Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, August 1, 2022

கலை " திருட்டு"

 



அவளைச் சொந்தம் கொண்டாடிய கணவன்
அவள் ஓவியங்களையும் சொந்தம் கொண்டாடினான்!
உறவின் பெயரால் நடந்த “கலை திருட்டு”
&
அவள் ஓவியங்களுக்கு அவன் சொந்தம் கொண்டாடினான்.
 அவளை வெளியில் செல்லவிடாமல் அடைத்து வைத்திருந்தான்.
ஒரு நாளில் 16 மணி நேரம் அவள் தூரிகைகளுடன் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டாள். அவள் அவன் மனைவி.
ஆரம்பத்தில் பசி தீர்க்கவும்
குழந்தைக்காகவும் அவள் ஓவியங்களை அவன் விற்பனை 
செய்வதாக நினைத்தாள். அதன்பின் அவன் அவள் ஓவியங்களை வரைந்தவனாகபேட்டி கொடுத்தான்.
 உண்மை அறிந்தவுடன் எதிர்த்த அவள் மிரட்டப் படுகிறாள். 
10 ஆண்டுகள் மணவாழ்க்கை இப்படியாக கடந்துவிடுகிறது!
 
1965ல் அவனை விட்டு வெளியில் வந்து விவாகரத்து 
பெற்ற பிறகும் அவளுக்கு அவனை எதிர்க்கும் துணிச்சல் 
வரவில்லை. காரணம் அவன் புகழ்பெற்ற கலைஞனாக 
அமெரிக்க கலை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறான். 
உண்மையை அவள் சொன்னாலும் எடுபடுமா 
என்ற அச்சத்தில் இன்னும் சில வருடங்கள் கழிகிறது 
அவள் வாழ்க்கை.
1970ல் அவள் அவனை வெளிப்படையாக எதிர்த்து 
பொதுவெளியில் சவாலிடுகிறாள்
. “ மக்கள் முன் வரைந்து காட்டுவோம், 
அவர்கள் தீர்மானிக்கட்டும் இதுவரை வரைந்த 
கைகள் யாருடையவை என்று”
அவன் வரவே இல்லை.
 
1986 ல் ஹோனலுலு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
 53 நிமிடங்களில் நீதிபதி முன்னால் அவள் தூரிகை எடுத்து வரைந்து முடிக்கிறாள். அவனோ தோள்பட்டை காயம், 
அதனால் சரியாக வரைய முடியவில்லை என்று சொல்கிறான்.
 நீதிமன்றம் அவள் தூரிகையை அடையாளம் கண்டு கொண்டு 
அவளுக்கு அவன் 4 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கிறது.
அபாராத தொகை குறைக்கப்படுகிறது… அவளோ .
. “எனக்கு பணம் அல்ல முக்கியம், என் தூரிகையின் உரிமை, 
அடையாளம் முக்கியம்” என்று
அவன் தொட முடியாத தூரத்தை தொடுகிறாள்.
 
அவள் ஓவியங்கள் காட்டும் “பெரிய விழிகள்” பிரபலமானவை.
சான்பிரான்சிஸ்கோவில் “KEANE EYES GALLERY “ அவள் ஓவியங்களைப்பார்க்கலாம். 
 
இதில் வால்டரின் அறிவுத்திருட்டை காலம் கடந்துதான் மார்க்ரேட் நிரூபித்தாள். அதற்குள் பணம் புகழ் அனைத்தும் அவள் உழைப்பில்
வால்டர் அனுபவித்துவிட்டான். 
 
2014 ல் அவள் கதைதான் “BIG EYES” என்ற திரைப்படமாக
வெளிவந்தது. 
 
காலம்தோறும் “அறிவு திருட்டு” உண்டு. 
அதை அம்பலப்படுத்துவது அத்துனை எளிதல்ல. 
அதற்கும் அதை நாம் சொன்னால் நாலு பேர் கேட்கிற 
உயரத்தில் இருக்க வேண்டும். இல்லை என்றால்
 “ஏழை சொல் அம்பலம் ஏறாது”
 காரணம் அறிவு திருட்டு நடத்தியவர்களின் 
ஆள்பலம், அதிகார பலம்
அச்சுறுத்தலாகவே தொடர்கிறது.

 
(மார்க்ரெட் வரைந்த ஓவியம்; நன்றி art in action)

Saturday, January 15, 2022

பலகீனங்கள் விற்பனைக்கல்ல

 புலம்புவதும் கண்ணீர் விடுவதும்...

போதும். நிறுத்துங்கள்.
எதோ ஒரு வகையில்
உங்களின் அதீத ஆசை, திடீர்னு கிடைக்கும் புகழ்,
நாய்களுக்குப் போடுகின்ற எலும்புத்துண்டுகள் மாதிரி
உங்களுக்கு வீசி எறியப்படும் சில பொன்னாடைகள்
ஊடக வெளிச்சங்கள், காமிரா பளீச் பளீச் மின்னல்கள்..
இந்த வலையில் விழுந்துவிட நீங்கள்
என்ன விட்டில் பூச்சிகளா?
புகழும் அதனால் கிடைக்கும் அடையாளமும்
உங்களைத் தேடி வரவேண்டும்.
நீங்கள் அவைகளைத் தேடி செல்லும்போது
அறிந்தே தான் அதன் முகவர்களின் வலைக்குள்
சிக்கிக் கொள்கின்றீர்கள்.
உழைப்பும் தகுதியும் இன்றி கிடைக்கும் எதுவும்
இங்கே காலத்தின் முன்னால்
தகுதி இழந்துவிடும் ..
இது என்னவோ பொன்மொழி அல்ல.
சில பெரிய விருதுகள் பட்டியலில் போய்
(பெயர் சொல்ல விரும்பவில்லை) அவர்களின்
படைப்புகளை எடுத்து வாசித்துப் பாருங்கள்.
இன்று அவர்களின் படைப்புகளை இனாமாகக்
கொடுத்தாலும் வாசிக்க ஆளில்லை.
ஏன்?
காலத்தின் முன்னால் அவை நிற்கவில்லை.
அவர்களுக்கு அப்போது கிடைத்த அந்த அங்கீகாரமும் கூட
அவர்களின் எதனால் கிடைத்திருக்கிறது என்பதையும் சேர்த்து யோசிக்கும்போது உங்களுக்கு
நான் சொல்ல வருவது புரியும்!
அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் பலகீனத்தை
பயன்படுத்திக்கொண்டு அதைக் காட்டி பணம்
பறிக்கும் வில்லன் களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் அதையே தன்
குறுக்குவழியாக வைத்திருக்கும் கும்பல்,
உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை
முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
அந்தக் கும்பலிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
தகுதியும் உழைப்புமில்லாமல் கிடைக்கும்
எதுவுமே கோமாளிக்கு மாட்டிவைத்த கிரீடம்
போலத்தான் இருக்கும், இருக்கிறது.
இதில் விதம் விதமான நூதனமான ஏமாற்றுகள்
அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
உங்கள் கணவர் அரசு அதிகாரத்தில் பெரிய பதவியில்
இருப்பவராய் இருந்தால் அவரையும் இதே வலையில்
சிக்க வைத்து உங்களுக்கு மன உளைச்சலைத்
தருவதற்கும் பணம் பிடுங்கவும் ஒரு கூட்டம் அலைகிறது.
அடுத்தவ புருஷனின் செலவில் ஷாப்பிங்க் செய்கிற
இன்னொரு கூட்டம் அலைகிறது.

உங்களைச் சுற்றி இருக்கும் அவர்களின்
வலையில் நீங்கள் விழுவதற்கு
அவர்கள் மட்டும் காரணமில்லை.
உங்கள் பலகீனம்.. ஆம்..
உங்கள் பலகீனம்தான் காரணம்.
அதைவிட்டு வெளியில் வாருங்கள்.
ஒவ்வொரு உழைப்புக்கும் பின்னால் கிடைக்கும்
சின்ன சின்ன பாராட்டுதல்கள், நமக்கு கிடைக்கும்
அங்கீகாரத்தின் வரைபடம் மெல்ல மெல்ல தனக்கான
இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை...வேண்டும்.
சரி... அப்படித்தான் எதுவும் நடக்கவில்லை
என்றாலும்...
ஒன்றும் குடிமுழுகிவிடாது.
உங்கள் சுயம் .. கடைசிவரை
உங்களுடன் நிற்கும்.
அது ரொம்பவும் முக்கியம்..
எனதருமை தோழியரே..
இப்போதுதான் எழுத வந்திருக்கும்
என் இளஞ்சிட்டுகளே...
சுயம் ரொம்ப ரொம்ப முக்கியம்டா..
அதை வித்துட்டு
எதையும் அடைந்துவிட முடியாதுடா செல்லங்களே..
ப்ளீஸ்..
புலம்புவதை நிறுத்துங்கள்.
கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்.
பெண் பலகீனமானவள் அல்ல.
ஆணின் பலகீனத்தைப் பயன்படுத்திக்
கொண்டு அடைவது எதாக இருந்தாலும்
அது... "த்தூ"
வெளியில் வாருங்கள்.
உன் மீது நம்பிக்கை வை.
நீ பலகீனமானவள் இல்லை.
உழைப்பில்லாமல் கிடைக்கும் எதுவும்
உன்னோடு ஒட்டாதுடா..
இதை எழுதும் நான்
நீ நிமிர்ந்துப் பார்க்கும் பிரபலமாகவோ
ஸ்டாராகவோ உன் பார்வையில்
நான் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் ..
என் சுயம்..
என்னோடு இருக்கிறது.
அது என்னை சமரசமின்றி
இயக்கிக் கொண்டிருக்கிறது.
அது எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பதை
அனுபவித்துப் பார்..
புரிந்து கொள்வாய்.
இதோ.. இத்தருணத்தில்
என் தோள்களில் சாய்ந்துக் கொள்.
கொஞ்சம் கொஞ்சமாக
இப்போது உன் சுயம்
உன்னிடம் திரும்பி வருகிறதா..
வரும்.. எனக்கு எப்போதும்
உன் மீது நம்பிக்கை உண்டு.
nd 10 others

Thursday, December 16, 2021

ரஜினிகாந்த் .. தனித்துவம்.


 

  நானும் ரஜினிகாந்தை ரசிக்கும் ஒரு புள்ளி உண்டு.

இப்போதும் அவர் அதில் தனித்து நிற்கிறார்.

அவர் சினிமா உலகின் சில  நட்சத்திர பிம்பங்களை

பொதுவெளியில் உடைத்தவர். அதற்கு தனித்துணிச்சல்

வேண்டும். அது எப்படி வந்தது???

சினிமா நடிகர் என்றால்…

சிவப்பா இருக்கனும்.

முகச்சுருக்கமே இருக்க முடியாது.

நரைமுடி அவர்களுக்கு எட்டிக்கூடப் பார்க்காது.

எப்பொதும் பளபளனு இருக்கனும்

அதைத் தொடர்ந்து காப்பாற்றியாகனும்.

இப்படி எல்லாம் திரையில் மட்டுமல்ல

பொதுவெளியிலும் தன்னை மேக்கப்புடன்

காட்டுவதில் அதீத அக்கறை கொண்டிருக்கவேண்டும்.

இதெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

ஆனால் இவை அனைத்தையும் உடைத்தவர்

ரஜினிகாந்த் மட்டும் தான்.

அவர் பொதுவெளியில் முன்வழுக்கையுடன்

மேக்கப் போடாத முகத்துடன் ஏறி நிற்கிறார்.

அவருடைய ரசிகர்கள் அதைக் கொண்டாடி

விசில் அடிக்கிறார்கள். அப்போதுமட்டும் அவருடைய

ரசிகர்களையும் எனக்குப் பிடிக்கிறது.

சரவணா… சிரிக்காதே!

இதில் கொண்டாடவும் ரசிக்கவும் என்ன இருக்கிறது?

என்று நினைக்கிறாயா..?

தமிழ் நாட்டில் தலைவர்கள் இன்றும் தலையில்

“விக்” அணிந்து கொள்கிறார்கள்.

இந்த விக் அணியும்போது காதோரம்

நரைத்த மயிர் (அது என்னய்யா..கிருதாவா)

எட்டிப்பார்ப்பது கொஞ்சம்

விசித்திரமாக இருக்கிறது.

இன்னும் சில இரண்டாம் மூன்றாம் நிலை

தலைவர்கள்… வயிற்றை பெல்ட் போட்டு இறுக்கி

மூச்சடக்கி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது

அதைவிட பரிதாபமாக இருக்கிறது.

தலைவர்களின் தலைமுடி கலைந்திருப்பதே

இல்லை. (என்ன ஜெல் பயன்படுத்துகிறார்கள்

என்று தெரியவில்லை!)

இப்படியான சமூகத்தில் தோற்றம் முக்கியத்துவம்

பெறும் சினிமா உலகின் (சூப்பர் ஸ்டார்) நடிகர்

அதை உடைத்திருப்பது அவருடைய தனித்துவம்.

அவருடைய தன்னம்பிக்கை.

இதுவும் அவர் ரசிகர்களின் உளவியலுடன் தொடர்புடையது

என்பது இதன் அடுத்தக்கட்டம்.

60, 70 வயதில் நம் நடிகர்கள் இளம்வயது நடிகையுடன்

டூயுட் பாடவைத்து அவர்களை சினிமா உலகம்

தொடர்ந்து வீணடித்துக்கொண்டிருக்கிறது.

அவர்கள் வயதுக்கும் அனுபவத்திற்குமான கதைகள்

சினிமா உலகில் எட்டிப்பார்க்க இயக்கு நர்கள்

அனுமதிப்பதில்லையா? தெரியவில்லை.

அந்த வகையில் இந்தி திரையுலகில் நடிகர்

அமிதாப்பச்சனின் வயதிற்கேற்ற கதைப்பாத்திரங்கள்

உருவாக்கப்பட்டு அதில் அவர் இரண்டாவது இன்னிங்க்ஸ்

கொண்டாடப்பட்டது. பாவம்  நம் தமிழ் கதா நாயகர்களும்!

 

 

 

Thursday, December 2, 2021

அம்மாவின் காதலன்(ர்)

 அம்மாவின் காதலன்(ர்)

அப்பாவின் காதலி அல்லது காதலியர் குறித்து

எழுதுவதும் பேசுவதும் எளிது மட்டுமல்ல,

கொஞ்சம் கவித்துவம் கலந்து பெருமைக்குரியதாக

மாறிவிடுகிறது. அப்பாவின் காதலும் காதலியரும்

பிள்ளைகளுக்கு விருப்பமானவர்களாக இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக அப்பாவின் காதலியர் காதலியராக

மட்டுமே இருப்பதால் சொத்துப்பிரச்சனை எழுவதில்லை.

இதில் அப்பாவின் “சின்னவீடுகள் “ விதிவிலக்கு.

அங்கே சொத்துப்பிரச்சனை , வாரிசுப்பிரச்சனை வந்துவிடுவதால்

அதை விட்டுவிடுங்கள்.


அப்பாவின் காதலியரை ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகளுக்கு

அம்மாவின் காதலனை மட்டும் ஏற்க முடிவதில்லை!

அம்மா என்ற கட்டமைக்கப்பட்ட பிம்பத்திற்கு

அம்மாவின் காதலன் ஒரு வில்லன் மாதிரி தெரிகிறான்.

எனக்குத் தெரிந்து அம்மா இறந்தப்பிறகு அப்பாவுக்கு

மறுமணம் செய்து வைத்த பிள்ளைகள் பலர் உண்டு.

இதில் சுய நலமும் இருக்கிறது ..( வயதான காலத்தில்

கிழவனுக்கு யார் பணிவிடை செய்வது?)

அம்மாவுக்கு..?

எனக்குத் தெரிந்து ‘புதியபெண்ணியம்” இதழ் நடத்திய

தோழர் லலிதா அவர்களுக்கு அவர் பிள்ளைகள் ஒரு

வாழ்க்கை துணைவரைத் தேட முயற்சி செய்தார்கள்.

அதுவும் நடக்கவில்லை!

அப்பாவின் காதலியர் .. அப்பாவின் மறுமணம்

மகிழ்ச்சியாக மட்டுமல்ல, புரட்சியாகவும்  இருக்கிறது.

அம்மாவின் காதலர் , அம்மாவின் மறுமணம்

நெருடலாகத்தான் இருக்கிறது.

@@@

என் சிறுகதை தொகுப்பு “பெண்வழிபாடு”

அதில் “அம்மாவின் காதலன்” என்று ஒரு சிறுகதை.

முதலில் அந்தப் புத்தக தொகுப்புக்கு  நான்

“அம்மாவின் காதலன்(ர்) “ என்ற தலைப்பை தான்

தெரிவு செய்திருந்தேன். புதியமாதவியின்

“அம்மாவின் காதலன்’ என்று சொல்லிப்பார்த்தேன்.

என் புரட்சி முகம் விழித்துக்கொண்டது.

பெயரை மாற்றிவிட்டேன். “பெண்வழிபாடு” என்ற

தலைப்பில் அப்புத்தகம் வெளிவந்தது.

இப்படித்தான் அம்மாவின் காதலும்

“பெண்வழிபாடு” என்ற வெளிச்சத்தில் காணாமல்

போய்விடுகிறது.

பாவம்.. என் அம்மாக்களும்.

அவர்களின் மனம் கவர்ந்த 

அம்மாவின் காதலன் (ர்)களும்.


Saturday, October 9, 2021

REAL HERO ..ஜாக்கி ஜான் vs ஷாருக்கான்

 

REAL HERO ..
கதை ஒரே கதை.
காட்சிகளிலும் மாற்றமில்லை.
ஆனால் இந்தியச் சமூகம் மட்டும்
ஏன் கதையின் போக்கில் தடுமாறி
தரமிழந்து வெளிப்பட்டிருக்கிறது?
பொதுஜன உளவியல் இந்தியச் சமூகத்தில்
குற்றங்களையும் அதிலும் குறிப்பாக பிரபலங்கள் சம்பந்தப்படும் குற்றங்களை
ஜீரணிக்க முடியாமல் பாசம், குடும்பம் என்ற
போர்வையில் அதையும் தாண்டி தனிமனித உரிமை
என்ற அளவுக்கு குற்றங்களை மடைமாற்றம் செய்கிறது.
இது திரைக்கதை அல்ல. திரைப்படமும் அல்ல.
இரண்டிலும் சம்பந்தப்பட்டவர்கள் புகழ்ப்பெற்ற
திரைப்பட கதா நாயகர்கள். ஒருவர் ஜாக்கி ஜான்.
இன்னொருவர் இந்திய திரைப்பட நாயகர் ஷாருக்கான்.
ஜாக்கியின் மகன் ஜெய்ஸி ஜானும்
ஹாருக்கானின் மகன் ஆர்யாகானும்
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திலும்
போதைப்பொருள் கட த்தல்கார ர்களுடன் இருக்கும்
தொடர்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
மகன் 2014 ல் பீஜிங்க்கில் கைது செய்யப்பட்ட போது
ஜாக்கி ஜான் “போதைப்பொருள் கட்டுப்பாடு தூதுவராக”
(Narcotics control ambassador)சீனாவின் காவல்துறையில்
நியமிக்கப்பட்டிருந்தக் காலம்.
கைது செய்யப்பட்ட மகனுக்காக அவர்
தந்தையுள்ளம் கண்ணீர் விட்டிருக்கும்.
ஆனால் தன் மகனின் செயலை அவர் நியாயப்படுத்தவில்லை!
மகனுக்காக காவல்துறையிடம் கெஞ்சவில்லை.
தன் பணம் தன் செல்வாக்கு தன் அதிகாரம்
எதையும் மகனைக் காப்பாற்ற அவர் பயன்படுத்தவில்லை.
மாறாக அவர் பொதுஜனத்திடம்
“மன்னிப்பு” கேட்டார்.
ஒரு தந்தையாக தான் தவறு செய்துவிட்டேனோ ,
அவனை இராணுவப்பள்ளியில் சேர்த்திருந்தால்
ஒழுங்காக வளர்ந்திருப்பானோ “
என்று எண்ணி எண்ணி வருத்தப்பட்டார்.

தன் திரைப்படங்களின் மூலம் அவர் சம்பாதித்த
சொத்தின் மதிப்பு (போர்பஸ் அறிக்கை) 350 மில்லியன் டாலர்
. தன் சொத்துகளை தன் மகனுக்கு அவர்
எழுதிவைக்கவில்லை. அவை அவர் வாழ் நாளுக்குப்
பின் சமூகத்திற்கு, சமூகச்சேவைகளுக்கு என்று
எழுதி வைத்திருக்கிறார். இதைப் பற்றி கேட்டபோது
மகன் ஜெய்ஸி அவனுக்கு அவன்
சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
அப்பனின் பணத்தை , கஷ்டப்பட்ட சம்பாதித்த
என் சொத்துகளை அவன் வீணடிக்கமுடியாது.
(Jaycee will make his own money, if he is not capable
then the Railroad Tigers star will be wasting Jackie’s hard earned money)



இதே காட்சி மீண்டும் மும்பையில் அரங்கேறுகிறது.
ஆர்யாகான் கைது செய்யப்படுகிறார்.
ஷாருக்கான் தன் மகனுக்கும் போதைப்பொருளுக்கும்
தொடர்பே இல்லை என்று சொல்கிறார்.
அய்யோ என் பிள்ளையை விட்டுவிடுங்கள் ,
அய்யோ என் பிள்ளையைக் கைது செய்யாதீர்கள்,
அய்யகோ என் பிள்ளையை நட்சத்திர ஹோட்டலில்
தங்க வையுங்கள், செலவை நான் பார்த்துக்கொள்கிறேன்..
என் மகன் ஆர்யாவுக்கு முழு சுதந்திரம்கொடுத்து
வளர்த்திருக்கிறேன்.
என் மகன், அவன் என் மகன், ஷாருகானின் மகன் ஆர்யாகான்… “
இப்படியாக காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
சல்மான் கான் ஓடோடி வருகிறார்,
ஷாருக்கானின் கண்ணீர்த்துடைத்து ஆர்யாகானுடன் நிற்கிறார்.
ரிதிக்ரோஷன் ஷாருக்கான் ஆர்யாகானுக்கு
ஆதரவாக டுவிட்டுகிறார். சரி விடுங்கள் இவர்கள் அனைவரும்
அவருடம் ஒன்றாக ஆடும் திரை நட்சத்திரங்கள்.
இந்த அறிவுஜீவி ஹார்வார்ட் யுனிவர்சிட்டி புகழ்
சசிதரூரும் தன் பங்கிற்கு டுவிட்டுகிறார்.

இந்தியப் பொதுஜன உளவியல் .. இதுதான்.
இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?!!
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்
என்று விட்டுவிட யாரும் தயாராக இல்லை.
இதில் ப்ரேக் நியுஸ் போட்டு தலை வெடிக்கிற
விவாதங்கள் நடத்தி தங்கள் பசியைத் தீர்த்துக்
கொள்கின்றன ஊடகங்கள்.
ஷாருக்கான்...ஒரு தந்தையாக
உங்கள் வருத்தம் புரிகிறது.
ஆனால்,
ஜாக்கி .. நீங்கள் தான் ,
உண்மையான ஹீரோ..
தலைவணங்குகிறேன் ஜாக்கிஜான்.


Sunday, September 12, 2021

பேருந்துகளில் விரசமாகும் காமத்துப்பால்

 பெண்ணியம் பேருந்தில் பயணிப்பதில்லையோ??!

திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு மீண்டும் அரசு பேருந்தில்
பயணிக்கும் அனுபவம் கிட்டியது. திருக்குறளை
அசைப்பிரித்து எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டு
புதுசாக எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை
இவ்வளவு காலமும் சுமந்து கொண்டு
என் முப்பாட்டன் வள்ளுவனே காமெடி மாதிரி
ரசித்துக்கொண்டிருக்கும்போது நானும் அவரைப் போலவே
அதை வாசித்துவிட்டு சிரித்துவைத்தேன்.
தமிழகத்தில் அரசு பேருந்துகளில்
திரையிசைப் பாடல்கள் ஒலிக்கின்றன.
பயணத்தில் இசையும் பாடலும் எல்லா நேரங்களிலும்
எல்லோருக்கும் ஒத்துவராது, அதாவது ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மன நிலையில் பயணிப்பார்கள். அதைப் பற்றி
எல்லாம் கவனமின்றி மிகவும் சத்தமாக பாடல் ஒலிக்கிறது.
இதைப் பற்றிய ஓர்மையை நாம் இழந்துவிட்டோம்.
சரி இதை விடுங்கள்.
என் பயண அனுபவத்தில் என் காதுகளை ear phone
வைத்து மூடிக்கொண்டேன்.

ஆண் பெண் குரல் .. முயங்கி மயங்கி முக்கி முணங்கி..
இன்னும் என்னவெல்லாமோ .. சேஷ்டைகளுடன் பாடல் ஒலிக்கிறது..
சத்தமாக..
தமிழ்த் திரையிசைப்பாடல்கள்
எப்படி வேண்டுமானாலும் எழுதப்படட்டும் ..
ஆனால் ஒரு பொது இடத்தில் இம்மாதிரியான பாடல்களை
சத்தமாக ஒலிப்பரப்பிக்கொண்டு பயணிக்கும்
அருவெறுப்பை... என் தமிழ்ச்சமூகமே.. எப்படி
சகித்துக்கொள்கிறாய்? !!
ஏன் தமிழ்ப் பெண்ணியம் இந்தப் பயணத்தின்
அருவெருப்பை கண்டுகொள்ளவில்லை.
ஒருவேளை.. பெண்ணியம் பேசுபவர்கள் யாரும் பேருந்தில் பயணிக்கவில்லையோ??!!
இசை.. இனிமையானது.
ஆனால் அதையும் முகம் சுளிக்க வைத்து
உடல் கூச வைத்து அருவெருப்புடன்
காதை மூடிக்கொள்ள வைத்து.. இவை எதுவுமே
பாதிக்காத எருமைத்தோலுடன்., .. வாழப்பழகிவிட்டீர்களா!
(என் எருமைகள் மன்னிக்க வேண்டும்)
இசைக்கருவிகளின் மெல்லிய இசையை
ஒலிக்க விடுங்கள். திரை இசைப்பாடல்களிலும்
சகிக்க முடியாத விரசமான பாடல்களைத் தவிருங்கள்.
ப்ளீஸ்..

#தமிழ்நாடு_அரசுப்போக்குவரத்துதுறை
#TNSTC

Monday, December 7, 2020

FOMO

 சமூக வலைத்தளத்தின் இன்னொரு முகம் FOMO.

லைக்ஸ் வராட்டி கவலை
ஒரு நாள் பதிவு போடாவிட்டாலும் எதையோ
மிஸ் பண்ற மாதிரி ஒரு பதட்டம்.
உப்பு சப்பில்லாத குட் நைட் பதிவுக்கு
எதுக்கு நூற்றுக்கணக்கான லைக்ஸ் என்று குழப்பம்.
நீண்ட பதிவா எழுதினா யாரு வாசிப்பா என்ற தயக்கம்.
முதல் பதிவு பிறந்த நாள் வாழ்த்து.. சரி..
யாருனு தெரியுதோ தெரியலையோ போடு ஒரு லைக்ஸ் னு
போட்டுட்டு அடுத்தப் பதிவுக்கு வந்தா ஒரு மரணம்.
மரணசெய்தி அறிவிப்புக்கு லைக்ஸ் போடலாம
வேண்டாமனு பெரிய்ய குழப்பம்.. கவனமா
அந்த கண்ணீர் சொட்டற EMOJI உதவியால்
கொஞ்சம் கண்ணீர் விட்டு RIP.
இந்த இரண்டையும் கையாளும்
ஜென் மன நிலையைக் கடந்து வந்தா
கவிதை என்ற பெயரில் எங்கேயோ யாரோ
எழுதிய பறவைகளின் பெயரெல்லாம்
வருகிற மாதிரி ஒரு வாந்தி எடுக்கற கவிதை..
அதை அப்படியே டிஷ்யு பேப்பரால் துடைத்துவிட்டு
இதில கவிதை இருக்கு.. இது கவிதையே தான் அப்படினு மனசை சமாதானப்படுத்திக் கொண்டு ஒரு லைக்ஸ்.
சரி.. எதுக்கு இந்த அல்லாடல்னா ..
அப்படின்னு நினைச்சி புத்தகத்தை எடுத்து
வாசிக்க ஆரம்பிச்சா கண்ணைக் கட்டிக்கிட்டு வருது..!

முக நூலில் எழுதறதை நிறுத்திட்டா
வேறு எங்க தான் எழுதறது?
நம்மளை என்ன ஜன ரஞ்சக பத்திரிகையிலிருந்து
கூப்பிட்டு பத்தி எழுதச் சொல்லப்போறாங்களா என்ன?
சும்மா புலம்பக்கூடாது..
இந்தப் புலம்பலுக்கு பேரு தான் FOMO.
(Fearing Of Missing Out)

FOMO எப்படி நம்ம வாழ்க்கையில வந்திச்சி..
அடுத்தவன் வீட்டில் கலர் டிவி வாங்கிட்டா
நாமும் வாங்கினோம்.
அடுத்தவர் வீட்டில் MAC மடிக்கணினியா
அவர் வச்சிருக்கிறதா ஆப்பிள் போனா.. எந்த மாடல்…
இதுவரை ஒகே … அப்போ FOMO வரல.

ஆனா இப்போ அடுத்தவர் வீட்டில் என்ன சமையல்
என்பதிலிருந்து அவரு என்ன படம் பார்த்தாரு
எந்த ஊருக்குப் போனாரு
அவரோட கேர்ள் ப்ரண்ட் யாரு
அவ ஏன் விதம் விதமா போட்டோ போடறா
இப்படியாக அடுத்தவர் … அடுத்தவர் .. அடுத்தவருடன்
பயணிக்கும் வாழ்க்கையாக மாறி இருக்கிறது
இன்றைய வாழ்க்கை.
செல்ஃபியில் சிரிக்கிற போட்டோ போட்டுட்டு
அடுத்த நிமிடம் நாயும் பூனையுமா அடிச்சிக்கிற
வாழ்க்கை.
குடும்பமா உட்கார்ந்து பொதிகையில் சினிமா
பார்த்த காலம் மலையேறிவிட்ட து.
வீட்டில் நாலு பேரு இருந்தா நாலு பேருக்கும்
வேறு வேறு காட்சிகள் தேவைப்படுகிறது.
பிள்ளைகள் பெற்றோர்களிடம்
வாட்ஸ் அப்பில் மட்டுமே பேசுகிறார்கள்.
ஏன் .. பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும்
வாட்ஸ் அப்பில் ஐ லவ் யூ, ஐ மிஸ் யு சொல்லிக்கொள்வதில்
உறவைக் காப்பாற்றிக்கொள்வதாக நினைக்கிறார்கள்.
யாரும் யாரோடும் பேசுவதில்லை.
எல்லாமே மெசேஜ் தான்…
கொரொனா மாதிரி எதாவது ஒரு பூதம் வரனும்.
செல்போனை பயன்படுத்தினால் அவனுக்கு இழுப்பு
வந்திடும்னு .. எந்த சமூக வலைத்தளத்தில்
க்ளிக் செய்தாலும் உடம்பு நிறம் மாறி
கன்னங்க் கரென்னு போயிடுவாங்களாம்
அம்புட்டுத்தான் அப்படின்னு எதாவது ஒரு
பீதி கிளம்பனும்.
JOMO is missing in our liFe.
No photo description available.

Comments