அயல் மாநிலத்தில் தமிழ் வாசிப்பு.
எங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு எங்கள் புத்தகங்களை நாங்களே வாசித்துக்கொண்டு
பேசிப்பேசி அதில் புளகாங்கிதமடைந்து
எங்கள் புத்தகங்களை தமிழ் நாட்டிலிருந்து பிரபலங்களை வரவழைத்து வெளியிட்டு
அவர்களுடன் போட்டோ எடுத்து போட்டுக்கொண்டு
அதில் மாபெரும் சாதனை செய்துவிட்டதாக நினைத்து..
எல்லாமும் அர்த்தமிழந்து போகிறது எம் மும்பை வாழ்க்கையில்!
அதை உணர்ந்த தருணங்கள் வலி மிகுந்தவை.
வாசிப்பை எங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் அக்கறையுடன் ஒரு சிறுமுயற்சியாக நேற்று மும்பையின் புகழ்மிக்க SIWS கல்லூரி மாணவர்களுடன் வாசிப்பு நிகழ்வு. தமிழ்நேசன் முயற்சி. தமிழ்க்கூடம் அடுத்த நகர்வு.
"எங்கள் புத்தகங்களை வாசிக்க சொல்லவில்லை நாங்கள்.
நாங்கள் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளவும் இல்லை நாங்கள்.
அட, தமிழ்தான் ஆகச்சிறந்த மொழி
அதுவே உன் தாய்மொழி
என்றெல்லாம் பெருமை பேசவில்லை நாங்கள்.
நாங்கள் சொன்னதெல்லாம்
வாசிக்கலாம் புத்தகங்களை
வாருங்கள்
என்று மட்டும்தான்!
உனக்கு எந்தமொழியில் வாசிக்க முடிகிறதோ
அந்த மொழியில் புத்தகங்கள் வாசியுங்கள்.
என்று எங்களுக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும்
அவர்களிடம் சொல்லிக்கொண்டே
இருந்தோம்.
இரண்டு பிரிவுகளாக மாணவர்கள் வந்தார்கள்.
காலையில் பட்டப்படிப்பு மாணவர்கள்
பிற்பகலில் +2 மாணவர்கள்..
புத்தகங்களை அவர்கள் எடுப்பதும்
கூடிக்கூடி பேசுவதும்
அதில் ஒருவர் வாசிப்பதும்..
நாங்கள் பார்வையாளர்களாக அத்தருணத்தில்.
ஆனால்
அவர்கள் மீது படிந்திருந்த அந்த தயக்கம் எனும்
மெல்லிய பனிப்போர்வையை
விலக்கி வெளியில் வர...
தாமதமானது..
வந்தப்பிறகு ஒவ்வொரு பனித்துளியிலும்
ஒவ்வொரு சூரியன்,
மாணவர்கள் உலகம் ஒரு பிரபஞ்சம்.
வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு கேள்வியை
ரகசியமாக என்னிடத்தில் கேட்டான் அந்த மாணவன்..
அவனுக்கு "தமிழ் எழுத்துக்கூட்டி வாசிப்பது இன்னும்
வசப்படாமலிருக்கலாம். அவனுக்கு தமிழ் புத்தகங்களை
தமிங்கலத்தில் அதாவது தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் , அம்மா என்ற சொல்லை ammaa என்று வாசிக்கும் வசதி இருக்கிறதா என்று!
என்னிடம் பதில் இல்லை.
அவன் அச்சுப்பதிப்பு எதிர்பார்க்கவில்லை.
ஆன்லைன் புத்தகங்களில் அந்த தொழில் நுட்ப வசதி
இருக்கிறதா என்று கேட்கிறான்!
அப்படியான ஒரு தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது கடினமல்ல.
சாத்தியம்தான்.
அவனுக்கு தமிழின் தொன்மையும்
அதில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்சுரங்கமும்
தெரிகிறது.
அதற்கொரு சின்ன டார்ச் லைட் தேவை.
அவ்வளவுதான்.
தமிழ் நாட்டின் எல்லைகள் தாண்டி
அயல் மாநிலத்தில்
எங்கள் அசைவுகள்
எங்கள் இருத்தலுக்கானவை மட்டும் அல்ல.
இதைப் புரிந்துகொள்ளாமல்
தமிழ் வாழ்ந்துவிடும்
தமிழ் வாழ்க
என்று முழக்கமிடுபவர்கள்
கொஞ்சம் விலகி நில்லுங்கள்.
நன்றி : SIWS & மும்பை தமிழ் இலக்கியக்கூடம்
சிறப்பு நல்ல முயற்சி தொடர்ந்து செய்தால் மணவர்களுக்கு பயன்உள்ளதாக இருக்கும் வாழ்த்துகள்💐
ReplyDeleteஉண்மையில் மாறுபட்ட ஒரு நிகழ்வு, இந்த நாள் வாழ்வின் சிறப்புக்குரிய ஒன்று என உறுதியாக சொல்ல முடியும். மாணவர்களுக்கான நாள் மட்டுமல்ல; நமக்கானதும் கூட.
ReplyDeleteபிற மாநிலங்களில் மட்டுமல்ல தமிழ்நாடும் இந்த நிலையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையில் பேச்சுத் தமிழ் மட்டுமே இருக்கும் என்று சொல்கிறார்கள். அதற்கு அடுத்த தலைமுறைகளுக்கு அதுவும் இருக்குமா என்பதும் சந்தேகமே. ஆனால் வெளி மாநிலங்களில் வசித்தும் நீங்கள் செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இது தமிழ்நாட்டுக்கு வழிகாட்டுதல் என்றும் கூறலாம்.
ReplyDeleteயாரும் சிந்திக்காத நிகழ்வு தொடந்து தொய்வின்றி நடைபெறவேண்டும்!
ReplyDeleteஇந்தப் பணியை மேற்கொண்ட அனைத்து சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
நல்ல முயர்ச்சி மேடம்.
ReplyDeleteஇத்தகைய தொழில்நுட்பம் நிச்சயம் இருக்கும்.
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தாலேயே தமிழில் எழுதும் கீபோர்டு அனைத்து மொபைல்களிலும் காணக் கிடைக்கும்போது அதன் தலைகீழ் வேலையைச் செய்யும் நுட்பம் இருக்காதா என்ன?
ஐலேசா என்னும் மென்பொருள் எந்த ொரு புத்தகத்தையும் உள்ளீடாகப் பெற்று நாம் கேட்கும் மொழிக்கு மொழிப்பெயர்ப்பதாக திரு வேடியப்பன் அவர்களின் பேட்டி மூலம் அரிந்துகொண்டேன். மொழிப்பெயர்பாளர்கள் சிரிது திரித்தங்கள் செய்து நூலை எளிதில் தயார் செய்யலாம் என கூறினார்.
எனவே, பல நூல்கள் பல மொழி வாசகர்களுக்கு சென்று சேரப்போவது தின்னம்.