Wednesday, September 27, 2017

அஸ்தினாபுரம் - ஜோ டி குருஸ்

Image result for அஸ்தினாபுரம் நாவல்

ஒரு நாவலும் கதை மாந்தர்களும் ஒன்றுடன் ஒன்றாகக் கலந்திருப்பார்கள்.
அந்த குறிப்பிட்ட நாவலில் அக்கதை மாந்தர் இல்லை என்றால் அந்த நாவல் இல்லை., கதையின் ஜீவனாக அக்கதை மாந்தர்களே இருப்பார்கள். ஒருவகையில் அக்கதை மாந்தர்களைச் சுற்றியே கதைக்களமும் கதையும் நிகழ்வுகளும் பின்னிப் பிணைந்திருக்கும்.
காலமும் களமும் அக்கதை மாந்தரின் ஜீவனுக்கு உயிரூட்டும் ரத்தமும் சதையுமாக கதையுடன் கலந்திருக்கும். இப்படியான கதைகளைத் தொடர்ந்து வாசித்திருக்கிறேன்.
ஆனால் இப்புரிதல்களைத் தாண்டி அண்மையில்
இன்னொரு தளத்திற்கு என்னை அழைத்துச் சென்றதில்
 அஸ்தினாபுரத்தின் ஜோ டி குருஸ் மிக முக்கியமானவர்.
குருஸ் அவர்களின் மூன்றாவது நாவல்.

 இத்தலைப்புக்கும் நாவலுக்கும் எதாவது
நேரடி தொடர்பு இருக்கிறதா என்று கவனித்தால்
அப்படி வெளிப்படையாக எதுவும் தென்படவில்லை,
ஆனால் ஒட்டுமொத்த வாசிப்புக்குப் பிறகும் கடலோடி சமூகமும்
அவர்களின் வாழ்வும் அஸ்தினாபுரமாக விரிகிறது.
 அவர்கள் தன் கவசக்குண்டலத்தையும்
தானமாகக் கொடுக்கும் கர்ணனின் எச்சமாக வாழ்க்கையை தானமாகக் கொடுத்துவிட்டு கடலலையில் மிதந்து தவிக்கிறார்கள்.

எந்த ஒரு கதைப்பாத்திரத்தின் கம்பீரமோ நெகிழ்வோ
 கட்டமைப்போ இல்லை.
கடல் சார் வாழ்க்கையின் அடுத்த நகர்வாக இருக்கும்
 "கார்கோ" ஏற்றுமதி இறக்குமதி
துறைமுக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும்
கதைப்பாத்திரமாக கம்பீரமாக கதையில் நடமாடும்
மனிதர்களையும் கடந்த ஜீவனாக கடலலையில் மிதக்கிறது.
லோட் ஏற்றும் கனரக லாரிகளும் லாரி ஓட்டுநர்களும்
 பாலங்களும் அவை சார்ந்த அறிவும் தெளிவும் .. 
என்று வாசகன் அறியாத சில பக்கங்களில்
வெளிச்சத்தைப் பீச்சுகிறது அஸ்தினாபுரத்தின் கண்டெய்னர்கள்.

கிரனெட் ஏற்றுமதி இறக்குமதியிலும் சரி, ராட்சத
காற்றாடிகளின் கப்பலில் ஏற்றுவதிலும் சரி ஏற்படும்
 உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகள் வரை கதை அலசுகிறது.
Non-fiction தரவுகளை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட நாவல்
 ஆங்காங்கே எழுத்தாளரின் சுய அனுபவங்கள் துணுக்குகளாக 
ஒட்டியும் ஒட்டாமலும் கலந்திருக்கின்றன. எடுத்தவுடன் வாசித்துவிட்டுத்தான் புத்தகத்தைக் கீழே வைக்க
வேண்டும் என்ற பதட்டத்தை அஸ்தினாபுரம் தரவில்லை.
 சில பக்கங்களைப் புரட்டி விட்டு போகலாம்.
 சில பக்கங்களை விட்டு விடலாம்.
எப்படி விருப்பமோ  அப்படி வாசிக்கலாம்!
கார்கோவில் கருவாடு தான் மணக்க வேண்டும் என்பதில்லையே.
கிரனெட் கற்களும் ஏறத்தான் செய்கின்றன  யோ யோ கிரேன்களின்
இணைப்பு உதவியுடன்.

Saturday, September 23, 2017

உன்னால் முடியும் தம்பி ..ஒரிஜினலும் சினிமாவும்

உன்னால் முடியும் தம்பி தம்பி..
Image result for எம் எஸ் உதயமூர்த்தி
எம்.எஸ். உதயமூர்த்தியின் தாரகமந்திரம்.
தன்முனைப்பு கருத்துகளை உள்ளடக்கிய
அவருடைய கட்டுரைகள் தொடராக வார இதழ்களில் வெளிவந்தன.
இவர் எழுதிய "எண்ணங்கள் " என்ற புத்தகம்
அந்தக் காலத்திலேயே 10 இலட்சம் பிரதிகள்
விற்றது  என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இவர் கருத்துகளுக்கு அக்காலத்தில்
இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
 நதிகளின் இணைப்பு என்ற குரல் பொதுஜன ஊடகத்தில்
பரவலாக பேசப்பட்டதற்கு  முக்கியமான காரணமாக இருந்தார்.
அரசியல் சாக்கடை அல்ல, நல்லவர்கள் ஒதுங்கி இருப்பதால்
 ஏற்பட்ட அவலம் தான் இன்றைய கேடுகெட்ட அரசியலுக்கு
காரணம் என்று இளைஞர்களிடம் எடுத்துரைத்தார்.
" மக்கள் சக்தி " என்ற இயக்கம் கண்டார்.
மதுரை மத்திய தொகுதியில் தன் இயக்கம் சார்பாக
தேர்தலில் நின்றார். தன் தேர்தல் பிரச்சாரத்தில்
"என்னிடம் நிறைய பணம் இருக்கிறது
ஆகவே மக்கள் பணத்தை தொடமாட்டேன்,
என்னிடம் உள்ள ஆற்றலை, அறிவை உங்களுக்கு
 செலவிட சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரம் தேவை.
 என்னைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் ஒரு நேர்மையாளனை
 தேர்ந்து எடுக்கிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம்
 நதிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற குரலை
 வலுப்படுத்துகிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம்
 இந்த நாட்டிற்கு நல்ல பல இளைஞர்களை வருவதற்கான
 பாதையை அமைத்து தருகிறீர்கள்" என்று பேசினார்.
வழக்கம் போல நம் வாக்காளர் பெருமக்கள்
அவரைத் தோற்கடித்தார்கள்.
தமிழக அரசியல் தலைவர்களான அறிஞர் அண்ணா,
கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருடன்
இணக்கமான தொடர்பை வைத்திருந்தார்.
------
என் திடீர்னு எம் எஸ் உதயமூர்த்தி ?
நினைவுக்கு வந்திட்டாருனு கேட்காதீர்கள்.
பெரிசா ஒன்னுமில்ல. நேற்று ராஜ் டிவியில்
கமலஹாசன் உதயமூர்த்தி என்ற பெயரில்
நடித்த பாலசந்தரின்  "உன்னால் முடியும் தம்பி" திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. எப்படியோரிமோட் அதில்
மாட்டிக்கொண்டதால் உதயமூர்த்தி நினைவுக்கு வந்துவிட்டார்.
இப்போ இருக்கிற நிலையில கமலின்
 "உன்னால் முடியும் தம்பி" திரைப்படத்தைக் காட்டுவது
 ஏதேச்சையாக நடந்ததா.. இல்ல ..
வேறு எதுவும் காரணத்தோட நடக்குதா..!
ரஜினி அரசியல் பிரவேசத்தைக் கொண்டாடிய மக்களுக்கும்
கமலின் அரசியல் டுவிட்டர்களைக் கொண்டாடும் கூட்டத்திற்கும்
 நிறைய வேறுபாடு இருக்கிறது  என்பது அடிக்கடி
என் நினைவில் வருகிறது. தவிர்க்க முடியவில்லை.


அண்ணாவின் தம்பிகள்
கலைஞரின் உடன்பிறப்பே
எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களே
இதே வரிசையில் போகிறதா..
உன்னால் முடியும் தம்பி, தம்பி...
கருப்புக்குள் காவியும் அடக்கம் என்று
விளக்கெண்ணெய் அரசியல் பேசும்
உலகநாயகனுக்கு ஊடகங்கள் ஏன் வெண்சாமரம் வீசுகின்றன!?

Wednesday, September 20, 2017

தேவியும் காமட்டிபுரமும்

Image result for navratri durga paintings

காமட்டிபுரத்தின் கதவுகள் திறந்துவிட்டன.
நவகன்னியர்கள் வெளிச்சத்திற்கு வருகிறார்கள்
தேவியின் சிலைகள் கொட்டும் மழையில்
ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்படுகின்றன
ஆடை அலங்காரங்களுடன் பவனிவரும் அவள்
 கருப்பை மண்ணில் காமட்டிபுரத்தின்
 இரவுகள் விழித்திருக்கின்றன.
நிர்வாணமாய் விரியும் அவள் படுக்கை அறையிலிருந்து
எட்டிப் பார்க்கிறது தேவியின் சூலம்.
காமாட்டிபுர அழகிகளின் கைப்பிடி மண்ணுக்காக
விரதங்களுடன் கழிகிறது உங்கள் நாட்கள்.
தேவி அங்கிருந்துதான் புறப்படுகிறாள்.
தேவி , அங்கிருந்துதான் புறப்படுகிறாள்.
-----
நவராத்திரி தேவியின் சிலைகள் செய்வதற்கு பிடிமண்
 காமாட்டிபுரத்தைப் போல சிவப்புவிளக்கு பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாலியல் தொழிலாளர்களிடமிருந்து
பெறப்படுகிறது என்ற செய்தியை முதன் முதலில்
 இந்தி திரைப்படங்கள் மூலமாக அறிந்து
அதன் பின் அது குறித்த தேடலில் பல்வேறு சுவையான
 தகவல்களை நம் அன்னையர் சமூகத்தின்
வாழ்வியல் எச்சங்களைக் கண்டடைந்தேன்.

நம் சமூகத்தில் அன்னை மட்டுமே தலைமைப் பொறுப்பில்
இருந்தக் காலத்தில்,  வேட்டைச் சமூகத்தில் ஏற்பட்ட உயிரழப்புகளை ஈடு செய்யும் சக்தியாக பெண் மட்டுமே பார்க்கப்பட்ட காலத்தில்
அவள் வழிபாட்டுகுரியவள். சக்தி பீடம் அவள்.
குழந்தைப் பேறுக்கு அவள் மட்டும் பொறுப்பல்ல
 என்ற ஏதோ ஒரு புரிதலில் ஆண் வேட்டைச்சமூகத்தின்
 தலைவனாகிறான். அந்த ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத
 பெண்கள் விலகி நின்றதும் விலக்கப்பட்டதும் நடந்தது. அப்படி விலக்கப்பட்டவர்களில் ஆடல் பாடல் கலைகளில் வல்லவர்களான பெண்கள்  தனித்து நின்றார்கள். இப்படித்தான் தேவதாசிகள்
உருவானர்கள். அதன் பின் அதுவே பிறப்பின் வழி அடையாளமாகி மணிமேகலைகள் உருவான  கதை நிகழ்ந்தது. அந்தப் பெண்களின் தலைமைத்துவ கலாச்சாரத்தின் எச்சமாகத்தான்
அவள் கைப்பிடி மண்ணில் தேவி வலம் வருகிறாள்.
 இதைத்தான் வங்க மொழியில்
"ஒதுக்கி வைக்கப்பட்ட பிரதேசத்தின் புண்ணிய மண்" என்று சொல்லுகிறார்கள்.
(The soil is known as ‘punya mati’ and the place where a prostitute resides is known as ‘nishiddho pallis’ in Bengali meaning forbidden territories.)

இன்னொரு சாரார், பாலியல் தொழில் செய்யும் பெண் வீட்டுக் கதவைத் தட்டும் போது அந்த ஆண்களின் புண்ணியங்கள் எல்லாம் அவள் வீட்டு வாசலில் விடைபெறுகின்றன.!
அதனால் தான் அவளிடம் மன்னிப்பு கேட்கும் வகையில்
அவளிடம் கைநீட்டி கைப்பிடி மண்ணை பிச்சையாகக்
கேட்கிறார்களாம் ஆண்கள்! இந்த ஆண்களின்
புண்ணியக்கதையில் ஆணாதிக்கத்தின் இன்னொரு முகம்தான்
 புனைவாக மாறி இருக்கிறது.

நவராத்திரியில் ஒன்பது வகையான கன்னிப்பெண்களை வழிபடுவது என்பதற்கும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
நடனமங்கை, மண்டை ஓட்டை வழிபடும் தாந்திரிகி, பாலியல்தொழிலாளி, துணி வெளுப்பவள், சிகை அலங்காரம் செய்பவள், பிராமணப்பெண், சூத்திரப்பெண், யாதவகுலப் பெண், தோட்டவேலை செய்பவள்... இந்த  நவகன்னியர்களை வழிபாடு செய்தால் தான்
துர்க்காபூஜை  நிறைவுப் பெறும். இந்த வழக்கமே இன்று 9 கன்னிப்பெண்களை
வழிபடுவதாக மாறி இருக்கிறது.
națī kapālikā veśyā rajakī nāpitāńganā | brāhmaņī śudrakańyā ca tathā gopālakańyakā || mālākārasya kańyā ca nava kańyā prakīrtitā ||"(Guptasadhana Tantra 1:12)

வடநாட்டில் கொண்டாடப்படும் துர்க்காவும்
தமிழ்நாட்டின் கொற்றவையும்
வேறு வேறு பிரதேசங்களிலிருந்து புறப்பட்டு
 "சக்திவழிபாடு" என்ற ஒற்றைப் புள்ளியில் கலந்தவை
என்பது இன்னொரு தனி வரலாறு. (இது குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரை
சில ஆண்டுகளுக்கு முன்  புதுவிசை இதழில் வெளிவந்ததிருந்தது. )

தமிழ் நாட்டில் 99% அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி
அமர்ந்த்திருக்கிறது என்றும் அதன் காரணத்தையும் விளக்குகிறார் தொ.பரமசிவம் அவர்கள்.   பழைய தமிழகம் எனபது கேரளத்தையும்
 சேர்த்து அமைந்தது. நம் மண்ணைச் சுற்றி மூன்று பக்கமும் கடலால் சூழ்ப்பட்டது. ஆபத்து என்று ஒன்று வந்தால் அது வடக்கு இருந்துதான் வரவேண்டும். தெய்வம் வடக்கு  திசை நோக்கி தன் மக்களை காக்க
 ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பது தொல்வரலாற்று உண்மை என்கிறார்.
பொதுவாக அம்மன் போன்ற தாய்தெய்வ வழிப்பாடுகளில் பிராமணர்கள் அல்லாத பிற சாதியினரே பூசாரியாக உள்ளனர்.
உலகம்மன், முத்தாரம்மன், மாசானி அம்மன், லோக நாயகி
 என வட்டாத்திற்கு வட்டாரம் தெய்வங்கள் மாறுபடும்.
இருந்தாலும் தாய்த்தெய்வத்திற்கு தனித்தன்மைகள் உண்டு.
 வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல்,
 பெரிய பொட்டு, மிரட்டும் விழி. வழிப்பாட்டு முறையில் பொங்கலும், முளைப்பாரியும், சாமியாடலும், இரத்தப்பலியும்
 இவற்றின் தனிக்கூறுகளாகும்.
காவல் தெய்வமாக இருந்த தாய்வழிபாடு
 போர்த்தெய்வ வழிபாடாக மாற்றம் பெறுவதை
 கலிங்கத்துப் பரணியில் காணலாம். ..

தேவியர் இங்கிருந்து தான் புறப்படுகிறார்கள்.
பெண்ணியத்தின் உடல்மொழி நவராத்திரியின் சடங்குகளுக்குள் புதைக்கபப்ட்டுவிட்டது.

Tuesday, September 19, 2017

"நீட் அனிதா" போஸ்டர்களுடன் அலைந்து கொண்டிருக்கிறோம்

"நீட் அனிதா" போஸ்டர்களுடன் அலைந்து கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இரண்டு தமிழ்நாடு இருக்குங்கேன்.
ஒன்று செந்தமிழ்நாடு.. இதில் தமிழ் தவிர மற்றவை அனைத்தும்
சீரும் சிறப்புமாக இருக்கும்.
கட்டணம் கட்டி அனைத்து வசதிகளுடனும் இளைய சமுதாயம்
தன்னை நுழைவு/போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளும்.
இன்னோரு கொடுந்தமிழ் நாடு. இந்த மக்களிடம் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் அவர்கள் செத்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி என்ற பெயரில்
தரமில்லாத கல்வியும் மனப்பாடக் கல்வியும் கற்பிக்கப்படும்.
அவர்களுக்கு நுழைவு/போட்டித் தேர்வுகள் தேவையில்லை
என்று மாநில அரசும் மத்திய அரசும் தீர்மானித்து விட்டது.
நமக்கும் அவர்களைப் பற்றி கவலை இருந்ததே இல்லை.
ஆனால்  நம்ம பிள்ளைக அனைத்து வசதிகளுடன் இருக்கும்
 பள்ளிக்கு பெருந்தொகையை கட்டணமாகக் கட்டி
பொறந்து அம்மானு சொல்றதுக்கு
முன்பே நுழைவு/போட்டித் தேர்வுக்கு தயாராக்கும்
வித்தையை செய்யும் மந்திரக்கோலை எப்படியும்
வாங்கி விடுகிறோம். நமக்கு இதில் வெட்கமில்லை.
இப்போது ... நம்மைப் போராளிகள் என்று காட்டிக் கொள்வதற்காக
"நீட் அனிதா " போஸ்டர்களுடன் அலைகிறோம்.

1976ல் நெருக்கடி நிலைமை காலத்தில் கல்வி
மாநிலப்பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு
வந்தப் போது நமக்கு அதைப் பற்றி கவலைப்பட நேரமில்லை.
மாநில சுயாட்சி பேசிய அரசியல் கட்சிகளுக்கு மாநிலங்களின் இறையாண்மையை, மாநில மக்களின் உரிமையை
மத்திய அரசு தன் அதிகாரத்திற்குள் கொண்டு வருகிறது
என்ற துளி அளவு கூட சலனம் ஏற்படவில்லை!

கல்வியைத் தனியார்வசம் ஒப்படைப்பதை நியாயப்படுத்தும் வகையில்
ராஜீவ் காந்தி அரசு 1986-ல் ‘அரசே கல்விச் சுமையை ஏற்க முடியாது.
தனிநபர்களும் பங்கேற்கும் வண்ணம் உயர்கல்வி நிறுவனங்களை
உருவாக்குவதே அரசின் லட்சியம்’ என்ற புதிய கல்வி கொள்கையைக் கொண்டுவந்தப் போது
நம் பொதுவுடமை தோழர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை!

அரசு நடத்தும் பள்ளிகளில் 1400 பெண்கள் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை.
4000 ஆண்கள் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை.
40% பள்ளிகளில் மேற்கூரை இல்லை
77% பள்ளிகளில் பயிற்சிக்கூடங்கள், அதாவது லேப்ஸ் , மற்றும் கணினி வசதிகள் இல்லை.
2000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 20 மாணவர்களுக்கும் குறைவாகவே இருக்கிறார்கள்.
பல பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் 1600 அரசாங்கப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
 இதே வேகத்தில் போனால் வரும் 3 ஆண்டுகளுக்குள்
 2000க்கும் மேற்பட்ட அரசாங்கப் பள்ளிகளுக்கு மூடுவிழா
 நடக்கப்போகிறது.
இவ்வளவும் நடந்தப் போது நம் சமூகத்தில்
 எந்தச் சலனமும் ஏற்படவில்லை.

இப்போது நாம் "நீட் அனிதா" போஸ்டர்களுடன் அலைந்து கொண்டிருக்கிறோம்.




Saturday, September 16, 2017

தந்தை பெரியார் உற்சவங்கள்

Image result for தந்தை பெரியார்

பெரியார் உற்சவத்தில் பெரியார் சிலைகள்

திராவிடம் என்று பேசியவர்கள்
 பெரியாருக்கு காவடி எடுத்தார்கள்.
விழாக்கால உற்சவத்தில் தமிழகம் எங்கும்
 பெரியார் சிலைகள்.
சிலை உடைப்புப் பாரம்பரியத்தை ஒரு போராட்ட
ஆயுதமாக்கிய பெரியார்
 சிலையாக , ஒரு காலக்கட்டத்தின் கனவாக,
ஏன் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட பிம்பமாக
 சிலரின் அரசியல் ஆசைகளுக்கும் வெற்றிகளுக்கும்
 பயன்படும் ஆகக்சிறந்த அடையாளமாக (லேபிள்)
 மாற்றப் பட்டிருக்கிறார்.
பெரியாரின் கருத்துகளை நீர்த்துப் போகச்செய்ததன் மூலம்
பெரியாரை நம் கடந்தகாலத்தின் குறியீடாக மாற்றும்
முயற்சிகள் தான் பெரியார் உற்சவங்கள்.
 இன்றைய நவீன அரசியல் முதலாளிகளின்
வழிபாட்டு கடவுளாக தந்தை பெரியார்  ..
பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார்.. ..
என்று அடிக்கடி சொல்கிறவர்களுக்கு
பெரியார் என்ற சொல் வெறும் அடையாளமா
அல்லது செயல்பாடா?
பெரியார் உற்சவத்தில் பெரியாரின் சிலைகள் மாலைகளுடன்.

Friday, September 8, 2017

பா.ரஞ்சித் VS அமீர்

Image result for பா ரஞ்சித் அமீர்

பா. ரஞ்சித் சொன்னதற்கு அக்கூட்டத்தில் இருந்த 
அமீர் சொன்னதை  ஏன் அனைவரும் "மோதல்" என்று சொல்லி 
இருவரையும் எதிரெதிர் திசையில் நிறுத்துகிறார்கள் ? 
அனிதாவை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடையாளமாகவும்
 தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே 
சமூக நீதிக்கான தற்கொலைகள் தொடர்கின்றன 
என்ற நிதர்சனமான உண்மையை ரஞ்சித் பேசியது நியாயமானது
அவருடைய அனுபவத்திலிருந்தும் காயங்களிலிருந்தும்
 வெளிவந்த வார்த்தைகள் அவை.
 அதே நேரத்தில் அதைக் கேட்டுக்கொண்டிருந்த அமீர்
அனிதா ஒரு சாதியின் அடையாளம் மட்டுமல்ல, 
அவள் தமிழ்ச்சமூகத்தின் அடையாளம் என்று சொன்னது
இன்றைய அரசியல் சூழ்நிலையில் ,  அத்தருணத்தில்
 மிகவும் சரியான பார்வை. 
அப்படி அமீர் சொல்லி இருக்கவில்லை என்றால் தான்
 அது வருத்தத்திற்குரியது. 
தமிழ்ச் சாதி வெட்கப்பட  வேண்டியது.
ரஞ்சித் , அமீர்... இருவேறு துருவங்கள் அல்ல.
உயிருடன் வாழும் போதே அனிதாக்களுக்கு
சாதி அடையாளங்கள் ஒழிந்து 

தமிழச்சி என்ற அடையாளம் கொடுக்கப்பட வேண்டும். 
அதுமட்டுமே
ரஞ்சித் , அமீர் குரலுக்கான பாதையாக இருக்கும்.

 இருக்க வேண்டும் ..

கவலைக்கிடமான தமிழக அரசியல்


கவலைக்கிடமான தமிழக அரசியல்..
உண்மையில் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம்
 ஏற்பட்டிருக்கிறது  என்பதை
நேரில் கண்டேன். அரசு நிர்வாகத்தில் ஒரு நிரந்தரமற்ற
 சூழல் காரணமாக செயல்படாத அரசு அலுவலகங்கள்,
  வறட்சியான சூழல்.. நிராசையான வாழ்க்கை.
தண்ணீர் மற்றும் மின்சார மேலாண்மையில் தோற்றுப்போன
 தமிழத்தின் ஆட்சி
எல்லாவற்றையும் அரசியலாக்கி அதில் சுயலாபம்
 அடைய துடிக்கும் அரசியல் வாதிகள்..
பொதுமக்களுக்கு எல்லாம் தெரிகிறது..
எல்லோரையும் அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கை
வெற்றிடமாகவே இருக்கிறது.
அதிமுக அரசின் எடப்பாடி, பன்னீர், தினகரன் வகையறாக்கள்
 அடித்த லூட்டி மக்களுக்கு அவர்கள் மீது இருந்த
 துளி நம்பிக்கையும் துடைத்து எடுத்துவிட்டது.
திமுகவின் தலைவர்களை விட அதன் அடிப்பொடிகள்
 அடுத்து அவர்கள் தான் ஆட்சிக்கு வரப்போவதாக இப்போதே திட்டமிட்டுவிட்டார்கள்.
 ஒரு காலத்தில் நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தப்போது
 அவர் மீது இருந்த நம்பிக்கை கூட
இன்றைய திடீர் அரசியல் நாயகர்களாக வர நினைக்கும் 
உலகநாயகனுக்கோ சூப்பர் ஸ்டாருக்கோ இல்லை,
 இல்லை, இல்லவே இல்லை!
மக்கள் இவர்களின் அரசியல் டிவிட்டர்களையும்
 சந்திப்புகளையும் இன்னும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் ஊடகங்கள் அவர்களை எப்படியும்
பெரிய போஸ்டர்களில் காட்டி பிரமாண்டப்படுத்திவிடலாம்
 என்று நினைக்கின்றன.

திமுக வைப் பொறுத்தவரை சிறையிலிருக்கும் சசிகலா மீது வெறுப்பு அரசியல் இல்லை என்பதை அவர்களில் சிலருடன் பேசிய போது
என்னால் புரிந்து கொல்ள முடிந்தது.
அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்களும் ஏற்புடையது தான்.
சென்னையைப் பொறுத்தவரை அதிமுக வுக்கு மாற்றாக
 அடுத்த தேர்தலில் திமுக தான் வரும் என்று உறுதியாக  நடுத்தர வர்க்க
மக்களும் சொல்லவில்லை.  அதைவிட முக்கியமானது செய்தி..
.. சென்னை பயணத்தில்
இது திமுக தலைவரின் குடும்பத்தில் இன்னாரின் சொத்து,
இது இன்னாரின் சொத்து
என்று ஓர் ஆட்டோ , கார் டிரைவர்கள் கூட நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள்!
எனக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது.
 தங்கள் வாரிசுகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கட்டாயம் கொண்டுவர வேண்டிய நிலை திமுகவுக்கு வந்துவிட்டது.
ஆனால் அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா ..?
 என்பது மில்லியன் டாலர் கேள்வி.

மாநில அரசியலையும் மாநில அரசியல் கட்சிகளின்
தலைவர்களையும் சிபிஐ  வட்டத்தில்
சிக்க வைப்பதில் மோதி அரசு எதையும் செய்யும்
 என்ற அச்ச உணர்வு அனைத்து கட்சிகளின்
தலைவர்கள், இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்களிடம்
இருக்கிறது. அதுவே அவர்கள் வெளிப்படையான
 எதிர்ப்பைக் காட்ட முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தி இருப்பதை
அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.
அவர்களின் விவரிப்புகளை அனுபவங்களை அமைதியாகக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
எங்கிருந்து மோதி அரசுக்கு இந்த அளவுக்கு துணிச்சல்
வந்திருக்கும்?
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகும் அனைத்தையும்
துடைத்துவிட்டு மாபெரும் தேசியத்தலைவரில்
ஒருவராக வலம் வருவதின் பின்னணியில் தான்
மோதி அரசியலையும் அதிகாரத்தையும் புரிந்து
கொள்ள வேண்டும். 

Thursday, September 7, 2017

மகேந்திரமலையும் நானும்


Image result for windmills at kanyakumari
வறண்ட பூமி..

மழைப்பொய்த்த வானம்
கனவாகிக் கலைந்துப் போகும் கருமுகில்கள்
வாடிப்போன கறிவேப்பிலை கன்றுகள்
வெறிச்சோடிப் போயிருக்கும் மாட்டுத்தொழுவங்கள்
இலவச டிவியில் பசி மறக்கும் எம் சனங்கள்
காற்றுக்கு மட்டும் ஆவேசம் அடங்கவில்லை
புழுதிவாரி தூற்றிக்கொண்டிருக்கிறது
மண்ணை  அள்ளி சாபமிடுகிறது
ஆவேசமாக இரவும் பகலும்  அலைமோதுகிறது.
களையிழந்த குமரிக்கடல் காற்றுடன் கைகோத்து
ஓங்காரமிடுகிறது.. ஒப்பாரி வைக்கிறது..
தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய வியாபாரம்.
அவள் வருகிறாள்... போகிறாள்.. வருகிறாள்
பத்திரகாளியும் இசக்கியும் மூன்றுயுகம் கொண்டாளும்
வாடிய அவள் பூக்களின் சாட்சியாக .
இராட்சதக் காற்றாடிகள் எம்மைக் கண்காணிக்கின்றன.
தேசவிரோதி, தீவிரவாதி, தமிழினத்துரோகி..விருதுகள்
எமக்காகக் காத்திருக்கின்றன.
கையறுநிலையில் என்னைப் போலவே மகேந்திரமலையும்.
--------
இனி ஒரு உலகமகாயுத்தம் வரும் என்றால் அது தண்ணீருக்கானதாகவே
இருக்கும் என்பதை உறுதி செய்கிறது எம் தெருக்கோடி தண்ணீர்க்குழாய்கள்.
தென்னை மரத்தை பனை மரம் போல மாறிக்கொள் என்று சொல்லுகிறேன்.
வாடிப்போன மரங்களுக்கும் செடிகளுக்கும் அடுத்தவர் தோட்டத்தில்
அத்துமீறி நுழைந்து திருடிக்கொள் உனக்கான உன் தண்ணீரை.. அது உன் உரிமை என்று சொல்லி இருக்கிறேன். கேட்குமோ இல்லை என்னைப்
பார்த்து நகைக்குமோ.. ? ! வாடிய தோட்டத்தின் காட்சி .. வறண்ட நிலத்தின்
மக்கள்.. 
ஏரிகள் நிரம்பி வழியும் மும்பை பெருநகரில் பெருமூச்சுடன் கழிகிறது
என் நாட்கள்.