Saturday, November 3, 2007

இது அறிவுரை அல்ல


இது அறிவுரை அல்ல
---------------------

என் அனுபவத்தை எழுதச் சொல்லுகிறீர்கள்?
எழுதுவேன்.
இப்போதல்ல.
எப்போதாவது.
என் கதைகளில்
என் கவிதைவரிகளில்
பட்டுத் தெறிக்கும் மின்னலாய்
கட்டாயம் எழுதுவேன்.

நான் வந்தது ஒரு சுற்றுலாவுக்காக என்றால்
பார்த்து பிரமித்த காட்சிகளை
அப்படியே என் டிஜிட்டல் காமிராவுக்குள்
சிறைப்பிடித்து
என் வார்த்தை ஜோடனைகளால்
அலங்கரித்து
எழுதி எழுதி
பயணக்கட்டுரைகளில்
ஒரு புதிய அத்தியாயங்களைப்
படைத்திருப்பேன்,
நானோ வந்தது அதற்காக அல்லவே.

உங்களில் புதைந்து கிடக்கும்
என் அடையாளங்களைத் தேடி..
குளிர்ப்பிரதேசத்தில்
அக்னிக்குஞ்சுகளாய்
வலம் வரும் உங்கள்
இரஸாயண வித்தையை
அப்படியே எடுத்துவந்து
இந்த அரபிக்கடலை
அதிசயிக்கவைக்கும்
பேராசையுடன் ...
பறந்துவந்தேன்.

எப்படி நடந்தது நிகழ்ச்சி?
என்னிடமே கேட்கிறீகள்!
என்ன சொல்லட்டும் ..
சிறப்பு விருந்தினரை
அழைத்து வந்து
அவர் பேசப் பேச
கைதட்டி கைதட்டி
ஒரு கைதட்டும் கூட்டத்தை
உருவாக்கி இருக்கும்
எங்கள் கூட்டங்கள் போலில்லை
என்று சொல்லட்டுமா?
ஒலிவாங்கி நோய்வந்து
அவதிப்படும்
லோக்கல் தலைகளின்
வரவேற்புரை,
தொடக்கவுரை
அவர்களே ..இவர்களே..
எதுவுமே இல்லாமல்
யதார்த்தமாக இருந்தது
என்பதைச் சொல்லட்டுமா?
எதைச் சொல்லட்டும்?

தன் ஆதித்தாயின் மொழியை
கங்காருவைப் போல
தன்னில்
தன் கவிதைகளில்
சுமந்து திரியும் ஆழியாள்

கண்ணிவெடிகளைத் தாண்டி
களமிறங்கி
கண்ணீர்த்துடைக்கும் சாந்தி

பிஞ்சுக்கரங்கள் சுமக்கும்
பீரங்கி வெடி குண்டுகள்
தற்கொலைக்காரிகள்
இத்தியாதி ..
பட்டியலோடு வந்து
ஆயுதம் தாங்கிய
அணங்குகளின்
எதிர்காலத்திற்காய்
ஓங்கிக்குரல் கொடுத்த
லண்டன் ராஜி அக்கா

பாலியல் உறவும்
மரபணு விதையும்
வாழ்வியல் கதையில்
நடத்தும் வித்தைகளை
அறிவியல் பார்வையில்
அவைக்கு கொடுத்த
ஆற்றல்மிகு நிர்மலா..

பெரியாரைத் தெரியுமா என்று
அறியாமல் கேட்டு
அகப்பட்டுக்கொண்ட தமிழச்சி

காலையில் 'மை" எடுத்து
மாலையில் வரைந்துவிட்ட தர்மினி

ஈழத்தேசத்து
எங்கள் தமிழ்மண்ணில்
பெண்ணிய உரிமைகளை
வென்றெடுக்கும் தளம் அமைக்க
இப்போதே தயாராகும் விஜி..

பெண்கள் சந்திப்பா..?
என்ன சாதித்தார்கள்?
எவர் பணத்தில்
இவர்களின் பயணம்?
இவர்கள் என்ன போராளிகளா?
இயக்கங்களைக் குறைச்சொல்லும்
இவர்களை
இயக்குவது யார்?
அடுக்கடுக்காக ஆயிரம் குற்றச்சாட்டுகள்..
அத்தனைக்கும் ஆணித்தரமான பதில்களுடன்
பெண்கள் சந்திப்பின் தொடக்கமும் வளர்ச்சியும்
விரித்துச் சொன்ன றஞ்சியின்
மவுனத்தில் மறைந்து கிடந்தது
யுத்தங்கள் இல்லாத தேசம் கேட்கும்
ஓர் அன்னையின் குரல்...!

எப்போதும்
எல்லோரிடமும்
ஏதாவது கேள்விகளுடன்
எழுந்து நின்ற புன்னகை ஜெயா

ஜெர்மனியில் தமிழ்ப்பள்ளி
ஆரவாரமில்லாமல்
காரியங்கள் செய்யும்
இரட்டையர்

வன்கொடுமை வழக்குகளைச்
சந்திக்கும் அனுபவத்தில்
சந்திப்பில்
கிடைத்த நேரத்தில்
தேவா கொடுத்தது குறைவுதான்
ஆனால்
அவரோடு தனியாக
நான் கதைத்து கதைத்து
எடுத்தது அதிகம்.

வல்லரசுகள் எல்லாம்
நல்லரசுகளா?
குறும்படமாய்
இசையுடன் கொடுத்த
இளந்தளிர் ஆரதி

நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக
கூஃபி நடனமாடிக்காட்டிய
நடனமங்கை
ஸ்ரீஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
(அட.. நம்ம ராஜி அக்கா தான்)

சில எரிமலைகள்
மோதிக்கொண்ட
காட்சிகளுக்கும் கருத்துகளுக்கும்
சாட்சியாய் நான்..

என் படைப்புகளை
விமர்சிக்கும் நேரத்தில்
கவிஞர்களுக்குத் தண்டனையாக
அவர்கள் எழுதிய கவிதைகளை
வாசிக்கும்
அற்புதமான ஆங்கிலப்படத்தை
நினைவூட்டி
பயமுறுத்திக் கொண்டேயிருந்த
நிமிடங்கள்...

இதில் எதை எழுதட்டும்?
எழுதமுடியாதவை இன்னும் எத்தனையோ
அதை எல்லாம்
எழுதும் நாள் வரும்.
உங்களைப் போலவே நானும்
காத்திருக்கிறேன்.
கண்ணில் கனவுகளுடனும்
மண்ணில் நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும்
நம்பிக்கைகளுடனும்.

மும்பையிலிருந்து
உங்கள் அன்பு,
புதியமாதவி.

வியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள்



வியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள்
--------------------------------
இன் இனிய உறவுகளே
முகவரி மட்டுமே அறிந்த
உங்கள் முகங்களை
குளிரூட்டும் அந்த இரவில்
சந்தித்த அந்த நிமிடங்கள்
மிகவும் இனிமையானவை.
கோடைமழையைப் போல
என்னைக் குளிர்வித்த
தருணங்களை
பனிப்பிரதேசத்தில்
நெருப்பு அடுப்புகளில்
குளிர்க்காயும்
உங்களிடம்
எப்படி புரியவைப்பேன்.?

உங்களைச் சந்தித்த நிமிடங்கள்
காதலின் இனிமையை, தழுவலை
இரண்டாம் நிலைக்கு
தள்ளிவிட்ட அற்புதத்தை
என்னவென்று சொல்லட்டும்?
*
வெட்ப பிரதேசத்தின்
வியர்வைகளை விடக் கொடியது
குளிரில்
கம்பளிப்பூச்சிகளுடன்
குடும்பம் நடத்துவது.
எப்போதும்
எதற்குள்ளாவது
நம்மை, நம் உடலை
போர்த்திக்கொண்டு
திரியும் அவலம்
நிரிவாணத்தைவிடக் கொடியது.
உங்கள் புன்னகைகளை மட்டுமல்ல
உங்கள் புன்னகைக்குள்
மறைந்து கிடந்த
உறைந்த பனிக்கட்டிகளையும்
அப்படியே சுமந்து
கொண்டு வந்திருக்கிறேன்
என் வியர்வைத் துளிகளில்.
*
என் தொட்டிச்செடிகளைப்
பார்க்கும் போதெல்லாம்
உங்கள் மழலைகளின் முகங்கள்.
அதனால்தான்
இப்போதெல்லாம்
செடிகளின் இலைகள்
பழுத்து உதிர்ந்துவிட்டால் கூட
பதறுகிறது நெஞ்சம்.
பார்த்து பார்த்து
வளர்க்கிறேன்.
நாளைப் பூக்கும்
பூங்கொத்துகள்
நான் அவர்களுக்கு
அனுப்பும் வெறும் மலர்க்கொத்துகள்
மட்டுமல்ல.
ஆல்ப்ஸ் மலையின்
பனிக்கட்டியில்
நீர்த்துப் போகாமல்
நெருப்பு மலர்களாய்
நீங்கள் வாழ்ந்ததின் சாட்சியாய்
தலைமறைத் தலைமுறையாய்
அனுப்பிக்கொண்டிருப்பேன்.
என் தொட்டிச்செடிகளின்
வேர்களில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
நமக்கான நம் மண்ணின்
அடையாளம் இருக்கும்வரை.

*
எழுத்தும்
எழுத்து சார்ந்த என் கலகக்குரலும்
என்ன சாதித்துவிட்டது?
என்னைப் புரிந்து கொள்ளாத
மனிதர்களுக்கு நடுவில்
காயங்களுடனேயே
சுமந்து கொண்டு திரிகிறேன்
எனக்கான என் எழுத்துகளை.
மயில்களே இல்லாத
மலைவாசத்தளத்தில்
எங்கிருந்து சேர்த்துவைத்திருக்கிறீர்கள்
என்னையும் என் எழுத்துகளையும்
நேசிக்கும்
உங்கள் மயிலிறகுகளை?

-----------------------------

26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்



26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்
உங்களுக்கான பதில்களும்.
----------------------------------------------------

பெண்கள் சந்திப்பு எப்படி இருந்தது?
> ஓர் இனிய அனுபவம்.
மறக்க முடியாத நிகழ்வு.

நிகழ்வின் சிறப்பம்சம்?
> ஜோடனைகள் விலக்கிய கருத்துச் செறிவுள்ள
அவர்கள் பேச்சுகள்

நிகழ்வில் ரசித்தது ?
> ராஜி அக்காவின் கூஃபி நடனம்தான்!

தவிர்த்திருக்க வேண்டியது?
>என்னைச் சிறப்பிப்பதாக நினைத்து
அரைகுறையாக அவர்கள் வாசித்த என் படைப்புகள் குறித்த அறிமுக உரைகள்தான்! (விமர்சனங்கள்..!!??).
நேரமின்மையைக் கருத்தில் கொண்டு நீக்கியிருந்தால்
நிச்சயமாக வருத்தப்பட்டிருக்க மாட்டேன் என்பதை
அவர்கள் உணரவில்லையே என்பதுதான் என் வருத்தம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு?
>விஜி & றஞ்சிக்கு என் வாழ்த்துகள். எனினும்
> இன்னும் கொஞ்சம் கட்டுக்கோப்புடன் செயல்பட்டிருக்க
முடியும்.
சரியான திட்டமிடலும் நேரம் ஒதுக்குவதும்
வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதும் நிகழ்வை
இன்னும் சிறப்பாக்கும். குறிப்பாக இளந்தளிர் ஆரதி மிகவும் சிரத்தையுடன் தயாரித்து கொண்டுவந்திருந்த
அமெரிக்கா ஆவணப்படத்தை கூட்டம் களைந்த பிறகு
திரையிட்டது போன்ற தவறுகளைத் தவிர்த்திருக்கலாம்.

உங்கள் கட்டுரைகள், பேச்சு எப்படி இருந்தது?
> இந்தக் கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்..!
எனக்கு கொடுக்கப்பட்ட காலவரையறை மீறாமல்
எதைச் சொல்லவேண்டுமோ அதை மட்டும்
சொன்ன நிறைவு எனக்கிருக்கிறது.

நிகழ்வில் உங்களை மகிழ்வித்தது/கவுரவித்தது?
> நிச்சயமாக கைதட்டல்கள் அல்ல. ஊடறு வெளியிட்டிருக்கும் " இசை பிழியப்பட்ட வீணை" மலையக பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு நூலை
ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த ஆழியாள் வெளியிட
நான் முதல் நூலைப் பெற்றதுதான்.

நிகழ்வில் "இதைத் தவிர்த்திருக்கலாம்" என்று எதை
நினைக்கிறீர்கள்?

தனிப்பட்ட முற்போக்கு கருத்து கொண்டவராக தன்னைக்
காட்டிக்கொண்டிருக்கும் பாரிஸில் வாழும் ஓர் எழுத்தாளர்
தன் இளம் மனைவியை விலக்கி வைத்திருப்பதும்
அதற்கான காரணங்களும் அதிக நேரம் பேசு பொருளானதைத் தவிர்த்திருக்கலாம்.
அவர் செயலுக்குப் பெண்கள் சந்திப்பு கண்டனம் தெரிவிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு அடுத்த நிகழ்விற்கு சென்றிருக்க வேண்டும்.

அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
26-வது சந்திப்பு இந்நிகழ்வு. நீங்கள் இருப்பதோ
ஐ.நா.வுக்கு மிகவும் அருகில். எந்த இயக்கமும் அரசியலும்
சாராமல் உங்கள் கருத்துகளை முன்வைக்கும் பட்சத்தில்
உங்கள் தீர்மானங்களை அம்னெஸ்டிக் அமைப்பு,
ஐ.நா.சபையின் மனித வள மேம்பாட்டு அமைப்புகளுக்கு
அனுப்பவதற்கு ஆவண செய்யுங்கள். மொழிப்பிரச்சனையும் இல்லை என்பதால் உங்களால் இதை செய்ய முடியும்.

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
இந்த அமைப்பிலிருந்த தற்போது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத வேறு சில பெண்களும் என்னைச்
சந்தித்தார்கள்.
ஒருவர் முன் நின்று நிகழ்வை நடத்துவதால் எந்த அமைப்பும் அந்த தனிப்பட்ட நபரின்
அமைப்பாகிவிட முடியாது. தனிப்பட்ட கருத்துகள், விருப்பு வெறுப்புகளை விலக்கி எல்லோரும் கலந்து
கொள்ள வேண்டும் என்று வேண்டுதல் விடுக்கிறேன்.
கருத்து வேற்பாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
பல இலட்சம் நம் உறவுகளை விதைத்த யுத்தபூமியின்
ரத்தக்கறைகளைக் கூட அமைதிப் பேச்சு வார்த்தைகளில்
தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் காலத்தில்
தனிப்பட்ட நம் விருப்பு வெறுப்புகளைப் பேசித் தீர்த்துக்
கொள்ள முடியாதா?

பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நிகழ்வின்
உயிர்நாடி அவர்கள் தான்.

--------------------------------------