Monday, May 29, 2017

அனாமிகாவின் அனாதீஷியா

specialisten-coachen.png (350×233)

ஆபரேஷன் தியேட்டரைச் சுற்றிப் பார்க்கிறேன்.
முகத்தை மறைத்துக் கொண்டு முழங்கால் அளவுக்கு
அங்கியுடன் அங்குமிங்குமாக அலையும் கால்களுடன்
சில விநோதமான மனிதர்கள்.. பெரிய பெரிய சைஷில் விளக்குகள்... படுக்கைகள்..படுக்கையைச் சுற்றி விதவிதமான தட்டுகள் கையுறைகள்.. எனக்குத் தெரிந்த
தெரியாத இன்னும் என்னவெல்லாமோ ...
ஒருவிதமான மருந்து நெடி.. அந்தக் குளிரில் என்னைத் தழுவிச் சென்றது.
அதிலிருந்த ஒரு படுக்கையில் என்னைப் படுக்கச் சொல்லி
ஆதிமொழியில் சைகை செய்தார் ஒருவர். நான் அவர் ஆணா
பெண்ணா என்ற ஆராய்சியில் ஈடுபட்டேன். அவரோ என் ஆராய்ச்சியைக் கண்டு கொள்ளாமல் என் கையைப் பிடித்து
படுக்கையில் ஏறி நான் படுப்பதற்கு உதவி செய்தார். அவர்
உள்ளங்கை குளிர்ந்திருந்தது. ஏற்கனவே அந்தப் படுக்கையில்
யாருக்கோ ஆபரேஷன் நடந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலை வைக்கும் திண்டு ஈரமாக இருந்தது.
ஆரஞ்சு கலரில் நனைந்திருந்ததை நான் வெறித்துப் பார்ப்பதை ஒரு நொடியில் புரிந்துக் கொண்டுவிட்டார்.
உடனடியாக புதிதாக உலர்ந்த தலைவைக்கும் தலையணை
திண்டு கொண்டுவந்து வைத்தார். நான் படுக்கும் வரை
அவர் பொறுக்கவில்லை. இப்போது கொஞ்சம் வேகமாக
அவர் என் தலையைப் பிடித்து தள்ளி என்னைப் படுக்க
வைத்தது மாதிரி இருந்தது. இப்போது அவரைப் பார்த்தால்
எனக்கு ரோபட் மாதிரி தெரிந்தது.
என் தலை என்ன சாதாரண தலையா?
எல்லா தலைகளையும் கையாளுவது போல என் தலையையும் கையாளக் கூடாது என்பதை ரோபட்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த ரோபட் மனிதர் இப்போது வேகமாக என்னருகில்
இருக்கும்  பெரிய லைட்டை இழுத்து என் முகத்திற்கு நேராக
வைத்தார்.
இனி இந்தப் படுக்கையிலிருந்து எழுந்து ஓடுவது முடியவே
முடியாது.. தலையை உரலில் கொடுத்தாச்சு  உலக்கைக்குப் பயப்பட்டாமா ஆகுமானு எங்கிருந்தோ என் ஆச்சியின் குரல்
வேறு இப்போது என் காதில் விழுந்தது. இப்படித்தான் எல்லாத்துக்கும் சொலவடை சொல்லியே கழுத்தறுப்பாள்
எங்க ஆச்சி. இப்போது பாருங்கள் இந்த ஆபரேஷன் தியேட்டரில் அவள் சொலவடை குரல் அசிரீரி குரல் மாதிரி
கேட்கிறது என்றால் அவள் சொலவடை எங்கள் வாழ்க்கையுடன் எப்படி கலந்துவிட்டது பாருங்க..

சாதரண ஒரு கேட்ரட் கண் ஆபரேஷனுக்கா நான் இந்தளவுக்கு அலட்டிக் கொள்கிறேன் என்று  வீட்டில்
எல்லோரும் எரிச்சலடைகிறார்கள்அவர்களுக்கு என்ன தெரியும்... என் கண்கள்.. என் கண்ணப்பன் எனக்கு
கொடுத்த கண்களின் அருமை.
"கண்ணே கண்மணியே..
என் கண்ணே கலைமானே
என் கண்ணின் மணியே
என் கண்ணே..
என்று பின்னணி இசையில் மெதுவாக என் கண்களை நானே
தொட்டுத் தடவி.. பாட்டுப்பாடி ஸ்லோ மோஷனில்
பச்சைப்புல்வெளியில் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்
போலிருந்தது. அதற்குள் என்ன தான் அவசரமோ..
என் முகத்திற்கு நேரே வெளிச்சம்..
என் இடது கண்ணை ஒரு ஷீல்ட் வைத்து மூடினார்கள்.
என் கழுத்துவரை கம்பளிப் போர்வையை இழுத்து
மூடினார் ரோபட்.
"ஹாய்.."
என்னருகில் ஒலித்த குரல் டாக்டரில் குரல்..
எனக்கென்னவோ வழக்கம்போல அவருக்கு "ஹாய்" சொல்ல
மூடில்லை.
"எனக்கு அனாதிஷியா கொடுப்பீர்களா டாக்டர்.
ஃபுல் அனாதிஷியா வா... எனக்கு என்ன நடக்கிறது
என்பது தெரியுமா ..?"
"ந்நோ ந்நோ.. ந்நோ அனாதிஷியா " - டாக்டர்.
"ஒ மை காட்.. தென்"
இட்ஸ் ஜஸ்ட் எட்டு நிமிஷ ஆபரேஷன் தான். இதுக்கு
எதற்கு கண்ணுக்கு அருகில் ஊசிப்போட்டு.. அது வலிக்கும்.
ம்ம் தேவையா..?"
Xylocaine injection mixed with adrenaline will be given below the
eyeball in the lower eyelid.... otherwise Lignocaine jelly topical useஎன் கண்முன்னால் கூகுள் பக்கம் விரிந்தது. யு டுயூப் வேற லைவ்
ஆக ஓட ஆரம்பித்தது..
"ந்நோ டாக்டர் ப்ளீஸ்.. "
"டோன்ட் வொரி.. உங்க கண்ணில் நாங்கள் விடும் சொட்டு
மருந்து ... போதும். கொஞ்சம் கூட வலியே இருக்காது.
பிலீவ் மீ..  ஜஸ்ட் எய்ட் மினிட்ஸ்.. கோ- ஆபரேட் வித் மி.."
என் பதிலுக்காக அவர் காத்திருக்கவில்லை.
பக்கம் பக்கமாக ஆபரேஷன் புரசிஜர் என்று சொல்லி கை எழுத்து வாங்கினார்களே... அதெல்லாம் எதுக்குனு
எனக்குள் இருந்த சந்தேக சாம்பிராணி கேட்டதை
அங்கே யாருமே கண்டு கொள்ளவில்லை.
அறையில் நிலவிய நிசப்தத்தில் கம்பளிப் போர்வையைத் தாண்டி எனக்கு வெடவெட என குளிர ஆரம்பித்தது.

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா...
அன்று சிவராத்திரி வேறு என்பதால் ஓம்நமசிவாய குரலோசை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது...
கண் குளிர்ந்தது... இப்போது உங்க கண்ணுக்கு வெளிச்சம் தெரிகிறதா... டாக்டர் கேட்டார்.
ம்ம்ம்..
அந்த வெளிச்சத்தையே பாருங்கள்..
என் இமை சிமிட்டாமல் அந்த வெளிச்சத்தையே எப்படி
பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது.., அந்த ரோபட் என் இமையில் எதையோ மாட்டி வைத்திருக்கிறது. என் இமைகளை க்ளிப் போட்டு அசையாமல்  கயிற்றில்
தொங்க விட்டிருக்குமோ ரோபட்... என்ன இது...
கண் இமை சிமிட்டாமல் கண்கூசும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டே..
லேசர் கதிர் வெளிச்சம்.. அப்படியே 3 டி, 4 டி எபெக்ட்டில் ஐமெக்ஸ் தியேட்டரில் ஆங்கிலப்படம் பார்ப்பது போல
வண்ண வண்ண வடிவங்கள் என்னைச் சுற்றி  ஓட ஆரம்பித்தன..
பிரபஞ்சத்தில் ஒற்றை நட்சத்திரமாக சுழன்று கொண்டிருக்கிறேன். எதிரே வந்து மோதுகின்றன எரி நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக. மோதிய வேகத்தில்
உடைந்து சிதறி தீபாவளி மத்தாப்பு மாதிரி வானத்தில்
நடக்கிறது ஒரு வர்ண வான வேடிக்கை. ஒவ்வொரு ஒளிக்கற்றையும் பளிச் பளிச் என்று என் வானத்தில் தோன்றி
மறைகின்றன. நிலவுக்கு யாரோ வர்ணம் பூசுகிறார்கள்.
குட்டியாக ஒரு நிலவு... என்னைப் பார்த்து சிரிக்கிறது.
இதோ என்னருகில் வந்து என்னை முத்தமிடுகிறது.
கம்சனின் வாளிலிருந்து தப்பி ஆகாயத்துக்கு பறந்த
குழந்தையின் முகமா.. நெருப்பில் பிறந்த அவளா
இவள்.. எனக்கு அவள் அடையாளம் பிடிபடவில்லை.
பட்டுப்பாவாடைக் கட்டிக்கொண்டு இரட்டைப் பின்னலுடன் தேர்த்திருவிழாவில் என்னருகில்
ஒரு அம்மன் சிலை...
"இட்ஸ் அ பேபி கேர்ள்"
ஆபரேஷன் தியேட்டரில் ஒலித்த குரல் என் காதுகளில்
ஒலிக்கிறது. கண்ணைத் திறந்து பார்க்க தைரியம் வரவில்லை.
என் கிழிந்த வயிற்றை டாக்டர் தைக்கிறார். இது என்ன..
என் கிழிந்த வயிற்றுக்குள் மீண்டும் அக்குழந்தை போய்விடுகிறது .
கார்த்திகைப் பெண்கள் ஏன் என்னைச் சுற்றி கையில் அகல்விளக்குடன்.. என்னை நெருங்கி நெருங்கி வருகிறார்கள். அவர்கள் கைகளில் இருக்கும் விளக்கு
குழந்தையின் முகமாக  மாறி.. என் முலைப்பால் அருந்திய
குழந்தைகளை அவர்கள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு
என்னை விட்டு வெகுதூரமாகப் போய்விடுகிறார்கள்.
என்னைச் சுற்றி இருட்டு... இருட்டில் என் ப்ளவுஸ் கொக்கிகளை இழுத்து மாட்டிக்கொள்கிறேன். அறுந்துப்  போகிறது. என் கச்சைக்குள் அடங்க மறுக்கின்றன
கனமான முலைகள். நான் அழு ஆரம்பிக்கிறேன்.
வலி தாங்காமல்.
" லென்சை வைக்கப்போகிறேன்... உங்கள் கண்ணில் நான்
எதையோ வைக்கும் உணர்வு ஏற்படும் ... ஜஸ்ட் டூ  மினிட்ஸ்"
லேசர் ஒளிக்கற்றைகள் மேலும் கீழுமாக ஒழுங்கின்றி
ஏறி இறங்குகின்றன. தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று
ஸ்லைட் போடுகிறார்கள்.. அந்த ஸ்லைடும் தலைகீழாக
தெரிகிறது.. தியேட்டரில் விசில் சத்தம்... காதைப் பிளக்கிறது.
மெதுவாக என் கண்ணுக்குள் ஏதோ இறங்குகிறது. ஏறுகிறது.
கடல் அலைகள் வேகத்தில் கப்பல் ஆட்டம் காணுகிறது.
கண்ணாடித் தொட்டிக்குள் வண்ண வண்ண கலரில் நீர்த்திவலைகள் தழும்புகின்றன. சூரிய ஒளிக்கற்றைகள்
செங்குத்தாக கண்ணாடித் தொட்டிக்குள் இறங்கும் வேகத்தில்
நீர்த்தொட்டிக்குள் நீந்திக்கொண்டிருந்த மீன்கள் துடிதுடித்து
செத்து மிதக்கின்றன.  தவளை ஒன்று வேகமாக எம்பிக் குதித்து தண்ணீர்த் தொட்டிக்குள்ளிருந்து வெளியில் விழுகிறது. தவளையின் நுரையீரல் விரிந்து விரிந்து
வானத்தை நோக்கி அதிசயமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.
எம்பிக் குதித்த வேகத்தில் அசதி தீர அசையாமல் கிடக்கும்
தவளையைத் தூக்கி வீசுவது போல வானத்திலிருந்து குண்டுமழை.. சர் சர் என்று போர்விமானங்கள் பறக்கின்றன.
பதுங்கு குழியை நோக்கி குழந்தைகளும் பெண்களும் ஓடுகிறார்கள். தவளை என்ன செய்வது என்பதறியாமல்
தத்தளிக்கிறது. தரை எங்கும் சிதறிக்கிடக்கும் கால் கைகள்.
குழந்தைகளின் அழுகுரல்..
டாக்டர் கேட்கிறார் இது எத்தானது அபார்ஷன்?
ஒன்று இரண்டு மூன்று நான்கு..
உண்மையைச் சொல்லவா அல்லது...
இல்ல இல்லை
இது ரெண்டாவது..
ம்ம்..
கால்கள் இரண்டையும் விரித்து தூக்கி வளையத்தில் வைக்கிறாள் நர்ஸ். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்
என்பது எனக்குத் தெரியும் தானே.. இருந்தாலும் அழுகை
வருகிறது.. இந்த அழுகை கருவிலேயே சாகடிக்கும் என்
குழந்தைக்காக  அழும் அழுகையா...
அப்படி எல்லாம் சொல்லவரவில்லை. முதன் முதலாக
அபார்ஷன் செய்தபோது இருந்த குற்றவுணர்ச்சி இப்போது
இல்லை.
சுயபச்சதாபம் சுயவெறுப்பாக மாறி என் மீது  காறி உமிழ்கிறது. இந்தக் குழந்தைக்கு காலும் கையும் முளைத்திருக்குமா.. கண்கள் தெரியுமா... என்னைப் பார்க்குமா அல்லது பார்ப்பதற்கு முன்பே.. முடித்துவிடுவார்களா... என்ன நடக்கும்... என்னைப் பற்றி என்ன யோசிக்கும்...
"தாய்ப் பார்க்காத முகமே
தமிழ்ப் படிக்காத எழுத்தே
என் எழுதாதக் கவிதை நீயே.."
ச்சே ... என்ன புத்தி இது.. இதுக்கும் ஒரு கவிதையா..
கவிதையின் ஒவ்வொரு எழுத்துக்களாக என்னை விட்டு
விலகி ஓடுகின்றன. எதுவுமே எழுதப்படாத வெள்ளைத்தாளாக என் கண் முன்...
" ஒகே தேங்க் யு. ஆபரேஷன் ஓவர்.. இட்ஸ் ஒவர் வித்தின் டென் மினிட்ஸ்"  டாக்டர் என் தோள்களைத் தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.
மெல்லிய இருள் கலந்த வெளிச்சத்தில் நான் மயக்கத்துடன்..
என்னைச் சுற்றி என்னவெல்லமோ நடக்கிறதோ..
என் மீது ஒருவர் மாற்றி ஒருவர் ஏறி உட்கார்ந்து...
என் தொடை வலிக்கிறது.. அனாதிஷியா கொஞ்சம் கொஞ்சமாக என் யோனிக்குள் சொட்டு சொட்டாக
விழுகிறது.. எந்த உணர்வுகளும் இல்லாமல் நான்
சிலையாக கால்களை விரித்து மல்லாக்கா..
பூமி வாய்ப்பிளந்து .. லேசர் ஒளிக்கற்றைகள் ..
பளிச் பளிச்சென்று வேகமாக வேகமாக
வானுயர்ந்த லிங்கமாக ...
ஓம் நமசிவாயா..
என்ன இது.. பாற்கடலில் அமுதக் கலசம் உடைந்து சிதறுகிறது. தரை எங்கும் ரத்த துளிகள் விஷமாக .
ஆகாயம் நீல நிறமாக மாறி கொஞ்சம் கொஞ்சமாக
கடலுக்குள் கலக்கிறது..
என்னை ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியில்
அழைத்து வருகிறார்கள். கட்டிலில் படுத்துக் கொள்கிறேன்.
கணவர் பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கிறார்.
3 வயதுக் குழந்தையை பாலியல் வன்முறை செய்து
கொலை செய்த என் ஜினியர் பற்றிய செய்தி தலைப்புச்
செய்தியாக.. மங்கலாக என் இடது கண்ணில் தெரிகிறது.
இடது கண்ணையும் திறக்க விருப்பமின்றி மூடிக்கொள்கிறேன். டாக்டர் இரண்டு மணி நேரம் கழித்து வந்து செக்கப் செய்கிறார்,  கண்ணில் ஊற்றுவதற்கு சொட்டு மருந்துடன் போட்டுக்கொள்ள கறுப்புக்கண்ணாடியும்
கொடுக்கிறார்,  இந்தக் கண்ணாடி எனக்குப் பிடித்திருக்கிறது.
யாரையும் கண்ணோடு கண் பார்த்து பேச வேண்டியதில்லை.
யாரும் பார்க்க முடியாத படி என் விசேஷமான லேசர் கண்களை மறைத்துக் கொள்ளலாம். வசதியாகத்தான் இருக்கிறது... இதுவும்.
காரின் கதவுகளைத் திறந்துவிடுகிறார் டிரைவர்.
வீட்டை நோக்கி போகும்வழியில்..
ரெயில்வே தண்டவாளத்துக்கு அருகில் இருக்கும் ஆலமரத்தடிக் கோவிலில் சிவலிங்கத்தைச் சுற்றி
காய்ந்த ஆலிலைகள்  உதிர்ந்து கிடக்கின்றன.
காக்கா ஒன்று தலையைச் சாய்த்துப் பார்த்துக்கொண்டே.. சிவலிங்கத்தின் மீது எச்சமிட்டுவிட்டு பறந்து செல்கிறது.


(நன்றி தமிழ்நெஞ்சம் ) 


Sunday, May 28, 2017

எச்சில் மானம்

884a081807df5445e35e9ba8e8f990cd.jpeg (470×618)

இதை இப்படி செய்திருக்கலாம்..
அதை அப்படி செய்திருக்கலாம்        
எப்படிப்பார்த்தாலும்
செய்ததெல்லாம் தப்பும் தவறுமாகி
வாசலில் குப்பை.
கணக்குகளின் விடைகள் கனவுகளில் வந்து
கண்ணாமூச்சி ஆடுகின்றன.
இனி என்ன பயன்?
நேற்று வாங்கிய முதல் மதிப்பெண்
இன்று காலாவதியாகிவிட்டது.
காலம் சாட்டையை எடுத்து சுழட்டுகிறது.
விழும் ஒவ்வொரு அடியிலும்
மானம் அவமானம் தன்மானம்
சன்னல்களுக்கும் கண்கள் உண்டு.
காதுகள் உண்டு.
யாரோ எட்டிப்பார்க்கிறார்கள்.
கண்ணாடிகள் இடமாறுகின்றன.
பிம்பங்களைத் தாங்கி நிற்கிறேன்.
நீ துப்பிய எச்சில் என்  முகத்தில்
இன்னும் ஈரத்துடன்.