Friday, September 25, 2009

மவுனவெளி


பளிச்சிடும் காமிராவெளிச்சத்தில்
நிரம்பி வழியும்
புன்னகை விசாரிப்புகள் வரிசையில்
ஆடை அணி உறவுகள் களைந்து
நிர்வாணமாய் பேசியது
நம் மவுனம்.

தொட்டுப்பார்த்துக்
களைத்துப்போனது
காற்று
மூடிக்கொண்டன
கருவறைக் கதவுகள்

யுகம் யுகமாய்
சிற்பியின் உளிகளுக்காய்
காத்திருக்கிறது
கடலடியில் கரும்பாறை
*
உடைந்த சிலை
சிதைந்த ஓவியம்
எரிந்த கரித்துண்டு
என்னைப் போலவே
எதையும் சொல்வதில்லை என
பூக்கள் வாடலாம்
பூமி வாடுவதில்லை.

*

செத்தப்பின்
உயிர்த்தெழுந்த
பரமப்பிதாவின்
கல்லறைச் சத்தியமாய்
வாசிக்கிறேன்.
'புதைந்து போன
கனவுகள் உயிர்த்தெழுவதில்லை"
ஆமென்.'

*

காத்திருந்ததாய்
கனவுக்கண்டதாய்
கவலைக் கொண்டதாய்
கண்ணீர்விட்டதாய்
கவிதை எழுதியதாய்
காணத்துடித்ததாய்
அன்று போலவே
இன்றும்
சொற்குப்பைகளுக்கு நடுவில்
தொலைந்து போன
வாழ்க்கையைத் தேடுகிறாய்
வார்த்தைகள் எட்டாத
பிரபஞ்சவீதியில்
காலத்தைத் தின்று செரித்த
நெருப்பாய்
எரிந்து கொண்டிருக்கிறது
நீ தூக்கிவீசிய
மவுனவெளி.

-------------

Friday, September 18, 2009

காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்









ஜெட் விமான ஓட்டிகள் திடீரென வேலை நிறுத்தம் செய்ததால் 08

செப்டம்பர் சென்னையிலிருந்து திட்டமிட்டபடி என்னால் மும்பை

வரமுடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற

தனியார் விமானங்கள் நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் கணக்கில்

பயணச்சீட்டு தொகையை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
10ஆம் தேதிக்குத்தான் ஏர் இந்தியாவில் இடம் கிடைத்தது.
எனவே 9/9/09ல் சென்னைக்கு அருகிலிருக்கும் காஞ்சிபுரம் கோபுர

தரிசனங்களுக்காக சென்று வந்தேன்.

சென்னையின் எந்த வளர்ச்சியும் எட்டிப்பார்க்காத பத்து வருடம்

பின்னோக்கிய வட்டத்தில் காஞ்சிபுரம். சுட்டெரிக்கும் வெயில்.
பல்லி தரிசனம் கண்டால் செய்த பாவம் எல்லாம் கரைந்துவிடும்
என்று ஒரு கோவில்.. 2500 ஆண்டு பழமைவாய்ந்த மாமரமே
தலவிருட்சமாக இருக்கும் இன்னொரு கோவில், சிவனில்லாமல்
சக்தி மட்டுமே காமாட்சியாக காட்சியளிக்கும் தாய் வழிபாட்டின்

எச்சமாய் காமாட்சி அம்மன், எப்போதும் வெண்ணெய் நெடி கலந்து
புளிச்ச மோரின் வாசம் துளசி மணத்துடன் சேர்ந்து மணக்கும் பெருமாள்

கோவில்.. இப்படியாக கோவில்களின் நகரமாக சோழர் பல்லவர்

கட்டடக்கலையுடன் கவனிப்பாரின்றி சிலையாகிவிட்ட சிற்பங்கள்..
பக்தர்களின் பசியை மிகவும் அக்கறையுடன் வியாபாரமாக்கியிருக்கும்
சரவணபவனில் கை நனைத்துவிட்டு காஞ்சிபுரத்தில் நான் விரும்பிய

தரிசனத்தை நோக்கி பயணித்தேன்.

வண்டி ஓட்டுநருக்கு பெயர் தெரிந்திருந்தது. ஆனால் முகவரி

தெரியவில்லை. அருகிலிருந்த பெட்டிக்கடையில் விசாரித்தப் போது அவர்

சரியாக வழி சொன்னார். அதுவே அப்போது நிம்மதி கலந்த மகிழ்ச்சியைத்

தந்தது. ஒருவேளை அந்தப் பெட்டிக்கடைக்காரர் 'வழி தெரியாது' என்று

சொல்லியிருந்தால் அதிர்ச்சி என்னைத் தாக்கியிருக்கும். அந்த மாதிரி

அதிர்ச்சி ஏற்படவில்லை என்பதால் ஏற்பட்ட நிம்மதியும் பல வருடங்கள்
நான் பார்க்க விரும்பிய ஓரிடத்தைப் பார்க்கப்போகும் மகிழ்ச்சியும்
கலந்த கலவை உணர்வுகள்.

நான் 30 வருடங்களுக்கு முன் முதன் முதலாக வாசித்த அறிஞர்

அண்ணா குறித்த புத்தகம் நினைவுக்கு வந்தது. முதல் பக்கத்திலேயே
காஞ்சி என்றால் அண்ணா என்ற கருத்து எழுதப்பட்டிருக்கும்.
அதற்கு கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவில் நடைபெற்ற உண்மைச்

சம்பவம் பேசப்பட்டிருக்கும்.

கிருபானந்தவாரியார் தன் சொற்பொழிவில் ஒவ்வொரு தளங்களின்

பெயரையும் சொல்ல சொல்ல கூடியிருந்தவர்கள் அந்தந்த தளங்களின்

மகான்கள் பெயரைச் சொன்னார்கள். அந்த வரிசையில் அவர் காஞ்சி

என்று சொன்னவுடன் கூட்டத்தினர் (அதுவும் ஆன்மிக சொற்பொழிவு

கூட்டத்தில்!) அண்ணா.. அண்ணா என்று ஒரே குரலில் ஒலித்ததாகப்

பதிவு செய்யப்பட்டிருந்தது. வாரியார் காஞ்சி என்றவுடன் காஞ்சி

காமக்கோடி பீடாதிபதியின் பெயரைத்தான் எதிர்பார்த்தார் என்றும் கூட்டம்

அண்ணா என்றவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அவருக்கு ஏற்பட்டது

என்றும் கட்டுரையாளர் எழுதியிருந்தார்.. ( புத்தக ஆசிரியர் பெயரும்

தலைப்பும் நினைவில் இல்லை. )
காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தை நோக்கிப் பயணம் செய்தப் போது

இக்கருத்து மட்டும் நினைவில் வந்தது.

அண்ணாவின் பெயரைச் சொல்லி வளர்ந்துவிட்ட கட்சிகள்.. அண்ணாவின்
முகத்தைக்கூட அவர் நூற்றாண்டை முன்னிட்டு மட்டுமே

அழைப்பிதழ்கள், சுவரொட்டிகளில் இடம் கொடுக்கும் அவலத்தை நான்

உணர்ந்திருக்கிறேன். எனினும் இவ்வளவு மோசமாக தி.மு.க.வின்

ஆட்சியில் அதுவும் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவை ஒரு சடங்கு

போல கொண்டாடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ...

அங்கே நான் பார்த்த காட்சிகள்..

ஒரு பெண் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார். முகப்பில்

தலைவாசலுக்கு மேல் அண்ணாவின் புகைப்படத்தை ஆணி அடித்து

மாட்டிக்கொண்டிருந்தார்கள். அந்தப் புகைப்படத்தின் பிரேமுக்குள்

சின்னச்சின்ன மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த

மின்விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்த்தார்கள். அதுதவிர

அண்ணாவின் புத்தகங்கள் ஒரு சில கண்ணாடி அலமாரிக்குள் இருந்தன.
மலிவு விலைப் பதிப்பு புத்தகங்கள். அண்ணா பயன்படுத்திய மூக்கு

கண்ணாடி, எழுதும் இங்க் பேனா, இரண்டு பக்கத்தில் எழுத்துகள் மஙகிய
நிலையில் இருந்த அவர் நாட்குறிப்பு வைக்கப்பட்டிருந்தது. மற்றும்

அண்ணாவின் புகைப்படங்கள். 20 முதல் 30க்குள் இருக்கும். அனைத்து

புகைப்படங்களும் அந்தக் காலத்தில் தினத்தந்தியில் வந்த
சாதாரண வாசகனும் அறிந்த புகைப்படங்கள் தான். குறிப்பிட்டு சொல்லும்

படி எதுவுமில்லை. அண்ணாவையும் தி.மு.க.வையும் ஒன்றாக பார்க்கும்

சிலர் சொல்லக்கூடும்.. அண்ணா நூற்றாண்டை ஒட்டி அண்ணாவின்

இல்லம் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்ததால் அப்படி இருந்திருக்க்

கூடுமென. ஆனால் அங்கு வேறு எதுவும் இருந்ததற்கான

அடையாளங்கள் எதுவுமில்லை..!
அண்ணாவின் திருமண அழைப்பிதழ் வைக்கப்பட்டிருந்தது. 10/09/1930 ..







"நாளை அண்ணாவின் திருமண நாள்"
என்று நினைத்துக் கொண்டே புகைப்படம் எடுத்தேன்.
அண்ணாவின் திருமண அழைப்பிதழ் நிறைய செய்திகளை இன்று

நமக்குத் தருகிறது. ( இது குறித்தும் எழுத வேண்டும்)


அண்ணாவின் இல்லத்தில் அரசு வைத்திருக்கும் அண்ணாவின் நினைவுப்

பொருட்களை விட அதிகமாக அந்தக் காலத்தில் அண்ணா சம்பந்தப்பட்ட
புகைப்படங்கள், புத்தகங்கள், கையொப்பமிட்ட கடிதங்கள் எங்கள் வீட்டில்

கூட இருந்தது. அண்ணாவை தன் அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்ட
எண்ணற்ற தம்பிமார்களின் இல்லங்களிலும் இருந்திருக்கும்.

இன்னொரு செய்தி.. அண்மையில் அண்ணாவின் திருவுருவம் பொதித்த

நாணயத்தை பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அண்ணா நூற்றாண்டு

நிறைவு விழாவில் தமிழக முதல்வரின் பேச்சு. 16/9/09 தினத்தந்தி

மும்பை பதிப்பில் முதல் பக்கம்.. கலைஞரின் பேச்சு ..
தினத்தந்தியை நம்பிவிடுவதற்கில்லை. கலைஞர் அண்ணா குறித்து

பேசியதை எடிட் செய்துவிட்டு மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி குறித்து

பேசியதை மட்டும் வெளியிட்டு விட்டார்களொ என்னவோ..!

எங்கள் மும்பையில் புறநகர் திமுக இலக்கிய அணி சார்பாக அண்ணா

நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள். திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி சட்டசபை உறுப்பினர் அப்பாவு சிறப்பு விருந்தினராக

கலந்து கொண்டார். அப்பாவு அவர்களின் அரசியல் வாழ்க்கையும் மக்கள்

பணியும் போற்றுதலுக்குரியதுதான். அதில் எனக்கும் கருத்து

வேறுபாடில்லை. ஆனால் நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு விழாவாக

இல்லாமல் அப்பாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவாக தவிர்க்க

முடியாமல் தடம் மாறியதைக் கண்டேன். !


திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில்
தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன்.

தேடித் தேடிப் பார்க்கிறேன்
தொலைந்து போன உறவுகளை அல்ல
தொலைக்கப்பட்ட அண்ணாவை.

அண்ணாவின் எழுத்தும் பேச்சும்
எனக்கொன்றும் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்ட வேதவாக்கல்ல.

வேதங்களையும் வேதவாக்குகளையும்
விமர்சிக்கும் வித்தையை
நான் கற்றுக்கொண்டது என்னவோ
அண்ணாவின் கம்பரசம் வழியாகத்தான்.

நான்
அண்ணா உருவாக்கிய
அமைச்சர்களின் வாரிசல்ல.
அண்ணாவை நம்பிய
தொண்டனின் கடைசி வாரிசு.
அதனால்தான்
இன்னும் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது
அண்ணாவின் கண்ணியமும் நாணயமும்.
என் கேள்விக்கணைகள்
உங்கள் கருத்துகளுடன் மோதும்போதெல்லாம்
ஆத்திரப்படும் உங்களைக் கண்டு-
பலகீனமாகிப் போன
உங்கள் பாசறையைக் கண்டு.-
வருத்தப்படுகிறேன்.


காங்கிரசு போட்ட
தடையுத்தரவு
அண்ணாவின் ஆரியமாயைக்கு
மட்டும்தான்.
தம்பிகளின்
அரசுக்கட்டில் விதித்த
தடையுத்தரவு..!!??

தம்பியுடையான்
படைக்கு அஞ்சான்.
அண்ணாவுக்குத்தான்
எத்தனை எத்தனைத்
தம்பியர்.!
அவர் அத்துனைப் பேருக்கும்
பட்டா போட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
24 மணிநேரமும்.
அண்ணாவின்
நூற்றாண்டு விழா திருவிழா கூட்டத்தில்
கவியரங்கம்
கருதரங்கம்
அமைச்சர்கள்
வருங்கால அமைச்சர்கள்
எல்லோர் முகங்களும் வருகின்றன.
போகின்றன.
வாசிக்கிறார்கள்
பேசுகிறார்கள்.
கைதட்டுகிறார்கள்.

காத்திருக்கிறேன்.
எப்போதாவது
காட்ட மாட்டார்களா?
அண்ணா பேசுவதை.!
இப்போதாவது
பார்க்க முடியுமா
அண்ணாவின் வேலைக்காரியை?
ஓரிரவு மட்டுமல்ல
அண்ணா நூற்றாண்டு திருவிழாவின்
ஒவ்வொரு இரவிலும்
கண்ணிமைகள் மூடாமல் காத்திருக்கிறேன்..
நீங்கள் இலவசமாகத் தந்த
தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால்.