Sunday, March 25, 2012

உயிர் கொண்டு அலையும் மனிதனின் பயணத்தில் ஆறா வடு




சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை.
அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும்
அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு
தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது.

போரிலக்கிய வரிசையில் போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையும் அதன் பின்னணிகளையும்
மட்டுமே சொல்லிச் சென்றிருக்கும் கதையல்ல ஆறாவடு. போர்க்காலத்தில் வாழத்துடித்த
ஓரிளைஞனின் பயணமிது. போர், காதல், சண்டை, சச்சரவு , பணம், அதிகாரம்,
கதை, கவிதை எல்லாமே எதற்காக...? மனிதன் தன் இருத்தலை எப்போதும் உணர்ந்து
கொள்ளும் தேடலுக்காக. அந்த தேடலின் பயணத்தில் போரும் காதலும்
அதிகாரமும் அவனைப் பாதிப்பதும் அந்தப் பாதிப்புகள் எழுப்பும் கேள்விகளுக்கான
பதில் தேடும் பயணமும் தொடர்கின்றன.

சயந்தனின் ஆறாவடு நாவல் இப்படியான ஒரு தேடல்தான். இந்தத் தேடல்
அமைதியான சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு விதமாகவும் போர்க்கால
சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவிதமாகவும் இருக்கிறது.
ஈழப்போரட்ட வரலாற்றில் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில்
எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல் என்ப்தால் இந்த நாவலின் ஒவ்வொரு
வரிகளும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இயக்கம் சார்ந்து (நாவலில் இயக்கம் என்ற சொல் பொதுவாக விடுதலைப்
புலிகள் இயக்கத்தையே குறிக்கிறது) செயல்படும் சூழலும் இயக்கத்திற்கு
எதிரான நிலையில் செயல் பட வேண்டிய கட்டாய சூழல் சிலருக்கு
ஏற்பட்டதையும் அந்தச் சூழல்களை இயக்கம் எவ்விதமாக அணுகியது
என்பதும் மிகவும் தெளிவாக பதிவாக்கி இருக்கிறது.

காதல் செய்கின்ற தனிமனித உரிமைக்குத் தடையாக இயக்கம் இருந்ததா?
என்ற குற்றச்சாட்டுக்கும் திருமணத்திற்குப் பின் இயக்கத்தை விட்டு
விலக அனுமதிக் கோரும் இளைஞனின் நிலைமை என்னவாக
இருந்தது என்பதையும் போகிற போக்கில் நண்பன் ஒருவனின் அனுபவமாக
சொல்லிச் செல்கிறார். "விலகுவதற்கான துண்டைக் கொடுத்தால் பங்கர்
காலத்தையும் உள்ளிட்டு எப்படியும் மூன்று வருடங்களுக்காவது பனிஸ்மெண்ட்
கிடைக்கும். அப்படியொன்றை நினைத்துப் பார்க்க விசர் பிடிக்குமாற்போல
இருந்தது. முன்னர் சண்டைகளில் அறிமுகமான நண்பனொருவன் திருமணத்தின்
பின் விலகுதற் பொருட்டு இப்பொழுது த்ண்டனை அனுபவித்தப்படி இருந்தான்.
தொடக்கத்தில் அவனை ஆறு மாதங்கள் பங்கரில் போட்டார்கள். உடல் இளைத்து
கண்கள் உட்சென்று அடையாளம் தெரியாதபடிக்கு உருமாறியிருந்தான்."
அவனைச் சந்தித்த போது அவன் கேட்டான்... "காதலித்தது பிழையாடா மச்சான்"
என்று. இந்தச் சந்திப்பின் தாக்கத்தில் அமுதனுக்கு தன் காதலுக்குத் தடையாக
"ஒரு பெரும் தனிக்கோடு துப்பாக்கியைப் போல இதயத்தைக் குறுக்கறுத்துப்
போனது. அந்தக் கோட்டினை நான் இயக்கம் என்று குறித்தேன்" என்று விவரிப்பது
குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பில் இன்னொரு முக்கியமான செய்தியையும்
போகிற போக்கில் சொல்லிச் செல்கிறான அமுதன். அதாவது அவன் அகிலாவைச்
சந்திக்கும் முன் நண்பனுக்குச் சொன்ன பதிலும் அகிலாவைச் சந்தித்து காதல்
வயப்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்தப் பின் அவனுக்குள் ஏற்படும்
மேற்கண்ட உணர்வும் மிகவும் நுண்ணிய கவனிக்கத்தகுந்த மாற்றம் .
எந்த ஒரு தனிமனிதப் பிரச்சனைக்கும் தீர்வு காணும் போது அந்தப் பிரச்சனையுடன்
நேரிடையாக சம்பந்தப் பட்டவனின் பார்வையை விலக்கி வைத்து
அமைப்பு சார்ந்தோ இயக்கம் சார்ந்தோ எடுக்கின்ற கூட்டு முடிவுகளும்
பொத்தம் பொதுவான முடிவுகளும் எவ்வளவு சிக்கலானவை என்பதையும்
அவற்றால் அவன் பிரச்சனைக்கான தீர்வை முழுமையாகக் கண்டடைய முடியாது
என்பதையும் வாசகனுக்கு உணர்த்துகிறது.

ஈழப் போராட்ட வரலாற்றை எழுத வரும் எவராலும் இந்திய அமைதிப்படை
ஈழ மண்ணில் நடத்திய பாலியல் வன்கொடுமைகளை எழுதாமலேயே இருக்க
சாத்தியமில்லை என்பதற்கு இந்த நாவலும் விதிவிலக்கல்ல. தேவியின் கதை
இந்த நாவலில் இடம் பெற்றிருப்பது இதற்காகத்தான்.

போர்க்காலத்தில் உயிருடன் தப்பித்து பிழைக்க வேண்டும் என்று அலையும்
ஓரிளைஞனும் அவன் குடும்பமும் அவன் காதலியும் எம்மாதிரியான
பிரச்சனைகளை எல்லாம் அனுபவித்தாக வேண்டும் என்பதை
தன் அனுபவமாக்கியோ அல்லது தன் சுய அனுபவத்துடன்
தான் கண்டதைக் கேட்டதை அறிந்ததை எல்லாம் சரியான அளவில்
சேர்த்துக் கொடுத்திருப்பதில் ஆறாம் வடு வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும்
இப்படைப்பின் இலக்கிய அந்தஸ்தை இக்கதையின் முடிவாக அமையும்
குறியீடு தீர்மானித்திருக்கிறது. .

கதை முடிவில் , மரணிக்கும் தருவாயில்
அமுதன் தன் செயற்கை காலைக் கழட்டி விட அது மிதந்து சென்று
இத்திரிஸ் கிழவனின் கைகளில் கிடைப்பதாக முடித்திருப்பது.
இத்திரிஸ் எரித்திரிய விடுதலை இயக்கத்தில் இருந்தவன்.
சூடானில் தப்பித்து வந்து வாழ்ந்தவன்.
" ஓ வழிப்போக்கனே, உன் வழியில் என் எரித்திரிய தாயைப்
பார்த்தால் கூறு, அவள் விடுதலையை நானே பெற்றுத் தருவேன் என்று"
என்ற பாடல் வரிகளை எப்போதும் பாடிக்கொண்டிருப்பவன்.
ஒரு செயற்கை காலுக்காக காத்திருப்பவன்... அவன் கையில்
கிடைக்கிறது அமுதனின் பைபர் க்ளாஸினால் ஆன வழுவழுப்பான
செயற்கை கால்"
விடுதலைப் போராட்டங்களை எவருடைய மரணமும் நிறுத்திவிட முடியாது.
போராட்டத்தில் காலை இழக்க வேண்டி வரலாம், செயற்கை காலுடன்
பயணிக்க வேண்டிய நிலை ஏற்படலாம், அப்போதும் கூட பயணத்தில்
வரும் இடையூறுகளால் சென்றடைய வேண்டிய இலக்கை அடையும்
முன்பே தனி ஒருவனின் பயணம் மரணத்தில் முடிந்துப் போகலாம்,
ஆனால் விடுதலை ? எப்படியும் வந்தே தீரும். இளைஞனால் முடியாததை
கிழவன் செய்து விட முடியும், ஆணால் சாதிக்க முடியாததை பெண்ணால்
சாதித்துவிட முடியும்... விடுதலைக்கான போராட்டங்கள் எல்லா
சமூகத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்ட எல்லா மண்ணிலும்
அந்த மனிதர்களின் வாழ்க்கையில் தொடர் சங்கிலியாகத் தொடரும்,
விடுதலை வந்தே தீரும்" இப்படியான பன்முகப் பார்வையைக்
காட்டும் குறியீடாக வருகிறது இத்திரிஸ் கிழவனும் அவனுக்கு
கிடைத்த இளைஞன் அமுதனின் செயற்கை காலும்.

கள்ளத்தோணியில் தப்பித்துச் செல்லும்
ஈழத்து தமிழரும் அவருடன் சிங்களவர்களும்.
தமிழர்கள் மட்டுமே தப்பித்து செல்ல பயணித்தார்கள் என்று காட்டாமல்
அவர்களுடன் பத்து சிங்களவர்களும் இருந்ததாகச் சொல்வதன் மூலம்
உயிர்ப்பிழைக்க தப்பித்து ஓட வேண்டிய கட்டாயம் அந்தச் சமூகத்திற்கும்
ஏற்பட்டது என்பதையும் உணர்த்திவிட முடிகிறது


உயிர்வாழ்தலுக்கான தப்பித்துச் செல்லும் வாழ்க்கையில் சொந்த
நாட்டில் கையும் களவுமாகப் பிடிப்பட்ட போது போலீஸ்காரன்
கேட்கிறான் லஞ்சமாக பல இலட்சங்கள். கடவுச்சீட்டு வாங்க
ஏஜன்ஸிக்காரன் கேட்கிறான பல இலட்சங்கள். அதிலும் பலர்
ஏமாற்றிவிடுகிறார்கள். இதை எல்லாம் தாண்டி கள்ளத்தோணியில்
ஏறி இத்தாலிக்கு கொண்டு செல்வதாகக் கூறி பயணிக்கும் போது
சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் இவர்களின் சொற்ப பணத்தையும்
கொள்ளை அடிக்கிறார்கள். வழி நெடுக தப்பித்தலுக்கான இவர்கள்
பயணத்தில் இவர்கள் ஏமாற்றப்படுவதும் தண்டிக்கப்படுவதும்
கொள்ளை அடிக்கப்படுவதும் தொடர்கிறது என்பதை
கதை நெடுக ஒவ்வொரு அனுபவங்களின் ஊடாகவும்
குறியீடாகவும் எழுதிச்செல்கிறார் சயந்தன்.


இயக்கம் குறித்த சில கருத்துகளை விமர்சிப்பதற்கென்றே மொழிபெயர்ப்பாளராக
வரும் நேரு அய்யாவின் கதாபாத்திரம் , நேரு அய்யாவின் கருத்துகளை
ஆரம்பத்தில் வெறுப்பதும், நேரு அய்யா யாருக்காவும் காசு வாங்கிக்கொண்டு
மொழி பெயர்த்துக் கொடுப்பார் என்று விமர்சிப்பதும் என்று ஆரம்பித்து
கதைப் போக்கில் நேரு அய்யா சொன்ன சில கருத்துகளை நினைத்துப்
பார்க்கும் விதத்தில் கருத்து விமர்சனப் பார்வையை முன்வைப்பதும்
மிகச்சிறப்பாக இப்படைப்பில் கையாளப்பட்டிருக்கிறது.

ஈழத் தமிழ்ச் சமூகத்தில் சாதியம் கெட்டிப்ப்ட்டிருந்தது என்பதையும் தவறாமல்
பதிவு செய்திருக்கிறது இந்நாவல்.
பள்ளியில் நாடகம் அரங்கேற்றிய நிகழ்வில் பண்டாரவனியன் திட்டமிட்டு
பழிவாங்கும் வகையில் வசனத்தை மாற்றிப்பேச அதற்கு அமுதனும் கெட்ட
வார்த்தைகள் பேச, இறுதியில் பள்ளி அதிபர் அமுதனை இழுத்துச் சென்று
உதைப்பதுடன் உதிர்க்கும் வார்த்தைகள் "
"எளிய பறை நாயே, நீ மேடையில் தூசனம் கதைக்கிறியோ..." உணர்த்துகிறது.

யாழ்ப்பாணத்தில் இங்கிலீஷ் கடைப்பெயர்கள் எல்லாம் தமிழுக்கு மாறிக்கொண்டிருந்தன
என்பதை கேலியும் கிண்டலுமாக பதிவு செய்ததுடன் சேர்த்தே பாக்டரியில் சம்பளத்திற்கு
வேலை செய்த ஏழு பேர் கருகிச் சாம்பாலனதையும் அவர்களுக்கு இயக்கம்
நாட்டுப்பற்றாளர் விருது கொடுத்தது என்றும் அதே தொனியில் எழுதியிருப்பது
இயக்கத்தார்கள் வாசித்தால் கூட ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.

க்தை நெடுக இயக்கம், இயக்கத்தின் நடவடிக்கைகள், அதனால் நேரடியாக
மறைமுகமாகவோ பாதிக்கப்படும் சமூகம், தப்பித்து உயிர்வாழ்தல் பொருட்டு
திசை தெரியாமல் பயணித்த மக்கள்... கதைப்போக்கில் இயக்கம் குறித்தும்
தமிழ்ச் சமூகம் குறித்தும் பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும்
வைத்திருந்தாலும் அதனால் இயக்கத்தின் மீது வெறுப்போ ஆத்திரமோ
வாசகனுக்கு வரவில்லை. ஏனேனில் இயக்கத்தில்
* இயக்கத்தில் சாதியம் இருந்ததாக தெரியவில்லை.
*இயக்கம் பெண்களை , (சிங்களப் பெண்களையும் கூட)பாலியல் வல்லாங்குச்
செய்ததாக எவராலும் சொல்ல முடியவில்லை.
*இயக்கம் போரில் ஊனமுற்ற எவரையும் பாரமாக நினைக்கவில்லை.

எப்போதும் இயக்கம் குறித்தப் பெருமைகளாகப் பேசப்படும் இச்செய்திகளை
ஆறாவடுவும் உறுதி செய்திருக்கிறது.

-----

நூல்: எழுத்தாளர் சயந்தன் எழுதிய ஆறா வடு, (நாவல்)
வெளியீடு: தமிழினி பதிப்பகம்
பக்: 192
விலை: ரூ 120/

Friday, March 9, 2012

சர்வதேச திரைப்பட விழாவில் கண்டதும் கேட்டதும்



மும்பையில் கடந்த 3 முதல் 9 வரை (3 - 9 பிப் 2012) ஆவணப்படங்கள், குறும்படங்கள்,

அனிமேஷன் படங்களுக்கான (12th MIFF) 12 வது சர்வதேச திரைப்பட விழா நடந்தது.

அரபிக்கடலோரம், ஜிலுஜிலுனு காற்று, நான்கு திரையரங்குகள் ஒரே காம்பவுண்டில்.

மராத்திய மாநில அரசும் இந்திய தகவல் ஒலிபரப்பு துறையுடன் இணைந்து நடத்தும்

நிகழ்வு... இதில் பார்த்த பல படங்களின் பெயர்களும் வாயில் நுழையாத டைரக்டர்களின்

பெயர்களும் மறந்துவிடலாம். அல்லது நீங்கள் அப்படி எல்லாம் மறந்துவிடக் கூடாது என்று

அவர்கள் பார்க்க வந்த அனைவருக்கும் வழங்கிய திரையிடப்பட்ட ப்டங்கள் குறித்த

333 பக்கங்கள் கொண்ட கையேடு பழைய பேப்பருடன் சேர்ந்து

பழையன கழிதலாகிவிடும். ஆனால் பார்த்த சில படங்களும் சில காட்சிகளும்

அந்தக் காட்சிகள் ஏற்படுத்திய தாக்கங்களும் எப்போதும் நமக்குள்

வாழ்ந்து கொண்டுதானிருக்கும்.




ராஜேஷ் எஸ் ஜாலாவின் "படிக்கட்டுகளில்" (at the stairs) ஆவணப்படம் வாரணாசியில்

மரணத்திற்காக காத்திருக்கும் மூன்று வயதான கைம்பெண்களைப் பற்றியது.

ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதையைப் போல ! சுருங்கிய தோல்கள், திறந்திருக்கும்

முதுகுப்ப்பகுதி, படிக்கட்டுகளில் மெதுவாக ஏறும் அவள் கால்கள், காமிரா அவள்

கால்களைக் காட்டும்.. அவள் ஏறிப்போகும் சபதம் மட்டுமே .. ஏறிப்போன்வள் சன்னல்

வழியாக வீதியைப் பார்க்கும் காட்சி இன்னொரு கவிதையாக விரியும்.

சன்னலோரம், புனித கங்கைக்கரையின் இரவு நேரம், அவள் பார்க்கும் காட்சி..

இப்போதும் அவள் முதுகு மட்டுமே தெரியும்... அவள் பார்க்கிற காட்சியை

அப்படியே நமக்கும் காட்டுகின்ற விதத்தில் காமிரா நகரும். வீதியில் சன்னலுக்கு

கீழே ரிகார்ட் டான்ஸ் இளம் பெண்கள் ஆடிக்கொண்டிருப்பார்கள், சுற்றி மக்கள்

கூட்டம் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும். அதற்கு இன்னொரு பக்கத்தில்

மனிகர்னிகா என்ற எப்போதும் பிணங்கள் எரிந்துக் கொண்டிருக்கும் மயானம்,

காட்சி மேலிருந்து பார்க்கும் அவள் கோணத்தில் பார்வையாளருக்கும் தெரியும்..

இந்தி - போஜ்பூரியில் தயாரிக்கப்பட்ட 29 நிமிடங்கள் ஓடிய ஆவணப்படம்

வாழ்க்கை, மரணம், உடல், ஆன்மா (ஆவி), கங்கை, புனிதம், நம்பிக்கைகள்.

கேள்விக்குட்படுத்தி, மரணத்திற்காக காத்திருக்கும் வாழ்க்கையை

அற்புதமான ஒளிச்சேர்க்கையில் கவித்துவமாகப் பேசியது.







ஆப்கானிஸ்தான் குறும்படம் "உறைவிடம் " ( shelter) இது அவருடைய முதல் அனிமேஷன்

படம் . 6 நிமிடங்களில் அவர் காட்டிய காட்சியும் கருத்தும் பக்கம்

பக்கமாக எழுதக்கூடிய அளவுக்கு கருத்துகளை உள்ளடக்கியதாக இருந்தது.

வீடில்லாத ஓர் அனாதைச் சிறுவன், தெருவில் ஒரு மரச் சட்டத்திற்குள் தலையையும்

உடலில் பாதியையும் மறைத்துக் கொண்டு மரத்தடியில் உறங்கும் காட்சி. அந்த மரத்தில்

ஒரு ப்றவைதான் அவன் நேசிக்கும் நண்பனாக உறவாக இருக்கிறது. இரவில் தூரத்தில் தெரியும்

அடுக்குமாடி குடியிருப்புகளில் சட்டென விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இருள் சூழ்ந்தக்

கருமையான இரவு.. தூரத்தில் பறக்கும் விமானங்களில் ஓசை.... குண்டுகள் வெடிக்கும் சத்தம்..

அவவளவுதான்...போரின் அழிவு... மழை பொழியும் காட்சி.. சிதைந்து கிடக்கும் அந்த

மண்ணில் நெளிந்து ஊர்ந்து செல்லும் ஓரு புழு, ஒரு வண்டு...போரின் பேரழிவுக்குப்

பிறகும் உயிர்ப்புடன் இயங்குதலின் அவசியத்தைக் காட்டுவதாகவும் எல்லாம் எப்போதும்

எதனாலும் அழிக்கப்படுவதில்லை என்ற தத்துவத்தையும் அவரவர் கண்ணோட்டத்தில்

இக்காட்சி உணர்த்தியது.




கிளைகளில்லாத மெட்டை

மரத்தில் காணவில்லை அவன் பறவையை. மெதுவாக அவனருகே மீண்டும் அந்தப் பறவையின்

கீச்கீச் ஒலி... அவன் இப்போது எழுந்து நடக்கிறான். ஒரு காலுடன் கம்பு ஊன்றிக்கொண்டு.

குண்டு தாக்குதலில் அவன் ஒருகாலை இழந்துவிட்டான் என்பது நமக்குப் புரிகிறது.

அவன் அந்த இடத்தை விட்டு மரக்கம்பை ஊன்றி நடந்துச் செல்கிறான், அவன் நேசித்த

அந்தப் பறவை அவன் அதற்காக உருவாக்கி கொடுத்திருக்கும் கூட்டிலிருந்து கத்திக்

கொண்டிருக்கிறது. பட்டுப்போன அந்த மொட்டை மரக்கிளையில் அவனுடைய இன்னொரு

காலணி - ஷூ இப்போது அந்தப் பறவைக்கான கூடாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

அதிகச் செலவில்லாமல் பார்ப்பவர்களை மருட்டாத மிகவும் சாதாரணமான அனிமேஷன்

காட்சிகளுடன் பார்வையாளன் மனசை விட்டு நீங்காத ஒரு குறும்படத்தைக் கொடுக்க

முடியும் என்பதையும் நமக்கு உணர்த்தி இருக்கிறது இக்குறும்படம்.




தோழர் எஸ். சோமீதரன் நெறியாள்கையில் 'முல்லைத் தீவு சகா". ஏற்கனவே குறுந்தகடில்

பார்த்திருந்ததால் சோமிதரனுடன் படம் ஒலிபரப்புக்கு முன்பே அதுகுறித்த ஐயப்பாடுகளையும்

ஊகங்களையும் பேசிக்கொள்ள முடிந்தது. 2006ல் முல்லைத்தீவில் நடந்த கண்ணகி கூத்தைப்

பார்த்துக்கொண்டிருந்த போது இதுதான் இந்த மண்ணில் நடக்கும் இறுதிக் கண்ணகிக் கூத்து

என்ற எண்ணம் மேலோங்க அதை அப்படியே வீடியோ படமாக்கி இருக்கிறார் சோமி.

அதன் பின் போரின் இறுதி நாட்களில் அங்கிருந்த காலக்கட்டத்தில் சில் காட்சிகளை

எடுத்திருக்கிறார். மற்றும் சில காட்சிகள் ஊடகங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெற்று

அனைத்தையும் முல்லைத் தீவு சகா என்ற பெயரில் ஆவணப்படுத்தி இருக்கிறார்.

'இந்தப் ப்டத்தைப் பார்த்து நீங்கள் ரசிக்க முடியாது' என்ற ஒற்றை வரி அறிமுகத்துடன்

மேடையிலிருந்து இறங்கினார் சோமி. அரங்கு நிறைந்தக் கூட்டம். தாங்கள் வாழ்ந்த காலத்தில்

நடந்த ஓர் இனப்படுகொலையைக் கண்டு மவுனத்தில் உறைந்து போயிருந்தார்கள்

மும்பை சீமான்களும் சீமாட்டிகளும். கண்ணகி கூத்தும் அதில் தொடர்ந்து ஒலிக்கும்

ஒப்பாரி குரலும் முல்லைத் தீவின் கடைசி நாட்களுடன் தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை

கண்ணகிக் கூத்தின் கனமான பொருளறிந்தவர்களால் உள்வாங்கிக் கொண்ட அளவுக்கு

பிற மொழிக்காரர்களால் புரிந்துக் கொண்டிருக்க முடியுமா ? என்ற கேள்வி படம் முடிந்து

வெளியில் வரும் போது பூதகாரமாக துரத்தியது. இம்மாதிரி கனமான சமூகப் பிரச்சனைகளை

மொழி எல்லைகள்த் தாண்டி எடுத்துச் செல்லும்போது மொழியை மட்டும் கூரிய ஆயுதமாகக்

கொண்டு காட்சிப்படுத்தி இருப்பதைத் தவிர்த்து வேறு உத்திகளைக் கண்டடைய வேண்டும்.




மனித சமூகத்தை தேசம், மதம் , மொழி என்று பிரிக்கும் எல்லைக் கோடுகளைப் பற்றி

வடநாட்டில் நிறைய கலை இலக்கியப் பதிவுகள் வெளிவந்திருக்கின்றன. எல்லைக் கோடுகளால்

அவர்கள்தான் மிக அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள்

.ப்ஞ்சாப் பகுதி இந்தியாவிலும் உண்டு, பாகிஸ்தானிலும் உண்டு. ஆனால் வங்கதேச எல்லைக் கோடுகள்

இந்திய மக்களுக்கு கொடுத்திருக்கும் ஊடகங்கள் அதிகம் காட்டாத நாமறியாத ஒரு பிரச்சனை,

எல்லைக் கோட்டருகில் வாழும் விவசாயிகளின் வாழ்விடங்கள் இந்தியாவில், அவர்கள்

வாழ்வாதரமான விளைநிலம் வங்கதேசத்தில்! தினமும் வயலுக்குப் போகும் போதும்

மாலையில் திரும்பும் போது எல்லைக்காவல் படையினர் நடத்தும் சோதனைகள்,

அடையாள அட்டையை ஒருநாள் மறந்து விட்டு வந்துவிட்டால் கூட அன்று வயலுக்குப்

போக முடியாது! அன்றாட வாழ்வில் அவர்கள் அனுபவிக்கும் இப்பிரச்சனைகள்

நமக்கெல்லாம் புதியது.




திரைப்பட விழாவில் தன் குறும்படம் போட்டிக்கான தரவரிசையில் இடம் பெறவில்லை

என்பதால் தமிழ்நாட்டின் பெண் இயக்குநர் ஒருவர் தன் குறும்படத்தைத் திரும்ப

பெற்றுக்கொண்டதாக திரைப்படக் குழுவினர் பேசிக் கொண்டார்கள். இருக்கலாம்!.

தமிழ் நாட்டிலிருந்து அதிகமான குறும்படங்களோ ஆவணப்படங்களோ வரவில்லை

என்கிற ஆதங்கம் எனக்கும் இருக்கத்தான் செய்தது.
































Wednesday, March 7, 2012

மகளிர் தினமும் காமட்டிபுரமும்


இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் தொழில்
செய்ய ஆரம்பிக்கிறார்கள், அவர்களில் 3 பேர் நிர்பந்தம் காரணமாக இத்தொழில்
செய்ய வந்தவர்கள் .அதிலும் 35.47% பெண்கள் 18 வயது கூட நிரம்பாதவர்கள்
என்பதை இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக அமைச்சர்
ரேணுகா சவுத்ரி ஒத்துக்கொள்கிறார்.
அடிமைத்தனத்தையும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம்
சம்பாதிப்பதையும் எதிர்த்து சட்டங்கள் பல எழுத்தில் இருக்கின்றன. இப்பெண்களின்
புனர் வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், சட்டங்கள், ஆய்வுகள்,
அறிக்கைகள், தொண்டு நிறுவனங்கள் என்று வரிசையாக ஒரு பக்கம்
அணிவகுப்பு நடந்தவண்ணம் இருக்கின்றது.
எனினும் சுதந்திரம் பெற்று சட்டங்கள் மனித உரிமைகள் என்ற தளத்திற்கும்
அப்பால், கற்பு என்ற பெண் ஒழுக்கத்தை அதி தீவிரமாக கொண்டாடும்
இந்திய மண்ணில் இன்னும் இருக்கின்றன வேஷியா கிராமங்கள்.
தமிழில் அப்படியே சொல்வதனால் தேவடியா கிராமங்கள்.அப்படித்தான்
அவை அழைக்கப்படுகின்றன.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து 210 கி,மீ தொலைவில் இருக்கும்
வாடியா கிராமம் தான் வேஷியா கிராமம் என்றழைக்கப்படுகிறது.
பல நூறு வருடங்களுக்குப் பின் வருகின்ற மார்ச் மாதம் 11 ஆம் தேதியில்(11/3/2012)
தான் முதல் முறையாக இங்கிருக்கும் பெண்கள் 15 பேருக்கு முறைப்படி
திருமண வைபவம் நடக்க இருப்பதாகவும் அதற்கு அழைப்பிதழ் தயாராகி
அனுப்பப்பட்ட பின், இத்திருமண நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும்
தொண்டு நிறுவனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவமும்
நிகழ்ந்திருக்கிறது. செய்திகளுக்காக அலையும் இன்றைய ஊடகங்களுக்கு
இச்செய்தி பெருந்தீனியாக இருப்பதும் என்னவோ இந்த ஓரிடத்தில்
மட்டுமே இம்மாதிரி கிராமம் இருப்பது போலவுமான தோற்றம்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மனித இன வரலாற்றின் மிகப் பழமையான இத்தொழில் நடக்காத
மாநில்மே கிடையாது என்பது தான் உண்மை. பாரதமாதாவும் இதற்கு
விதிவிலக்கல்ல.
ஆடலும் பாடலுமாக வாழ்ந்த பெண்கள் பேரரசர்களின் ஆசைநாயகிகளாக
இருந்தார்கள் என்பதும் அவர்கள் அரசியலிலும் பொருளாதரத்திலும்
மிகவும் செல்வாக்குடையவர்களாக விளங்கினார்கள் என்பதும்
வரலாற்றில் மறுபக்கமாக இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
ஜஹாங்கீர், அவுரங்கசீப் முதல் தஞ்சையை ஆண்ட அரசர்களுடன்
மிகவும் அதிகாரம் செலுத்திய அக்காமார்கள் வரை … …
மும்பையை இன்றுவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தாதாக்களின
காதலிகளைப் பற்றி வெளிவந்திருக்கும் ஹூசைன் சைதியின்
மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற சமகால வரலாறுவரை
பாலியல் தொழிலும் பெண்களும் பற்றிய பல்வேறு செய்திகளையும்
அதற்கான காரண காரியங்களையும் அவரவர் பார்வையில்
பார்த்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கின்றோம்.
இச்சூழலில் தான் வாடியா கிராமம் குறித்த மேற்கண்ட செய்தி
பத்திரிகை உலகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருப்பதை
நாம் கவனிக்க வேண்டும்.
இப்பகுதியில் வாழும் 80 சரனியா ஆதிவாசி குடும்பங்களில்தான்
இத்தொழில் த்லைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து போரில் ஈடுபட்ட ரஜபுத்திரர்களின் பிறப்பு விகிதம்
போர் ம்ரணங்கள் காரணமாக மிகவும் குறைந்த நிலையில் குழந்தை
இல்லாத பெண்ணுடன் , அவள் விருப்பத்துடன் இன்னொரு ஆண்
உடலுறவு கொள்ளவும் குழந்தையைப் பெற்றெடுக்கவும் இச்சமூகம்
ஏற்படுத்திக்கொண்ட ஒரு சடங்காகவே ஆரம்ப காலத்தில் இம்முறை
இருந்தது என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால்
அம்மாதிரி ஏற்பாடுகள் காலப்போக்கில் மறக்கப்பட்டு கைவிடப்பட்ட
நிலையில் இப்பழக்கம் மட்டும் மாறாமல் அச்சமூகத்தில் இருந்ததாகவும்
பின்னர் அதுவே அவர்களுககான தொழிலாக மாறியதும்
அச்சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் இத்தொழில் செய்ய
நிர்பந்திக்கப்பட்டதும் நிக்ழ்ந்தது.
கொடா வழக்கம் , (goda system) என்றழைக்க்ப்படும் வழக்கத்தில்
நாக்ரா செருப்பை அப்பெண்ணின் படுக்கையறை வாசலில் வைத்திருந்தால்
அப்பெண் வேறொரு ஆடவனுடன் படுக்கையறையில் இருக்கிறாள் என்பதை
உணர்த்தும். அதிலும் குறிப்பாக அப்பெண்ணின் கணவனுக்கு இம்முறையால்
இது அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்ததாக தெரிகிறது.
அரச ப்ரம்பரை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், நிலக்கிழார்கள்
முதல் இன்றைய அரசியல் வாதிகள், தாதாக்கள் வரை இதில் அடக்கம்.
குஜராத் அரசாங்கம் 208 ஏக்கர் நிலத்தை இச்சமூகத்தின் ந்லத்திட்டத்திற்கு
கொடுத்து உதவியது. ஆனால் அத்திட்டமும் முழுமையாக வெற்றி பெறவில்லை.
இத்தொழில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது, இருக்கிறது.
ஒவ்வொரு இரவும் 3 முதல் 4 ஆண்கள் வரை இப்பெண்களின்
படுக்கையறைக்கு வருகிறார்கள், மாதவருமானம் 2000 வரை
இதன் மூலம் இப்பெண்கள் சம்பாதிக்கிறார்கள்.
பாரிய பெண்கள், நாட் பெண்கள், கொல்டா & டாம் பெண்கள், டெராடூனிலிருக்கும்
ஜானுசர், வடகாசியிலிருக்கும் ரபைய் பெண்கள் என்று பல்வேறு ஆதிவாசி
இனக்குழு பெண்கள் தங்கள் பெற்றொரால், கண்வனால், சகோதரனால்
இத்தொழிலுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். 1000 ரூபாய் கடன் வாங்கி
இவர்களில் ஒருத்தியைத் திருமணம் செய்பவன் இரண்டொரு ஆண்டுகளின்
வாங்கியக் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் இப்பெண்களை
ஆடு மாடுகளைப் போல விற்றுவிடுகிறான். வாங்கியவன் பயன்படுத்திவிட்டு
அவனும் விற்றுவிடுகிறான், இப்படியாக இந்த விற்பனைச் சங்கிலி மாநில
எல்லைகளை மட்டுமல்ல, எல்லைக்கோடுகளைத் தாண்டி பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் என்று நீண்டு கொண்டே போகிறது
வாங்குபவன் இருக்கும் வரை எந்த ஒரு பொருளின் விற்பனையையும்
எந்த ஒரு சட்டமும் தடை செய்துவிட முடியாது.! பெண் விற்பனைப் பொருளா?
கேட்காதீர்கள்… விற்கப்படுகிறாள் என்பது தான் உண்மை.
இந்தக் கசப்பான உண்மையை கற்பொழுக்கத்தை த்லையில் வைத்துக்
கொண்டாட கற்றுக் கொடுத்திருக்கும் இசசமூகம் அவ்வளவு எளிதில்
வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில்லை.
அத்னால் தான் இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு முறையான
ஆயுள்காப்பீடு வசதியும் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்பட
வேண்டும் என்ற குரல் எழுந்தப் போது அப்படிக் குரல் கொடுப்பவர்களை
எல்லாம் வேசியராக விமர்சிப்பதன் மூலம் தங்கள் கற்பைக்
காப்பாற்றிக் கொண்டது நம் பண்பாடு..
இதோ அவள் பேசுகிறாள்:
.
உங்கள் கற்பை பிரசவித்தக்
கருவறையில் தான்
நானும் பிறந்தேன்.
உங்கள் கண்ணகி
என்னுடன் பிறந்தவள்
என்பதால்
எனக்கு எதுவும்
பெருமை வரப்போவதில்லை.
ஏகபத்தினி விரதனாக
உங்கள் ஸ்ரீராமனை
கட்டாயப்படுத்தியக்
காரணத்தாலேயே
சீதை நான்
பாஞ்சாலியாகப் பிறந்து
பரிதவித்தேன்
உங்கள் பாண்டவர்பூமியில்
கற்பு(உ)டன் பிறந்த
என்னை
இருட்டடிப்பு
செய்வதன் மூலமே
தங்கள் கற்பைக்
காப்பாற்றிக் கொண்டன
உங்கள் காவியங்களும்
கதைகளும்.
என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் ஆதிசிவன்.
இப்போது வந்துப் போனவன்
அவன் வாரிசுகளின்
வப்பாட்டி பேரன்
காமவேட்டையில்
கிழிந்து தொங்கும் யோனிகளுக்கு
எப்போதுமே வயதாவதில்லை!
என் பெயர் பத்ரகாளி
என்றாலும் பயப்படாதீர்கள்
என் பெயருக்கும்
உங்கள் தேவிக்கும்
சம்பந்தமே இல்லை.
பாரதநாடு பழம்பெரும்நாடு
அதையும்விட
பழமையானது
என் தொழில்
என் மூலதனம்
என் சந்தை
என் கதை.
நான் -
உங்கள்
பத்தினிக்கு முன்பிறந்த பரத்தை.
பெண்கள் தின வாழ்த்து சொல்லும்
பெண்டீரே..
எனக்காக நீங்கள் போராட வேண்டாம்
கற்புடைய உங்கள் கணவன்மார்
உங்களைத் தீக்குளிக்க வைத்துவிடும்
அபாயத்திற்கு நீங்கள்
அச்சப்படுவது நியாயம்தான்.
காந்திய தேசத்தில்
ஆண்டுக்கு ஒருமுறையாவது
மதுவிலக்கு இருப்பது போல
இன்று மட்டுமாவது
எனக்கும்
விடுமுறை வேண்டும்
“மகளிர்தினம் கொண்டாட”
——————————

Monday, March 5, 2012

வரங்களே சாபங்களான காங்கோ பெண்களின் தேசம்

காங்கோ ஆப்பிரிக்கா கண்டத்தில் நடுப்பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரியநாடு. இந்த நாட்டின் மண்வளம் கொள்ளை அடிக்கப்படும் ஆப்பிரிக்காவின் பெயரிடப்படாத யுத்தக் களத்தில் வல்லாங்கு (Rape) செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சற்றொப்ப 2 இலட்சம். 2009க்குப் பின் ஒவ்வொரு மாதமும் வறுமையிலும் பிணியிலும் 45000 பேர் இறந்து போகிறார்கள். இதுவரை 900,000 முதல் 5400,000 வரை இறந்திருக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள்.


இந்த மக்கள் செய்த பாவம் என்ன? வளமிக்க நாட்டில் பிறந்ததைத் தவிர! பொன் கொழிக்கும் பூமி என்பார்கள் நம்நாட்டில். உண்மையில் காங்கோ பொன் கொழிக்கும் பூமிதான். பொன் மட்டுமல்ல, வைரமும் சேர்ந்து தான் அந்த மண்ணை அந்த மண்ணின் மக்களை மரணத்தின் பிடியில் தள்ளியது. இந்தப் பொன்னும் வைரமும் போதாது என்று அந்த மண்ணின் கனிமவளங்கள் அந்த தேசத்தை இன்று சபிக்கப்பட்ட நிலமாக , பாலியல் வன்கொடுமை பூமியாக பெண்கள் வாழ்வதற்கெ தகுதியற்ற ஒரு தேசமாக மாற்றிவிட்டது. எந்த ஒரு நாட்டிலும் அதன் வளங்கள் அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம். அந்த நாட்டு மக்களின் வளமிக்க வாழ்வுக்கு உத்திரவாதம் என்பது தான் பொதுவான நம்பிக்கை. ஆனால் யதார்த்த நிலையில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் மண் வளங்களே அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை கொள்ளை அடித்து அவர்களைக் கொத்தடிமை ஆக்கிவிட்ட சோகம் முதலாளித்துவ உலகத்தின் மறுபக்கம்.

The Greatest Silence: Rape in The Congo (Official Trailer)




காங்கோவின் உள்நாட்டு யுத்தம் ஆப்பிரிக்க கண்டத்தின் உலக யுத்தமாக பேசப்படுகிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் மிகவும் அதிகமான மனிதர்களையும் அவர்கள் வாழ்வாதாரங்களையும் கொன்று கொள்ளையடித்த யுத்த பூமி காங்கோ. நிலையான அரசும் ஆட்சியும் இல்லாத நிலையும், பெருகிக் கொண்டிருக்கும் ஆயுதம் தாங்கிய போர்க்குழுக்களும் அவர்களுக்கு இடையிலான அதிகாரச் சண்டைகளும் அரசு இராணுவமே தன் குடிமக்களைச் சித்திரவதைச் செய்து சுரங்கங்களில் வேலைக்கு அமர்த்தி அடிமைகளாக்கும் கங்கானிகளாக செயல்படுவதும் இராணுவ அதிகாரிகள் நாட்டில் நடக்கும் வன்கொடுமைகளுக்கெல்லாம் தளபதிகளாக இருப்பதும் நம் எவருடைய கற்பனைக்கும் எட்டாத கறைபடிந்த நிகழ்கால வரலாற்றின் பக்கங்கள்.


தோண்டிய இடமெல்லாம் கனிம வளங்கள். தங்கமும் தாதுப்பொருட்களும். தோண்டிய பள்ளத்தில் கொட்டிக் கிடக்கும் மண் குவியல்களில் தங்கத்துண்டுகளைத் தேடி அலையும் குழ்ந்தைகளும் பெண்களும். கல்வி, மருத்துவமனை இதெல்லாம் அவர்களுக்கு கன்வுலகம்… அந்தச் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படும் தாதுக்கள் இன்றைய அறிவுலக கண்டுபிடிப்புகளின் இன்றியமையாத கச்சாப்பொருளாக இருப்பது தான் அந்தப் பூமியில் அமைதிப் புறாக்களை வேட்டையாடும் அம்புகளாக இருக்கின்றன. நம் கைபேசிகள், கணினி, காமிரா, குறுந்தகடு, இதர மின்னணு சாதனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான தாதுப்பொருட்கள் மிக அதிகமாக இங்கிருந்து தான் களவாடப்பட்டு உலகச் சந்தைக்கு வருகின்றன அதுவும் அடிமாட்டு விலையில். உதாரணமாக மூன்று ‘டி’ தாதுக்களைச் சொல்லலாம். டிண், டாண்டலும், டங்க்ஸ்டன் (The three Ts, Tin, Tantalum, Tungsten) டிண் என்ற கனிமம் கைபேசிகளின் சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படுகிறது. டாண்டலும் அதாவது ஓர் (ore) என்ற கனிமம் எலெக்ட்ரானிக் டிவைஸில் யன்படுகிறது.
டங்க்ஸ்டன் அதிர்வலைகளை (வைப்ரேஷன்) உருவாக்க பயன்படுகிறது.
இக்கனிமங்களை ஆஸ்திரேலியா , பிரேசில் நாடுகளிருந்து வாங்கிவதை விட காங்கோவிலிருந்து கள்ளத்தனமாக கடத்தப்பட்டதைச் சந்தையில் வாங்குவது எளிதாக இருப்பதுடன் முதலாளித்துவ பெருமுதலைகளுக்கு கொள்ளை லாபத்தையும் கொடுக்கிறது., விளைவு..? அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு டாலரும் அந்த மண்ணின் ஒரு குழந்தையை அடிமையாக்குகிறது, ஒரு மணி நேரத்தில் 48 பெண்களை வல்லாங்கு (Rape) செய்கிறது. அந்ததேசத்தில் 70 மில்லியன் பெண்களைக் வல்லாங்கு செய்து இன்றைக்கு கொத்தடிமைகளாக்கி இருக்கிறது. 2006-2007ல் மட்டும் சற்றொப்ப 400,000 பெண்கள் வல்லாங்கு கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்


காங்கோவிலிருந்து கடத்திக் கொண்டுவரப்படும் கனிமங்களை வாங்குவது அந்த தேசத்தின் ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களுக்கே போய்ச் சேர்வதால் அந்தப் பணம் ஆயுதம் வாங்கவும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவும் மேற்கத்திய நாடுகள் தூக்கி எறியும் எலும்புத் துண்டுகளாக இருக்கின்றன. இங்கிருக்கும் சுரங்கங்களில் 90% க்கும் மேலானவை அதிகாரப்பூர்வமற்ற தனிப்பட்ட ஆயுதக் குழுக்களின்கைகளில் இருக்கின்றன. இக்குழுக்கள் சுரங்கப பணிகள், அதற்கான சர்வதேச விதிகள் மனிதஉரிமைகள் சட்டங்கள் எதையும் மதிப்பதில்லை. மிகவும் மேசமான சூழலில் இச்சுரங்கங்களில்அடிமைகளாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் இந்த நாட்டின் வளமிக்க அந்த மண்ணின் மைந்தர்களும் அவர்கள் பெண்ணிரும் குழந்தைகளும். காங்கோவின் கலாச்சாரமும் கணவன் மனைவி உறவும் கூட கற்பு என்று சொல்லப்படும் மூன்றெழுத்தில் தன் மூச்சிருப்பதாக நினப்பதால் அந்தக் கற்பின் மூச்சுக்காற்றே இந்தப் பெண்களை அடிமைகளாக்கி இச்சுரங்கத்தில் தள்ளிவிட்ட கொடுமைக்கு காரணமாகவும் இருக்கிறது. மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் அது அச்சமூகத்தில் அந்த ஆண்மகனுக்கு பெருத்தஅவமானமாக இருப்பதால் அப்பெண்ணை அவள் கணவன் ஒருபோதும்சேர்த்துக் கொள்வதில்லை. கற்பழிக்கப்பட்ட மனைவி அனாதையாகிவிடுகிறாள் தனியாக அல்ல, அவள் அவனுக்குப் பெற்ற அவன் குழந்தைகளுடன் அவள் அனாதையாகி விடுகிறாள். அப்பெண்ணின் குழந்தைகள் காங்கோ சுரங்கங்களில் அடிமைகாளாக இருப்பதால்தான் அமெரிக்க ஐரோப்பிய குழந்தைகள் வீடியோ கேம்ஸ்களில் எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளிவிட்டு ஆனந்தமாக தங்கள் இலக்கை அடையும் விளையாட்டுகளை விளையாடிக் களித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்தப் பெண்களை இராணுவமும் இராணுவக்குழுக்களும் ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களும் அடிமைப்படுத்த பயன்படுத்த வேண்டிய போராயுதம் உடல்சார்ந்த பெண் பாலியல் உறுப்பைச் சிதைப்பதாகமட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அது மிகவும் எளிதானதாக இருக்கிறது. இங்கு நடக்கும் கற்பழிப்புகள், உலக மனித வரலாற்றில் இதுவரை நடந்திராத, கண்டிராத கற்பனை செய்ய முடியாத கொடுமைமிக்கவை என்கிறது ஐ.நாவும் பொதுமக்கள் நலன் பற்றிய அமெரிக்க ஏடும். ஆயுதம் தாங்கியவர்கள் கூட்டாக சேர்ந்து ஒரு பெண்ணைக் பாலியல் வல்லுறுவு செய்வதும் அவள் யோனியில் துப்பாக்கியால் சுடுவதும் இன்னும் இவ்விதமான எழுத முடியாத பல்வேறு சித்திரவதைகளும் செய்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. காங்கோவின் சாலைகளில் “பெண்களைக் வல்லாங்கு செய்யாதீர்கள், பலர் சேர்ந்து ஒரு பெண்ணை வல்லாங்கு செய்யாதீர்கள்: ” என்று கேட்டுக்கொள்ளும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றன என்றால் உலகத்தில் இப்படி ஒரு தேசத்தை எந்த ஒரு மனிதராலும் கற்பனைசெய்ய முடியாது தான். கண்வன் முன் மனைவி பலரால் வன்புணர்வு செய்யப்படுவதும் தந்தை மகளையும் சகோதரன் உடன் பிறந்த சகோதரியையும் வன்புணர்வு செய்ய கட்டாயப்படுத்தும் கொடுமைகளும் இரவு பகல் போல அன்றாட நிகழ்ச்சிகளாக அந்த மண்ணில் நடந்துக் கொண்டிருக்கின்றன.

அவள் பெயர் புக்காவு. (Bukavu) அவள் வாழைப்பழமும் வேர்க்கடலையும் விற்று பிழைக்கும் எளியப் பெண். அவளைப் பலர் சேர்ந்து பாலியல் வன்முறைசெய்தனர் அவள் இரண்டு வருடங்களாக கிழிந்த யோனியுடன் ரத்தக் கசிந்து சீழ்ப் பிடித்த நாற்றமெடுக்கும் யோனியுடன் நடந்தாள்…நடந்தாள்…இறுதியாக அவள் தன்சி மருத்துவமனையை வந்தடையும் போது அவளுக்கு முன் 80 பெண்கள் அவளைப் போலவே கிழிந்த யோனியுடன்…. காத்திருந்தார்கள் யோனிகளை தைத்து ஓரளவு சரிப்படுத்தும் அறுவைச் சிகிச்சைக்காக. அந்த யோனியைத் தைக்கும் அறுவை ஒரு வாரத்திற்கு 5 பெண்களுக்குத் தான் செய்யப்படும், அதற்கு மேல் செய்கின்ற வசதி அந்த மருத்துவமனையில் இல்லை. புக்காவுக்கு யோனி தைக்கப்பட்டதா? தெரியவில்லை. அவள் என்னவானாள்…? யாருக்கு கவலை அதைப் பற்றி!


பாஷி மருத்துவமனையில் 250 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அங்கே பாலுறுப்பு சிதைவுகளை சரி செய்ய நடக்கும் அறுவைச்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் குழுச்சண்டையில் போரில் காயம்பட்ட வீரர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்மு அதிகம். சிதைந்த யோனியை தைக்கும் அறுவை/பாலுறுப்பு சிதைவுகளை சரி செய்ய ஒரு பெண் ஆறுமுறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் . (women go to 6 operations to repair the sexual injuries)



*CONGO – the resource curse
* UN Official called the country ‘ THE RAPE COUNTRY OF THE WORLD’
* UN has called the country ‘ THE CENTRE OF RAPE AS A WEAPON OF WAR’
* CONGO THE WORST PLACE ON EARTH TO BE A WOMAN.




மூன்று மாதத்திற்கு ஒரு புதிய கைபேசியை அறிமுகப்படுத்துகின்றன நம் கைபேசி கார்ப்பரேட்டுகள். கைபேசிகளிலும் மின்னணு சாதங்களிலும் பயன்படுத்தப்படும் பொருள்களை வாங்கும் சந்தையில் அப்பொருட்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டறியும் சப்ளை செயின் சாத்தியமில்லை என்கிறார்கள் கைபேசி கார்ப்பரேட் அதிகாரிகள்.
நாமோ பழைய கைபேசிகளுக்கு இப்படியும் விடை கொடுக்கலாம் என்ற விளம்பரங்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம். இன்று தங்க நகைக்கடை இல்லாத ஊரே இல்லை, தங்கம் அணியாத பெண் இருக்க முடியுமா? . தங்கமும் வைரமும் இல்லாத திருமணமா?

புதிய பொருளாதர சந்தையில் அமெரிக்காவின் பொருளாதர சரிவால் தங்கம் மட்டுமே சரியான முதலீடாகிவிட்ட நவீன பொருளாதர இந்தியக் கண்டுபிடிப்பு! இந்தியப் பொருளாதரத்தின் பெரும்பலமாக இருப்பதை எண்ணிப் பூரிப்படைந்து கொண்டிருக்கிறோம். வரும் நிதி ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி அதிகம் இருக்கும் என்கிறார்கள் எப்போதும் நம் பொருளாதர சந்தைப் புலிகள்!

இந்தச் சூழலில் காங்கோ என்ற தேசம் நாம் வாழும் பூமி உருண்டையில் தான் இருக்கிறது என்பதும் இந்தக் கதைகள் எல்லாம் உண்மைக்கதைகள், அதிலும் நாம் வாழும் காலத்தில் நடந்து கொண்டிருக்கும் சமகால
வரலாற்று நிகழ்வுகள் என்பதும் எந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்?

இதோ என் கைபேசி அழைக்கிறது… காங்கோ பெண்களின் கதை கேட்டு.


.
(பின்குறிப்பு: documentary ‘blood in the mobile ‘ directed by Frank Piasecki Poulsen
this film shows the connection between our phones
and the civil war in Congo. blood in the mobile is a film about our responsibility for the conflict
in the Congo and about corporate social responsibility)