Tuesday, April 17, 2007

தலித் அரசியல்

தலித் அரசியல்-------------------------------->> புதியமாதவி, மும்பை.
தலித் வரலாறும் வாழ்க்கையும் மறைக்கப்படுவதும் மாற்றப்படுவதும் மாற்றங்களேஇல்லாமல் தொடரும் வரலாறு. எல்லாம் மாறிவரும் காலத்தில் இதில் மட்டும்மாற்றங்கள் இல்லை.
'சட்டத்தின் முன் எல்லோரும் சமம், சம உரிமை என்று எழுதப்பட்டிருக்கும் ,ஆனால் நடைமுறை வாழ்க்கை அதற்கு முரணாகவே இருக்கும். இந்த முரண்பட்டசமுதாயத்தில் நீங்கள் வாழப் போகிறீர்கள்' என்று சட்டத்தைக் கொடுத்தபாபாசாகிப் அம்பேத்கர் சொன்னார். அவருடைய 117வது பிறந்த நாள் விழாவைக்கொண்டாடும் இத்தருணத்தில் எண்ணிப் பார்க்கிறேன். இந்த முரண்களையும்முரண்களுக்கான காரணங்களையும்.
இந்த ஆண்டு பாபுஜி ஜெகஜீவன்ராமின் நூற்றாண்டு. அவர் இந்திய நாட்டின் இராணுவஅமைச்சராக பதவி வகித்தப் போது சம்பூரணாநந்தா சிலையை திறந்து வைத்தார்.அவர் திறந்து வைத்ததால் தீட்டாகிப் போன சிலையை கங்கை நீர்க் கொண்டு கழுவி தீட்டுக் கழித்த வரலாற்றைக் கண்டவர்கள் நாம்.
இந்த ஆண்டு புரட்சியின் குரலாக வாழ்ந்த மாவீரன் பகத்சிங்கின் நூற்றாண்டு.பகத்சிங் குறித்து மூன்று இந்தி திரைப்படங்கள் ஒரே வருடத்தில் வெளிவந்தன.ஆனால் எந்த திரைப்படமும் பகத்சிங்கின் கடைசி ஆசையைக் குறித்து எதுவும் பேசவில்லை. கடைசி ஆசை என்பது எப்போதுமே முக்கியம் வாய்ந்தது, அதுவும்தூக்குக்கயிற்றை முத்தமிட்ட போராளிகளின் வாழ்க்கையில் அவர்களுடைய கடைசிஆசைக்கு முதல்மரியாதை உண்டு. இருந்தும் மாவீரன் பகத்சிங்கின் கடைசி ஆசையை எல்லோரும் இருட்டடிப்பு செய்தது ஏன்?
சிறைச்சாலையில் துப்புரவு தொழிலாளியாக வேலைப்பார்த்த மேரியின் கையால் உணவு உட்கொள்ள வேண்டும் என்பதுதான் பகத்சிங்கின் கடைசி ஆசை.ஆனால் மேரியோ உணவு ஊட்ட மறுக்கிறாள். மலம் அள்ளும் தொழிலாளியான அவள் கைகள் மலம் அள்ளி சீழ் வடிந்திருக்கிறது.சீழ் வடியும் தன் கைகளைக் காட்டி இந்தக் கைகளால் எப்படி நான் உணவூட்டுவேன்என்று பகத்சிங்கிடம் தன் இயலாமையைச் சொல்கிறாள். அவளிடம் பகத்சிங்"மேரி இந்த தேச விடுதலைக்கு நாங்கள் பாடுபட்டது அரசியல் விடுதலை, பொருளாதர விடுதலைக்கு மட்டுமல்ல,. உன்னைப் போன்ற சகோதரிகள் மலம் அள்ளும் இழிநிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும். அதனால் தான் உன் கைகளால் உணவு சாப்பிட விரும்பினேன்'இந்த மிகச் சிறந்த காட்சியை எந்த திரைப்படமும் காட்டவில்லையே , ஏன்?
தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கும் எல்லா உண்மை நிகழ்வுகளும் வெளிச்சதிற்குவருவதே இல்லை.
(பார்க்க : http://www.thinnai.com/?module=displaystory&story_id=20703221&format=html)
அண்மையின் மராட்டிய மாநிலத்தில் கயர்லாஞ்சியில் நடந்த வன்கொடுமையைஎந்த ஊடகங்களும் தலைப்பு செய்தியாக்க தவறியது ஏன்? அதே நேரத்தில்இடஒதுக்கீடுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த மாணவர்களின் போராட்டங்களைமாற்றி மாற்றி தலைப்பு செய்தியாக்கிவிட்டு இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஒலித்தகுரல்களை ஊமையாக்கியதையும் இவை அனைத்துக்கும் பின்னால் இருக்கும்ஆதிக்கசாதிகளின் நோக்கத்தையும் நாம் அறிவோம்.
சாதிகள் தோன்றிய காலத்திலேயே சாதி மறுப்பும் ஒழிப்பும் அதற்கான போராட்டங்களும் இருந்து வருகின்றன. கி.மு 7ஆம் நூற்றாண்டில் சாங்கியமும்கி.மு. 6ஆம் நூற்றாண்டில் பவுத்தமும் இந்தப் போராட்ட தளத்தில் பிறந்த வாழ்வியல் நெறிகள் தான்.
2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்னார் எனில்அவர் காலத்திலேயே பிறப்பின் அடிப்படையில் உயிர்களுக்குள் ஏற்றத்தாழ்வு வந்து விட்டது என்பது தானே பொருள்.அவருக்குப் பின் வந்த அவ்வை 'சாதி இரண்டொழிய வேறில்லை" என்கிறாள்.சமய மறுமலர்ச்சி காலத்தில் நந்தனார் தனக்கு வழிபாட்டு உரிமை வேண்டும் என்றுபோராடிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. கி.பி 11 முதல் 19வரை வலங்கை இடங்கை சாதி மோதல்கள் இருந்தன.கி.பி 12ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் பசவர் இயக்கமும்வடக்கே 15ஆம் நூற்றாண்டில் கபீர்தாஸ் இயக்கமும்17ஆம் நூற்றாண்டில் சக ஜீவந்தாஸ் இயக்கமும்18ஆம் நூற்றாண்டில் ராயிதாஸ் இயக்கமும்19ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் நாராயணகுரு இயக்கமும்மராட்டியத்தில் ஜோதிபாபூலேவின் சத்தியசோத மண்டல இயக்கமும்அதன் பின் பாபாசாகிப் அம்பேத்காரின் போராட்டங்களும்தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் திராவிய இயக்கமும் என்று சாதி ஒழிப்பு போரில் அணிவகுத்த படைகளின் பட்டியல் உண்டு.தலித்துகளுக்கு அரசியல் கிடையாது, பண்பாடு கிடையாது என்ற எண்ணத்தைதன் ஆய்வுகளில் முறியடித்த தலித்திய சிந்தனையாளர் பண்டிட் அயோத்திதாசர்,மற்றும் தாத்தா இரட்டைமலை சீனீவாசன், எம்,சி.இராஜா .... இப்படியாக நீளும் பட்டியல்இருந்தும் சமுதாய தளத்தில் எல்லா முடுக்குகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறதுசாதியம்.
இன்றைக்கு இருக்கும் இந்துத்துவம் .நந்தனை எரித்த இந்துத்துவம் அல்ல. திருவள்ளுவருக்கும் பூணூல் போட்டஇந்துத்துவம் அல்ல, இன்றைய இந்துத்துவம் தலித்துகளை குடியரசு தலைவராக்கும்,பாராளுமன்ற அவைத் தலைவராக்கும் , சிறுபான்மை சமூகத்திலிருந்துஇந்தியாவின் முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும், குடியரசு தலைவராக்கும்..ஆனால் சமூகத்தில் நேருக்கு நேர் ஆட்சியும் அதிகாரமும் கொண்ட பஞ்சாயத்து போர்டு தலைவராக மட்டும் ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டும்! தலித்துகளில்கல்வியில் பதவியில் வசதி வாய்ப்புகளில் முன்னேறியவர்களுக்கு நாய்க்குஎலும்புத் துண்டைப் போடுவது போல எதையாவது கொடுத்து எப்போதும்தங்கள் மேலாண்மைக்கு வாலாட்டும் நாய்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
தலித்துகளுக்கு பலவகைகளில் நன்மை தரும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் மயாவதி உ.பி.யில் முதல்வராக இருக்கும்போது சரியாகப் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் அவருக்குப் பின் வந்த கல்யாண்சிங் ..அவருடைய முதல் அரசாணையிலேயே "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் கவனமாக பயன்படுத்துங்கள்' என்கிறார். என்ன பொருள்? வன்கொடுமை தடுப்புச்சட்டத்தைக் கிடப்பில் போடுங்கள் என்றுதானே கவனமாக அறிவுறுத்துகிறார்.
'ஒரு தலித்தை முதலமைச்சராககுவேன்' என்று ஒரு காலத்தில் முழக்கமிட்டடாக்டர் இராமதாஸின் பட்டாளி மக்கள் கட்சியில் நடந்தது என்ன? கும்பகோணம்அருகிலுள்ள குடிதாங்கியில் தலித் பிணம் விழுந்த போது சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லுவது குறித்த போராட்டத்தை அனைவரும் அறிவோம்.,மீண்டும் ஒரு தடவை அப்படி பிணம் விழுந்தால் நானே வந்து அந்தப் பிணத்தைஎடுத்துக் கொண்டு போகின்றேன்' என்று கூறி அவர் சொன்னபடியே மீண்டும் அந்தஊரில் பிணம் விழுந்தப் போது நேரில் வந்து தங்கி ஆவன செய்கிறார்.ஆனால் அதன் பின் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து 5000 வன்னியர்கள் விலகிஅ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்கள்!!
இந்த நிகழ்வுகளின் பின்னணியில் தான் தலித்துகள் தங்களுக்கான அரசியலைஉருவாக்க வேண்டிய தருணம் வந்து விட்டதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார் மயமாதலில் வாழ்க்கையை இழந்துகொண்டிருப்பவர்கள் தலித்துகள் தான். இன்றைய இந்திய அரசின் பட்ஜெட்டைதீர்மானிப்பவர்கள் WTO, IMF, WORLD BANK இவைகள் தான். கல்வி, மருத்துவம்,பாதுகாப்பு என்று அரசின் பட்ஜெட்டைப் பாருங்கள், கல்விக்காகவும் மருத்துவத்திற்க்காவும் அரசு நிதி ஒதுக்குவதை உலகமயமாதல் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக பாதுகாப்பு DEFENCE க்கு அதிகம் நிதிஒதுக்கு என்கிறது. அப்போது தானே அவர்களின் (வல்லரசுகளின்) ஆயுத விற்பனைக் கொடி கட்டிப் பறக்கும்! அரசு கல்லூரிகளுக்கு பதிலாக கணக்கிலடங்கா தனியார் கல்லூரிகள், சுயநிதி உதவி கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு மேற்படிப்பு எட்டாதக் கனியாகபடிப்பு, வேலை, அந்தஸ்த்து, பதவி என்று ஆதிக்க சாதியினர் தங்கள் மேலாண்மையைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.ஒரு நாளைக்கு பலகோடி வருமானங்கள் பார்க்கும் WOCKHARD மருத்துவமனைகள்மும்பையில் . மருத்துவ வசதி என்பதும் இம்மாதிரியான மருத்துவமனைகளில்நுழைவது என்பதும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலையில்தலித்துகளின் வாழ்க்கை புறக்கணிக்கப்படுகிறது. மும்பையை ஷங்கை ஆக்குவோம்என்று சொல்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். ஆனால் இந்த மாநகரத்தில் இடிக்க இடிக்க மீண்டும் மீண்டும் நகரச்சேரிகள் ஏன் முளைக்கின்றன, அதற்கான காரணம்என்ன என்பதை மட்டும் எண்ணிப்பார்க்கவே மறுக்கிறார்கள்.
திருமணம், விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், பழக்க வழக்கங்கள், என்று பல்வேறுநிலைகளில் தலித்துகள் இன்று பார்ப்பன மயத்தை நோக்கிச் சென்று கொடண்டிருக்கிறார்கள். மும்பையில் அண்மை காலங்களில், கல்வி கற்று உயர் பதவிகளிலிருக்கும் தலித்இளைஞர்களின் திருமணங்கள் முழுக்க முழுக்க பார்ப்பனர் வந்து மந்திரம் ஓதநடத்தி வைக்கப்படுகிறது. மந்திரம் ஓதி திருமணம் செய்வதன் மூலம் தங்கள்மேலாண்மையை சமுதாயத்திற்கு காட்டுவதாக நினைத்துக் கொண்டுதான்இம்மாதிரி செயல்படுகிறார்கள். தலித்துகள் கட்டிய கோவில்களில் கூடதற்போது பூணூல் போட்டவர் வந்து மந்திரம் சொல்லி பூஜை நடத்திக் கொண்டிருக்கிறார். கோவிலைக் கட்டி, காத்து, ஓரளவு ஒரு நிறுவனமாக்கியநிலையில் இதெல்லாம் நடக்கிறது! நம் கோவில்களில் நம்மவர்கள் பூசை செய்த போது இல்லாத புனிதமும் புண்ணியமும் இவர்கள் வந்து பூஜை செய்தவுடன்வந்துவிட்டதா?
பாபாசாகிப் அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்நேரத்தில் நாம்செய்து கொண்டிருக்கும் சில செயல்களின் விபரீதங்களை அதன் பின் விளைவுகளைஉணர வேண்டும். காலம் காலமாக இப்படித் தான் கடந்த கால வரலாற்றிலிருந்தும்நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை!
தலித்துகள் தனித்தனி அமைப்பாக இயங்கினாலும் அரசியல் தளத்தில் ஒரேமேடையில் நின்று அதிகாரத்தை கைப்பாற்றாத வரை தலித் விடுதலை என்பதுசாத்தியப்படுமா? தலித்துகள் அரசியல் அதிகாரத்தை வென்று அடைய இருக்கும்ஒவ்வொரு தடைக் கற்களையும் அடையாளம் காணுவோம். தலித் சிந்தனையாளர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் நடுவில் இருக்கும் இடைவெளியை அகற்றுவோம். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமானஅரசியல் பிறக்கும்போது தான் இந்த மண்ணில் உண்மையான மக்களாட்சிமலரும். சட்டத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் வாசிப்புக்கு அப்பாலும்வாழ்ந்து கொண்டிருக்கும்.பாபாசாகிப் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் தலித் அரசியல் தளத்தில்அடுத்த கட்ட பயணத்திற்கு தயாராக வேண்டும் என்று வேண்டிதிருவள்ளுவர் நற்பணி இயக்கத்திற்கு என் வாழ்த்துகளைச் சொல்லிவிடை பெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
( திருவள்ளுவர் நற்பணி இயக்கம், 5ஆம் ஆண்டுவிழா , கணேசர் கோவில் அரங்கு,தாராவி கிராஸ் ரோடு, மும்பை 17ல் 15-04-07 மாலை 6 மணி அளவில்நடந்த விழாவில் பேசிய சிறப்புரையின் சுருக்கம்)