Tuesday, December 23, 2014

விறலியின் சபதம்

(ஓவியம் எம். எஃப் ஹூசைன்)


சிவப்பு மையால் எழுத முடியாத
விறலியின் சபதத்தை
கறுப்பு வானத்தில் எழுத வந்த சூரியனும்
தோற்றுப்போனது.

அலைகள் எல்லாம் சந்திரனைக் கண்டு
ஆர்ப்பரிக்கின்றன
எங்கிறார்கள் கடற்கரைவாசிகள்.
அலைகள் அற்ற நடுக்கடலின்
அமைதியை மறந்தப்படி...


பவுர்ணமி மட்டுமல்ல்
அமாவாசையும் சந்திரனுக்குத்தான்
உண்மையைச் சொன்ன
பாய்மரக்கப்பல்கள்
உடைந்துப் போயின.
இது நட்சத்திரங்கள் மட்டுமே அறிந்த
பரம் ரகசியம் அல்ல.
விறலியின் விளக்கவுரை தேவையில்லை.

முல்லைக்கொடிக்காக தேர்க்கொடுத்த பாரியைப்
பாடிப் பாடியே பரிசில்கள் பெற
பாணர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த விறலியை விட்டுவிடுங்கள்.
அவர்கள் பாடல்களுக்கு ஆடி ஆடியே
களை இழந்துவிட்டது விறலியின்  கலை.

காட்டில் காய்ந்து கிடக்கும்
கம்புகளை வெட்டி
முல்லைக்கொடிக்கு
பந்தல் போடத் தெரியாதவன அவன்
தேரில் படர்ந்த முல்லைக்கொடியை
பத்திரமாக எடுத்து
பந்தலில் விடத் தெரியாதவன அவன்.
ஓடுவதற்காகவே தச்சர்கள் உருவாக்கிய
தேர்ச்சக்கரத்தை
முடக்கிப்போட்டவன அவன்.

எதை எதற்கு எப்படி கொடுக்கவேண்டுமோ
அதை அதற்கு அப்படி கொடுக்கும்
கொடை கூட பாராட்டப்படலாம்
கொடைமடம் ?

இரண்டு கைகள் கொடுத்தால்
இரண்டாயிரம கைகள் பிச்சைப்பாத்திரமாகிவிடும்.
அமுதசுரபியைத் தூக்கி எறிந்த
மணிமேகலைக்குத் தெரியும்
கொடுப்பதில் இருக்கும் சுகத்தைவிடக் கொடியது
வாங்குபவன் மனக்கண்ணின் வாட்டம்.

விறலியின் சபதமிது
வள்ளல்களைப் பாடி
பரிசுகள் குவிக்கும்
பாணர்களின்  பாடலுக்கு
இனி விறலி ஆடப்போவதில்லை.



Friday, December 19, 2014

சாதிகளற்ற அந்தமான்

அந்தமானில் ஒரு தீவு நீல் தீவு. அங்கு லக்ஷ்மண்பூர் பீச்சில் நான் சந்தித்த அழகுமலையும் அவர் சொன்ன செய்திகளும் என் வாழ்வில் மறக்க முடியாதது. இந்தப் புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர் தான் அழகுமலை. உல்லாசப் பயணிகள் வரும்போது இளநீர் விற்பனை,மற்ற நாட்களில் தென்னைமரம் சார்ந்த பிற தொழில்கள். இந்திய அரசு அந்தமான் வாசிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கி இருக்கிறது. அவர்கள் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கு முன்னுரிமையும் கட்டணச்சலுகையும் உண்டு.
அழகுமலையின் சொந்தவூர் மதுரை அருகே குக்கிராமம். அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் அந்தமானுக்கு வந்தவர் இங்கேயே தங்கிவிட்டார். வந்து 25 வருடங்களுக்கு மேலாகிறது. "மேடம், இங்க நிம்மதியா இருக்கோம், சாதிச்சண்டைகள் கிடையாது. ஏன், சாதி வேறுபாடுகள் கிடையாது. வங்காளிகளும் அதிகமாக வாழும் அந்தமான் தீவுகளில் மொழி இன வேறுபாடுகள் இல்லை. தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் கருமாரி அம்மன், சிறுதெய்வங்கள் மற்றும் முருகன் கோவில்கள்.. இசுலாமியர்கள், கிறித்தவார்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் மதச் சண்டைகள் இல்லை... "
அவர் தன் கதையைச் சொல்ல சொல்ல என் கனவு உலகம் கண்முன்னே விரிந்தது. அந்தமானில் போர்ட் ப்ளேயரில் மட்டும் தான் தமிழ்ப் படிக்க வசதி.. அதனால் என்ன...? இந்தியும் ஆங்கிலமும் தான் பிற தீவுகளில் கல்விக்கூடங்களில்.. அதனால் தான் என்ன?
கவிதாசரண் அய்யா அவ்ர்கள் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது."தமிழ்ச்சமூகத்தின் சாதி இழிவைப் போக்க ஆகச்சிறந்த என் செம்மொழியையும் காவு கொடுத்துதான் பெற முடியும் என்றால்...!"
அழகுமலையின் அடுத்த தலைமுறைக்கு சென்னைக்குப் போக வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. காரணம், தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளின் தாக்கம்...
Like ·  · 

Wednesday, December 10, 2014

மோதியின் குழப்பமான பொருளாதரம்


மோதி BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா & சவுத் அமெரிக்கா)
நாடுகளுடன் இணைந்து இந்திய பொருளாதரத்தை வள்ர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வோம் என்றார். அத்திட்டத்தின்
ஒரு பகுதியாக தான் திடீரென ஒருநாள் கோவிலகளை விட கழிவறைகளே வேண்டும் என்று அவர் பேசியது. பிரிக்சு நாடுகள் development bank ஒன்றை உருவாக்கி இருக்கின்றன. தலைமையகம் சீனாவில். இந்தியா தான் இந்த வங்கியின் தலைமைப் பொறுப்பை
ஏற்கும் என்று அறிவித்தாகிவிட்டது.
சீனாநாடு பெருமளவில் அந்நிய முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவைவிட சீன அரசின் உள்நாட்டுச் சட்டங்கள் கடுமையானவை.
அப்படி இருந்தும் சீன அரசினை ஏமாற்றிவிட்டார்கள் அந்நிய
முதலீட்டாளர்கள். இப்படியாக சூடு வாங்கிய சீனா "இனிமேல் அந்நிய முதலீட்டை அதிகமாக எதிர்ப்பார்த்து பொருளாதரத்தை மேம்படுத்தாது" என்று சொல்கிறத் சீன பத்திரிகை. (பீஜிங் ரிவியு. செப்
2014)..இந்த நிலையில் தான் மோதியின் அரசு அந்நிய முதலீட்டை
சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறது
இது ஒரு பக்கம் என்றால் அமெரிக்காவில் வளர்ந்த நாடுகள் கடந்த 50 வருடங்களாக இயற்கையை அழித்து சுற்றுப்புற சுழலைக் கெடுத்து
தடுமாறி நிற்கின்றன. சந்தை பொருளாதர முறையை மாற்றி அமைக்காவிட்டால் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் ஆபத்து
என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் 2001ல் நோபல் பரிசு பெற்ற
ஜோசப் ஸ்டிக்லிசு. இவர் உலக வங்கியின் தலைமைப் பொருளாதர அறிஞராக இருந்தவர். முன்னாள் அதிபர் க்ளிண்டனின் ஆலோசகர்.
இதுபோன்ற உண்மைக்கருத்துகளை வெளியிட்டதற்காக அமெரிக்க அரசு ஸ்டிக்லிசின் பல்கலை கழக ஆய்வு பேராசிரியர் பதவியைப் பறித்துவிட்டது. இந்த எச்சரிக்கைகளை மோதி அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. உணவு, மருந்துப் பொருட்கள் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்ற்ன.
அதைத் தடுக்க முடியவில்லை.
ஒரு பக்கம் அமெரிக்க ஆதரவு நிலை, இன்னொரு பக்கம் ப்ரிக்சு நாடுகளுடன் இணைந்து பொருளாதரத்தை வள்ர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வோம் என்று மோதி தானும் குழம்பிப் போய்
மக்களையும் குழப்புகிறார்.திட்டமிடலோ தொலைநோக்குப் பார்வையோ இல்லாத கற்பனைப் பொருளாதரக் கொள்கை..
....
காகித ஓடம் கடல் அலை மீது...
Like ·  · 

Sunday, December 7, 2014

உலகின் குப்பைத்தொட்டியா இந்தியா?



2019க்குள் தூய்மை இந்தியா  திட்டம் நிறைவேறிவிடும். நிறைவேற வேண்டும்,
தூயமை இந்தியா வெறும் அரசியல் ஸ்டண்ட் அல்ல, அது ஒரு மக்கள்
இயக்கம் என்றெல்லாம் தொடர்ந்து இக்கருத்து விவாதப் பொருளாகிக்கொண்டிருப்பது
வரவேற்கதக்கது தான். இக்கருத்து குறித்து பேசுபவர்கள் நம் வீட்டில் சேரும்
குப்பைகள் குறித்தும் அதையும் தாண்டினால் தெருவில் குவியும் குப்பை,
அல்லது கழிவறை என்பதற்கு மேல் பேசுவதில்லை. ஏன்?

இந்த நவீன காலனி ஆதிக்கத்தில் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு
அனுப்பும் குப்பைகளே நம் உள்ளூர் குப்பைகளை விட அபாயகரமானவை.
சுத்திகரிப்பு என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படு கின்றன. இதற்குக் காரணம்
, இந்தச் சுத்திகரிப்புத் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு
இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குறைந்த கூலி வழங்கப்படுகிறது
சான் றாக, ஒரு டன் கழிவுகளைச் சுத்திகரிப்பு செய்ய இலண்டன் மாநகரில்
இந்திய ரூபாய் மதிப்பில் 12000 செலவாகிறது.
 ஆனால், இந்தியாவில் 2800 ரூபாயில் சுத்திகரிப்பு செய்யலாம்
5 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்கா 30 விழுக்காடு
 குப்பைகளைக் கொட்டு கிறது
இரண்டாவதாக, பிரேசில் 210 மில்லியன் டன்,
 ஜப்பான் 53 மில்லியன் டன், ஜெர்மனி 49 மில்லி யன் டன்
, இங்கிலாந்து 35 மில்லியன் டன், மெக்சிகோ 32 மில்லியன் டன்,
 பிரான்சு 32 மில்லியன் டன், இத்தாலி 30 மில்லியன் டன்,
ஸ்பெயின் 26 மில்லி யன் டன், துருக்கி 25 மில்லியன் டன்

நோய்களைப் பரப்புகின்ற, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைக்கும்
பல இலட்சம் டன் கழிவுகள் இந்தியாவின் பல துறை முகங்களில்
 மறைமுகமாக வந்த வண்ணமே உள்ளன.
2009 அக்டோபர் 24ஆம் நாள் தெகல்கா ஏடு - தூத்துக்குடி அருகே உள்ள போல்பேட்டை  என்ற ஊரில் மறுசூழற்சிக்காகவும், இரப்பரைப் பயன்படுத்தி பிவிசி (PVC) கதவுகள்  செய்வதற்காகவும் சில இரசாயனக் கழிவுகளை எக்ஸல் (Excel) என்ற தனியார் நிறுவனம்
 இறக்குமதி செய்தது. ஆனால் உண்மையில் மறு சுழற்சி முறையில்
எவ்வித துணைப் பொருட்களை யும் உருவாக்காமல், இந்தக் கழிவுகளை
எரித்து இலாபம் அடைந்தது. இதேபோன்று தூத்துக்குடி அருகே பெட்ரோலிய
 இரசாயனத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கு இத்தொழிலுக்கு
 தேவை யானப் பொருட்களை இறக்குமதி செய்கிறோம் என்ற பெயரில்
 உலோக, எண்ணெய் கழிவுகளைத் தூத்துக் குடி துறைமுகம் வழியாக
 இறக்குமதி செய்து எரித்து விடுகிறார்கள். சுற்றுச்சூழலைப் பற்றி கவலைப்படாமல்  பணக்கொள்ளை அடிக்கிறார்கள் என்று அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது
இந்தியாவில் உள்ள எந்தத் துறைமுகத்திலும் இறக்குமதி செய்யப் படும்
 பொருட்களைத் துல்லியமாகக் கண்டறியும் ஸ்கேனர் கருவிகள் இல்லை
 என்பதையும் இந்த ஏடு சுட்டியது.
2010 ஏப்ரல் 24ஆம் நாளிட்ட ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு,
தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஸ்பெயின், சவூதி அரேபியா, மலேசியா
 ஆகிய நாடுகளில் இருந்து கழிவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன
 என்று குறிப்பிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய் வாளர்  தூத்துக்குடி துறைமுகம் சிறிய துறைமுகமாக இருப்பதால் எளிதாக இந்தக் கழிவுப்  பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள் என்கிறார். இங்கிலாந்தின் லீட்சு நகரிலிருந்து  மருத்துவக் கழிவுகள், இரத்தக்கறை படிந்த கழிவுப் பொருட்கள் தூத்துக்குடி வழியாக,
 கோவை மாவட்டத்தின் குமாரபாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு
 விளைநிலங்களில் எரிக்கப்பட்டது என்று பிபிசி தொலைக்காட்சி நிறுவனம்
 வழியாக இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஒரு தொண்டு நிறுவனம் அம்பல மாக்கியது.

தூயமை இந்தியா திட்டத்தை விமர்சிக்கும் அரசியல்வாதிகள்
ஆதரிக்கும் ஆளும்கட்சி/ கேலி செய்யும் எதிர்க்கட்சி
எவரும்  இந்தியாவே உலகின் குப்பைத் தொட்டியாக
மாறிவரும் அவலம் குறித்து மட்டும்
வாயைத் திறப்பதில்லையே! ஏன்?

Saturday, December 6, 2014

இன்று டிசம்பர் 6

இன்று டிசம்பர் 6.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.
இந்திய மண்ணில் தீவிர வாதத்திற்கு
அடிக்கல் நாட்டிய நாள்.
எங்கள் மும்பையில் வெடித்த
எல்லா வெடிகுண்டுகளுக்கும்
முகவரி எழுதப்பட்ட நாள்.
இந்த நாளில் எந்த அசாம்பிவதமும்
நடந்துவிடக்கூடாது என்று
சென்னை செண்டிரல் ஸ்டேஷனில் கூட
இன்று ஆயுதம் ஏந்திய காவல்படையின் கண்காணிப்பு.
அயோத்தியே இந்தியா
இந்தியா தான் அயோத்தி
என்று மதச்சார்பற்ற இந்தியாவுக்கு
நினைவூட்டும் நாள்.
இன்று டிசம்பர் 6..







நன்றி இந்திய தேசத்துக்கும்
இந்திய தேசத்தின் பிதாமகன்களுக்கும்.
இந்த நாளில் ஒவ்வொரு இந்தியனும்
இந்த நினைவுகளை மட்டும்தான் சுமந்தாகவேண்டும்
இந்த விதியை  எழுததானே
நீங்கள் தேர்வு செய்தீர்கள் இந்த நாளை..
டிசம்பர் 6.  ஐ
நன்றி இந்திய தேசமே
உனக்கும் உன் மதச்சார்பற்ற முகத்துக்கும்.
நன்றி உனக்கும்
நீ எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கும்
உன் சாதீய முகத்துக்கும்.
-------

இன்று டிசம்பர் 6.
இந்திய அறிவாயுதத்தின் 58 ஆவது நினைவுநாள்

கங்கையின் புனிதம்
இந்த மகாநதியின் முனனால்
மண்டியிட்ட நாள்.
இமயத்தின் மகாபுருஷர்கள்
இந்த மனிதனிடம் சரிந்த நாள்.
இந்த மனிதச்சங்கிலியை
இந்தியாவே
உன் சாதிச்சங்கிலிகள் தொடும் போதெல்லாம்
தராசு தடம் புரள்கிறது.
உங்கள் நீதிதேவன் குற்றவாளிக்கூண்டில்.

இந்த நாட்டில் தான்
ஆண்டவனில் கூட சாதிப்பிரிவுகள்
பாலாஜி, பழநி, மாசானம், மாடசாமி,
காமாட்சி, மீனாட்சி, காளியாத்தா, மூவுடையா..

புத்தம் சரணம் கச்சாமி.
மன்னித்துவிடு சித்தார்த்தா
உன் சித்தாந்தங்களை விலக்கிய
என்னையும் என் எழுத்துகளையும்.
இனி,
அஹிம்சை கோவிலில்
ஆடுகள் அடிமைகள் அல்ல.

புத்தம் சரணம் கச்சாமி.

Monday, December 1, 2014

திராவிட அரசியலும் சாதி ஒழிப்பும்

தோழி நிறம் அவர்கள் தன் முகநூலில் 29/11/14 இந்தியன் எக்ஸ்பிரஸ்
வெளியிட்டிருக்கும் இந்திய சாதியம் பற்றிய கருத்துக்கணிப்பை
முன்னிறுத்தி . சாதி ஒழிப்பில்
கேரளாவும் வங்கமும் முன்னிலை வைத்திருப்பதால்

மார்க்சியம் மட்டும் தான் மனிதத்தைப் போற்றுகிறது என்று மீண்டும் உறுதி செய்யப்படுகிறது!!! அப்போ பெரியாரிசம் ?

என்ற கேள்வியை முன்வைக்கிறார். அந்தப் புள்ளியிலிருந்து இக்கட்டுரை .... சில விவரங்களுடனும் நிராசைகளுடனும்...

--------





திராவிட அரசியலும்  சாதி ஒழிப்பும்
---------------------------------

காங்கிரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் "சுதந்திர இந்தியா"  அல்ல.
ஆங்கிலேயர் ஆட்சியில் ஒத்திசைவான சமூகத்தைக் கட்டமைத்து ஆங்கிலேய 

அரசு அதிகார வரம்புக்குள் தங்கள் உரிமைகளைக் கோருவதாக மட்டுமே
இருந்தது. அதுபோலவே தான் திராவிட இயக்கத்தின் தோற்றமும்.
பிராமணர் அல்லாதோரின் - தென்னிந்திய நல உரிமை சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன்
நோக்கமும் திராவிட தேசமோ சாதி ஒழிப்போ அல்ல.

சாதிச்சமூகமாகவே இருந்த தமிழ்ச்சமூக கட்டமைப்பில் 

பார்ப்பனர்களும் நிலவுடமைக்காரர்களாக இருந்த வெள்ளாளர், ரெட்டி, கம்மாளர் சாதிகளுமே தமிழ்ச் சமூகத்தின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டவர்களாக ஒரு விதமான ஒத்திசைவு வாழ்க்கையை நடத்தி இருக்கிறார்கள் என்று பதிவு செய்கிறார் இதைப் பற்றி ஆய்வு
செய்திருக்கும் பர்டன் ஸ்டெயின் 
(CLOSE COOPERATION BETWEEN BRAHMINS AND THE RESPECTABLE CULTIVATING GROUPS).


1610ல் தத்துவபோதகர் என்றழைக்கப்படும் ராபர்ட் டி நோபிளி எழுதிய கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியில்>>

" மதுரையில் மட்டும் 10000 க்கும் அதிகமான மாணவர்கள். அவர்கள் அனைவரும் பிராமணர்களே.இதர சாதியினர் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இக்கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்பாடு செய்யப்படிருந்தது. பிற வைசியர் சூத்திரர்கள் செல்வர் வீட்டு திண்ணையிலாவது அல்லது ஆசிரியர் வீட்டு திண்ணையிலாவது உட்கார்ந்து எழுத்துக்கூட்டவும்
கணக்குப் போடவும் போனால் போகிறது என்று தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிகாரம் என்பது நிலவுடமையுடன் நேரடி தொடர்புடைய
காலக்கட்டம் அது. கல்வி சார்ந்த தளத்தில் பிராமணர் அல்லாதோருக்கு
உரிமைகள் மறுக்கப்பட்டதை நிலவுடமை சமூகம் பொருட்படுத்தாமல்
இருந்தது. ஏனேனில் அது அவர்களின் அதிகார வரம்பை மட்டுப்படுத்தவில்லை.

இந்த 9 நூற்றாண்டிலிருந்து 18 நூற்றாண்டுவரையான 
சமூக சூழலின் விளைவுதான் 
ஆங்கில நிர்வாக இயந்திரம் இங்கே இயங்கத் துவங்கிய போது அவர்களது  உத்தியோகங்களை ஏற்பதற்கு அப்போது கல்வியில்
முன்னேறி இருந்த  பிராமண சமுதாயம் மட்டுமே தயார் நிலையிலும் முன்னணியிலும் இருந்தது.

இதனால் தான் மக்கள் தொகையில் 3 சதவீதமாக இருந்தப்  பிராமணர்கள் சென்னைப் பல்கலை கழக பட்டாதாரிகளில் 72 சதவீதமாக இருப்பது சாத்தியப்பட்டது.
அப்படி 1854ல் வருவாய் துறை வாரியத்தின் மாதக் குறிப்பில் நெல்லூர் மாவட்டம் ஜி.வெங்கட்ரமணையா
என்ற உயர் பதவி வகித்த பிராமணரின் உறவினர்கள் 49 பேர் பிற பதவிகளிலும் இருந்தார்கள் என்ற குறிப்பு
காணப்படுகிறது. இதைப் போலவே வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம், வட ஆற்காடு சர்.சி.பி இராமசாமி அய்யர் குடும்பம் இவர்கள் எல்லாம் சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்த காலக்கட்டம்.

எனவே இதுவரை, அறிவுசார்ந்த பின்புலத்தில் உருவாகும் அதிகாரத்தை அறியாத பிராமணரல்லாத
சமூகம் தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் இழந்துவிட்டதை உணர்ந்து கொள்கிறார்கள்.
அதை அடைவதற்காக ஏற்படுத்தப் பட்ட அமைப்பாகவே
பிராமணரல்லாத அமைப்பின் அடிப்படை நோக்கமாக இருந்தது. 


நீதிக்கட்சியின் சமூக சீர்திருத்தச்சட்டங்கள்:

ஒப்பீட்டளவில் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த
இரு திராவிட அரசியல் கட்சிகள், திமுக மற்றும் அதிமுக
கொண்டு வந்த அரசியல் சட்டதிட்டங்களும் அதைக்
கடைப்பிடித்து சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும்
கணக்கில் கொண்டால் நீதிக்கட்சி அக்காலத்தில் தன் ஆட்சி
அதிகாரத்தின் மூலம் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள்
புரட்சிகரமானவை. போற்றுதலுக்குரியவை.

பேருந்துகளில் குறிப்பிட்ட சாதியை ஏற்றமாட்டோம் என்பதைக் கடைப்பிடிக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கு அவர்கள் லைசன்ஸ் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் என்று சட்டம் கொண்டுவந்தார்கள்.
உள்ளாட்சி துறையிலோ தனியார் நிறுவனங்களாலோ நடத்தப்படும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் சேர்க்க மறுக்கப்பட்டால் அக்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தொகை உடனே நிறுத்தப்படும் என்று கூறி மான்யம் பெறுவதற்கான முன்நிபந்தனையாக இதை மாற்றியது ஒரு பெரும்சாதனை. அப்படி மாற்றப்பட்ட பள்ளிகள் 1936ல் (9614 )ஒன்பதாயிரத்து 614 பள்ளிக்கூடங்கள் என்பதை மறப்பதற்கில்லை. 

சூத்திரர்களின் சமத்துவம் எதுவரை?

மேனாட்டு கல்வியும் பிரஞ்சு புரட்சியின் தாக்கமும்
கொண்ட நீதிக்கட்சியும் அதன் தலைவர்களும் பேசிய
கடைப்பிடித்த சமத்துக்கோட்பாடு எதுவரை ?
அவர்களாகவே கொடுக்கின்ற உரிமைகளைப் பெறும்
சாதியாக பஞ்சமர்கள் இருக்க வேண்டுமே தவிர
பஞ்சமர்களும் சூத்திரர்களும் சமத்துவமாக இருக்க
வேண்டும் என்ற சமத்துவக்கோட்பாட்டு ரீதியாக
இருந்ததா? 

தமிழ்ச்சமூகத்தை பிராமணர் , பிராமணர் அல்லாதோர் என்று இருவகைப் படுத்தியவர்கள் பிராமணர் அல்லாதோரில் இருக்கும்
இரு நிலையைப் பற்றி வெளிப்படையாக இன்றுவரை
பேசிக்கொள்வதில்லையே!
. அவர்களே இன்றுவரைச் சொல்லிக்கொள்ளும் அந்த சூத்திரநிலைக்கும் கீழே இருக்கும் பஞ்சமர்களுக்கு பிராமணர் அல்லாத தமிழ்ச்சமூக
அடையாளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் எது?
நீதிக்கட்சிக்கு பஞ்சமர்களோடு 
ஏற்படும் முதல் கூட்டு ஒரு அரசியல்
கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணியாக இருக்கிறதே தவிர இவர்களே முழங்கும் சமத்துவம் என்ற சமூகப்புரட்சியின் காரணமாக அமையவில்லை என்பது தானே வரலாற்று உண்மை.

அவர்களாகவே முன்வந்து ஆதிதிராவிடர்களும் திராவிடர்கள் தான் என்றோ
பிராமணர் அல்லாதோர் என்று தாங்கள் ஏற்படுத்தி இருக்கும் அமைப்பின்
உள்வட்டத்தில் வருவதற்கு உரிமை உள்ளவர்கள் என்றோ உணர்ந்த காரணத்தால் கூட்டணி அமைத்ததாக தெரியவில்லை. அன்றைக்கு
ஒட்டுமொத்த பிராமணர் அல்லாதாரின் பிரதிநிதியாக தங்களை மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் நீதிக்கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கு ஏற்பட்டது. அதுதான் -

1909ல் முஸ்லீம்களுக்கு மிண்டோ மார்லி சட்டப்படி தனித்தொகுதி வழங்கப்படது. 
பிராமணர் அல்லாதோருக்கும் அப்படியான
தனித்தொகுதி கேட்க விரும்பியது நீதிக்கட்சி. 
 நீதிக்கட்சியின் தலைவர் தியாகராயர் "நீதிக்கட்சி தான் சென்னை மாகாணத்தில் உள்ள 4 கோடி பிராமணர் அல்லாதோருக்கும் பிரதிநிதித்துவம் வகிக்கிறது " என்று மாண்டேகுவிற்குத்  தந்தி அனுப்பினார்.
அதை உறுதிப் படுத்த வேண்டுமானால் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினராக இருந்த ஆதிதிராவிடர்களின் ஒருமித்த ஆதரவையும் பெற வேண்டிய கட்டாயம் நீதிக்கட்சிக்கு ஏற்பட்டது. இந்த அரசியல் காரணம் மட்டுமே நீதிக்கட்சி ஆதிதிராவிட இனத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய இக்கட்டான சூழலை ஏற்படுத்தியது. 

பெரியாரின் தலைமை 

தந்தை பெரியார் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வரை இதுதான்
திராவிட இயக்க வரலாறு.

நம் கடவுள் சாதிக் காப்பாற்றும் கடவுள்
நம் மதம் சாதிக் காப்பாற்றும் மதம்
நம் மொழி சாதிக் காப்பாற்றும் மொழி
நம் அரசாங்கம் சாதிக் காப்பாற்றும் அரசாங்கம் (1950ல்
ராபின்சன் பூங்காவில் பெரியார் பேசியது)
என்றார். அவருடைய கருத்துகளில் அவர் உறுதியாக இருந்தார்.
மேனாட்டில் நாத்திகம் என்பது முழுக்கவும் அறிவியல் பார்வை.
ஆனால் பெரியார் பேசிய நாத்திகம் என்பது முழுக்க முழுக்க
சமூகநேயத்தை மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டது. 
அதற்கு உதவியாகத்தான் அறிவியல் ஆயுதத்தைக் கையில்  எடுத்துக் கொண்டார்.  பெரியாரின் அயராத தொண்டும் அவர்
எதை எல்லாம் எதிர்த்தாரோ அதற்கெல்லாம் காரணமாக
இருந்தது சாதி, சாதி, சாதி மட்டும் தான் ..
பெரியாரின் காலக்கட்டத்தில் தான் ஆதிதிராவிடர்கள்
திராவிட இயக்கத்துடன் இணைந்து கலந்து  செயல்பட
ஆரம்பித்தார்கள். 

இந்த மாற்றங்களை மிகச்சரியாக அறுவடை செய்தது
திமுக. அறிஞர் அண்ணாவின் நாவன்மையும் தமிழ் மொழி
சங்ககால பொற்கால நினைவுகளும் தமிழ்ப்படித்த
அன்றைய கிராமத்து இளைஞர்களிடம் மிகப்பெரிய
உளவியல் மாற்றங்களைக் கொண்டுவந்தது.
இக்கிராமப்புற இளைஞர்களை  சொந்த ஊரில் நிலவுடமை சமூகமாக இருக்கும் ஆதிக்கச்சாதியினர் 
மதித்ததில்லை. பணிபுரியும் இடத்திலும் இவர்களுக்கு மரியாதை இல்லை. இப்படியாக தமிழ்மொழிக் கற்ற இவர்கள் ஒதுக்கப்பட்ட சூழலில் பேசப்பட்ட தமிழின் பெருமையும் தமிழரின் பொற்காலமும் இவர்களை அந்த பெருமையின் அடையாளமாக உணரச் செய்தது.
கனவிலும் கிராமப்புறத்தில் தலைமைத்துவ இடத்திற்கு வரமுடியாது என்ற நிலையில் இருந்த இவ்விளைஞர்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம்
கிராமத்தில் தங்களுக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்கள். 

இக்காலக்கட்டத்தைப் பற்றி ஆய்வு செய்திருக்கும் ஜேக்கப் பாண்டியன் அவர்கள் கிராமங்களில் 60க்குப்பின் ஏற்பட்ட இம்மாற்றத்தில் தலைமைத்துவ இடத்திற்கு 
ஆதிக்கச்சாதியைச் சார்ந்த இளைஞரும் அவருக்கு ஆதரவாக பிற சாதி இளைஞர்களும் இருந்தார்கள் என்று சொல்கிறார். 


திராவிட அரசியல் கட்சிகள்

நாடகத்துறையில் சமூக சீர்திருத்தக்கருத்துகளைக் கொண்டுவருவதில்
பெரும்பணி ஆற்றி வெற்றி பெற்ற திராவிட இயக்கம், திராவிட
அரசியலும் வெளி. ரங்கராஜன் அவர்கள் சொன்னது போல
"எதிர்காலச் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய ஒரு இயக்கம் கடந்த காலப் பெருமைகளில் தன்னை இழக்க ஆரம்பித்தது. நம்முடைய வரலாற்றையும் இலக்கியங்களையும் பற்றிய அறிவு நிகழ்காலம் பற்றிய புதிய மதிப்பீடகளுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமர்சனமற்று வெறும் கடந்த காலத்தைப் பூஜிப்பது மட்டுமே நிகழ்ந்தது.

திராவிட அரசியல் அதிகார மையம்

ஆட்சி அதிகாரம் வந்தப் பின் கட்சிகள் கார்ப்பரேட்
மையங்களாகிப் போயின.
 அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள  எதையும் செய்யும்
நாற்காலி மனிதர்களாக மாறிப்போனார்கள். 
இக்காலக்கட்டத்தின் முதன்மைப் பாத்திரம் என்னவோ 
மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.

ஒரு உதாரணம் சொல்லுகிறேன். தந்தை பெரியார்
இதழ்களின் விற்பனையில் பெரும் அக்கறை காட்டினாலும், விற்பனையை வைத்து இதழ் பணியையோ, எழுத்துப் பணியையோ நிர்ணயித்துக் கொள்ளவில்லை . ”நான் எழுதியதை நானே அச்சுகோத்து நானே அச்சிட்டு நான் மட்டுமே படித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் ”குடி அரசை” வெளியீட்டு என் கருத்துக்களை வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்வது என் கடமை” என பிரகடனப்படுத்தியவர் 

ஆனால் கலைஞர் என்ன செய்தார்?.
கலைஞரும் முரசொலி மாறனும் இணைந்து தமிழ்ச்சமூகத்திற்கு
குங்குமம் வைத்தார்கள்.
சாவி குங்குமத்தின் ஆசிரியராக இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாசிக்கும் பழக்கம் அதிகமுள்ள பிராமண சமூகத்தவர்களை வாடிக்கையாளர்களாக பெறவேண்டி அதற்கேற்றாற் போன்ற கட்டுரைகள், கதைகள் அதிகமாகப் பிரசுரிக்கப்பட்டன. குங்குமம் தி.மு.க.வின் சாயல் இல்லாத, திராவிட இயக்க படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிக்காத, பிராமண சமூகத்துப் படைப்பாளிகளுக்குப் பிரதான இடம் தந்த ஒரு வார இதழாக சுமார் ஒன்றரை லட்சம் பிரதிவரை விற்பனையானது. 

அப்போது திராவிட இயக்கத்தின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு தலைமுறை
கேட்டது...

சூரியனே , உனக்குச் சூடில்லையா?
உனக்கு மட்டும் சாவி,
எங்களுக்குப் பூட்டா? என்று.

ஆனால் இக்கேள்விகள் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே இருந்தது என்பது தான் உண்மை.
ஏனேனில் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தப் பின்
திமுகாவில் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக 1971ல் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று கலைஞரின் தலைமையில் இரண்டாவது முறை  ஆட்சிக்கு வந்தப்பின் நகர்ப்புறத்து முதலாளிகளும் கிராமப்புறத்து ஆதிக்கச்சாதியினரும் வெற்றி பெற்ற அரசியல் கட்சியில் சுயலாபத்திற்காக இணைகிறார்கள். இவர்கள் எவருக்கும் பெரியாரைப் பற்றிய புரிதலோ இயக்க வரலாறோ தெரியவில்லை என்பதுடன் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது. ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு திமுக தன் ஆரம்ப கால பாதையிலிருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டது
என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

மத்தியில் கூட்டாச்சி
மாநிலத்தில் சுயாட்சி என்ற இன்னொரு துப்பாக்கியை
விளையாட்டுப் பிள்ளைகள் பயன்படுத்துவது போல திமுக பயன்படுத்திக்கொண்டதை , பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் காணும் பகுத்தறிவு உள்ள எவரும் இவர்கள் மீது மட்டுமல்ல, இவர்கள்
பேசிக்கொண்டிருக்கும் இக்கருத்துருவாக்கங்கள் மீதும்
நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்கள்

அதிமுக, மதிமுக, தேதிமுக என்று திமுக வரிசையில் வரும் எந்த ஒரு திராவிட அரசியல் கட்சிக்கும் திராவிட இயக்க பெரியாரிய
கொள்கைகளுக்கும்  எவ்விதமான தொடர்புகளும் கிடையாது.

திமுக எப்போதாவது பகுத்தறிவு பேசிக்கொள்வார்கள்
ஆனால் செயல்பாடுகளில் பூஜ்யமாகிப்போனார்கள்.
அதிமுகாவிலோ பகுத்தறிவு பேசினால் பதவி பறிபோகும்.
திராவிடர் கழகமோ அரசாங்கத்தின் அனுமதியோடு 
பேரணிகளும் கூட்டங்களும் நடத்துவதையே பெரும்சாதனையாக
சொல்லிக்கொள்கிறது.


தணிக்கை இல்லாமல் எங்கள் நாடகங்களை அரங்கேற்ற முடியும் என்றால் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்திவிடுவோம் என்ற
குரலுக்குச் சொந்தக்காரர்களின் கைவசம் இன்றைக்கு தொலைக்காட்சிகளின் சாம்ராஜ்யமே இருக்கிறது!. ஆனால்
நடந்ததும் நடப்பதும் என்ன?

பகுத்தறிவு பேசிய அன்னை பராசக்தி
அண்ணாமலையாகி
ஆருடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

பகுத்தறிவு, சாதி ஒழிப்பு  கருத்துகளுக்கு அரைமணி நேரம் கூட
இவர்களால் ஒதுக்க முடியவில்லை. 
இவர்களின் தொலைக்காட்சிகள் வந்தப்பிறகுதான் 
இதுவரை மக்கள் கடைப்பிடிக்காத அறியாத
இந்து மதச் சடங்குகள் மிகவும் துல்லியமாக
மக்களிடம் காட்சிப்படுத்தப்பட்டன. 

பிற இயக்கங்கள்:

தமிழக   அரசியலில் தோன்றிய  தமிழ்த்தேசியம் : திராவிட இயக்கம்  வளர்த்த தமிழ்மொழிப்பற்றாளர்களுக்கும் இன உணர்வாளர்களுக்கும் நம்பிக்கை அளிக்கிறது , எனினும்
மொழிப்பற்றும் இனப்பற்றும் சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்கி தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த்தேசத்தையும் உருவாக்கிவிடுமா?

தேசிய இன கருத்துருவாக்கத்திற்கு மொழி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது "பொதுவான வாழ்விட உணர்வு" இது இன்றுவரை தமிழ் மண்ணில் சாத்தியப்பட்டிருக்கிறதா? தமிழ் மண் சேரியாகவும் ஊராகவும்
பிரிந்து தானே இருக்கிறது. இது தமிழ்த்தேசியத்தின் தோல்வி.

அடுத்து திராவிட இயகக்த்துடன் இணையாகவும் இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்பே வளர்ந்த ஆதிதிராவிட இயக்கம். இவர்களில் பலர் திராவிட இயக்கத்தில் சங்கமித்து காணாமல் போனார்கள். மீதி இருப்பவர்களும் ஒடுக்கப்பட்ட
சாதியின் உள்சாதி அமைப்புகளாக சிதறிப்போனார்கள்.
அத்துடன் எப்போதும் திராவிட அரசியல் கட்சிகளின்
வீசி எறியப்படும் எலும்புத்துண்டுகளுக்கு காத்திருக்கும்
அவலமான நிலையில் இருக்கிறார்கள். சேரிகளும் கூட
இந்த நாட்டில் தனித்தனியாக அவரவருக்கான உள்சாதி
அடையாளங்களைத் தக்கவைத்துக்கொண்டு தான் இருக்கின்றன.
இங்கேயும் நம்பிக்கை கானல்நீராகிவிட்டது.

பொதுவுடமை இயக்கம் வளர வேண்டிய காலக்கட்டத்தில்
தமிழகத்தில் வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம்.
திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சிக்குப் பின்
எதிர்காலம் இதை தமிழினத்தின் சாபக்கேடு என்று
விமர்சிக்கலாம். 
அரசியல் தளத்தில் 
திராவிட அரசியல் குதிரைகளின் மீதேறி சவாரி
செய்வதையை வழக்கமாக்கிக்கொண்டிருக்கும் இடது வலதுசாரிகளிடமிருந்து நாம் என்ன எதிர்ப்பார்க்கமுடியும்?

அரசியல் அதிகாரம் பதவி விருதுகள் எளிதில் கிடைக்கும் ஊடக
அங்கீகாரம் என்ற விஷக்கிருமிகள் தமிழ்நாடெங்கும் பரவிவிட்டன. அரசியலை மட்டுமல்ல, கலை இலக்கிய உலகத்தையும் கரையானைப் போல அரித்து தின்று கொண்டிருக்கின்றன. இச்சூழலில் எழுகின்ற இயக்கங்களும் அமைப்புகளும் கலைவடிவங்களும் காலூன்றி நிற்பதற்கு
முன்னரே காணாமல் போய்விடுகின்றன.

அம்பேத்கரின் அறிவாயுதம் சாதி ஒழிப்புக்கான ஆயுதம்
என்பதை கூர் மழுங்க வைத்ததில் இந்திய சாதிச் சமூகம்
பெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஏனேனில் அம்பேத்கர் இந்தியாவின் அறிஞரல்ல.
இந்தியாவைப் பொறுத்தவரை அவர் வெறும்
சாதித்தலைவர் மட்டும் தான். 
எவரெல்லாம் அம்பேத்கரைப் பற்றிப் பேசுகிறார்களோ
எழுதுகிறார்களோ அவர்கள் அனைவரும்
ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களாக மட்டுமே
இருக்க முடியும் என்பது தான் இன்று பொதுப்புத்தியில்
இருக்கும் கருத்து. (அதுதான் உண்மையாகவும் இருக்கிறது
என்பது அதைவிட கேவலம். அவலம்.)

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கருத்துக்கணிப்பு
ரொம்பவும் மேலோட்டமானது. 
http://indianexpress.com/…/one-in-four-indians-admit-to-pr…/
சாதி ஒழிப்பு என்பது
சாதிகளின் சமபந்தியால் ஒழியாது. சாதிகளின்
சம்பந்தி உறவுகளால் மட்டுமே ஒழியும். ஒழிக்க
முடியும்.

இதை முன்னெடுக்காத எந்த ஒரியக்கமும் சாதி
ஒழிப்பை எழுத்துக்கூட்டி மட்டுமே வாசிக்க முடியும்.
சாதித் திமிரின் மயிரைக் கூட அசைக்க முடியாது.