Thursday, December 9, 2021

மனித உரிமையும் மதமும் (டிச10, மனித உரிமை நாள்)

 ஓர் இசுலாமியனாக இருந்துப் பார்,

அப்போதுதான் அந்த வலியும் வேதனையும் புரியும்”
இன்று டிசம்பர் 10 மனித உரிமைகள் நாள்.
இன்று இதைப் பேசித்தான் ஆகவேண்டும்.
காரணம்… இதை இன்று பேசாவிட்டால்
வேறு எந்த நாளில் தான் பேசிவிட முடியும்?
ஆயுள் தண்டனை கைதிகள் மனித நேய அடிப்படையில்
விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அரசாணை
பாராட்டுதலுக்குரியது.

20ஆண்டுகாலம் சிறைவாசம் முடித்தவர்கள் மட்டுமல்ல,
10ஆண்டுகள் நிறைவு செய்தவர்களையும் விடுதலை
செய்வதற்கான விதிமுறைகள் இந்த ஆணையில்
சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அறிக்கையில்
இருக்கும் ஒரு கண்டிஷன்.. ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.
இங்கே மனித நேய அடிப்படையில் கொடுக்கப்படும்
விடுதலையில் “மதம்” தன் இந்துத்துவ முகத்தை
வெளிப்படுத்தி இருக்கிறது.
அதாவது “சாதி” யை விட மதம் தான் ஆகப்பெரும்
மன்னிக்க முடியாத குற்றமாக வரையறுக்கப்பட்டு
இருக்கிறது.
கீழவெண்மணியில் 44பேர் படுகொலை செய்யப்பட்ட
வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களும்,
மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில்
தண்டிக்கப்பட்டவர்களும் 10 ஆண்டுகளில் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர்., என்ற சிறைக்கைதிகள்
விடுதலை வரலாறு இதே தமிழ் நாட்டில் தான்
நடந்திருக்கிறது.
அதை மனித நேய அடிப்படையில்
ஏற்றுக்கொண்டோம். இதை அதே மனித நேய
அடிப்படையில் மறுத்திருக்கிறோம்.
ஏன்?
நாம் என்னவாக இருக்கிறோம்?!!
14 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவு பெற்ற கைதிகளை
விடுதலை செய்வது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது
என்பதைக் கூட வசதியாக மறந்தும் மறைத்தும்
நம் மனித நேயத்தைக்
காப்பாற்றிக் கொள்கிறோம்.
மனித நேய இந்துத்துவ அரசியல்:
டிசம்பர் 06 பாபர் மசூதி இடிப்பு.. என்பது
வெறும் நிகழ்வல்ல. இந்திய சட்டத்திற்கு
விடப்பட்ட மிகப்பெரிய சவால் அது.
அதன் விளைவுகளை வெளிப்படையாக பேசவோ
எழுதவோ முடியாது என்பது தான் நிதர்சனம்.
ஒருவன் இந்துவாக இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால் இந்துத்துவவாதியாக இருப்பது மனித
நேயத்திற்கு எதிரான பாசிச அதிகாரவெளி .
இந்துத்துவ என்ற கருத்தியலை உருவாக்கிய
சாவர்க்கர் இந்துத்துவ என்பதன் அதிகாரவெளியை
முன்னிலைப்படுத்துகிறார்.

காந்தி இந்து. ஆனால் அவர் இந்துத்துவவாதி அல்ல.
ஆனால்… அரசு அதிகாரம் இந்துவாக மட்டுமில்லாமல்
இந்துத்துவவாதியாக இருக்கிறது.
ஒருவகையில் இந்துத்துவ என்பதன் அதிகார முகம்
இப்படியாக வந்து விடுகிறது.
(For the liberals hInduism comes first and then Hindutva.
For the Nationalists, Hindutva comes first, and then Hinduism.
– Arvind Sharma)
இதை எல்லாம் எழுதக் கூடாது,
பேசக்கூடாது என்றுதான் நானும்
சில மாதங்கள் மெளனமாக இருந்தேன்.,
நேற்று ஒரு மசாலா படத்தில் ஒரு காட்சி :

/எதற்காக இதை எல்லாம் செய்கின்றீர்கள்?
இதில் என்ன கிடைக்கிறது? என்ற கேள்வி
ஒரு போலீஸ் அதிகாரி தான் கைது செய்யும்
இசுலாமியரிடம் கேட்கிறார்.
அதற்கு அவர் சொன்ன பதில்:
“ஓர் இசுலாமியனாக இருந்துப் பார்,
அப்போதுதான் அந்த வலியும் வேதனையும் புரியும்.. “/

இதை வெறும் சினிமா வசனமாக எண்ணி
கடந்து சென்றுவிட முடியவில்லை…
இன்று டிசம்பர் 10, மனித உரிமை நாள்.
எல்லாமாக இருந்துவிட முடிகிறது.
மனிதனாக இருப்பது மட்டும் தான்
இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும்
மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

No comments:

Post a Comment