Thursday, July 19, 2018

ஶ்ரீ லீக்ஸ்

ஶ்ரீ லீக்ஸ்
ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல
பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து
சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கும் 
சதை வியாபாரிகளைப் பற்றிய ஒரு சமூகப்பிரச்சனை.
ஶ்ரீ ரெட்டி சொன்னது சமூகப்பிரச்சனை அல்ல,
அவர் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும்
போராட்டங்களைத் திசை திருப்பி மஞ்சள் பத்திரிகை
ரேஞ்சுக்கு கவன ஈர்ப்பு செய்கிறார் என்ற குற்றச்சாட்டை
சிலர் வைக்கிறார்கள். இது ஶ்ரீ லீக்ஸ் காட்டும் ஒரு பக்கம்
மட்டும் தான். ஒரு வேளை அவருக்கு படுக்கையறை
பண்டமாற்றுக்குப் பின் சினிமா வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால்
இப்பிரச்சனையே எழுந்திருக்காது, அவர் ஏமாற்றப்படவில்லை,
அவர் செய்தது வெறும் சதைப் பண்டமாற்று என்று பார்ப்பவர்கள்
அந்தப் பண்டமாற்று சந்தையின் சில முகங்களைப் பார்க்க
மறுக்கிறார்கள், அல்லது விரும்பவில்லை.
ஶ்ரீ ரெட்டி வைக்கும் குற்றச்சாட்டுகளின் இன்னொரு பக்கம்..
அப்படியானால் சினிமா உலகில் சதைப் பண்டமாற்று
நடந்தால் தான் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றனவா?
இது வரை வாய்ப்புகள் பெற்று முன்னுக்கு வந்திருக்கும்
பிரபலங்கள் இதைக் கடந்து வந்திருக்கிறார்களா
இல்லையா?
மிஷ்கின் போன்ற திரைப்பட இயக்குனர்கள் ரேப் செய்துவிடுவேன்
என்று “பேரன்புடன்” மம்முட்டியைப் புகழ்வதற்கு தேர்ந்தெடுத்த
ஆகச்சிறந்த புகழுரையை மிஷ்கின் என்ற தனி நபரின் பார்வையாக
கடந்து சென்றுவிட முடியுமா..? 

பெண்கள் தெரிந்தே சதைப் பண்டமாற்று செய்துவிட்டு அதன் பிறகு
ஆண்களைக் குற்றம் சொன்னால் , இவளைப் பற்றித் தெரியாதா..
இது நடக்கலைனு இவ இன்னிக்கு குற்றம் சொல்ல வந்துட்டா
என்று சொல்ல ஆரம்பித்தால் இந்த வலையில் விழுந்த
எந்த மீன்களும் தண்ணீருக்காக துடிப்பது சமூகக் குற்றமாகிவிடும்
ஆபத்து உண்டு.
11 வயது ஊடல் ஊனமுற்ற பெண் குழந்தையை இளைஞன்
முதல் கிழவன் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் சமூகத்தில்
வாழ்கிறோம் நாம். ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல
பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து
சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கும்
சதை வியாபாரிகளைப் பற்றிய ஒரு சமூகப்பிரச்சனை.
ஶ்ரீ ரெட்டியின் கற்பை உரசிப் பார்த்து சோதிக்கும்
தூய்மைவாதிகள் பத்தினிகள் மட்டுமே பேச வேண்டிய
கற்பு வாத பிரச்சனையாக்கி இதை திசை திருப்புகிறார்கள்
ஶ்ரீ ரெட்டியின் சில வரிகள்:
பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லாத இடம் தெலுங்கு
 திரையுலகம். பெரிய நடிகைகள் முதல் வளர்ந்து வரும் 
நடிகைகள் வரை அனைத்து நடிகைகளும் படுக்கைக்கு
 செல்ல வேண்டியதாக உள்ளது. 
தெலுங்கு பெண்கள் கருப்பாக இருப்பதால் 
அவர்களை ஹீரோயினாக்குவது இல்லை.
தெலுங்கு நடிகைகளை நடிக்க வைத்தால் ஷூட்டிங் 
முடிந்ததும் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள்.
 வெளிமாநில நடிகைகளை நடிக்க வைத்தால் 
அவர்கள் ஷூட்டிங் முடிந்த உடன் ஹோட்டலுக்கு
 செல்வார்கள். அங்கு அவர்களுடன் உல்லாசமாக 
இருக்கலாம் என்பதால் வெளிமாநில நடிகைகளை
 அதிக அளவில் நடிக்க வைக்கிறார்கள் என்றார்  ஶ்ரீ ரெட்டி.
Show More Reactions

Tuesday, July 17, 2018

தாலிப்பனைதாலிப் பனை பூத்துவிட்டது..
யுகம் யுகமாய் காத்திருந்தப் பின்
தாலிப்பனை பூத்துவிட்டது
முதல் பூவே, கடைசி பூவாய்
தாலிப்பனை பூத்துவிட்டது.
எனக்காக அவன் நட்டுவைத்திருந்த
தாலிப்பனை பூத்துவிட்டது.
யுகங்கள் கடந்துவிட்டன.
அவன் வர வேண்டிய நேரமிது.
அவன் தலைமுடியும் பாதமும் தேடி
அலைந்தவர்கள் திரும்பிவிட்டார்கள்.
தாலி பனை பூத்துவிட்டது.
தோலுரித்த பாம்பை போல
சுருண்டு படுத்திருக்கிறாள் அவள்.
மேகம் இருண்டு மலைகள் பிளக்கும் ஓசை.
மத நீர் வழியும் களிறுகள்
அவளை அசைக்கின்றன.
புத்திரர்கள் வாரிசுகளுடன் வரிசையாக
காத்திருக்கிறார்கள்.
குமாரத்திகள் புறப்பட்டுவிட்டதாக
செய்திகள் வருகின்றன.
அவள் கவிதைகள் மவுனத்தில் உறைந்து
கனமாகிவிடுகின்றன.
அவள் பாடல்களை இசைத்தப் பாணர்களும்
விறலியரும் காந்தரப்பண் இசைக்கிறார்கள்.
கண் விழிக்காமல் படுத்திருக்கிறாள்..
தாலிப் பனை பூத்துவிட்டது
ஒற்றை பூவிதழை தோழி எடுத்துவருகிறாள்.
யுகங்களாக காத்திருந்தவள்
கடைசியாக கண்திறக்கிறாள்.
தாலி பனை பூத்துவிட்டதை
பூவின் வாசனையும் தோழியின் முகமும்
சொல்கின்றன.
அவன் குலச்சின்னங்கள் எழுதிய
தாலியுடன் அவர்கள் காத்திருக்கிறார்கள்.
அவன் வந்துவிடுவா னா.
கொற்றவை மணல் காட்டில் மழைத்துளிகள்.
கனவோ.. கற்பிதமோ
ஓம் நமசிவாய..
ராஜ நாகங்கள் ஆடுகின்றன.

Friday, July 13, 2018

கலிங்கத்துப் பரணி


படைப்புக்கும் பிரம்மத்திற்கும் நடுவில்
அவள் பிரபஞ்சம்
நிலவு வானம் மலர் மாங்கனி
அவளை உங்கள் கண்களால்
பார்த்துக்கொண்டதற்கு
அவள் பொறுப்பல்ல.
அவளுடைய இன்னொரு முகம்
கொலைமுகமாக உங்களைப் பயமுறுத்துகிறது.
கழுத்தில் மண்டையோட்டு மாலையைப் போட்டு
கையில் சூலாயுதம் கொடுத்து.
நாக்கை நீட்டித் தொங்கவிட்டு..
நடுக்காட்டில் நிறுத்திவிட்டீர்கள்.
குருதியின் வாடை
நாய்களின் ஓலக்குரல்
பாலைவெளி எங்கும் அவள் வழித்தடம்
வெயிலையே நீராகக் குடித்து குடித்து
வெந்து தணிகிறது அவள் வேட்கை.
ஐம்படைத் தாலிகள் அறுபடுகின்றன.
வேல்முனையை முத்தமிடுகிறாள்.
குருதி வழியும் பீடத்தில்
ஒவ்வொரு பூக்களாக உதிர்கின்றன.
கலிங்கத்துப்  பரணியின் கதவுகளை
களிறுகள் கொண்டு உடைக்க நினைக்கிறான்
ஒட்டக்கூத்தன்.

Tuesday, July 10, 2018

ராஷி.. RAAZI .. உண்மைக்கதை..


ராஷி.. RAAZI

இந்தியாவுக்காக ஒற்று வேலைப் பார்த்த இந்தியப் பெண்ணின் 
உண்மைக்கதை.
1971 இந்திய பாகிஸ்தான் போர்க்களத்திற்கான பின்னணி ஆய்வு.
பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளைக் கண்காணிக்க
பாகிஸ்தானின் இராணுவ அதிபதி வீட்டுக்கே
 திட்டமிடப்பட்டு மருமகளாக மணமுடித்து
சென்ற இந்தியப் பெண்ணின் கதை. 

ஹரிந்தர் சிக்க 2008ல் எழுதிய நாவல் “CALLING SEHMAT” . 
அந்த நாவலில் உண்மையான
அவளின் அடையாளம் புனைவுகளுக்குள் பொதிந்து 
வைக்கப்பட வேண்டும் என்பதே
பலரின் வேண்டுகோளாக இருந்தது
அப்புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்த காஷ்மீரின்
பரூக் அப்துல்லா முதல் அப்பெண்ணின் முதல் காதலாக இருந்த 
அபிநவ் வரை..
(டில்லி பல்கலை கழகத்தில் அவளுடன் படித்தவர்)
அவளை அப்படியே அடையாளம் காட்டுவதை 
விரும்பவில்லை. அவள் கற்பனை அல்ல.
அவள் நிஜமாக வாழ்ந்தப் பெண்

அதுவும் சமீபத்தில் தான் இறந்துவிட்டார்.
இத்துணை பின்பிலத்துடனும் RAAZI 
திரைப்படத்தைப் பார்க்கும் போது 
ஒவ்வொரு காட்சியும் அதன் வசனங்களும்
மிகையில்லாத நடிப்பும்.. 
அதிலும் குறிப்பாக இந்திய உளவுத்துறை/இராணுவத்திற்காக 
வேவு பார்த்த கதாபாத்திரத்தில் நடித்த 
நடித்த அலிய பட், அவள் மணமுடித்த 
பாகிஸ்தானிய இராணுவ வீரன் விக்கி குஷால்..
இதில் விக்கி குஷாலின் நடிப்பும் வசனமும் கத்தி மேல் நடப்பது போல.
கொஞ்சம் பிசகினாலும்தேசத்துரோகிபட்டம் தான்
கதைக்கும் கதையைப் பார்ப்பவர்களுக்கும் கூட கிடைத்துவிடும்
 . ஆனால் கதையை நகர்த்தி சென்றிருக்கும்
விதமும் அளவான மிகவும் கவனமாக கோர்த்திருக்கும் வசனங்களும் .. 
என்னை மிகவும் கவர்ந்தவை.
பாகிஸ்தானியர்கள் என்றாலே வில்லன் வேடம்
எதிர்மறை கதாப்பாத்திரம் என்ற
ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது
அதிலும் இந்தியப்பெண் பாகிஸ்தான்
இராணுவ தளபதியின் வீட்டுக்கு போகிறாள். இராணுவ தளபதியின் மகனை
மணக்கிறாள்.. திட்டமிடப்பட்டே எல்லாம் நடக்கிறது
பாகிஸ்தானின் அவர்கள்
வீட்டில் அவள் வாழ்க்கை
அவளை அவர்கள் எதிர்கொள்ளும் மன நிலை
கணவனின்  கம்பீரம்,
 முதலிரவு என்றவுடனேயே பசித்திருக்கும் புலியைப் போல பாயாமல்
காத்திருக்கும் ஆண்மை… 
கதையின் போக்கில்  காட்டப்படும் அவனுடைய பண்பட்ட நாகரிகம்,
பெண்மையை மதிக்கும் குணம்.. 
கூட்டுக்குடும்பத்தின் பாசமும் நேசமும்..
பிரிவினைக்கு முந்திய உறவைத் தொடர
இந்திய மண்ணிலிருந்து பெண்ணைத் தேடி
மணமுடிக்கும் இராணுவதளபதி
எல்லாம் முடிந்தப் பின் … 
அவள் யார் , அவள் இந்தியாவுக்காக அங்கிருந்து செய்ததெல்லாம்
தெரிய வர அவள் தப்பித்து வரும் காட்சி
அவளை அங்கேயே முடித்துவிட நினைக்கும்
இந்திய உளவுத்துறை.. அதிலும் தப்பித்து வந்து.. 
அவள் கேட்பாள் பாருங்கள்
ஒரு கேள்வி… , 
ஏன்.. ஏன் .. இதெல்லாம் செய்றீங்க!’ 
அவள் உடைந்து அழும்போது அக்கேள்வியின் கனம்
நம்மீது பாறாங்கல்லாக இறங்கும்.
அதே நேரத்தில் அவளைக் குற்றவாளிக்கூண்டில் 
பாகிஸ்தானில் இருக்கும் அவள்
கணவர் குடும்பம்…. பாகிஸ்தானிய இராணுவதளபதி.. 
ஒரு இந்தியப் பெண்.. அதுவும்
ஒரு சின்னப்பொண்ணு.. நம்ம வீட்டுக்கே வந்து இவ்வளவும் 
செய்திருக்கா.. அவளை!”
கர்ஜிக்கும் போது.
.”அப்பா.. நாம் என்ன செய்கிறோமோ அதைத்தானே அவளும்
அவள் நாட்டுக்காக செய்தாள்என்று மெல்ல சொல்லும் அவர் மகன்
அதாவது
இந்தியப் பெண்ணின் கணவன்.
. இந்த இடத்தில் கதையும் கதைப்பாத்திரமும்
கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும். i respect you iqbal.
I love you Sehmat.


வெளியில் தெரியாத பலரின் கதைகளில் இதுவும் ஒன்று.
இப்படி எல்லாம் நடக்கிறது.. நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எனக்கும் பாகிஸ்தானில் தோழி ஒருவர் உண்டு.
அவரை நான் வங்கதேசத்தில் HOPE FOUNTATION’ ல் நடந்த
CERI conference ல் சந்தித்தேன். அதன் பின் சில காலம் தொடர்பில்
இருந்திருக்கிறேன். வங்க தேசத்தில் ஒரு ஓவியரும் முன்னாள் நீதிபதி
ஒருவரும் நண்பர்களாக இருந்தார்கள். மா நகரக்கவிதா மும்பை 
 நிகழ்வு மூலமாக அறிமுகமானோம்.
இதெல்லாம் கடந்தக் காலமாகிவிட்டது.  வேறு வழி??!


Monday, July 9, 2018

இதெல்லாம் பரீட்சையில் சகஜம் பாஸ்


136 IPS அதிகாரிகள் தேர்வு எழுதியதில் 
133 ஐபிஎஸ் அதிகாரிகள் ஃபெயில்.
மொத்தமே 3 பேர் தான் பாஸ் மார்க் எடுத்து பாஸானவர்கள்.
இந்திய காவல்துறை அதிகாரிகளுக்கான
 பயிற்சி வகுப்பு ஹைதராபாத்தில் இருக்கும்
சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகடெமியில் 
நடைபெறுகிறது. 
2018ல் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் தான் இது.
Only three of 136 IPS officers clear exams
08 Jul 2018
133 of 136 IPS-officers fail exams, but still in service
அதுவும் 45 வாரங்கள் பாடம் சொல்லிக் கொடுத்து 
ப்ராக்டிகல் வகுப்பு நடத்தி..
ரிசல்ட் இப்படி வந்தால் என்ன செய்யமுடியும்?!
எனவே மூன்றுமுறை தேர்வு எழுதி பாஸ் செய்யலாம்
என்று சலுகை இருக்கிறது. 
3 தடவையும் எழுதி பாஸ் செய்யலைன்னா 
என்ன செய்வார்கள் என்று தெரியாது.
சரி அப்படி என்ன தான் கேள்விகேட்டு நம்ம போலீஸ்
 அதிகாரிகளைத் திணறடிக்கிறார்கள் என்று பார்த்தால்..
கேள்விகள் ..இந்தப் பாடங்களிலிருந்து தான் 
கேட்கப்படுகிறதாம். 
Indian Penal Code (IPC), Criminal Procedure Code (CrPC), 
Evidence Act and forensic science, 
and outdoor subjects like weapons,
 swimming, horse-riding and unarmed combat.
நம்ம போலீஸ் அதிகாரிகளிடம் இப்படி எல்லாம் 
அவர்களுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு 
அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று 
பொதுஜனம் சார்பாக ஒரு மனு கொடுக்க வேண்டும்.

Sunday, July 8, 2018

அவள் மொழிசொற்களை ஊடறுத்தல் யுத்தம் தான். 
அவள் அந்த போர்க்களத்தில் நிராயுதபாணியாக
ஏன் நிர்வாணமாகவும் கூட .

சக்தி மிக்கதெல்லாம் ஆண் என்றாய்.
அதுவே நன்று என்றும்
உனக்கு இனிமை தருவதெல்லாம் 
பெண் என்றாய்.
பெண் இனிமை என்றாய்.
பெண் அழகு என்றாய்.
உன் சொல்லை நம்பாதவர்களை
சிறையிலிட்டாய், தூக்கிலிட்டாய்.
அவர்கள் வாழ்ந்த அடையாளங்களை
துடைத்து எறிந்தாய்.
உன் அகராதிகள் அவளுக்கானதாக இல்லை..
உன் நுகர்வு இன்பத்தின் அடிப்படையில்
இனிமையும் அழகும் தீர்மானிக்கப்பட்டிருக்கும்
சூத்திரங்களை அவள் கண்டடைகிறாள்.
சூத்திரதாரிகளின் கட்டுமானங்களை 
அவள் உடைக்க நினைக்கிறாள்.
கிளிப்பிள்ளைகளைக் கொண்டாடும் கூட்டத்தில்
அவள் மொழி அயல்மொழியாகிறது.
அவள் தீட்டாகிறாள்.
இருளுக்குள் அவளை அடைத்துவிட 
சூரிய சந்திரர்கள் முடிவு செய்கிறார்கள்.
நட்சத்திரப் பெண்கள் அந்தப்புரத்தை
அலங்கரிக்கிறார்கள்.
போரின் வெற்றி முரசு ஒலிக்கிறது.
அவள் யுத்தங்களை வெறுக்கிறாள்.
தேச எல்லைகளைக் கடந்து விட துடிக்கிறாள்.
மொழிகளின் எல்லைகள் அவளை அகதியாக
துரத்திக் கொண்டே இருக்கின்றன.
பனிக்குடம் உடைந்து கடலின் அலைகளாய்
அவள் கரை எங்கும் ..
மணல்வெளி எங்கும் அவள் மொழியின் பிரவாகம்.
துவாரகைக் கடலில் மூழ்கிக்கொண்டே இருக்கிறது.
வெண்சங்குகள் கரைகளில் ஒதுங்குகின்றன.Sunday, July 1, 2018

தமிழ்த்தாய் தாம்பூலம் தரிக்க வேண்டும்
இன்றைய மோசிகீரனார்கள் எவரும்
முரசுக்கட்டிலில் களைப்பு மிகுதியால்
உறங்குவதில்லை.
அவர்களிடம் சொந்தமாக அரண்மனையே இருப்பதால்
வெண்சாமரம் வீசுவதற்கு மட்டும் 
அரசர்களையே பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.
இவர்களின் கூட்டணியில் 
கலையும் இலக்கியமும் செழித்து செழித்து
அடர்ந்து படர்ந்து 
பல்கலை கழகத்தின் வாசலுக்கும்
பத்திரிகையின் அட்டைப்படங்களுக்கும்
அலங்காரமாகிவிடுகின்றன.
இதில் பெண்ணியம் வண்ணமயமாகவும்
ஆணியம் கறுப்பு வெள்ளையில் இருப்பதாகவும்
ஆய்வாளர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

புகழ்வதற்கோ கொண்டாடுவதற்கோ
காரணங்கள் தேவையில்லை
வைரமுத்து நன்றாக கிரிக்கெட் ஆடுவார் 
என்று நான் சொன்னால் 
நீங்கள் இல்லை என்றா சொல்லிவிடப் போகிறீர்கள்?!

சரி.. 

இலக்கியத்தை கொச்சைப்படுத்துகின்ற
இலக்கியத்தை விற்றுப்பிழைக்கின்ற
கலை இலக்கியத்தை
தன் அதிகாரத்தாலும் பணத்தாலும் 
விலைக்கு வாங்கி அதையும்
ஆரவாரமாகக் கொண்டாடுகின்ற
சமூகம் சீரழிந்துவிடும்.
அந்தச் சீரழிவைக் கொண்டாடும் கூட்டம்
அந்தச் சீரழிவை கேள்வி கேட்காத கூட்டம்
500 ரூபாய்க்கும் 1000 ரூபாய்க்கும்
தன்னை விற்றுப்  பிழைக்கின்ற
மானங்கெட்ட குடிகாரக் கூட்டம்
இந்தக் கூட்டத்திற்கு ஜால்ரா போடும்
அவன் இவன் அவன் சாகாக்கள் இவன் சகிகள்
தலையில் ஒளிவட்டத்தைச் சுமந்து 
திரிகின்ற பாவனையில்
சொற்களை ஒலிக்குப்பைகளாக
துப்பிக்கொண்டிருக்கிறது 
உங்கள் கூட்டம்.
எச்சிலைத் துடைத்துக் கொள்.
என் சிவகாமி தாம்பூல தட்டுடன் 
ஊஞ்சலில் ஆடுகிறாள்.
இதோசுண்ணாம்பு தடவி
நடு நரம்பை எடுத்துவிட்டாள்.
நுனியையும் காம்பையும் கிள்ளிய கையால்
சாதிக்காயை துண்டுகளாக நொறுக்குகிறாள்.
ஏலக்காயும் கொட்டைப்பாக்கும் 
அவள் தாம்பூலத்திற்குள் மறைகின்றன.
அவள் தாம்பூலம் தரிக்கிறாள்.
எச்சிலை எச்சிலால் துடைப்பாளோ
எச்சிலை நஞ்சாக்கி அழிப்பாளோ
காத்திருக்கிறது பவளபற்பங்கள்.
அவள் சக்கையைத் துப்ப தெரிந்தவள்.
வயிற்றுப்புண்ணுக்கும் செரிமானமின்மைக்கும்
தாம்பூலம் தரிப்பது நல்லது.
இலக்கியவாதிகளுக்கும் இது பொருந்தும்.
தற்காத்துக் கொள்ள
தமிழ்த்தாய் மறக்காமல்
தாம்பூலம் தரிக்க வேண்டும்.


Saturday, June 30, 2018

அந்த நான்
அந்த நான் 
இப்படித்தான் இருக்க வேண்டும் 
இதைத் தான் செய்ய வேண்டும்
இதைத்தான் பேச வேண்டும்
இப்படித்தான் உடுத்த வேண்டும்
இன்னாரிடம் தான் பழக வேண்டும்
இப்படியாக அவரவர்க்கான நான்
அவர்களை மகிழ்விக்கும் நான்
அவர்களின் பார்வையில் நான்
அந்த நான் எப்போதும் நானாகவே
இருப்பதில்லை என்பதால் தான்
அந்த நானிலிருந்து இன்னொரு நான்
எப்பொதாவது விழித்துக்கொள்கிறது.
அந்த நானை அவர்கள் 
கருக்கலைப்பு செய்ய முயற்சித்து தோற்றுப்போகிறர்கள்.
அந்த நான் அவர்களை எப்போதும்
அச்சுறுத்திக் கொண்டே இருப்பதாக
அவர்கள் நினைப்பதை
இந்த நான்இல்லைஎன்று சொல்வதில்லை.
அதனால் கடுப்பாகி அந்த நான்
காட்டேரி, பேய், பிசாசு, மோகினி
என்று அழைக்கிறார்கள்.
அடிக்கடி அவர்களே பேயோட்டும் மந்திரங்களுடன்
அந்த நானை விரட்டிவிடும் வேகத்தில்
புளியம் கம்பால் அடிக்கிறார்கள்.
அந்த நானின் கதறல் 
அவர்களின் ஆத்திரத்தை தணிக்கிறது.
கைகள் சோர்ந்து அவர்களே 
நிறுத்திக் கொள்கிறார்கள்.
நானின் காயங்கள் ஆறாமல்
சீழ்ப்பிடித்து அவர்களைச் சுற்றி
நானின் நாற்றமெடுக்கிறது.
இப்போது அவர்கள் நானை
விரட்டிவிடலாம் என்று ஒருமனதாக
தீர்மானிக்கிறார்கள்.
அந்த நான் விரட்டப்படும் போது
அவர்களும் அகதிகள் ஆகிவிடும்
அபாயம் இருப்பதை
அவர்களின் சட்டங்கள் சொல்கின்றன.
அவர்கள் இப்போது அவர்களுக்குள்
சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள்.
அந்த நானை யார் வெறுத்தது?
அந்த நானை யார் அடித்தது?
அந்த நான் செய்ததை எல்லாம்
யார் யார் மறந்தது?
அவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்
சொல்லிக்கொண்டு 
அவர்களுக்குள் யுத்தம் நடத்துகிறார்கள்.
அந்த நான்.. நினைவுகள் தப்பிய 
அந்த நான்.. கோமாவில்
அமைதியாக படுத்திருக்கிறது.
அந்த நானின் இந்த நான்
இன்னும் உயிர்ப்புடன்
மோகினியாக காட்டேரியாக
காடுகளிலும் வீடுகளிலும்.

Wednesday, June 27, 2018

நிசப்தம்.. என்ன குற்றமா?!!


“Nishabd “.. திரைப்படம். தமிழில் சொல்வதானால்நிசப்தம்
இச்சமூகம் ஏற்றூக்கொள்ள மறுக்கும் கதை.
ஆனால் சமூகத்தில் தொடரும் கதை.
குடும்பம், கலாச்சாரம், பண்பாடு இத்தியாதி அனைத்திற்கும்
இந்த நிசப்தம் ஒரு இடி போல .. 
இந்த  நிசப்தம் .. யாருக்கும் விருப்பமில்லை.
இந்த நிசப்தம்.. ஓவ்வொருவரையும் சுற்றி 
வெவ்வேறு காலக்கட்டங்களில்
எதோ ஒரு வகையில்.. 
நிசப்தம்.. 
நிசப்தம் ஏன் வாழ்க்கையில் நுழைகிறது?
நிசப்தத்தில் ஏன் குடும்பங்கள் சிதைகின்றன.?
நிசப்தத்தில் வாழ்ந்துவிட முடியுமா?
நிசப்தம் இருப்பதை ஏன் மொழிகளின் ஓசைகள்
பேசுவதே இல்லை!
நிசப்தத்திற்கு பலியானவர்கள் பெரும்பாலும்
யாராக இருக்கிறார்கள்?
சமூகம் நிசப்தத்தைக் கண்டு ஏன் இவ்வளவு தூரம்
அச்சப்பட்டு ஓடுகிறது?
நிசப்தம்.. என்ன அவ்வளவு கொடூரமானதா?
***
நிசப்தம் அழகானது தான்.
நிசப்தம் ஒரு மவுனத்தின் கவிதை.
நிசப்தம் .. தந்தையின் அரவணைப்பை
மீட்டுத்தரும் இன்னொரு பிறவி.
நிசப்தம் .. அறிவுக்களஞ்சியத்தின் தோழமை உறவு.
நிசப்தம் .. ஓர் இனிய காதல்.
நிசப்தம் ..

***

அமிதாபச்சனின் நடிப்பும் அமித் ராயின் காமிராவும் நிசப்தத்தை
தனித்துவமாக்கி இருக்கின்றன. ராம் கோபால் வர்மா டைரக்ஷனில்
குஷியின் கதை. 
நிசப்தம் குற்றமா? 
அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களா?
தீர்ப்பு சொல்வதற்கு நாம் யார்?
நிசப்தம்.. தற்கொலை செய்து கொள்ளாமல்
நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. கதையின் முடிவு..
நிசப்தத்தின் வெற்றி. 

(2007 ல் வெளியான படம். நான் இப்போ தானே பார்த்தேன்.!)