Saturday, June 10, 2017

சொற்களே .. என்னை மன்னித்துவிடுங்கள்

சொற்களே என்னை மன்னித்துவிடுங்கள்
Image result for கல்வெட்டுகள்
யுகங்களின் பனிக்குடம் உடைந்து பிரசவிக்கப்பட்ட ஓசைகள்
சொற்களின் முதல்மொழி. அத்தாய்மொழி  ஈன்ற சிசுக்கள்
காலவீதியில் தொட்டில் கட்டி சமூகவெளியில் நடைப்பயின்று
வளர்ந்து ஆளாகி பருவமெய்தி
வினையுடன் புணர்ந்து வினைச்சொல்லாகி
ஊர் ஊராக பயணித்து
செய்தொழிலால் ஆகுபெயராகி
காடுகளில் மேடுகளில் அலைந்து
 தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும்.
அகராதிக்குள் நுழைவதற்கு சொற்களும் பேரணி நடத்தி இருக்கும்.
எல்லா மொழியிலும் எல்லா சொற்களும் பொருளுடைத்தே என்ப.
"என் தாய் புழங்கிய சொற்களை என் மனைவி அறிந்திருந்தாள்.
ஆனால் புழங்கியதில்லை.
என் பிள்ளைகள் அவர்கள் தாய் அறிந்த அச்சொற்களை
அறிந்திருக்கவில்லை"
என்று சொற்களின் மரணத்தைப் பற்றி
 எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதியிருப்பார்.
 ஆனால் சொற்களை வன்புணர்வு செய்தவர்களைப் பற்றி
நாம் பேசுவதில்லை.
செம்மொழியின் சொற்கள் சிதைக்கப்பட்டு அரசியல் மேடையில்
சந்தைப் பொருளாகி விற்கப்பட்டதைப் பற்றி நாம் பேசுவதில்லை.
அதை எல்லாம் பேசினால்
அது அரசியலாகிவிடும் என்பதாலா?
இல்லை அதிகார அரசியலின்
 ஆதாயங்கள் கிட்டாமல் போய்விடும் என்பதாலா?
எல்லா சொற்களும் பொருளுடைத்தே!
ஆனால் அச்சொற்கள் அதற்கான பொருளை இழத்தல் என்பது
எவ்வளவு கொடுமை! என்னமாதிரியான ஒரு சமூகப் படுகொலை.
சமூகப் பண்பாட்டு அரசியலின் சிதைவு.
சொற்களே.. என்னை மன்னித்துவிடுங்கள் .

7 comments:

  1. யாருக்கும் இங்கே வெட்கமில்லை.
    பதிவை ரசித்தேன்.

    ReplyDelete
  2. உண்மைகள். உரத்து எத்தனை சொன்னாலும் உரைக்கப் போவதில்லை. சொற்களின் மரணம் சொல்லொணாத் துயரமே !

    ReplyDelete
  3. திசைமாறித் தத்தளிக்கும்
    சொற்கள் குறித்தான ஆதங்கக் கவிதை
    மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சொல்களைக் கையாளும் நம்மாளுங்க
    சற்றுச் சிந்திக்க வேண்டுமே!

    ReplyDelete
  5. நம் குடும்ப த்தை பொறுத்த வரை, நம் தாத்தா பாட்டி புழங்கிய சொற்களை அவ்வப்பொழுது நாமும் புழங்க முயற்சிக்க வேண்டும். இதைச் செய்தாலே சில ஆயிரம் சொற்கள் மீண்டும் உயிர் பெற்றுவிடும். - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete