப்படையான அடக்குமுறையும் இல்லாமல்
 தன் வசப்படுத்தி இருக்கிறது சமூக வலைத்தளங்கள்.
இதிலிருந்து கொண்டே தான் 

இதைப் பற்றி எழுதியாக வேண்டும்
 என்பது என் போன்றவர்களின் நிலையும்
 சமூகவலைத் தளங்களின் வெற்றியும்!
வேறு என்ன சொல்ல!

Friday, January 26, 2018

ஜன கண மன அதிநாயக



"தீட்டு தீட்டு..தீ..ட்டு
ஜன கண மன அதிநாயக .."
Related image
எங்கள் குளியலறை சோப்புகளை-
அவர்களின் விளம்பரங்கள் தீர்மானித்தன.
எங்கள் அணிகலண்களையும் ஆடைகளையும்
அவர்களின் எந்திரங்களே வடிவமைத்தன.
எங்களுக்கு எந்தெந்த வியாதிகள் வரலாம்
அவர்களின் சோதனைக்கூடங்களே தீர்மானித்தன.
எங்கள் சமையலறை அவர்களின் மரபணு தோட்டங்களானது.
எங்கள் வாரிசுகள் என்ன படிக்கலாம் என்னவாகலாம்
அவர்களே முடிவு செய்தார்கள்.
எங்கள் அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை
அவர்களின் ஒப்பந்தங்கள் தீர்மானித்தன
எங்கள் கவிஞர்களின் விருதுகளை மட்டுமல்ல
கவிதைகளையும்
அவர்களின் விருந்துகளே முடிவுசெய்தன.
இப்போதெல்லாம்
நாங்கள் எதற்காக கோபப்படவேண்டும்
எப்படி கோபப்பட வேண்டும்
எவ்வளவு கோபப்பட வேண்டும்
என்பதையும் அவர்களே தீர்மானிப்பது
எங்களுக்கு அவமானமாக இருக்கிறது.
போங்கடா.. ம_ராண்டிகளா
முகத்தில் பட்ட ஆண்டாளின் எச்சிலை
அவன் துடைத்துக்கொள்கிறான்
தியானம் களைகிறது.
தீட்டு தீட்டு தீட்டு..
ஜன கண மன அதிநாயக ஜெயஹே
எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள்.
ஜெய் ஹிந்த்.

Wednesday, January 24, 2018

பெட்ரோ டாலரும் தீவிரவாதமும்

Image result for PETRO DOLLAR
#பெட்ரோ_டாலர் அலறுகிறது.. இனி
உலகநாடுகள் நிம்மதியாக இருக்க முடியாது.."
உலகச் சந்தையில் அனைத்து பொருட்களின் விலையும்
 பெரும்பாலும் அமெரிக்க நாட்டின் டாலரில் மட்டுமே 
பேசப்படுகிறது. ஏன்?

நான் வங்கியில் ஏற்றுமதி/இறக்குமதி துறையில் 
வேலை செய்த காலத்தில்( documentry credits, hundies, credit bills & agreements )
 அது தொடர்பான ஆவணங்களில் குறிக்கப்பட்டிருக்கும்
பணமதிப்பு டாலரில் மட்டுமே இருக்கும்
. ஏற்றுமதி /இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும் 
அமெரிக்காவுக்கும் தொடர்பு இருக்க வேண்டும்
என்ற அவசியமில்லை. இது ஏன்?
இந்தக் கேள்விக்கு விடை காணும் போதுதான்
உலகப் பொருளாதரம், ஆயுத விற்பனை,
 புதிது புதிதாக ஆண்டுக்கு ஒன்றாக ரீலிசாகும் 
புதுப்புது வியாதிகள், பின் அந்த வியாதிகளைக் 
குணப்படுத்த கண்டுபிடிக்கப்படும் மருந்துகள், 
மருந்து கம்பேனி கார்ப்பரேட் உத்திகள், 
ஆயுத பயிற்சிகளும் ஆயுத உதவிகளும் செய்வது போல
போக்குக்காட்டி தன் ஆயுதவிற்பனையில் கொடிகட்டிப்பறக்கும்
 போர் ஆயுத தளவாட விற்பனை ... 
இந்த விற்பனையின் பெருக்கத்தில் தற்காப்பு 
என்பதே அண்டைநாடுகளை எதிரிநாடுகளாக்கி 
தன் ஆயுதவிற்பனைக்கு அடிபணியாத மாடுகளை
 தீவிரவாதிகள் என்று சொல்லி 
உலக நாடுகளை ஓரளவு நம்ப வைத்து 
அடிமாட்டு விலைக்கு அந்த நாடுகளை கூறுபோட்டு
 வாங்கி ஏப்பம் விடும் பொருளாதர அடியாட்கள்..
இந்தப் பொருளாதர அடியாட்களின் சிந்தனையில்
 எல்லாமே அமெரிக்க டாலரின் மதிப்பில் தான் பேசப்படும், 
பேசப்பட வேண்டும்.
டாலர் யுத்தம் இரண்டாம் உலகப்போருக்குப் 
பின் இப்படித்தான் திசைமாறியது.
Image result for PETRO DOLLAR

 இப்போரில் டாலர் மட்டுமே ஆயுதம். டாலர் ஆயுதம்
இல்லை என்றால் நீ அவுட். செத்தப் பிணம் தான். 
1971 வரை நீங்கள் அமெரிக்க டாலரைக் கொடுத்தால்
 எப்போது வேண்டுமானாலும் அதை தங்க நாணயமாக 
மாற்றிக்கொள்ள முடியும்.
இம்மாதிரியான ஓர் அதீத நம்பிக்கை கொண்ட நாணய மதிப்பைக்
 கொடுத்து அமெரிக்கா தன் மதிப்பை உயர்த்திக்கொள்கிறது.
1971ல் பிரான்சு போன்ற நாடுகள் தங்களிடம் சேர்த்து 
வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க டாலருக்கு ஈடான தங்கத்தை அமெரிக்க கொடுத்திருக்கும் வாக்குறுதிபடி கேட்க ஆரம்பித்த சூழலில் அமெரிக்க பொருளாதரத்திற்கு பெரியதொரு சிக்கல் ஏற்படுகிறது. 
அவர்களிடமிருந்த தங்கத்தின்
கையிருப்பு குறையும் ஆபத்து ஏற்படுவதை உணர்ந்து
தடாலடியாக அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன்
"இனிமேல் அமெரிக்க டாலரை தங்கமாக மாற்றமுடியாது" 
என்று அறிவிக்கிறார். நிக்சன் கொடுத்த இந்த டாலர் அதிர்ச்சி 
"நிக்சன் ஷாக்" நிக்சன் அதிர்ச்சி என்றே அழைக்கப்படுகிறது.
Image result for PETRO DOLLAR

அதன் பின்னரான இஸ்ரெல் - அரபுநாடுகளின் சண்டையில் 
மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா. 
அரபுநாடுகளுக்கு ராணுவதளவாடங்கள்
கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
சவுதி அரசர் குடும்பம் தாம் அமெரிக்காவின் இந்த வலையில்
 சிக்கிய முதல் பொன்மீன். 
அவர்களின் ஒப்பந்தப்படி அமெரிக்க இராணுவ 
தளவாடங்களை கொடுக்கும் அதற்கு மாற்றாக
 சவுதி அரேபியா தன் எண்ணெய் கிணறுகளின்
 எண்ணெய் வியாபாரத்தை உலகில் 
எந்த நாடுகளுடன் செய்தாலும்
வாங்குவதும் விற்பதும் அமெரிக்க டாலரில்தான்
இருக்க வேண்டும். இப்படித்தான் பெட்ரோடாலர் பொருளாதரம் பிறக்கிறது.
 
சவுதி அரேபியாவைப் பின்பற்றி பிற அரபு நாடுகளும்
பெட்ரோடாலர் ஒப்பந்ததிற்குள் வந்துவிடுகின்றன
அல்லது வர வைக்கப்படுகின்றன.

இப்படியாகத்தான் நேற்றுவரை அமெரிக்க பெட்ரோடாலர்
 பொருளாதரம் உலகப் பொருளாதர சந்தையில் எல்லோரையும்
ஆட்டிப்படைக்கும் வல்லரசின் சக்தியாக 
தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தது.
ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் அமெரிக்காவின்
 பெட்ரோடாலர் அடாவடித்தனத்தை எதிர்த்தார். 
இராசயண போராயுதம் இருப்பதாக
ஒரு புரளியைக் கிளப்பி ஈராக்குடன் போர் .. 
அமெரிக்க வென்றதும் மீண்டும் ஈராக் பெட்ரோடாலருக்கு
 அடிபணிந்ததும் அனைவரும் அறிந்த செய்தி.

தற்போது அமெரிக்காவின் பெட்ரோடாலருக்கு எதிராக
 சீனா பெட்ரோ யுவான் என்று தங்கள் நாட்டு பணமதிப்பில்
 வர்த்தகம் செய்யப்போவதாக அறிவித்து 
வர்த்தகத்தை ஆரம்பித்தும் விட்டது.
அதிலும் குறிப்பாக ரஷ்யநாடுகளிடமிருந்து 
பெட்ரோல் வாங்குகிறது தங்கள் கரன்சியான யுவான் மதிப்பில்.
அரபுநாடுகளிடமும் தன் பெட்ரோயுவான் வர்த்தகத்தை
 பேச ஆரம்பித்துவிட்டது சீனா.. 
Image result for PETRO DOLLAR
அதாவது இதுவரை பெட்ரோல் டீசல் எண்ணெய் வளங்களின்
 விற்பனை அமெரிக்க டாலரில் மட்டும் தான் நடந்தாக வேண்டும்
அதை மீறினால் என்ன நடக்கும் தெரியுமா..
நீ தீவிரவாதி,
உன் நாட்டு மக்கள் தீவிரவாதிகள், 
உனக்கு கொடுக்கப்பட்ட எல்லா உதவிகளும் 
இனி நிறுத்தப்படும், ஏன் உன் நாட்டு மக்கள்
எங்க அமெரிக்காவுக்கு வந்தா அவன் தீவிரவாதினு
 சொல்லி திருப்பி அனுப்புவேன்..
 நான் நினைச்சா என்ன வேணும்னா
செய்வேன்.. அய்யோ அய்யோ.."
பெட்ரோ டாலரின் அலறல் ஆரம்பித்துவிட்டது.

சீனா வின் நெடுஞ்சவர் எந்த ஓர் அசைவையும் காட்டாமல்
 குண்டூசி முதல் அழிப்பான் ரப்பர் வரை சீனாமேக்கிங்க்
உலகச்சந்தையில் கடைவிரித்திருக்கிறது.
இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது
என்பது பரமரகசியம்!
ஏனேனில் இந்திய ரூபாய் தாளில் 
அச்சிடப்பட்டிருக்கும்
"I PROMISE TO PAY YOU THE BEARER THE SUM OF ... RUPESS"
என்று சொல்லப்பட்டிருக்கும் சத்தியவாக்குமூலத்தை
உலகநாடுகள் நம்பத்தயாராக இல்லை! 

அதனால் "பெட்ரோ ரூபாய்" னு சீனாவுக்கு எதிராக
ஒரு பேச்சுக்கு கூட நம்ம ஆட்களால் பேசவே முடியாது.

( கட்டுரையை சுருக்கியும் உலக போர்,
 தீவிரவாதம், ஒப்பந்தங்கள் என்ற விவரங்களைத்
 தொடாமலும் பெட்ரோ டாலரை
யுத்தத்தை பேசி இருக்கிறேன். நன்றி நட்பே)
#பெட்ரோ_டாலர்

Wednesday, January 17, 2018

ஆண்டாள் எழுதிய திருவெம்பாவை..??

ஆண்டாள் எழுதிய திருவெம்பாவை
"ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு 
நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது!"
அறிக்கையின் முதல்வரி :
"ஆண்டாள் தமிழச்சி, 3000 ஆண்டுகளாக பேசவும் எழுதவும் படும்
இழையறாத தமிழ்மொழியில் 1200 ஆண்டுகளுக்கு முன்பே
திருவெம்பாவை திருப்பாவை பாடியவர்...."

ஆண்டாள் கட்டுரை விவகாரத்தில் வைரமுத்துவுக்கு
ஆதரவாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை
மின்னம்பலம் வாயிலாகவும் தோழி மீராவின் முகநூல் பதிவு
மூலமாகவும் அறிந்து... நொந்து நூலாகிப்போயித்தான்
இதை எழுதுகிறேன்.
ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜனநாயக ரீதியாக கருத்து சுதந்திரம் என்ற ஆகச்சிறந்த
தளத்தில் நின்று ஓர் அறிக்கையைத் தயாரிப்பவர்களின்
தகுதியை இதை வைத்து நிர்ணயிப்பதா?
அல்லது நாங்க தான் மேதாவி, நாங்க சொல்றதுதான்
கனமானது என்ற கண்மூடித்தனத்தைக் கண்டும்
காணாமல் இருப்பதா?
இதெல்லாம் ஜஸ்ட் கவனக்குறைவு என்று மேம்பாக்காக
சொல்லவருபவர்களின் ஜஸ்ட் லைக் தட் என்ற
மனநிலைக்குப் போவதா..?
ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு
நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது!
ஓம் நமசிவாய.
மாணிக்கவாசகர் எம் தமிழ் கூறு நல்லுலகை மன்னிக்க
வேண்டும்.

அறிக்கை :
Image may contain: 8 people, people smiling, text

இண்டலக்சுவல் பம்மாத்து

இண்டலக்சுவல் பம்மாத்து
சல்மாவுக்கு கொடுக்கப்பட்ட பெரியார் விருதைக்
 கொண்டாடும் போராளிகள் ,
 வளர்மதிக்கு கொடுக்கப்பட்ட பெரியார் விருதை மட்டும்
ஏன் கேலி கிண்டல் செய்கிறார்கள்?
பெரியார் பெயரில் கொடுக்கப்படும் "பெரியார் விருது"க்கும்
பெரியார் விருது பெறுபவருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதில் சல்மா தகுதியானவராகவும்
வளர்மதி தகுதி இல்லாதவாராகவும் பார்க்கும்
இண்டலக்சுவல் பம்மாத்து எதற்கு?
ஒருவருக்கு வெண்சாமரம்!
இன்னொருவருக்கு சாணி உருண்டையா!

வளர்மதியின் தீச்சட்டியில் பெரியார் தெரியவில்லை
என்பவர்களுக்கு
சல்மாவின் இலக்கியத்தில் எந்த வெங்காயத்தை
உரிச்சி பெரியாரைக் கண்டுபிடித்தார்கள்?
...
பெரியார் விருதுகள் உண்மையில் தந்தை பெரியாரின் 
வழி வந்தவர்களுக்கு அவர் கொள்கைகளில்
 நூற்றில் ஒரு பங்காவது சமூகவெளியில்
 செய்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறதா
அல்லது
எப்போதாவது ஊறுகாய் மாதிரி பெரியாரைத் தொட்டுக்கொள்ளும் பொழைக்கத்தெரிந்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என்பதை
இனியாவது பெரியாரியக்க தோழர்கள்
 மனம் திறந்து பேசுங்கள்.

விருது விவரம்:
1995ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக 
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில்
‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது.
இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும்
கலைஞர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ நடிகர் விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன்,
திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான்,
ஓவியர் ஹாசிப்கான், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்,
மராத்தான் வீரர் சைதை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ,
இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன்,
இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன்
ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு வழங்கும் "பெரியார் விருது" இந்த ஆண்டு வளர்மதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Monday, January 15, 2018

.. போகி... மகாபோகி


Image result for போகி
காடுகள் எரிகிறது
காடுகளை எரியூட்டுகிறாய்.
முல்லை நிலத்தை மருதமாக்கும் போட்டி
மருத நிலத்தின் கோட்டைக்கதவுகள் திறக்கின்றன
கரிசூழ்ந்த மங்கலத்தின் வாசலில்
மீன் கொடி பறக்கிறது.
தாமிரபரணியை மணந்த நடராஜன்
சேரன் மகாதேவி சிறை எடுக்கிறான்.
முல்லை நிலத்தின் ஆடுகள்
திசைதெரியாமல் சிதறி ஓடுகின்றன.
கிருஷ்ணன் வெண்ணெயைத் திருடுவதில்
புதிது புதிதாக திட்டங்கள் தீட்டுகிறான்.
உன் மருதநிலத்தின் வயல் வெளிகள்
என் புல்வெளியின் வர்ணத்தை திருடிக்கொள்கின்றன.
காடுகள் எரிகின்றன
போகி போகி போகி..
காடுகளை எரியூட்டுகிறாய்
வெற்றியின் முரசு..அதிரும் ஓசையில்
விழித்துக் கொள்கிறது குன்றுகள்.
வள்ளிமகள் குறி சொல்ல வருகிறாள்.
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
பால் பொங்குது
நல்ல காலம் பொறக்குது..
வாழையும் கரும்பும் நெல்லும் கிழங்குகளும்
அவள் மடியை நிறைக்கின்றன.
போகி போகி போகி..
பறை முழக்கம்
எரிக்கிறாய் போகி
பறை முழக்கம்
எரியூட்டுகிறாய் போகி
பறை முழக்கம்
எரிகிறாய். போகி
பறை முழக்கம்.
குன்றுகள் சிலைகளாக மாறுகின்றன.
கோவில்களாக விரிகின்றன.
கல்வெட்டுகளாக தொடர்கின்றன
மகாபோகி.. போகி.

Thursday, January 11, 2018

துண்டு செய்திகள்..சேர்த்து படி.

உலகப் பணக்காரர் வரிசையில்  முதலிடத்திற்கு
வந்துவிட்டார்
அமேசான் இணைய தள நிறுவனர் ஜெஃப் பீசாஸ்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை
இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டாராம்.
அதுவும்  கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு
 சலுகை விற்பனையில்
கோடிகளை அள்ளிட்டாராம்.

ஏர் இந்தியா வை மொத்தம விற்காமல் இப்போதைக்கு
49% விற்கிறதுனு முடிவு பண்ணிட்டாங்கய்யா.

சில்லறை வணிக்கத்தில் அன்னிய முதலீடு ..
வரட்டும்னு வாசலைத் திறந்தாச்சு
.
ஹிந்துஸ்தான் லிவர்னு ஒரு கம்பேனி தான்
காலையில பல்விளக்கிறதிலிருந்து
நம்மக்கூடவே  ஓடிட்டிருக்கு
ஹிந்துஸ்தான் என்ற பெயரைப் பார்த்துட்டு
நமக்குள்ளது நினைச்சி   பூரிச்சிப் போயி
நாசமா போயிட்டிருக்கான்
நம்ம ஆளு.

செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாம
தெரியலாம்.. ஆனால் எல்லா செய்திகளும் சொல்லும்
உண்மை ஒன்றேதான்.
டேய்.. வெள்ளைக்காரன் போகலடா இன்னும்.
அரசியல்வாதிகள் நடிகர்கள் தொலைக்காட்சிகள்
இப்படியாக அவன் இப்போ ஏகப்பட்ட ஏஜண்டுகளுடன்
நம்மை இன்னும் அடிமைகளாகவே வச்சிருக்கான்.


Monday, January 8, 2018

சுஸ்மாஜியின் லாஜிக்

Image result for susma vs  sasitharur
ஐநாவில் இந்தி மொழியை அதிகாரப் பூர்வ மொழியாகக்
 கொண்டுவருவதில் 40 கோடி என்ன,
400 கோடி ஆனாலும் சரி, 
என்று ரொம்பவும் வீராப்பாகவே நாடாளுமன்ற அவையில் 
பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்
இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியா தேசிய மொழியா
 அலுவல்மொழியா என்ற கேள்விக்கெல்லாம் 
பதில் சொல்லாவிட்டால் பரவாயில்லை.
நாளைய இந்தியாவில் இந்தி தெரியாத ஒருவர் 
இந்தியாவின் பிரதமராகவோஅல்லது
 வெளியுறவுத்துறை அமைச்சராகவோ வந்தால்
 அவருக்கு எதற்கு ஐநாவில் இந்தி மொழி என்ற 
சசிதரூர் கேள்விக்கு சுஸ்மாஜி அவர்கள் பதில்
சொல்லாவிட்டாலும் பரவாயில்லை
( அப்படி எல்லாம் இனிமே எவனும் வந்திட முடியாது
 என்று தெனவட்டா நினைச்சிருப்பாரோ..!)
மோதிஜி அமெரிக்கா போயிருந்தப் போது அங்கிருக்கும்
 இந்தியர்களிடம் இந்தியில் தான் பேசினாராம்.. 
அப்படீனு ஒரு பதில் சொன்னாங்க பாருங்க...
அப்படியே நாடாளுமன்றம் வாயடைத்துப் போயி..
வயிறு வீங்கி .. வெடிக்கிறமாதிரி ஆயிடுச்சி..
அம்மா தாயே.. சுஸ்மாஜி.. 
மோதிஜீ அவர் தாய்மொழியான குஜராத்தியில்
பேசியிருக்கலாம்.. குஜராத்திக்காரர்கள் 
அமெரிக்காவில் நிறைய இருக்கிறார்கள்.
அப்போ ஐநாவில் குஜராத்தியைக் கொண்டுவந்தா என்ன?

உலக நாடுகளில் 162 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
அப்படியானால் ஐநாவில் தமிழ்மொழி 
அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்டுவரலாமேனு
 நான் சொல்ல வருவது 
உங்க லாஜிக் படி சரியா இருக்குமேனு தான்!

இதை எல்லாம் பேசுவதற்கோ எழுதுவதற்கோ
 எங்க அரசியலில் இப்போதைக்கு இடமில்லை. 
அதுதான் நீங்க கொடுத்த ஆன்மீக அரசியல்
 பேதி மாத்திரையில் எல்லாருக்கும் வாந்திப்பேதி வந்து.

Thursday, January 4, 2018

ஏ சி மின் கசிவுகள்



தொடர்ந்து ஏ சி மின் ககசிவுகளால் ஏற்படும் தீ விபத்துகளை
ஒரு ப்ரேக்பாஸ்ட டேபுள் செய்தியாக வாசித்துவிட்டு கடந்து
செல்கிறோம். இம்மாதிரியான விபத்துகள் எந்தவொரு நடுத்தர
வர்க்கத்தின் குடியிருப்பிலும்  ஏற்படக்கூடியது என்பதைக்
 கவனத்தில் கொள்ள மறந்துவிடுகிறோம்.
அதிலும் குறிப்பாக ஏசி மின் கசிவுகளால்
ஏற்படும் விபத்துகள் இரவு நேரத்தில் வீட்டிலிருப்பவர்கள்
அசதியாக தூங்கும் போது ஏற்படுகின்றன என்பதால்
உடனடிக் கவனிப்புக்கான வாய்ப்புகள் அரிது.
ஏசி  பயன்பாடுகளை விட்டுவிடலாம் என்பது
கற்பனைக்கு நன்றாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு
பெருநகர வாழ்வில் ஏசி முக்கிய இடம் பெற்றுவிட்டது.

அண்மையில் எங்கள் கிராமத்தில் மாடியில் ஒரு சிறிய அறை
கட்டினோம். உடனே கிராமத்தில் பலர் அப்படியே ஒரு ஏசியையும்
போட்டுவிடக்கூடாதாண்ணே என்று சங்கரிடம் கேட்டது எனக்கு
ஆச்சரியமாகத்தான் இருந்தது. .
மாடியில் சன்னலைத் திறந்தால் ஜிலு ஜிலுனு வேப்ப மரக்காற்று
வீசும் போது எதற்காக ஏசி..?!! இப்படித்தான் நுகர்வோர் சந்தை
கிராமத்தையும் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது.

நேற்று மும்பை அந்தேரி குடியிருப்பு 4வது மாடியில்
 இரவில் ஏற்பட்ட ஏசி மின் கசிவு வீட்டிலிருந்தவர்களை
காவு வாங்கிவிட்டது.
இம்மாதிரி விபத்துகளைத் தவிர்ப்பதற்கு முடியும்.

* தரமான ஏசி யுனிட்டுகளை வாங்கவும்.
*ஏசி யுனிட்டை எக்ஸ்டென்சன் கொடுத்து இணைப்பதை
 தவிர்கவும்.
*24/7 எப்போதும் ஏசி பயன்படுத்துவதைக் கட்டாயம்
 தவிர்க்க வேண்டும்.
*ஏசி பெட்டியை காற்றோட்டமான இடத்தில்
வைத்திருப்பது அவசியம்.
* இவை அனைத்தையும் விட அதி முக்கியமானது
 உங்கள் ஏசியை சர்வீஸ் செய்வது முக்கியம்.
 மழைக்காலம் முடிந்தப் பின் கட்டாயம் சர்வீஸ்
 செய்து தூசு அழுக்குகளை எடுத்து
யுனிட் இணைப்புகள், சுழலும் ஃபேன், தண்ணீர்
 வெளியேறும் பைப் இத்தியாதி.. கவனிக்கவும்.

Monday, January 1, 2018

கோரெகாவ் பீமா வெற்றித்தூண்

Bhima Koregaon க்கான பட முடிவு

கோரெகாவ் பீமா வெற்றித்தூண்
நேற்று  (01 /01/2018) புனேயில்  நடந்தக் கலவரத்தின் பின்னணியில்
இன்றும் வெளிப்படையாக தன்னைக் காட்டிக் கொள்கிறது
இந்திய தேசியத்தின் சாதி முகம்.
இது...வெறும்
200 ஆண்டு கால யுத்தம் அல்ல.
2000 ஆண்டுக்கு மேலாக  தொடரும் யுத்தம்.

கோரெகாவ் பீமா வெற்றித்தூண் ஒடுக்கப்பட்ட மக்களின்
 வீரத்திற்கும் விவேகத்திற்கும் அடையாளம்.
200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் பெற்ற வெற்றியின்
 அடையாளம்.
இந்த வெற்றித்தூண் 200 ஆண்டுகளுக்குப் பிறகும்
 ஏன் சிலருக்கு எரிச்சல் தருகிறது. ?
இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் சிற்றரசுகள்
மற்றும் பாளையக்காரர்களின் உதவியுடனும்
அவர்களைப் பிரித்தாண்ட சூழ்ச்சியிலும் வென்று
 இந்திய தேசத்தை உருவாக்கினார்கள் என்பது
வரலாறு.
  வெள்ளையனின் வெற்றியை ஏற்றுக்கொண்டவர்கள்
 இந்த ஒரு வெற்றியை மட்டும் ஏன்
 ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?
இன்னும் ஒரு படி மேலே போய் இந்த வெற்றியே
வரலாற்றுப் பிழை என்று சொல்லத்
துணிவது ஏன்?
இப்படியான அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்..
இந்த வெற்றி மகர் வீரர்களின் வெற்றி.
(The Koregaon celebration questions the dominant notion of nation and
their  nationalism. This is why anxious upper caste groups call it “anti-national”.)

மகர்களை தன் இராணுவத்தில் இணைத்து தன் காவற்கோட்டத்தில்
நிறுத்தியவன் ,  இவர்கள் கொண்டாடும் மராத்திய மண்ணின் ஒரே சக்கரவர்த்தி சத்ரபதி சிவாஜி என்ற வரலாற்றை மறைத்து,
தங்கள் வரலாற்றை ஆதிக்கசாதியின் ஆட்சிப்பீடத்தில்
இருந்த பேஷ்வாக்களின் அதிகாரத்தை தேசபக்தியாக்கும்
வரலாற்று துரோகம்.

500 மகர் படை வீரர்கள் கொண்ட படை ஆங்கிலேய தளபதியின்
 கீழ் தொடர்ந்து 42 மணிநேரம்  20,000 குதிரைப்படை, 8000 படைவீரர்களுக்கு எதிராக போரிட்டு பெற்ற வெற்றி என்பதால் தான்.
 இந்த வெற்றியின் அடையாளங்கள் இவர்களின்
 ஆதிக்கசாதி உளவியலை அச்சுறுத்துகிறது.
தங்கள் வீரமிகு வரலாற்றை மீட்டெடுக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள்
உ.பி, பீகார், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்த்தின்
 பிற பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும்  ஜனவரி 1 இலட்சக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள்.
இது கும்பமேளாவுக்கு கூடுகின்ற கூட்டமல்ல.
இதுதான் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு
அச்சம் ஊட்டுகிறது.
வெற்றியின் சமூக அரசியலை வரலாற்றை மறைத்து
 இந்த வெற்றியையும் மகர்களின் வீரத்தையும்
மறைப்பதற்கு நேற்று சொல்லப்பட்ட காரணம் கூட "தேசபக்தி"!!
இந்த தேசபக்தியாளர்கள் கைகளில் காவி நிறக்கொடி ஏந்தி
கோரெகாவ் பீமா நோக்கி பயணித்த வாகனங்கள் மீது கல்லெறிந்து
தீக்கிரையாக்கி தங்களின் தேசபக்தியைக் காட்டிக்
கொண்டார்கள்.
இவர்களின் தேசபக்தி தான் காந்தியைக் கொன்ற குண்டுகளிலும்
இருந்தது என்பதை இவர்கள் அடிக்கடி நினைவூட்டுகிறார்கள்.
இவர்களின் நோக்கம் வரலாறு நெடுகிலும்
எம் தடங்களை அழிப்பது மட்டும் தான்.
இது வெறும் 200 ஆண்டுகால யுத்தம் அல்ல.
2000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் யுத்தம்.