Monday, August 30, 2021

ராதையின் கண்ணன்

 ராதையின் நெஞ்சமே

கண்ணனுக்குச் சொந்தமே.



சிவ பார்வதி, ராமன் சீதை திருமண உறவுகளுக்கு எதிராக தாந்திரீகம் நிறுத்தி இருக்கும் உறவு கிருஷ்ணன் – ராதை.

ராதை ஏற்கனவெ திருமணமானவள்.

கிருஷ்ணனைவிட வயதில் மூத்தவள்.

அவளை இரவில் மட்டுமே அவன் சந்திக்கிறான் என்கிறது கீத கோவிந்தம்.


அவளோ வனம்.

அடர்வனம்.

மதுராவை நோக்கிய பயணத்தில் 

அவன் கடந்து சென்ற வனம் அவள்.

அவளை அவனோ

அவனை அவளோ

கட்டுப்படுத்தவில்லை!

அதுதான் அவர்கள் உறவின் தனித்துவம்.

கிருஷ்ணன் அதிகாரத்திற்கு வருவதற்கு முன் கிருஷ்ணன் என்ற மனிதனை நேசித்தவள் ராதை. அவன் புல்லாங்குழல் காற்றுக்கு இசையைக் கொடுத்தவள் ராதை. 

கிருஷ்ணனின் வாழ்க்கையில் ராதை மட்டும்தான் இசையாகவும் நடனமாகவும் இருக்கிறாள்.

அவள் அவனோடு மதுரா செல்லவில்லை.

அவள் அவளாகவே இருக்கிறாள்.

அவன் பயணத்தில் எதுவுமே வனமாகிவிடமுடியவில்லை.

வனத்தை எந்தக் கிருஷ்ணனும்  ஆளமுடியாது..


மனித உறவுகளின் ஆழத்தையும்

அதில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும்

ஆசைகளையும்

யுகங்களின் காதலையும்

கட்டுக்கடங்காத காமத்தையும்

புனைவுகளின் ஊடாக மனிதன்

கட த்திக்கொண்டே இருக்கிறான் தோழி 

நேற்று கிருஷ்ணனுடன் ராதை 

இன்று அவனுடன் யட்சி.


கடலுக்குள் மூழ்கிவிட்ட து

அவன்  அரியணையின் மதுரா.

மணலடியில் புதைந்துவிட்டது

அவன் புல்லாங்குழல்.

வெண்சங்குகளைத் தேடுகின்றன

அலைகள். 

போதும்... அரியணைகளுக்கு

தண்டனை கொடுத்தது போதும்.

அந்த இரவுகள் இன்னும்

மிச்சமிருக்கின்றன.

மறந்துவிடாதே.

உன் வனத்தின் இலைகளை

கடலில் மிதக்கவிடு ..தோழி.

அவன் மீண்டும் வருவான்.

ஆலிலைக் கண்ணன் அல்லவா..

அவன்..!

Saturday, August 28, 2021

MP / MLA Local area development scheme

 உங்கள் தொகுதி உங்கள் வேட்பாளர்

உங்கள் பணம்…
எங்கே போகிறது?!!

தகவல் அறியும் சட்ட்த்தின் கீழ் விசாரித்தால்
நம் சட்டசபை நாடளுமன்றம் மேல் கீழ் எல்லோரும் நாணயமும் தரையில் உருளும்!

நம் நாட்டில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப ரூ 5 கோடி கொடுக்கப்படுகிறது.
(இவர்களின் மாதச்ச்சம்பளம், அலவன்ஸ், பயணப்படி, போன் சார்ஜ் சலூன் சார்ஜ் எல்லாம் தனி, அது அவர்களின் கடின உழைப்பிற்கானது. அதைப் பற்றிப் பேசக்கூடாது)
தமிழ் நாட்டில் ஒவ்வொரு சட்டசபை உறுப்பினரும் பெறும் தொகை ரூ 2..25 கோடியிலிருந்து ரூ. 3 கோடியாக
அதிமுக எடப்பாடி புண்ணியத்தில் உயர்த்தியாகிவிட்ட து. !
இவர்கள் பெறும் பணத்திற்கு
MLA – LOCAL AREA DEVELOPMENT SCHEME
ஓராண்டுக்கு இவ்வளவு தொகை என்றால்
இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு
5 X 5 = 25 Crores for MP
5X 3 + 15 Crores for MLA

முட்டையிலும் பருத்தியிலும் சாராயத்திலும் ஊழலைக கண்டுப்பிடித்து தங்கள் பிரச்சார மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நம் அரசியல்வாதிகள்
இதைப் பற்றி ஒரு கூட்டு உடன்படிக்கை வைத்திருக்கிறார்கள்.
"அதாவது நீ என்னைப் பற்றிப் பேசாதே. நானும் கண்டு கொள்ள மாட்டேன்” என்று!

நரசிம்மராவ் 2 கோடி அறிவித்தார்.
மன்மோகன்சிங் ரூ 5 கோடி அறிவித்து இந்திய ஜனநாயகத்தை சந்தோஷப்படுத்தினார்.!!

இவர்கள் வாங்குகிற பணத்தை என்ன செய்கிறார்கள்? ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். அடேங்கப்ட்பாளர் ரூ 1 கோடி செலவு செய்து ஏன் தேர்தலில் போட்டியிட முன்வருகிறார்கள் ? 15 கோடி / 25 கோடி கிடைக்கும் னு தான்!.
இந்த தொகைக்கு கணக்கு காட்டுவார்களா நம்ம ஆட்கள்!
இது அவுங்க வீட்டுப் பணமில்லைய்யா
உங்களோட என்னோட பணம்.
நம்மோட பணம்.
நமக்கானது என்றாவது
புரிந்து கொள்வோம்.
இந்த லட்சணத்தில் எதொ ஒரு தண்ணித்தொட்டி அல்லது நூலகம் இப்படி எதாவது திறந்துவிட்டால் தங்கள் பெயரைப் பொறித்து என்னவோ தங்கள் கை காசிலிருந்து செலவு செய்து புண்ணியம் செய்த மாதிரி இவர்கள் செய்கிற அலப்பறை தாங்க முடியல.
இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.


காலப்போக்கில் புதிய ஜன நாயகம் ஒரு முதலாளித்துவ சமூகத்தின் இன்னொரு முகமாக இருக்கும்னு சொல்வது உண்மைதான்.
கணக்குத் தெரிந்தவர்கள்
ஒட்டு மொத்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எவ்வளவு வாங்கினார்கள்
என்று வாய்ப்பாடு போட்டு கூட்டிப் பெறுக்கி
வரும் தொகையை எனக்கும் சொல்லுங்கள்.!
பிகு: கொரொனாவைக் காரணம் காட்டி இந்த
தொகையை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு

1

Thursday, August 26, 2021

குமுதம் - ஏர் இண்டியா விருதின் கதை

 

பலருக்கும் மறந்திருக்கும்.. ஒரு விருது அறிவிக்கப்பட்ட து.

ஆனால் அந்த விருதாளருக்கு அந்த விருது அவர்

எழுத்துகளுக்கான அடையாளமாக மட்டுமே இருந் த து.

விருது அறிவித்தவர்கள் “இந்த விருதாளர் ஏன் விருதின் பயன்பாடை அனுபவிக்கவில்லை என்று யோசிக்கவும் இல்லை,
அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை!

விருதின் கதை :
1995 ஆண்டில் குமுதம் இதழும் ஏர் இந்தியா நிறுவனமும்
சேர்ந்து சிறந்த நாவல், குறு நாவல்,
சிறுகதை, கவிதைக்கான போட்டி அறிவித்தார்கள்.

நாவலுக்கு நியூயார்க் பயணம்
குறு நாவலுக்கு லண்டன் பயணம்
சிறுகதைக்கு சிங்கப்பூர் பயணம்
கவிதைக்கு கோலாலம்பூர் பயணம்..
இதில் கவிதை தேர்வில் என்னவெல்லாம் நடந்த து
என்பதை இம்மாத காக்கைச்சிறகினிலே இதழில் வேணுமாதவன்
“எழுத்து, சொல், பொருள் “ என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

முதல் பரிசு பெற்ற கவிதை ஆறாவயல் பெரி ய்யா எழுதிய
“தாராவிச் சித்திரம்” கவிதை.
இக்கவிதைக்கு முதல் பரிசு கொடுத்தே ஆகவேண்டும்
என்று போராடியவர்களில் முக்கியமானவர் தேர்வுக்குழுவில்
இருந்த கவிஞர் இன் குலாப் அவர்கள்.
ஆறாவயல் பெரிய ய்யாவின் “தாராவிச்சித்திரம்”கவிதை நூலுக்கு
எழுதிய அறிமுகவுரையில் இதைப் பற்றி விளக்கமாக
எழுதியிருக்கிறார் இன் குலாப் அவர்கள்.
இக்கவிதையை தேர்வு செய்த கவிஞர் இன் குலாப் அவர்கள்
முதன்முதலாக மும்பை வந்திருந்தப்போது –
(எழுத்தாளர் மன்ற துவக்க விழாவுக்கு ) அவர் பார்க்கவிரும்பிய இடம்
“தாராவி “
ஆறாவயல் எழுதிய தாராவியைப் பார்க்க வேண்டும் என்றார்,
கவிதைக்கு விருது பெற்ற ஆறாவயல் பெரியய்யா
கோலால்ம்பூர் செல்லவே இல்லை! அவr ஏன் செல்லவில்லை என்று
ஏர் இந்தியாவோ குமுதமோ விசாரிக்கவோ
கண்டு கொள்ளவோ இல்லை..!
ஆறாவயல் இதைப் பற்றி எனக்கு மின்னஞ்சலில் எழுதி இருக்கும்
பகுதியிலிருந்து ….

என்னிடம் பாஸ்போர்ட் இல்லை!
பாஸ்போர்ட் எடுப்பதற்கு குறைந்தது 500 ரூபாய் தேவைப்பட்டது!
தவிர, சுற்றுலாப் பயணி 500 டாலர்களுடன் செல்லவேண்டும்
என்பது இன்னொரு விதி. இதனை மனதில் கொண்டிருந்த நான்
"பரிசாகக் கிடைத்த சுற்றுலாப் பயணத்தை என்னால்
மேற்கொள்ள இயலவில்லை இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. அது போதும்! " என்று பேட்டி கொடுத்திருந்தேன்.
இதை அறிந்த எங்கள் ஆசிரியர் "பாஸ்போர்ட்டை நான் எடுத்துத் தருகிறேன். நீங்கள் கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் போய் வாருங்கள்! உங்கள் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்! "ஊக்கப் படுத்தினார்
கணக்கு மேலாளரை அழைத்தார்
" ஐயாவுக்கு உடனே பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள்! "என்றார்
தாராவிச் சித்திரம் கவிதையை நக்கீரனில் வெளியிட்டு, தானும் வாழ்த்தி, வாசகர்களின் வாழ்த்தையும் பெறவைத்தார் ஆசிரியர்!
மூன்றாம் நாள்.. எனக்கான, பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
, என் கையொப்பங்கனையும் பெற்ற மேலாளர் "ம்....500 ரூபாயை கொடுங்கள்! "கேட்டார். குறுகிப் போனேன்
"ஒரு அஞ்சு நிமிஷம்! "கூறிவிட்டு என் இருக்கைக்குத் திரும்பினேன்!
யோசித்தேன்.
இந்த 500 ரூபாய்க்காக மீண்டும் முதலாளி முன்னால்
போய் நிற்க வேண்டுமா? அப்புறம் ஒரு 500 டாலருக்காக
யார்யார் கால்களில் விழ வேண்டியிருக்குமோ?
ஈதொன்றும் அடிப்படைத் தேவையல்லவே!
ஆடம்பரம் தானே! வேண்டாமே!
ஆமாம்... வேண்டாம்! "இந்த முடிவுக்கு வர எனக்கு மூன்று நிமிடங்கள் போதுமானதாக இருந்தது.
மீண்டும் மேலாளர் மேஜை முன்சென்றேன்
"ஸாரி சார்! வெளிநாடு போவதாக இல்லை!
எனக்கு பாஸ்போர்ட் அவசியமில்லை!
அதைத் தாங்க! "பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வாங்கினேன். கிழித்தபடியே என் இருக்கைக்கு திரும்பினேன்!
குப்பைக் கூடையில் போட்டேன்
மனசு லேசானது. எனக்கான வேலைகளைப் பார்க்கத் தொடங்கினேன்!”
கோலாலம்பூர் செல்லவிட்டால் என்ன?
இன்றும் உங்கள் “தாராவிச்சித்திரம்” எங்களுக்கு
எங்கள் குடிசையின் கவிதைகளுக்கு
உயிரூட்டிக் கொண்டிருக்கிறது.

#குமுதம்_ஏர்இண்டியா_விருது

#தாராவி_எழுத்தாளர்கள்_புதியமாதவி

Wednesday, August 25, 2021

பாலியல் வறட்சியில் ? தமிழ் சமூகம் !!

 பாலியல் வறட்சியில்.. தமிழ்ச்சமூகம் !!

எல்லோரும் 'சுள்ளிக்காடு" ஆக முடியுமா என்ன?
கேரளாவில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.,
தன் சுயசரிதை ‘சிதம்பர நினைவுகள் ‘ பக்கத்தில் தன்
சபலம் குறித்து எழுதி இருப்பது நினைவுக்கு வருகிறது.

அவர் வீட்டில் இருக்கும் போது ஊறுகாய் விற்கும்
ஒரு இளம்பெண் வருகிறாள். அவளிடம் சபலப்படும்
சுள்ளிக்காடு தவறாக நடக்க முயற்சிக்கிறார்.
அந்தப் பெண்ணோ அவரை அடித்து விட்டு திட்டுகிறாள்.
“தான் உடலை விற்றுத்தான் வாழ வேண்டுமென்றால்
ஊறுகாய் விற்க வந்திருக்க வேண்டியதில்லை”
என்று சீறுகிறாள்.
பிறகு அவர் புகழ்பெற்ற எழுத்தாளரான சுள்ளிக்காடு
என்று அடையாளம் காண்கிறாள்.
தவறு செய்த சுள்ளிக்காடு பின்னர் கூனிக்குறுகி
இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார்.
அந்தப் பெண்ணும் ஆத்திரத்தில் அடித்து விட்டேன்
என்று மன்னிப்பு கேட்கிறாள். யாரிடமும் இதைச்
சொல்ல மாட்டேன் என்றும் கூறுகிறாள்.
பின்னர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு கூட
சுள்ளிக்காடு செல்கிறார். ஓர் ஆணாக தன் சபலத்தை
வெளிப்படுத்தியதற்கு அவர் வெட்கப்படவில்லை. .
இத்தகைய தைரியம் எத்தனை பேருக்கு வரும்?
சபலப்படுபவர் அடையும் குற்ற உணர்வும்,
அதை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறையும்
சுள்ளிக்காடு விசயத்தில் காண்கிறோம்.
மேலும் பொதுவெளியில் அனைவர் முன்னும்
அதை உரக்கச் சொல்லும்போது அதுவே அவருடைய
நேர்மையின் வெளிப்படாகி கொண்டாடப்படுகிறது.

No means NO.
வேண்டாம், விருப்பமில்லை, முடியாது என்று ஒரு பெண்
சொன்னால் ஆண் பெண் உறவில்
அதிகாரமிக்க ஆணுலகம் அதைக் கேட்டாக வேண்டும்.
தவறினால் தலைகுனிவுகள் ஏற்படும்.
பாலியல் சுரண்டலை பெண் எதிர்க்கும் வல்லமை
இதுவரை ஆண் சந்திக்காத பெண்ணுலகம்,
பெண்ணின் பேராற்றல் போற்றுதலுக்குரியது.
ஆண் , பெண்ணின் எதிரி அல்ல.
ஆணும் அவன் நட்பும் காதலும் இல்லாத உலகில்
வாழ எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை.
அவள் உடல் மீதான அதிகாரம் அவளுக்கானது.
அதை எந்த அதிகாரமையமும் தனக்கானதாக
ஆக்கிக்கொள்ள முடியாது.
நம் சட்டங்களும் நீதிமன்றங்களும்
சாட்சிக்கூண்டுகளில் சிறைப்பட்டிருக்கின்றன. .
எல்லாவற்றையும் சட்டத்தின் முன்னால்
நிறுத்தி நீதிப் பெற முடியாது. அதனால்தான்
எழுதப்பட்ட சட்டம் செய்யாததை மனித இனத்துக்கு
மட்டுமே இருக்கும் மனசாட்சி செய்துவிட முடியும்
என்று நம்புகிறோம்.
நடந்தது என்ன?
சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் மனசாட்சி
மட்டுமே அறியும். வாழ்வில் ஒவ்வொருவரும் தங்கள்
செயல்களுக்கான தண்டனைகளையும் நியாயங்களையும்
மனசாட்சியின் முன்னால் வைக்கட்டும்..
நாமும் தான்.
ஆணுலக அதிகாரமையத்தின் பாலியல் சுரண்டல்களை
வன்மையாக எதிர்க்கிறோம்.
பாலியல் அத்துமீறல்கள் ..????
இது தனிமனிதர் விருப்பம் சார்ந்த து.
மனித சமூகத்தில் உறவுகள் நிறுவனமயமான
காலத்திலிருந்தே விதிக்கப்பட்டிருக்கும்
பாலியல் விதிகளை மீறுகின்ற செயல்பாடுகள்
தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன.
இங்கே எந்த ஒரு தலைமைப்பீடமும்
இதில் தலை நிமிர்ந்து நிற்கும் என்றெல்லாம்
யாரும் கனவு காண வேண்டாம்.
எந்த ஒரு கட்சி அரசியலும் இதை எல்லாம்
பேசு பொருளாக , விவாதமாக மாற்றியதில்லை
என்பதில் இருக்கிறது எல்லோரின் யோக்கியதையும்!
இங்கே உள்பெட்டிகள் வெளிச்சமானால்
அவ்வளவுதான்! !!!!
ஆண் பெண் பாலியல் உறவில்
சபலங்கள், பாலியல் அத்துமீறல்கள், பாலியல் சுரண்டல்கள் ...
மூன்றும் ஒன்றல்ல.
இதில் பாலியல் சுரண்டல்களை
காதல் என்ற பெயராலும்
அதிகாரம் கொண்ட ஆண்மைய சமூகம்
காதலித்தப்பெண்ணை மனப்பிறழ்வுக்குள்ளாக்கி
மீண்டும் இன்னொரு பெண்ணிடம் சென்றுவிடுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள்
வெளியில் சொல்ல முடியாமல் அனுபவிக்கும்
மன அவஸ்தைகள் .. இன்று அதிகமாகி இருக்கின்றன.
ஆள்பலம் பணபலம் அதிகாரபலமிக்க ஆண்களின்
பாலியல் சுரண்டல்கள் இன்று அதிகரித்திருக்கின்றன.!
இவை பிரேக் நியுஸ் அல்லது யுடூயுப் வைரலாகி
அதன் பின் அதுபோல இன்னொரு வைரலுக்கு
சமூகம் தயாராகிவிடுகிறது.

ஆண் பெண் உறவில் சமூகம்
இன்னொரு தளத்திற்குப் பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஆண் அச்சத்துடனும்
பெண் அடங்காத ஆவேசத்துடனும்
இருக்கிறார்கள்.
மொத்தத்தில் நம் சமூகம் பாலியல் வறட்சியில்
சிக்கித்தவிக்கிறதோ..??!!

Wednesday, August 11, 2021

பாரதி மஹாகவியா..??

 


பாரதி மஹாகவியா இல்லையா

என்று ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.


இதற்கு நடுவில் பாரதி ஏன்
செங்கோட்டை ஆவுடையக்காவைப் பற்றி
எங்கும் குறிப்பிடவில்லை
என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

பாரதியை மஹாகவி இல்லை என்று சொல்பவர்கள்
யாரை மஹாகவியாக கொண்டாடுகிறார்கள் என்பதையும்
அதற்கான அளவுகோலாக எதை வைத்திருக்கிறார்கள்
என்பதையும் தெளிவுப்படுத்திவிட்டால்
அவர்கள் ஏன் பாரதியை மஹாகவியாக
ஏற்கத் தயங்குகிறார்கள் என்பது
தெள்ளத்தெளிவாகிவிடும்.
பாரதியை மஹாகவி இல்லை என்று சொல்லும்
அவர்களின் விமர்சனம் மகாபாதகமல்ல.
அது அவர்களின் உரிமை.
இதற்கு மேல் இதில் சொல்ல எதுவுமில்லை.
எனக்கு பாரதி மஹாகவியா இல்லையா என்ற
கேள்வி இல்லை. விமர்சனமும் இல்லை.
காரணம் பாரதியை “மக்கள் கவி” என்று சொல்வதில்
பெருமைஅடைகிறேன்.
என்னளவில் அதுவே மஹாகவிக்கான
முக்கியமான அடையாளமாகவும் இருக்கிறது.
பாரதிதான் தமிழ்க்கவிதையை பொதுஜன வெளிக்கு
எடுத்துவந்தவன். அவன் எழுதியப்பிறகுதான்
கவிதை உலகம் இருட்டறையிலிருந்து விடுதலை பெறுகிறது.
அதற்காக அவன் கவிதையின்
தரம் ஈரம் ஜீவன் எதுவும் குறைந்துவிடவில்லை.
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி !~ எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
எல்லோருக்கும் புரிகின்ற வரிகள்..
நிராகரிப்பு, ஒதுக்கிவைத்தல், தீண்டாமையை
அனுபவிக்கும் மனித உள்ளம்
இன்றும் முணுமுணுக்கும் கவிதைவரிகள்.
“பாடிக்கலந்திடவே தவம் பண்ணியதில்லையடி..’
என்று அவன் சொல்லும் போது
அது பாட்டை ரசிப்பதும் பாடிக்கலப்பதும்
அதுவே தவமாக மாறும் மன நிலையும்....
காதலுக்கும் நட்புக்கும் அன்புக்கும் ஏங்கும்
அனைத்து ஜீவராசிகளுக்குமான வரிகளாக மாறிவிடுகிறது.
&&
பாரதிக்கு ஒரு குழப்பம் இருந்த து.
அந்தக் குழப்பமான மன நிலையில் அவனுக்குள்
இருந்த இன்னொரு மனமும் அவ்வப்போது
அவன் எழுத்துகளில் விழித்துக்கொண்ட து.
அறிவுப்பூர்வமாக அவன் அதிலிருந்து விடுபட
போராடி இருக்கிறான். அந்தப் போராட்டம்
அவனளவில் அவ்வளவு எளிதானதல்ல.
சாதிப்படி நிலையில் உச்சத்தில் இருந்தவன்.
அது அவன் குற்றமல்ல.
அவன் வாழ்ந்த காலத்தில் அச்சூழலில்
இந்திய விடுதலைப் போராட்ட களம்
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக
இந்தியச் சமூகத்தின் வேதக்கலாச்சாரத்தை
முன்னிறுத்துகிறது.
அதில் முதன்மையானவர் திலகர்.
விடுதலைப் போராட்டத்தில் திலகர் போன்றவர்களின்
எழுத்துகளின் தாக்கம் பாரதியின்
எண்ணங்களிலும் பிரதிபலிக்கிறது.
வேத இந்தியா, ஆர்ய தேசம், ஆர்ய ராணியின் வில்,
என்ற பிம்பங்கள் அவனுக்குள் இருக்கும்
இன்னொரு பாரதியை எழுப்பித்தான் விடுகின்றன.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது
என்று சொன்னவனும் அவன் தான்.
காக்கை குருவி எங்கள் சாதி என்றவனும் அவன் தான்.
அவனைப் புரிந்து கொள்ளவும்
அவனுக்குள் வாழ்ந்த இன்னொரு பாரதியுடன்
அவன் போராடிக்கொண்டே இருந்தான்
என்பதைப் புரிந்து கொள்ளவும்
தமிழ்ச்சமூகம் மறுக்கிறது.
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இன்றும்
ஒரு சாதித்தமிழன் முழுமையாக
செத்துவிடாமல் இருக்கத்தான் செய்கிறான்.
இதில் பாரதி மட்டும் என்ன விதிவிலக்கா?!!

&&&
ஆவுடையக்கா விவகாரம்..
நீண்ட புகழ் வாணாள் கேட்டவன் பாரதி. ஆனால்
அது எதுவும் அவனுக்கு வாய்க்கவில்லை.
தலைவலி காய்ச்சலையும் எழுதிவிடும்
சமூக வலைத்தள வசதிகள் அவனுக்கில்லை.
அவன் ஆவுடையக்காவின்
வாழ்க்கையை பாடல்களை வாய்மொழிக்கதைகளைத்
தேடிக்கொண்டுதான் இருந்தான் என்பதை
ஆவுடையக்காவின் பாடல்கள் தொகுப்பில்
செல்லம்மா பாரதியின் சகோதரி மகள்
கோமதியம்மாள் குறிப்பிடுகிறார்.
பாரதியும் அவன் கவிதைகளும்
வாழ்க்கையின் ஓரு பகுதியாக நம்மோடு பயணிக்கின்றன
. நாம் அழும்போதும் சிரிக்கும் போதும்
காதல் வசப்படும் போதும் ரெளத்திரம் கொண்டு
சீறி எழுந்து நிற்கும்போது
நமக்குள் அவன் உயிர்ப்புடன் வாழ்கிறான்.
ஒரு கவிஞனுக்கு இதைவிட என்ன வேண்டும்?!!

வாழ்க எம்மான்!



19 comments