Friday, November 30, 2018

புனிதவதி எழுதும் சிவசூத்திரம்








இடியும் மின்னலும் இறங்கி வந்த நாளில்.
கோடானிக்கோடி கரங்களுடன் என்னைத்தழுவினான்.
பூமியும் ஆகாயமும் பயணிக்கும்
மின்னல்பாதையில் என்னைக் கடத்திச் சென்றான்.
மலை முகடுகளில் மோதி
அவனை எதிர்த்து எதிர்த்து
தோற்றுப்போனது இடி.
சாதகப்பறவைகள் அவனைக் கண்ட அச்சத்தில்
உருமாறி சிட்டுக்குருவிகளாய் சிறகடித்தன.
உடலற்ற அவன் முகம் 
என்னை நெருங்க நெருங்க
அவன் முத்தத்தின் வாசனை என்னைச் சுட்டது.
நினைவு அறைகளை அவன் தீ நாக்குகளால்
துடைத்து எடுக்கிறான்.
பூசைக்கு வந்த வேட்டுவர்கள்
அச்சத்தில் விட்டுச்சென்ற பஞ்சகந்தங்கள்
பாதை எங்கும் சிதறிக்கிடக்கின்றன.
காடெங்கும் பச்சைக்கற்பூர வாசனை.
வாழைகள் குலை தள்ளுகின்றன.
முடிவில்லாதவன்
காலத்தை வென்றவன்
மின்னலென கருவறைத் திறந்து
தன்னை உயிர்ப்பித்து கொள்கிறான்.
உடலற்றவனின் கருவைச் சுமப்பது
பிரம்மன் அறியாத படைப்பின் ரகசியமாய்
எனக்குள் புதைகிறது.
ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரிக்கின்றன.
ஏழுகடலும் ஏழு கண்டமும் 
எண்ணிலடங்கா நட்சத்திரப்பெண்களும்
சூரியச் சந்திரர்களும் 
ராகு கேதுவுடன்
என் பிரசவ நாளுக்காய் 
வாசலில் காத்திருக்கிறார்கள்.
யுகம் யுகமாய் மரக்கிளைகளைத் தழுவிக்கிடந்த 
மலைப்பாம்புகள் விழித்துக்கொள்கின்றன.
தன்னைத் தானே இறுகத் தழுவி
இறுகத் தழுவி 
கால இடைவெளியை நிரப்புகின்றன.
காலத்தில் ஏறி காலத்தைப் புணர்ந்து
காலத்தைச் சுமந்து
காலத்தைக் கடந்து 
வெறுமையே முழுமையாய்
மூலப்பிரகிருதியைப் பெற்றெடுக்கிறேன்.
அமுதும் நஞ்சும் வடியும் முலைப்பால்
பாற்கடலாய் பெருகி நிறைக்கிறது.
ஒளியும் இருளுமாக 
ஆடுகின்றான் தொட்டிலில்.
சொற்களை எரிக்கும் 
அவன் நெற்றிக்கண் சூட்டில்
காரைக்கால் வீதிகள் தலைகுனிகின்றன.
பனிமுகடுகளில் பொன்னொளி சூடிய கங்கை
புனிதவதியின் பாடல்களைப் பாடுகிறாள்.
பேயுரு களைந்து என் உரு கண்ட
அவன் விழிகளில் திருவந்தாதி.
#SHIVA _புனிதவதி_சிவசூத்திரம்
#shivasuthiram_punithavathi

(கோடுகள் - நவ2108 இதழில் வெளிவந்திருக்கும் கவிதை.
 கோடுகள் ஆசிரியருக்கு நன்றியுடன்)

No comments:

Post a Comment