Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Friday, November 3, 2023

பத்தமடை... நீங்கள் மறப்பது ஏன்?

 பத்தமடை. -

ஏன் சொல்லப்படவில்லை?
சொனனா அந்தக்குளத்தின் பெயரும் சொல்லியாக
வேண்டும் என்பதாலா?
அடேங்கப்பா.. ஒரு குளத்துக்கே
இவன் பெயரா!
அப்போ இவன் அந்த ஊரில்
யார்?
இதெல்லாம் தெரியவரும்.
பத்தமடை என்றால்
பத்து மடைகள் கொண்ட ஊர்.
மடை என்பது ஆறு, குளம், ஏரி, கால்வாய்களில்
தண்ணீர் வெளியேற அமைக்கப்பட்டிருக்கும் வழி.
இந்த வழியை கதவு கொண்டு அடைத்து வைத்திருப்பார்கள்.
மடையின் கதவு திறந்துவிட்டால்,
'மடை திறந்த வெள்ளம் போல' தண்ணீர் வெளியேறும்.
ம்ம்ம்ம்...
பத்தமடை என் சொந்த ஊர்.
இப்போதும் வீடு இருக்கிறது.
(கதவுகள்தான் பூட்டி இருக்கின்றன!)

பத்தமடை என்றவுடன் ' பத்தமடை பாய் '
என்பதோடு பத்தமடை வரலாற்றை
எழுதி முடித்துவிடுவார்கள்.
ஆனால் பத்தமடை பெயர்க்காரணத்தை
மறந்தும் பேச மாட்டார்கள்.
ஊர்ப்பெயரிடுகையில் 'மடை' என்ற நீர்மேலாண்மை
கொண்ட ஊர்ப்பெயர்களில்
யாரும் ஏன்
பத்தமடை குறித்து அறிந்திருக்கவில்லை!
அந்த பத்துமடைகளுக்கு
எந்தக் குளத்திலிருந்து நீர் வெளியேறியது
என்பதையும் சொல்லியாக வேண்டும் என்ற
கட்டாயம இருப்பதால்
அதைச் சொல்வதில் அவர்களுக்கு
சங்கடமிருப்பதால்
பத்தமடையை சொல்லாமல் விட்டுவிடுகிறார்களோ..
தெரியல.

அவர்கள் சொல்லாவிட்டால் என்ன?
நாம சொல்லிடுவோம்.
அந்தக் குளத்தின் பெயர்
"பறையன் குளம்"


பிகு: பத்தமடை திரு நெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி
அருகில் இருக்கும் ஊர். பத்தமடை "பாய்" உலகப்புகழ் பெற்றது.

Saturday, April 15, 2023

மயிர் வெறும் மயிரல்ல

 மயிர் வெறும் மயிரல்ல



மயிருக்கு வரலாறு உண்டு.
அதை வைத்துக்கொண்டு மயிர்ப்பிடுங்கும்
கலாச்சார மயிராண்டிகள் செய்த அட்டகாசங்கள்
கணக்கில்லாதவை.
இன்றைக்கு “மீசை என்பது வெறும் மயிரு”
என்று சொல்வதற்குள் மயிரு என்ன
பாடுபட்டிருக்கிறது என்பது
மயிரின் நீண்ட வரலாறு.
பாதாதி கேச, கேசாதி பாத வரையறைக்குள்
இதை அடக்கிவிட முடியாது.

அந்த வரலாற்றின் எச்சமாகத்தான்
பழனியும் திருப்பதியும் மொட்டைகளுடன்
இன்றும் காட்சி அளிக்கின்றன.
“உயிரைக்கொடுத்த சாமிக்கு
மயிரைக்கொடுப்பது”
ஆகச்சிறந்த காணிக்கையாக கருதப்பட்ட து
ஏன்?
இது வெறும் சடங்கல்ல,
அதிலும் பெண்ணுக்கு மயிர் என்பது
அவள் உயிர்
அவள் கற்புடே.
அது அவள் தலைவனுக்கு மட்டும்ம்ம்மேஏ..
சொந்தம்.
“கூந்தல் கறுப்பு ,
குங்குமம் சிவப்பு
கொடுத்தவள் முகமோ
தாமரைப்பூ..”
இப்படியாக கூந்தல் ரொம்ப முக்கியம்.
சங்ககாலம் முதல்
இன்றைய கணினி காலம் வரை.
அது இல்லைனா
அழகில்லை.
காதலும் இல்லை, உறவும் இல்லை
உறவில் ஈர்ப்பும் இல்லைனு
சொல்ற அளவுக்கு
மயிரு மனுஷனை ஆட்டிப்படைச்சிருக்கு.
அவன் செத்துப்போயிட்டா
அவனோட சாகணும்.
அதுமுடியாட்டி அவனுக்குப் பிடித்தமான
அவனுக்கு உரிமை உடைய
மயிரைக் கழியணு,ம்.
இந்த மொட்டை அடிச்சி முக்காடு போட்டு
பெண்ணை கைம்பெண் ஆக்கியதற்கு
ஆரியப்பண்பாடு காரணம் என்று
ஒரே போடா போட முடியாது.
இந்தக் கருமம், கண்ட்ராவி எல்லாம்
சாட்சாத் நம்மாளுக வச்சிக்கிட்டதுதான்.
இதனோட செல்வாக்கைப் பார்த்திட்டு
அவர்களும் தங்கள் பெண்களுக்கு
மொட்டையைக் கட்டாயமாக்கினார்கள்
என்பது இன்னொரு வரலாறு.
(ஆதாரம்: சங்க இலக்கிய மறுவாசிப்பு,
சமூக மானுடவியல் ஆய்வுகள் நூலில் 'சங்கப் பண்பாட்டில்
கூந்தல் களைதல்' கட்டுரை பக் 156)

யூதர் சமூகத்தில் திருமணமான பெண்களின்
கூந்தலை கணவனைத் தவிர அடுத்த ஆண்கள்
காண்பது அவளுக்கு இழுக்கு.
கூந்தல் மீது கொண்ட மோகம்
இப்போதும் குறையவில்லை.
அது வெவ்வேறு வடிவங்கள் எடுக்கிறது.
ஆணுக்கு மீசை இருந்தா கருப்பசாமி;
மீசை இல்லாட்டி கிருஷணசாமி
இரண்டு சாமியும் பெண்களின்
ரசனைக்கேற்றபடி ஓகே ஆகிவிடுவார்கள்.
ஆனா பாருங்க..
இன்னிக்கு வரைக்கு
பெண்ணுக்கும் கூந்தலுக்குமான
தொடர்பு அறுபடவில்லை.
இந்த மயிரில் என்னடே இருக்குனு
அம்புட்டு எளிதா
கடந்துப்போக முடியாமல்
சரவணா..
நாங்களும் தான் “டை” அடிக்கிறோம்.
ச்சே..

Thursday, April 13, 2023

உனக்கு மரணமில்லை.



 I am not in the habit of entering into controversy with my opponents

unless there are special reasons which compel me to act otherwise.

my opponent being the Mahatma himself, I feel I must attempt to

meet the case to the contrary which he has sought to put forth.

அண்ணலின் கட்டுரையை ஹரிஜன் இதழில்
மீள்வாசிப்புக்கு கொண்டுவருகிறார் மகாத்மா.
(ஜட்பட் மண்டலுக்கு தயாரித்து அழைப்பு மறுக்கப்பட்ட
அதே கட்டுரை!)
அது குறித்து காந்திக்கு நன்றி சொல்லும் அண்ணல்
அக்கட்டுரையில் தான் முன்வைத்திருக்கும் எந்தக்
கேள்விக்கும் மகாத்மா பதில் சொல்லவில்லை.
ஆனால் கட்டுரையின் தரவுகள்மீது நம்பிக்கை இல்லை
என்று சொல்கிறார்,
அதைச் சுட்டிக்காட்டும் அண்ணல் அம்பேத்கர்,
தரவுகள் நீங்கள் மதிக்கும் சமஸ்கிருத புலமைமிக்க
திருவாளர் திலகரிடமிருந்து பெற்றவை என்று
பதில் சொல்லி இருக்கிறார்..
மகாத்மாவும் ஹரிஜன் இதழும் இதை
எப்படி எதிர்கொண்டிருக்கும்??
வழக்கம் போல கடந்து சென்றிருக்குமா!?
.
எதையும் கள்ள மவுனத்தில் கடந்து செல்வது
எளிது.
ஆனால் வரலாற்றில் அந்தக் கேள்விகள்
எப்போதும் நிற்கும்?
அதைக் கடந்து செல்ல முடியாமல்
வரலாறுகளை சிதைக்கலாம்.
குடி நீரில் மலம் கலக்கலாம்.
எரிக்கலாம்
புதைக்கலாம்
அட.. என்ன நீங்கள் என்ன செய்தாலும்
அந்தக் கேள்வி
மீண்டும் மீண்டும் முளைக்கும்.
அப்போதெல்லாம்
நீ பிறக்கிறாய்.
உனக்கு மரணமில்லை.
ஜெய்பீம்.

#puthiyamaadhavi_20230414

Sunday, December 18, 2022

ஆண் பெண் உறவு .. ஓர் அரசியல்

 ஆண் பெண் உறவு.. அது ஓர் அரசியல்..

அரசு ஒப்பந்தங்களைவிட வலுவானது!
இதில் பெண்ணின் சம்மதம் தேவைப்பட்டதில்லை.
அப்புறம் என்னடா காதலும் கத்தரிக்காயும் !
எல்லாம் கைகூடிய பிறகு மனசும் உடம்பும்
அடங்கிவிடுகிறது ஆணுக்கு. அதிலும் குறிப்பாக
அதிகாரபீடத்தின் ஆணுக்கு.
கலிங்கத்து வெற்றிக்குப் பின் சக்கரவர்த்தி அசோகன்
மனம் மாறிபவுத்தம் தழுவினார் என்பதை கற்பித்த
நம் சரித்திரப்பாடம் எனோ அவர் பாட்டனார்
சந்திரகுப்த மெளரியர் தன் 58வது வயதில்

ஜைன துறவியானதை சொல்லவே இல்லை.
அதுவும் மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியவன்.
சாணக்கியரின் மாணவன்,
அலெக்சாண்டரின் படைத்தளபதி செலுக்கஸ் நிக்கோதரின்
மகள் ஹெலினாவை திருமணம் செய்து கொண்டவன்.
அலெக்சாண்டரின் தளபதியை தோற்கடித்து
அந்த ஒப்பந்தத்தில் இந்த விநோதமான திருமணமும்
உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஹெலினாவை திருமணம் செய்யும்போது
அவளுக்கு 15 அல்லது 16 வயது.
சந்திரகுப்த அரசனுக்கு வயது 40 ஐ கடந்து விடுகிறது.
பாவம் அந்தப்பெண் ஹெலினா…
திருமண உறவைப் பாதுகாத்துக்கொள்ள
அவள் இந்திய மொழியையும் இந்திய இசையையும்
கற்றுக்கொள்கிறாள். அரசனுக்கு ஓர் ஆண்மகவையும்
பெற்றெடுக்கிறாள்.. ஆனால் இரண்டு ஆண்டுகளில்
அரசனுக்கு ஞானோதயம் வந்துவிடுகிறது.
ஜைனத்துறவியாகிவிடுகிறான்.

இன்றைய கர்நாடக சரவணபெல்கோலாவில்
ஜைனத்துறவியுடன் தங்கிவிடுகிறான்.
அரசன்,பேரரசன், ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியவன்,
கிரேக்க மாசிடோனிய அழகியை மணந்தவன்,
சாணக்கியனின் அரசியலைக் கொண்டாடியவன்.
நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவன்…
எல்லாத்தையும் விட்டுட்டு.. வந்துவிடுகிறான்.
கடைசி இரண்டு ஆண்டுகள் சமணத்துறவிகளின்
உண்ணா நோன்பிருந்து சமாதி நிலை அடைகிறான்.
இத்தனையும் நடந்திருக்கிறது. காலம் கிமு. 322 – 299.

சந்திரகுப்தர் - ஹெலினா காதலஜீலம் நதிக்கரையில் ஆரம்பித்ததாக
கவித்துவமான காதல் கவிதைகள்
நாடகங்கள் திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்கள்
நிறைய வந்துவிட்டன.
தங்கள் அரண்மனை பெண் வாரிசுகளை
திருமணம் செய்து கொடுத்து இரண்டு பேரரசுகளின்
உறவைத் தொடர்கதை ஆக்குவதை
இவர்தான் தொடங்கிவைத்திருக்கிறார்.
இதை தங்கள் அரசவை அதிகார உத்தியாக
பயன்படுத்தி வெற்றி பெற்றவர்கள் சோழர்கள்.
குறிப்பாக, ராஜராஜ சோழ வம்சத்தினர்.
எப்படி ஹெலினாவின் திருமண உறவு மூலம்
பல இந்திய ஆண்கள் கிரேக்க பெண்களை திருமணம்
செய்து கொண்ட கிரேக்க உறவு ஆரம்பித்ததோ
அதுபோலவே தான் வென்ற இடங்களில் எல்லாம்
சோழ வம்சத்து பெண்வழி உறவுகளை
விட்டு வந்திருக்கிறோம். !!
ஆண் பெண் உறவு என்பது வெறும் காதல் மட்டுமல்ல,
குடும்பம் என்ற நிறுவன உறவு மட்டுமல்ல,
அது அரசாங்க ஒப்பந்தமாக இன்றும் தொடர்கின்றது.
அதிகாரத்தில் இருப்பவர்கள்
பெண் எடுத்தும் கொடுத்தும் தங்கள் அதிகாரத்தை
பரவலாக்கி கொண்டும் வலிமைப்படுத்திக்கொண்டும்
தொடர்வதற்கு பெயர் திருமண அரசியல்.!




Wednesday, August 10, 2022

அணையாத அடுப்பு !! அதிலென்ன பெருமை??

 

 
அணையாத அடுப்பு.. அணையாத தருமம் என்றால்
அந்த தர்மத்தில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?!!!
 
கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு,
மே மாதம் 23-ம் தேதி வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு
சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக
இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. 
இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் 
பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய
இந்த அணையா அடுப்பு.
 
இந்த தர்மம் தொடர வேண்டுமென்றால் பசியுள்ள
 சாமானியர்களின் வரிசையும் தொடர வேண்டும்! 
பசியுள்ளவன் இந்த அடுப்புகளைத் தேடி
வரவேண்டும்! இல்லை என்றால் எப்படி இந்த அடுப்புகள் 
எரிந்து கொண்டே தங்கள் தர்மத்தைக் காப்பாற்றிக்கொள்ள 
முடியும்!!!! சொல்லுங்கள்.
 
பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தை 
எதிர்கொள்ளவே அவர் இந்த அடுப்பை ஏற்றினார்.
பசி போக்கினார் என்பது ஒரு வரலாறு, 
அது கடந்த கால வரலாறாக இருந்திருக்க வேண்டும்
ஆனால்..
உதவிகள் தர்ம சிந்தனையாக உருமாறும்போது
ஒரு தர்மசாலை உருவாகிறது, ஒரு சிலர் தர்மகர்த்தாக்களாகிறார்கள்.பல்லாயிரம் பேர்
அவர்களின் தர்மசாலை முன் வரிசையில் நிற்கிறார்கள்!
காலமெல்லாம் இப்படி ஒரு கூட்டத்தை பசியுடன் 
அலையவிட்டு தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் 
பெருமைப் பட்டுக்கொள்ள என்னதான்
இருக்கிறது!!!
 
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இப்போதும் 
இலவசங்களை அரசியல் கட்சிகள் தங்கள் சாதனைகளாகப் பட்டியலிடுகின்றன. இதன் சூட்சமத்தில் இருக்கும் 
சமத்துவமற்ற சமூகத்தை நாம் காண்பதில்லை.
 
அரசியல் இலவசங்கள் 
அடுத்தமுறை ஆட்சியைப் பிடிக்க உதவும்.
ஆன்மீகம் பேசும் தர்மங்கள் 
சொர்க்கலோகத்தில் இடம் கொடுக்கும் !
எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான்.
 
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.”
சரவணா…
நம் முப்பாட்டன் முடமோசியார் இதை எல்லாம்
யோசிச்சிருக்கான்ய்யா..

 

Thursday, June 30, 2022

சைபுன்னிஷா - சிவாஜி காதல்


 

அவள் முகலாய சாம்ராஜ்யத்தின் இளவரசி.
அவள் காதலித்த அவனோ இந்துத்துவ சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி.
இன்றுவரை இசுலாம் – இந்து எதிர் நிலைகளில்
நிறுத்தப்பட்டிருக்கும் அரசியலில் உயிருடன் வாழ்ந்து
கொண்டிருப்பவர் அவர்கள் இருவரும்.
அந்த முகலாய அரசன் ஒளரங்கசீப்.
அந்த இந்து அரசன் சக்கரவர்த்தி சிவாஜி.
 
ஆம்…
சக்கரவர்த்தி சிவாஜியின் வீரத்தை சாதாரண மனிதனைத் 
தாண்டிய ஒரு செயலாக விரல்கள் துண்டிக்கப்பட்ட 
அவள் தளபதி பேசுகிறான். அவன் அவளுக்கு உறவு முறையும் கூட.
அவளுக்கு “அந்த வீரன் எப்படி இருப்பான்? என்ற 
கற்பனை விரிகிறது.
அவனைப் பார்க்க அவள் மனம் ஏங்குகிறது.. 
அவளையும் அறியாமல் அவள் நினைவுக்கிடங்குகளில் அவன் சிம்மாசனமிடுகிறான். ஆட்சி செய்கிறான்.
எப்படியும் அவனைச் சந்திக்கவேண்டும்..
சிவாஜியை சிறைப்பிடித்து வருகிறார்கள். 
முக்காடு அணிந்து முகம் மறைத்திருக்கும் 
அவள் கண்கள் அவனைத் தின்று தின்று காதலின்
பசியாற்றிக்கொள்கின்றன. 
அப்போதும் அச்சப்படாமல் வீரத்துடன் 
தலை நிமிர்ந்து பேசிய அவன் உடல்மொழி 
அவள் இரவுகளைத் தொந்தரவு செய்கின்றது. 
அவளுக்குத் தெரியும்.. தன் தந்தையும்
 இசுலாமிய அரசனுமான ஒளரங்கசீப் 
 என்ன காரணம் கொண்டும் தன் காதலை 
ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது. 
 
ஆனால்.. காதல் என்பது காலம் காலமாக 
 நிறைவேறாத
நிறைவேற்ற முடியாத கனவுகளுக்குள் 
தன்னைச் சிறை வைத்துக்கொண்டு 
சித்திரவதையை அனுபவிக்கிறது என்பதும்.

 

 
 
இது ஒருதலைக்காதல் தான்.
அவள் கொண்ட காதல்.. அவனுக்கும் தெரியவருகிறது.
அவளுக்குத் தெரிந்தவர்கள் “ அவள் அறிவையும் 
போர் ஆற்றலையும் அவனிடம் சொல்லிப்பார்க்கிறார்கள். தேச ஒற்றுமைகளுக்காக இந்து தேசத்து இளவரசிகளைத்
 திருமணம் செய்து கொண்ட அக்பரின் கதைகள் 
கதைகள் அல்லவே. அதையும் அறிந்தவன் மட்டுமல்ல அவனும்.
 சிவாஜியும் எட்டு பெண்களைத் திருமணம் செய்து 
கொண்டவர்தானே. காரணம் தன்னைச் சுற்றி இருக்கும் 
சிற்றரசுகளோடு இணக்கமான உறவைப் பேண
 பெண்ணும் திருமணமும் கூர்மையான ஆயுதங்களாக
 இருந்தக் காலம் தானே..
இசுலாம் தழுவினால் தன் தந்தை மனம் மாறலாம் 
என்று காதல் பித்தில்
அவள் நினைத்திருக்கலாம்..
தெரியவில்லை.
 
ஆனால்.. திருமணம் என்ற உறவில் 
தொடர முடியாத தன் ஒருதலைக் காதலைக் 
கடைசிவரை வாழ்ந்து முடித்தவள் அவள்.
அவனே என் மணவாளன், 
அவன் அன்றி இந்த இப்பிறவியில் 
எவனுடனும் ‘நிக்காக்” இல்லை 
என்று வாழ்ந்து முடிந்துப்போனாள்.
தன் கடைசிக்காலங்களில் தன் பங்கு சொத்தை 
தன் தந்தையிடம் பெற்று அவள் கட்டிய மசூதியில்
 அவள் காதலை அடக்கம் செய்தார்கள்.
 
அவள் தான் காதலித்த அவனுடைய மகன் சம்பாஜியின்
 மனைவி மற்றும் மகனை முகலாயர்கள் சிறைப்பிடித்து 
அழைத்துவந்தப் போது தன் காதலனின்
வாரிசை , மகன் வழிப் பெயரன் சாகுவை (shahu) 
தன் அருகில் வைத்துக்கொண்டு அவனுக்கு 
ஆசிரியை ஆனாள். மொழிகள் கற்றுக்கொடுத்தாள். 
வாள் வீச்சும் குதிரை ஏற்றமும் போர் முறைகளும் 
அவளே கற்பித்தாள். அவள் மனசுக்குள் இருந்தக் 
காதலை இப்படியாக அவனுடைய வாரிசு உருவில் 
கண்டு அவள் வாழ்ந்து முடிந்துப்போனாள்..
 
இது கதையல்ல. இது வரலாறு பேசாத உண்மைக்காதல்..
இதில் சம்பந்தப்பட்ட இரு ஆண்களும் ஒளரங்கசீப் – சிவாஜி –
மத அரசியலின் அடையாளமாக அரசியல் செய்பவர்களுக்கு
இப்போதும் தேவைப்படுவதால்…..
இப்போதும் கூட அவள் தன் காதலை
வெளிப்படுத்திவிட முடியாமல்..
தடை செய்யப்பட்டிருக்கிறது.!!!!
 
அவள் பெயர் .. சைபுன்னிஷா
( Zebunnissa – Zeb-un-nisha)
அவள் சூஃபி கவிஞர் என்பதும் கூடுதல் தகவல். 
புனைபெயர் மக்ஃபி
இப்போது அவள் காதலின் இன்னொரு
பக்கத்தை இத்தகவல் உங்களுக்குப் புரியவைக்கும்..
 
“ஓ மக்ஃபி..
காதலின் பாதையில் நீ தனித்தேதான்
பயணித்தாக வேண்டும்.
உனக்குப் பொருத்தமானவர்கள் யாருமில்லை,
அது கடவுளாக இருந்தாலும்..!”
இந்த வரிகள் அவள் கவிதையிலிருந்து..
அவளிடம் என்ன சொல்லட்டும்
ஆம் ... சைபுன்னிஷா..
எப்போதுமே அறிவானப் பெண்களுக்கு
காதலர்கள் கூட வருவதில்லை. !

Friday, March 18, 2022

The Kashmir Files VS Mumbai Diaries 26/11

 

காஷ்மீரைப் பார்க்கவில்லை.
பாதி உண்மையை சொல்வது என்பது
முழுப் பொய்யை சொல்வதைவிட ஆபத்தானது.
ஆனால் அந்த ஆபத்தை எப்போதும் கொழுந்துவிட்டு
எரியவைத்துக்கொண்டே இருப்பதன் மூலம் அரசியல்
ஆதாயம் தேடுகிறார்கள் என்பதை பாதிக்கப்பட்ட அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்துக்கள் விரட்டப்பட்டார்கள். உண்மை.
 ஆனால் அதைவிட உண்மை விரட்டப்பட்டதும்
பாதிக்கப்பட்டதும் 
இந்துக்கள் மட்டுமல்ல.
காஷ்மீர் – சுதந்திர இந்தியாவின் காஷ்மீரில் தான்
இதுவும் நடந்திருக்கிறது!
1991, பிப்ரவரி மாதம் 23 ஆம் நாள் “தேசியம்” என்ற பெயரால்
 POSHPORA கிராமத்தில் என்ன நடந்தது?
பாதி விதவைகள் – HALF WIDOWS இதுவும்
காஷ்மீர் தான்.
ஆனால் காட்சிப்படுத்தவோ கதையாகக்கூட எழுதவோ
முடியாது.
பார்க்காத காஷ்மீர் பயமுறுத்துகிறது.
ஆனால் நானே சாட்சியாகவும் ரத்தக்கறையுடனும்
நின்றுகொண்டிருந்த ‘மும்பை டைரிஸ் ‘ 
பயமுறுத்தவில்லை! நம்பிக்கை தருகிறது.
 
வி. டி. ரயில்வே ஸ்டேஷனில் துப்பாக்கியில்
சுட்டுத்தள்ளினார்கள்.
எம் மதிப்புமிக்க காவல்துறை அதிகாரிகளை
அவர்களின் துப்பாக்கியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.
எங்கள் மும்பையின் கம்பீரமான தாஜ் ஹோட்டலில்
அவர்கள் புகுந்து வேட்டையாடினார்கள்.
எதுவும் செய்யமுடியவில்லை. அந்த நிகழ்வு நடந்த அந்த நாளில்
(26/11) பம்பாய் மருத்துவமனையில் என்ன நடந்திருக்கும்?
காட்சியாக விரிகிறது மும்பை டைரியின் பக்கங்கள்.
காவல்துறை அதிகாரிகள் டாக்டரை உணர்ச்சி வேகத்தில்
துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்.
இப்பெரு நகரத்தின் காவல்துறை அதிகாரியைக்
காப்பாற்ற முடியாத உன் மருத்துவம்
எப்படி ஒரு தீவிரவாதியை ,
எம் மக்களை சுட்டுக்கொன்றவனைக் (கசாப்)
காப்பாற்ற மருத்துவம் பார்க்கிறது ?
அவர்களின் அந்த நாளும்
அந்த உணர்வுகளும் அப்படித்தான் இருந்திருக்க முடியும்.
ஆனால் காட்சி அதை மட்டும் காட்டியதுடன்
முடிந்துவிடவில்லை. டாக்டர் கெளசிக் சொல்கிறார்,
“என் மருத்துவம் எனக்கு சொல்லிக் கொடுத்திருப்பது
என் எதிரில் இருப்பவன் யார் என்று பார்த்து
மருத்துவம் செய்ய வேண்டும் என்றல்ல.
எனக்கு என்னிடம் வரும் எல்லோருமே
நோயாளிகள் தான்.
அவர்கள் யார் என்பதை நான் பார்ப்பதில்லை”
இரண்டுமே இந்த தேசத்தின் ரத்தக்கறை படிந்த
வரலாறுகள் தான்.
 
காஷ்மீர் பைல்ஸ் ரத்தக்கறையை எரியூட்டி
அரசியலாக்கப்பார்க்கிறது.
மும்பை டைரிஸ் .. படிந்துவிட்ட ரத்தக்கறையை 
துடைத்து மனித மனங்களை
 வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது.
 
துப்பாக்கிகளுக்கு தான் அரசியலும் மதமும்
 அதிகாரபோதையும்
வரலாறாக இருக்கிறது.
சிந்திய ரத்தங்களில் அவை இல்லை.

Tuesday, March 15, 2022

வரலாறுகள் விசித்திரமானவை.

 

தாஜ்மஹால் காதலின் சின்னம் என்ற பிம்பம் 
கட்டி எழுப்பபட்டு, உலகின் ஏழு அதிசயங்களில் 
ஒன்றான சமாதியாக வெள்ளைப்பளிங்குகளில் 
வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
 ஆனால் தாஜ்மஹாலைக்கட்டிய ஷாஜஹானுக்கு
 பல காதலியர்கள் உண்டு. 
பல மனைவியர்களும் உண்டு. 
பலதாரமணத்தை ஏற்றுக்கொண்ட அரண்மனை வர்க்கத்தின்
பிரதி நிதி மட்டுமல்ல, அதை சட்டப்பூர்வமாக 
நியாயப்படுத்தி இருக்கும் இசுலாமிய மதமும் 
 அவன் பலதாரமணத்தை குற்றமாக்கியதில்லை.
 
ஆனால் அதே இசுலாமிய சமூகத்திலிருந்து 
அதே அரண்மனை வர்க்கத்திலிருந்து 
ரொம்பவும் வித்தியாசமான ஒர் அரசன் வரலாற்றில் 
அதிகம் நினைக்கப்படுவதில்லை. 
அவன் டில்லியை ஆண்ட சுல்தான் ‘நசுரூதின் முகமதுஷா” 
இந்த சுல்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கையை வாழ்ந்தவன்.அதிசயமான அரசன். 
அவன் அரண்மனை அந்தப்புரத்தில் 
அவள் மட்டும் தான் இருந்தாள் என்பது மட்டுமல்ல, 
 அவன் அரண்மனையின் அடுக்களையிலும் 
அவள் மட்டும் தான் இருந்தாளாம்.
அதாவது அவர்களுக்கான உணவை 
அவள் சமைத்துக்கொண்டாள் ! 
 
குரானை வாசித்தும் படிஎடுத்தும்
  தொழுகையின் போது அணியும் குல்லாய் செய்தும் 
வரும் வருமானத்தில் தான் டில்லி சுல்தானும் 
அவன் மனைவியும் கடைசிவரை வாழ்ந்திருக்கிறார்கள். 
அரசு கஜானாவை தன் சொந்த செலவுக்கு 
அவன் திறக்கவில்லை. 
 
ஒருவனுக்கு ஒருத்தி என்றவுடனேயே
 சீதாராமனை கொண்டுவந்து நிறுத்துகிறோம். 
ராமன் வாழ்ந்தாரா இல்லையா 
அது வரலாறா புனைவா என்பதற்குள் போனால் 
அயோத்தி பிரச்சனை ஆகிவிடும். 
 ஆனால் வரலாற்றில் அப்படி ஒர் அரசன் 
வாழ்ந்திருக்கிறான். 
அவனும் அவன் வாழ்க்கையும் புனைவல்ல, 
நிஜம் என்பதை தேசங்கள் வரலாறாகவோ 
புனைவாகவோ கூடஎழுதிக்  கொள்வதில்லை! 
 
இப்படியான விசித்திரமான அரசர்களை 
வரலாறு நினைவில் வைத்திருப்பதில்லை. 
காரணம் அடுத்த தேசங்களுடன் போரிடுவதும்
  தன் தேச எல்லைகளை விரிவுப்படுத்திக் கொள்வதும் 
அதற்காக தன் தேசமக்களை பலியிடுவதுமாக
 வாழ்ந்த அரசர்களை, 
வரலாறு , பேரரசர்கள் என்று முடிசூடி கொண்டாடுகிறது.
 
அரசனுக்கு அற ஒழுக்கம் தேவையில்லை என்பது
பொதுப்புத்தியில் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறதோ?!!
அன்று அரசன்
இன்று தலைவன்
 
விசித்திரமான உலகம்..
வரலாறுகளும் விசித்திரமானவை!


Tuesday, December 14, 2021

சத்ரபதி சிவாஜி மகாராஜாவும் பால்காரியும்


 சத்ரபதி சிவாஜி மகாராஜாவும் அவளும்.

சத்ரபதி சிவாஜி மகாராஜாவை கோட்டைகளின் மன்னாதி மன்னன்

என்று வரலாறு சொல்வது மிகவும் சரி. அவர் ஆட்சிக்கு உட்பட்டவை சற்றொப்ப 360 கோட்டைகள் ) ஒவ்வொரு கோட்டைகளும்

அதைச் சுற்றி அவர் அமைத்திருந்த பாதுகாப்பு அரண்களும்

கோட்டை மதில்களும் அகழிகளும் மலையின் உயரமும் பூகோள

அமைப்பும் பிரமிப்பு தருகின்றன. தன் நாட்டின் பூகோள ரீதியான

அமைப்பை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு

தன் சாம்ராஜ்யத்தை  நிறுவிய அரசனாக சிவாஜி இந்திய வரலாற்றில்

முதன்மையானவராக சிவாஜியை முன்னிறுத்தலாம்.

இன்றும் அவர் கோட்டைகள் பார்வையாளர்களுக்கு பிரமிப்பூட்டுகின்றன.

ஆனால் சிவாஜியின் கோட்டைகளை அதன் உயரங்களை அதன் காவல்

அரண்களை ஒரு சாதாரண பெண் வென்றெடுத்தாள் என்பதும் அதை

சிவாஜி கொண்டாடியதுடன் அவள் பெயரால் அதே கோட்டையில்

அவள் கடந்து சென்று பகுதியில் ஒரு மதில் சுவறைக்கட்டினார் என்பதும்

புனைவல்ல, வரலாறு. இது சிவாஜியின் தலை நகரான ராய்காட் கோட்டையின் கதை.

    அவள் பெயர் ஹிர்கானி (Hirkani). அவள் ஆயர்குலப்பெண். ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்திலிருந்து பால் மற்றும் மோர் தலையில் சுமந்து வந்து கோட்டையில் கொண்டுவந்து விற்றுவிட்டு மாலையில் தன் மலையடிவார குடியிருப்புக்கு போய்க்கொண்டிருந்தவள், ஒவ்வொரு நாளும் மாலையில் கோட்டையின் கதவுகள் சூரிய அஸ்தமனத்திற்கு முன் சற்றொப்ப மாலை 6 மணியளவில் மூடப்பட்டுவிடும். அதற்குள் மலையடிவாரத்திலிருந்து கோட்டைக்கு வந்தவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு அந்த வாயில் வழியாக இறங்கிவிடுவார்கள். ஒரு நாள் எதோ ஒரு காரணத்தால் பால்காரி ஹிர்கானிக்கு சற்று தாமதமாகிவிடுகிறது. கோட்டை வாயில்கள் மூடப்பட்டு’விட்டன. அவள் வாயில்காவலர்களிடம் மன்றாடுகிறாள்.ஆனால் பாதுகாப்பு மன்னரின் ஆணையை மீறமுடியாது என்று அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். வீட்டில் அவள் கைக்குழந்தையை விட்டுவிட்டு வந்திருக்கிறாள். அவள் செய்வதறியாது திகைக்கிறாள். அவளுக்கு எப்படியும்

தன் வீட்டுக்குத் திரும்பியாக வேண்டும். 

அவள் குழந்தையிடம் போயாக வேண்டும். 

அவள் அந்தக் கோட்டையின் மறுபக்கம் வருகிறாள். 

இருட்டிவிடுகிறது !

அங்கே மதில்கள் இல்லை. 

காரணம் யாரும் ஏறவொ இறங்கவோ கற்பனை

கூட செய்யமுடியாத செங்குத்தான கரடுமுரடான மலைப்பகுதி அது.

அவள்  மலையேறி பயிற்சி பெற்றவளும் அல்ல. 

ஆனாலும் அவள் குழந்தையின் முகம் 

அந்த அழுகுரல் அவளை எதுவும் யோசிக்கவிடவில்லை.

அவள் அந்த ஆபத்தான பகுதியின் வழியாக இறங்கி தன் வீட்டுக்குப் போய்விடுகிறாள்.. ! மறு நாள் காலை கோட்டையில் வாயில் கதவு திறக்கும்போது அவளை அடையாளம் கண்டுவிட்ட கோட்டை வாயில்

காவலர்கள் நேற்று கோட்டை கதவடைத்தப் பிறகு இவள் எப்படி

மலையடிவாரத்திற்கு சென்றிருக்க முடியும் ?என்று ஐயுறுகிறார்கள்.

ஒரு பெண் .. ஒரு பால்காரி மலை இறங்கி சென்றாள் என்பதை நம்ப

மறுக்கிறார்கள். 




அவளை அரசன் முன் கொண்டு நிறுத்துகிறார்கள்.

சிவாஜி மகாராஜா அவள் மலை இறங்கிய கதையைக் கேட்கிறார்.

அப்பகுதியைப் பார்வையிடுகிறார். எவராலும் ஏறவோ இறங்கவோ’

முடியாத மலைப்பகுதி என்று எதுவுமில்லை என்பதை அப்பெண்

அவருக்கு உணர்த்திவிட்டாள். தாய்மையின் பெருமையாகவும்

இதை மராட்டியர்கள் தங்கள் பாடல்களில் கூத்துகளில் கொண்டாடுகிறார்கள்.




இன்றும் ராய்காட் கோட்டையில் அவள் இறங்கிய பகுதியில் கட்டப்பட்ட

மதில்சுவருக்கு ஹிர்கானி மதில் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

ஹிர்கானிகள் – பெண்கள் - சாதாரணமானவர்கள் தான்.

ஆனால் தேவைப்படும்போது அவர்களின் செயல்

அசாதாரணமானதாகிவிடும்!

 

 

Friday, October 8, 2021

TATA (AirINdia) & corporate social RESPONSIBILITY

 


68 ஆண்டுகளுக்குப் பின் 18000 கோடியில்

மீண்டும் ஆகாயத்தை வசப்படுத்தி இருக்கிறது
ஏர் இந்தியா மகாராஜா. இனி “ஏர் இந்தியா”
என்பது கடந்தகாலமாகிவிடும்.
இப்போதைக்கு ஒரு சின்ன ஆறுதல்
மகாராஜாவை மீண்டும் டாடா நிறுவனமே
வாங்கி இருக்கிறது என்பதும்
வேறு எந்த வெளி நாட்டு நிறுவனத்திடமும்
விற்கப்படவில்லை என்பதும் தான்!
அரசுக்கு இனி இராணுவ விமானங்கள் தவிர
வேறு விமானங்களும் இல்லை.
*அயல்தேசத்தில் போர்க்கால நடவடிக்கையாக
தன் தேசத்து மக்களை பத்திரமாக கொண்டுவருவதற்கு

இனி ஏர் இந்தியா மகாராஜா இருக்கமாட்டார்.
*இயற்கைப் பேரிடர் காலங்களில் கொரொனா போன்ற
பெருந்தொற்று காலங்களில் இந்திய மக்களின் நலனுக்காக
தொலைதூரங்கள் பறந்து கொண்டிருந்த
விமானச்சேவை இனி இருக்காது.
*ஏர் இந்தியாவில் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கும்
பணியாளர்களின் எதிர்காலம் ? விற்பனை ஒப்பந்தப்படி
இன்னும் ஓராண்டுக்கு அவர்கள் டாடா ஏர்லைன்ஸில்
இருக்கலாம். அதன் பின் அவர்களுக்கு விருப்ப ஓய்வு
கொடுக்கப்படும்.
(கார்ப்பரேட் அகராதியில் விருப்ப ஓய்வு என்பது
விரும்பி எடுப்பதல்ல!
GET OUT என்பதன் சுருக்கம் VRS)
*ஓராண்டுக்குப் பிறகும் ஏர் இந்தியா பணியாளர்களை
வைத்திருப்பதும் வெளியேற்றுவதும் முழுக்க முழுக்க
டாடா நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
அதாவது அரசு / நீதிமன்றம் /தொழிற்ச்சங்கம்
தலையிடமுடியாது.
*ஏர் இந்தியா இனி, ஏர் இந்தியா இல்லை என்பதால்
ஏர் இந்தியா இதுவரை வழங்கிவந்த சலுகைகள்
மற்றும் பணியாளர்களுக்கு வழங்கிவந்த
சில சலுகைகள், ஓய்வு பெற்றவர்களுக்கு
கொடுத்திருக்கும் சில ஒப்பந்த உரிமைகள்
அனைத்தும் இனி செல்லாக்காசாகிவிடுகிறது. !
Corporate social responsibility என்று இன்றும்
மக்களாட்சியும் மக்கள் நல அரசும் நம்புகின்ற
முதலாளித்துவ சமூகப் பொறுப்பை “டாடா”
கைவிட்டிருக்க மாட்டார் என்ற நம்பிக்கை
இருக்கிறது. டாடா மகாராஜா இன்றைய
தனியார் விமானங்களுக்கு நடுவில்
தன் தனித்துவத்தைக் காப்பாற்றுவாரா?!!
ஜன்னலைத் திறந்து ஆகாயத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. வெண்புறாக்கள்
எப்போதும் போல பறந்து கொண்டிருக்கின்றன...