Sunday, May 31, 2020

தொலைத்துவிட்டேன்

Image may contain: ocean, sky, twilight, outdoor, nature and water

நானே பாற்கடலில் விட்டு விட்டு வந்ததை
தொலைத்துவிட்டேன் என்பதா!
அதை எதற்காக சுமந்து வந்தேன்?
யுகங்களின் தவிப்பை அதில் ஊடும்பாவுமாக
நெய்து வைத்திருந்தேன் என்பதாலா!
காலச்சுமையின் வலி தாங்காமல்
குகையில் ஒதுங்கியது யார் குற்றம்?
வள்ளிமணாளன் ஏன் பழனிக்கு ஓடிப்போனான்.?
யாரைப் பற்றியும் எதைப் பற்றியும்
யோசிக்கமுடியாதப் பொழுதில்
அது நடந்துவிட வேண்டுமென
மரங்களிடம் வேண்டியதை
மணாளன் அறிந்தானோ..
வேர்களின் தாகத்தை இலைகள் அறியுமோ?
மெல்ல மெல்ல இருள் கவிந்த அப்பொழுதில்
அதைச் சுமக்கவோ எடுத்து வரவோ முடியாமல்
இறக்கிவைத்துவிட்டேன்..
கொடுக்கமுடியாதை எடுத்துவருவது எப்படி?
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும் எதுவுமில்லாத
குடிசையில் கதவுகள் இருப்பதில்லை.
அதனால் பூட்டுகளுக்கும் அவசியமில்லை.
எடுத்துச் சென்றதைப் பத்திரமாக
எடுத்துவர முடியாமல்
எவர் தடுத்தார்?
முள்வெலியின் காயங்களுக்குப்
பழகிப்போனது முல்லைச்செடி.
அரும்புகள் பூக்கும் போதெல்லாம்
அரவத்தின் ஆட்டம் ஆரம்பமாகிறது.
பிச்சியைப் போல தேடி அலைகிறேன்.
கிடைக்குமோ இனி?
ஜனக்கடலில் இனி அதைக் கண்டடைய முடியுமோ?
என் செய்வேன்?
மணல்வீடுகளுக்கு அடியில் அது புதைந்திருக்கலாம்.
கடலை விற்கும் சிறுவன் கையில் கிடைத்திருக்கலாம்.
கோவில் வாசலில் பிச்சைப்பாத்திரமாய் மாறி இருக்கலாம்.
விலைமாதுவுடன் படகருகில் படுத்திருப்பவன்
எடுத்து அணிந்துமிருக்கலாம்.
என்னை எப்போதும் வாசிக்கும் அந்த அலைகள்
கடலுக்கடியில் அதைப் பத்திரப்படுத்தி இருக்கலாம்.
எப்படிப் பார்த்தாலும் அது கை நழுவிப் போய்விட்ட து.
அவனா நானா அதுவாகிப் போன
காலத்தின் முன்னால்
தலைகுனிகிறேன்.
தொலைந்துப்போனதற்காய் ..
இப்போதெல்லாம் யாரும் வருத்தப்படுவதில்லையாம்!
உண்மையா..
தொலைந்துப் போ..
தினமும் தொலைந்துப் போ..
புதிதாகப் பிறப்பதே பிறவியின் மகத்துவம்
தொலைந்துப் போ..
பாற்கடலின் விஷம்..பொங்கி மேல் எழுகிறது.
சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான்.
தொலைத்தாயோ தொலைந்தாயோ
யுகங்களின் ஆடைகள் எரிகின்றன.
அதில் பொதிந்து வைத்திருந்த முத்தங்களை
பொறுக்கிவிட துடிக்கிறேன்.
முத்தங்களை நிராகரித்த இரவுகளுக்கு
இது தண்டனையோ விடுதலையோ..
ஓம் நமசிவாய..

Monday, May 11, 2020

THAPPAD / slap / அடி

Thappad 2020 Hindi Full Movie pDVDRip 700MB Download Leaked on ...

THAPPAD / slap / ஓங்கி அடித்த அடி
Thappad …
நம் சமூகத்தை நோக்கி ஒவ்வொரு பெண்ணும்
முன்வைக்கும் கேள்வி.
காதலன் என்ற நெருக்கத்தால்
கணவன் என்ற உரிமையால்
அப்பா என்ற உறவால்
மகன்/அண்ணன் என்ற ரத்த உறவால்…
ஒரு பெண்ணைக் கை நீட்டி அடிக்கும்
அதிகாரத்தை ஆணுக்கு கொடுத்திருப்பது
யார்?
கோபம் தாபம் ஏமாற்றம் தோல்வி
இதெல்லாம் யாருக்குத்தான் இல்லை!
எதிரில் இருக்கும் பெண்ணை கை நீட்டி
ஓங்கி அடித்துவிட்டால்…. அவனுக்கு
அதெல்லாம் தீர்ந்துவிடுமாம்!
இதெல்லாம் குடும்பத்தில் சகஜம்.
குடும்பம் சிதையாமல் இருக்க
ஒவ்வொரு பெண்ணும் இம்மாதிரியான
அவமான ங்களைச் சுமந்து கொண்டு
குடும்பத்திலிருந்து வெளியேறாமல்
குடும்ப பாங்காக இருந்துவிட வேண்டும்.
அப்படித்தான் அவள் அம்மா அவளுக்குச்
சொல்லிக்கொடுக்கிறாள்.
அவள் மாமியார் அவளிடம் எதிர்ப்பார்க்கிறாள்.
அவர்களுக்கும் அவர்களின் அம்மா, அம்ம ம்ம்மா,
மாமியார் மாமியாருக்கு மாமியார் இதையே தான்
சொல்லி இருப்பார்கள்.
ஒரு பெண் அடிவாங்கும் போது…
அவள் சுயம் காயப்படுகிறது.
அவள் தன்னை தன் உடலை தன் வாழ்க்கையை
கொண்டாட முடியாமல் அவள் அளவில்
அவள் மரணித்துவிடுகிறாள்.
ஆனால்… மரணித்துவிட்ட ஜடங்களாய்
அவனுடன் அவள் வாழும் வாழ்க்கையை
இச்சமூகம் அவளுக்கு மட்டும் நிரந்தரமானதாக
வைத்திருக்கிறது.
பெண்ணின் படிப்பு பதவி அந்தஸ்த்து இத்தியாதி
எதுவுமே… அவளுக்கு அவள் வாழ்க்கையில்
ஏற்படும் இந்த மரணத்திலிருந்து விடுதலையைக்
கொடுப்பதில்லை. மூச்சுக் காற்று நின்று கிடைக்கும்
சுடுகாட்டின் மரணம் மட்டுமே அவளுக்கான விடுதலையாய்... எழுதப்பட்டிருக்கிறது..
இத்திரைப்படம் இக்கருத்தை சமூகத்தில்
பல்வேறு தளத்தில் இருக்கும் பெண்களைக்
கொண்டு பேசுகிறது. சிலர் நேரடியாக பேசுகிறார்கள்.
சிலரின் உடல்மொழி மட்டும் பேசுகிறது..
இக்கதையில் அவளுக்கு இல்லத்தரசியாக இருப்பதில்
எந்த வருத்தமும் இல்லை. காலையில் பால் பாட்டிலையும்
செய்தித் தாளையும் எடுத்து வருவதில் ஆரம்பித்து
மாமியாருக்கு சுகர் லெவல் செக் செய்து
அவன் ஆபீஸ் போகும் போது கார் வரை ஓடிப்போய்
பரோட்டாவை கொடுத்து வழியனுப்புவது வரை..
தினமும் டைம் தவறாமல் ஒரே வேலயைச் செய்வதில்
அவளுக்கு வருத்தமில்லை…
ஆனால் அவன் அவளை அடித்திருக்க கூடாது…
அவ்வளவுதான்.
அவனுக்குப்பிடித்த நிறம் நீல நிறம்.
அதுவே அவள் நினைவுகளை ஆக்ரமித்து
நீல நிறமாகி அவளுக்குப்பிடித்த மஞ்சள்
நிறமே அவளுக்கு மறந்துப் போய்விட்ட தைப்
பற்றி அவள் வருத்தப்படவில்லை.
அதெல்லாம் அவள் வாழ்க்கையின்
மகிழ்ச்சியான தருணங்களாகவே இருந்தன.
அவன் அவளை ஓங்கி கன்னத்தில்
அறையும்வரை.
யார்க் கொடுத்தார்கள் அவனுக்கு
இந்த அதிகாரத்தை????
படம் முழுக்கவும் இதே கேள்வி
நம்மைத் துரத்துகிறது.
காதல் என்ற பெயரால் அனுபவிக்கும்
நிராகரிப்புகளில் அவள் பட்டுப்போய்விடுகிறாள்.
கணவன் என்ற உறவும்
குடும்பம் என்ற நிறுவனமும்
அவள் சுயத்தைக் காயடித்து
தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக்
கொள்கின்றன.
The husband is not a master to his wife
தன்னைக் கொண்டாடவிட்டாலும் பரவாயில்லை
தன்னை தன் உணர்வுகளைக் காயப்படுத்துவதில்
தன் ஆண்மையை வீரத்தை வெளிப்படுத்தும்
ஆண்களை,, கடைசிவரை கணவனாகவும்
தன் காதலனாகவும் கொண்டிருக்கும்
வாழ்க்கையில் பெண் வாழ்ந்து கொண்டிருப்பதாக
தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாள்.
Thappad.. காட்சிகளுக்குள் வராத இதையும்
சொல்லியது…
ஓங்கிய கைகளும்
நிராகரிப்புகளை பரிசளிக்கும் காதலும்
காயப்படுத்தும் சொற்களும்
வாழ்க்கைப்பயணத்தில் ஒவ்வொரு பெண்ணும்
கடந்து வந்தப்பாதையில்
யுகம் யுகமாக தொடர்கின்றன...

ஆண்டாளும் அன்னையர் தினமும்



ஆண்டாளும் அன்னையர் தினமும்
-----------------------------------------------------
ஆண்டாளுக்கு அன்னையர் தின வாழ்த்து
சொல்லமுடியாமல் தடுப்பது எது? யார்?: ஏன்?
ஒரு கவிதையின் பயணமிது...
ஆண்டாளுக்கு வளைகாப்பு
வெண்சங்குகள் சிரித்தன..
ஆண்டாள் தன் புருஷனின் காதில்
கிசு கிசுத்தாள்.
பிறக்கப்போகும் குழந்தைக்கு
நீ யே தகப்பன் என்று
ஊரார் அறிய .. வளைகாப்பு..
பாற்கடல் விழித்துக்கொண்ட து.
அதானாலென்ன?
எல்லா பெண்களின் கருவறை விந்துகளிலும்
நானே இருக்கிறேன்.. அதிலென்ன சந்தேகம்?
மயிலிறகால் அவள் சூல் வயிற்தைத்
தடவிக்கொடுத்தான்.
பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர்
வைக்கலாம்..?
சொல்லுங்கள் நாதா…
ஹரியின் பிள்ளை தானே அவன்.
ஹரிஜன் என்று பெயர் வை..
அவள் வயிற்றிலிருந்த குழந்தை
காலால் உதைத்த து.
அந்த வலியில்…
அவள் கருவறை வெடித்து
அவன் பிறந்தான் ..
ஆண்டாள் தேசத்தில்
தொட்டில் குழந்தைகள்
திட்டம் அறிமுகமானது.
வெண்சங்குகள் ஒலித்தன.
…………………….



இக்கவிதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு
வெளியானது எனக்கே மறந்துவிட்ட து.
வாட்ஸ் அப்பில் சுற்றி சுற்றி இதே கவிதை
இன்று எனக்கு வந்து சேர்ந்த து தனிக்கதை!
இன்று அன்னையர் தினமாமே!
அதனாலோ என்னவோ.. இக்கவிதைக்கு
வரையப்பட்டிருக்கும் கோட்டோவியம்
இக்கவிதையின் வரிகளில் சொல்ல முடியாத
ஆண்டாளின் இன்னொரு கதையை
பனிக்குடம் உடைத்து பிரசவித்த வேதனையை
அவள் கதறலை .. ஓங்கி ஒலித்த து.
அன்னையர் தினத்தில்.., அவள் கருவறை
மட்டும் ஏன் திறக்காமலேயே இருளில்
மூழ்கிக்கிடந்த து?
அவள் காதல் ஏன்
அவளை வாழவைக்க வில்லை!
தோற்றுப்போன காதலியர் தான்
பூஜிக்கப்படும் தேவியர்களாக
கோவிலை அலங்கரிக்கும் சிலைகளாக
உங்கள் பூஜையில்…
யுகம் யுகமாக ஏமாற்றும்
காதல்வலையில் அவள் விழுவதும்
அழுவதும் ..அவள் சுமக்காத
பிரசவ வலியின் கதறலாய்..
பிரபஞ்சம் எங்கும்.. பிரவாகமெடுத்து
ஒடுகிறது.
அவள் முலைப்பால் அருந்தாத
தாலாட்டுப் பாடல்கள்
அனாதைகளாகி இப்போதும்
அலைகின்றன.
அவதாரங்களால் நிரம்பி வழியும்
உன் கதைகளில்
அவள் மறுபிறவி எடுப்பதில்லை.
****
அவளுக்காக கதறும் துளசிமாட த்தின்
கதறல்…
துளசிமாட த்தின் கதறல்
அடீயே.. அம்மா ஆண்டாளு
உருகி உருகி கரைஞ்சிப் போனியே
உன்மத்தம் கொண்டு எரிஞ்சிப் போனியே
ஆத்தா உனக்கு வாய்க்கலையே
அடியே நீயும்
அப்பன் சொல்ல கேட்கலையே
அடீயே ஆண்டாளூ..
கனவில் வந்தவன் நிஜம்தானா
கைப்பிடித்ததும் உனைத்தானா- அடியே
கனவுக்காதல் பலிச்சிடுமா
கண்மணி உன்னுயிர் பிழைச்சிடுமா..
அடீயே ஆண்டாளு..
மார்கழிக் கோலம் அழியவில்லை
சூடிய பூக்கள் வாடவில்லை
மாடும் கன்றும் திரும்பவில்லை
மணமாலை ஏனோ இரங்கவில்லை.
அடீயே ஆண்டாளு
துளசிமாடம் துடிக்குதடீ.
துயரக்கேணியில் புலம்புதடி.
தத்துவப் படகுகள் மிதக்குதடி
தமிழே உனைத்தேடி நடிக்குதடி
ஆழிச்சங்குகள் நடுங்குதடி - உன்
ஆத்தா கண்ணீரு பெருகுதடி.
அடியே ஆண்டாளு..
பாற்கடலின் பள்ளிகொண்டபுரம்
ஆழிப்பேரலையாய் உனை
ஆட்கொண்ட மர்மம் என்ன?
மவளே மவராசி..
கைத்தலம் பற்றிய கார்மேகம்
வெண்சங்கு முத்தங்கள்
கருக்கலின் கனவுகளம்மா
வா.. விடியலுக்கு வா..
விடிவதற்குள் வா.
நடுங்கும் குளிரில் வெதுவெதுப்பான
நீரில் நீராட அழைக்கிறேன்.
தோழிகள் வாசலில் காத்திருக்கிறார்கள்.
உன் கதைகளைச் சொல்லி
ஆயர்குல பெண்டிரை ஏமாற்றாதே.
கனவுகள் கனவுகளாகவே முடிந்துப் போன
அந்தக் கதையை
இந்த மார்கழித் திங்களிளாவது
சொல்லடி கிளியே.. சொல்லடி.
அடியே ஆண்டாளு.. போதுமடி..
உன்னை ஏமாற்றி
என்னை ஏமாற்றி
ஊரை ஏமாற்றி
உறவை ஏமாற்றி
காதலின் பெயரால்
கனவாகிப் போனவளே..
அடியே ஆண்டாளு
பெத்தமனசு துடிக்குதடி..
கருவறை நெருப்பில் எரியுதடி
துளசிமாடம் எரியுதடி.
ஆண்டாளு.. அடியே ஆண்டாளு..
------------------------------

#ஆண்டாள்_அன்னையர்_தினம்



Sunday, May 10, 2020

பவளக்கொடி சாட்சியாக

கனவுகள் பற்றி எரிகின்றன
கனவுத் தீ
பச்சை மரத்தில் படர்கிறது
கூடு கட்டியிருந்த பறவைகள்
உயிர்ச் சிறகுகள் விரித்து
படபடக்கும் ஓசையில்
காடுகள் உறக்கம் கலைந்து
ஓடி வருகின்றன.
மஞ்சள் முகம் கருகி விழ்வதற்குள்
கந்தர்வன் அவளைத் தூக்குகிறான்.
தூர நின்று அவளைப் பார்க்கிறது
பாதி எரிந்துப் போன பவளக்கொடி.
தென்னவன் கோவில் கதவுகள்
தீ நாக்குகளின் வெப்பம் தாளாமல்
சரிந்து விழுகின்றன.
"யானோ கள்வன்?
யானோ காதலன்!
யானே தென்திசை கூற்றுவன்!
என்னோடு முடியட்டும்
உன்னை எரித்த தீயின் நாக்குகள்
என்னை எரித்து என்னோடு முடியட்டும்."

மானை விரட்டிய சிறுத்தையின் பாய்ச்சலை
நக்கி நக்கி தீயின் நாக்குகள்
பசியாறு கின்றன.

கந்தர்வனின் மகள் கை அசைக்கிறாள்
அவள் கண்களிலிருந்து சொட்டுச் சொட்டாக வனங்களில் விழும்
கண்ணீரின் துளிகளில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
தென்னவன் எச்சில் படாத
கனவுகளின் மிச்சம்.

Friday, May 8, 2020

மன் கி பாத் மரண ஓலங்கள்


சிதறிக்கிடக்கும் சப்பாத்தி துண்டுகள் ..
money purse without money..யில் புன்னகைக்கும் முகங்க்கள்..
உழைப்பாளியின் வியர்வையில் படிந்த ரத்ததுளிகளாய் .. 
சிதறிக்கிடக்கிறது இரவும் பகலும்.

டியர் மோதிஜி... 
நிச்சயமாக நீங்கள் இதற்கு காரணமல்ல.
உங்கள் அகண்ட பாரதக் கனவுகளில் இவர்கள்
இல்லை, இல்லவே இல்லை.

செத்தப் பிறகு 5 லட்சம் கொடுப்பதாக அறிவிக்கும்
நீங்கள்..உயிருடனிருக்கும் போது ரூ 500 செலவு
செய்திருந்தால் இந்த மரணங்கள் நடந்திருக்குமா?
இப்படி எல்லாம் லாக்டவுண் காலத்தில் உங்கள் மீது
குற்றம் சுமத்துவது தேசத்துரோகம் தான்!

லாக்டவுண் நேரம்.. 
தண்டவாளத்தில் டிரெயின் ஓடாது என்பதை 
அப்படியே வாசிக்கும் அப்பாவி மக்கள் 
ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்தது 
மன்னிக்க முடியாத குற்றம் என்று 
இப்போதும் உங்கள் அறிவுக்கொழுந்துகள் பேசுவார்கள்..
அவர்களுக்குத் தெரியுமா ..
நடந்தே போய்விடலாம் என்ற நம்பிக்கையும் 
இருத்தலுக்கான போராட்டமும்.
இந்தியா முழூமைக்கும் ஒரே தலைவர் நீங்கள் தான்.
4 மணி நேர அவகாசம் கொடுத்து லாக்டவுண் என்று 
அறிவிக்கும் போது நிச்சயமாக 40 கோடி இந்திய
மக்களின் அன்றாட வாழ்க்கையை உங்களுக்கு நினைக்க
 நேரமிருந்திருக்காது.. 
மும்பையும் சென்னையும் டில்லியும் 
ஏன் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.. 
பன்னாட்டு விமானங்களை
கடைசிவரை பறக்கவிட்டு வேடிக்கைப் பார்த்த உங்களுக்கு
 எங்கள் 
அன்றாட வாழ்க்கையின் வலி தெரியுமா மோதிஜி...??
நிலைமையைச் சமாளிக்க முடியாமல 
மா நில அரசுகளைத் திண்டாட வைத்துவிட்டு..
இனி நீங்களாச்சு.. என்று கையை விரித்துவிட்டு
நீங்கள் பேசும் "மன் கி பாத்"!!!! மனசுடன் ஒட்டவே இல்லை..!
இரவு முழுவ்வதும் அந்தக் காட்சிகள் 
எங்களைத் தூங்க விடாமல் துரத்துகிறது.. ..
 நீங்களும் உங்கள் சகாக்களும் எத்தனைக் காரணங்கள் 
சொன்னாலும் எல்லாமே அர்த்தமிழக்கின்றன...

வெறுமை சூழந்த விடியலில்
தண்டவாளத்திலிருந்து உயிர்த்தெழுகிறது
மீண்டும்மீண்டும் அந்த முகங்கள்...