Tuesday, February 27, 2018

விடுதலை .. அவள் நிர்வாணமாக வருகிறாள்


Image result for syria war affected children modern art
எம் இனிய தோழி சிரியா பெண்கவிஞர்
மரம் அல் மஷ்ரி (Maram - AL - Masri )
குரலை மீள்பதிவு செய்கிறேன்.
தோழியின் கண்ணீர்க்குரல் இப்போதும் என் செவிகளில் ஒலிக்கிறது.
கவிதையின் சில துளிகள்..
பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்
சுவர்களில் எழுதப்பட்டிருந்தது
விடுதலை என்ற சொல்.
சரித்திரத்தின் சுவர்களில்
விடுதலை குருதியால் எழுதியது
அவர்களின் பெயர்களை.
----
இக்குழந்தை
தாயின் கருப்பையிலிருந்து
வெளியில் வீசப்படவில்லை.
வீசப்ப்பட்டது
பூமியின் கருப்பையிலிருந்து.
அவன் வரலாற்றுக்கு முந்திய
ஆதிகாலத்து சிலையல்ல
அவன் ஒரு குழந்தை.
வெள்ளைத் துணியால் பொதியப்பட்டு
குண்டுகளால் மூடப்பட்டவன்.
தாயின் பால்குடி அறியாத பாலகன்
சீம்பால் கூட அருந்தவில்லை.
---------------------------
விடுதலையின் குழந்தைகள் அணிந்ததில்லை
தங்கள் ஆடைகளாக
வெள்ளைக் கம்பேனியின் துணிகளை.
அவர்கள் உடல் பழகிவிட்டது
முரட்டு துணிகளுக்கு.
விடுதலையின் குழந்தைகள்
பிறர் அணிந்த ஆடைகளை
(பழைய ஆடைகளை) அணிகிறார்கள்
அவர்களின் காலணிகள் பாதங்களைவிட
பெரிதாக இருக்கிறது.
ஒருவேளை அடுத்தவருடம் சரியாக இருக்கலாம்.
பெரும்பாலும் அவர்கள் அணிவது
நிர்வாணத்தையும் அச்சத்தையும் தான்.
விடுதலையின் குழந்தைகள் அறிந்ததில்லை
'வாழைப்பழத்தின் ருசியையோ
ஸ்டாரபெர்ரியின் ருசியையோ
அவர்கள் சாப்பிட்டதில்லை சாக்லெட் பிஸ்கட்டுகளை
அவர்களுக்கு கிடைத்ததெல்லாம்
பொறுமை என்ற தண்ணீரில் நனைந்த
காய்ந்த ரொட்டிகள் தான்.
விடுதலையின் குழந்தைகளுக்கு
மாலைநேரத்தில் கதகதப்பான குளியல் கிடையாது.
வண்ணமயமான சோப்புக்குமிழிகளுடன் விளையாட்டும் கிடையாது.
அவர்கள் விளையாடுவதெல்லாம்
ரப்பர் டயர்களோடும் டிண் டப்பாக்களோடும்
(தவறுதலாக )விட்டுப்போன குண்டுகளோடும்..
விடுதலையின் குழந்தைகள்
தூங்குவதற்கு முன் பல்துலக்குவதில்லை.
ராஜா ராணி கதைகள் கேட்பதில்லை
அவர்கள் கேட்பதெல்லாம்
குளிரின் மவுனத்தையும் அச்சத்தையும் தான்.
அகதிகள் முகாமின் நடைபாதையில்
அல்லது கல்லறைகளில்
எல்லா குழந்தைகளையும் போல
விடுதலையின் குழந்தைகளும்
காத்திருக்கின்றார்கள்
தங்கள் தாய்மார்களுக்காக..
சிரியாவின் பள்ளத்தாக்குகளிலும்
மலைகளிலும்
அவள் வருகிறாள் நிர்வாணமாக
அகதிகளின் முகாம்களில்
அவள் பாதங்கள்
சகதியில் புதைந்து கிடக்கின்றன.
கடுங்குளிரின் வெடிப்பு அவள் உள்ளங்கைகளில்
ஆனாலும் அவள் தன் பாதையில்
முன்னேறி செல்கிறாள்.
அவள் கடந்துச் செல்லும் போது
அவள் கைகளில் தொங்கிக்கொண்டிருக்கும்
அவள் குழந்தைகள்
அவள் ஓடும் போது
விழுந்து விடுகிறார்கள்.
அந்த வேதனையில்
அவள் கதறுகிறாள்
ஆனாலும் தன் பாதையில்
முன்னோக்கி நடக்கிறாள்
நெரிக்கிறார்கள் அவள் குரல்வளையை
ஆனாலும் அவள் தொடர்ந்து பாடுகிறாள்.
---
சிரியாவின் சிறைக்கூடத்தில்
பிறந்த மகன்
கற்பழிக்கப்பட்ட தன் தாயிடம்
கேட்கிறான்
"அம்மா, ஒரு கதை சொல்லு'
(அவள் சொல்ல ஆரம்பிக்கிறாள்)
ஒரு விருந்தினர்...(சரி வேண்டாம்)
முன்பொரு காலத்தில்
ஒரே ஒரு ஊர்ல ஒரு குட்டிப்பையனும் அவன் அம்மாவும்.
அவர்கள் வீட்டில் ஒரு சன்னல்.
அவர்கள் இருவரும் அமைதியாக
அந்தச் சாலையைப்
பார்த்துக் கொண்டிருந்தார்களாம்!"
பையன் குறுக்கிட்டான்.
"அம்மா, அது என்ன சன்னல்?'
- சன்னல் என்பது சுவரில் ஒரு சின்ன திறப்பு.
அது வழியாக சூரிய வெளிச்சம் வரும்
அந்தச் சன்னல் கம்பிகளில்
பறவைகள் கூட உட்காரும்!"
பையன் மீண்டும் குறுக்கிட்டான்.
'அம்மா, அது என்ன பறவைகள்?"
கதை சொன்ன அம்மா இப்போது
கைகளில் பென்சிலை எடுத்தாள்
சுவரில் ஒரு சன்னலையும் குட்டிப்பையனையும்
வரைந்தாள்.
குட்டிப்பையனுக்கு இரு சிறகுகளுடன்.
===============
மரம் அல் மஷ்ரி :(Maram - AL - Masri ) சிரியாவில் லட்டக்கியாவில் பிறந்தார். தற்போது
பாரீசில் வசிக்கிறார். இந்த நூற்றாண்டின் பெண்ணியக்குரலாய் ஒலிக்கிறது
அவர் கவிதைகள். இதுவரை 6 கவிதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
8 மொழிகளில் அவை மொழியாக்கம் பெற்றுள்ளன. சிரியாவில் போர்மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்காலக்கட்டத்தில் . "விடுதலை - அவள் நிர்வாணமாக வருகிறாள்" என்ற தலைப்பில் வெளிவந்த அவருடைய கவிதைகள் சிரியாவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான கலகக்குரலாய்
போருக்கு எதிரான மனித நேயமாய் பேசப்படுகின்றன.
"என் தாய்நாடு சிரியா இன்று கோமாவில் சுயநினைவின்றி இருக்கிறது.
அந்நியர்களின் ஊடுருவலால் எங்கள் புரட்சி களவாடப்பட்டுவிட்டது.
2013 ல் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிரியா மக்கள்
அகதிகளாக பிறநாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
 உலகநாடுகளிடம் நான் கேட்பதெல்லாம், " எங்கள் மக்கள் உயிர்வாழ
தேவையான மருந்து, உணவு கொடுத்து காப்பாற்றுங்கள் என்பதுதான்.
நான் என் மக்களுக்காக தொடர்ந்து பேசுவேன். எழுதுவேன். எவருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டேன். ஒருவேளை அப்படியே நான்
கொலை செய்யப்பட்டாலும், அதுவும் என் மக்களுக்காக,
 என் தாய்நாட்டுக்காக..
பெற்ற தாயோ மகவோ நோய்வாய்ப்பட்டிருந்தால்
 நாம் நம் உயிர்க்கொடுத்து அவர்களைக் காப்பாற்றுவதில்லையா?
இன்று என் சிரியா நோய்ப்படுக்கையில்.
அதைக் காக்கும் போராட்டதில் என் உயிர்ப்போனாலும் பரவாயில்லை.
ஆனாலும் நான் சாகவிரும்பவில்லை. 
வாழவே விரும்புகின்றேன்.
 என் நாட்டுக்காகவும், என் மக்களுக்காகவும்.
என் கவிதைகள் பேசுவது அரசியல் அல்ல. மக்களைப்பற்றி பேசுகிறது.
என் கவிதைகள் விடுதலை குறித்துப் பேசுகின்றன. 
ஆம், கவிதைகள் எப்போதும்
விடுதலையின் குரல் தான்."
..

Saturday, February 24, 2018

பின்னங்களும் தலைகீழ் விகிதங்களும்


Image result for will kamal rajini take dmk aiadmk votes

அரசியல் திரையரங்கில் கமல் ரஜினியின் பாத்திரம் என்ன?
எதற்காக இத்திரைப்படம்?
யார் இயக்குகிறார்கள்?
யார் தயாரிப்பு?
மக்கள் கொடுக்கப்போகும் டிக்கெட்டுகளின் விலை என்ன?
சில பின்னங்கள், சில தலைகீழ்விகிதங்கள்
கூட்டல் வகுத்தல் பெருக்கல் ஈவு சுழி
அல்ஜீப்ரா என்ற கணக்குகள் ஓடிக்கோண்டிருக்கின்றன.
சில பின்னங்கள் தலைகீழ்விகிதங்களாகிவிடலாம்
என்று காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன ..
ஆட்டம் எப்படி நடந்தாலும் மகாஜனங்களுக்கு
ஈவு கிடைக்கப்போவதில்லை.
ஏற்கனவே இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 
கடனாளியாகத்தான் பிறக்கிறது !
கமல் குறித்து தேவைக்கு அதிகமாகவே எழுதியவர்களில்
 நானும் ஒருத்திதான். என்ன செய்வது..? என்னைச் சுற்றிய ஊடகமும் சமூக வலைத்தளமும் என்னையும் இயக்கும்
வல்லமைப் படைத்தவை தான்.
எதற்காக கமலும் ரஜினியும் இப்போது அரசியல் களம்
இறங்குகிறார்கள்? அல்லது களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்?
உண்மையில் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறதா?
திமுக தலைவர் கலைஞரின் அரசியல் செயலற்ற உடல்நிலையும்
 ஜெ யின் மறைவும் அவர் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில்
ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு பிரச்சனைகளும் கோஷ்டிகளும் 
அரசியல் தளத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதற்கான
 புள்ளியைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறதா?


அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கும் போதெல்லாம்
 திமுக மற்றும் அதிமுக என்று எதாவது ஒரு திராவிட அரசியல்
கட்சியுடன் மாறி மாறி கூட்டணி சேர்ந்து 
தேர்தலைச் சந்தித்ததன் மூலம் திராவிட அரசியல் 
கட்சிகளுக்கான மாற்று அரசியலாக இருக்கமுடியாத
அவல நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன
அதனால் கமலும் ரஜினியும் திராவிட அரசியல் கட்சிகளுக்கான 
மாற்று அரசியல் சக்தியாக ஊடகத்தால் 
ஊதிப் பெரிதாக்கப்பட்டு ஒலி ஒளி காட்சிகளில்
வலம் வருகிறார்கள். ஆனால் இது சாத்தியமா..?
2016 சட்டசபை தேர்தல் ஓட்டுவிகிதத்தைக் கவனிக்கவும்.
அதிமுக 41% ஓட்டுகள் 176 லட்சம்
திமுக 31% ஓட்டுகள் 136 லட்சம்
மொத்த ஓட்டுகள் 429 இலட்சம்
429 -136-176 = 117
இதில் வருகிற சட்டசபை தேர்தலில் புதிதாக 
ஓட்டுரிமைப் பெறும் வாக்காளர்கள் குறைந்தது 20 இலட்சம் என்று வைத்துக்கொண்டாலும்
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 450 இலட்சமாகும்.
ஓட்டுப் போடாதவர்களும் வரும் தேர்தலில்
 வாக்களிக்க வந்தால் எல்லாம் சேர்த்து மொத்த 
வாக்காளர்கள் 500 இலட்சமாகலாம்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
 திராவிட அரசியல் கட்சிகள் தங்களிடம் கணிசமான 
வாக்காளர்களையும் கட்சி உறுப்பினர்களையும்
 தக்க வைத்திருக்கின்றன.
அதிமுக ஓட்டுகளைப் பிரிப்பதற்கு அவர்களே போதும்!
திமுக ஓட்டு விழுக்காடு 31% என்பதுதான் தற்போது
தேர்தல் களத்தில் பெரிய எண்! 
கமலும் ரஜினியும் திமுகவின் ஓட்டுகளைக் கணிசமாகப் 
பிரித்தால் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இதில் கமல் அதிமுக ஆட்சியை மட்டுமே 
சிஸ்டம் சரியில்லை என்று ஒரே போடாக போடுகிறார். 
திமுக ஆட்சியில் கமலைப் பொறுத்தவரை 
சிஸ்டம் ஒழுங்காக இருந்தது! 
இந்த நிலைப்பாடு 
வெளிப்படையாக தெரிந்தாலும் அவரை திமுக நம்புகிறதா? இல்லை ! 
ரஜினியின் ஆன்மீக அரசியலும்
 ரஜினி ரசிகர் மன்றமும் ஓட்டுகளைப் பிரிக்கும்
 வல்லமை கொண்டவை.
இந்திய தேர்தல் முறை ஒவ்வொரு தொகுதியிலும்
 மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குப்பெற்றவரை வெற்றி பெற்றவராக அறிவிக்கும் மெஜாரிட்டி எலெக்ஷன் முறையைப் பின்பற்றுகிறது.
அதாவது 100 வாக்காளர்கள் மொத்தம் உள்ள தொகுதியில்
திமுக 30
அதிமுக குழு 31
இவர்கள் மொத்தம் பெற்ற வாக்குகள் 61 ஆக இருந்தாலும்
 அத்தொகுதியில் 31.5 வாக்குகள் பெறுபவர் வெற்றிபெற்றவராகிவிடுவார்.
எனவே திமுக வும் அதிமுக வும் அவரவர் வாக்குகள் கணக்கை மிகச்சரியாக துல்லியமாகக் கணக்கிட வேண்டும். 
அதிமுக உள்கட்சி பிரச்சனையில்
கணக்கில் கோட்டைவிட்டுவிடுவதற்கான 
சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன.
 திமுக வின் செயல்தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள்
கலைஞரைப் போல இந்தக் கூட்டல் கழித்தல் 
கணக்குகளையும் தன்னுடைய ஊகக்கணக்கு 
அதாவது எதிர்காலம் குறித்த ஒரு ஊகம் 
ஆகியவற்றை சரியாகக் கணிப்பாரா ? அல்லது
வாரிசு அரசியல் போராட்டத்திற்கே முன்னுரிமைக்
 கொடுப்பாரா? தெரியவில்லை! 
கமலும் ரஜினியும் அவர்கள் பெரிதும் விமர்சிக்கும் 
திமுக மற்றும் அதிமுக திராவிட கட்சிகளின் 
ஓட்டுகளைப் பிரிக்காமல் தங்கள் அரசியல் கடையில்
 வியாபாரம் நடத்த முடியாது.
திமுக , அதிமுக இரு கட்சிகளுமே 
திரைப்பட நடிகர்களுக்கான கவர்ச்சியை
 மற்றவர்களை விட அதிகமாக அறிந்தவை.
அதனால் தான் தங்கள் கட்சிகளின் ஓட்டுகளை 
இவர்கள் பிரிப்பார்கள் என்ற அச்சம் இருக்கிறது.
காங்கிரசு கட்சியின் ஆட்சியை அடியோடு விரட்டிய
திமுக வின் அன்றைய தம்பியர் படை , திமுக வின்
ஓர் அங்கமாக இருந்து தன் ரசிகர் மன்றத்தை
 வளர்த்துக் கொண்டு தொடர்ந்து அரசியல் சினிமா
 என்ற இரட்டை குதிரையில் பயணித்த எம் ஜி ஆர் 
என்ற நடிகரின் பொதுஜனத் தொடர்பு,
நேற்றுவரை விலை உயர்ந்தக் காரில்
இறங்கி ரசிகர்களைப் பார்க்கும் போது கை அசைத்துவிட்டு 
சென்ற கமலுக்கும் ரஜினிக்கும் இருக்கிறதா,,? 
பொதுஜனத் தொடர்பு என்பதில் எம் ஜி ஆர்
 உண்மையில் மக்கள் திலகமாகவே மிகவும் கவனத்துடன் திரையிலும்
அரசியலிலும் (நடித்தார் ?)தன் பாத்திரத்தை
 சிரத்தையுடன் வடிவமைத்துக் கொண்டார்.
அதற்கான காலம் இன்றைய ரஜினி கமலுக்கு இருக்கிறதா..?
டுவிட்டர், முகநூல் , வாட்ஸ் அப் குரல்களைத்
 தாண்டியது தேர்தல் வாக்காள பெருமக்களின் ஜனத்திரள்.
திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான
 வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் நிலையில்
ரஜினியும் கமலும் திமுகவுக்கு தான் வேட்டு வைக்க
களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள்!
அதனாலேயே கமலோ ரஜினியோ அரசியல் களத்தில்
வெற்றி பெற்று நாளைய தமிழக முதல்வர்
 ஆகிவிடுவார்களா என்றால் அதுவும் நடக்காது.
அப்படியானால் ஏன் இதெல்லாம் நடக்கிறது?
தமிழகத்தில் வலுவான மாநிலக் கட்சிகள் இருக்கக் கூடாது.
வலுவற்ற ஆட்சி, மைநாரிட்டி ஆட்சி நடக்க வேண்டும்.
தமிழகத்தின் கனிம வளங்களையும் 
கடற்கரை வளத்தையும் மொத்தமாக 
அயல்நாட்டுக் காரனுக்கு குத்தகைக் கொடுக்கவும் 
 விற்கவும் 
இந்தியப் பேரரசுக்கு எவ்வித தடங்கலும் இருக்கக்கூடாது.
காங்கிரசு செய்ய நினைத்து செய்ய முடியாமல் போனதை 
மோதியின் பிஜேபி அரசு செய்து காட்ட நினைக்கிறது.
அவ்வளவுதான். 
அப்பத்தைப் பங்கு வைத்த பூனையின் கதை
வெறும் கதையல்ல.

Wednesday, February 21, 2018

திராவிடஹாசனுக்கு வாழ்த்துகள்

Image result for கமல் கார்டூன்
"காகிதப்பூ மணக்காது."
 "நான் பூ அல்ல., விதை .
என்னை முகர்ந்து பார்க்காதீர்கள்,
விதைத்து பாருங்கள், வளர்ந்து வருவேன் "
"இது   மரபணு மாற்றப்பட்ட விதை ! "
"தலைப்பு செய்தியாகலாம், தலைவராக முடியாது"
நாளை நமதே  திராவிடஹாசன் திரைப்படத்தின்
துவக்க விழாவில் "பஞ்ச்ச் டயலாக்" தூள் கிளப்புது..
இனிமேலாவது நாம பொழைக்கிற வழியைப் பார்க்கனும்னு
என் தோழி வேறு அடிக்கடி போன் செய்து
என்னை உசுப்பேற்றுகிறாள்..
ஒரு கட்சினு ஆரம்பிச்சா
மகளிர் அணி/ இலக்கிய அணி/ மும்பை அணி/
புறநகர் அணி/ அவியல் அணி/, பொரியல் அணி/
சாம்பார் அணி/ இப்படியாக தானே உருவாகும்
எதாவது ஓர் அணியில் நமக்கு ஒரு சீட்டு
கிடைக்காமலா போய்டும்?
அவ காட்டற பரபரப்பை பார்த்தா நமக்கும்
உள்ளங்கை அரிக்கிறது!
இப்பவே டவுண் பஸ்சில் சீட்டைப் பிடிக்கிறமாதிரி
"நாளை நமதே  திராவிடஹாசனுக்கு வாழ்த்துகள்" னு
சொல்லிவைப்போம்.
மண்டைக்காயற மாதிரி யோசிச்சி, தலையணை மாதிரி
புத்தகத்தை வாசிச்சு தலைவலி வந்து கண்ணாடி போட்டு..
அரசியல் எழுதி .. இதெல்லாம் வேஸ்ட்டுனு புரியுது.
எந்த இசமும் தேவையில்ல.
மக்களுக்கு என்ன தேவையோ
அதுதான் கட்சியின் கொள்கை... னு
திராவிடஹாசன் சொல்லியாச்சு..
ஒவ்வொருவரும் அவரவர் தேவையை
 உடனே பட்டியல் போடுங்க
.. சீக்கிரம் .
 முதலில் வருபவருக்கே முன்னுரிமை..


Saturday, February 17, 2018

நவீன இந்தியாவில் நவீன திருடர்கள்

Image result for nirav modi cartoon
யாருக்கும் தெரியாமல் ஓடுகின்ற டிரெயினில்
பேருந்தில் பிக்பாக்கெட் அடிக்கிறவர்களை எல்லாம்
திருடன் டன்  என்று அழைக்கிறோம்.
கையில் அகப்பட்டால் மொத்து மொத்துனு
மொத்தி நம்ம சமூகக்கடமையை நிறைவேற்றிவிடுகிறோம்.
ஆனா ஹெலிகாப்டரில் வந்து இறங்கி
நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி கொடுத்து
கோர்ட்டும் சூட்டுமாய் வெள்ளையும் சொள்ளையுமாய்
வந்து ஆறேழு வருஷங்களாய் வேண்டியதை
மாமன் மச்சான் என்று குடும்பத்துடன் சேர்ந்து
கொள்ளை அடிச்சிட்டு நிம்மதியா பெல்ஜியம் லண்டன்
என்று பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு..
அது என்னடா..
வைரவியாபாரிகள் திருடறதுக்குனு தனிரேட்டா..
14 செப்டம்பர் 2013 நியுடெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
அலகாபத் வங்க்கியின் போர்ட் மீட்டிங்கில் அஜண்டா 4/6
கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ்க்கு அவர்கள் பெயரில் இருக்கும்
ரூ 1500 + 50 கோடி கடனை வசூலிக்காமல் மேற்கொண்டு
கடன் கொடுக்க கூடாது, " என்று அன்றைய வங்கி டைரக்டர்
துபே சொன்னதை ஏன் அரசும் ரிசர்வ் வங்கியும் நிதித்துறை
மந்திரியும் பிற வங்கி அதிகாரிகளும் நிராகரித்தார்கள்?
I also wrote to the Reserve Bank of India and secretary,
 financial services in the Ministry of Finance in my effort to warn
 them of a massive scam looming large. My request was to take
immediate preventive action and keep a watch on all the companies
 linked to Choksi's firm, as they were accumulating loans
 without making payments to the bank," Dubey said.
11,700 கோடியை சுருட்டிக்கிட்டு பத்திரமா ஒரு குடும்பம்
இந்தியாவை விட்டு போகும் வரை அமைதியா இருந்திட்டு
அவன் போனப்பிறகு ஏன் டா வாயிலும் வயித்திலு அடிச்சிக்கிட்டு
கத்தறீங்க.. மல்லையா ஓடிப்போனாரு.. லலித் மோடி ஓடிப்போனாரு
இப்போ நிரவ் மோடி ஓடிப்போயிட்டாரு..
இப்போ பாஸ்போர்ட்டை முடக்கவும் வங்கி கணக்குகளை
முடக்கவும் அவர்கள் அலுவலகங்களை சீல் வைக்கவும்..
அது எப்படிடா எல்லா முடிஞ்சப்பறம் கடைசியில வர்ற
போலீஸ்காரன் சினிமா காட்சி மாதிரி ..
இந்த லட்சணத்தில வங்கிகளுக்கு இண்டெர்னல் ஆடிட்டிங்க்
ரிசர்வ் வங்கி ஆடிட்டிங்க்னு ஏகப்பட்ட சோதனைகள்
ஆண்டுதோறும் நடக்கும். அத்தனைப் புத்திசாலிகளுமா
இத்தனைக் கடனுக்கும் வரவு இல்லியேனு கவனிக்கல..

போதுமடா சாமி..
ஏற்கனவே காதுகுத்தி கடுக்கண் போட்டிருக்கு
நீங்க எவனும் வந்து  காதில பூ சுத்தாதீங்க..
Image result for farmers suicide in india

வாங்கிய கடனைக் கொடுக்க முடியலையே
வானம் பொய்த்து பயிர்க்கருகி
வாழ்க்கை போயிடுச்சே..
கொடுத்த வாக்கை காப்பத்த முடியலையே
கடன் கொடுத்தவனின் சுடுசொல் தாங்காமல்
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும்
இதே மண்ணில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அடியே .. பராசக்தி..
பாரதமாதக்கி ஜெ. ஜே.

Wednesday, February 14, 2018

அரசியல் டூரிங்க் டாக்கீஸ்

Image result for டூரிங் டாக்கீஸ்

நடிகர்கள் அனைவரும் அரசியல்வாதியாகி சமூகத்திற்கு
 தொண்டாற்ற துடிக்கிறார்கள். இதில் மார்க்கெட் போன நடிகர்கள் மட்டுமல்ல, மார்க்கெட்டில் இப்போதும் இருக்கும் நடிகர்களும் அடக்கம்
. நடிகர்களின் இச்சமூக அக்கறையை நினைக்கும்போது 
புல்லரிக்கிறது. இந்த மாபெரும் மாற்றத்தால் தமிழகம் 
உலக அரங்கில் ஓர் உன்னதமான இடத்தைப் பிடித்துவிடும்
என்றே நினைக்கிறேன். ஹாலிவுட் கூட நம்மிடமிருந்து தான்
 இக்கலையுலக அரசியல் மாதிரியைக் கற்றுக் கொள்ளும் நிலைவரும்.
வரட்டும், வரட்டும். மகிழ்ச்சி.
நடிகர்கள் அரசியலுக்கு வந்துவிடுவதால்அ
ரசியல்வாதிகள் 
அனைவரும் நடிக்கப் போய்விடலாம்! ரொம்ப இயல்பாவும் இருக்கும்!
இந்த மாற்றம் வந்தால் எனக்கென்னவோ
திமுக பேஸ்மெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு! 
கதாநாயகனிலிருந்து அப்பா வேடம், அம்மா வேடம்,
 துணை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள்,
பாட்டு எழுத வசனம் எழுத கதை எழுத... அடேங்கப்பா..
இந்த மாற்றம் வரும்போது அதிமுக
 ஓபிஎஸ் எடப்பாடி பாடு தான் படு சிரமத்திற்குள்ளாகும்!
 கூட நடிக்க நடிகைகள் கிடைப்பார்களா
அல்லது அவர்கள் நிரந்தர வில்லன் ரோலை எடுத்துக் கொண்டு 
அந்தக் காலத்து நம்பியார் அசோகன் வீரப்பா ரேஞ்ச்சுக்கு 
போய்விடுவார்களானு தெரியலை. தயாரிப்பாளர்கள் ஆகலாம்.
இதிலும் தினகரன் தான் தனித்து நிற்கிறார். 
கதாநாயகன் முதல் குணச்சித்திர வேஷம், வில்லன் ரோல்..
 தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் எல்லாத்தையும் சேர்த்து
 குக்கரில் போட்டு விசில்
போட வைத்துவிடுவார்!..
இனி, அவரவர் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
உங்கள் விருப்பம் போல மருத்துவர் இராமதாசு முதல்
 வைகோ வரை.. 
அப்படியே நம்ம தமிழிசை அக்காவையும் விஜயதாரிணி
தங்கச்சியையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கட்.. 123.. கட் கட்..

Sunday, February 11, 2018

மரணதேவதை

Image result for goddess of death eternity modern art

மரணம் சுடலைத்தீயின் வடிவத்தில்
சகலத்தையும் எரித்துப் பொசுக்கி தன்னை தன் இருத்தலை
 நிலைநிறுத்திக் கொண்டே இருக்கிறது.
மரணம் எப்போதுமே அழகானது.
அதுவே பிறவியின் நிரந்தரமானது.
சொத்து சுகம் உறவுகள் ஆள்பலம் அடியாட்கள்
அரசியல் பலம், பதவி அந்தஸ்த்து கார் பங்களா
எல்லாம் சேர்ந்து நின்றாலும் அந்நேரம் வரும்போது
மரணமே மனிதனை ஆட்கொள்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் மரண ஊர்வலம்
 என்னைச் சுற்றி.
மரணதேவதை ஒவ்வொரு அசைவிலும் ஒரு காவியத்தைப் போல
துன்பகேணியில் தத்துவ நீரைப் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறாள்.
என் கணவரின் அண்ணியார் திருமதி சுதா சங்கரலிங்கம்,
என் உடன்பிறந்த சகோதரி , அக்கா சுசிலாவின் கணவர் மதன்,
இரண்டும் அடுத்தடுத்த நாட்கள்.. 
இதனால் ஏற்பட்ட பயண அலைச்சல் மன உளைச்சல்
 தீர்வதற்குள் நேற்று முன் தினம் இனிய நண்பர் கவிஞர்
பாரதிமணி என்ற கிங்க்பெல் அவர்களின் திடீர்மரணம்..
 நுகர்ப்பொருள் கலாச்சாரம் எப்படி எல்லாம்
மனித உணர்வுகளையும் உறவுகளையும் சிதைத்திருக்கிறது 
என்பதை மரணமும் உணர்த்துவது மரண அவஸ்தை.
1.
கணவரின் அண்ணியார் சுதா ஓர் அன்னலட்சுமி.
தனக்கு தன் பிள்ளைகளுக்கு மட்டுமே கவனமாக
 சொத்து சேர்க்கும் தலைமுறையின் சமார்த்தியங்களை அறியாதவர்.
எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்,
எல்லோர் நலனிலும் மகிழ்ச்சியிலும் தன் வாழ்க்கையை
 அனுபவித்தவர். தான் இன்னாருக்கு இந்த நல்ல காரியத்தை 
செய்கிறோம் என்பதை அறிந்து செய்தவரல்ல. 
அவரைப் பொறுத்தவரை சுற்றமும் நட்பும் 
அருகிலிருக்கும் மனிதர்களும் ... இப்படியாக ..
எல்லோருக்கும் அவரவர் வாழ்வில் ஓடிப்போய் நிற்க முடிந்தது.
உதவி செய்வதற்கு பணம் மட்டும் தேவை
 என்று நினைத்திருக்கிறோம்.
இல்லை .. சுதா மாமியைப் போல ஒரு வாழ்க்கையை
 வாழ்ந்தவர்களுக்கு அது பொருட்டல்ல.
ஆலமரம் உறவுகளுக்கு மட்டும் நிழல் கொடுப்பதில்லை.
வழிப்போக்கனுக்கு அதுவே நிழல். அவள் ஓர் ஆலமரம்.
விழுதுகளுக்கும் அதுவே பலம். காதலைக் கொண்டாடிய பெண்.
அசாதாரணமான செயல்களைச் செய்து
 பலர் வாழ்க்கையில் விளக்கேற்றிய 
சாதாரணமான பெண்மணி. 
என்னைப் பிரமிக்க வைத்த இன்னொரு புத்தகம்.
இன்னொருவர் என் அக்காவின் கணவர் மதன்.
வங்கி அதிகாரி, பணி நிமித்தம் இந்தியா எங்கும் பயணித்தவர். 
அக்கிராமத்தில் அவர் தான் முதல் பட்டதாரி.
 தன் இருத்தலுக்கான போராட்டத்தில் இறுதியாக 
அவர்நேசித்தது தன் சொந்தக்கிராமமும் கிராமத்து மனிதர்களும்
தன் கிராமத்தின் ஆலமரமும் கண்மாய் கரையும்.
கிராமம் தன்னைத் தொலைத்துவிட்டது ,
கிராமத்தின் விளை நிலங்கள் விற்பனைக்கான
 பட்டாவாக பணமதிப்பீட்டிற்கு மாறியதை ஏற்றுக்கொள்ள முடியாத
அவஸ்தையில் .. .. அந்த ஏமாற்றத்தில் ..
.. மருத்துவர்கள் கார்டியக் அரஸ்ட் என்று சொல்கிறார்கள்.
மண்ணையும் மனிதர்களையும் இழந்து விட்டதை
ஏற்றுக்கொள்ள முடியாமல் போன 
ஒரு தலைமுறையின் எச்சம் அவர்.
நேற்று முன் தினம் என் நண்பர் பாரதிமணி...
 தன் இறுதிநாட்கள் வரை உழைப்பே தெய்வமென 
வாழ்ந்தவர். மும்பையில் நவீனகவிதை வரிசையில் 
அவர் மட்டுமே எப்போதும் தனித்துவமானவர். 
உப்பு புளி கவலையும் இன்றைய இருத்தலுக்கான
 தேவையும் ஓட்டமும் அவர் கவிதைகளைத் 
தின்றுவிட்டது. வீடு வாசல் பிள்ளைகளின் எதிர்காலம்
 என்று ஒவ்வொரு சராசரி மனிதனின் இருத்தல் போராட்டத்தில்
அவர் இளைப்பாற நேரமில்லை. கவிதைகளைப் பற்றி
பேசுவதற்கும் எழுதுவதற்கும் துடித்த அந்த உள்ளம்..
எளிமையும் கடின உழைப்பும்.. அவர் புன்னகையும்
அன்பும் பெண்களை மதிக்கும் பேராண்மையும்..
எழுதாத கவிதையாகிப்போனது ஒரு கவியுள்ளம்.

மரணம் மனித வாழ்க்கையில் புதிதல்ல.
மரணம் ஊரைக் கூட்டும்
மரணம் உறவுகளைப் பலப்படுத்தும்.
மரணம் மனிதர்களின் "தான்" என்ற
அகங்காரத்தை அசைத்துக் காட்டி
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
மரணதேவதையின் இத்தத்துவங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து கொண்டிருக்கின்றன.
மரணம் என்னைப் பயமுறுத்தவில்லை
மனிதர்கள் என்னைப் பயமுறுத்துகிறார்கள்.
சுடலையாண்டவனை எரித்த தீயில்
நஞ்சுண்ட சக்தி .. பத்ரகாளியாய்..
சக்தியே சிவனாய்..
ஆதிபராசக்தியே அவனாய்...
ஆடைகளைக் களைந்துவிட்டு
சூல்கொண்ட கண்மாயில் அவள்.தரிசனம்..

பார்வதீ

Image result for lord shiva paintings artமழையும் வெயிலும் 


மண்ணும் மனிதர்களும்
 பயமுறுத்துகிறார்கள்.
கடலடியின் பவளப்பாறைகள்
காலடியில் அசைகின்றன.
வெற்றிடத்தில் ராகுவும் கேதுவும்
மோதிக்கொள்கின்றன
பிரபஞ்ச வெளியில் பரணி
மேஷத்திடம் தோற்றுப்போகிறாள்
காந்தாரி கட்டவிழ்க்கிறாள்.
கர்ப்பகிரகத்தில் சூர்யகிரஹணம்.
அடியே பார்வதீ.. தீ..
சுடலையாண்டவன்  மயானத்தீயில்
எரிவது தெரியாமல்
என்ன தவம் செய்கிறாய்..?