Monday, February 5, 2024

பெண் படைப்பாளுமை விருது - தமுஎசக


 

பெண் படைப்பாளுமை : புதியமாதவி

     மும்பை தாராவியில் தன் அசல் முகங்களை இழந்து ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஏழை உழைப்பாளிகளின் பாழ்வெளி வாழ்க்கையே  எழுத்தாளர்

புதியமாதவியின் பாடுபொருள். கவிதை என்றாலும் கதைகளாயினும் அவருடைய சொற்கள் ஒடுக்கப்பட்டுக்கிடப்போரின் உளவியலையே பேசுகின்றன.

     பத்தமடையில் குளிர்ந்தோடும் பரணியாற்றுப் பரப்பிலிருந்து மூன்று தலைமுறைகளுக்கு முன்பாகக் கிளம்பி அலைகுடியாக இடம்பெயர்ந்து வாழும் குடும்பம் எழுத்தாளருடையது.

     கவிதை கதை கட்டுரை எனக் காத்திரமான பங்களிப்பினை இலக்கியத்திற்கு செய்திருக்கிறார் இவர். சூரியப்பயணம் துவங்கி அவள்களின் நாட்குறிப்புகள் வரையிலும் எழுத்தில் இறுதிச் செய்யப்பட்டிருக்கும் இவருடைய கவிதைச் சொற்கள் முற்றிலும் தனித்தன்மையிலானவை.

     புத்தாயிரத்தில் கவிதாயினிகள் பெண் உடலின் தனித்தப் பாடுகளைப் பாடினர். அவை யாவும் மத்தியதரவர்க்கத்தினரின் அன்றாடங்களில் முகிழ்க்கும் உளச்சிக்கல்கள் எனும் விமர்சனமுண்டு. புதியமாதவியின் கவிதை உலகம் முற்றிலும் வேறானது. உழுகுடிப்பெண், தான் வேலை பார்க்கும் வயலில் பிரசவ வலியில் துடித்து வரப்பில் பிள்ளைப்பேறு அடைகிறாள். எல்லாம் நிமிடங்களில் கரைந்துவிடுகிறது. பிறகு வயலிலேயே மீதிப்பொழுதையும் உழைத்துக் கழிக்கிறாள். மதப்பயங்கரம் தன்னை மூர்க்கமாக வெளிப்படுத்தும் மும்பையில் இருந்து கொண்டு ஹேராம் எனும் சொற்சேர்க்கையின் அரசியலைப் பேச முடிகிறது இவரால்.

     இவருடைய கட்டுரைகளில் உலகமயம் சிதைத்த பெண்களின் இருப்பை, இன்மையைக் கூர்மையாக வெளிப்படுத்துகின்றன. சாதி மறுப்பு சாதொயொழிப்பிற்கான உரையாடல்களை முன்வைக்கும் புதியமாதவியின் கட்டுரைகள் தனித்தன்மையிலானவை. இவருடைய சிறுகதைகளும்  நாவல்களும் காலத்தைப் பாடும் கலைப்படைப்புகளாகின்றன. ரசூலின் மனைவியாகிய நானும், பச்சைக்குதிரையும் தேர்ந்தக் கலைப்படைப்புகள். கவிதை, சிறுகதை, நாவல், பெண்ணிய நுண் அரசியல்ல்ல்ல்ல் கட்டுரைகள், இலக்கிய விமர்சனம், மொழி பெயர்ப்புகள் என பன்முகம் கொண்ட படைப்பாளி, சமரசமின்றி தன் கருத்துகளை முன் வைக்கும் எழுத்தாளர் புதியமாதவி.

      நன்றி தமுஎசக.





தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,

கலை இலக்கிய விருதுகள் 2022 ஆய்வு.

நாள் 07-01-2024 சென்னை. 

மேலாண்மை பொன்னுசாமி நினைவு விருது 2022.

பெண் படைப்பாளுமை : புதியமாதவி.

.

2 comments:

  1. "சமரசமின்றி தன் படைப்புகளை வெளிப்படுத்தும் படைப்பாளி " மிகப் பொருத்தமான கூற்று. தனக்கு சரியெனப்படுவதை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டை இருப்பவர் கவிஞர் புதிய மாதவி.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் 💐💐💐

    ReplyDelete