Tuesday, December 29, 2015

நீ கற்பனையாகவே இருந்துவிட்டுப்போ



நீ இருப்பதாக நான் நினைப்பதெல்லாம் கற்பனையாம்
மருத்துவர் சொல்கிறார்.
 புரியவில்லை சூர்யா.. எதுவும் புரியவில்லை.
கண்கள் குளமாகும் போதெல்லாம் என் அருகில் வந்து
"நானிருக்கிறே..!ன்" என்று கனத்த குரலின் மெல்லிய ஒசை
காற்றில் தவழ்ந்து வருகிறதே..
அதுவும் கற்பனையா சூர்யா?
உன் தோள்களில் தலைசாய்த்து அழும்போதெல்லாம்
தாயின் தாலாட்டு வாசனைக்கு ஈடான
நட்பின் வாசனை என்னைச் சூழ்கிறதே,,!
இதுவும் கற்பனையா சூர்யா?
எனக்கு கற்பனை வியாதியாம்.
கொஞ்சம் ஒருமாதிரி ஆகிவிட்டேனாம்
என்னைப் பிச்சி என்று அடையாளப்படுத்துகிறது
அவர்களின் அறிவியல் உலகம்.
கற்பனைகள் உடையும் போது நானும் உடைந்துவிடுவேன்
பயமுறுத்துகிறது அவர்களின் ஆராய்சி முடிவுகள்..
அப்படியானால் எனக்குள் இருக்கும் நீ..
என்னை உடையாமல் வைத்திருக்கும்
நீ.. நிஜமா ? கற்பனையா? கனவா?
இதோ இந்த  இரவில் தூக்கம் தழுவாத இரவில்
கனவுகள் வர மறுக்கும் இரவில்
உன்னிடம் இறுதியாக சொல்கிறேன் சூர்யா..
அவர்களின் குறிப்புகள் குறித்தக் கவலை எனக்கில்லை.
சூர்யா.. நீ கற்பனையாகவே இரு.
என் கனவுகளில் மட்டுமே வா.
போதும் எனக்கு.
மருத்துவர் சொன்னது உண்மையாகவே இருந்துவிட்டுப்போகட்டும்.
நிஜங்களை நம்பி நம்பி தொலைந்துப்போவதை விட
 என்னைத் தொலைக்காமல் இருக்க
சூர்யா.. நீ கற்பனையாகவே இருந்துவிட்டுப்போ.
என் கனவுகள் நிஜமானவை என்று அப்போதுதான்
அவர்கள் நம்புவார்கள்..

Sunday, December 27, 2015

சத்துணவு திட்டமும் தமிழ்நாடும்




சத்துணவு திட்டம் என்று சொன்னவுடன் எம்ஜிஆரின் நினைவுதான் அனைவருக்கும் ஏற்படும். இத்திட்டத்தை தன்னுடைய கனவுத்திட்டம் என்று தான் எம்ஜிஆர் அறிவித்தார்.
"3 வயது நிரம்பிய நான், என் தாயார், தமையனார் மூவரும் பட்டினி கிடந்தப்போது பக்கத்துவீட்டுத்தாய் முறத்தில் அரிசி கொடுப்பார். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி, சாப்பிட்டிருக்காவிட்டால், நாங்கள் இந்த உலகத்தை விட்டே மறைந்திருப்போம். பசித்தால் அழ மட்டுமே தெரிந்த வயதில், பசிக்கொடுமைக்கு ஆளாகும் அனுபவத்தை நான்
இளமையில் அறிந்ததன் விளைவுதான் இந்தத்திட்டம்" என்று சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்த போது உருக்குமாக சொன்னார் எம்ஜிஆர்.

ஆனால் அதற்கு முன்னரே பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்திருந்தார் என்பதை நாம் அறிவோம். மதிய உணவு திட்டத்தின் வளர்ச்சியாக சத்துணவு திட்டத்தை எவரும் குறிப்பிட்டால், "அதுவேறு, இதுவேறு" என்று வாக்குவாதம் செய்வார்கள் அதிமுகவினர்.
பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்னரே நீதிக்கட்சியின் ஆட்சியில் நீதிக்கட்சியின் தலைவர் பி.டி.தியாகராய செட்டியார் முயற்சியால் 1920 ஆம் ஆண்டு  MID DAY MEALS SCHEME கொண்டுவரப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு
பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தான் முதன் முதலாக இத்திட்டம் அமுலுக்கு வந்தது.
ஒரு மாணவனுக்கு உணவு செலவு ஓர் அணாவை தாண்டக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்ப்ட்டது. இத்திட்டத்த்தினால் அரசாங்கத்திற்கு அதிகச் செலவு ஏற்படுவதாக கருதிய ஆங்கிலேய அரசு இத்திட்டத்தை 1925ல் கைவிட்டது. எனினும் நீதிக்கட்சி தலைவர்களின்
தொடர் போராட்டத்தால் மீண்டும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் வளர்ச்சியாகத்தான் பெருந்தலைவர் காமராசர் 1956ல் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார் எனலாம்.
நீதிக்கட்சிக்கு மட்டுமல்ல, காமராசருக்கும் எம்ஜிஆருக்கும் இத்திட்டம் கொண்டுவந்ததில் பெரும் எதிர்ப்புகள் இருந்தன.
இந்த விவரங்கள் எல்லாம் சத்துணவு திட்டத்தின் படிப்படியான வளர்ச்சி /நிலை .
ஆனால் இச்சத்துணவு திட்டத்தால் தான் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் நுழைவுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தது என்ற செய்தி
இன்று பலர் மறந்துவிட்ட அரசியல் வரலாறாக இருக்கிறது.!

சத்துணவு திட்டம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தக் காலத்தில்
மதுரை மாவட்டத்திற்கு சென்ற ஜெயலலிதா, அங்குள்ள சத்துணவு கூடத்திற்கு காவல்துறை அதிகாரி சகிதம் சென்று சோதனை செய்தார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
 "அரசாங்கத்தின் திட்டத்தை நேரில் சென்று
சோதனை செய்யும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு
 இருக்கிறதா? இவருக்கும் சத்துணவு திட்டத்திற்கும்
 என்ன தொடர்பு? இவர் யார் ..? "
இக்கேள்விகளுக்கு ஓர் அறிவிப்பு மூலம் பதிலடி
 கொடுத்தார் எம்ஜிஆர்.
"சத்துணவு திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினராக ஜெயலலிதாவை
நியமித்திருப்பதாக அறிவித்தார்"
இதுதான் "ஜெ" வுக்கு எம்ஜிஆர் கொடுத்த முதல் , முக்கியமான அங்கீகாரம்.
இதிலிருந்து தான் "ஜெ" யின் அரசியல் நுழைவு தீவிரமாகி ..




Friday, December 25, 2015

அஜயா.. ஆட்சி அதிகாரத்தின் இன்னொரு சரித்திரம்





கைகளில் சதா வில்லும் அம்புமாக திரியும் வேட்டைக்காரனுக்கு
மரத்தில் இருக்கும் பறவையின் கண்கள் மட்டுமே தெரியும்.
ஆனால் இயற்கையை ரசிக்கும் கலைஞனுக்கு
காதலைக் கொண்டாடும் கவிஞனுக்கு
பற்வைகளின் கூட்டிலும் கிளையிலும் தனனையே தரிசிக்கும்
அன்பனுக்கு வெறும் பறவையின் கண்கள் மட்டுமே எப்படி
தெரியும்? அவனுக்கு மரத்தின் கிளையில் இருக்கும் இணைப்
பறவைகளைப் பார்க்கும் போது காதல் கட்டாயம் தெரிந்திருக்கும்.
அதனூடாக அவன் ஜீவராசிகளின் ஆன்மாவைத் தரிசனம் செய்திருப்பான்.
இயற்கையின் பிரபஞ்சம் அவனுக்குள் ஆகாயமாய் விரிந்திருக்கும்.
அவன் கலைஞன், அவன் உயர்ந்த மனிதன்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே கற்றுக்கொடுக்கும்
துரோணாச்சாரிய குருகுலத்தில்
அவன் கடைமாணக்கனாக ஒதுக்கப்பட்டவன்.
துரோணாச்சாரிகளுக்குத் தேவை போரும் போரில் கிடைக்கும்
வெற்றியும் ஆட்சி அதிகாரங்களும் தான்.
அவர்கள் வேட்டைக்காரனையே உருவாக்குவதில்
அன்று முதல் இன்றுவரை அயராது உழைக்கிறார்கள்.
பறவையைக் கொன்றவனையே கொண்டாடும் கலாச்சார
சீரழிவை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.
பானுமதியின் சுயோதனன் (துரியோதனன்) தூற்றப்படுவதும்
காண்டீபம் கொண்டாடப்படுவதும் வெறும் கதையல்ல.
போர் சமூகத்தின் இன்னொரு முகம் தான்..
*
மீன் கூடைக்காரி. சதா மீன் மணக்கும் குடிசையில் வாழ்பவள்.
சதயவதியின் வயிற்றுப்பிள்ளைகள் தான் குரு வம்சத்தினர்.
அதுவும் சத்யவதி தன் மகன் இறந்தப் பின் தன் மருமகள்களின்
கருவறைத் திறக்க தன் முதல் மகன் வியாசனை, அதுவும் திருமண உறவு இன்றி அவள் அஸ்தினாபுர அரசனை மணப்பதற்கு முன் பிறந்த தன் வயிற்று மகன் வியாசனை அழைக்கிறாள். அந்த வியாசன் வழி குரு பரம்பரையில் வந்தவர்கள் தான் திருதராஷ்டிரன், பாண்டூ, விதுரன்
மூவரும். அப்போதெல்லாம் மீனவர் குலப் பெண்ணை, ஒரு சூத்திரப்பெண்ணை அரசியாக ஏற்றுக்கொண்ட அரண்மனையும் அஸ்தினாபுர சமூகமும் அடுத்த தலைமுறைக்கு வரும்போது சாதிப்பிரிவின் உச்சத்தில் வாழ்கிறது. கர்ணன் தேரோட்டியின் மகன் என்பதாலேயே அங்கதேசத்து அரசனான பின்னரும் ஒதுக்கப்படுகிறான.
சுயோதனன் கர்ணன் நட்பு சாதி சமூகப்பின்னணியில்
வைத்து இன்னும் பேசப்பட வேண்டிய இன்னொரு மகாபாரதக்கதை.
**
கேரளாவில் மாளநடா கோவில், பொருவழி கிராமத்தில் இன்றைக்கும்
அக்கோவிலின் வழிபாடு தெய்வமாக பவனி வருகிறான். 100,000 மக்களுக்கு மேல் அனைத்து சாதியினரும் கூடுகிறார்கள் அவனைக் கொண்டாட.
அக்கோவில் துரியோதனனால் கூர்வ குலத்து (தாழ்த்தப்பட்ட சாதி) பெண்ணுக்கு கொடுக்கப்ப்ட்டது. அதனாலேயே இன்றும் அக்குலத்தவரே அக்கோவிலின் முதல் மரியாதைக்குரியவர்களாக இருக்கிறார்கள்.
இக்கோவில் சம்ப்ந்தப்பட்ட கதை : துரியோதனன் வனவாசம் சென்ற பாண்டவர்களைத் தேடி தென் திசை வருகிறான். பசியால் வாடிய அவன் வழியில் ஒரு பெண்ணிடம் தண்ணீர் கேட்கிறான். அவளும் தண்ணீர் என்று சொல்லி அவனிடம் புளித்துப்போன காடியை கொடுத்து பருகச் சொல்கிறாள்.
அவன் அஸ்தினாபுரத்து அரசிளங்குமரன் என்று தெரிந்ததும் அச்சம் கொண்டு தனக்கு தண்டனைக் கிடைக்கும், அதுவும் சாதியில் தாழ்ந்த தன் கையால்
அவனுக்கு காடி கொடுத்த பாவத்திற்கு சிரச்சேதமே செய்யப்படும் என்றும் அவளுக்குத் தெரியும். இருந்தும் தன் சாதி அடையாளத்தை மறைக்காமல்
சொல்கிறாள். அரசனோ "பசியும் தாகமும் சாதியற்றவை. " என்று
மறுமொழி சொல்கிறான். "தண்டனைகளைப் பற்றி எண்ணாமல் என் தாகம் தீர்த்த தாய் நீ" என்று கொண்டாடுகிறான். அக்கிராமத்தவருக்கு கோவில் கட்ட நிலம் தானமாய் வழங்கிச் செல்கிறான். அக்கோவிலில்
க்டவுள் சிலை இல்லை. அவனையே தெய்வமாக அவர்கள் கொண்டாடுகிறார்கள்" என்று சொல்கிரார் ஆனந்த் நீலகண்டன்.
***
அசுரா எழுதிய புனைவுகளின் தொடர்சியாக
ஆனந்த் நீலகண்டன் எழுதி இருக்கும் AJAYA, EPIC OF THE KAURAVA CLAN,
roll of the dice .. முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதிலும் குறிப்பாக
தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு "அஜயா" புனைவுகளின்
ஊடாக கொண்டு செல்லும் இடமும் சங்கமிக்கும் புள்ளிகளும்
முக்கியமானவை.

Thursday, December 17, 2015

இப்படியும் தீர்ப்பு சொல்லலாம்ம்ம்ம்ம்ம்


ஆகமவிதிகளின் படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று
உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது.
அதே நேரத்தில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக
அரசு கொண்டுவந்த சட்டத்தையும்  ரத்து செய்யவில்லை.
ஆகமவிதிகளின் படி அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்றால்
எல்லோரும் அர்ச்சகராக முடியாதே..!!
அடடா.. இப்படியும் கூட தீர்ப்பு சொல்ல முடியுமா.?
**
ஆகமவிதிகளை மீறுவதே இல்லையா இந்துமதக் காவலர்கள்?
டிசம்பர் 31 நள்ளிரவில் கோவில் திறந்திருக்கிறது . ஆகமவிதிகளின் படி
அர்த்தஜாம பூஜை நடந்தப்பின் மறுநாள் அதிகாலையில் தான் நடை
திறக்க வேண்டும். இடையில் எக்காரணம் கொண்டும் நடை திறக்க
அனுமதி இல்லை.
 ஆங்கில புத்தாண்டை முன்வைத்து கூடும் பக்தர்கள் கூட்டத்தின்
மூலம் கிடைக்கும் வருவாயைக் கண்டு ஆகமவிதிகளைக் காற்றில்
பறக்கவிடும் இந்துமதக் காவலர்கள், இந்த அர்ச்சகர் விஷயத்தில் மட்டும்
ஏன்..?
**
ஆகமவிதிகளுக்கும் இந்திய சட்டத்திற்கும் என்ன தொடர்பு?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் போது அச்சட்டத்தின் சொல்லப்பட்டவை மட்டுமே சட்டமாகவில்லை, அதற்கு முன்பிருந்த சட்டங்களும் வால் போல ஒட்டிக் கொண்டே வந்தன. அந்த வால் வலிமையானது என்பதை உணர்ந்த பாபாசாகிப் அம்பேத்கர்  சட்டத்தில் மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டிருக்கும் வர்ணாசிரம தர்மம்,
சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றும் வரிகளை நீக்க இந்து சட்ட வரைவை முன்வைத்தார்.
(Dr. Ambedkar as chairman of the constitutuon drafting committee was aware that those who prepared the first draft of the constitution in 1947 had cunningly enjoined provisions to protect Varunashrama dharma and traditional customs and usages. with an aim to defeat their purpose , Ambedkar presented the amendment in the form of the
"Hindu code bill " in 1947, that all the laws which were in force till date of adoption of the Indian constitution will stand abolished)
ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அவர் தோல்வி அடைய யார் யார் காரணமாக இருந்தார்கள்
என்பது ஒரு பெரிய கதை..அதை அறிந்தால் தலைவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும்
இதெல்லாம் என்னவோ பரம ரகசியம் இல்லை.
இந்த நாட்டில் பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் பாதிபேருக்கு
வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். சிலருக்குத் தெரிந்தும்
தெரியாமல் இருப்பது போலவே இருப்பதில் அதிக பாதுகாப்பு இருக்கிறது. இதைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.
இலவசங்களில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் பேசவோ
அல்லது சிந்திக்கவோ நேரமில்லை. பெரியார் தொண்டர்களில் ஆனைமுத்து அவர்கள்
மட்டுமே இக்கருத்தை முன்வைத்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்.

***
இன்றைக்கும் நிறுவனமயமான கோவில்களில் அர்ச்சகராக
மட்டுமே இந்தக் கோர்ட், வழக்கு வாய்தா எல்லாம்!
ஆனால் நம்ம ஊரு முனியாண்டி,
மாடசாமி, இசக்கி அம்மன் கோவில்களில் சூத்திர பஞ்சம பூசாரிகள் தான்.  இது ஏன்?
**
இந்த நாட்டில் கடவுள்களுக்கும் சாதிகள் உண்டு.
திருப்பதி பாலாஜி
திருச்செந்தூர் முருகன்
திருநெல்வேலி மாடசாமி
சாதிப்படிநிலையின்  அடையாளங்கள்.

Wednesday, December 16, 2015

ரொம்ப லேட்டா குடைப் பிடிக்கிற "ஜெ"

-

"எனக்கென்று தனிவாழ்க்கை கிடையாது
எனக்கு எல்லாமும் தமிழக மக்கள்தான்'
தமிழக முதல்வர் "ஜெ" வாட்ஸ் அப்.

350பேர் மழைக்குப் பலியாகி, கருமாதி எல்லாம்
செய்தாகிவிட்டது. இப்போது தமிழக முதல்வர்
நான் இருக்கிறேன், உங்களை மீட்டெடுக்கும் தேவதையாக
என்று சொல்வது ஒரு சினிமா மாதிரிதான் இருக்கிறது.
இரண்டரை மணிநேரம் தியேட்டரில் அடி, உதை, சண்டை,
கடத்தல், கண்ணீர் என்று கதையை ஓட்டி கடைசி காட்சியில்
"சுபம்" என்று போட்டு முடிக்கிறமாதிரி இருக்கிறது.
ஜெ வின் இந்த வசனம் ரொம்ப லேட்.

சென்னை நிலையத் தகவல் படி , வெள்ளம் "ஜெ" க்கு
எதிரான விளைவுகளையே கொடுக்கும் என்றே தெரிகிறது.
சென்னை மட்டும் தமிழகம் அல்ல என்ற எண்ணம் சிலருக்குண்டு.
ஆனால் டி,வி,யின் புண்ணியத்தில் இம்முறை சென்னைவாசிகள்
மழையில் பட்டப்பாட்டை ஒட்டுமொத்த தமிழகமும் கண்டது.
இயற்கைப்பேரிடர் வருவதைத் தடுக்கும் அதிகாரமோ சக்தியோ
எந்த அரசுக்கும் கிடையாது என்ற அடிப்படை உண்மை தெரியாதவர்கள்
அல்ல தமிழக மக்கள். அவர்கள் எதிர்ப்பார்த்தெல்லாம் விரைவாக
இயங்கும் ஓர் அரசு எந்திரத்தை.
ஆனால் தண்ணிரைத் திறந்துவிடுவதிலிருந்து காணொளியில்
கட்டிடம் திறப்பது வரை எல்லா வாசல்களில் சாவிக்கொத்தும்
"ஜெ" வசம் இருப்பதுதான் பிரச்சனை. அதிகாரிகள் எளிதில் அணுகும்
முதல்வராக ஜெ இருந்தாரா? இருக்கிறாரா?
"ஜெ"வின் இக்குணாதிசியம் தமிழக மக்களை ஓர் இக்கட்டான
சூழலில் எவ்வளவு பாதித்திருக்கிறது!
வெங்காய விலை கூட நம் நாட்டில் தேர்தலின் வெற்றி தோல்விகளைத்
தீர்மானித்திருக்கும் போது.. இந்த ம்ழை வெள்ளம் மட்டும் பாதிக்காதா
என்ன?
இப்படி மழை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்க்கும் என்பது
தெரிய வேண்டியவர்களுக்குத் தெரிந்திருந்தால்.. பாவம்..
தெருத் தெருவாக சைக்கிள் விட்டிருக்க வேண்டியதில்லைதான்

Monday, December 14, 2015

ந்நோ பீப் பீப்ப் ..கெட்டவார்த்தை பேசுவோம்


அண்மையில் சமூக வலைத்தளங்களில்  நாறு நாறாக கிழிந்துக் கிடந்த பீப் பீப் ..
காகிதங்களை ஓரளவு ஒட்ட வைத்து வாசித்தப்போது
கோபம் வந்தது உண்மை. ஆனால் கொலைவெறி அளவுக்கு அல்ல.
"கெட்டவார்த்தை பேசுவோம்" என்ற தலைப்பில் பெருமாள் முருகன் மணல்வீடு சிற்றிதழில் எழுதியிருந்த கட்டுரைகளைத் தொடராக வாசித்திருக்கிறேன்.
(புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது) நாட்டுப்புற வழக்கில் சர்வசாதாரணமாக சில வார்த்தைகள் கோபத்தில் வெளிவரும். அச்சொல் கோபத்தின் உச்சத்தைக் காட்டும்.
சிற்றிலக்கியம் என்று பாரதிக்கு முந்திய காலக்கட்டத்தில் படைக்கப்பட்ட தமிழ் இலக்கியத்தில் பெண் காமப்பசி தீர்க்கும் நுகர்ப்பொருள்.காளமேகப்புலவரின் சிலேடை வெண்பாக்கள் இந்த கெட்டவார்த்தை ப்பேசுவோம் விஷயத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன. சிறுகதைகளில் புனைவுகளில் கெட்டவார்த்தைகள்
பேசுவதாலேயே நவீன எழுத்தாளர்களாக தங்களை முத்திரைக் குத்திக் கொண்டவர்கள் உண்டு.
அப்போதெல்லாம் எவரும் அதை விமர்சனப்படுத்தியதில்லை.
கறுப்பு சிவப்பு சித்தாந்தவாதிகளும் இதில் விதிவிலக்கல்ல.
சினிமாக்களில் உதயசூரியனை முலைக்கவசமாக அணிந்து தன் கதாநாயகிகளுடன் வலம் வந்தார் எம்ஜிஆர். இன்றைய முதல்வர் ஜெ அவர்களை அவருடைய அரசியல்
ஆட்சியை விமர்சிப்பதைவிட அவர் ஒரு நடிகையாக இருந்தவர் என்பதையும் அவர் பெண் என்பதையும் முன்னிலைப் படுத்தி விமர்சிக்கும் அரசியல்வாதிகளைத்தான் தமிழகத்தில் பார்க்கிறோம். தமிழ்க்கலாச்சாரத்தில் பொற்காலம் என்று போற்றப்படும் சங்க இலக்கியத்தில்( கலித்தொகை) அடுத்தவன் மனைவியை அதுவும் சேரநாட்டு அரசியை
அவள் அல்குல், முலை குறித்த வர்ணனைகளுடன் பாடி இருக்கும் புலவனும் இருக்கிறான்.
ராஜ்கெளதமன் இம்மாதிரி வர்ணனைகள் ஒப்பீட்டளவில் சேரநாட்டு பெண்களைப் பற்றி அதிகமாகவும் பாண்டியநாட்டு பெண்கள் குறித்து குறைவாகவும் இருப்பதாக சொல்கிறார்.
பாரதக் கலாச்சாரத்தில் பெண்ணின் பதிவிராத தன்மையைக் கொண்டாடும் மண்ணில் யு டூயுப் தளத்தில் பாலான பாலான படங்களும் பாடல்களும் இந்திய மொழிகள் அனைத்திலும் மலிந்து கிடக்கின்றன. அப்போதெல்லாம் அதைப் பார்த்தும் பார்க்காமல் போன நாம்
இன்று எதற்காக இவ்வளவு ஆத்திரப்படுகிறோம்?
ஆத்திரப்படுவதைக் கேள்வி கேட்பதாலேயே அப்பாடலை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தமல்ல. நான் அறிய விரும்புவது.... சினிமாவில் வசனத்தில் பாடல்களில்
சிற்றிலக்கியத்தில் நவீன இலக்கியத்தில் விளம்பரத்தில் .. பெண்ணை எப்படி அவர்கள் பார்த்து வளர்ந்தார்களோ அப்படித்தான் அவர்கள் பெண்ணைப் பற்றியும் அவள் உடல் பற்றியும் உணர்வுகள் பற்றியும் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிர்மலா கொற்றவை அவர்கள்
இப்பாடல் குறித்து ஆத்திரத்துடன் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். வாசித்தேன்.
அவருடைய கருத்துகள் அனைத்திலும் உடன்படும் நான்.. இப்படி ஒரு ஆண்மகனை பெற்று வளர்த்தற்காக அவன் தாயை/சகோதரிகளை கேள்வி கேட்பதும் ஏன்? என்றுதான்
புரியவில்லை. எவனும் கெட்டுப்போனால், சமூகம் ஏற்றுக்கொள்ளாத விஷயத்தை
செய்தால் அதற்கு ஏன் அவனைப் பெற்றவளை, ஒரு பெண்ணை குறை சொல்ல வேண்டும்?
அவனுடைய செயலுக்கு அவன் தாய் எப்படி பொறுப்பாவாள்? அதிலும் குறிப்பாக
ஆணின் பாலியல் சார்ந்த உணர்வுகள், கற்பனைகள், கருத்துகள் அனைத்திற்கும் தாய் மட்டும் காரணமல்ல, அவனைச் சுற்றி இருக்கும் சமூகம்தான் காரணம்.
அதைப்பற்றி எதுவும் பேசாமல் சகித்துக் கொண்டிருந்தோமானால், இதைப் பற்றியும்
எதுவும் பேசாமல் இருந்துவிட வேண்டியது தானே? ஏன் முடியவில்லை.
குழந்தைக்குச் சொட்டு மருந்து கொடுப்பதற்கு கூட ஒரு நடிகர்/நடிகையை வைத்து மட்டுமே விளம்பரப்படம் எடுக்கும் பொதுப்புத்தியின் பிரதிபலிப்பு தான் இதுவும்.
ஆமாம்.. எனக்கொரு சந்தேகம்..
வார்த்தைகளில் கெட்டவார்த்தை /நல்லவார்த்தை இருக்கிறதா..?

Wednesday, December 2, 2015

அரசாங்கத்தைக் குறை கூறிம் தருணம் அல்ல இது


அரசாங்கத்தைக் குறை கூறும் தருணம் அல்ல இது.
பேய்மழையில் தாக்கமும் அழிவும் சென்னை மாநகரைப்
புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நண்பர்களே..

ஆட்சி செய்பவர் ஜெ வா க. வா என்பதல்ல பிரச்சனை
யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை அரைநூற்றாண்டுகாலம்
மாறி மாறி இவர்கள் தான் ஆட்சி செய்துக் கொண்டிருந்தார்கள்!
அழிவுக்கான காரணத்தையும் கொஞ்சம் பொறுத்து ஆராய்வோம்.
(எல்லாம் நமக்குத் தெரிந்தக் காரணங்கள் தான். ஆனால் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான்)
இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் இத்தருணத்தில் களத்தில்
நிற்கும் அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் பாராட்டுவோம்.
இளைஞர்களே.. அவர்களுக்கு கரம் கொடுங்கள்.
பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை, இவர்களுக்கு
இணையாக இத்தருணத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து
வெள்ளத்தில் இறங்கி இராப்பகலாக வேலை செய்யும் மாநகராட்சி
ஊழியர்கள் , அதிலும் குறிப்பாக மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள்.
அனைவரையும் போற்றுவோம், பாராட்டுவோம்.
அவர்களுக்கும் மனைவி மக்கள் என்று குடும்பம் இருக்கிறது.
அக்குடும்பமும் இதே மழையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அவர்கள் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் களத்தில் நிற்கிறார்கள்.
அவர்களை வணங்குகிறேன்.
# Following the torrential downpour that has resulted in severe flooding of Chennai and its nearby districts, Tamil Nadu government today issued an advisory to private undertakings to declare holiday for their employees on December 3 and 4.
# Tamil Nadu Chief Minister J Jayalalithaa to make aerial survey of flood-hit Chennai, Kanchipuram and Tiruvallur districts.
# Vodafone is offering pre-approved 'chota credit' of Rs.10 in wake of heavy rains in the Tamil Nadu to all pre-paid customers and a credit of 10 minutes for Vodafone to Vodafone calling.
# Chennai airport to remain shut till December 6: AAI
# Chennai has been declared disaster zone. Army has been deployed. Army Helpline is now open @ 9840295100
# All IndiGo flights operating to and from Chennai have been suspended for tomorrow (December 03).
# More than 150 people evacuated by Indian Coast Guard. 23 personnel and 2 officers in 4 boats engaged in rescue.
# NDRF says the life saving count is at 529.
# The Air Force Station & the Navy airfield too are unusable because of standing water
# I have spoken to Tamil Nadu CM, all details are being worked out and all possible help will be provided: Health Minister JP Nadda
# OP Singh, Director General of NDRF: Already dispatched 15 teams on Tuesday. They are deployed in various parts. Already rescued 400 people in the last 24 hrs. Dispatching more teams from Delhi and Bhubaneswar and Patna on Wednesday. A total of 22 NDRF teams will be there. If the need arises, we can bring more teams from Guwahati. Teams are carrying boats, divers, swimmers, life jackets. These boats are effective in urban flooding. Traffic, power and communication breakdown remain top challenges in the rescue operations.
# Home Minister Rajnath Singh will make a statement in both the houses of the Parliament on Chennai Floods on Thursday.
# Home Minister Rajnath Singh spoke to Chief Minister of Puducherry Sh. Rangasamy regarding the flood situation there. MHA is closely monitoring the flood situation in southern states.
# BSNL will not charge for calls in Chennai due to heavy rains.
# The Home Minister will hold a high level meeting to look into whatever support needs to be sent to Chennai. We need to extend moral support to people in Chennai. Many people are stranded in the airport: Venkaiah Naidu
# 33-34 aircraft grounded at Chennai airport. 66 arrivals and 53 departures cancelled from 8 PM on Tuesday till 12:30 PM.
Water from nearby Adyar river has left the airport inundated. Passengers being evacuated. NOTAM (notice to airmen) has been issued till 6 AM on Thursday to not fly. After that the situation will be reviewed.
Boundary wall has been breached. 20 pumps have been put at the airport but until the water flow doesn't reverse the problem will not be resolved
CNS (Communication Navigation System) instruments have been shut down. Once water recedes we will inspect their workability.
Till Wednesday morning 1,500 passengers were stranded and 2500 others like groundstaff. But most of them have been now evacuated.





Friday, November 27, 2015

சிற்பி விருதும் கவிஞர்களும்



பரிசுகளோ விருதுகளொ ஒரு படைப்பாளனின் படைப்புக்கான மதிப்பீடல்ல
என்றாலும் கவிதை எழுதும் என் நண்பர்கள் அனைவரும்
சிற்பி விருது பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
காரணம் கவிஞர் சிற்பி அவர்கள் ஒரு படைப்பாளனுக்கு கொடுக்கும்
அங்கீகாரமும் மரியாதையும். சிற்பி பரம்பரை பணக்காரர். எனவே அவரால்
மிகச்சிறப்பாக சிற்பி விருது நிகழ்வை நடத்த முடிகிறது என்று உங்களில் பலர்
சொல்லக்கூடும். ஆனால் அவரைப்போல வசதியானவர்கள் வழங்கும்
விருது நிகழ்வுகளில் விருது பெறும் படைப்பாளனின் இடம் எப்படி
இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்கும் போது தான்
சிற்பியின் சிறப்பு நமக்குப் புரியும்.

முதலில் விருது பெறும் படைப்பாளரின் வருகையை உறுதி செய்வார்.
கோவையில் இறங்கியவுடன் படைப்பாளர் தங்குவதற்கான ஏற்பாடுகள்
கச்சிதமாக செய்யப்பட்டிருக்கும். நிகழ்வுக்கு முன் அதிகாலையில்
தன் விருந்தினர்களை நேரில் வந்து சந்தித்து வசதிகள் குறித்து
அக்கறையுடன் விசாரிப்பார். காலை உணவு அவருடைய இல்லத்தில்.
அழைத்துச் செல்ல கார் ரெடியாக இருக்கும். அவர் இல்லத்தில் அவர்
குடும்பத்தினரே தயாரித்த காலை டிபன்.. சுடச்சுட.. அவர் வீட்டினர்
பரிமாறுவார்கள். அதன் பின் ஹாலில் அவர் விருந்தினர்கள் அனைவருடனும்
ஒரு குட்டி உரையாடல் நடக்கும். விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காரில் விழா நடக்கும் அரங்கத்திற்கு அழைத்துச் செல்ல
ஏற்பாடாகி இருக்கும். விழா அரங்கில் விருது பெறும் படைப்பாளர்கள்,
சிறப்பு விருந்தினர்,, விருது வழங்குபவர் அமர்ந்திருக்க நிகழ்வு தொடங்கும்.
ஒவ்வொரு விருது பெறுபவர் குறித்த குறிப்புகளுடன் கவிதைகளும்
இடம் பெற்ற வண்ணத்தில் அச்சிடப்பட்ட கையேடு வழங்கப்படும்.
அவ்விழா சிற்பியின் புகழ்ப்பாடும் விழாவாக இல்லாமல்
விருது பெறும் எழுத்தாளருக்கு முழுக்க முழுக்க சிறப்பு செய்யும்
நிகழ்வாக மிக செம்மையாக திட்டமிடப்பட்டு நடத்தப்படும்.
விருது பெறும் ஒவ்வொரு படைப்பாளரும் ஏற்புரை வழங்க
போதிய நேரமும் எழுத்தாளர் தன் மனதில் பட்டதைப் பேசுவதற்கான
முழு சுதந்திரமும் இருக்கும்.
நிகழ்வின் இறுதியில் தலைவாழை இலைப்போட்டு திருமண வீடு போல
பந்தி நடக்கும். கோவை எப்பொதுமே எழுத்தாளர்களின் கூடு.
பலர் வந்திருப்பார்கள். சந்திப்புகள், ஸ்நேகம் வளர்க்கும் புன்னகைகள்..
தொடரும்.
..............


 சிற்பி விருதுகளில்
நம் படைப்புகள் மட்டுமே அங்கே முன்னிலை வகிக்கும்.
நம் சாதி, மதம், இனம், வாழ்விடம் இதெல்லாம் கண்டு கொள்ளப்படுவதில்லை.
(விருதுகளில் இவை எல்லாம் கண்டு கொள்ளப்படுகிறதா என்று என்னிடம்
எதிர் கேள்வி கேட்காதீர்கள். ப்ளீஸ் ..)
விருதுகளில் வழங்கப்படும் கேடயமோ, பரிசுத்தொகையோ, ஆடம்பரமான
மேடையோ ஒரு படைப்பாளனுக்கு பொருட்டல்ல. அவனும் அவன் படைப்பும்
அவ்விருது மேடையில் பெறும் இடம் ரொம்பவும் முக்கியமானது.
2006 ல் நிழல்களைத் தேடி கவிதை நூலுக்கு சிற்பி கவிதைப் பரிசு கிடைத்தது.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் கவிஞர் சிற்பி அவர்களுக்கு சொல்லாத
நன்றியை இவ்வளவு காலம் கடந்து சொல்கிறேன்...
என் ஆசை எல்லாம் என் நண்பர்களும் கவிதைக்கான சிற்பி விருது பெற வேண்டும் என்பது தான்.

 நன்றி சிற்பி. 

Sunday, November 8, 2015

எஸ்.ரா.வின் உப பாண்டவம்





-இன்னும் எத்தனை பாண்டவர் கதைகள் களம் கண்டாலும்
அத்துனை பார்வைகளுக்கும் இடம் கொடுக்கும் பெரும் சமுத்திரமாக
மகாபாரதக்கதை விரிகிறது.
எஸ்.ராவின் உபபாண்டவம் புனைவிலக்கிய உத்திகளின் உச்சம்.
கதைகளைத் தானே உருவாக்கி கதைமாந்தர்களைப் படைக்கும் எழுத்தாளனுக்கு அக்கதையும் அக்கதையை நகர்த்தி செல்லும் சம்பவங்களும் முன்னுரிமை பெறும்.
ஆனால் மகாபாரதம் போன்ற அனைவரும் அறிந்தக் கதையை மறுவாசிப்பில்
தன் படைப்புக்குள் கொண்டுவரும் எழுத்தாளனுக்கு கதையோ நிகழ்வோ
முன்னுரிமை பெற வேண்டிய அவசியமில்லை. கதையை மாற்றவோ அல்லது
கதைப் போக்கை தீர்மானிக்கவோ வேண்டிய அவசியமும் இல்லை.
அதனால் தான் தெரிந்தக் கதையில் தெரியாத பக்கங்களை நாம் அறியாத முகங்களை வெளிச்சப்படுத்திவிடும் வித்தையை செய்துவிட முடிகிறது.
எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் வெளிச்சப்படுத்தும் மாந்தர்கள்
மகாபாரதக் கதையில் உள்வட்டதை விட்டு விலகி நிற்கும் கதை மாந்தர்கள்.
விதுரனைப் போலவே பணிப்பெண்ணுக்குப் பிறந்த திருதராஷ்டிரனின்
மகன் விகர்ணன் அஸ்தினாபுரத்தின் அரண்மனையில் தொடரும்
விதுரன்களை நோக்கி நம் பார்வையை நகர்த்துகிறான்.


மயன் பாண்டவர்களுக்காக கட்டிக்கொடுத்த இந்திரபிரஸ்த மாய மாளிகை
மகாபாரதக்கதையில் குரு வம்சத்தின் அழிவுக்காக திட்டமிடப்பட்டே கட்டப்படும் ஆதிவாசியின் சாபம்.
பாஞ்சாலி துகிலுரியப்பட்டதையும் குருஷேத்திரத்தில் பாண்டவர்கள் வெற்றியையும்
" தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்றே
எப்போதும் போதிக்கப்பட்டு வந்திருக்கிறோம். தர்மம் வென்றதாகவே இருக்கட்டும்,
ஆனால் ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சியை காவு கொண்டுவிட்ட வெற்றியாகவே
பாண்டவர்களின் வெற்றி.
கதைப்போக்கில் பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரி பாண்டு இறந்தப்பின் தீயில் விழுந்து உடன்கட்டை ஏறுகிறாள். அதற்கான காரணங்களை  நோக்கி கதை நகரும் போது
பாண்டவர்களின் தாயாக கடைசிவரை மகாபாரதக்கதையில் உயிர்ப்புடன் வாழும் குந்தி எதிர்மறை பாத்திரமாக மாறிவிடுகிறாள்.
தம்தம்  சகோதரியின் பிள்ளைகளுக்காக சகுனியும் வாசுதேவனும்   போராடுகிறார்கள், அவரவர்களுக்கான நியாயங்களுடன்.

பாஞ்சாலி துகிலுரியப்பட்டதில் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க கெளரவர்களின் மனைவியர் 100 பெண்களும் விதவைகளாக. !
தன் நூறு புத்திரர்களைப் போரில் இழந்த சோகத்தை விட
காந்தாரிக்கு தன் புத்திரர்களின் விதவை மனைவியரை
 எதிர்கொள்வதில் ஏற்படும் சோகம்.
அதை தவிர்க்க விரும்பும் காந்தாரி.. இன்னொரு முறையும்
 மகாபாரதக்கதை மறுவாசிப்பு செய்யப்படலாம்.
 அக்கதையில் துரியோதனின் மனைவி பானுமதி பேசினால்.. ..
அல்லது திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி பேசினால்..
மகாபாரதக்கதை வாசகனை மட்டுமல்ல,
ஒவ்வொரு படைப்பாளரையும் கூட
மீண்டும் மீண்டும் தனக்குள் கரைத்துக் கொள்கிறது.


Monday, November 2, 2015

அண்டைமாநிலங்களுடன் சுமுகமான உறவு - திமுக


அண்டைமாநிலத்தவரை அரவணைத்து சென்றது திமுக"
என்று உண்மையை ரொம்பவும் வெளிப்படையாக
கிருஷ்ணகிரியில் நேற்று பேசி இருக்கிறார் ஸ்டாலின் அவர்கள்.
நமக்கு நாமே தானே ,
 இதில் என்ன ஒளிவு மறைவு வேண்டி இருக்கிறது?
என்று நினைத்திருப்பாரோ?
திமுக அண்டைமாநிலங்களுடன் ரொம்ப ரொம்ப சுமுகமான
உறவு நிலை வைத்திருந்தது தானே பிரச்சனையே! 

ஏன் இவ்வளவு சுமுகமான உறவு வைத்திருந்தார்கள்
என்று பொடிப்பசங்க கூட தேடிப்பிடித்து வாசிக்க ஆரம்பிப்பார்கள்...
இதெல்லாம் தேவைதானா? ப்ளீஸ்..
எதுவும் பேச வேண்டாம்.. 
உங்களுக்குப் பிடித்தமான உடைகளில்
சைக்கிள் விடுங்கள்.. சந்தைக்குப் போங்கள்,
 வருகிறவர் போகிறவர்களிடம் ஜாலியாகப் பேசுங்கள்.
 டீக்கடையில் சூடா டீயும் போண்டாவும் சாப்பிடுங்கள்.
ஆட்டோவில் உட்கார்ந்து போங்கள்,
நின்று கொண்டே போங்கள்.. 
டிராக்டர் ஓட்டுங்கள். தேவைப்பட்டால் லாரி கூட ஓட்டலாம்.
 விடியல் பயணம் கலர்புஃல்லா இருக்கட்டும்!!

Comment

Tuesday, October 27, 2015

வலைப்பதிவர் போட்டியில் நடுவராக ..



அண்மையில்  (11 oct 2015)புதுக்கோட்டையில் நண்பர்கள் கணினி வலைப்பதிவர் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திக்காட்டினார்கள்.
 அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெண்முன்னேற்றம் குறித்த கட்டுரைகள் - பகுதிக்கு நடுவராக இருக்கும் பொறுப்பை
ஏற்றுக்கொண்டேன்.
அந்த அனுபவம் எனக்கு சில கருத்துகளை எழுதியே ஆக வேண்டிய
நிலைக்குத் தள்ளி இருக்கிறது என்பது தான் உண்மை.
போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகள் மொத்தம் 39.
தனித்தனியாக வாசித்தும் அதன்பின் என் முடிவுகளைத் தீர்மானிப்பதற்கு முன் மொத்தமாக ஓரிரவில் உட்கார்ந்து ஒட்டுமொத்த
39 கட்டுரைகளையும் வாசித்தேன்.
 ஒரு நடுவராக என் கருத்துகள், மதிப்பெண்கள்
குறித்த என் விமர்சனங்களையும் சேர்த்தே அனுப்பியிருந்தேன்.

.
* பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் " என்ற
மகாகவி பாரதியின் வரிகளை 98% கட்டுரைகளில் வாசித்தேன்.
இந்த வரிகளை வெறும் மேற்கோளாக காட்டிவிட்டால் மட்டுமே
பெண்முன்னேற்றம் குறித்து எழுதிவிட்டதாகிவிடுமா?
 எட்டாவது வகுப்பு படிக்கும்போது எங்கள் தமிழ் வாத்தியார்
 சொல்லுவார்.. ஒரு திருக்குறள், அத்துடன் பாரதி/பாரதிதாசன்
இவர்களுடன் சேர்ந்து திருவிக, மு,வ, இவர்களின் பொன்மொழிகள்
 என்று கட்டாயம் கட்டுரையில் இருக்க வேண்டும் என்றும்
 அதற்கு மதிப்பெண் உண்டு என்றும் சொல்லி இருக்கிறார்..
ஆனால் இன்று அதே வரிகளை எடுத்துக்கொண்டு மறுவாசிப்பு
செய்கிறோம்.
அக்காலச்சூழலில் அவர்கள் சொன்னதை
இன்றைய பெண்ணிய தளத்தில் உரசிப்பார்க்கிறோம்.
இந்த மறுவாசிப்புக்கு அதிக வாசிப்புகள் தேவை.
அம்மாதிரியான வாசிப்புகள் இன்று அருகிப்போய்விட்டன என்பதையே
போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகள் வெளிப்படுத்தி இருந்தன.
எதையும் நுனிப்புல் மேய்வது என்பதுடன் நம் தேடல் முடிந்துவிடுகிறதா?
என்ற ஐயப்பாடு இக்கட்டுரைகளை வாசித்தப்பின் ஏற்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்யும் போது
 இன்றைய காட்சி ஊடகத்தின்
மிகப்பெரிய தாக்கமாகவே இதைப் பார்க்கிறேன்.
கட்டுரைகளின் ஊடாக அவர்கள் வெளிப்படுத்தி
 இருக்கும் கருத்துகள்
பெரும்பாலும் பட்டிமன்றத்தில் அவர்கள் கேட்ட கருத்துகள்/
 நீயா நானாவில் கேட்டவை என்பதைத் தாண்டி பயணிக்கவில்லை.
பட்டிமன்ற கருத்துகளையோ நீயா நானா விவாதங்களையோ மட்டுமே
குற்றம் சொல்லிவிடமுடியாது.
 அக்காட்சி ஊடகத்தில் சில அரிதான  கருத்துகள்
எப்போதாவது  வெளிப்படத்தான் செய்கின்றன.
 ஆனால் அதைக் கேட்டப்பின்,அது குறித்த அடுத்தக் கட்ட தேடல்
 முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
கணினி யுகம் இன்று நமக்கு எண்ணற்ற தகவல்களை ஒரு "க்ளிக்"கில்
நம் பதிவுக்கு கொண்டுவந்து விடுகின்றன. அத்தகவல்களின் பின்னணி,
அது குறித்து வெளியாகி இருக்கும் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள்,
பல்கலை கழக கருத்தரங்குகள், அரசின் சட்ட திட்டம், அரசின் நிலைப்பாடு,
இப்படியாக ஒரு தொடர் தேடல் இருந்தால் மட்டுமே தரமான கட்டுரையை
ஒருவர் கொடுக்க முடியும்.
கட்டுரை வெறும் தகவல் களஞ்சியம் அல்ல,
கட்டுரைக்கு தகவல் என்பது சொல்ல வரும் கருத்தை வலுப்படுத்தவோ
அல்லது அதை மையமாக கொண்ட அடுத்த கட்ட பயணத்திற்கான
பாதையாகவோ இருக்க வேண்டும்.
வாசகனுக்கு முடிந்தால் ஒரு புதுத் தகவலைக் கொடுக்க வேண்டும்.
கட்டுரையை வாசித்து முடித்தப்பின் வாசகனை அடுத்தக்கட்ட
தேடலுக்கு இழுத்துச் செல்லும் வீரியமிக்கதாக இருக்க வேண்டும்.
கட்டுரையில் சொல்லப்படும் தகவல்கள் நம்பகத்தன்மையுடன்
இருப்பது மிகவும் அவசியம்.
புனைவு மட்டுமல்ல இலக்கியம் ,
அ-புனைவுவும் இலக்கியம் தான். இரண்டுக்குமே வாசிப்பு
வாசிப்பு  வாசிப்பு.. அவசியம்.
அதைவிட முக்கியம் நாம் எதை வாசிக்கிறோம் என்பதும்
அதை எப்படி தெரிவு செய்கிறோம் என்பதும் தான்.
நடக்கும் துணிவிருந்தால் கடக்கும் தூரம் அதிகமில்லை.

Friday, October 9, 2015

வைரமுத்துவின் "காதல்கொலை"



வைரமுத்து எழுதிய 40 சிறுகதைகளின் தொகுப்பு நூல்
 நாளை (சனிக்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. 
கலைஞர் வெளியிடுகிறார்.
தன்னுடைய கதைகள் குறித்து அக்கதைகளை எழுதியவர்
 என்ற முறையில் ஒரு படைப்பாளியாக
 எதை வேண்டுமானாலும் வைரமுத்து அவர்கள் சொல்லிக்கொள்ளட்டும்.
 
வார்த்தைகளை தங்க நாணயம் போல
 செல்வழித்ததாக சொல்லட்டும்.
ஜெயகாந்தன் வாழ்ந்த இறுதி ஆண்டில்
 இவர் கதைகள் எழுத ஆரம்பித்ததால் 
தன்னை ஜெயகாந்தனின் வாரிசாக
 பட்டா போட்டு பதிவு செய்து கொள்ளட்டும்
.
கவுரவக்கொலைகள் என்று தப்பாக உச்சரிக்கப்படும்
 காதல்கொலைகள் (முதல் இலங்கை இனப்படுகொலை வரை 
எழுதி இருக்கிறேன் )" 
என்று சொல்லி இருப்பது விவகாரமாக இருக்கிறதே!
என்ன சொல்ல வருகிறார் வைரமுத்து அய்யா அவர்கள்?
கவுரவக்கொலைகளை காதல் கொலைகளாக்கி இருக்கிறாரா?
அல்லது காதல்கொலைகள் கவுரவக்கொலைகளாக 
திரிக்கப்பட்டு தப்பாக உச்சரிக்கப்பட்டு விட்டதற்காக
 கொதித்துப் போயிருக்கிறாரா?
எரியும் பிரச்சனைகளை எழுதி இருக்கிறேன் 
என்று சொல்லும் அய்யா வைரமுத்து அவர்கள்
 எதை எதில் எரித்து இருக்கிறார் என்று தெரியவில்லையே!

Wednesday, September 30, 2015

வட்டிவிகித குறைப்பு.. யாருக்கு லாபம்?




My name is Raghuram Rajan, and I do what I do
There has been pleading demands and threats
(for a  rate cut).. Everybody and his uncle has a theory
on how to run the economy.. There are savants and
idiot savants available to give you advice...

இப்படியான பஞ்ச் டயலாக் வசனங்களுடன் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு
இன்றைய தினசரி (ஆங்கிலம்) பத்திரிகைகளில் ஹீரோவாக
வலம் வருகிறார் இந்திய ரிசர்வவங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.
பொதுவாக 25 பைசா வட்டி விகிதக்குறைப்பு இருக்கும். ஆனால்
ரகுராம் 50 பைசா வட்டிவிகிதத்தைக் குறைத்துவிட்டதாக
அறிவித்தவுடன் நம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்களும்
அவசரம் அவசரமாக இந்த வட்டிவிகிதத்தின் பயன்பாடு வங்கி
வாடிக்கையாளருக்கு/பொதுமக்களுக்கு  உடனடியாக போய்ச்சேர
வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
பொதுஜனங்களுக்கு இதனால் என்ன பயன்? என்ற கேள்விக்கு
எவருமே நேரடியாக பதில் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும்
புரிந்து கொள்ளும்படி சொல்வதே இல்லை!
அதாவது இனிமேல் வங்கிகள் வழங்கும் கடன் தொகைக்கான வட்டிவிகிதம்
50 பைசா குறைகிறது. அதாவது நீங்கள் வீட்டு லோன் வட்டிவிகிதம்
9.50% என்றால் இனி வங்கிகள் 50 பைசா குறைத்து 9% வட்டியை
உங்களிடம் வசூலிக்கலாம். அதனால் உங்கள் கடனுக்கான மாத தவணையும்
குறைகிறது. இப்படியாக housing loan, car loan. domestic purpose loan, house repairing loan, study loan என்று நாம் வங்கியில் வாங்கும்
கடனை ஊக்குவிக்கும் வகையில் இந்த வட்டிவிகிதக் குறைப்பு..
அதாவது எல்லோரும் கடன் வாங்குங்கள், நீங்கள் கடன் வாங்கிக்கொண்டே
இருந்தால் தான் நுகர்வோக் மார்க்கெட்டில் வெளிநாட்டினர் தங்கள் பணத்தைக் கொண்டுவருவார்கள். ரியல் எஸ்டேட் என்ற பெருமுதலாளிகள்
தங்கள் கறுப்பு பணத்தைக் கொட்டி பெருநகரங்கள் எங்கும் அடுக்குமாடிக்
கட்டிட குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். 30 லட்சத்திற்கும்
குறைவான முதலீடு செய்து கட்டப்படும் அடுக்குமாடி ஒரு வீட்டின் விலையை அவர்கள்  1.25 கோடி விலை நிர்ணயித்திருக்கிறார்கள். அப்படி
அவர்கள் கட்டிப்போட்டிருக்கும் வீடுகள் வாங்குவதற்கு ஆளில்லாமல்
அப்படியே இருக்கின்றன. அதை எல்லாம் இனி இந்த வட்டிவிகித
குறைப்பு ஆசை யில் அந்த விளம்பரங்களில் பொதுமக்கள் வாங்க வேண்டும்.
அப்படி வாங்கும் போது சிமெண்ட் முதல் எலெக்ட்ரிக் பல்ப் வரை வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும். மார்க்கெட் தேக்கநிலையிலிருந்து
மீளும். நினைவிருக்கிறதா... ஜப்பானில் சுனாமி தாக்கியதில் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மனநிலையில் அவர்கள் பொருட்கள் வாங்கும் அளவைக் குறைத்துக் கொண்டார்களாம். உடனே ஜப்பானிய அரசாங்கம்
தன் மக்களிடம் கேட்டுக்கொண்டது.. எப்போதும் போல பணத்தைச் செலவு
செய்யுங்கள்.. அப்போதுதான் நாட்டின் பொருளாதரம் சீராக இருக்கும் என்று.
ஓர் அரசாங்கம் தன் மக்களை அதிகமாகக் கடன் வாங்கச் சொல்வதும்
செலவு செய்யச் சொல்வதும்  நம் நாட்டில் கார்ப்பரேட்டுகள் தவிர
அனைத்து மக்களுக்கும் நுகர் கலாச்சாரத்தின் எதிர்விளைவுகளை மட்டுமே
கொடுக்கும். அதன்பின், நம் நிதியமைச்சர்கள் இந்தியப் பொருளாதரம்
அமெரிக்க பொருளாதரம் போன்றதல்ல, எம்மக்கள் சேமிக்கும் மனப்பான்மைக் கொண்டவர்கள். என்றெல்லாம் ஆபத்து வரும்போது
பேசுகின்ற பெருமைகள் காலாவதியாகிவிடும்.
இந்த வட்டிவிகிதக்குறைப்பில் பொதுஜனங்களுக்கு கிடைக்கும்
ஆதாயம் என்பது கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை.
ஏனேனில் அவர்களின் கடன் தொகைக்களுக்கான வட்டிவிகிதம்தான்
குறைந்திருக்கிறதே தவிர அவர்களின் வைப்பு நிதிகளுக்கான வட்டிவிகிதம்
கூடவில்லை. மாறாக அதுவும் குறைகிறது.
அதாவது ஒருவர் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வாங்கும் கடனுக்கு வட்டி குறைவதால்
அவர் வங்கிக்கு கொடுக்கும் வட்டித்தொகையும் குறையும். அதே நேரத்தில்
அவர் தன்னுடைய சிறுசேமிப்புகளுக்கு
(PPF, Fixed deposit, recurring deposit, post  office savings accout,
NSC, )
இதுவரை வங்கி./ போஸ்டாபீஸ்களிலிருந்து வாங்கிக்கொண்டிருந்த வட்டித்தொகையும் குறைக்கப்படுகிறது!!!!
இதனால் பெரும்பாதிப்புக்குள்ளாவது மாதச்சம்பளம் வாங்கும் சாதாரண
பொதுமக்கள் தான்.
பொதுஜனம் வாங்கும் கடன் அதிகபட்சமாக 1 அல்லது இரண்டு கோடிகள்
இருக்கும். ஆனால் கார்ப்பரேட்டுகள் வாங்கும் கடன் குறைந்த தொகையே
100 கோடி இருக்கும். எனவே இந்த வட்டிவிகிதக் குறைப்பு
யாருக்கு அதிக பயன்பாட்டைத் தரப்போகிறது?
உங்களுக்கும் எனக்குமா ..? அல்லது ரிலையன்ஸ், லோதா,
ஹீரநந்தானி , டாடா, டோஸ்தி இத்தியாதி ரியல் எஸ்டேட்
பெருமுதலைகளுக்கா?
அவர்கள் சந்தையில் கொண்டு நிரப்பும் கார், வீடு, வீட்டு
பொருட்கள் எல்லாம் வாங்க பொதுஜனத்திற்கு கடன் கொடுக்கப்படுவதால்
மார்க்கெட் ஓஹோ என்று ஜொலிக்கும்.

மாடு வாங்க லோன் கேட்டால்
மாட்டேன் என்றவர்கள்
காரு வாங்க லோன் கொடுக்க
காத்துக்கிடப்பார்கள்..

ரகுபதி ராகவ ரகுராமா..
மோதி ராஜா ரகுராமா..

Tuesday, September 15, 2015

முமபை குண்டுவெடிப்பு தீர்ப்புநாள்..

மும்பை குண்டுவெடிப்பு - தீர்ப்புநாள்
-------------------------------------
குண்டுவெடிப்பில் மகனை இழந்த என் உறவினர்
மனம் திறக்கிறார்கள்..நானும் தான்..

2006 ஜூலையில் மும்பையில் மின்சாரவண்டிகளில்
தொடர்குண்டுவெடிப்பு .. அச்சம்பவத்தில் குற்றவாளிகளாக
அடையாளம் காட்டப்பட்டிருக்கும் 12 பேருக்கு
இன்று தீர்ப்புநாள்.
அவர்கள் குற்றவாளிகளா இல்லையா
உண்மையான குற்றவாளி யார் ..?
எய்தவன் இருக்க அம்புகளை உடைத்து என்ன பயன்?
இம்மதக்கலவரங்களுக்கு வித்திட்டது யார்?
எண்ணிலடங்கா கேள்விகளுக்கு நடுவில்
அக்குண்டுவெடிப்புல் தன் ஒரே மகனைப் பறிகொடுத்த
எங்கள் குடும்பத்தின் (கணவர் சங்கரின் அண்ணன் ம்கள் வழி பேரன் - பிரபு)
திரு இராமசந்திரன் - சுசிலா இணையர் இன்றைய தினத்தந்தி நாளிதழில்
(மும்பை பதிப்பு)
"கொலைக்கு கொலை தீர்வாகாது.
தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை வேண்டாம்.
குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கொடுத்தாலும்
எங்கள் மகன் எங்களுக்குத் திரும்ப கிடைக்கப்போவதில்லை"
என்று முதல் முறையாக மனம் திறந்து தங்கள் கருத்தைப்
பதிவு செய்திருக்கிறார்கள்.

அன்று பேரன் பிரபுவின் கடைசிக்காரியங்கள் அனைத்தும்
முடிந்தப் பின் போரிவலியிலிருந்து டிரெயினில் பயணித்த
என் அனுபவம்.. இன்றும் அந்தக் கண்கள் ..
என்னைப் பின் தொடர்கின்றன..


அந்த இசுலாமிய சகோதரனின் கண்கள்
என்னிடம் பேசிய அந்த மவுனத்தின் மனக்குரலை.
போரிவலியில் கொட்டும் மழையில் டிரெயினுக்காககாத்திருந்தோம்.
போரிவலியிலிருந்து கிளம்பும் வண்டி. கூட்டம் அதிகமில்லை.
ஏறியவுடன் பக்கத்திலிருந்தவரைப் பார்க்கிறேன்.
தலையில் வெள்ளை நிற தொப்பி,இளம்தாடி,
நீண்ட வெள்ளைக் கலர் குர்த்தா மிரண்ட கண்கள்,இளைஞன் அவன்..

அவனருகில் , அன்று நானிருந்த மனநிலையில்
பக்கத்தில்  உட்கார முடியவில்லை. ,
மின்சாரம் பாய்ந்தது போல உடனே எழுந்து 
வேறு இருக்கைக்குப் போய்விட்டேன். 
அவன் விழிகள் அன்றுஎன்னிடம் கேட்ட கேள்விகள் பலகோடி.
என்னையும்
என் அறிதல், புரிதல், எழுத்து
எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது அவன் பார்வை.
கிழிந்து போனது நானும்என் எழுத்துகளும்
என் மனித நேயமும்.
அத்தருணத்தில்
என்னிலிருந்த மிருகம் என்னைத் தின்ற காயங்களின் வடு
இந்தப் பிறவியில் ஆறாது.

இத்தீர்ப்பு நாளில் தீர்ப்பு எப்படி வரப்போகிறது..
எனக்குத் தெரியாது.
ஆனாலும் இதோ இத்தருணத்தில்
முகவரி அறியாத அந்த இளைஞனிடம்
நான் மன்னிப்பு கேட்கிறேன்..
உன் அருகாமையை விலக்கி எழுந்த அத்தருணத்தில்
என்னை நீ பார்த்தப் பார்வை.. 

கண்ணீரில் கறையாத இரத்தக் கறைகளுடன்
,தண்டவாளத்திலும் தண்டவாளத்திற்கு வெளியிலும்.
இழப்புகளுக்காக அழும்போதெல்லாம்
அந்த இளைஞனின் அந்தக் கண்கள்
என்னருகில் வருகின்றன..
எதையோ சொல்ல வருகிறது..
அந்த மெளனத்தை நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
(இதைப் பற்றிய விரிவான பதிவு செய்திகளின் அதிர்வலைகள் என்ற
என் புத்தகத்தில் ..)

Thursday, September 10, 2015

எழுத்து அறக்கட்டளை அழைப்பிதழ்



நூ ல்  வெளியீட்டுக்கு வாருங்கள் நண்பர்களே 

Sunday, September 6, 2015

எழுத்தாளர் இமயமும் நீலிமாவும்




அரசியல் சமூகப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்படும் படைப்புகள் அப்பிரதேசத்தின் மக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கும்.
அவ்வகையில் அண்மையில் வாசித்த இரு புதினங்கள் மிகவும்
முக்கியமானவை. ஏனேனில் இக்கதைகளின் கருப்பொருள் கற்பனையோ பொழுதுப்போக்கோ அல்ல. சமகால் சமூக அரசியல் பின்புலமும் கருப்பொருளும் கொண்டு எழுதப்பட்டவை. 
கோட்டா நீலிமா ஆங்கிலத்தில் எழுதிய shoes of the dead
பெருகிவரும் விவசாயிகளின் தற்கொலையைப் பற்றி பேசுகிறது.
 இன்னொரு புத்தகம் எழுத்தாளர் இமயம் தமிழில் எழுதிய சாவுச்சோறு.
தலித்திய கதைக்களத்தில் இன்றைய சாதி சமூகத்தை முன்வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 

நீலிமா விவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை
விவசாயிகளின் வாழ்வியலிலிருந்து விலகி ஒரு பார்வையாளராக ஓர் ஆய்வாளராக பார்க்கிறார். அப்பார்வை ஒரு மூன்றாம் மனுஷியின் பார்வை. அதனால் தான் விவசாயி கதை மாந்தரின் உணர்வுகளுக்குள் வாழ்வதும் அதை அனுபவிப்பதும் அவருக்கு சாத்தியப்படவில்லை.
ஆனால் பெண் கதை மாந்தர்களைக் கொண்டே  சாவுசோறு கதையை எழுதி இருக்கும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு
அப்பெண்கள் அனுபவிக்கும் சாதிக்கொடுமையும், அவர்கள் பிரச்சனையும் அழுகையும் பெருமூச்சும் அவருக்குள் இருந்து எழுதிச் செல்கின்றன.
படைப்பு ஓர் உன்னதமாகிவிடுகிறது இதனால் தான்.
ஆனாலும் நீலிமாவின் நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் எட்டி இருக்கும் பரந்துப்பட்ட வாசக தளத்தை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச்சிறந்த இக்கதை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஒரே காரணத்தினால்
தமிழ்நாட்டுக்குள் மட்டுமே ..
பூங்கோதைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவர்கள் அல்லர்.
அவர்களின் பிரச்சனைகளும் தான்.
 (இரு கதைகளையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை புதியகோடங்கிக்கு அனுப்பி இருக்கிறேன்.)

Saturday, September 5, 2015

ஏன்..? ஏன் இந்தப் பதட்டம்!!







திமுக வட்டத்தில் ஏன் இந்தப் பதட்டம்?
இன்னும் தேர்தல் வரவில்லை. கூட்டணிக்கான காலம் கனியவில்லை.
கருத்து கணிப்பு எப்பொதும் போல நடப்பது தானே.
அதற்கு ஒரு பதில் சொல்லிவிட்டு அமைதியாக 
அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்க வேண்டியதுதானே.
 ஏன் இவ்வளவு பதட்டம்?
யார் இம்மாதிரி ஒரு பதட்ட நிலையை உருவாக்குகிறார்கள்.?
மீடியாக்காரர்களை குறை சொல்லாதீர்கள்.
 அவர்கள் எங்கே தேன்வழியும்,புறங்கையால் நக்கலாம் என்று அலைவதாகவே வைத்துக் கொள்வோம்.
ஏன் உங்க கட்சி, உங்க வீட்டு பிரச்சனையை நீங்களே 
ஆள் ஆளுக்கு ஊதி ஊதி உடைக்கறீங்க!
இந்தியா முழுவதும் இருக்கும் சகல அரசியல் கட்சிகளிலும், சிறியது, பெரியது என்ற வேறுபாடின்றி வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் திமுக வைப் போல வாரிசு அரசியலுக்குள் போட்டி அரசியல் 
வேறு எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.
சொல்லக்கூடும் எல்லோருமே மதுரைக்கார பெரிய அண்ணன் தான் காரணம் என்று.
மதுரைக்காரர் இப்படித்தான் சொல்வார் என்று வரிப்பிசகாமல் அன்றாடம் செய்தி கேட்கும்/வாசிக்கும் பொதுஜனம் அறிந்ததுதானே. மேலும் அவர் தற்போது திமுக
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அவர் சொல்வதற்கு இவர்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
திமுக தலைவரின் மகன் என்பதாலா?
திமுக என்ற பல இலட்சம் தொண்டர்களைக் கொண்ட அரசியல் கட்சி ,கலைஞர் குடும்பத்தின் அசையா சொத்தா.?.
வாரிசுகளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க!
இந்தப் பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்துதான் இவர்கள் பேசுகிறார்களா ?
என்ற பதட்டத்தில் தற்போது திமுக அனுதாபிகள்!!
. அவர்களைப் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது..
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் டி கே எஸ் இளங்கோவன் அவர்களின் பேட்டியைப் பற்றி கருத்து சொன்ன திமுக தலைவர் அவர்கள்
"டி.கே.எஸ். இளங்கோவன் கூறியோ, கூறாமலோ, அந்த ஆங்கில நாளேடு அதனைப் பெரிதாக வெளியிட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
என்ன சொல்ல வருகிறார் திமுக தலைவர் ? டி கே எஸ் இளங்கோவன் கூறாதாதையும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அவர் சொன்னதாக சொல்கிறதா? டி கே எஸ் இளங்கோவன் கூறியதுடன் கூறாததும் அப்பேட்டியில் இருக்கிறது என்று சொல்ல வருகிறாரா..! 
இது எவ்வளவு ஆபத்தானது..
இதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா தான் பதில் சொல்லி ஆக வேண்டும்!
மேலூம் திமுக தலைவரும் செயலாளரும் சேர்ந்து ஏன் கருத்து கணிப்பில் திமுக வில் மட்டும் இரண்டு பேரின் பெயர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன என்று கேட்கிறார்கள். இன்னும்  ஒரு படி மேலே போய் அதிமுக வில் இருமுறை பதிலி முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அவர்களின் பெயரையும் அதிமுக முதல்வர் வேட்பாளர் கருத்துகணிப்பில் ஏன் சேர்க்கவில்லை
என்று கேட்கிறார்கள். இருவருமே இப்படி சொல்வதைக் கேட்கும் போது 'அசத்தப்போவது யாரு' மாதிரி இருக்கு..
பாவம் பன்னீர்செல்வம்.. இம்மாதிரி எல்லாம் அதிமுக வில் ஒரு கனவு கூட வந்திருக்காது.
அதெல்லாம் விடுங்கள்.. முகநூலில் கூட THALAPATHY FOR CM என்று தளபதியின் ஆதரவாளர்கள் ஒரு கணக்கு ஆரம்பித்து இயங்கிக் கொண்டிருப்பது தளபதிக்கு தெரியாதா என்ன?
ஏற்கனவே திமுக தலைவர் கலைஞர் தான் திமுக வின் முதல்வர் வேட்பாளார் என்றால் அதை அடிக்கடி தன் வார்த்தைகளால் தளபதி அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் 
என்றால்.. எதற்காக தளபதி முதல்வர் என்ற கருத்து பரப்புரை நடந்துக் கொண்டிருக்கிறது.?
எனக்கு இதெல்லாம் தெரியாது என்றும் பதட்டத்தில் சொல்லிவிடாதீர்கள்.
உங்கள் தொண்டர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அதன் அடுத்தவரி வாசிக்கப்படும் என்பதையும் நீங்கள் சொல்வதற்கு முன்பே நினைவுப்படுத்திவிடுகிறேன்.
ப்ளீஸ்.. பதட்டப்படாதீர்கள்.. வேறு எங்களால் என்ன சொல்லமுடியும்?

Friday, September 4, 2015

மீண்டும் மீண்டும் மகாபாரதம்

மீண்டும் மகாபாரதம்
------------------------------



விஜய் டிவியில் மீண்டும் மகாபாரதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அது என்ன மீண்டும் மகாபாரதம்..?
இது அதே மகாபாரதமா அல்லது வேற மகாபாரதமா?
சரி, மீண்டும் மகாபாரதம் தொடர் முடிந்தவுடன்
மீண்டும் மகாபாரதம் ஒலிபரப்பினால் ..
"மீண்டும் மீண்டும் மகாபாரதம் " என்று சொல்வார்களோ..

பிறகென்ன..
கருத்து கணிப்பு மீண்டும்  மீண்டும் வரும்போதெல்லாம்
மீண்டும் மீண்டும் மகாபாரதம் நடக்கத்தானே செய்கிறது..!
நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

இத்துடன் இந்த மகாபாரதத்தை முடித்துக்கொள்கிறேன்.
யாரு துரியோதனன், யாரு தருமர் , யாரு கிருஷ்ணர்,
யாரு பீஷ்மர், யாரு விதுரன், யாரு அர்ச்சுணன்..
இப்படி எல்லாம் நீங்க கேட்க ஆரம்பிச்சிட்டா..
நான் என்ன பண்றது..?!!!
மீண்டும் மகாபாரதம்.. திங்கள் முதல் வெள்ளிவரை..
கதையும் வசனமும் ஏற்கனவே தெரிந்ததுதான் என்பதால்
மீண்டும் மீண்டும் மகாபாரதம் அரங்கேறும்போது
எந்த் டென்ஷனும் இல்லாம..
மீண்டும் மீண்டும் மகாபாரதம் பார்க்கலாம்.

Tuesday, September 1, 2015

MANJIHd , THE MOUNTAIN MAN





இத்திரைக்கதை ஓர் உண்மைக்கதை.
மான்ஞ்சி நாம் வாழ்ந்தக் காலத்தில் வாழ்ந்தவன்.
ஒரு மலையை ஒரு தனிமனிதன் தன் மனைவியின் அகால
மரணத்திற்குப் பின் தனியாக உடைத்து எடுக்கிறான்..
ஏற்கனவே இதைப்பற்றி நான் முகநூலில் பதிவு செய்திருக்கிறேன்.
தசரத் மன்ஞ்சியாக நடித்த நவஷுதின் சித்திக் மிகச் சிறப்பாக
நடித்திருக்கிறார். குறிப்பாக மன்ஞ்சி மக்களின் பேச்சுமொழி,
உடல்மொழி ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருப்பது
பாராட்டுதலுக்குரியது. அவன் மனைவியாக பகுனியா பாத்திரத்தில்
நடித்திருக்கும் ரத்திகா அப்தே அம்மண்ணின் பெண்முகத்தைப்
ப்ரதிபலிக்காமல் ஒரு பாலிவுட் கதாநாயகி முகத்தையே
காட்டி , முதல் குளறுபடியைச் செய்திருக்கிறார் இயக்குநர்.

கதைத் துண்டு துண்டாக , ஒரு காட்சியிலிருந்து இன்னொரு
காட்சிக்கு தாவி இருக்கிறது. ஒப்பனை, காட்சி அமைப்பு என்று
கவனம் செலுத்த வேண்டிய பகுதியிலும் கவனம் செலுத்தவில்லை
இயக்குநர் கேத்தன் மேக்தா.

சினிமா பார்த்தப்பிறகு சில காட்சிக்ள் எதற்காக, எந்த
நோக்கத்திற்காக கதை ஓட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது
என்ற கேள்வி பார்வையாளருக்கு ஏற்படுகிறது

காலில் செருப்பு கூட அணிவதற்கு தடை செய்யப்பட்ட
சாதிய அமைப்பு கொண்ட கிராமத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட
சாதிப் படிநிலையில் வாழ்கிறான் கதையின் நாயகன் மான்ஞ்சி.
அவன் மனைவியை ஊர் சந்தையில் வைத்து பண்ணையாரின்
மகன் கேலி செய்து நெருங்கும் நேரத்தில் மான்ஞ்சி திரைப்பட
கதாநாயகர்களுக்கு உரிய அதே அந்தஸ்த்துடன் ஓடிவந்து
மனைவியின் கையைப் பிடித்து இழுத்துவனை அடித்து உதைக்கிறான்.
அதற்கு பலிவாங்க, அவன் அன்றிரவு அடியாட்களை அழைத்துக்கொண்டு
இவர்கள் குடியிருப்புக்கு வந்து தசரத மான்ஞ்சி யைத் தேடுகிறான்.
அவன் அண்ணனை இழுத்துப்போட்டு அடிக்கிறான். மான்ஞ்சி அப்போது
மனைவியுடன் ஊடல் கொண்டு இருவரும் குடியிருப்புக்கு பின்னால்
இருக்கும் மலையடியில் ஓடிப்போய் ஊடல் தீர்க்கிறார்கள்..
ஆனால், வீட்டில் மான்ஞ்சி இல்லை என்று சொன்ன இன்னொருவனின்
மனைவியை அவர்கள் இழுத்துப் போகிறார்கள், அன்றிரவு பெண்டாள.
மறுநாள் விடியும் போது அவள் குளத்தில் பிணமாக மிதக்கிறாள்.
மனைவியின் உடலைத் தூக்கிக்கொண்டு வீட்டுககு வரும் மான்ஞ்சியின்
நண்பன்,, இறந்துப்போனவளின் உடலை வீட்டுக்குள் வைத்துவிட்டு
வெளியில் வந்து அந்த குடிசை வீட்டுக்கு தீ வைக்கிறான்.
அவனும் தீ போல கிளம்பி செல்கிறான்.
கதை விறுவிறுப்பாக இருக்கிறது. சாதிக்கொடுமை, அதனால் பாதிக்கப்படும்
பெண்கள் என்று இந்தியாவின் சாதிய முகத்தை, கிராமங்களில் இன்றும்
நிலவும் சாதிப்படிநிலையை, ஆண்ட சாதிகளின் ஆணவத்தை
இக்காட்சி மனதில் பதிய வைக்கிறது.
ஆனால் இக்காட்சியின் தொடர்ச்சியாக கதையின் பிற்பகுதியில்
வரும் வசனம் நெருடலாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாஞ்சியின்
நண்பன் தான் அந்த ஊருக்குள் ஊடுருவும் நக்சலைட்டாக
இருக்கிறான். தன்னையும் தன் மக்களையும் கொடுமைப்படுத்திய
பண்ணையாரை இழுத்து வந்து துப்பாக்கி முனையில் ஊர் மக்கள்
நடுவில் தூக்கிலிடுகிறான். அப்போது கதையின் நாயகன் மூலமாக
நக்சலைட்டுகளை நோக்கி ஒரு வசனம்..
"உன் துப்பாக்கியால் என்ன செய்யமுடியும்?
மலையைப் பிளந்து ரோடு போட முடியுமா ? " என்று கேட்கிறது.
(யாரைத் திருப்திப்படுத்த இந்த வசனமோ?)

பாதிக்கப்பட்டவர்கள் தான் தீவிரவாதத்தை முன்னெடுக்கும் நக்சலைட்டுகளாக  மாறி இருக்கிறார்கள்
என்ற அடிப்படை கருத்தை விளக்க வந்த ஒரு கதாபாத்திரத்தை
நோக்கி கதையின் நாயகன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதன்
மூலம் சமூக மாற்றங்களுக்கு எடுக்கப்படும் தீர்வுகளும்
வழிமுறைகளும் கேலிக்குரியதாகிறது. காந்தியின் அஹிம்சை,
சாத்வீக முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது
என்ற கருத்தை வலியுறுத்த இப்படி சொல்வதாக வைத்துக்
கொண்டாலும் கதையில் அதற்கான தேவை இல்லை.

மாஞ்சியின் காதலை ஒரு சமுக மாற்றத்திற்கான அடையாளமாக,
ஒரு தனிமனிதன் ஒரு மலையையே பிளந்து சாலை அமைக்க
முடியும் என்றால் மனிதர்கள் சேர்ந்து சாதி என்ற பெருமலையை
உடைப்பதும் தகர்ப்பதும் பிளந்து அதனூடாக பாதை அமைத்து
பயணிப்பதும் சாத்தியம் தான் என்று குறியீடாகி இருக்க
வேண்டிய காட்சிகளை எப்போதுமே திரைப்படங்கள்
காட்டுவதற்கு தயங்குகின்றன.
ஒடுக்கபப்ட்ட மான்ஞ்சியின் தன் வரலாற்று கதை கூட
ஒரு காதலின் அடையாளமாக குறுகிப்போயிவிடுகிறது.

தசரத்மாஞ்சி மலைப் பிளந்தது காதலுக்காக மடடும்தான்,
அதை வர்க்கப் போராட்டமாகவோ சாதியத்திற்கு எதிரான்
போராட்டமாகவோ பார்த்துவிடக் கூடாது என்பதில்
இன்றைக்கும் எல்லோரும் கவனமாகத்தான் இருக்கிறார்கள்.



Saturday, August 8, 2015

போங்கடா..



பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை
நேரில் சென்று பார்த்தார். இச்செய்தியை "லைவ்"
ஆக ஒளிபரப்பும் தொலைக்காட்சி தன் நிருபரிடம்
கேட்கிறது..
"எதைப் பற்றி அவர்கள் பேசுவார்கள்?

மதுவிலக்கு, முல்லைபெரியாறு, மீனவர் பிரச்சனை
என்று தமிழ்நாட்டின் பிரச்சனைகள் குறித்து
முதல்வர் பிரதமுருடன் பேசுவாரா?

இப்படியாக கேள்விகள் தொடர்கின்றன.

எனக்குப் புரியவில்லை.. அவர்கள் என்ன பேசுவார்கள்
என்பதை எப்படி ஒரு தொலைக்காட்சி நிருபர் அறிந்திருக்ககூடும்?

சரி, இதெல்லாம் போகட்டும்..
இச்சந்திப்பை தொலைக்காட்சிகள் இன்னும் கேவலப்படுத்திவிட்டன.

மோடி, உடல்நலமில்லாத துக்ளக் ஆசிரியர் சோ அவர்களையும்
நேரில் போய் சந்தித்தார். அதில் எநத உள்நோக்கமும் கற்பிக்கப்படவில்லை.
இதில் மட்டும் ஏன்?

சந்தித்தவர்கள் அரசு அதிகாரத்தின் தலைமைப் பீடத்தில் இருப்பவர்கள்
என்பதால் மட்டுமா?
அப்படியானால் இன்றுவரை மன்மோகன்சிங்க் அவர்கள் பிரதமராக
இருக்கும் போது சோனியாகாந்தி அவர்களை எத்தனை முறை
சந்தித்து இருப்பார்? எவராவது அதைப் பற்றி தவறாகப் பேசி
இருக்கிறோமா? இல்லையே. அப்படி நினைப்பது கூட எவ்வளவு
அருவெருப்பாக இருக்கிறது.
ஆனால் இன்று தமிழக முதல்வர் ஒரு பெண் என்பதால் மட்டுமல்ல,
அவர் அந்தக் காலத்து சினிமா நடிகை என்பதால் மட்டுமே
என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று அதிகபப்டியான
சலுகையை எடுத்துக் கொண்டு, கேவலமாக பேசி வருகிறார்கள்
சிலர்.


அறுபது வயதைக் கடந்துவிட்ட ஒரு பெண்ணை ..
இவ்வளவு கேவலமாக பேசும் எவரையும்
அவனைப் பெற்ற தாய் கூட மன்னிக்க மாட்டாள்..
.

ஜெ வுடன் எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு.
பிஜேபி , மோடி .. கேட்கவே வேண்டாம்.
அடிபப்டை கொள்கை ரீதியாகவே நான் முரண்படுகிறேன்.
ஆனால் அவர்களின் சந்திப்புகளைக் கொச்சைப்படுத்தும்
கேவலத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்.

போங்கடா .. 

Tuesday, July 28, 2015

அப்துல்கலாம் என்ற தனிமனிதனைப் போற்றுகிறேன், ஆனால்..



எதைச் சொல்லமுடியாமல் தவித்தேனோ அதை இப்பதிவு
நயத்தக்க நாகரீகத்துடன் பதிவு செய்திருக்கிறது. மறைந்த அப்துல்கலாம் அவர்களின் தனிப்பட்ட ஒழுக்கம், எளிமை, தமிழ்ப்பற்று,மாணவர்களுக்கு அவர் கொடுத்த தன்னம்பிக்கை, அறிவியல் மீது அவருக்கு இருந்த அளப்பற்ற ஈடுபாடு..இவைகளை எல்லாம் தாண்டிபேசப்பட வேண்டியவை நிறைய உண்டு. இந்து மதக்
காவலர்கள அவரைக் கொண்டாடுவதற்குப் பின்னால் இருக்கும்
நுண்ணரசியல் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
அவரைப் பெரிதும் மதிக்கிறேன். அதே நேரத்தில் அவர் சொன்னவை
அனைத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் இதற்கு
பொருள் அல்ல.

.
எவரது இறப்பு என்பதும் மரியாதைக்குரிய இரங்கத்தக்க நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. இன்னும் இறப்புடன் நேரடியாக உடல்-மனதுடன் சம்பந்தப்பட்டவர்க்கு அது மீள முடியாத இழப்பு. அத்தகையவர்களது இழப்பில் எவரும் பங்கு பெறவே வேண்டும்.
அதுவே தேசிய நிகழ்வாகிறபோது, அதனை முன்வைத்து ஒரு தேசிய பெருமித அரசியல் முன்னெடுக்கப்படும்போது, அது பிரச்சினைக்குரிய பிறிதொரு உணர்வாக மாற்றமடைகிறது.
ஓரு இளம் ஈழக் கவிஞர் ஒருமுறை தனது நம்பிக்கைகளுக்கு உந்து சக்தியாக ஹிட்லரின் மேற்கோள் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ஹிட்லர் ஒரு தோல்வியுற்ற ஒவியன் என்றாலும் அவன் உலகை வெற்றிகொள்ள முயன்ற பைசாசம் அல்லது பேருரு அல்லவா?
ஏழ்மையிலிருந்து பணம்குவிப்பது நோக்கி நகர்வதும் அதிகாரங்களின் உச்சங்களைச் சென்று சேர்வதும் இங்கு பின்பற்றத்தக்க உதாரணமாக நோக்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு அகடமிக் படிப்பில் சேர்க்கப்பட்ட செய்தி ஒன்றையும் பார்த்தேன். இதே தமிழகத்தில் பொதுச் சமூக உளவியலில் ஜெயகாந்தனின் இடமும் பாலு மகேந்திராவின் இடமும் என்ன? இருவரும் தத்தமது துறையில் மகத்தான மாறுதலைக் கொண்டு வந்தவர்கள் இல்லையா?
ஏவுகனை என்ற சொல் எனக்குள் பயங்கரத்தையே எழுப்புகிறது. உயிர்வாதையை எழுப்புகிறது. ஐன்ஸ்டீனும் பியானோவும் என்றொரு பிம்பம். அணுகுண்டு வெடிப்பு. பிரமிளின் ஈ ஈஸ் ஈக்வல் டு எம்சி ஸ்கொயர்ட் என்றொரு கவிதை.
அணுகுண்டு உற்பத்திக்கான அறிவியல் மூலம் ஐன்ஸ்டீன். நாகசாகி பேரழிவின் போது அறிவியலும் அரசியலும் பேரழிவும் குறித்து அவர் என்ன சொன்னார் எனத் தேடி வாசியுங்கள். அதனுடன் அவரெழுதிய வொய் சோசலிஷம் எனும் கட்டுரையையும். இதற்கு மேல் இத்தருணத்தில் பேசுவது பொருத்தமில்லை என்பதால் நகர்கிறேன்..


Like   Comment   

Tuesday, July 21, 2015

குடிகாரன் அயோக்கியனா?

மதுவிலக்கு காவலர்களுக்கு
--------------------------------------------------
மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் மதுவிலக்கை கொண்டுவரப்போவதாக ஒருவர் சொல்கிறார். மதுவிலக்கு பேசி தன்னையும் தன் கூட்டத்தையும் தமிழினத்தின் காவலராக காட்ட இன்னொருவர் களத்தில் ஏற்கனவே நிற்கிறார்... தமிழினத்தின் காவலர்களாக போட்டியில் நிற்கும் இவர்களின் கவனத்திற்கும்
பொதுமக்களின் பார்வைக்கும் .. பாசறைமுரசு மார்ச்-ஏப் 2015ல்
வெளிவந்த என் கட்டுரை மீள்வாசிப்புக்காக.
குடிகாரன் அயோக்கியனா?
-----------------------------------------------------------
சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட பெறினே யாம் பாட தான்
மகிழ்ந்துண்ணும் மன்னே
அவ்வையின் வரிகள் இவை. தமிழ்ச்சமூகத்தின் கொண்டாட்டங்களில்
கள் முக்கியமானது. கள் குடித்திருக்கிறார்கள் நம் பெண்களும்.
கள் குடிப்பவன் சமூகத்திற்கோ தன் குடும்பத்திற்கோ இழுக்கு
ஏற்படுத்தவில்லை. குடி குடியைக் கெடுக்கும் என்ற பொய்யுரை
உருவாகவில்லை. எப்போது குடி குடியைக் கெடுக்கும் என்ற
கருத்துருவாக்கம் உருவானது? அதைப் பொதுப்புத்தியில் ஓர்
அறமாக புகுத்தியதன் பின்னணி என்ன? அதிலிருக்கும் அரசியல்
என்ன? இக்கேள்விகளை முன்வைப்பதே என் நோக்கம்.
கிராமங்களில் எங்கள் குழந்தைப்பருவத்தில் கள் இறக்கும்
தொழிலாளர்களை நான் பார்த்திருக்கிறேன். பொதுவாக
காலையில் இறக்கும் கள் அந்தப் பனை மரத்தின் உரிமையாளருக்கும்
மாலையில் இறக்கும் க்ள அந்த தொழிலைச் செய்பவருக்குமென
ஒரு எழுதாதச் சட்டம் நடைமுறையில் இருந்தது.
பனையில் பதனீர் பொடுவது ஒரு கலை, ஆண் பனையில் பூக்கள் உள்ள
குருத்துகள் மட்டும் வரும், இந்த பனையில் நுங்கு கிடைக்காது.
பெண் பனையில் நுங்குகான குருத்து வரும். பதனிக்காக விடப்படும்
மரங்களில் இந்த குருத்துகளின் நுனியை இடுக்கியால் இடுக்கி பின்னர்
அரிவாளால் செதுக்கி விடுவார்கள்... இதனால் அது பதநீரை சுரக்கும்
. இதை ஒரு மண்கலயத்தில் சுண்ணாம்பு தடவி சேகரிப்பார்கள்...
சுண்ணாம்பு தடுவுதால் பதநீர் கெட்டு விடாது,
மேலும் அதில் வரும் தேனீ, பூச்சிகள் இறந்துவிடும்
. இதை குடிப்பதால் எந்த கெடுதலும் இல்லை
(பதனி சாப்பிட்டு யாரும் சுகமில்லாமல் ஆனது இல்லை)..
. ஆனால் அளவுக்கு அதிகமாக பதநீர் சாப்பிடுவது வயிற்று இளக்கத்தை கொடுக்கும்.
நுங்குக்காக விடபடும் மரங்களில் பதநீரோ, கள்ளோ கட்டுவது இல்லை.
இப்படி பதநீர் இறக்கும் இடங்களில் சிறந்த பெண் பனைகளை
தேர்ந்தெடுத்து கள்ளுக்காக விட்டுவிடுவர். சுண்ணாம்பு தடவாத
கலயம் பதநீரை கள்ளாக மாற்றும். அதிக நேரமான சுண்ணாம்பு
தடவிய பதநீரும் புளித்து கள்ளாகும்,
நல்ல கள் அளவாக குடித்து வாழ்ந்தவர்கள் நம் தாத்தாக்கள்.
எங்கள் வீட்டில் "ஆப்பம்" செய்ய, மாவு புளிக்க கள் சேர்ப்பதுண்டு.
இதனால் சுவை அதிகமாக இருக்கும்.
குடிப்பழக்கம் என்கிற சமூகக் கொண்டாட்டம்,
குடியைக் கெடுக்கும் பழக்கமாகவும் ஒரு குற்றச் செயலாகவும் மாற்றப்பட்ட வரலாறு
ரொம்பவும் சோகமானது. அரசு மற்றும் சமய அதிகார மய்யங்களின்
கட்டுக்குள் மக்களைக் கொண்டுவருவதற்கான பெருந்தடைகளில் ஒன்றாகவும் மக்களின் குடிப்பழக்கத்தைக் கண்டும் இவை அஞ்சின, வெறுத்தன.
அதைப்போவே சமூகம் கட்டமைக்கிற மரியாதைகளையும் புனிதங்களையும் போட்டுடைக்கும் நிலையைக் குடி மனிதனுக்கு வழங்குவதை அரசும் சமூக ஆதிக்கச் சக்திகளும் கண்டு கலங்கின.
இன்று மதுவிலக்கை உரத்தக்குரலில் சொல்லிக்கொண்டிருக்கும் சிலர்
குடி மட்டுமே நம் சமூகத்தின் கேடு என்பதான ஒரு கருத்தை உருவாக்கி மற்ற கேடுகளை மூடி மறைக்க நினைப்பதும் புரிகிறது, சாதி இந்த சமூகத்தில் இருக்கலாம். திவ்யாக்கள் இளவரசங்களை மணந்துவிட்டால் தமிழ்ச்சமூகம் தன் புனிதத்தை இழந்துவிடும் என்று தமிழ்ச்சமூகத்தின் புனிதக்காவலர்கள் மதுவிலக்குப் பற்றிப் பேசும் போது அது உண்மையில் "மதுவின் கெடுதல்களைப்
பற்றிய விழிப்புணர்வு பேச்சல்ல, தங்களை மட்டுமே தமிழ்ச்சமூகத்தின் புனிதத்தைக் காப்பாற்றும் காவலர்களாக காட்டும் வேஷத்தின் முக்கியமான ஒப்பனை"
அவ்வளவுதான்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட ‘மதுவிலக்கு’ அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல.
ஆகவே, “மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை
இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.”(கு.அ.3.10.1937)
என்று கூறிய தந்தை பெரியார், ‘பர்மிட்’ உள்ளவர்கள் குடிக்கலாம் என்று ஆகிப்போன நடைமுறை குறித்தும் வருந்திக் கண்டித்தார்.
”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று சட்டம் செய்து கொண்டானோ அது போல் போலீசாரும், அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான்." என்றார்.
தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள்
கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது. (விடுதலை 9.11.68)
”100 ஆண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பு மது குற்றமற்ற ஒரு சாதனமாகத் தான் இருந்தது. அரசாங்கம் மதுவை அரசாங்க வியாபாரப் பொருளாக ஆக்கினதுடன் அரசாங்கமே மது வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகுதான், மது அருந்துவது (குடி) கெட்டது என்று சொல்லும்படி ஆகிவிட்டது. மது வியாபாரிகள் மதுவுக்குள் இயற்கை போதையைவிட அதிக போதை ஏற்படும் படியான பக்குவம் செய்ததால் மதுவால் கெடுதி என்று சொல்லும்படியான நிலை ஏற்பட்டுவிட்டது.”(விடுதலை 9.11.68)
உடல் உழைப்பின் காரணமாகவே விளிம்புநிலை மக்கள் மது அருந்துகிறார்கள் என்பதையும் அம்மக்களுக்கு மதுவிலக்கைப் பற்றி மிக அதிகமாக பேசிய மகாத்மா காந்தியடிகளே மது வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குப்பைக் கூட்டுவது, சாக்கடையை சுத்தம் செய்வது, மலக்குழியில் இறங்கி அடைப்புகளை சீரமைப்பது என்று இந்த நாட்டில் சாதியின் பெயரால் குறிப்பிட்ட சில மக்களே காலம் காலமாக மேற்கண்ட துப்புரவு தொழில்களைச் செய்து வருகிறார்கள்.
கையால் மலம் அள்ளுவதற்கு இந்திய அரசே தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நாட்டில் எவருக்கும் மதுவிலக்கு பற்றி பேசும் அருகதை இல்லை.
அம்மக்கள் மது அருந்துவது மட்டுமே அத்தொழிலைச்
செய்வதற்கும் அத்தொழில் செய்வதில் இருக்கும் மனச்சோர்வை அகற்றுவதற்கும் அவர்களுக்கான வலி நிவாரணியாகவும் இருக்கிறது, மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அருந்தும் மது தான் நம் சமூகத்தின் அறங்காவலர்கள் முன்னிறுத்தும்
"சமூகக்குற்றம். உடல் உழைப்பை சமூகத்தகுதி நிலையில்
கீழ்நிலை ஆக்கியவ்ன தான் குடிப்பவன் குற்றவாளி என்ற கருத்தைப் பொதுப்புத்தியில் ஏற்றியவன்.ஒடுக்கப்பட்டவனின் குடிப்பழக்கம் சமூகத்தின் அவமானமான செயலாக மாற்றப்பட்டதின் பின்னணி இதுதான். இதைத்தான் தந்தை பெரியார்
மது ‘கீழ்’ ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது. (விடுதலை 16.2.69)”,
“நான் கீழ் ஜாதி என்பதை எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ
அப்படித்தான் குடிகாரன் குற்றவாளி என்பதையும்
ஒப்புக்கொள்வதில்லை. (விடுதலை 16.2.69)” என்றார்.
உடல் உழைப்பை மதிக்காத சமூகத்தில் மதுவிலக்கைப் பற்றிப் பேசுவது கூட அதிகாரத்தின் ஆணவப்போக்கு தான். மது அருந்துவது என்பது தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. மதம் இனம் ஆட்சி அதிகாரத்தின் பெயரால் அந்த உரிமையைப் பறிக்க முடியாது. பறிக்கவும் கூடாது.
இன்றைய பத்திரிகைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களும்
டாஸ்மார்க் கடைகளில் குடித்துவிட்டு வருவதும் சாலைகளில்
விழுந்துக்கிடப்பதும் என்ற செய்திகள் வருகின்றன.
இச்செய்திகளின் வழியாக "குடி குடியைக் கெடுக்கும்" என்ற
கருத்து தீவிரமாக்கப்படுகிறது.. ஆனால் கவனிக்க வேண்டிய
இன்னொரு கருத்து இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
அதாவது ..இந்த நாட்டின் கல்வி கற்கும் மாணவர்களிடம்
கூட விழிப்புணர்வை ஏற்படுத்த நம் கல்வி தவறி இருக்கிறது
என்ற மாபெரும் உண்மையை!
உடல் உழைப்பு தொழிலாளி மது அருந்துவன் என்றால் இன்று
அதிலும் 90க்குப் பின் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மாற்றத்திற்குப் பின் மது அருந்துவது மது போதைக்கு அடிமை ஆவது கூடி இருப்பது
ஏன்? என்ற கேள்வி எழுவது இயல்பு. 90க்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும்
கணினி - ஐடி துறை வளர்ச்சி உடல் உழைப்பு தரும் அசதியை விட
மோசமானது. இரவு ப்கல் பாராது வேலை செய்ய வேண்டிய நிலை,
வேலை நிரந்தரமில்லாத பாதுகாப்பின்மை என்ற சூழலின்
இந்தியா எங்கும் வொயிட்காலர் அடிமைகளை உருவாக்கி இருக்கிறோம்.
இதுவும் ஒருவகையான காலனி ஆதிக்கம் தான் என்பதை
இந்திய ஜனநாயகம் மூடி மறைக்கிறது. டாலருக்கு அடிமைகளாகிவிட்ட நம் இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு பலியாகி விட்டார்கள்.
இதைப் பற்றிப் பேச வேண்டிய சமூகம் சமூகம் திசைமாறி
இதையும் மதுவிலக்கையும் முடிச்சு போடுகிறது.
கள் இறக்குபவனை பனை ஏறுபவ்னை உடல் உழைப்பின் காரணமாக
குடிப்பழக்கம் அதிகமாக இருக்கும் துப்புரவு தொழிலாளியை..
இவர்களை எலலாம் ஒடுக்கி ஒதுக்கி தாழ்த்தப்பட்டவ்ர்களாக்கிய
நம் சமூகம் மல்லையாக்களை உருவாக்கியது. குடிசைத் தொழிலாக
இருக்கும் வரை உடல் நலத்திற்கான கள்ளாக இருந்தக் குடி,
நம் ஆண் பெண்களின் கொண்டாட்டத்தில் இடம் பெற்ற குடி
வாகன் வசதிகளும் அடி ஆட்களும் பெரும் முதலீடும் கொண்ட
மதுவாக மது உற்பத்தியாக மாறிய போது குடி நம் குடியைக்
கெடுத்தது.. கெடுக்கிறது என்ற அரசியலை நாம் பேசியாக
வேண்டும்.
குடியைக் கொண்டாட வேண்டும். எல்லோரும் குடிக்கலாம் வாருங்கள்
என்று சொல்வதல்ல் என் நோக்கம். மதுவிலக்கு சார்ந்த பொதுப்புத்தியில் சுமத்தப்பட்டிருக்கும் புனிதம், தூய்மை, அறவொழுக்கம் என்ற போதைகளைக்
களைவதும் மதுவிலக்குப் பேசும் சிலரின் அரசியல் உள்நோக்கத்தை
அடையாளம் காட்ட வேண்டும.
மது தடைப்படுத்தப்பட்ட நாடு அடிமை நாடேயாகும். (விடுதலை 16.2.69)
“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக் கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கின்றேன்.” (விடுதலை 18.3.71)
என்று சொன்ன தந்தை பெரியார் தான் மைனர் வாழ்க்கை வாழ்ந்தக் காலத்திலும் தன் வாழ்நாளில் கடைசிவரை மது அருந்தியதில்லை.
நம் சமூகத்தில் ஒரு பொதுவழக்கு எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. அது என்னவென்றால்.. 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு"
கள்ளுக்கும் மதுவுக்கும் அது பொருந்தும்.
இந்த பொது அறத்தை தனி மனித ஒழுக்கத்தின் அறமாக்க வேண்டுமே தவிர குடிப்பவன் எல்லாம் அயோக்கியன் என்ற பொய்யுரைகளை அல்ல.
----
Like   Comment