Saturday, December 25, 2021

பிச்சி



 பிச்சி:

கருவறை இருளின் வெளிச்சத்தில்
திரி ஒன்று சுடரில் கரைகிறது.
அவள் கர்ப்பஹிரகத்திலிருந்து
தப்பித்து வெளியேறுகிறாள்.
அலைபாயும் விழிகளுக்கு நடுவில்
பெருநகரம் அசைகிறது.
காத்திருப்புகளின் வரிசையில்
நின்றவளைக் காணவில்லை.
சாலையோரத்து புத்தகவரிசையில்
ஓரமாக
அவன் விழிகளுக்காகவும்
விரல்களின் தொடுதலுக்காகவும்
மலர்ந்த பிச்சி..
ஜன நெரிசலில் உதிர்ந்துப்போனது
தெரியாமல்
குப்பைகளை அள்ளிக் கொண்டிருக்கிறது
பெரு நகரம்.
+++
அவளை உலகம் பைத்தியக்காரி என்று விளித்தது.
படித்தவர்கள் அதையே அவர்கள் மொழியில்
மனப்பிறழ்வு என்று அழைத்தார்கள்.
அவள் ஆடைகள் எப்போதுமே கிழிந்து தொங்கியது
இல்லை. அவள் கூந்தலில் சிடுக்குகள் இல்லை.
அவள் யாரிடமு கையேந்தி பிச்சை
எடுக்கவும் இல்லை. அவளைப் பார்க்கும்போது
கோவில் சிலை ஒன்று கர்ப்பஹிரகத்திலிருந்து
தப்பிவந்து நடுரோட்டில் வழித்தெரியாமல்
அங்குமிங்கும் அலைபாயும் விழிகளோடு
தவிப்பதுபோலிருக்கும்.

அவள் காலையிலேயே குளித்துவிட்டாள் என்பதை
அவள் முகமும் தோள்வரைப் புரண்டு காற்றில்
அசையும் கூந்தலும் காட்டும்.
எப்போதும் அவள் புடவையில்தான் இருப்பாள்.
புடவைக்கு மேட்சிங்கான ப்ளவுசும் உள்பாவாடையும்
அணிந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன்.
அவளும் நானும் எப்போதும் ஒரே நேரத்தில்
அந்த சிக்னலைக் கடந்திருக்கிறோம்.
ஒரு நாள் அல்ல,
சற்றொப்ப 10 ஆண்டுகள் தினமும்
காலையில் அலுவலகத்திற்கு முன்னால்
அந்த ஹைகோர்ட் திருப்பத்தில் இருக்கும்
சிக்னலை இருவரும் ஒன்றாகவே கடந்திருக்கிறோம்.
அதனால்தான் மற்றவர்கள் கவனிக்காதவற்றை
நான் கவனித்தேனா தெரியாது.

ஆரம்பத்தில் அவள் என்னுடன் சேர்ந்து கிட்டத்தட்ட
என்னருகில் வரும்போது சின்னதாக ஒரு பயம் வந்தது.
ஆனால் அவளைக் கண்டு பயம்கொள்ள
வேண்டியதில்லை என்பதை இரண்டொரு நாட்களில்
உள்மனம் உணர்ந்து கொண்டது.
அவள் உதடுகள் அசைந்து கொண்டே இருக்கும்.
அவள் யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை
புரிந்து கொள்ள முடியும். அவள் தோளில் ஒரு லெதர்
பை தொங்கிக் கொண்டிருக்கும். அதில் புத்தகங்கள்
முகம் துடைக்கும் டவல் சில நேரங்களில் மதிய
உணவு டப்பா இப்படி எதாவது எட்டிப் பார்க்கும்.
அவள் அந்த சிக்னலை தினமும் வேகம் வேகமாக
கடந்து ஆபிஸ்க்கு ஓடிக்கொண்டிருக்கும் பெண்களில்
ஒருத்தியாக இருந்திருப்பாளோ..
அவளும் நானும் இப்படியாக
ஒரே நேரத்தில் சிவப்பு விளக்கிற்காக காத்திருந்து
ஓடிக்கொண்டிருந்தோம்.
அவள் ஒரு திசையிலும் நான் என் திசையிலும்.

10 ஆண்டுகளுக்குப் பின் எனக்கு செம்பூர் கிளைக்கு
மாற்றலாகியது. அதன் பின் 8 ஆண்டுகள் கழித்து
மீண்டும் மெயின் ஆபிஸ் வந்தப் பிறகு அவளைக் காணவில்லை.
அவளைக் காணவில்லை என்பதை
எங்கள் பரபரப்பான வாழ்க்கையில்
நினைத்துப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை.
அவள் யார்? வசதியான வீட்டுப் பெண்ணா?
தெரியவில்லை...
அவளை அடைத்து வைத்திருந்தால்
இன்னும் மோசமாகிவிடுவாள் என்று
அவளுக்கு விடுதலை கொடுத்தவர்கள்
மனசில் ஈரமிகுந்தவர்களாக இருக்க வேண்டும்.
அவள் எப்போதும் காலை 9 மணி முதல்
11 மணிவரை மட்டும் தான் அந்தப் பகுதியில்
தென்படுவாள். அதன் பின் அவள் தானே வீட்டுக்குப்
போய்விடுவாளாக இருக்கும். அல்லது யாராவது
அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்களா
தெரியாது.

அதீத நம்பிக்கையை அடுத்தவர் மீது வைக்கும்போது
அதில் விழுந்துவிடும் கீறலில்
மனம் உடைந்துவிடுகிறது.
அவளுக்கும் இப்படியாக
எதோ ஒன்று நடந்திருக்க வேண்டும்.
அவள் சிக்னலைக் கடந்து
அந்தச் சாலையோரத்து புத்தகங்கள் பக்கமாக
வந்து நின்று கொண்டு
யாருக்காகவோ காத்திருப்பாள்.
அப்போது அந்த விழிகளை நேர்கொண்டு சந்திக்க
முடியாது. அதில் பக்கத்திலிருக்கும் அரபிக்கடலின்
அலைகள் மோதிக்கொண்டிருக்கும்.
நேரம் செல்ல செல்ல அவள் உடல் தளரும்.
அவள் உதடுகள் உறையும்.
அவள் மெளனத்தில் உறைபனியாகி ஒரு ஜடம்போல
திரும்புவதாக அந்தப் புத்தகங்கள் சொல்லும்.
அவளை எல்லோரையும் போல
நானும் மறந்துவிட்டேன்.
நேற்றிரவு அவள் எங்கிருந்தோ வந்தாள்.
நானும் அவளும் ஒன்றாக அதே சிக்னலைக்
கடந்தோம் . சிவப்பு விளக்கு பச்சைவிளக்காவதற்குள்
அவளைக் காணவில்லை.
அவள் முகத்தில் அவள் உடையில் அவள் நடையில்
அவள் உதடுகளின் அசைவில்.. நான்..
அதே சாலையோரத்து புத்தக வரிசையில்
ஓரமாக காத்திருக்கிறேன்.
யாருக்காக என்று தெரியாமல்!

No comments:

Post a Comment