Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, May 31, 2020

தொலைத்துவிட்டேன்

Image may contain: ocean, sky, twilight, outdoor, nature and water

நானே பாற்கடலில் விட்டு விட்டு வந்ததை
தொலைத்துவிட்டேன் என்பதா!
அதை எதற்காக சுமந்து வந்தேன்?
யுகங்களின் தவிப்பை அதில் ஊடும்பாவுமாக
நெய்து வைத்திருந்தேன் என்பதாலா!
காலச்சுமையின் வலி தாங்காமல்
குகையில் ஒதுங்கியது யார் குற்றம்?
வள்ளிமணாளன் ஏன் பழனிக்கு ஓடிப்போனான்.?
யாரைப் பற்றியும் எதைப் பற்றியும்
யோசிக்கமுடியாதப் பொழுதில்
அது நடந்துவிட வேண்டுமென
மரங்களிடம் வேண்டியதை
மணாளன் அறிந்தானோ..
வேர்களின் தாகத்தை இலைகள் அறியுமோ?
மெல்ல மெல்ல இருள் கவிந்த அப்பொழுதில்
அதைச் சுமக்கவோ எடுத்து வரவோ முடியாமல்
இறக்கிவைத்துவிட்டேன்..
கொடுக்கமுடியாதை எடுத்துவருவது எப்படி?
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும் எதுவுமில்லாத
குடிசையில் கதவுகள் இருப்பதில்லை.
அதனால் பூட்டுகளுக்கும் அவசியமில்லை.
எடுத்துச் சென்றதைப் பத்திரமாக
எடுத்துவர முடியாமல்
எவர் தடுத்தார்?
முள்வெலியின் காயங்களுக்குப்
பழகிப்போனது முல்லைச்செடி.
அரும்புகள் பூக்கும் போதெல்லாம்
அரவத்தின் ஆட்டம் ஆரம்பமாகிறது.
பிச்சியைப் போல தேடி அலைகிறேன்.
கிடைக்குமோ இனி?
ஜனக்கடலில் இனி அதைக் கண்டடைய முடியுமோ?
என் செய்வேன்?
மணல்வீடுகளுக்கு அடியில் அது புதைந்திருக்கலாம்.
கடலை விற்கும் சிறுவன் கையில் கிடைத்திருக்கலாம்.
கோவில் வாசலில் பிச்சைப்பாத்திரமாய் மாறி இருக்கலாம்.
விலைமாதுவுடன் படகருகில் படுத்திருப்பவன்
எடுத்து அணிந்துமிருக்கலாம்.
என்னை எப்போதும் வாசிக்கும் அந்த அலைகள்
கடலுக்கடியில் அதைப் பத்திரப்படுத்தி இருக்கலாம்.
எப்படிப் பார்த்தாலும் அது கை நழுவிப் போய்விட்ட து.
அவனா நானா அதுவாகிப் போன
காலத்தின் முன்னால்
தலைகுனிகிறேன்.
தொலைந்துப்போனதற்காய் ..
இப்போதெல்லாம் யாரும் வருத்தப்படுவதில்லையாம்!
உண்மையா..
தொலைந்துப் போ..
தினமும் தொலைந்துப் போ..
புதிதாகப் பிறப்பதே பிறவியின் மகத்துவம்
தொலைந்துப் போ..
பாற்கடலின் விஷம்..பொங்கி மேல் எழுகிறது.
சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான்.
தொலைத்தாயோ தொலைந்தாயோ
யுகங்களின் ஆடைகள் எரிகின்றன.
அதில் பொதிந்து வைத்திருந்த முத்தங்களை
பொறுக்கிவிட துடிக்கிறேன்.
முத்தங்களை நிராகரித்த இரவுகளுக்கு
இது தண்டனையோ விடுதலையோ..
ஓம் நமசிவாய..

Monday, May 11, 2020

ஆண்டாளும் அன்னையர் தினமும்



ஆண்டாளும் அன்னையர் தினமும்
-----------------------------------------------------
ஆண்டாளுக்கு அன்னையர் தின வாழ்த்து
சொல்லமுடியாமல் தடுப்பது எது? யார்?: ஏன்?
ஒரு கவிதையின் பயணமிது...
ஆண்டாளுக்கு வளைகாப்பு
வெண்சங்குகள் சிரித்தன..
ஆண்டாள் தன் புருஷனின் காதில்
கிசு கிசுத்தாள்.
பிறக்கப்போகும் குழந்தைக்கு
நீ யே தகப்பன் என்று
ஊரார் அறிய .. வளைகாப்பு..
பாற்கடல் விழித்துக்கொண்ட து.
அதானாலென்ன?
எல்லா பெண்களின் கருவறை விந்துகளிலும்
நானே இருக்கிறேன்.. அதிலென்ன சந்தேகம்?
மயிலிறகால் அவள் சூல் வயிற்தைத்
தடவிக்கொடுத்தான்.
பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர்
வைக்கலாம்..?
சொல்லுங்கள் நாதா…
ஹரியின் பிள்ளை தானே அவன்.
ஹரிஜன் என்று பெயர் வை..
அவள் வயிற்றிலிருந்த குழந்தை
காலால் உதைத்த து.
அந்த வலியில்…
அவள் கருவறை வெடித்து
அவன் பிறந்தான் ..
ஆண்டாள் தேசத்தில்
தொட்டில் குழந்தைகள்
திட்டம் அறிமுகமானது.
வெண்சங்குகள் ஒலித்தன.
…………………….



இக்கவிதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு
வெளியானது எனக்கே மறந்துவிட்ட து.
வாட்ஸ் அப்பில் சுற்றி சுற்றி இதே கவிதை
இன்று எனக்கு வந்து சேர்ந்த து தனிக்கதை!
இன்று அன்னையர் தினமாமே!
அதனாலோ என்னவோ.. இக்கவிதைக்கு
வரையப்பட்டிருக்கும் கோட்டோவியம்
இக்கவிதையின் வரிகளில் சொல்ல முடியாத
ஆண்டாளின் இன்னொரு கதையை
பனிக்குடம் உடைத்து பிரசவித்த வேதனையை
அவள் கதறலை .. ஓங்கி ஒலித்த து.
அன்னையர் தினத்தில்.., அவள் கருவறை
மட்டும் ஏன் திறக்காமலேயே இருளில்
மூழ்கிக்கிடந்த து?
அவள் காதல் ஏன்
அவளை வாழவைக்க வில்லை!
தோற்றுப்போன காதலியர் தான்
பூஜிக்கப்படும் தேவியர்களாக
கோவிலை அலங்கரிக்கும் சிலைகளாக
உங்கள் பூஜையில்…
யுகம் யுகமாக ஏமாற்றும்
காதல்வலையில் அவள் விழுவதும்
அழுவதும் ..அவள் சுமக்காத
பிரசவ வலியின் கதறலாய்..
பிரபஞ்சம் எங்கும்.. பிரவாகமெடுத்து
ஒடுகிறது.
அவள் முலைப்பால் அருந்தாத
தாலாட்டுப் பாடல்கள்
அனாதைகளாகி இப்போதும்
அலைகின்றன.
அவதாரங்களால் நிரம்பி வழியும்
உன் கதைகளில்
அவள் மறுபிறவி எடுப்பதில்லை.
****
அவளுக்காக கதறும் துளசிமாட த்தின்
கதறல்…
துளசிமாட த்தின் கதறல்
அடீயே.. அம்மா ஆண்டாளு
உருகி உருகி கரைஞ்சிப் போனியே
உன்மத்தம் கொண்டு எரிஞ்சிப் போனியே
ஆத்தா உனக்கு வாய்க்கலையே
அடியே நீயும்
அப்பன் சொல்ல கேட்கலையே
அடீயே ஆண்டாளூ..
கனவில் வந்தவன் நிஜம்தானா
கைப்பிடித்ததும் உனைத்தானா- அடியே
கனவுக்காதல் பலிச்சிடுமா
கண்மணி உன்னுயிர் பிழைச்சிடுமா..
அடீயே ஆண்டாளு..
மார்கழிக் கோலம் அழியவில்லை
சூடிய பூக்கள் வாடவில்லை
மாடும் கன்றும் திரும்பவில்லை
மணமாலை ஏனோ இரங்கவில்லை.
அடீயே ஆண்டாளு
துளசிமாடம் துடிக்குதடீ.
துயரக்கேணியில் புலம்புதடி.
தத்துவப் படகுகள் மிதக்குதடி
தமிழே உனைத்தேடி நடிக்குதடி
ஆழிச்சங்குகள் நடுங்குதடி - உன்
ஆத்தா கண்ணீரு பெருகுதடி.
அடியே ஆண்டாளு..
பாற்கடலின் பள்ளிகொண்டபுரம்
ஆழிப்பேரலையாய் உனை
ஆட்கொண்ட மர்மம் என்ன?
மவளே மவராசி..
கைத்தலம் பற்றிய கார்மேகம்
வெண்சங்கு முத்தங்கள்
கருக்கலின் கனவுகளம்மா
வா.. விடியலுக்கு வா..
விடிவதற்குள் வா.
நடுங்கும் குளிரில் வெதுவெதுப்பான
நீரில் நீராட அழைக்கிறேன்.
தோழிகள் வாசலில் காத்திருக்கிறார்கள்.
உன் கதைகளைச் சொல்லி
ஆயர்குல பெண்டிரை ஏமாற்றாதே.
கனவுகள் கனவுகளாகவே முடிந்துப் போன
அந்தக் கதையை
இந்த மார்கழித் திங்களிளாவது
சொல்லடி கிளியே.. சொல்லடி.
அடியே ஆண்டாளு.. போதுமடி..
உன்னை ஏமாற்றி
என்னை ஏமாற்றி
ஊரை ஏமாற்றி
உறவை ஏமாற்றி
காதலின் பெயரால்
கனவாகிப் போனவளே..
அடியே ஆண்டாளு
பெத்தமனசு துடிக்குதடி..
கருவறை நெருப்பில் எரியுதடி
துளசிமாடம் எரியுதடி.
ஆண்டாளு.. அடியே ஆண்டாளு..
------------------------------

#ஆண்டாள்_அன்னையர்_தினம்



Sunday, May 10, 2020

பவளக்கொடி சாட்சியாக

கனவுகள் பற்றி எரிகின்றன
கனவுத் தீ
பச்சை மரத்தில் படர்கிறது
கூடு கட்டியிருந்த பறவைகள்
உயிர்ச் சிறகுகள் விரித்து
படபடக்கும் ஓசையில்
காடுகள் உறக்கம் கலைந்து
ஓடி வருகின்றன.
மஞ்சள் முகம் கருகி விழ்வதற்குள்
கந்தர்வன் அவளைத் தூக்குகிறான்.
தூர நின்று அவளைப் பார்க்கிறது
பாதி எரிந்துப் போன பவளக்கொடி.
தென்னவன் கோவில் கதவுகள்
தீ நாக்குகளின் வெப்பம் தாளாமல்
சரிந்து விழுகின்றன.
"யானோ கள்வன்?
யானோ காதலன்!
யானே தென்திசை கூற்றுவன்!
என்னோடு முடியட்டும்
உன்னை எரித்த தீயின் நாக்குகள்
என்னை எரித்து என்னோடு முடியட்டும்."

மானை விரட்டிய சிறுத்தையின் பாய்ச்சலை
நக்கி நக்கி தீயின் நாக்குகள்
பசியாறு கின்றன.

கந்தர்வனின் மகள் கை அசைக்கிறாள்
அவள் கண்களிலிருந்து சொட்டுச் சொட்டாக வனங்களில் விழும்
கண்ணீரின் துளிகளில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
தென்னவன் எச்சில் படாத
கனவுகளின் மிச்சம்.

Monday, April 27, 2020

அணில் காதல்

அணில் காதல்


அணில்கள் சண்டை இடுகின்றன.
கலவிக்கான யுத்தம் இது.
மூர்க்கத்துடன் ஆண் இருவர்
மோதிக்கொள்ளும் சப்தம்
தோட்டத்தை தாண்டி
வெளியில் பரவுகிறது.
கதவுகளைத் திறந்து எட்டிப் பார்க்கிறேன்.
கிணற்று ஓரம் பதுங்கி இருக்கும்
அவள் பார்வையில் இருந்து
நடுக்கமும் பயமும் துண்டு துண்டாய் கிணற்றுக்குள் விழுகிறது.
இது நிச்சயமாக அவள்தான்.
வலியவனைப் புணர்வது
அவர்கள் தேசத்தின் நியதி தானே..
பின் ஏன் இந்த அச்சம்?
தோற்றுக் கொண்டு இருப்பவன்
அவள் காதலனாக இருப்பானோ?
அவனை இழக்கப் போகும் சோகமோ
காதலின் மரண வலியோ
கதவுகளைச் சாத்தி பூட்டிக் கொள்கிறேன்.
என்ன நடந்திருக்கும்?
மறுநாள் அணில்கள் ஒன்றே ஒன்று
விரட்டிக்கொண்டு துள்ளி விளையாடுகின்றன.
மாதுளம்பழத்தை துளைத்து எடுத்து துவம்சம் செய்திருக்கும் அணில்களை விரட்டுவதற்காக விரைகிறேன்.
இணைகளின் குதியாட்டத்தில்
முருங்கைப் பூக்கள் உதிர்கின்றன.
ஏக்கத்துடன் அவளை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
அடுத்த பிறவியிலேனும்
அணிலாக பிறக்க வேண்டும்.

Friday, April 17, 2020

பிறவிக்கடல்

கைகளையும் கால்களையும் கட்டியது
யாருமல்ல நானே தான்.
 எதிர்நீச்சலிட விருப்பமில்லை.
திமிரும் உடலை அழுத்தி அழுத்தி மூழ்கிக்கொண்டே இருக்கிறேன்.
ஏழு கடல்களையும் தாண்டுவதற்குள்
காற்றின் சுவாசம் அடங்கிப் போகிறது .

அவன் ஸ்பரிசம் அறியாத உடல்
உப்பு நீரில் வானம் பார்த்து மிதக்கிறது.
மீன்கள்கண்களைக் கொத்துகின்றன தொடைகளுக்கு நடுவில் ஊர்ந்து சென்ற பாம்புகள்
அடிவயிற்றில் இருந்து தவளையைக் கவ்விப்பிடித்து பசியாறுகின்றன.
 திமிங்கலம்விலகிச் செல்கிறது.
குஞ்சுகளுடன் நீந்தி வந்த சுறாக்கள்
 கண்ணீர் விடுகின்றன.
கடல்குதிரை மீதேறி வரப்போவதில்லை ராஜகுமாரன்.
அவன் தின்னாத முத்தங்களை
கடலின் அலைகள் தின்னுமோ ?
 பசியாறுமோ !
அமுதமே விஷமாக நிசப்தம் ஆகிறது
பாற்கடல்

Tuesday, April 14, 2020

பாம்பின் விளையாட்டு

பாம்புகள் ஊர்ந்து சென்ற பாதையில்
விடியலில் என் பாதங்கள் பதிய நடக்கிறேன்.
பாம்பு உரித்துப் போட்ட ஆடைகளை போர்த்திக்கொள்கிறேன்.
உடல் நெளிகிறது.
புதருக்குள் ஓடி ஒளிந்து விளையாடுவது
புதிய அனுபவமாய்...
புத்துணர்ச்சி தருகிறது.
குதித்து ஓடும் தவளைகளைப்
பிடிப்பதும் விடுவதும்
தவளைகள் மரண பயத்தில்
துள்ளி ஓடுவதை ரசிப்பதும்
விநோதமான விளையாட்டாகிவிடுகிறது.
வீட்டு நினைவில் வாசலில் நுழைகிறேன்.
"பாம்பு பாம்பு விடாதே..ஒரெ போடா
மண்டையில போடு.."
தடியும் காம்புமாய் தாக்க வருகிறார்கள்.
சர்ரென்று வெளியில் வந்து
உரக்குழியில் மண்டிக்கிடக்கும்
குப்பைச் செடிகளுக்குள் முகம் புதைக்கிறேன்.
பாம்பின் ஆடைகளைக் கழட்டி வீசிவிடவா..வேண்டாம்.
பாம்பு என்றால் படையும் நடுங்குமாமே..
அவன் நடுங்க மாட்டானா!
அவன் தனித்திருக்கும் போதெல்லாம்
அவனருகில் செல்கிறேன்.
நடனமாடுகிறேன்.
என்னைக் கண்டவுடன் அலறிக் கொண்டு
தலைத் தெறிக்க ஓடுகிறான்.
ரசனையான விளையாட்டு..
பாம்புகளின் உலகத்தில்
ஏமாற்றங்கள் இல்லை
நிராகரிப்புகள் இல்லை
துரோகங்கள் இல்லை.
பயமில்லாமல் பயணிக்கிறேன்.

ஓம் நமசிவாய...

Sunday, March 8, 2020

யெளவனம் தொலைத்தவள்

Image result for durga devi painting

உன் கருவறையின்
இருளாகவும் ஒளியாகவும்
என்னை எரித்துக் கொண்டேன்.
உன் வில்வ மரத்தின் நிழலில்
என் யெளவனம் தொலைத்தேன்.
நீ கால்தூக்கி ஆடும்போதெல்லாம்
பூமிப் பந்தின் விசையை நிறுத்தும்
வித்தைகள் செய்தேன்.
நடராசன் நீ..
என்னைப் போராட அனுப்பினாய்
ஆயுதம் தாங்கினேன்.
முலை வற்றியது
முகம் கறுத்தது
உதடுகள் தடித்து வெடித்தன
பூக்களின் வாசம் மறந்துப்போனது.
ரத்தவாடையுடன் பிசுபிசுத்த கூந்தல்
கொடுமணல் பரப்பில் காய்ந்துப்போனது..
எப்போதாவது எட்டிப்பார்க்கும்
கனவுகளில் மிச்சமிருந்தது
நீ கடைசியாக கொடுத்த முத்தத்தின் வாசனை.
உன் கோட்டைகள் அதிர
வெற்றிமுரசுகள் ஒலிக்க
உன்னொடு ஆட ஓடோடி
வருகிறேன்..
உன் கழுத்து பாம்புகள் நெளிகின்றன.
நெற்றிக்கண் படபடக்கிறது அறியாமல்.
நீயோ மலர்ப்படுக்கையில்
அவளுடன் சயனித்திருக்கிறாய்..
கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்
மாலையிலிருந்து
ஒவ்வொரு மண்டையோடுகளாய்
உதிர்கின்றன…
ஓம் நமசிவாய.

Monday, December 2, 2019

பெண்ணும் பிறந்தவீடும்

..
ஏன் இந்த தண்டனை..?
யாருக்காக நான் சுமக்கிறேன்
இந்தச் சிலுவையை.?
பாவமன்னிப்பு.. ஹா.
யாருடைய பாவங்களை
யார் மன்னிப்பது?
தாயே.. எனக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்
நீ சுமந்த வேதனையை.
எனக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்
நீ சிந்தாமல் வைத்திருந்த கண்ணீரை
அம்மா.. பிறந்தவீடு..
உனக்கில்லாமல் போனதை
என்மீது சுமத்தியது எதற்காக?
உன் சாபவிமோசனமாய் நானும்
என் நாட்களும்.
எனக்கும் பிறந்தவீடு இல்லை.
கதவுகளை அவர்கள் பூட்டிவிட்டார்கள்.
மதியாதார் வாசல் மிதியாமை கோடிபெறும்..
அப்பாவின் மந்திரம்..
என் உயிர்மூச்சின் சுவாசமாய்
அறிவார்களோ..
கதவுகளைப் பூட்டிய கண்ணியவான் கள்
அப்பாவின் நிழலும்
அம்மாவின் வரமும்
நானாகிப்போனதில்
அப்பா கட்டிய வீட்டின் இரும்புக் கதவுகள்
பூட்டிக் கொண்டதோ.
நடுவீட்டில் குடியிருந்த மனசாட்சி
மரணித்துவிட்டதோ
பாவம்.. அப்பாவின் பிள்ளைகள்!
அம்மாவுக்குத் தெரியும்..
இன்னும் வெடிக்காத
என் கருவறையின் சாபம்..
அந்தரத்தில் மிதக்கிறேன்.
அனாதையைப் போல அலைகிறது
என் பிறந்தவீட்டு கனவுகள்.
வீடு என்பது வெறும் அறைகளும்
மாடியும் மட்டுமா..
வீடு என்பது சொத்தின் மதிப்பாக
நீங்கள் பத்திரப்படுத்திப் பூட்டி
வைத்திருக்கும் பட்டாவிலா இருக்கிறது!
வீடு என்பது…
வீடு என்பது..
தாயின் கருவறை.
தந்தையின் நிழல்
.
பணத்தின் வாசனையை மட்டுமே
அறிந்தவர்களுக்கு
வீட்டின் வாசனை எப்படி தெரியும்?
என் யெளவனத்தை சுமந்திருக்கும்
வீட்டின் கதவுகள் ..
ஊமையாகிவிட்டன.
என் கனவுகளை தூக்கிச் சுமந்த
வீட்டின் மொட்டைமாடி
வெறிச்சோடி கிடக்கிறது.
கர்ண புத்திரியாய்..
காத்திருக்கிறேன்..
அப்பாவின் வாரிசுகளே..
உங்களுக்காக ..
தாயிடம் கொடுத்த அந்த சத்தியவாக்கு
பலிக்கட்டும்.
காத்திருக்கிறேன்..
என்றாவது உங்களில் யாருக்கேனும்
என் உடலோ உயிரோ தேவைப்பட்டால்
அன்றும்..
கர்ணபுத்திரியாய்.. நானே..
என்னை நீங்கள் அறுத்த ரத்தச்சுவடுகளுடன்
வருவேன் உங்களுக்காக.
அப்பாவின் வாரிசுகள் வாழட்டும்.
அம்மாவின் புதல்வியர் வாழட்டும்.
அனாதையாக திரிகிறது..
அம்மா..
நீ அறிந்தே சுமந்த
சாபவிமோசனத்தின் கடைசித்துளி..
நதியில் பெருவெள்ளம்
மூழ்கி மூழ்கி கரைந்துவிட வேண்டும்
தாயே... தாமிரபரணியே....
நின்னைச் சரணடைந்தேன்.

Saturday, November 23, 2019

யாதுமாகி

Image result for woman in fire modern art"

யாதுமாகி நின்றவள்
யாதுமாகி
கரைந்துப்போவாளோ
காணாமல் போவாளோ
யாதுமாகி யாதுமாகி
யாதுமாகும் தருணத்தில்
யட்சி விழித்துக் கொள்கிறாள்.
வனமெங்கும் தீ பரவுகிறது.
பறவைகளின் சிறகுகள் படபடக்கும் ஓசை
ஆகாயம் அஞ்சி நடுங்குகிறது.
சிவா சிவா..
உனைத் தீண்டும் இன்பம்
தீயின் தாகம் தணிக்குமோ..
பனிமலை உருகி
இமயம் சரியுமோ..
கண்ணை மூடிக் காற்றில் கரைந்துவிடும்
காதல் கவிதை இனி தான் பிறக்குமோ!




Monday, November 18, 2019

ஆபுத்திர வம்சம்

Image result for abstraction art"

உன்னைத் தூக்கிச் சுமந்த
நினைவுகள்..
இன்னும் வெற்றிடமாகவில்லை.
கண்திறக்காத கருவறையில்
அடியே..
கையில் பிச்சைப்பாத்திரத்துடன்
நானும் என் நினைவுகளும்.
அமுதூட்டுவாயோ
அனாதையென விரட்டுவாயோ..
பச்சைக்கிளி பரிதவிக்கிறது.
நிராகரிப்புகளை மறப்பதற்கில்லை.
உன்னையும் தான்.
அமுதசுரபியை கடல்கொள்ளுமோ
கருவறைத் தாங்குமோ..
பிச்சைப்பாத்திரம்
என்னை அனாதையாக்கி
உன்னைத் தெருவில் நிறுத்துமோ..
தேவீ
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
எதுவுமில்லா கொலையுதிர்காலம்..
வா.. கையில் சூலாயுதம் ஏந்தி வா.
தனித்தே நிற்கிறேன்.
உன்னைச் சுமந்த கனவுகளுடன்
தனித்தே நிற்கிறேன்.
வா..
தாமிரபரணியின் கண்ணீர்
வற்றிவிடவில்லை
அடீயே
உன் பிரசவவேதனையை விட
கொடியது
என் கனவுகளின் தற்கொலை.
அமுதசுரபியா
பிச்சைப்பாத்திரமா..
ஆபுத்திர வம்சத்தை அலையவிடாதே.

Tuesday, October 29, 2019

சிதம்பர வெளி



Image result for sithampara ragasiyam"

யெளவனம் அழித்து இமயம் வந்தவள்
அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும்.
சிவ சிவ..
அந்தக் கதைகளைச் சொல்லி
விலக்கி வைக்காதே.
வெட்கமறியாத காமத்தீயில்
கங்கையைத் தெளித்து
புனிதங்களைப் போர்த்தாதே.
உமையை கங்கையை
மறந்துவிடச் சொல்லி
கட்டாயப்படுத்த மாட்டேன்.
கழுத்தை இறுக்கும் பாம்புகளை
கழட்டி விடு.
துணையைத் தேடி புதருக்குள் மறையட்டும்.
பாம்பு புற்றுக்கு பாலூற்ற
காத்திருக்கும் கூட்ட த்தை
நாகதோஷத்துடன் அலையவிடாதே.
சிவ சிவ..
காட்சி திரைகள் காலத்தைப் புரட்டுகின்றன.
வசனங்களை எழுதிவிட்டார்கள்.
பாடல் வரிகள் இசையுடன் காத்திருக்கின்றன.
ஒப்பனைகள் செய்தாகிவிட்ட து.
முன்பதிவு செய்தப் பார்வையாளர்கள்
ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்துவிட்டார்கள்.
நீல நிற திரைச்சீலை விலகும் காட்சி
கனகசபை வில்வ மாலையுடன்
ஆனந்த தாண்டவம் ஆடுகிறான்.
கைதட்டல்கள் விசில் சத்தங்கள்
இருளைக் கிழிக்கும் மின்னலென
அருவியை முத்தமிடுகிறாய்
நாடகத்தில் தான்.

உன் முத்த த்தின் ஈரத்தில்
காயாமலிருந்த விஷம்
கருவறையின் பனிக்குடம் நிறைத்து
பள்ளத்தாக்குகளில் படிகிறது.
பாறைகளைப் பிளந்து
சமவெளியாய் விரிகிறது.
பனியாய் உறைந்து கிடந்த
காமத்தின் இதழ்கள்
பற்றி எரிகின்றன.
குங்குமப் பூக்களைச் சாம்பலாக்கிய
பனித் தீ ..
சிற்சபை தாண்டி எரிகிறது.
தீயை அணைக்க வருகிறார்கள் காவலர்கள்.
ஆபத்து ஆபத்து அலறுகிறார்கள் ..அவர்கள்.
உடமைகளை உறவுகளைக் காக்க ஓடுகிறார்கள்.
தீயாக உன்னைத் தீண்டும் இன்பம்..
சிவ சிவா.. யாரறிவார்?
சிதம்பர வெளியில்
சூரியக் கங்குகள்
தொட்டிலில் ஆடுகின்றன.
(நன்றி -ஓம் சக்தி தீபாவளி மலர்2019)

Monday, October 7, 2019

தேவியும் கங்குபாயும்

Related image
என்னடீ தேவி , இன்னும் என்ன மெளனம்?
தண்டியா கோலாட்டம் கால்களின் குதியாட்டம்
ஒலி வெள்ளத்தில் மிதக்கிறது பெரு நகரம்.
தேவி… .. ஏனடி சிரிக்கிறாய்..?
பத்து நாட்கள் பதினொரு அடிமைகள்
ஆஹா .. போதுமா உன் பசி தீர்க்க?
கங்குபாய் காலடிப்பட்ட மண்
உனக்கு மட்டும் புண்ணிய பூமியா!
புரியவில்லை தாயே..
கோலாட்டம் .. பூமியைச் சுற்றி சுற்றி கோலாட்டம்.
ஆடுகிறாள் ஆடுகிறான்
கழுத்தில் நெளியும் பாம்புகளும் ஆடுகின்றன.
அமுதம்.. விஷம்.. காதல் கனவு நிஜம் பொய்
சுற்றி சுற்றி வலம் வருகின்றன.
ஆடி ஆடி களைத்துப்போகிறது இரவு.
மேகங்கள் கூந்தலை வருடிக்கொடுக்கின்றன.
தேவி..
விடியும் போது மயக்கம் தெளியலாம்.
சிவப்பு விளக்கின் பச்சை ஒளியில்
கங்குபாய் சிரிக்கிறாள்.
கனவுகள் வராமலிருக்க கதவுகளை
இழுத்துப் பூட்டுகிறேன்.


பிகு:
தேவியின் சிலைகள் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து
 அப்பெண்கள் காலடிப் பட்ட மண்ணால் மட்டுமே 
பூரணத்துவம் பெறுகின்றன!
கங்குபாய் இம்மாதிரியான சிவப்பு விளக்குப்
பகுதியில் – மும்பையின் காமட்டிப்புரத்தில்
வாழ்ந்தப் பெண்.

Friday, October 4, 2019

சிவதாண்டவம்


Image result for shiva modern artஊர்த்துவத் தாண்டவத்தில்
உன்னிடம் தோற்றுப்போன
சந்திரகாந்த தேவி அல்லவே நான்.
இதோ..
நானும் காலைத் தூக்கிவிட்டேன்.

உன் பிரணவ ஒலியில் கரைந்துவிட
உ ன் உமையல்ல நான்.
அண்ட சாரசரங்களை
எனக்குள் அடக்கும்
யோனி பீட த்தில்
உன் நெற்றிக்கண் தீப்பிழம்பாய்
எரிந்து சாம்பாலாகிப் போனது.
அந்தச் சாம்பலிலிருந்து
உன் ஆட்ட த்திற்குள் அடங்கும்
காத்யாயனி தேவியைக்
கண்டுபிடித்திருக்கிறாய்.
அவளோடு நீயாடும்
சிருங்காரதாண்டவம்
உனக்காக என்னை
ஏங்கித் தவிக்கவிடும்
கனவுகளில் நீ
கங்காதேவியையும்
துணைக்கு அழைக்கிறாய்.!
பித்தனே.. மறந்துவிடாதே.
பாற்கடலில் நீயுண்ட நஞ்சை
ஸ்கந்தமாதாவின் கைப்பிடிக்குள்
பத்திரமாக வைத்திருக்கிறேன் என்பதை.

மகாப்பிரளயம் சாட்சியாக
நீ ஆடப்போகும்
ஊழிக்கூத்துக்கு ஒத்திகைப் பார்க்க
என்னை அழைக்காதே.

என் கருமுட்டையிலிருந்து
நீ கற்றுக்கொண்ட பாடம்
ஆக்கலும் அழித்தலும்.
என்னில் சரிபாதியாக
நீ கொண்ட
அர்த்த நாரீஸ்வர கோலம்
உனக்கு நான் போட்ட
காதல் பிச்சை.

போதும்..
சிவதாண்டவ வேடங்களைக் களைந்து
வெளியில் வா..
காத்திருக்கிறேன் காதலியாக.
உன் நெற்றிக்கண்ணுக்கு
மட்டுமே தெரியும்
மூன்றாவது முலையோடு.

(மெளனத்தின் பிளிறல்- கவிதை தொகுப்பிலிருந்து)

Wednesday, September 18, 2019

ஆண்டாள் தேசம்

Image result for ஆண்டாள் ஓவியம்
ஆண்டாளுக்கு வளைகாப்பு
வெண்சங்குகள் சிரித்தன..
ஆண்டாள் தன் புருஷனின் காதில்
கிசு கிசுத்தாள்.
பிறக்கப்போகும் குழந்தைக்கு
நீயே தகப்பன் என்று
ஊரார் அறிய .. வளைகாப்பு..
பாற்கடல் விழித்துக்கொண்ட து.
அதானாலென்ன?
எல்லா பெண்களின் கருவறை விந்துகளிலும்
நானே இருக்கிறேன்.. அதிலென்ன சந்தேகம்?
மயிலிறகால் அவள் சூல் வயிற்தைத்
தடவிக்கொடுத்தான்.
"பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர்
வைக்கலாம்..?
சொல்லுங்கள் நாதா…"
"ஹரியின் பிள்ளை தானே அவன்.
ஹரிஜன் என்று பெயர் வை.."
அவள் வயிற்றிலிருந்த குழந்தை
காலால் உதைத்த து.
அந்த வலியில்…
அவள் கருவறை வெடித்து
அவன் பிறந்தான் ..
ஆண்டாள் தேசத்தில்
தொட்டில் குழந்தைகள்
திட்டம் அறிமுகமானது.

(பாலைத்திணை தொகுப்பிலிருந்து)

Sunday, March 3, 2019

ஆய்த எழுத்து


உயிர் எழுத்துகள்
சிறுபான்மையான என்னை ஒதுக்கி வைப்பதில்
கவனமாக இருக்கின்றன.
மெய்யெழுத்துகளுக்கு
இந்த மெய்யுடன் 
தீண்டாமை.
உயிர்மெய் வாதிகளுக்கு
எப்போதும் என்மீது ஒவ்வாமை.
ஆய்த எழுத்து நான்.
என்னை எவரும் வளைக்கவோ
சுழிக்கவோ சுருக்கவோ முடியாமல்
தோற்றுப்போனதை
அவர்களின் எழுத்து அதிகாரிகள்
எழுத மறுத்தாலும்
உன் பொருளதிகார கருவூலம்
மறந்துவிடவில்லை.
எழுத்துவரிசையில்
கடைக்கோடியில் ஒதுக்கப்பட்டதும்
காலந்தோறும் ஒடுக்கப்பட்டதும்..
ந ந்தன் எரிக்கப்பட்ட தும்
கதையல்ல.
ஒற்றுப்பிழைகள் அறியாத
புணர்ச்சி மையத்தின்இரவுகள்
சிவ சிவா..

உன் மூன்றாவது கண்
எனக்காக விழித்திருக்கிறது.
உன்மத்த தாண்டவத்தில் அடக்கிவிடாலம்
அடங்கிவிடலாம் என்று
ஆசைக்காட்டாதே.
சொல்வதைக் கேள்
இணையாத என் புள்ளிகளின்
இடைவெளியிலிருந்து
காற்றுப் பிரசவித்த
இசையின் குறிப்புகள்
உன் சப்த தாண்டவத்திற்குள் அடங்கிவிடுமோ!.
ஓம் நமசிவாய..

Thursday, February 21, 2019

கூண்டுக்குள் சிறுத்தை


சிறுத்தைச் சீறுவது
சிறுத்தைக்கு அழகு.
சிறுத்தையைப் பலர் ரசிப்பதும்
சிறுத்தையைச் சிலர் எதிர்ப்பதும்
சிறுத்தையின் சீற்றத்திற்காகவே.
சிறுத்தையை அடக்குவதில் தோற்றுப்போனவர்கள்
சிறுத்தையைப் பிடிக்க  
விதம் விதமாக கூண்டுகளைச் செய்தார்கள்.
தேர்தல் கூண்டு, கூட்டணி கூண்டு…
 எங்குப்பார்த்தாலும் கூண்டுகளின் கூடாரம்.
கூண்டுகளை எட்டிப்பார்த்த சிறுத்தை
கூண்டுக்குள் இருந்துகொண்டு சீறியது.
கோமாளிகள் கையில் கம்புடன்
சிறுத்தையின் சீற்றத்தைக் காட்டி
சர்க்கஸ் நட த்தினார்கள்.
காசு கொடுத்து பார்க்க வந்தவர்கள்
ஆராவாரமாக கை தட்டினார்கள்.
சிறுத்தைக்கு உற்சாகம் … பீறிட்ட து.
கூண்டுக்குள் சீறுவதும் ஏறுவதுமாக
வித்தைகள் காட்ட ஆரம்பித்த து.
சிறுத்தையைக் காதலித்து 
பித்துப்பிடித்த வனமோகினி
 காட்டுத்தீயில் காதலை எரித்து
தன்னையும் எரித்துக்கொண்டாள்.

Wednesday, February 13, 2019

நொண்டிச்சிந்து காதலன்





உன்னைப் பலர் காதலித்திருக்கலாம்
நீயும் சிலரைக் காதலித்தாய்.
உன் கண்ணம்மாவுக்காக
உருகி உருகி கவிதைகள் எழுதினாய்
பலரைப் பைத்தியமாக்கினாய்
தாசனுமாக்கினாய்.
ஆனாலும் என்னை மட்டும் தான்
எவரும் அறியாமல்  காதலித்தாய்..
உன்  காதலின்  வாசனையை
அந்தியில் மலரும் பூக்களிடம்
ரகசியமாக மறைத்து வைத்திருந்தாய்
உன் நடை உடை மீசை முண்டாசு..
அட ஏதோ ஒன்று
இப்போதும் என்னைத் தொந்தரவு செய்கிறது.
என்னைக் காதலித்தப் பலரும்
நான் காதலித்த சிலரும்
மழைக்காலத்தின் ஈரமாய்
வருகிறார்கள் .. நனைகிறார்கள்
போய்விடுகிறார்கள்..
நீ மட்டும் ஏன்
வெயிலைப் போல  நிரந்தரமாய்
என் காதல் பூமியின்
நிழலாகத் தொடர்கிறாய்?
பாடிக் கலந்திட துடிக்கிறாய்
தவம் பண்ணியது இல்லையடி
என்று அழைக்கிறாய்
என் செய்வேன்..?
எமகாதகா.. என் காதலா..
உன் முண்டாசு அவிழட்டும்.
என் முந்தாணியாய் விரியட்டும்..
வா..
காணி  நிலம் , முழு நிலவு
பத்தினிப் பெண் கேட்ட உன் காதலை
என்னைச் சந்திக்க வரும்போது
எடுத்து வராதே.
மலைத்தேனும் திணைமாவும்
உனக்காக காத்திருக்கிறது.
இதுவரை நீ அறியாத சுவை
உன் கவிதைக்குள் அடங்காத அருவி
என் காதல் வனம்..
வாபாரதி.. வா
நொண்டி சிந்து பாடுவோம். வா.

Tuesday, January 1, 2019

கொற்றவை விழித்துக்கொண்டாள்



Image may contain: 1 person


ஓம் ஓம் ஓம் தீம் தரிகட தீம் தரிகட
ஓம் ஓம் ஓம் ..
கொற்றவை விழித்துக்கொண்டாள்
இருள் சூழ்ந்தப் பொழுது..
கனமான தருணங்கள்..
கண்ணீர் விட முடியாத பெருமூச்சில்
காலச்சுமை ..
உன் தோள்களில் சரிந்து பிறவியின்
கடனைத் தீர்க்க துடித்த உயிரின் வலி..
கொற்றவை அழைத்தாள் என்னை. 
கண்களில் கண்ணீரைத் துடைக்கவில்லை
அவள்..
என்னை அழவிட்டாள்.
உப்புக்கரித்த கண்ணீரின் துளியில்
சமுத்திரம் பொங்கியது..
அலைகள் மலைகளை விழுங்கின.
என்னவாயிற்று என் சக்தியின் மகளுக்கு?
ஏன் கலங்குகிறாய் என் கொற்றவையே..
பாலை நிலத்தில் விடப்பட்டவள் நீ
கானல் நீருக்கு கலங்காத ஈரமல்லவா நீ
பாலைவனத்திலும் பசுஞ்சோலைகளை
பிரசவித்த உன் பனிக்குட த்தின் கருவறை..
இன்னும் மிச்சமிருக்கிறது..
பாலைவனத்தின் இரவுகள்..காத்திருக்கின்றன
மணல்வெளி எங்கும் புதைந்திருக்கிறது
இன்னும் எழுதாத உன் கவிதையின் மொழி..
முடியவில்லை.. 
இதுவரை நடந்த்தெல்லாம்
இனிமேல் நடக்கப்போவதற்கான 
ஒத்திகை மட்டும் தான்.
முடிந்துவிடவில்லை உன் ஆட்டம்
பஞ்சரப்பண் இசைக்கிறது.
நட த்து.. நடத்திக்காட்டு..
கொற்றவையைச் சீண்டியவனை
குல நாசம் செய்ய நினைத்தவனை..
ஏழுகடல்தாண்டி ஏழு கண்டம் தாண்டி
மூவுலகும் தாண்டி..முடித்திடுவேன்..
ஓம் ஓம் ஓம்.. தீம் தரிகட தீம் தரிகட..
ஓம் ஓம் ஓம்.. தீம் தரிகட தீம்தரிகட..
மாரம்பு அணிந்தவளை..
மல்லிகையின் மணம் மயக்குவதில்லை.
செங்கலும் சுவர்களும் கட்டி எழுப்பிய
உன் வீடுகளைத் துறக்கிறேன்.
ஆடை அணிகலன் ..துறந்தவள் நான்.
என்னை மயக்குவது எளிதல்ல,
கொற்றவையின் முகம் ..
பிரதியங்கதேவியின் விசுவரூபம்..
ஓம் ஓம் ஓம் தீம்தரிகட தீம்தரிகட..
கொற்றவை.. விழித்துக்கொண்டாள்..
உழிஞ மரத்தடியில் 
தூங்கிக்கொண்டிருந்த பெண்புலி..
தன் வேட்டைக்காக 
உன் எல்லைகளைத் தாண்டி 
எழுந்து வருகிறது.
நிலம் நடுங்கும் ஓசை..
ஓம் ஒம் ஒம்..

Friday, November 30, 2018

புனிதவதி எழுதும் சிவசூத்திரம்








இடியும் மின்னலும் இறங்கி வந்த நாளில்.
கோடானிக்கோடி கரங்களுடன் என்னைத்தழுவினான்.
பூமியும் ஆகாயமும் பயணிக்கும்
மின்னல்பாதையில் என்னைக் கடத்திச் சென்றான்.
மலை முகடுகளில் மோதி
அவனை எதிர்த்து எதிர்த்து
தோற்றுப்போனது இடி.
சாதகப்பறவைகள் அவனைக் கண்ட அச்சத்தில்
உருமாறி சிட்டுக்குருவிகளாய் சிறகடித்தன.
உடலற்ற அவன் முகம் 
என்னை நெருங்க நெருங்க
அவன் முத்தத்தின் வாசனை என்னைச் சுட்டது.
நினைவு அறைகளை அவன் தீ நாக்குகளால்
துடைத்து எடுக்கிறான்.
பூசைக்கு வந்த வேட்டுவர்கள்
அச்சத்தில் விட்டுச்சென்ற பஞ்சகந்தங்கள்
பாதை எங்கும் சிதறிக்கிடக்கின்றன.
காடெங்கும் பச்சைக்கற்பூர வாசனை.
வாழைகள் குலை தள்ளுகின்றன.
முடிவில்லாதவன்
காலத்தை வென்றவன்
மின்னலென கருவறைத் திறந்து
தன்னை உயிர்ப்பித்து கொள்கிறான்.
உடலற்றவனின் கருவைச் சுமப்பது
பிரம்மன் அறியாத படைப்பின் ரகசியமாய்
எனக்குள் புதைகிறது.
ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரிக்கின்றன.
ஏழுகடலும் ஏழு கண்டமும் 
எண்ணிலடங்கா நட்சத்திரப்பெண்களும்
சூரியச் சந்திரர்களும் 
ராகு கேதுவுடன்
என் பிரசவ நாளுக்காய் 
வாசலில் காத்திருக்கிறார்கள்.
யுகம் யுகமாய் மரக்கிளைகளைத் தழுவிக்கிடந்த 
மலைப்பாம்புகள் விழித்துக்கொள்கின்றன.
தன்னைத் தானே இறுகத் தழுவி
இறுகத் தழுவி 
கால இடைவெளியை நிரப்புகின்றன.
காலத்தில் ஏறி காலத்தைப் புணர்ந்து
காலத்தைச் சுமந்து
காலத்தைக் கடந்து 
வெறுமையே முழுமையாய்
மூலப்பிரகிருதியைப் பெற்றெடுக்கிறேன்.
அமுதும் நஞ்சும் வடியும் முலைப்பால்
பாற்கடலாய் பெருகி நிறைக்கிறது.
ஒளியும் இருளுமாக 
ஆடுகின்றான் தொட்டிலில்.
சொற்களை எரிக்கும் 
அவன் நெற்றிக்கண் சூட்டில்
காரைக்கால் வீதிகள் தலைகுனிகின்றன.
பனிமுகடுகளில் பொன்னொளி சூடிய கங்கை
புனிதவதியின் பாடல்களைப் பாடுகிறாள்.
பேயுரு களைந்து என் உரு கண்ட
அவன் விழிகளில் திருவந்தாதி.
#SHIVA _புனிதவதி_சிவசூத்திரம்
#shivasuthiram_punithavathi

(கோடுகள் - நவ2108 இதழில் வெளிவந்திருக்கும் கவிதை.
 கோடுகள் ஆசிரியருக்கு நன்றியுடன்)