Tuesday, April 29, 2008

பெரியாரும் விபூதியும்


1956ல் குன்றக்குடி அடிகளாரும் தந்தை பெரியாரும் ஈரோட்டில் சந்திக்கிறார்கள்.
தந்தை பெரியாரின் 78ஆவது பிறந்தநாள் விழா குன்றக்குடி அடிகளார் தலைமையில்
திருச்சி பொன்மலையில் கொண்டாடப்படுகிறது.
அதன் பின் 05-9-1958ல் பெரியார் குன்றக்குடிக்கு வருகைத் தரும்போது அவருக்கு
பூரணகும்ப மரியாதை செய்கிறார்கள். அப்போது பெரியார் நெற்றியில் ஆதினத்தைச்
சேர்ந்தவர்கள் விபூதி பூசினர். பெரியார் அதைப் பவ்வியமாக ஏற்றுக் கொண்டார்.

பெரியாரின் இச்செயல் மிகவும் சர்ச்சைக்குள்ளானது.
அப்போது அவர்களுக்குப் பெரியார் சொன்ன பதில்:

" நான் எங்கே பூசிக் கொண்டேன்? அடிகளார் பூசிவிட்டார். அவ்வளவு பெரியவர்
இதை எனக்குச் செய்யும் மரியாதையாகக் கருதுகிறார். அந்த நேரத்தில் நான்
தலையைத் திருப்பிக் கொள்வது அவரை அவமதிப்பது போல ஆகாதா?"
( நன்றி: யாதும் ஊரே -இதழ் 2005, ஜூலை)

மனிதர்களை மதிப்பது மட்டுமே கடவுளை விடவும்
மதங்களை விடவும் மதங்கள் எழுதி வைத்திருக்கும்
வேதங்களை விடவும் மேன்மையானது என்று
தன் செயல் மூலம் வாழ்ந்துக் காட்டிய மனிதர்,
மாமனிதர் தந்தை பெரியார்.

குன்றக்குடி ஆதினத்தில் பாரதிதாசன்


1957ல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குன்றக்குடி வருகையின் போது
அவருக்கு பூரணக்கும்ப மரியாதை செய்யப்பட்டது. வழிபாட்டு மேடையில்
எரியும் விளக்குகளைப் பார்த்ததும் "விளக்கெல்லாம் எரிகிறதே.. விழாவா?" என்று
கேட்டார் கவிஞர்.
"அடிகளார் வழிபாடு செய்யும் இடம் " என்றார்கள்.
தன் தோளில் கிடந்தச் சால்வையைக் கையில் எடுத்துக் கொண்டு புரட்சிக்கவிஞர்
கோயில்முன் நின்றார். மடத்து ஓதுவார் ஏ.எம்.சம்பந்தமூர்த்தி அவர்கள்
'விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியவை.." திருவாசகப்பாடலை
ஓதினார். மகிழ்ந்த புரட்சிக்கவிஞர் "அய்யா, நல்லா பாடுறாங்க. இந்தத்
தமிழ்ப்பாட்டைத்தான் நான் விரும்புகிறேன். தமிழனை இழிவுப்படுத்தாத -
சாதியை வற்புறுத்தாத சைவத்தை யாரும் எதிர்க்க மாட்டாங்க. அது இல்லியே" என்று
வருத்தப்பட்டார்.

(நன்றி: யாதும் ஊரே, ஜூலை 2005 இதழ்)

புரட்சிக்கவிஞரின் வருத்தம் காலம் காலமாய், தலைமுறை தலைமுறையாய்
தொடர்வது தான் சாபக்கேடு.

Thursday, April 24, 2008

பாரதிதாசன் - பாரதி சந்திப்பு



பாரதியைத் தமது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கர் மணவிழாவில் சந்தித்தாக
பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பு 1908லேயே நேர்ந்துவிட்டதாக பாரதிதாசன் ஆர்வலர்கள்
சொல்கிறார்கள். மன்னர்மன்னன், ச்.சு.இளங்கோ போன்றோர் இக்கருத்தை ஏற்கின்றனர்..
பாரதி-பாரதிதாசன் உறவைச் சுட்டும் 'பாரதியோடு பத்தாண்டுகள்' என்ற தொடர் பாரதியின்
புதுவை வாழ்க்கையினையே (1908-1918) கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது..
இரா.இளவரசு பிற சுழ்நிலைச் செய்திகளைக் கொண்டு 1910ல் இச்சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம்
எனத் துணிந்துள்ளார்.
இப்பெரும் கவிஞர்களின் சந்திப்பைப் பற்றி பாரதி ஆய்வாளர்கள் அதிகம் பொருட்படுத்தியதாகத்
தெரியவில்லை. பாரதி ரமணரைச் சந்தித்தாரா இல்லையா என்பது போன்ற முதன்மையற்ற
செய்திகளே அவர்களை ஆட்கொண்டுள்ளன.

பாரதி பாரதிதாசனைச் சந்தித்ததை சுதேசமித்ரனில் தராசு என்ற தலைப்பில் எழுதிய தொடர்
கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தராசு கட்டுரை: பாரதி
-----------------------

"எழுக! நீ புலவன்! "

இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார். கைக்கோள ஜாதி. ஒட்டக்கூத்தப் புலவர் கூட
அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன்.

இவருக்கு இங்கிலிஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார்.
ஆதலால் வெளிப்படுத்தவில்லை.

தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது."இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு ஸந்தோஷம். எப்போதும்
வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?" என்றது. "கவிராயரே,எ ன்ன விஷயம் கேட்க
வந்தீர்?" என்று தராசு கேட்டது.

"எனக்கு கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை.
அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன்." என்று கவிராயர் சொன்னார். "இதுவரை பாடின
பாட்டுண்டானால் சொல்லும்" என்று தராசு கேட்டது.

"இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம்.
அது அத்தனை ரஸமில்லை" என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.

"மாதிரி சொல்லும்" என்றது தராசு.

புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

" காளை யொருவன் கவிச்சுவையைக் -கரை
காண நினைத்த முழு நினைப்பில் -அம்மை
தோளசைத் தங்கு நடம் புரிவாள்_ இவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான்.
ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா!-தம்பி
ஏழு கடலவள் மேனியடா!
தங்கும் வெளியினிற் கோடியண்டம்- எங்கள்
தாயின் கைப் பந்தென வோடுமடா!
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து
கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ?
மங்கை நகைத்த ஒலியதுவாம்-அவள்
வாயிற் குறுநகை மின்னலடா!"

தராசு கேட்டது: "புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?"

கவிராயர்: "இன்னும் படிக்கவில்லை, இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்"

தராசு" சரிதான், ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்கதியும்
அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்".

இங்ஙனம் வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில் சீட்டிக் கடை ஸேட் வந்தார்.

கவிராயர் தராசை நோக்கி, "நம்முடைய ஸமாஷணைக்கு நடுவிலே கொஞ்சம்
இடையூறுண்டாயிற்று" என்றார்.

தராசு சொல்லுகிறது: "உமக்கும் அதுதான் காணும் வார்த்தை, நெசவிலே நாட்டு நெசவு
மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல், பணம் நல்லது,
ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு
நெய்ய வேண்டும் அல்லது உறுதியான உழவனுக்கு வேண்டிய கச்சை வேஷ்டி போலே
நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது.மஸ்லில் நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை,
தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேல் நல்ல
வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்".

அப்போது புலவர் தராசை நோக்கி, "நீயே எனது குரு" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.

தராசு : "எழுக ! நீ புலவன் !" என்றது.

-------------

பாரதியைப் பற்றிப் பல பாடல்களையும் கட்டுரைகளையும் பொழிவுகளையும் இயற்றிய
பாரதிதாசன் தராசுவில் இடம் பெற்ற நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன் என்பது
புலப்படவில்லை.
பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதற்காகப் பாரதிதாசன் எழுதிய திரைக்கதையிலும்
நாடகத் தன்மையுடன் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற இந்நிகழ்ச்சி இடம் பெறாதது ஏன் என்பதும்
தெரியவில்லை. பாரதிதாசன் ஒரு பெரும் கவிஞராக மலரவிருக்கிறார் என்பதைப் பாரதி
முன்னுணர்ந்ததாகக் கொள்ள தராசு இடம் தரவில்லை.

(நன்றி : காலச்சுவடு டிசம்பர் 2006 பாரதி 125 ஆ. இர.வேங்கடாசலபதி எழுதிய
பாரதியின் தராசு அல்லது பாரதி- பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்தது எப்போது?
கட்டுரையிலிருந்து )

Friday, April 18, 2008

ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்

சிக்னலில் காத்திருக்கும்போது "அம்மா தாயே பிச்சைப் போடு,
, அய்யா, மவராசா பிச்சைப்போடு " என்று நம்மிடம் ஓடிவரும்
குரல் நம்மை எரிச்சல் படுத்துகிறது. விரட்டி அடிப்பதில்
எல்லோரும் ஒரேமாதிரி தான். என்ன.. அருகில் யாராவது
இருந்து அவர் நம்மைப் பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ள வேண்டும்
என்ற எண்ணத்தில் சில சமயங்களில் தராளமாக போட்டுத்தொலைக்கிறொம்.
ஆனால் நாம் எல்லோருமே கோவில்/சர்ச்/மசூதி என்று அவரவர் வழிபாட்டு
தளங்களுக்குப் போய் வரும்போது "அம்மா தாயே,
அய்யா.. என்று நம்மைத் துரத்தும் குரலை ஒதுக்கிவிட்டு நடக்கமுடியாமல்
பிச்சைப் போடுகிறோம்.
இப்போது வழிபாட்டு தளங்களுடன் சேர்ந்து மருத்துவமனை வாசல்களிலும்
இந்தக் குரல் ஒலிக்கிறது.
நம் உணர்வு . நம் செயல் இரண்டையும் காலமும் இடமும் தீர்மானிக்கின்றன.
கோவில் வாசலில் பிச்சைப்போட்டு அந்தத் தர்மக்காரியத்தின் மூலம்
மனிதன் தன் பாவங்களைத் தீர்த்துக் கொள்வதும், புண்ணியம் தேடுவதும்
சாத்தியம் என்ற நம்பிக்கை நம் எல்லோரிடமும் வர்க்க வேற்பாடின்றி
நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
கோவிலுக்குப் போகும்போது இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களாக
மாற்றி வைத்துக் கொண்டு பிச்சைக்காரர்களுக்குப் போட்டு புண்ணியம் தேடிக்கொள்ளும்
பரமாத்மாக்களாகவே நாம் வலம் வருகிறொம்.

நம்மை அவர்கள் பாதிப்பது இல்லை.
அப்படி அவர்களின் தோற்றம் பாதித்தாலும் ஒரு சில மணித்துளிகள் தான்
அந்தப் பாதிப்பு.

'கந்தனுக்கு அரோகரா..
முருகனுக்கு அரோகரா.."

"கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை..
சாமியே அய்யப்பா
அய்யப்போ சாமியே
சாமியே சரணம் அய்யப்பா"

இத்தியாதி அந்தந்த வழிபாட்டுத்தளங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் மட்டுமே மாறிய
வாய்ப்பாட்டில் அசல் காட்சிகள் மறந்துவிடுகிறது.
நம் ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி நடக்கும் பயணத்தில்
நாம் சந்திக்கும் இந்த உயிர்கள் வெறும் நிழல் காட்சிகளாகி
மங்கிப்போய்விடுகின்றன.

அந்த நிழல்களின் உலகத்தில் அன்பு,காதல், உடலுறவு, பசி, காமம்,
சித்தனைப் போல அனைத்தையும் துச்சமாக நினைக்கும் மனநிலை..
இப்படி எண்ணற்ற மனிதர்களை நாம் ஜெயமோகனில் ஏழாம் உலகத்தில்
சந்திக்கிறோம்.

கோவிலுக்குள் இருக்கும் பழநி முருகனைத் தினமும் அலங்கரித்து பூசைகள் செய்யும்
போத்திக்கு முருகன் என்றால் கோனாரு மகன் முருகந்தான்.

'இங்கே பாருடே பண்டாரம், இது ஆறடி கல்லு, பத்து நானூறு வரிசமாட்டு பலரும்
கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிடுதானுக. நமக்கு இது தொளிலு.
உனக்கு முத்தம்மை, எனக்கு இது. அது சதை, இது கல்லு, அது அளியும்,
இது இன்னும் ஆயிரம் வருசம் இருக்கும்' என்பார். (பக்203)

முத்தம்மையின் சதை அழிந்துவிடும். ஆனால் முத்தம்மையின் வாரிசுகளால்
நிரம்பி இருக்கும் கோவில் வாசல்கள் பக்தர்களுக்கு எளிதில் புண்ணியம் சேர்க்கும்.
பண்டாரங்களுக்கு முத்தம்மையின் கருப்பை மகாலட்சுமியின் ஐசுவரியத்தை
அள்ளிக்கொடுக்கும் தாமரைக்குளம்.
மகாலட்சுமியின் கடைக்கண் பார்வைக்காக அலைபவர்களிடம் முத்தம்மையின்
குரலும் அந்தக் குரலில் இருந்த தார்மீகம், பண்பாடு, கற்பு, உறவு..
இப்படி இந்த மனிதர்கள் தங்கள் பெருமையின் அளவுகோலாக
காட்டும் அனைத்தும் உடைத்து எறியப்படுகிறது.

பன்றிகள் முட்டி மோதி உறுமும் மலம் குவிந்த இடத்தில் முத்தம்மையைப்
போடுகிறார்கள்.
பெருமாள் கூனனுக்கு சராயப்புட்டியை திறந்து ஊட்டி அவன் உடலை வருடி
புணர்ச்சிக்குத் தயார் படுத்துகிறான். முத்தம்மை தீடிரென்று
"ஒடயோரே ஒத்த வெரலு.. ஒடயோரே ஒத்த வெரலு, இவன் வேண்டாம் ஒடயோரே,
இவன் மட்டும் வேண்டாம் ஒடயோரே" என்று வீரீட்டாள்.
ஆனால் கூனன் அவளை முழுவதுமாக ஆக்ரமித்துவிட...

முத்தம்மையின் பனிக்குடம் நிலமடந்தையின் பனிக்குடத்தை
உடைக்கிறது. அவள் வாரிசுகள் ஒவ்வொருவராய் சபரிமலை
படிக்கட்டுகள் என்று அவளே சொல்வது போல நம் கால்களை
மிதிக்கிறார்கள்..


'எனக்க பிள்ளைய பதினெட்டாக்கும், பதினெட்டு , சப்ரிமலை படிபோல பதினெட்டு.'

கண்ணில்ல, கையிலயும் காலிலயும் ஒரோ விரலு மட்டும்தான், கூனுமுண்டு,
மாறிலயும் வயித்தலயும் அடிச்சுட்டுல்லா கரைஞ்சேன்...
அக்கா , கண்ணில நிக்குது அக்கா அந்த ஒத்தைக் கை வெரலு.."

முத்தம்மையின் குரல் "ஒடயாரே இவன் வேண்டாம்"
கதறல் மலைகளில் மோதி பிறவிகள் தோறும் எதிரொலிக்கிறது.


அறுபடை வீடுகளிலும் இருக்கும் கார்த்திகைப் பெண்களைக் கதற கதற
அந்த முருகனே புணர்ந்ததை..
அன்னை குமரியைப் புணர்ந்த மகன் குமரனைத் தாங்க முடியாமல்
மலைகள் சரிகிறது.
..
"ஒண்ணு சொல்லுதேன் அக்கா, தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்..
எனக்க பிள்ளைய தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்.."
முத்தம்மைகளின் குரல் ...
புண்ணியம் சேர்க்கும் ஒவ்வொரு படிக்கட்டிலும் நம்மைத் துரத்துகிறது.
கோவில் கர்ப்பஹிரகத்து தீபாரதனையில் ஏழாம் உலகத்தின்
ஒற்றை விரல்.. திருவாசகத்தையும் தேவாரத்தையும் ஊமையாக்கி
'அம்மா தாயே பிச்சைப் போடு.." பண்டாரத்தின் உருப்படிகள்
கூட்டம் கூட்டமாய் நம்மைத் துரத்துகிறார்கள்.

*

எழாம் உலகத்தை வாசித்துவிட்டு அந்தப் படைப்பின் ஊடாக
தந்தை பெரியாரின் ஆவி கைத்தடியுடன் உலாவுவதாக என் இலக்கிய நண்பரிடம்
சொன்னேன். தொலைபேசியில் சில மணித்துளிகள் நிலவிய அவர் மவுனம்
அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப் போடுவதாக என்னிடம் கேட்டது
போல ஒரு பிரமை. என் கருத்தை வலியுறுத்த பின்வருமாறு சொல்லிவைத்தேன்.

ஆவி, மறுபிறப்பு, ஆன்மா, பரமாத்மா, சொர்க்கம், நரகம்.. இத்தியாதி கருத்துருவாக்கங்களை
தன் வாழ்வின் கடைசி மணித்துளி வரை எதிர்த்தவர் தந்தை பெரியார்.
திராவிடம், திராவிய இயக்கம், திராவிட இயக்க எழுத்துகள் என்றால் அலர்ஜி என்று
ஒதுக்கி வைப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஆனால் எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் ஏழாம் உலகத்தை வாசித்தவுடன்
தந்தை பெரியாரை விட அதிகமாக மத நிறுவனத்தின் மீதான எதிர்ப்புணர்வு கூர்மையடைந்தது.
இன்னும் சொல்லப்போனால் பக்கம் பக்கமாக தந்தை பெரியாரின் எழுத்துகளை வாசித்தவள்,
அறிந்தவள் என்ற முறையில் அவை அனைத்திலும் ஏற்படாத ஒரு ஆழமான பாதிப்பை
ஏழாம் உலகத்தைத் தரிசிக்கும் போது என்னுள் ஏற்படுத்தியவர் ஜெயமோகன். (!)

**

ஏழாம் உலகம் என்னை ரொம்பவே பாதித்திருக்கிறது!
மதம், ஆன்மீகம், மத நிறுவனமயமாகும் போது ஏற்படும் வணிகத்தனம் என்று பல்வேறு தளங்களுக்கு
இட்டுச் செல்கிறது.
யதார்த்தம் என்றால் எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்களையும் அவருடைய பாத்திரப்படைப்புகளையும்
வாசகர்கள் நினைப்பது இயல்பு. ஜெயகாந்தன் காட்டிய யதார்த்தம் என்பது வானத்தில் வட்டமிடும்
ஒரு கழுகின் பார்வை என்ற எண்ணத்தை ஏழாம் உலகின் கதைமாந்தர்களைக் காணும் போது
உணர்கிறோம்.

ஆமாம்.. இந்தியாவில் மட்டும் வழிபாட்டு தளங்களில் பிச்சைக்காரர்களின் ஏழாம் உலகம்.
இந்தக் காட்சிகளை நான் ஜெர்மன், பாரீஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் காணவில்லை.
ஜெர்மனில் மட்டும் ஓரிடத்தில் மெயின்ரோட்டில் ஒரு வயதானவர் இசைக்கருவியை
வாசித்துக் கொண்டிருந்தார். சிலர் அவருக்கு "யூரொ"வைப் போட்டார்கள்.
ம்ம்.. டீசண்டான பிச்சை எடுத்தல்தான். எனினும் அவருடைய உடை, அலங்காரம்
எதிலும் நம்ம ஊரூ ஏழாம் உலகத்தின் எந்தச் சாயலும் இல்லை.
என்ன காரணம்?

கவிதை:

உண்ணாமல்
உறங்காமல்
விரதங்கள் காத்தேன்.
கேட்டது கிடைக்க
உன் பாதங்கள் தேடி
ஓடி வந்தேன்.

கருவறையின் புழுக்கத்தில்
பக்தர்களில் பக்தி வியர்வையில்
என் குரல் அமுங்கிவிட்டது.
'தரிசனம் முடிந்தது' என்று
தள்ளிவிட்டார்கள்.

என் காலடியில்
'தாயே கருணைக்காட்டு'
உன் பிச்சையின் குரல்.
நான் நீயானேன்.
நீ மீண்டும்
சிலையானாய்.

( என் ஹேராம் கவிதை நூலில் 2000ல் நான் எழுதிய கவிதை)

---------------