Saturday, December 2, 2017

ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா?



ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை
...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள்
 நான் வர விரும்பவில்லை.
அதெல்லாம் தமிழின தமிழ் மொழிக் காவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
என்னைப் போன்ற ரொம்பவும் சாமனியமானவர்களுக்கு
சில ஐயப்பாடுகள் இருக்கின்றன.
1 ஏற்கனவே உலகில் பல்வேறு நாடுகளில்  சற்றொப்ப 15 பல்கலை
கழகங்களில் தமிழ் இருக்கை இருந்தது.  இன்று  3 பல்கலை
கழகங்களில் மட்டும் தான் தமிழ்த்துறை இருக்கிறது. மீதி 12 பல்கலை கழகங்களில் தமிழ்த்துறைகள் ஏன் மூடப்பட்டன?
அதிலும் குறிப்பாக ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்த்துறை மூடப்பட்டதைப் பற்றி எவருக்கும் ஏன் அக்கறையோ கவலையோ ஏற்படவில்லை.!!
 அப்படி ஹார்வர்ட் பல்கலை கழகத்திலும் மூடுவிழா நடக்காது
 என்பதற்கு என்ன உத்திரவாதம்  இருக்கிறது?
2) செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஒதுக்கிய நிதியில் 85 கோடி ரூபாயை பயன்படுத்தாமல் விட்டதால் அத்தொகை தமிழாய்வுக்கு வராமல் முடங்கிவிட்டது. இனி வரும் ஆண்டுகளிலும்
அத்தொகையைப் பெறுவதற்கான வழிகள் சட்டப்படி இருப்பதாக தெரியவில்லை.
மத்திய அரசு ஒதுக்கிய பணத்தில் 85 கோடியை இப்படி
 கைநழுவ விட்ட தமிழக அரசும் செம்மொழி நிறுவனமும்
 அப்பணத்தை முறையாக பெற்று தமிழ்க் கல்விக்காகவும்
தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் என்னவெல்லாம்
செய்திருக்க முடியும்! ஏன் செய்யவில்லை?
3) அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் திருக்குறள் பீடம்
 என்ற  தமிழ் இருக்கையை சிதம்பரம், மதுரை, சென்னை பல்கலை கழகங்களில் உருவாக்கினார். அண்ணாவின் மறைவுக்குப்
பின் சிதம்பரத்தில் திருக்குறள் பீடம் காணமல் போய்விட்டது.
 செம்மொழி ஆய்வு நிறுவனமோ
ஏற்கனவே உருவாக்கிய திருக்குறள் பீடத்தை புதுப்பிக்காமல்
 கவனிக்காமல் புதிதாக இன்னொரு
திருக்குறள் இருக்கையை ஒரு கோடி ரூபாய் திட்டத்தில் துவங்கினார்கள். திருக்குறள் இருக்கையை வைத்துக் கொண்டு கூட இவ்வளவு "அரசியல் " செய்த அவலத்தை நாம் எவருமே கேள்விக்குட்படுத்தவோ
விமர்சிக்கவோ இல்லை!
4) இந்தியாவில் தமிழகம் தவிர எத்தனை அயல்மாநிலங்களின் பல்கலை கழகங்களில் தமிழ்த்துறை இருக்கிறது? அப்படியே இருந்தாலும் அவற்றின் இன்றைய நிலை என்ன?
5) ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் இப்போதும் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை என்று மூன்று நிலைகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. என்று சொல்கிறார்களே,
ஹார்வார்ட் பல்கலை கழகத்தில் தமிழே இல்லை என்பது போல ஒரு தோற்றத்தை ஏன் உருவாக்கி இருக்கிறார்கள்? இதில் எது உண்மை?
6) தமிழ்நாட்டின் பல்கலை கழகங்களில் தமிழ்த்துறைக்கான இடம் என்ன? எத்தனை மாணவர்கள் அதில் படிக்கிறார்கள்? தமிழ்நாட்டின் பல்கலை கழக தமிழ் இருக்கைகளுக்கு அரசு ஒதுக்கி இருக்கும் நிதி எவ்வளவு? அதை எப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள்?
இதுவரை வெளிவந்த ஆக்கப்பூர்வமான புத்தகங்கள், செயல்பாடுகள் என்ன?

ஒரு மொழியை ஹார்வர்ட் பல்கலை கழகம் போன்ற பெருமைமிகு
பல்கலை கழகம் தானே விரும்பி அதற்கான் இருக்கையை உருவாக்க
அந்த மொழி பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? எம்மாதிரியான
கட்டமைப்பை உலக அரங்கில் உருவாக்க வேண்டும்? தேவை என்று
வந்து விட்டால் உலகில் எந்த ஒரு மூலையிலும் தமிழுக்கான இருக்கை
தானே உருவாகும், அதற்கான சூழலை உருவாக்குவதில் தமிழினமும்
தமிழக அரசும் தொலை நோக்குப் பார்வையுடன் கவனம் செலுத்தினால்
நல்லது.
இக்கேள்விகள் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு எதிரானவை அல்ல
சொந்த ஊரில் சொந்தநாட்டில் தமிழ் மொழிக்கான இருக்கையை
உறுதி செய்து கொள்ளும் சாமானிய தமிழனின் கேள்விகள்.

8 comments:

  1. கேள்விகள் நன்று
    இதற்கெல்லாம் பதில் சரித்திர ஆய்வாளர் திரு. எடப்பா(ட்)டியார் அவர்களுக்கே தெரியும்.
    எனக்கு தெரியாது.

    ReplyDelete
  2. அருமை.
    என் எண்ணமும் அதுவே.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. முத்தமிழ் வித்தகர், தமிழினத் தலைவர் என பட்டம் சூட்டிக்கொண்ட கருணாநிதிதான் இதற்கு பதில் கூற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வேண்டாம். அவர் இதுவரை கூறிய அடுக்குமொழி பதில்களே இன்னும் ஜீரணமாகாமல் .. !

      Delete
  4. //சொந்த ஊரில் சொந்தநாட்டில் தமிழ் மொழிக்கான இருக்கையை
    உறுதி செய்து கொள்ளும் சாமானிய தமிழனின் கேள்விகள்.//
    அது.மிகவும் அருமை.
    நாங்களும் - நண்பர்கள் பேசிக்கொண்டோம். என்னது தமிழையே புறக்கணிக்கும் தமிழகத்திலிருந்து ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அவசியம் என்று எல்லாம் பேசி கொள்கிறார்களே என்று.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. வருகைக்கும் பதிவுக்கும்.

      Delete
  5. திமுக ஸ்டாலின் அவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகாக ஒரு கோடி ரூபா கொடுத்த செய்தி அறிந்து எனக்கும் வருத்தமே.அவர் பயனுள்ள வேறு வழிகளில் இந்த நன்கொடையை தமிழுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.
    வெளிநாட்டு நிறுவனங்கள் என்றவுடனேயே சுரண்டல்காரர், ஏகாதிபத்தியம் என்று விஜய் படங்களில் வருவது மாதிரி வசனம் பேசி எதிர்த்து,மகிழ்வது தமிழகத்து பாஷன்.
    ஆனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு ?

    ReplyDelete