Tuesday, September 18, 2018

சூர்யா@நட்புமண்டலம்.12
திடீரென ஒருநாள் என் அலைபேசியில் உன் முகம்
மின்னலடித்தது. 
என்னால் நம்ப முடியவில்லை. 
உன் குரல்..ஆண்டுகள் பலவாகியும் உன் குரல்
அதே அலைவரிசையில் என்னிடம்.
நலம் விசாரித்தாய்..
கணவர்  நலமா?
பிள்ளைகள் நலமா?
எப்போது ஊருக்கு வருகிறாய்..?
எனக்குத்தான் அன்று தொண்டைக்குழிக்குள் தீக்கங்குகள்.
நீண்ட இடைவெளியில் என்னை எரித்த தீயின்
மிச்சமாய் தீக்கங்குகள் அணையாமல்
எனக்குள்.. என்னை எரித்துக்கொண்டும் அணைத்துக்கொண்டும்.
அப்போதுதான் 

நீ தாத்தாவாகி விட்டதை என்னிடம் சொன்னாய்.
எப்போதுடா என்றேன்
இப்போதுதான்.. 10 நிமிடங்கள் ஆகியிருக்கும்..என்றாய்
வாழ்த்துக்கள் சொல்ல வாய் வரவில்லை.
எனக்குத் தெரியும்..
நீ என்னிடம் தான் முதன் முதலில் சொல்கின்றாய் என்று.
கண்களில் கண்ணீர் வழிந்தது.
எனக்குத் தெரியும் அதைச் சொல்லும் போது
உன் கண்களிலும் கண்ணீர் வடிந்தது என்று.
கண்ணீர் பலகீனத்தின் அடையாளம் என்று
பேசிய நாமிருவரும் கண்ணீர் விட்டோம்.
காற்று அதைப் பார்த்து கை கொட்டி சிரித்தது.


இளம்வயதிலேயே திருமணம் செய்து கொண்டால் 
உன்னைப் போல 50வயது தாண்டுவதற்கு
முன்பே தாத்தாவாகிவிடலாம்.
எல்லாத்திலும் நீ முன்வரிசையில் தான் டா.

உன் பேத்திக்கு பரணி என்று 
பெயர் வைத்திருப்பதாய் எழுதியிருந்தாய்.
என்னால் நம்ப முடியவில்லை.
என் பெயரை .. எனக்கு நீ வைத்திருந்த பெயரையே
 .. இன்று உன் வாரிசுக்கும்..
ஏன் டா பல சமயங்களில் நீ 
உன் சின்னச் சின்ன செயல்களிலும்
என்ன்னை ஆட்டிப் படைக்கின்றாய்.!!

எனக்குப் பரணி என்று பெயர் வைத்தாயே
அந்த நாள் நினைவிருக்கின்றதா?
ஒருநாள் ஜாதகம் சோதிடம் பற்றி என்னிடம் பேசினாய்.
அறிவியலும் மூட நம்பிக்கையும் சேர்ந்து பெற்ற 
முட்டாள் பிள்ளை தான் சோதிடம் என்றாய்.
நாள் நட்சத்திரங்கள் பார்த்து செய்வதைக் கேலி செய்தாய்.
உன் பிறந்த நட்சத்திரம் என்ன என்று கேட்டாய்?
"பரணி " என்றேன்.
பரணியில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்களாமே!
ஜோதிடம் சொல்கிறது தாயே
நீ எந்த தரணியை ஆளப் போகின்றாய் 
என்னைச் சீண்டி விட்டாய்.
கேலி செய்தாய்.
அன்றுமுதல் நான் அழுமூஞ்சியாக
உன்னிடம் வரும்போதெல்லாம்
பரணியில் பிறந்தவள் நீ
அழலாமோ
தரணியை ஆளப்பிறந்தவர்கள் அழலாமோ
என்று கிண்டல் செய்வாய்..

நீயா 
இன்று உன் வாரிசுக்கு பரணி என்று பெயர் வைத்திருக்கிறாய்!!!


உன் பரணி..
உன் நெஞ்சில் தன் பட்டுக் கால்களை வைத்து 
மிதிக்கின்றாளா?
உன் மூக்கு கண்ணாடியைக் கழட்டி வீசி 
உன் கண்விழிகளில் என்னைப் பார்க்கின்றாளா?
உன் சட்டைப் பைக்குள் கையை விட்டு  
தேடுகின்றாளா?
உன் மடியில் படுத்து தேவதைகள் பூ காட்ட 
தூக்கத்தில் சிரிக்கின்றாளா?
உன் தடி தடியான புத்தகத்தை கிழிக்கின்றாளா?
உன் தோள்களில் தொட்டில் கட்டி 
தூங்கிக் கொண்டிருக்கின்றாளா?
உன் படுக்கையை ஈரமாக்கி உன்னை எழுப்பியவள்
உன் மார்பின் கதகதப்பில்
தன்னை மறந்து
இன்னும் தூங்கிக் கொண்டிருக்கின்றாளா?
அவளைத் தூங்கவிடு.
எழுப்பி விடாதே.
அவள் உன் பரணி..

பரணிக்கு நம் வண்ணத்துப் பூச்சிக்களைக் காட்டு.
அவளுக்கு நம் வண்டிப் பாதைகளைக் காட்டு.
நாம் நீச்சலடித்த கிணறுகளைக் காட்டு.
நாம் ஏறிய வேப்ப மரங்களைக் காட்டு.
நம் நட்பின் அடையாளமாய் 
உன் வீட்டுக் கொல்லையில் நாம் நட்ட
கொய்யாமரங்களைக் காட்டு.

அந்தக் கொய்யாமரங்கள் வளர்ந்திருக்குமே?
அந்தப் பழங்களை நான் சாப்பிடும் நாள் வருமோ
 என்னவோ
உன் பரணிக்கு அந்த கொய்யாப்பழங்களைக் 
கொடுப்பாய் தானே.

கொய்யா மரத்தில் காய்ப்பது 
கொய்யாப் பழங்கள்தான்.
ஆனால்-
உன்கொல்லையில் மட்டும்
எனக்குத் தெரியும்
நெல்லிக்கனிகள் காய்த்திருக்கும் என்று.
நம் கொய்யா மரத்தில் காய்த்த
நெல்லிக்கனிகள்
நம் நட்பின் அடையாளம்

உன் பரணியிடம்
எல்லாம் சொல்வாய்தானே
குழந்தை உள்ளம் கள்ளம் கபடு அறியாதது..
சந்தேகம், பொறாமை அதற்கில்லை.
இந்த--
மனுச உலகின்
புழுதிக்காற்று
அவள் மேனியில் படும் முன்பே
உன் பரணியிடம்
எல்லாம் சொல்லிவிடு

சொல்வாய் தானே..

அவளை நீ பரணி என்று அழைக்கும் 
ஒவ்வொரு அழைப்பிலும்
என் கண்களைத் தானே தேடுகின்றாய்.
சொல்.
அவள் கைப்பிடித்து நடக்கும்போது
என் வாசனையைத் தானே நாடுகின்றாய்
சொல்
அவளிடம் நீ உன் பரணியைத் தானே 
தேடிக்கொண்டிருக்கின்றாய்.
சொல்.
பெயரில் என்ன இருக்கின்றது?
என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்.
பரணி என்ற பெயரில்
ஒரு எழுதாதக் காவியம் எழுதப்பட்டதை
அதன் உச்சரிப்பில்
நாம் மகிழ்வதை
நம் உணர்வுகள் நடனமிடுவதை
உணர்கின்றென்.
இனி வெறும் பெயரில் என்ன இருக்கின்றது
என்று எண்ணவே மாட்டேன்.
பெயரில் என்னவெல்லாமொ இருக்கும்
இருக்கிறது.. 


இதை நான் புரிந்துகொள்ளக் கூட
நீ தான் ஆசான் ஆனாய்.
என் பிள்ளைக்கு மறைந்த தன் கணவரின் பெயரைத்தான் 
வைக்க வேண்டும் என்று என் மாமியார் விரும்பியபோது
எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா?
பத்துமாதம் சுமந்து பெற்றவளுக்கு 
தன் பிள்ளைக்கு தன் விருப்பப்படி
பெயர் வைக்க கூட உரிமையில்லையா? என்றெல்லாம்
 ஒரு போராட்டம் அல்லவா
நடத்தி இருக்கின்றேன்.
உன் பரணி வந்துதான் எனக்கு ..
என் முட்டாள்தனத்தை உணர்த்தியிருக்கின்றாள்.
எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக , 
மேம்போக்கான அர்த்தமில்லாத போராட்டங்களை
உரிமைக்குரல் என்று எண்ணி 
காலத்தை வீணடித்திருக்கின்றேன்.

உறவுகளைக் காயப் படுத்தி இருக்கின்றேன்.

சூர்யா..
நெருப்பில் எரிந்துப் போகாத சிறகுகளுடன்
என்னை வானத்தில் பறக்கவிட்டது
உன் குணதிசையின் வெளிச்சம் தான்


என்னை என் கால்களை
மண்ணில் பதியவைத்து
அதன் புழுதிகளை,அழுக்கை, சூட்டை
உணரவைத்தது
உன் குடதிசையின் மலைகள் தான்.
சூர்யா..
வடக்கும் தெற்குமாய் அலைந்துவிட்டோம்.
களைத்துப் போய்
கண்துஞ்சும் முன்னே
சேர்த்து பயணிப்போம் வா..
ஒன்பாதாவது திசையில்
சூரியன் அஸ்தமிப்பதே இல்லையாம்.Sunday, September 16, 2018

பெரியார் துணை.பெரியாரை ஊறுகாய் மாதிரி தொட்டுக் 
கொண்டிருந்தவர்களுக்கு 
இப்போதெல்லாம் விருந்துகளில் 
ஊறுகாய் தேவையில்லை என்ற நிலைக்கு
வந்து விட்டார்கள்.
ஓட்டுப்பொறுக்கி மருத்துவமனையில் 
மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையாகக்
கூட இருக்கலாம்.!
என்னைப் போன்ற 
ரொம்பவும் சாமானியமானவர்களுக்கு
தந்தை பெரியார் தண்ணீரைப் போல.


நான்கு தலைகளுடன் அலையும் பிரம்மம்
எட்டுக்கைகளுடன் உரித்தாலும்
உரிக்க உரிக்க 
வெங்காயம் வெங்காயம் தான்.
எப்படி உரித்தாலும்
எங்களுக்கு கண்களில் கண்ணீராய்
இன்னும் மிச்சமிருக்கிறது
தமிழ்ச்சாதியின் தீட்டு.
(17 செப்டம்பர் - பெரியாரின் பிறந்த நாள்)

Friday, September 14, 2018

அறிஞர் அண்ணாவும் மோகன் ராணடேவும்
யார் இந்த மோகன் ராணடே?
அவருக்கும் தமிழக அரசியல் தலைவரான அண்ணாவுக்கும்
என்ன தொடர்பு?
மோகன் ராணடே தமிழர் அல்ல.
அவர் மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.
ராணடே யார் என்று தமிழர்களுக்குத் தெரியாது.’
ராணடே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால்
அதனால்… அதைச் சொல்லி..அதைவைத்துக் கொண்டு
தமிழக அரசியலில் எதையும் செய்து விட முடியாது…
இத்தனை தூரங்கள் 
மோகன் ராணடேவுக்கும் அவர் விடுதலைக்காக
போப்பாண்டவரைச் சந்தித்த அறிஞர் அண்ணாவுக்கும்
இருக்கிறது.

அண்ணாவின் இந்த அரிய செயல் 
அவருடைய அறிவாற்றலுக்கும் அப்பால்
அந்த சிறிய உருவத்தை என் நினைவுகளில்
விசுவரூபமாக்குகிறது.
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில்
(செப்டம்பர் 15 ) ராணடே நினைவுகளுடன் நான்.

அண்ணாவுக்கு போப்பாண்டவரை சந்தித்து 
தன் வேண்டுகோளை வைத்துவிட்டு திரும்புகிறார்.
ராணடே வை விடுதலைச் செய்ய வேண்டும் என்று
இந்திய அரசு செய்த முயற்சிகள் தோற்றுப்போயின.
நேருவின் கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன. 
இச்சூழலின் தான் (POPE PAUL VI ) போப் அண்ணா
சந்திப்பு வாடிகன் அரண்மனையில் நடக்கிறது. 
மோகன் ராணடேவின் விடுதலைக்கு
தன் விருப்பத்தை ஒரு கோரிக்கையாக
வைக்கிறார் அண்ணா. கடிதமும் எழுதுகிறார்.
அண்ணாவின் இக்கோரிக்கை ஓர் அதிர்ச்சிகலந்த
சந்தோஷத்தை போப்புக்கு கொடுக்கிறது.
போப்பின் (சிபாரிசு) முயற்சியால் 
அதன் பின் ராணடே 1969 ஜனவரியில்
விடுதலை செய்யப்பட்டார்.
மராட்டிய ஆசிரியராக கோவாவில் வேலை செய்த ராணடே
கோவா விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட
இளைஞர். கோவாவில் ஆயுதம் ஏந்திப் போராடியவரும் கூட.
1955 அவரை கோவாவை ஆட்சி செய்து கொண்டிருந்த
போர்த்துகீசிய அரசு கைது செய்து சிறையில்
வைத்தது.
அதன் பின் அவரை கண்டெய்னர் கப்பலில் ஏற்றி
போர்ச்சுகல் நாட்டிலிருக்கும் லிஸ்பன் சிறையில்
அடைத்தது. அங்கிருந்து விடுதலையாகி வந்த
ராணடேவுக்கு இந்திய அரசு பத்மஶ்ரீ விருது கொடுத்து
கெளரவித்தது. கோவா அரசு புரஸ்கர் விருது கொடுத்தது.

Wednesday, September 12, 2018

ஹெய்.. PEPPA PIG

Peppa pig … 
இன்றைய குழந்தைகளின் மிகவும் விருப்பமான 
கார்ட்டூன் தொடர்.
(தயாரிப்பு யு.கே கம்பேனி.) 
இதை அப்படியே தமிழ்ப் படுத்தினால் பெப்பா பன்றி..
அல்லது பெப்பா என்ற பன்றி
ம்கூம் .. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் 
இனிமையாக இல்லை!
ஏன்? ஏன்? ஏன்?

பெப்பா தொடரில் பெப்பா என்ற பெண்பன்றிக்கு
Play school போகும் வயது.
பெப்பாவுக்கு  daddy pig, mummy pig, brother pig (george), 
grandpa pig,
Grandma pig  என்று குடும்பம் உண்டு. ஆட்டம் பாட்டம் விளையாட்டு
பெப்பாவின் நண்பர்களாக குட்டி யானை, முயல், மாடு 
இத்தியாதி சகலமும்
வலம் வருகின்றன. எல்லா கதைகளும் பெப்பா வாயிலாக
குழந்தைகளின்
மொழியில் குழந்தைகளுக்குப் புரியும் வகையில்.. 
பன்றிகள் எப்போதும் சக்தியில் உருண்டு கொண்டிருக்கும்.
இத்தொடரில் பெப்பா & குடும்பத்திற்கும் சகதியில் விளையாடுவது தான்
மிகவும் பிடித்தமான விளையாட்டு.. 
பெப்பா டூர் போகிறாள்.பீச்சுக்குப் போகிறாள்,ஸ்கூல் பசங்களுடன்
சண்டைப் போட்டுக்கொள்கிறாள், தம்பியை அழ வைக்கிறாள்..
குழந்தை அம்மா வயிற்றிலிருந்து பிறக்கிறது .. இப்படியாக
ஒன்றும் விடாமல் கதைக் கதையாக .. பெப்பா வலம் வருகிறது
குழந்தைகளின் உள்ளத்தில்.. தொலைக்காட்சியில்பெப்பாவுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது என்பது
இன்னும் ஆச்சரியமான செய்தி என்னைப் போன்றவர்களுக்கு.
ஹவாய் தீவு பயணத்தில் ஒரு தாவர இயல் பூங்காவுக்கு
பிற தேசத்து மக்களுடன் பயணித்தோம்.
பயணித்த குழந்தைகள் டிரெயின் ஓரிடத்தில் நிற்கிறது.
எல்லோரும் இறங்குகிறார்கள்.. பெப்பா.. பெப்பா.பெப்பா
என்று கத்திக்கொண்டுபெப்பா வுக்கு குழந்தைகள்
தோட்டத்தின் உதவியாளர் கொடுத்த பிரட் துண்டுகளைக்
கொடுக்கிறார்கள். பெப்பாக்கள் ஓடி ஓடி பிரட் துண்டுகளைக்
கடித்துக்கொண்டு சகதியில் கும்மாளமிடுகிறார்கள்.
குழந்தைகள் மகிழ்ச்சியில் குதிக்கின்றன.
பெற்றோர்களையும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.
காமிராக்கள் பளிச் ப்பளீச் என்று புகைப்படம் எடுக்கின்றன.
நான் மட்டும் டிரெயினிலிருந்து இறங்கவில்லை..
நம் இந்தியப் புத்தி.. 
இருந்திருந்து இந்தப் பன்னிகளைப் பார்க்கறதுக்கா
இறங்கனும்னு .. மண்டைக்குள் புழுத்துக் கொண்டிருந்தது

பன்னி என்றால் அழுக்கானது.
பன்னி என்றால் அருவெருப்பானது.
பன்னி ரசனைக்குரியதல்ல.
இது எல்லாவற்றையும் விட இன்னொரு கேவலம்
பன்னி கீழ்ச்சாதிக்கானது!
இது ..இது.. இதுதான்யா..
இப்போ பளிச்சினு என் மண்டைக்குள்ளிருந்து
வெளியில் வந்து என்னை வெட்டிச் சரிக்கிறது.

கூர்ம அவதாரம்.. மச்ச அவதாரம்.. வராக அவதாரம்..
அப்படி இப்படி அவதாரம் சொல்லியவர்கள் தான்
மச்சி நாற்றமெடுக்கிறது என்றார்கள்.
வராகம் அழுக்கானது என்றார்கள்.
ஆனால் சங்க இலக்கியத்தில் காட்டுப்பன்றியும் வீட்டுப்பன்றியும்
முள்ளம்பன்றியும் பற்றிய செய்திகளும் வர்ணனைகளும்
உண்டு. 
பன்றி கூட்டமா வரும்.
சிங்கம் தான் சிங்கிளா வரும் நு சூப்பர் ஸ்டார் சொன்ன ஒரு
பஞ்ச் டயலாக்.. நம்ம ஊரில் புகழ்பெற்றது.
சிங்கம் என்றால் உயர்வு
பன்றி என்றால் தாழ்வு என்ற மனப்பான்மையிலிருந்து
ஒருவிதமான தூய்மை - புனிதத்துவ மன நிலையில்
சுஜாதா எழுதியது. கவிஞர் அறிவுமதி இதைப் பற்றி
இந்தப் பஞ்ச் டயலாக் வந்தவுடனேயே எதிர்த்து
பரப்புரை செய்தார். 
தன் குட்டிகளைக் காப்பாற்ற ஆண்பன்றி புலியுடன் கூட
மோதும், சண்டைப்போடும், பன்றிகள் கூட்டமாக
வருகிறது என்றால் அது கூட்டுக்குடும்பத்தின்
கூட்டு இனக்குழுவின் அடையாளம்.
திருடுகிறவன் தான் தனியா வருவான் ! என்பார் அறிவுமதி.
ஆனால் நமக்கு சூப்பர் ஸ்டார் புண்ணியத்தில்
மனசில் நிற்பது என்னவோ 
சிங்கம் சிங்கிளா தான் வரும்ம்ம்ம்ம்என்பது தான்.
இந்தச் சிங்கத்தை எல்லாம் பேசினா அசிங்கமாயிடும்.
வேண்டாம்..

ஆக மொத்தத்தில் பெப்பா பன்றி
குழந்தைகளின் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டதில்
எனக்கு மகிழ்ச்சியே.
காரணம் அவர்கள் இனி பன்றியை வெறுக்க மாட்டார்கள் தானே.
ஹெய்..peppa pig.. 

Tuesday, September 11, 2018

சூர்யா@நட்புமண்டலம்.11
சூர்யா..
உன்னை ஏன் சந்தேகத்தில் பிடித்தார்கள்?
என்ன செய்தாய்..இந்த நாட்டிற்கு எதிராக?
இரவோடு இரவாக உன்னைப் பிடித்துக் கொண்டு போனார்கள்
என்று உன் தோழர்கள் சொன்னார்கள்.
நீ என்ன ஆனாய்? 
உன்னை அவர்கள் என்ன செய்தார்கள்?
எதுவும் தெரியாமல் கழிந்த இருண்ட நாட்கள்
நீ செய்தது குற்றமா..?
நீ போராடத் தெரிந்தவன்..
உன் களத்தில் சிந்தப்பட்ட ரத்தங்களுக்கு கறைகள் கிடையாது.
இன்னும் சிலர் சொன்னார்கள்..
நீ சிறையில் இல்லை
தலைமறைவாகிவிட்டாய் என்று.
எனக்கென்னவோ இரண்டாவது செய்தியில் தான் நம்பிக்கை.
காரணம் நீ அனுப்பிய புத்தகங்கள்..
துண்டுச் சீட்டுகள்
பத்திரிகைகள்..
அப்படியான ஒரு புத்தகம்.. என் வாசலுக்கு வந்தது.
"அம்மாளைக் கும்பிடுகிறானுகள்"
படிக்க படிக்க ...சூர்யா...
நம்பவே முடியலைடா..
நான் முதல் முறையாக "ஓர் இந்தியன்" என்று 
சொல்லிக்கொள்ள வெட்கப்பட்ட
தருணங்கள் அவை.
என் முகத்தில் அப்பி இருக்கும் இந்தியன் என்ற 
கருப்பு மையை எடுத்து இந்து மகாசமுத்திரத்தில்
கரைத்துவிட துடித்தன
என் கைகள்.
தேசியம் இல்லாத தேசத்தில் 
(Nation without the Nationality)
ஆள்பவர்களுக்கு கொடிப்பிடிக்கவே 
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம்.
கண்டி வெகுதூரமில்லை
கடலும் மிக ஆளமில்லை என்று அரபிக்கடலோரம்
முழக்கமிட்டது. (கவிஞர் கலைக்கூத்தன் கவிதை வரிகள்)
நான் அந்தக் கூட்டத்தில் 
“நீ அகதி அல்ல” என்று கத்தினேன்.
என் குரல் ஏழு கடல் தாண்டி
ஏழு கண்டங்கள் தாண்டி அந்த எட்டாவது கண்டத்திலும்
எதிரொலிப்பதாக ஒரு பாவனையில்..
நீ அகதி அல்ல!
நம்மைப் பிரித்து நிற்பது 
இந்து- 
சமுத்திரம் மட்டுமல்ல 
சட்டமும் தான்.. 
உன்னைப் பார்க்காமல் இருக்கவேண்டுமென
சட்டம் போட்டு ஜெயித்தவர்கள்
உன்னை - நான் 
நினைக்காமல் 
இருக்கவேண்டுமென 
சட்டம் போட்டு 
நித்தமும் 
தோற்றுக்கொண்டுருக்கிறார்கள்
நீ- 
குண்டு மழைகளில் 
நனைந்தபோது 
என் பூமி 
இங்கே 
வறண்டு போனது.
நீ- 
இருட்டில் 
விழித்துக் கொண்டிருக்கின்றாய்.. 
இங்கே- 
பகலில் கூட 
என் கண்கள் 
கருப்பு துணியால் 
கட்டப் பட்டிருக்கின்ற..
நம் - 
இருவர் உலகமும் 
இருண்டு போனதால் 
நம் - 
கனவுகள் கூட 
பதுங்கு குழியில்..
நீ- 
விடியலுக்காக 
காத்திருக்கின்றாய்.. 
நான் 
வெளிச்சமெல்லாம் 
விடியலல்ல 
என்பதால் 
உனக்காக 
விழித்திருக்கின்றேன்..
நீ-அகதி 
என்று எழுதியது 
என் சட்டம்..! 
நீ- அண்ணன் 
என்று துடிக்கிறது 
என் ரத்தம்…!!
அரபிக்கடலோரம் எங்கள் குரல் ஆர்ப்பரித்தது.
சொற்களைச் சூடேற்றி குளிர்காய்ந்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதினோம்.
எங்களை நாங்களும் போராளிகள் என்று
சொல்லிக்கொண்டோம்.!! (வெட்கக்கேடு)
சொற்களின் ஒலிக்குப்பைகளைக் கேட்டு கேட்டு
மரத்துப் போன எம் செவிகளுக்கு
உன் மவுனம் புரியவில்லை!
நீ மட்டும் தான்
சொற்களைக் கடந்து சென்றாய்.
உன் காலடியோசையில் 
காடுகள் செழித்தன.
எதை ,யாரை வெல்ல வேண்டும் என்று இந்த இனம்
ஒரு தலைமுறையில்.. தன் வாழ்க்கையைத் தொலைத்ததோ
உன்னையும் என்னையும் இணைத்த நம்
தந்தையர் தலைமுறையில் போராடியதோ...,
அந்தப் போராட்டம் ..
நம் தலைமுறையில் திசைமாறிப் போய்விட்டது.
இன்று நம் இனம் கூடுகள் இல்லாத குஞ்சுகளாய்..
காக்கையின் கூட்டில் பொறித்த குயிலின் குஞ்சுகளாய்..
வலிக்கின்றது சூர்யா..
நீயாவது போராடுகின்றாய்..
உன் மனசாட்சியை அடகு வைக்காமல்,
எந்தச் சட்டத்திற்கும் பயப்படாமல்,
எந்த உறவுகளிலும் உன் சுயமிழக்காமல்,
நாளையப் பற்றிய பயத்தில் 
இன்றைய நியாயங்களை
அடகு வைக்காமல்
நீ நீயாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்.
நான்....??????????

Sunday, September 9, 2018

ஹவாயின் அரசியும் அவள் விட்டுச் சென்ற மலர்களும்எங்கள் ஹவாயின் குழந்தைகள் போற்றுதலுக்குரியவர்கள்.
அவர்கள் தங்கள் மண்ணுக்கு விசுவாசமானவர்கள்
கொடுமையான இதயம் கொண்ட தூதுவர்கள்
பேராசையுடன் ஒப்பந்த பத்திரங்களை நீட்டுகிறார்கள்.
கப்பம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஹாவாயி, 
கீவியின் நிலம் பதில் சொல்கிறது
பிலானி கடற்கரைகள் உதவி செய்கின்றன.
மனோவின் கவாயி தன் ஆதரவைத் தருகிறது
காகுஹிஹெவாயின் மணல் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது.
போட்டுவிடாதீர்கல் உங்கள் கை எழுத்தை
எதிரிகள் நீட்டும் பத்திரத்தில்
பாவத்தின் அடையாளமது.
நம் மக்களின் குடியுரிமையை விலைபேசுகிறது அது.
மலை போல குவிந்திருக்கும் 
இந்த அரசாங்கத்தின் கஜானாவை
நாம் மதிக்கப்போவதில்லை.
நமக்கு நம் பாறைகள் போதும்.
இந்த மண்ணின் அதிசய உணவு இது.
நாம் லில்லிகலானியை ஆதரிப்போம்.
இந்த மண்ணின் உரிமைக்காக போராடி வென்ற கதை
இந்தக் கதையைச் சொல்லுங்கள்
தங்கள் மண்ணை நேசிக்கும் மக்களிடம் சொல்லுங்கள்.
(ஹவாய் தீவின் பாடலிது. )

லில்லியுகலானி..ஹவாயின் அரசி.
அமெரிக்க வல்லரசு ஹவாய் தீவுகளை தங்கள் நாட்டுடன்
எவருடைய ஒப்புதலும் இல்லாமல் சேர்த்துக் கொண்டது.
பகற்கொள்ளை தான்.
The stolen paradise என்று இதைச் சொல்கிறார்கள்
அமெரிக்கர்கள். 
அரண்மனையிலே அரசியை சிறை வைக்கிறது அமெரிக்கா.
அரசி தன் மக்களுக்காக உருவாக்கிய தோட்டத்திலிருந்து
தினமும் மலர்களைப் பெறுவதற்கு மட்டுமே அனுமதி.
தோட்டத்தில் பூக்கும் மலர்களை அன்றைய செய்தித்தாளில்
பொதிந்து அனுப்புகிறார்கள் அவள் ஆதரவாளர்கள்.
வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை அப்படித்தான் 
அந்த அரசி அறிய வருகிறாள். அந்த நாட்களில் அவள் எழுதிய
கவிதைகள்- இசைப்பாடல்கள்.. 162. 
இன்றும் ஹவாயின் பூக்களையும் காதலையும் 
மக்களையும் அவர்கள் மண்ணின் மாண்புகளையும் 
இசைத்துக் கொண்டே இருக்கிறது.
ஆனாலும் வரலாற்றில் ...
சர்வாதிகாரத்தின் ஆயுதப்படைக்கு முன்னால்
அத்தீவு மக்கள் என்ன செய்துவிடமுடியும்?
அடைப்பட்டிருந்த நாட்களில் தன் பாடல்களை
இசைக்குறிப்புடன் எழுதி எழுதி தன் மக்களுக்கு
அவள் விட்டுச்சென்ற மலரின் வாசனை
இன்னும் அத்தீவுகளில் ..
100 வருடங்களுக்குப் பின் 1993ல் அன்றைய ஜனாதிபதியாக
இருந்த பில்கிளிண்டன் ஹவாயி மக்களுக்கும் அவர்கள்
தேசத்திற்கு தாங்கள் செய்த துரோகத்திற்கு
மன்னிப்பு கேட்டார்.
அவ்வளவு தான்.