Wednesday, August 23, 2017

மணல் கடிகை

Image result for மணல் கடிகை

மணல் கடிகை
அண்மைக் காலத்தில் நம் கண் முன்னாலேயே எத்தனையோ
 மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
தொலைதூரை தொலைபேசி தொடர்புகளுக்கு இரவு 9 மணிக்கு மேல் வரிசையில் காத்திருந்து பேசிய காலம் ஒன்றிருந்தது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அறிவியல் தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையில் நூற்றாண்டு
 கால மாற்றங்களை ஒரு சில ஆண்டுகளில் புரட்டிப்போட்டு செய்து விடுகின்றன. மாற்றங்களின் விளைவுகளைப்
பற்றி நாம் யோசிப்பதற்குள் நம் வாழ்க்கையில் அதன் தாக்கங்கள்
பல்வேறு இடங்களில் புகுந்துவிட்டதை காலம் கடந்து தான் நாம் உணர்கிறோம்.
மும்பை நகரத்தைப் பெருநகரமாக்கிய நூற்பாலைகள்
 மராட்டிய சமூகத்தில் ஏற்படுத்திய
மாற்றங்கள் சமூகநீதி தளத்தில் மிக முக்கியமானவை.
இன்னும் சொல்லப்போனால்,
இந்திய இலக்கிய வரலாற்றில் தலித்திய இலக்கியத்தின்
 தோற்றுவாயாக இந்த ஆலைகளும்
ஆலைகளில் வேலை செய்வதற்காக கிராமங்களிலிருந்து வந்த விளிம்புநிலை மக்களும்.
இந்த ஆலைகள் 1980 வாக்கில் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. தொழிலாளர்களின் குடும்பங்கள் வீதிக்கு வந்தன.
தனியார்மயம் உலகமயம் அவர்களைத் தின்று துப்பி
குப்பைத்தொட்டிகுள் வீசியது.
இதுவும் நடந்தது. நடந்துக்கொண்டிருக்கிறது.
வான் பொய்த்ததோ.. மண்ணின் அரசு பொய்த்ததோ
 இரண்டும் சேர்ந்து செய்த சதியில் விவசாயிகள் தற்கொலையும் அனாதைகளாக பெருநகரத்தின் சாலைகளில்
 அன்றாடக் கூலிகளாக அலையும் நிலையும் ஏற்பட்டது. இத்தனை மாற்றங்களும் சற்றொப்ப ஒரு கால்நூற்றாண்டுக்குள்
 என் கண் முன் நிகழ்ந்துவிட்டன. இந்த மாற்றங்கள் சமூகத்தளத்தில்
 ஆண் பெண் உறவுகளையும் குடும்பம் என்ற நிறுவனத்தின்
 தூண்களையும் ஆட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
நெகிழ்ச்சி தன்மை இருந்தால் மட்டுமே
இருத்தல் இனி சாத்தியப்படும் என்ற நிலைக்கு
மனித உறவுகளைத் தள்ளிவிட்டது.

இப்படியான பின்புலத்தில் எழுதப்பட்ட ஒரு நாவல்
 அண்மையில் நான் வாசித்த "மணல் கடிகை"
தமிழினி பதிப்பகம் மீதும் பதிப்பகத்தின் வசந்தக்குமார் மீதும்
 எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை இப்புதினம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. நாவலாசிரியர்  எம்.கோபாலகிருஷ்ணன் இந்த நாவல் மூலமாக மட்டுமே என் வாசிப்ப்புக்கும் அறிமுகத்திற்கும்
வந்திருக்கிறார்.
திருப்பூர் என்ற தொழில்நகரமே இந்த நாவலின் முதன்மையான கதைப்பாத்திரம். தறி நெய்து கொண்டிருந்த திருப்பூர் எப்படி
 "டாலர் சிட்டியாக" மாற்றம் பெறுகிறது..
தறியில் சட்டைப்போடாமல் வியர்வை நாற்றத்துடன்
இருக்கும் ஆணின் உடலை கலவியில்
வெறுக்கும் பெண்ணுடல் கதையின் ஆரம்பப்புள்ளி. கதை ஓட்டத்தில் கதைக்களமும் கதைக்காலமும்  கதை நிகழ்வுகளைத்
தீர்மானிக்கின்றன. அந்த சூத்திரத்தை மிகவும் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறது இப்புதினம்.
 சமகால அரசியல் கதைக்கருவுக்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது.
 எம் ஜி ஆர் என்ற நிஜக்கதை நாயகன், அக்காலத்தில் வாழ்ந்தப்
பெண்களின் உணர்வுநிலையை எந்தளவுக்குப் பாதித்திருந்தார்
 என்பதை மிகவும் கூர்மையாக
பதிவு செய்திருக்கிறது. புணர்ச்சியில் கண்களை
மூடிக்கொண்டிருக்கும் அவள்களில் மனக்கண்ணில்
 எம்ஜிஆர் மட்டுமே ஆண்மகனாக எப்போதும் இருக்கிறார்.
 அவள்களைத் தொடும் கணவனாகட்டும் காதலனாகட்டும்
 அவள்களின் மனக்கண்ணில் எம்ஜிஆராக மட்டுமே
இருப்பதால் அவன்களின்சுயம் காயப்படுகிறது.
 லிங்கமையவாதம் உடைபடுகிறது.
ஆண் உடலின் ஆதிக்கத்தை பெண்ணின் மவுனங்களே சிதைக்கின்றன.
தொழில் நகரத்தில் இயங்கும் பொதுவுடமை
 இயக்கமும் இலக்கியப் போக்குகளும் கதைப் பாத்திரங்களின் உரையாடல்களின் வழி விவதாங்களை முன் வைக்கின்றன.
"பேசும் போதெல்லாம் புரிகிற  மாதிரி பேசும் நண்பன்,
எழுதும்போது மட்டும் ஏன் இப்படி எழுதுகிறான்"
என்று தன் எழுத்தாள நண்பன்  சண்முகம் (பரதேசி )பற்றி நண்பர்கள்
நினைக்கிறார்கள்.

தெருவிலும் வீடுகளிலும் ஓடிக்கொண்டிருந்த தறிகள்
காணாமல் போகின்றன.
ஆண்களும் பெண்களும் பனியன் கம்பேனிக்கும்
 பிரா கம்பேனிக்கும் வேலைக்குப் போகிறார்கள்.
சனிக்கிழமை சம்பளம் வாங்கியவுடன் கிராமத்திலிருந்து
 வந்த அவர்களுக்கு சில கனவுகள் நனவாகின்றன.
சினிமா தியேட்டருக்கு இரண்டாவது காட்சி படம் பார்க்கப்
போகிறார்கள். இரவும் பகலும் ஆணும் பெண்ணும் இணைந்து வேலைப்பார்க்கும் இடங்களில் பெண்ணுடலின் அருகாமை
ஆணுடலின் அவஸ்தை இரு உடல்களும் தம்தம் பசியைத்
தீர்த்துக் கொள்ளும் தருணங்கள், அதில் காணாமல் போகும் கற்பு
கத்தரிக்காய் தூய்மைவாதங்கள் , திருமணத்திற்கு முன் சகஜமாக எவ்விதமான குற்றவுணர்வுமின்றி ஆண் பெண் உடலுறவு
கொள்ளும் நிலை
 இதனால் விளையும் ஆணின் உளவியல் சிக்கல்கள்
என்று கதை மிகவும் கனமுள்ளதாக  ...

ஆனால் கதை முழுக்கவும் ஆண்களின் பார்வையில் மட்டுமே  ..விரிகிறது.
அதனால் தான் ஆண் தொட்டவுடன் பெண் அவனுடன்
படுத்துவிடுகிறாளோ என்னவோ.. !
இம்மாதிரியான சில சினிமாத்தனமான கற்பனைகளும்
கதையில் உண்டு.

ஒரு தொழில் ஆரம்பம் என்னவெல்லாம் மாற்றங்களைக்
 கொண்டுவரும் என்பதை மிகவும் துல்லியமாக இப்புதினம் பேசுகிறது. பனியன் கம்பேனிகள், அதை ஏற்றுமதி செய்யும்
ஏற்றுமதியாளர்கள், துணி கழிவுகளை வாங்கி மறுசுழற்சி
 செய்பவர்கள்,   சாயபப்ட்டறைகளின் கழிவுகள் கலந்து ஒரு நதிநீரே பாழாகிப்போன அவலம், சிறுசிறு கம்பேனிகளுக்கு
நிதி உதவி அளிக்கும் லேவாதேவி பிசினஸ்,
மாதச்சம்பளக்காரனுக்கு அதீத ஆசையை உருவாக்கும்
சிட்பண்ட்ஸ், சிட்பண்ட் ஏமாற்றுகள், சாலையொர தேநீர்க்கடைகள்,
அங்கே போடப்படும் ஆம்லெட், ஆம்லெட் தேவைக்கான முட்டை,
கோழி வளர்ப்பு .., சிறுதொழில் முதலாளிகள்
பெரும்பணக்காரர்கள் ஆவதும், அவர்கள் தங்கள் அந்தஸ்த்தைக் காட்ட விலையுயர்ந்த கார்களை லோன் போட்டு வாங்குவது, அவர்களுக்கு லோன் கொடுக்க இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளின் கிளைகளும் திருப்பூரைத் தேடி வருதல், இந்த மாற்றங்களில் ஒட்டமுடியாமல்
தனித்துவிடப்படும் மனம் ஆன்மிகம் பேசி ஆசிரமம் நிறுவி ..
ஒன்றிலிருந்து ஒன்றாக திருப்பூரைச்
சுற்ரிய மணல் கடிகை.
நாவல் விரும்பி வாசிக்கும் வாசகர்கள்
கட்டாயம் வாசிக்க வேண்டிய புதினத்தில் ஒன்று மணல் கடிகை.
வாழ்த்துகள் நாவலாசிரியர் எம். கோபாலகிருஷணன் அவர்களுக்கு
வெளியீடு : தமிழினி பதிப்பகம்
பக்: 544
விலை ரூ 400.




Sunday, August 20, 2017

கருமுகிலின் நர்த்தனம்

Image result for birds on rainy days

ஆகாயப்பெருவெளி எங்கும்
கருமுகில்கள் உடையும் சப்தம்
கண்களில் வெறியுடன்
காளியின் நர்த்தனம் ஆரம்பித்துவிட்டது.
கழுத்து மாலையின்
மண்டையோடுகள் கூச்சலிடுகின்றன
மின்சாரக்கம்பிகள் அறுந்து  தொங்கும்
இருளின் வெளிச்சத்தில்
தண்டவாளங்கள் தடம் புரள்கின்றன.
உடல்களின் பயணம் முடிந்துவிடுகிறது.
மழைத்துளிகளின் பெருமூச்சில்
மரக்கிளைகள் ஒடிந்து சரிகின்றன.
கிளைகளில் கூடுகட்டியிருந்த பறவைகளைக்
காணவில்லை.
எங்காவது பத்திரமாக பறந்துப் போயிருக்கும்.
இருண்ட வானத்திலிருந்து இறங்கிவந்த
மழைத்துளிகள்
என் கூடாரத்தின் இமைகளை எரிக்கிறது.
எங்கோ கண்ணாடிக் கதவுகள்
நொறுங்கி விழும் ஓசை.
பேய்மழை பேரிரைச்சல்
ஊழிக்கூத்துக்கான ஒத்திகை நடக்கிறது.
கம்பளிப்போர்வையை எடுத்து
இழுத்து மூடிக்கொள்கிறேன்.
எப்போதோ நீ புகைத்த பீடி வாசனையும்
உன் வேர்வையின் நெடியும்
போர்வைக்குள்ளிருந்து..
என் மீது கவிகிறது.
வான் மழைப் போற்றுதும்..
வான்மழைப் போற்றுதும்.

Friday, August 18, 2017

திமுக வின் எதிர்காலம் அதிமுக கையில்...

திமுக வின் எதிர்காலம் அதிமுக கையில் !
அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இரண்டு வகையில் உண்டு.
ஒன்று ஆளுமை மிக்க தலைவர்./ தலைமை வழிபாடு
இன்னொன்று: அரசியல் சித்தாந்தம்.
காங்கிரசில் நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி என்ற பிம்பங்கள்
 தலைமை வழிபாட்டு தளத்தில் இருந்தவர்கள். 
அதன்பின் அந்த இடத்தை ராகுல்காந்தியால் அடைய முடியவில்லை.
 காங்கிரசின் பின்னடைவுக்கு இதுவே மிக முக்கியமான காரணம்.
பிஜேபியைப் பொறுத்தவரையில் நாம் விரும்பாவிட்டாலும் நாம் விரும்பாத
சில அரசியல் சித்தாந்தங்கள்..கொண்டவர்கள். அதாவது
 இந்துத்துவா கோட்பாடுகள் உண்டு. அவர்களிடம் பிற  அரசியல்
கட்சிகளுடன் ஒப்பிடும் போது தலைமை வழிபாடு குறைவு தான்.
. இன்று மோதி மோதி என்று கூட்டம் அலைமோதினாலும்
 நாளையே கூட வாஜ்பாய் அவர்கள்  இன்று இருப்பது போல 
மோதியும் ஒதுங்கி இருக்கும் காலம் வரலாம். 
அப்படி ஒருநிலை வந்துவிடக் கூடாது என்று 
மோதி தனிப்பட்ட முறையில் தன் தலைமையை
ஆகச்சிறந்த பிஜேபி ஆளுமையாகக் காட்டுவதில் முனைப்பாகவும்
 கவனமாகவும் இருக்கிறார். (இதுவும் கவனிக்கப்பட வேண்டியதுதான்)

இடது வலதுசாரித் தோழர்களுக்கு தலைமை வழிபாடு இல்லை.
 தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளை விட தனிமனித
 தலைமை பிம்பங்களுக்கே முக்கியத்துவம் உண்டு. மரியாதை உண்டு.
 திமுக வின்  அறிஞர் அண்ணா, அதன் பின் கலைஞர் கருணாநிதி,
அதிமுக வில் எம்ஜிஆர், ஜெயலலிதா ,
 திராவிட அரசியலுக்கு முன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராச்ர்
.. இவர்கள் அனைவருமே தாம் சார்ந்த அரசியல் கட்சியின்
 மூலம் நுழைந்தவர்கள் தான் என்றாலும் அவர்களுக்கென்று
 தனிப்பட்ட ஆளுமையை வளர்ந்துக் கொண்டவர்கள்.
தனி மனித பிம்பங்களாக சமூகத்தில் கொண்டாடப்பட்டவர்கள். 
அவர்களுடைய பிம்பங்கள் முன்னிலைப் படுத்தப்பட்டு 
அவர்களின் கட்சி அவர்களின் பிம்பங்களின் சாயலாக இருந்தது.
இப்போது இந்த பிம்பங்களின் இடம் தான் ஒட்டுமொத்தமாக
 காலியாக இருக்கிறது.
திமுக வின் செயல்தலைவர் ... உண்மையில் திமுக வின் 
தலைமைத்துவ பிம்பமா இல்லையா என்பது அவருக்கே 
சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. வாரிசு அரசியலில் அவருடைய இடத்தை வருங்காலம் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
அதிமுக வைப் பொறுத்தவரையில் "ஜெ"வின் மறைவுக்குப் பின்
 தலைமை பிம்பம் .. அந்த இடம் ..  காலியாக இருக்கிறது. 
இனி அந்த இடத்திற்கு எவரும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. 
அதிமுக அரசியல் தன் கட்சிக்கு விசுவாசிகளை வளர்த்த அளவுக்கு
 தலைமைகளை உருவாக்கவில்லை அல்லது உருவாகும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை.
அரசியல் சித்தாந்தங்களைப் பொறுத்தவரை... 
அதிமுக , திமுக இரு கட்சிகளுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பது
 என்பதை விட்டால் வேறு என்ன பெரிய அரசியல் சித்தாந்தங்கள் தற்போது 
 நடைமுறையில் இருக்கின்றன என்பது எவருக்கும் தெரியாத ரகசியம்.
அப்படி ஒன்று இருந்தால் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். 
எனவே தான் திமுக எதிர்ப்பு என்பதை முன்வைத்து அரசியலுக்கு வந்த
 அதிமுக கட்சி அந்த திமுக எதிர்ப்பை விட்டுவிட்டால்
அது என்னவாக இருக்கும்???
எதிர்ப்பதற்கு அதிமுக இல்லை என்றால் திமுக காரர்கள் என்ன செய்வார்கள்?
எதை வைத்து அரசியல் நடத்துவார்கள்?!!

காங்கிரசு அல்லது பிஜேபியை எதிர்த்து அரசியல் செய்யலாம். 
செய்வார்களா..?
ஊழல் வழக்குகள், அது இதுனு தலைக்கு மேல் நிறைய சுருக்கு கயிறுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
அதாவது தேசியக்கட்சிளாக காங்கிரசும் பிஜேபியும் தமிழகத்தில்
 காலூன்ற முடியாமல் இருந்ததற்கு காரணம் 
தமிழகத்தின் திராவிட அரசியல் மட்டுமல்ல,
 திராவிட அரசியல் கட்சிகள் உருவாக்கிய வலிமையான
 தலைமை பீட வழிபாடுகள் மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கின்றன.

தலைமை பீட வழிபாடுகள் (HERO WORSHIP) தவறு
 என்று நாம் சித்தாந்தம் பேசலாம்.
ஆனால் அவர்கள் தான் தமிழக அரசியலில் தேசியக்கட்சிகள் 
நுழைவதற்கு இடம் கொடுக்காத தடுப்புச் சுவர் போல
 இருந்திருக்கிறார்கள்.
இன்று சுவர்கள் எல்லாம் இடிந்துப் போய்விட்டன.
இடிந்த சுவர்களின் நிழலில் கழுதைகள் இளைப்பாறிக் 
கொண்டிருக்கின்றன ..!
அதனால் தான் ரஜினிகாந்தும் கமலஹாசனும் 
எப்போதும் நடக்காத ஊழல் என்னவோ இப்போது நடந்துவிட்டதாக
 தூய்மைவாத அரசியல் பேசுகிறார்கள்... 
எம்ஜிஆர் ஆகிவிடலாம் என்ற நப்பாசையில் தான்.

அதிமுகவின் எடப்பாடி அணிக்கோ ஓபிஎஸ் அணிக்கோ
 தினகரனுக்கோ ஏன் சிறையில் செக்கிழுக்கும் சின்னம்மாவுக்கோ 
அதிமுக கட்சி தேவைப்படுவதை விட திமுக வுக்குத் தான் அதிமுக கட்சி பெரும் தேவையாக இருக்கிறது.

Tuesday, August 15, 2017

இந்தியா வாங்கிய நகைக்கடன்

இந்தியா வாங்கிய நகைக்கடன்
நம்ப சித்தி ராதிகா அடிக்கடி விளம்பரத்தில் வந்து 
அடகுவைத்த நகையை மீட்டு உடனே பணம்பெறும்
 மாயஜாலத்தைப் பற்றி சொல்லும் போது அந்தக் கணக்கு
 எப்படினு தெரியாமல் கணக்குப் போடுவதையே
 நிறுத்திவிட்டேன்.🙄

இந்தியா வாங்கிய உலக வங்கிக்கடன், வட்டிக்கடன் ,
 வட்டியில்லாத கடன் இத்தியாதி
அனைத்து கடன் விவகாரத்திலும் எனக்குப் புரியாத 
இன்னொரு புதிரான கடன் 1980ல் இந்தியா வாங்கிய நகைக்கடன்
. அதாவது சற்றொப்ப அமெரிக்கா டாலர் 450 மில்லியன் 
மதிப்புள்ள தங்கக்கட்டிகளை அடமானம் வைத்த
 வாங்கிய கடன். அப்போது தங்கக்கட்டிகளை 
லண்டனுக்கு இந்தியாவிலிருந்து ரிசர்வ் பேங்க் கையில்
 எடுத்துச் சென்றது.!
(the situation forceed RBI to raise a loan of USD 450 million
 by pledging its gold reserves and physically transferring it to London)

எப்படி அவ்வளவு தங்க கட்டிகளை எடுத்துச் சென்றிருப்பார்கள்? 
விமானத்திலா அல்லது கப்பலிலா..? 
இதுதான் எனக்கு இன்று வரைப் புரியாத புதிராக இருக்கிறது!
கவலையாகவும் இருக்கிறது.. இப்படி அடமானம் வைத்த தங்கக்கட்டிகளை
திருப்பிவிட்டார்களா.. அல்லது கடனில் முங்கிவிட்டதா..!??
யாருக்காவது தெரியுமா நண்பர்களே...

Sunday, August 13, 2017

சீனியர் ரெய்மண்ட் எம்.டி., இன்று வாடகைவீட்டில்


'Penniless' Vijaypath Singhania says rich son Gautam is 'driving him out'

ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருந்தவர் இன்று வாடகை வீட்டில். 
அதிலும் அவருடைய ஒரே மகன் அவரை இந்த நிலைக்குத் தள்ளி 
இருக்கிறார்.RAYMONDS ஆடைகள் இன்றும் அந்தஸ்தின் 
அடையாளமாக இருக்கின்றன. 
அந்த நிறுவனத்தை இந்தளவுக்கு உருவாக்கியவர் 
விஜய்பட் சிங்கானியா (RAYMOND MD).தன் ஓய்வுபெறும் வயது 
வந்தவுடன் தன் பெயரிலிருந்த சற்றொப்ப ரூ 1000 கோடி
 பங்கு சந்தை மதிப்பை தன் ஒரே மகன் கெளதம் சிங்கானியாவுக்கு
 மாற்றிக் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார். 
அது தான் அவர் செய்த ஒரே தவறாக முடிந்தது.
 78 வயதான அவர் இன்று தெற்கு மும்பை பகுதியில் 
அபார்ட்மெண்ட் வீட்டில் வாடகைக்கு குடி இருக்கிறார்.
 ஒரு காரோ காரை ஓட்டுவதற்கு ஓட்டுநரோ கொடுக்கவும் 
அவருடைய ஒரே வாரிசான மகன் மறுத்துவிட்டார்.
நிலைமை இந்தளவுக்குப் போய்விட்டதால் தங்கள் குடும்பச் சொத்தாக
 இருந்த ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் தனக்கான உரிமையைக் 
கேட்டு மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். 
வீட்டுக்கதை இப்படியாக தெருவுக்கு வந்ததால் ஊடகங்கள் மூலம் 
இச்செய்தி பரவி இருக்கிறது. பெரிய வீட்டுக்கதைகளில் 
இன்னும் மர்மங்கள் இருக்கலாம்!.
காசு பணம் துட்டு துட்டு..
.பெரிசுகள் இப்படி எல்லாம் ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும் 
கொடுத்திடக்கூடாது, கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.. 
எப்போதும் ரிமோட்டை தங்கள் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்
 என்ற பெரிசுகள் தத்துவத்தை தமிழ்நாட்டு அரசியலில் இருந்தாவது
சிங்கானியா சீனியர் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்...

Friday, August 11, 2017

முரசொலி பவளவிழாவில் வாசிக்காத பக்கங்கள்

Image result for murasoli first edition

முரசொலி பவளவிழா அனைத்து ஊடகங்களிலும் பக்பாஸ் ஆனதாக
பரபரப்பாக செய்திகள், லைவ் பார்க்கவில்லை என்றவுடன் அதை அப்படியே
அனுப்பி வந்த நண்பர்கள்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள்.
* நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் ஹேர் ஸ்டைல் கவனித்தீர்களா ?
   -அப்படியா.. மிஸ் பண்ணிட்டேனே.. இட்ஸ் ஒகே. எனக்கு இதிலெல்லாம்
உங்க அளவுக்கு டேஸ்ட் கிடையாது -
* கவனித்தீர்களா.. முரசொலி மாறனைப் பற்றி எதுவுமே பேசலையே..
- அப்படி எல்லாம் இருக்காது தோழி, தயாநிதி மாறன் கலந்து கொண்டதாக பத்திரிகையில் வாசித்தேனே.. அவருக்கு நினைவுக் கேடயம் கூட வழங்கி சிறப்பித்தாகிவிட்டதே ..
* எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எப்படி எல்லாம் திட்டமிட்டு தங்கள் விழாக்கள் நடத்தி மக்களைத் திசைத் திருப்புகிறார்கள், பாருங்கள்..
_ (மனசுக்குள்.. அடப்பாவிகளா.. இதைச் சொல்வதற்கு அதிமுக காரர்களுக்கு அருகதை இருக்கிறதா என்ன? ) ச்சே ச்சே தேவை இல்லாம கற்பனை செய்து கொள்ளாதீர்கள் தோழர்..
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக ஒற்றுமையாக உங்களைக் கொண்டாட வேண்டாம் என்று யார் சொன்னது..?
* முரசொலி பவள விழாவில் முரசொலி பத்திரிகை பற்றி அதில் எழுதப்பட்ட விடயங்கள் பற்றி யாருமே எதுவுமே பேசவில்லையே ... கவனித்தீர்களா..
- (ஆங் .. இது சரியான கேள்வி..) முரசொலி வாசித்தவர்களை அழைத்து பேச வைக்கவில்லையோ என்னவோ.. சரி தோழர்.. உங்களுக்காகவும் உங்களைப் போன்றவர்களுக்காகவும் இதோ என் பதிவு..
 ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவு தான்.

முரசொலியில் நான் ரசித்த இதழ்கள்
எமர்ஜென்சி காலத்தில் வெளியான பக்கங்கள்.
ஒவ்வொரு பக்கமும் தணிக்கைக்கு உள்ளாகி
அதன் பின்னரே அச்சுக்கு வரும் நிலை
கலைஞரை மிகவும் எரிச்சலூட்டியது . எனவே அவர்
 "விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்"
என்றும்
 "அரைமணிநேரத்தில் சென்னையிலிருந்து அமெரிக்கா போகலாம் " 

என்றும்  எழுதினார். இன்றுவரை என் ரசனைக்குரிய பக்கங்கள் அவை. 

Wednesday, August 2, 2017

ஆடிப்பெருக்கு பழங்கதையாய்


நாளை ஆடிப்பெருக்கு..ஆக 3.
பிஸ்லரி பாட்டில் தண்ணீரை ஒரு சொம்பில் நிறைத்து
அதில் மலரிதழ்களைத் தூவி .. கற்பூரம் காட்டி
தேங்காய் உடைத்து.. தமிழர் மரபை எப்படியும்
காப்பாற்றிவிடலாம்.
அடியே .. பைத்தியக்காரிகளா..
மழைப் பொய்த்ததோ நம் மன்னவன் பொய்த்தானோ
புதுவெள்ளம் கனவாகி நீ வெறும் மணலாகி
மணல்கொள்ளையில் எல்லாம் இழந்துநிற்கிறாய்.
உன் பிச்சைப்பாத்திரத்தில் அன்னமிட
ஆபுத்திரன் மீண்டு வரட்டும்.
மஞ்சள் கயிறு கட்டாத மணிமேகலைகள் காத்திருக்கிறார்கள்.
உன் பெருமூச்சு தாங்காத நிலமெல்லாம்
பாளம் பாளமாக வெடித்து கிடக்கிறது.
புதுமணத்தம்பதியர் திரைப்படம் பார்க்க
கிளம்பிவிட்டார்கள்.வசதியான வீட்டுப்பிள்ளைகளுக்கு
கட்டணவசதி கொண்ட் நீச்சல் குளங்கள் காத்திருக்கின்றன.
மீனவர்கள் இன்னும் கரை சேரவில்லை.
வாழாவெட்டி தங்கைக்கு சீர்வரிசை கேட்டு
வெட்கங்கெட்ட ரங்கநாதர் படித்துறைக்கு வரலாம்.
டில்லிக்கு கடிதம் எழுதியிருப்பதாக சொல்லி
எப்படியும் சமாளித்துவிடுவார்கள் நம் மந்திரிமார்கள்.
பாட்டியின் பழங்கதைகளில் வரும்
எட்டுத்தலை நாகம், ஒன்றரைக்கண் அரக்கன்,
பச்சைக்கிளி, இளவரசி, பறக்கும் போர்வை
இந்த வரிசையில் நீ ஆடிப்பெருக்கு கதைகளையும்
சேர்த்துக் கொள்.
நதியாம்.. வெள்ளப்பெருக்காம்..
வழிபாடாம்.. அதுவும் இந்த ஊரில் இதெல்லாம்
நடந்துச்சாம்... ஆஹ்ஹா..
அவர்கள் உன் கதையை நம்பமறுக்கலாம்.
ஆனால் கூகுள் குலதெய்வத்தில் அருளால்
ஆடிப்பெருக்கு காட்சிகளைக் காட்டி
இதெல்லாம் எங்கள் வாழ்க்கை, எங்கள் நதிக்கரை
நாகரிகம்., எங்கள் மண், எங்கள் இயற்கை வழிபாடு,
எங்கள் விவசாயம்னு... சொல்லிட்டே இரு..
செய்தி:
நிலத்தடி நீரை விற்று காசு பார்க்கும் தொழில் தமிழகத்தில் கனஜோராக நடக்கிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1200 குடிநீர் விற்கும் நிறுவனங்களில் சரிபாதி 600க்கும் அதிகமான நிறுவனங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.தமிழகத்தில் 800 குடிநீர் நிறுவனங்கள் சட்ட விரோதமானவை என பசுமைத் தீர்ப்பாயம் முன்பு பொதுப்பணித்துறையே ஏற்றுக்கொண்டது.
அடப்பாவிகளா... எல்லாத்தையும் மொத்தமா கடந்தகால வாழ்க்கையாக்கிடாதீங்கடா..