Thursday, June 26, 2014

100 வது பிறந்தநாளில்....






இனிய நண்பர் புதுக்கோட்டை நா. முத்துநிலவன் அவர்கள்
சில கேள்விகளுக்கு தன் வலைப்பூவில் பதில் அளித்திருப்பதுடன்
அதே கேள்விகளை தன் வலைப்பூ நட்பு வட்டத்திற்கும்
விரித்திருக்கிறார். அந்த வலைப்பூ வலையின் நட்பிற்காக
அதே கேள்விகளுடன் நானும் இப்போது...



1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
 கொண்டாட விரும்புகிறீர்கள்?

என் 100 வது பிறந்த நாளன்று என் நினைவாக என் பேரன்மார்
& பேத்தியர் என் கவிதை/ கதை / கட்டுரையை அவர்களுக்குத்
தெரிந்த ஏதாவது ஒரு மொழியில் அப்போதைய சமூக வலைத்தளத்தில்
போட வேண்டும்.
LIKES BEHIND HER LIKES ... என்று முகநூலில் நான்
போட்டு வைத்திருக்கும் லைக்ஸ் குறித்து ஒரு புத்தகம் வெளிவரலாம்.
அந்த ஆண்டின் best seller book வரிசையில் அப்புத்தகம் இருக்கும்.


2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

பாலி மொழி கற்றுக் கொள்ள விருப்பம்.



3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?


கடைசியாக சிரித்தது ... காலம் தான் பதில் சொல்லும்.
இப்போது "தான் பெற்ற இன்பம் பெறுக என் நண்பர்களும்"
என்று இக்கேள்விகளை அனுப்பி எழுத வைத்திருக்கும்
என் நண்பர் புதுக்கோட்டை  நா.முத்துநிலவனின் செயலைக் கண்டு சிரிப்பு வருகிறது.
(கவனிக்க வேண்டியது: நண்பர்களிடம் கோபம் வரும்போதெல்லாம்
சிரிக்க வேண்டும் என்பதை இப்போது பழகிக்கொண்டிருக்கிறேன்!)

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?


மனிதன் செயற்கையாக உருவாக்கிக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு
உண்டு பவர்கட் ப்ராப்ளம். ஆனால் பூமித்தாய்  தன் மரம் செடி
கொடிகளால் இந்தப் பவர்கட் ப்ராப்ளங்களிலிருந்து நம்மைக்\
காத்துக் கொண்டிருக்கிறாள். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்
என்று அடிக்கடி வரும் பவர்கட் ப்ராப்ளங்கள் நமக்குச்
சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

பொதுவாக MY CHILDREN DON'T LIKE ADVICE.
என் வாழ்வில் ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கவனித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள். என் பலம் பலகீனங்களிலிருந்து
அவர்கள் நிறைய அறிந்து கொண்டிருக்கிறார்கள், இன்னும்
நிறைய அறியக்கூடும் என்று நம்புகிறேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் 
எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

உலகப்பிரச்சனையைத் தீர்ப்பது இருக்கட்டும், நண்பர்களே!
நம் உள்ளூர்ப் பிரச்சனையாகிவிட்ட நம் மீனவர்களின்
பிரச்சனையை, இந்திய இலங்கை மீனவர் பிரச்சனையை
முதலில் தீர்க்க நினைக்கிறேன்.


7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பிரச்சனையைப் பொறுத்து அட்வைஸ் கேட்கும்
உறவுகள்/ நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறேன்.
(பொதுவாக யாரிடமும் அட்வைஸ் கேட்பதில்லை!)
. .

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

தவறான தகவல் பரப்பியவரைக் கண்டு ரசிக்க ஆரம்பித்து
விடுவேன்!, மறந்தும் அவரிடம் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்
என்று கேட்கவே மாட்டேன்.
.

9.உங்கள் நண்பரின் மனைவி/ தோழியின் கணவர் இறந்தால் 
அவரிடம் என்ன சொல்வீர்கள்?


அந்த தருணத்தில் எதுவும் சொல்ல மாட்டேன். கட்டிப்பிடித்துக்
கொஞ்ச நேரம் அழுவேன். எனக்குத் தெரியும் என் தோழமைக்கு
என் தோள்களில் சாய்ந்து தன் துக்கத்தை இறக்கிவைப்பது  எவ்வளவு
ஆறுதலாக இருக்கும் என்பது.
அதன்பின் சமூக பொருளாதர நிலையில் அடுத்தக் கட்டத்தில்
செய்ய வேண்டிய காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.



10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

புத்தகம் படிப்பேன்.
அப்புறமா
பித்தகம் படிப்பேன்.
திடீர்னு ஒரு மூட் வந்துவிட்டால் என் லிட்டில்ஹீரோ அறைக்குள்
துணிந்து போய்விடுவேன், அவன் அறை என்பது இந்த மாநகரத்தின்
மாநகராட்சி குப்பை லாரி மாதிரி. அதில் கைவைப்பது என்பது
ஒரு த்ரில்லிங்கான சேலஞ்சான விஷயம். இரண்டு மாதத்திற்கு
முன்பு சாப்பிட்ட பீசா பில் முதல் நேற்றைய கணினி சாப்ட்வேர் வரை
எதுவேண்டுமானாலும் கிடைக்கும்.... (pls note that my little hero is 26 years old)




-----------------------------

Monday, June 23, 2014

கண்ணதாசனின் "போய்வருகிறேன்"







இன்று கண்ணதாசனின் பிறந்தநாள். 24 ஜூன் 1927.

திராவிட அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு
கண்ணதாசனின் வனவாசம் மிகுந்த பாதிப்பை
ஏற்படுத்தியது.

இன்றும் சமூக வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும்
தனித்து நிற்கும் போதெல்லாம்
என் காயங்களுக்கு மயிலிறகாய் இருப்பது
கண்ணதாசனின் போய்வருகிறேன் கட்டுரைதான்.

கண்ணதாசனுடன் நான் முரண்படும் புள்ளிகளும் உண்டு.
(யாருடன் தான் நான் முரண்படவில்லை!) காலத்தை தாண்டி
இந்த நிமிடம் வரை "போய்வருகிறேன்" கட்டுரையின் பாதிப்பை
உணர்கிறேன். சில தருணங்களில் அப்படி அதில் என்ன இருக்கிறது
என்று கூட நினைத்தது உண்டு. அந்த வரிகளில் பாதிக்கப்பட்ட
மனசின் வேதனையும் விம்மலும் ஏமாற்றப்பட்டவனின் அழுகுரலும்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
கண்ணதாசன் போய் பல வருடங்கள் ஆனபிறகும் இன்றும்
போய்வருகிறேன் என்ற குரலின் ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு
தருணங்களில் பற்பல அர்த்தங்களுடன் எனக்குள் பயணித்துக்  கொண்டிருக்கின்றன.

அக்கட்டுரையிலிருந்து சிலவரிகள்:

என் இனிய நண்பர்களே!

தூய்மையான உங்கள்  இதயங்களைக் கொஞ்சம் இந்தப் பக்கம் திருப்பங்கள்

நல்லோர் உரைகளைக் கேட்டு கேட்டு மெல்லிய பண்பு படைத்த
உங்கள் செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்,

உங்கள் வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் விழுந்துவிடப் போகிறது.
உங்கள் சோலையிலிருந்து ஒரு குயில் கண்காணா உலகத்திற்கு
பறந்து செல்லப் போகிறது.
உங்கள் மலர்த் தோட்டத்திலிருந்து ஒரு மலர்
உதிர்ந்துவிடப் போகிறது.
உங்கள் கூட்டத்தில் கட்டப்பட்டிருந்த நன்றி மிக்க ஒரு உருவம்
தன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு போய்விடப் போகிறது.
தனக்கென வாழ்ந்து பழக்கமில்லாதது என்று உங்களால் சொல்லப்பட்ட
ஒருஇதயத்தை நீங்கள் இழந்துவிடப் போகிறீர்கள்.
இருள் கப்பியதும் சோகமயமானதுமான முடிவை
உங்கள் தோழன் பெறப்போகிறான.
முடிவின் தலைவாசலில் நின்று கொண்டு அவன்
உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.
முடிவின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
அந்த வாசலில் நிற்கின்ற உங்கள் நண்பன் சிரம் தாழ்த்தி
கடைசி முறையாக உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
துள்ளி துடித்துக் கொண்டிருந்த அவனுடைய போராட்ட இதயம்
மெல்ல மெல்ல அமைதி அடைந்துக் கொண்டிருக்கிறது.
எந்தக் கடமையை முழு மனதோடும்
யாருடைய தூண்டுதலும் இல்லாமல் ஏற்றுக் கொண்டிருந்தானோ
அந்தக் கடமையிலிருந்து ஓய்வு பெறப் போகிறான்.
அவன் இந்த முடிவை விரும்பவில்லை.
இந்த முடிவு அவனை விரும்புகிறது.
தாண்ட முடியாத உங்கள் அன்பு வேலியை அவன்
தாண்டிக் கொண்டு ஓடப் போகிறான்.
அடர்ந்தக் காடும் பசுமை நிறைந்த மரங்களும் மணம் பரப்பும்
மலர்களும் சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் நதியும்
அந்த நதியின் கரையிலுள்ள அழகிய சிறு இல்லமும்
அமைதியை நாடும் அவன் கண்களுக்குத் தெரிந்துக்
கொண்டிருக்கின்றன.

அவன் இனி சுதந்திரம் நிறைந்தவன்.
அவன் இனி தனிமனிதன்,
ஆனால் எந்த மூலையில் இருந்தாலும்
அவன் உங்களையே சிந்தித்துக் கொண்டிருப்பான்.
கன்னங்கரிய காகங்களையும் குயில்களையும் காணும் போதும்
செக்கச்சிவந்த செம்போத்துப் பறவைகளையும் பார்க்கும் போதும்
உங்கள் அணைப்பிலே அவன் மகிழ்ந்துக் கொண்டிருந்த
இன்பகரமான நாட்களை எண்ணிக்கொண்டிருப்பான்.
கனவுகளிலும் நினைவுகளிலும் எளிய கவிதை மலர்களை
பறித்துக் கொண்டிருந்த அவனது உள்ளம்
உங்களுக்காகவே ஏங்கிக் கொண்டிருக்கும்.
ஒருவேளை மறுபடியும் அவன் உங்களைச் சந்திக்க நேர்ந்தால்
ஊமை தான் கண்ட கனவுகளை
சைகையில் விளக்குவது போல்
தத்துவங்களால் விமர்சனம் செய்துக் கொண்டிருப்பான்.
எதையும் பொருட்படுத்தாதவனாகவும்
எதிலும் அகப்பட்டுக் கொள்ளாதவனாகவும்தான் இதுவரை
அவன் உங்களோடு வாழ்ந்திருந்தான்.
அவனது வாழ்க்கை வேடிக்கையான நாடகமாக
முடிந்து விடப் போகிறது.
பதவி வேண்டும், பதவிக்கு மேல் பதவி வேண்டும்
என்று அவன் அடித்துக் கொண்டதை எப்போதாவது
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
தன்னைப் பற்றி தானே விளம்பரம் செய்து கொள்ளும்
வேடிக்கை மனிதர்கள் கூட்டத்தில்
எப்போதாவது அவனை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?
இன்னாருடைய கண்ணீருக்கு அவன் காரணமாய் இருந்தான்
என்று எப்போதாவது அவனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
அவன் ஜார்ஜ் மன்னரின் நிழலில் குடி இருந்திருக்கிறான்.
அவன் சார்லஸின் குணங்களை அனுபவித்திருக்கிறான்.
ஆனால் அவன் மட்டும் பைரனாகவே வாழ்ந்திருக்கிறான்.
ஏனோ அவன் மனம் சலித்துவிட்டது.
அவன் வேலைப்பார்த்த அரசாங்கம் அவனை
நிம்மதி இல்லாமல் அடித்துவிட்டது.
உள்ளதை உள்ளபடி சொல்வது எவ்வளவு
ஆபத்தானது என்பதை அவன் அனுபவ பூர்வமாகக் கண்டுவிட்டான்.
நெஞ்சத்தால் ஒரு மனிதன், சொல்லால் ஒரு மனிதன்,
'செயலால் ஒரு மனிதன் என்று ஒவ்வொரு மனிதனும்
மூன்று வடிவம் எடுக்கும் உலத்தில் அவன் மட்டும்
ஒரே மனிதனாக வாழ்ந்துவிட்டான்.
அவன் அன்போடு கை போட்ட சில தோள்களில்
முட்செடிகள் கத்தை கத்தையாக வளர்ந்திருந்தன.
யாரைக் குத்துகிறோம் என்று தெரியாமலேயே
அவன் கையைக் கிழித்துவிட்டன.
கையில் ரத்தம் வடிகிறது என்று கதறினான்.
அதை எப்படி நீ சத்தம் போட்டுச் சொல்லலாம்
என்று சிலர் கோபித்தனர்.
அவனுக்குச் சிரிப்பு வந்தது.
உடனே அழுகையும் வந்தது.
ஊமையாகவே இருந்துவிட்டான்.
என் அருமை நண்பர்களே!!
இது அவனுக்குப் பழக்கமில்லாத ஒன்று.
இரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்குத் தெரியாதுய்.
அதிலும், பத்துபேரின் கட்டளைக்குப் பயந்து தான்
தவறேன்று நினைப்பதைச் சரியென்று மாற்றிக்கொள்ள
அவன் தயாராக இல்லை.
.......
.........
தான் நினைக்கும் அனைத்தையும் உரத்தக் குரலில் பாடுவான்.
ஒவ்வொரு வார்த்தையையும் முத்துச் சரம் போல கோர்ப்பான்.
உங்கள் இதயங்களையும் காதுகளையும்
அவன் தடவிக் கொண்டிருப்பான்.
பழைய பாணர் பரம்பரையில் ஒருவனாகவே
 அவன் தன்னை முடிவுக் கட்டிக் கொண்டான்.
அவன் எப்போதும் உங்கள் நண்பன்.
நீங்கள் அவனை மறந்துவிடலாம்
நிச்சயமாக அவன் உங்களை மறக்க மாட்டான்.
எப்போதாவது தற்செயலாக நீங்கள் அவனைச் சந்திக்க
நேர்ந்தால் அவன் கண்களில் கண்ணீர் வரும்.
அந்தக் கண்ணீர்  அவன் மாறவில்லை என்பதைக் காட்டும்.
.........

அவன் புறப்பட்டது என்னவோ வேட்டைக்குத்தான்
வேட்டையாடும் நேரமும் தூரமும் அவன் கண்களுக்கு'
விலகியே போய்க்கொண்டிருந்தன.
......
'தான் வேட்டைக்காரன்' என்று நினைத்துக் கொண்டே
பாட்டுப்பாட அவனால் முடியவில்லை.
நீ பாட்டுப்பாடுகிறவனா?
வேட்டைக்காரனா? என்கிற கேள்வி
அவன் இதயத்தில் எழுந்து கொண்டே இருந்தது.

என் உயிரினும் இனியவர்களே!
அந்தக் கேள்விக்கு அவன் பதில் கண்டுபிடித்துவிட்டான்.

அமைதி நிறைந்த உலகம்..
அங்கே ஒரு கயிற்றுக்கட்டிலில் அவன் சாய்ந்துக்கிடக்கிறான்.
....
ஒரு இலையின்  விளிம்பிலிருந்து பனித்துளி மலர் மீது
விழுகிறது.
அந்த ஓசைக்கூட அவன் காதுகளுக்கு கேட்கிறது.
செம்பக மலர்  ஒன்று பூமியில் விழுகிறது,
இலட்சக்கணக்கானவர்களின் கையோலியைக் கேட்டு கேட்டு
மரத்துப் போன அவன் செவிகளில்,
அந்த மெல்லிய மலர்விழும் ஓசையைக் கேட்குமளவுக்கு
மென்மையடைந்துவிடுகின்றன.
....

ஏறும்போது இருந்த மயக்கம் இறங்கும் போது இல்லை.
.....
......

பேரிச்சைகளுக்கு நடுவே, அடிதடிகளுக்கு நடுவே குழுவும் குழுவும்
மோதிக்கொள்ளும் கூச்சல்களுக்கிடையே,
என் நண்பர்களே கூர்ந்து கேளுங்கள்!
ஒரு சிறுபாட்டு உங்கள் காதுகளுக்கு கேட்கிறதா?

"நான் நானாக, எனக்குள் எனக்காக, என் பொருட்டுத்தனியாக
அடங்கி அமைவுற்றிருக்கிறேன்."

இந்தப் பாடல் உங்கள் காதுகளில் விழுகிறதா?
அதோ அவன் தான் பாடிக் கொண்டிருக்கிறான்.
அவன் இப்படித் தினமும் பாடுவான.
ஒவ்வொரு கட்டத்திலும், அவன் வாழ்வில் ஒவ்வொரு
அதிசயம் நடக்கும்.
அந்த அதிசயங்கள் ஒவ்வொன்றும் அவன் நம்மவன்
என்று உங்களைச் சொல்ல வைக்கும்.
.....
இதோ பாருங்கள், அவன் சாவைப் பார்த்துவிட்டுத்தான்
வாழ்வுக்குத் திரும்பி வந்திருக்கிறான்.
மற்றவர்களின் கால்களில் தன் உடம்பைத் தூக்கி நிறுத்திவிட்டு
தானே நடப்பது போல பாவித்துக் கொள்வோர் அவன் நண்பனாக
இருந்திருக்கிறார்கள்.
அவனை அதிகம் பேச வைக்காதீர்கள்.
அவன் துறவியாவதை உங்களால் அனுமதிக்க முடியாதென்றால்
அவனை ஒரு மெளன தேவதையாக வைத்துக் கொள்ளுங்கள்.





Saturday, June 21, 2014

மும்பை மெட்ரோ.பிடிச்சிருக்கு ஆனா பிடிக்கலை!





இரு தினங்களுக்கு முன் மும்பை மெட்ரோவில் பயணம் செய்தேன்.
மும்பையின் பெருமை மும்பை மெட்ரோ என்று பத்திரிகைகள்
செய்திகளை பக்கம் பக்கமாய் வெளியிட்டுக் கொண்டிருந்தன.
மேலும், எதோ பிக்னிக் போவது போல எங்கள் மும்பைவாசிகள்
குடும்பம் குடும்பமாக மெட்ரோவில் போய் பயணித்து புளகாங்கிதம்
அடைந்து கொண்டிருந்தார்கள்.

மதிய உணவுக்குப் பின் திடீரென எனக்கும் அந்தப் பித்து பிடித்தது.
என் வீட்டிலிருந்து இரண்டு  ஸ்டேஷன் தாண்டி காட்கோபர். காட்கோபர்
மின்சார ரயில்நிலையத்துடன் சேர்ந்தே பயணிகள் வசதிக்காக
மெட்ரோ ஸ்டேஷனும் ஆரம்பிக்கிறது.
மெட்ரோவில் பயணிக்கும் போது நாம் எங்கோ ஐரோப்பாவில்
பயணிப்பது போல ஒரு பிரமை. ஒரு சின்ன வித்தியாசம்
அவர்கள் அமைதியாக பயணிப்பார்கள். நம்மவர்கள் கேட்கவா
வேண்டும், வீட்டுக்கதையிலிருந்து மோதி அரசியல் வரை
ஒரு சலசலப்பு.. சந்தைகக்டை இரைச்சல். ஆனாலும் மெட்ரோவின்
குளிர்ச்சாதன வசதியும் அப்படியே உயரத்தில் கண்ணாடி சன்னல்கள்
வழியாக மும்பையைப் பார்க்கும் போது அதன் கம்பீரமான தோற்றமும்..
அடடா... அம்ச்சி மும்பை என்ற பெருமிதம் வரத்தான் செய்தது.
மும்பையின் மின்சார ரயில் வசதியைக் கொண்டு அதை 3 பிரிவுகளாகப்
பிரிக்கலாம். செண்ட்ரல் லைன், வெஸ்டர்ன் லைன், ஹார்பர் லைன்.
முலுண்ட் தானா கல்யாண் பகுதி  விடி ஸ்டேஷன் வரை செண்ட்ரல் லைன்,
மேற்கே பாந்திரா ,அந்தேரி, போரிவலி , மீரா ரோட்  லைன்  சர்ச்கேட் ஸ்டேஷன் வரை வெஸ்டர்ன் லைன். செம்பூர், திலக் நகர் , மான்கூர்ட்,
விடி ஸ்டேஷன் வரை ஹார்பர் லைன்.  இதில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குப் பயணம் செய்ய 95% பயணிகள் பயன்படுத்தியது
தாதர் ஸ்டேஷன் தான். அங்கேதான் லைன் மாற்றிக் கொண்டு பயணிக்க வேண்டும். ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகும்.
எனக்கு அந்தேரி செல்ல எப்படி பார்த்தாலும் ஒன்றரை மணியிலிருந்து
இரண்டு மணிநேரம் ஆகும். பேருந்தில் சென்றால் 1 மணி நேரத்திற்கு அதிகமாகவே எடுக்கும். ஆனால் மெட்ரோ வில் பயணிக்கும்  போது
அரைமணி நேரத்தில் என்னால் அந்தேரி செல்ல முடிகிறது.
காட்கோபர் மெட்ரொ ஸ்டேஷனிலிருந்து அந்தேரி செல்ல சரியாக 20
நிமிடம் ஆகிறது. அவ்வளவுதான். உண்மையில் இந்த நேர அளவை
கணக்கில் கொண்டால் இந்த வசதி மும்பைக்காரர்களுக்கு ஒரு
வரப்பிரசாதம்.

மிகவும் தூய்மையாகவும்  லிஃப்ட் வசதி தானியங்கி படிக்கட்டுகள்

கழிவறையின் தூய்மை அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவையாக
இருக்கின்றன. போகப் போகத்தெரியும் என்கிறார்கள் சிலர்.
பார்க்கலாம்.

இந்த மகிழ்ச்சியை என்னால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லையே!
என்ன செய்யட்டும். மும்பை மெட்ரொ மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்தின்
மெட்ரோ அல்ல, இது ரிலையன்ஸின் மெட்ரோ.
ரிலையன்ஸின் முதலீடு 69%
மும்பை மாநகர வளர்ச்சி குழுமத்தின் முதலீடு 26%
பிரான்ஸ் நாட்டின் வியோலிய டிரான்ஸ்போர்ட் முதலீடு 5%

இந்தியாவிலேயே மிக அதிகமான வருவாயைப் பெறும் நகரம் மும்பை.
சில இந்திய மாநிலங்களின் வருவாயை விட அதிகம் கொண்ட
மாநகரம் மும்பை. அப்படி இருந்தும் ரிலையன்ஸின் கை ஓங்கி
இருக்க வேண்டிய காரணம் என்ன? அரசு நிர்வாகம் இம்மாதிரி
பிராஜெக்ட்டுகளை எடுத்து செய்ய முடியாமல் இருப்பது ஏன்?

மெட்ரோ பயண டிக்கெட் விலையை ஏற்றக்கூடாது என்று மராத்திய மாநில முதல்வர் சொல்லிக் கொண்டே இருக்கிறார். நத்திங் டுயிங் என்று
ரிலையன்ஸ் பயண டிக்கெட் விலையை விரைவில் தற்போதைய பத்து
ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரைக்கும் ஏற்றலாம் என்கிறார்கள்.
கட்டாயம் ரிலையன்ஸ் டிக்கெட் விலையைக் கூட்டுவார்கள்.
யார் என்ன கூப்பாடு போட்டாலும் கேட்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு
இல்லை!

மும்பை மெட்ரொ எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா அந்த திட்டத்தில்
இருக்கும் பெருமுதலைகளைக் கண்டா பிடிக்கலை. இந்த திட்டத்தின்
பயன் மும்பை வாசிகளுக்கு முக்கியமானது என்றாலும் இத்திட்டத்தின்
பெருலாபம் தனிப்பட்ட ஒரு குழுமத்திற்கு உரியதாகிறது.






தாமஸ் பிக்கட்டியின் வார்த்தைகளில் சொல்வதானால்,
(CAPITAL IN THE TWENTY FIRST CENTURY)
தண்ணீர் தாழ்வான இடத்தை நோக்கிப் பாயும். அது இயற்கை,
பணம், மனிதர்கள் உருவாக்கிக் கொண்டது. அது  மேட்டை நோக்கிப்
பாய்கிறது."
 பணம் பணத்தை நோக்கிப் பாய்கிறது. இந்தியப் பொருளாதரம்
மேடு நோக்கிப் பாயும் நீர்.








Tuesday, June 17, 2014

மோதியின் கசப்பான மருந்து ??





மோதி சொன்ன கசப்பான மருந்து என்னவாக இருக்கும்?
அந்த மருந்து யாருக்கு கசப்பானதாக இருக்கும்?
ஏன் கசப்பானதாக இருக்கும்?
மன்மோகன் சிங் கசப்பான மருந்து என்று சொன்னபோதெல்லாம்
கசப்பானது என்று வாந்தி எடுத்தவர்களுக்கு
மோதி கசப்பான மருந்து என்று சொன்னதை ஏன் வாந்தி
எடுத்து வெளியில் தள்ள முடியவில்லை?
இதுதான் மாமியார் உடைத்தால் மண்குடம்,  மருமகள் உடைத்தால்
பொன்குடம் என்று சொல்வார்களோ!

இப்படியாக ஊகங்களின் அடிப்படையில் ஊடகங்கள் அவரவர்
திறமையைக் காட்டும் வகையில் விவாதங்களை நடத்திக்
கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட 16/6/14 இரவு புதிய தலைமுறை
தொலைக்காட்சியில் நேர்ப்படப் பேசு நிகழ்ச்சி இக்கசப்பான மருந்து
குறித்த விவாதங்களை முன்வைத்தே நடந்தது.

எப்போதுமே கசப்பான மருந்துகள் கசப்பாக இருந்தாலும்
வாழ்க்கையைக் கசப்பாக்குவதில்லை என்பது
நம் பாட்டி வைத்தியத்தின் தத்துவம்.
அந்தப் பழைய தத்துவத்தை புதிய தலைமுறை மறந்துவிட்டது
நல்லது தான். கசப்பானதெல்லாம் கசப்பானதாகவே இருக்கும்
என்பதுதான் இன்றைய அரசியல் பொருளாதர கணக்கோ என்னவோ!

மோதி சொன்ன கசப்பான மருந்து என்னவாக இருக்கும் என்பதை
அறிய இத்தனை ஆராய்ச்சிகளும் விவாதங்களும் ஏன்?
ரொம்ப சிம்பிள், ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளவும்
அவர் பேசுவதைப் புரிந்து கொள்ளவும் ரொம்பவும் பின்னோக்கி
2002 கோத்ரா வரை பயணம் செய்தாக வேண்டும் என்றெல்லாம்
எதுவும் அவசியமில்லை. மிக அண்மைக்காலத்தின் அவர்
சம்ப்ந்தப்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தாலே
போதும்.

2010ல் மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ்
நிறுவனம் 'ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு கார்" என்ற முழக்கத்தை
முன்வைத்து தொழிற்சாலை ஆரம்பிக்க முன்வந்தது. அப்போது
அங்கு ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் அரசு, உழவர்களின் நிலத்தைப்
பறித்து டாடாவிடம் கொடுத்தது. அதை எதிர்த்து மம்தா பானர்ஜியும்
மாவோயிஸ்டுகளும் உழவர்களும் களத்தில் இறங்கிப் போராடினார்கள்.
நிலமை கை மீறியவுடன் டாடா நிறுவனம் பின்வாங்கியது.
" நாங்கள் வீடற்றவர்களாக நடுத்தெருவில் நின்றபோது எங்களுக்கு
அடைக்கலம் தந்தவர் மோதி" என்று டாடா நிறுவன இயக்குநர்
இரவிகாந்த் மோதியைப் புகழ்ந்தார், ஏன் தெரியுமா?
மோதி டாடா நிறுவனத்திற்கு ஒரே நாளில் அகமதாபாத் அருகில்
உள்ள 1000 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார். அது மட்டுமல்ல,
நானோ கார் தயாரிக்க டாடாவின் முதலீடு : வெறும் 3000 கோடி ரூபாய்தான்.
மோதி வாரி வழங்கியது ரூ. 30,000 கோடி. நிதி உதவி, மின் சலுகை, கடன், வரிச்சலுகை இத்தியாதி ..


மிக அண்மைக்காலத்திய இன்னொரு முக்கியமான நிகழ்வு,
நடந்து முடிந்த தேர்தல் களம்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ரூபாய் 70
இலட்சம் வரை மட்டுமே செலவு செய்யலாம் என்கிறது தேர்தல்
ஆணையம். ஆனால் அதே தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியின்
தேர்தல் செலவுக்கான உச்சவரம்பை நிர்ணயிக்கவில்லை. அதன்படி
பார்த்தால் நடந்து முடிந்த தேர்தலுக்கு
இந்திய அரசுக்கான செலவு : ரூ 3426 கோடி.
அவுட்லுக் மே 26, 2014 ஆய்வின் படி, வேட்பாளர்களும் கட்சிகளும்
செலவு செய்த மொத்த தொகை : ரூ 31,950 கோடி.
இத்தொகையில் 21,300 கோடி செலவு செய்த கட்சி பா. ஜனதா கட்சி.
மற்ற கட்சிகள் செலவு செய்தது 10,650 கோடி மட்டும் தான்.

காங்கிரசுக்கும் பா. ஜனதா கட்சிக்கும் பொருளாதர, வெளிநாட்டுக்
கொள்கைகளில் பெருத்த வேறுபாடு ஏதாவது இருக்குமா?
என்ற கேள்விக்கே அர்த்தமில்லை.
இரு கட்சிகளும் வெளிநாட்டுக் கொள்கையில் அமெரிக்காவை ஆதரிக்கும்,
பொருளாதரக் கொள்கையில் முதலாளித்துவ கார்ப்பரேட் கைப்பாவைகளாகவே இருக்கும்.
THEY WILL BE PART AND PARCEL OF CORPORATOCRACY.
THIS IS A NEW KIND OF POLARIZATION IN POLITICS (TEHALKA 2008)

Wednesday, June 11, 2014

தந்தையின் நிழல் மறைந்த நாள்...







மும்பை வாழ் தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகமான
மும்பை மாநகர திமுக செயலாளர் த.மு. பொற்கோ அவர்கள்
நேற்று 10 ஜூன் -அதிகாலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார்.
இன்று - 11 ஜூன் - அவருடைய இறுதிப்பயணம்... கலந்துவிட்டு வந்து
இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

சற்றொப்ப 26 ஆண்டுகள் மும்பையின் திமுக அடையாளமாக
வாழ்ந்தவர். திமுக தலைவர் கருணாநிதி மும்பை திமுகவை
நினைத்தவுடன் முதலில் நினைவுக்கு வரும் திமுக
முகம் பொற்கோ அவர்கள்தான். . அதனால் தான் பொற்கோவுக்கு
இறுதி அஞ்சலி செலுத்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்
நேரில் வந்திருந்தார் எனலாம்.

அய்யா பொற்கோ அவர்களின் மறைவு செய்திக் கேட்டவுடன்
பற்பல நினைவுகள் வந்து என்னைக் அலைக்கழிக்கின்றன.
எந்த மேடையில் இருந்தாலும் சரி, தன் திராவிட
இயக்க கருத்துகளைச் சொல்வதில் அவர் தயக்கம் காட்டியதே
இல்லை. அது எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நடக்கும்
பாராட்டுவிழாவாக இருந்தாலும் சரி, திருமண வீட்டின்
வாழ்த்துரையாக இருந்தாலும் சரி.. தன் கருத்துகளில்
உறுதியாக இருந்தவர் அவர்.

தனிப்பட்ட முறையில் என் மீதும் என் எழுத்துகள் மீதும்
அளவற்ற பாசமும் பெருமையும் வைத்திருந்தவர்.

மும்பை திமுக , மாநகர திமுக, புறநகர் திமுக என்று இரண்டாகப்
பிரிந்தக் காலக்கட்டம், ஒருவருக்கொருவர் ஒரே மேடையில்
அமர்வதைக் கூட தவிர்த்திருந்த காலத்தில், புறநகர் பகுதியில்
வாழ்ந்த நான், என் முதல் நூலாக சூரியப்பயணம் கவிதை தொகுப்பை
வெளியிட்டேன். புறநகர் திமுகவிலிருந்து அனைவரும் கலந்து
கொண்டிருந்தார்கள், பொற்கோ அவர்களும் கலந்து கொள்ள
வேண்டும் என்று அழைப்புவிடுக்கும் போது "உங்கள் அரசியல்
காரணங்களுக்காக என்னைத் தவிர்க்க வேண்டாம். நீங்கள்
கட்டாயம் வருகிறீர்கள்" என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு
வைத்துவிட்டேன். அவர் பதிலுக்காக கூட காத்திருக்கவில்லை.
அவரும் வந்து கலந்துக் கொண்டு சிறப்பித்தார். மாநகர திமுகவும்
புறநகர் திமுக சேர்ந்து ஒரே மேடையில் அமர்ந்த முதல் நிகழ்வு
அந்த நிகழ்வு தான்.

பொற்கோ அவர்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு.
நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் சங்க இலக்கிய சமூகம் என்ற
தலைப்பில் நான் பேசிய நிகழ்வு அவர் தலைமையில் நடந்தது.
அப்போது "ஓரில் நெய்தல் கறங்க... இன்னாது அம்ம இவ்வுலகம்,
இனிய காண்பர் இதன் இயல்புணர்தோரே" என்ற புறநானூற்று
பாடலைக் குறிப்பிட்டேன். பேசி முடித்து இருக்கையில் அமர்ந்தவுடன்
அந்தப் பாடலை எழுதியவர் பக்குடுக்கை நன்கணியார், தெரியுமல்லவா?
பாடலைச் சொல்லும் போது எழுதியவர் பெயரையும் சொல்லும்
பழக்கத்தை வைத்துக் கொள்" என்று மெதுவாக , கண்டிப்பான
குரலில் அறிவுரை சொன்னார்.

இன்னொரு நிகழ்வு, மும்பை சண்முகாணந்தா அரங்கில்,
லியோனி தலைமையில் பட்டிமன்றம். பட்டிமன்ற நிகழ்வுக்கு
முன் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்திய
பொற்கோ அவர்கள், லியோனி பட்டிமன்றத்தில்
பேச வந்திருந்த புதுக்கோட்டை ந.முத்துநிலவன் அவர்களை
அறிமுகப்படுத்தும் போது, "முத்துநிலவன் அவர்கள்
எங்களுக்குப் புதியவர்  அல்ல. எங்கள் எழுத்தாளர்
புதியமாதவியின் ஹேராம் கவிதை நூலுக்கு மிகச் சிறப்பான
அணிந்துரை எழுதியவர்." என்று பேசினார். ஹேராம் வெளியிட்டு
பல ஆண்டுகளுக்குப் பின் அவர் நினைவில் கொண்டு பேசியது
கூட்டத்தில் உட்கார்ந்திருந்த எனக்கு வியப்பளித்தது.

திமுக குறித்த என் விமர்சனங்களை அவர் எப்போதுமே
சீரியஸாக நினைப்பதில்லை. பல நேரங்களில் அதுவே
எனக்கு எரிச்சல் மூட்டும். அதையும் அவர் அறிந்திருந்தார்.
ஒரு புன்னகையால என் விமர்சனங்களைத் தள்ளிவிட்டு
மீண்டும் எனக்குப் பிடித்தமான அறிஞர் அண்ணாவைப்
பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்!

மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல் உபாதைகள், மூட்டுவலியால்
அவஸ்தைப் பட்டார். மாடிகளில் ஏறவும் இறங்கவும் மிகவும்
சிரமப்பட்டார். ஆனாலும் அதை எல்லாம் காரணம் சொல்லி
அவர் பொதுநிகழ்வுகளில் கலந்துக் கொள்வதை தவிர்ததே இல்லை!
மேடையில் உட்கார்ந்திருப்பவர் எழுந்திருக்க சிரமப்படுவதைக்
கண்டு தோழர்கள் " நீங்கள் உட்கார்ந்தே பேசுங்கள் அய்யா"
என்று சொல்வார்கள். ஆனால் அவர் அவர்கள் சொல்வதைக்
கேட்க மாட்டார். சிரமத்துடன் எழுந்து நின்று மைக் முன்னால்
பேச ஆரம்பிக்கும் போது சொல்லுவார்...
" என்னை உட்கார வைத்துவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
அது நடக்காது, " என்பார். இறுதிவரை அவர் உட்கார்ந்து
பேசியதே இல்லை.  இயற்கை மட்டும் தான் அவரை
வணங்கி வழியனுப்பி  வைத்திருக்கிறது.

அவருடைய கறுப்பு சிவப்பு கரை வேட்டியும் என்னைப் பார்த்தவுடன்
மலரும் புன்னகையும் என்னை மற்றவர்களிடம்   அறிமுகப்படுத்தும்
போது அவரிடம் மலரும் பெருமிதமும்  .. இனி எனக்கு கிடைக்கப்
போவதில்லை. என் தந்தையின் நிழலாக நான் அவரைத் தரிசித்த
தருணங்கள் இனி, வெறும் நினைவுகளாக மட்டுமே என்னில்...

அவருடைய கடைசி ஊர்வலத்தில் கண்ணாடி பெட்டியில் மலர்
மாலைகள் மறைக்க நகர்ந்த தருணத்தில்  அந்தக் கறுப்பு சிவப்பு
கரைவேட்டி என்னை எட்டிப்பார்த்தது ... என் தந்தையின்
நிழல் என்னை விட்டு விலகியது போல ஓர் உணர்வு.
" நான் அரசியல் அனாதையாகிவிட்டதாக நினைத்தேன்"

இறுதிவரை திமுகவின் அடையாளமாகவே மும்பையில் வாழ்ந்து
மறைந்த மனிதனின் கதை .. ஒவ்வொரு காட்சியாக
என் மனக்கண்ணில்.

அவருக்கு இந்த மகளின் வீரவணக்கம்.

Monday, June 9, 2014

கவிதையாவது கழுதையாவது..!




கவிதையாவது கழுதையாவது!

இதுதான் கவிஞர் ராசை. கண்மணிராசாவின் கவிதை தொகுப்பின்

தலைப்பு.  யார் இந்தக் கண்மணிராசா ? எப்படி இக்கவிதை நூல்

என்னிடம் வந்தது? தெரியவில்லை. ஆனால் இக்கவிதை நூலின்

தலைப்பும் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கவிதைகளும்

என் முதல் வாசிப்பிலேயே என்னிடம் நிரந்தரமாகத் தங்கி எப்போதும்

உரையாடிக் கொண்டிருக்கின்றன. மழைக்காலத்திற்கு முன்

பால்கனி ஓரமாக இருக்கும் புத்தக அலமாரியை துடைத்து

புத்தகங்களை  அடுக்கி வைத்து நீர்க்கசிவிலிருந்து புத்தகங்களைப்

பாதுகாக்கும் வழக்கமான வேலையில் ஈடுபட்டிருக்கும் போது

கிடைத்துவிட்டது "கவிதையாவது கழுதையாவது".

மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டேன்.


சாணிப்பால் முற்றத்தில்

நிலாக்காயும் இரவொளியில்

உன்னோடு கவிதை பேச ஆசை.

ஆனால்,

பகலெல்லாம் பாரவண்டி

இழுத்த களைப்பில் நானும்


தீப்பெட்டி ஆபிசில்

தீயாய் பறந்த களைப்பில் நீயும்

கண்ணயர்ந்து உறங்குகையில்

கவிதையாவது?

கழுதையாவது!


Sunday, June 8, 2014

நாம்தியோ தாசல் VS நாஞ்சில் நாடன் + ஜெயமோகன் வகையறா






என் இனிய நண்பர் நாஞ்சில் நாடன் அவர்கள் இலக்கிய நம்பிக்கை

நட்சத்திரங்கள் என்று பட்டியல் போட  ஏற்கனவே அம்மாதிரி

பட்டியல் போடுவதில் முனைவர் பட்டம் பெற்ற எழுத்தாளர்

ஜெயமோகன் அதற்கு வக்காலத்து வாங்கி இம்மாதிரி பட்டியல்

போடுவது தமிழ் இலக்கிய வரிசையில் சிலம்பு காலம் முதல்

தொடர்வதாக புதிதாக ஒரு வரலாற்றை எழுதியிருக்கிறார்.

ஜெயமோகனின் கண்டுபிடிப்பு இதோ:

"இலக்கியம் தோன்றியநாள் முதல் இப்படிப்பட்ட பட்டியல்கள் வழியாகவே அது தரம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது என்பதையும் கோயிந்துக்களுக்கு கொட்டை எழுத்தில்தான் சொல்லவேண்டியிருக்கிறது. சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்ப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே  "

அய்யா ஜெயமோகன் அவர்களே, நீங்கள் குறிப்பிட்டிருக்கும்

இந்தப் பட்டியல் எல்லாம் தரவரிசைக்காக பட்டியல் போடப்பட்டதா

அல்லது பாடுபொருள் , பாடல் வகை, காலவரலாறு கொண்டு 

பட்டியலிடப்பட்டதா? எப்படியோ இருக்கட்டும், நீங்கள் சொன்னால் 

சரியாகத்தான் இருக்கும்,

நாங்கள் கற்றதும் கற்பிக்கப்பட்டதும் தவறாக இருக்கும்! வாழ்க 

உங்கள் கண்டுபிடிப்பு!!!

சரி இந்தப் பட்டியல் போடும் நவீன இலக்கியத்தின் பிதாமகன்களைப்

பார்த்து ...
 

பட்டியல் போடுவதற்கு  இவர்கள் யார்? என்று சில தோழர்கள்

முகநூலில் கேள்வி கேட்க பட்டியலில் இடம் பெற்ற தோழி

குட்டிரேவதி " என்னை உங்கள் பட்டியலில் சேர்க்கும் தகுதி

உங்களுக்கு இருக்கிறதா ?" என்று நாஞ்சில் நாடனைப் பார்த்து

சுடச்சுட கேட்டு வைக்க...மும்பையில் அடிக்கும் வெயிலில்

இவ்வளவு சூடு தாங்காமல் எங்களைப் போன்றவர்கள் ரொம்பவும்

அவதிப்பட்டுவிட்டோம்.


இந்த அதிரடி  நகைச்சுவைக் கலாட்டாவில் இனியும் நம் நேரத்தை

வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

உங்கள் அனைவருக்காகவும் நாம் போற்றும் கவிஞர் நாம்தியோ தாசல்

எழுதிய வரிகளை நினைவூட்ட விரும்புகிறேன்.


My poetry was as free as I was. It was Life.
 I wrote what I felt like writing and how I felt like writing.
 I had found my weapons and I sharpened then. 
 Nothing was going to stop me now.
I went on writing unshackled and liberated.

I never compared myself with anyone else.
 I never consulted anyone else on 
whether what I was writing was right or wrong.
I wrote as I felt all the way.

I do not differentiate between political  poetry
 and non-political poetry.
 I have been criticised by many. whenever i find the time
I read what my critics write. 
HOWEVER , IT DOES NOT  AFFECT ME. 
I understand from the criticism that the 
literary establishment , such as it is, finds unacceptable
any poetry that deals with political and 
social processes our life goes through
Our times are such that we have to move
on, leaving the establishment in its own fix. 




WHY PRIVACY IS DENIED TO BODY OF DALIT AND ADIVASI WOMEN?

 



டில்லி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பலியான

பெண் நிருபயா பெண்ணியத்தின் அடையாளமாக

மாற்றம் பெற்றதில் எனக்கு வருத்தமோ மாற்றுக் கருத்தோ

இல்லை. ஆனால் உத்திரபிரதேசத்தில் தூக்கில் தொங்கவிடப்

பட்ட இரண்டு பெண்களையும் அப்படியே ஓர் அதிர்ச்சி செய்தியாக

பதிவு செய்த எந்த ஊடகத்திற்கும் அந்தப் பெண்ணின் அந்தரங்கம்,

அக்குடும்பத்தின் எதிர்காலம் இம்மாதிரியான எதுவும் கருத்தில்

எடுத்துக் கொள்ளப்படவில்லையே, ஏன்? WHY THE PRIVACY IS DENIED

TO DALIT & ADIVASI WOMAN?

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை

செய்யப்படும் பெண் தலித்தாகவோ ஆதிவாசியாகவோ இருந்தால்

பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் உடலை, அவள் நிர்வாணத்தை,

சிதைக்கப்பட்ட யோனியை, அவள் குடும்பத்தினர் புகைப்படங்களை

அப்படியே தங்களுக்கான "அதிர்ச்சி" செய்தியாக்குகின்றன இந்தியாவின்

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும்.

அப்போதெல்லாம் அந்தச் செய்தியை நாமும் பார்த்துவிட்டு

அவர்களுக்காக பாவப்பட்டுக்கொண்டு முடிந்தால் அதே செய்தியை

மற்றவர்களுக்கு பகிர்ந்துக் கொண்டு இருக்கிறோம்.

பாதிப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்வதில்

நமக்கு எந்தக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.

அதுவே டில்லி பெண்ணுக்கு ஏற்பட்ட போது அவள் புகைப்படம்

வெளிவரக்கூடாது, பெண்ணின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்,

அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் குறித்து நாம் அதீதமாகவே

கவலைப்பட்டிருக்கிறோம்.  ஆனால் தலித் பெண்கள் பாதிக்கப்பட்ட

போது நமக்கு ஏன் அந்தக் கவலை வரவில்லை.

தலித் பெண்களுக்கு அந்தரங்கம் இருக்கக் கூடாது, அந்தக் குடும்பத்திற்கு

எதிர்காலமோ சமூகம் கவுரவம் என்று நினைக்கிறதோ இருக்கவே கூடாது

என்கிற எண்ணம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறதா?

ஏன் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணை அப்படியே காட்டுகிற போது

நமக்குள் அது ஒரு அதிர்ச்சியாக மட்டுமே பதிவாகி காலப்போக்கில்

மங்கிவிடுகிறது.  தலித் பெண்ணின் உடலில் , வாழ்க்கையில் நாம்

இல்லையா?

The writer S Anand in his times of india article 08TH june said,

"rights and privacies are reserved only for the 'sacred body ' of the upper caste

woman, when it comes to the bodies of dalit and tribal woman...pictures of their raped,

naked and mutilated bodies are captured and circulated with impunity"

thanks Anand.




Friday, June 6, 2014

குறிஞ்சி




எல்லாவற்றையும் எழுதிவிடலாம் என்று
நினைத்தவுடன்
என்னைச் சுற்றி வட்டமிடுகின்றன
வல்லூறாய் உன் பார்வைகள்.

உயிருடன் கொத்தித்தின்னக் காத்திருக்கின்றன
கூர்மையான ஆயுதங்களுடன்.
மெதுவாக இருட்டில் நகர்ந்து
சிதறிக்கிடக்கும் எழுத்துகளைச் சேகரித்து
மேகக்கூட்டத்தில் மறைத்து வைக்கிறேன்.
என்றாவது
இடியுடன் கூடிய கார்காலத்தில்
மின்னல் வெளிச்சத்தில்
நட்சத்திரங்கள் தோற்றுப்போன 
நள்ளிரவில்
வழிப்போக்கனாய் வந்தவன்
பார்க்கலாம், வாசிக்கலாம், தேடலாம்
கோடுகளிலும் புள்ளிகளிலும்
நான் புதைத்து வைத்திருக்கும்
ரகசியங்களை.

     (என் கவிதை நூல் ஐந்திணையிலிருந்து )

Tuesday, June 3, 2014

STOP, DALIT ATROCITY TOURISM







We condemned " DALIT ATROCITY TOURISM" 
By Political Party leaders !


180 Atrocities against Dalit Women Reported by National English Media
from 01 dec 2012 to 16 dec 2013
 : Brutal Rape, Murder, Assault & Gang rape of Dalit Women & Minors!
Do the system, civil society, Mainstream Movements really Honest for Justice?



After more then 200 major atrocity against Dalit in Utter Pradesh reported by English & Hindi media from Jan2012 to May2014, The brutal gang rape and murder of two Dalit girls of Badaun, UP has shocked the country. Debates & discussions are touching peaks. But atrocities against Dalits are a regular feature in the country. It is shameful & more barbaric attitude of the leaders of the country who are visiting as " DALIT ATROCITY TOURISM" to Dalit victims just for the political millage . In the case of Badayun is become more important just because it is more  BARBARIC ! Otherwise leaders from political parties do not have any concerns over the raising atrocities against Dalit just because of CASTE !



We have a very simple question before all leaders of political parties OF INDIA,


 How long Justice will be denied ? 


 (thanks to asifdutta)