Friday, December 3, 2021

அவ்வையின் நெல்லிக்கனி

 

என் நண்பனே

எங்கே நீ?

துயரங்கள் சுமையாகும்போது

உன் தோள்களைத் தேடுகின்றேன்.

சுமைகளைத் தூக்க அல்ல.

சுமைதாங்கி இளைப்பாற.

 

பூமி உருண்டையில் – நாம்

மீண்டும் சந்திப்போம் என்றாய்.

பூமி உருண்டை என்பது

உண்மைதான்.

ஆனால்

நம் சந்திப்பு மட்டும்

எப்படி பொய்யானது?

 

வேண்டியவர்கள் வேண்டாதவர்கள்

பெரியவர்கள் சிறியவர்கள்

எல்லோருடனும்

பேசி சிரித்து உண்டு உறங்கி

பயணம் செய்து

களைத்துப்போய்

கண்மூடிக்கிடக்கின்றேன்.

கனவில் நீ என்னுடன்

பயணம் செய்வாய்

என்ற நப்பாசையில்.

 

ராக்கி கட்டி

நம் நட்பை

சகோதரப்பாசமாக

பரிணாமம் செய்ய நினைத்தேன்.

 

நம் நட்பு

ராக்கி கயிற்றையும்

மஞ்சள் கயிற்றையும் விட

மேலானது என்று

புன்னகையுடன் சொன்னாய்.

 

நான் அவ்வை

நீ என் அதியமான்

என்றேன்.

எங்கே என்

நெல்லிக்கனி? என்றாய்.

தொலைந்துபோன

நெல்லிக்கனியைத்

தேடி அலைகின்றேன்.

 

என் நட்பே

காதல் தோல்வியடையலாம்!

இங்கே

தோல்வியில் முடிந்த

காதலெல்லாம்

அமரகாவியம் ஆகிவிடும்.

 

ஆனால்,

 நண்பனே…

நட்பு தோல்வியடைந்த தாக

கதைகளில் கூட

கற்பனை செய்யாதே.

 

அந்த தோல்விகுப் பின்னால்

மனித நேயம்

மாண்டுபோய்விடும்.

மண்ணில் உயிர்கள்

மறைந்துபோய்விடும்.

பூமி உருண்டை

சுருங்கிப்போய்விடும்.

சூரியன் கூட

இருண்டு போய்விடும்.

 

(2003ல் வெளிவந்த ஹேராம்

கவிதை தொகுப்பிலிருந்து)

 


No comments:

Post a Comment