Friday, December 7, 2018

ஒரு கிலோ வெங்காயம்...


 இந்தியத் தலை நகரில் விவசாயிகளின் போராட்டமும்
பேரணியும். காவிரி டெல்டாவில் இயற்கைப் பேரிடர்,
மேகதாது அணைக்கட்ட கர்னாடக அரசுக்கு எதிர்ப்பு..
இப்படியாக விவசாயிகளை முன்வைத்து தொடரும்
போராட்ட களமும் அரசியலும் வெளிச்சத்திற்கு வரும்
இக்காலத்தில் தான் எங்கேயோ ஒரு பெட்டிச்செய்தியாக
இன்னொரு செய்தியும் வாசித்தும் வாசிக்கப்படாமல்
வெற்று சொற்களில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
செய்தி இதுதான்…
நாசிக் மாவட்ட த்தில் வாழும் விவசாயி சஞ்சய் சாத்தே
4 மாத உழைப்பில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை
விற்க மார்க்கெட் வந்திருக்கிறார். ஒரு கிலோ வெங்காயம்
ஒரு ரூபாய் என்று விலை பேசி இருக்கிறார்கள். எப்படியோ
இறுதியாக ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் 40 காசுக்கு
விற்பனை ஆகி இருக்கிறது . அவருக்கு 4 மாத உழைப்புக்கு
கிடைத்த மொத்த தொகை ரூ1064/மட்டும் தான்.
மனம் உடைந்த அவர் தனக்கு கிடைத்த ரூ 1064 ஐ
மொத்தமாக ரூ 54 செலவு செய்து பிரதமர் நிவாரண
நிதிக்கு அனுப்பி விட்டார். அமெரிக்க அதிபர் ஓபாமா
இந்தியா வந்திருந்தப் போது ஓபாமாவைச்சந்திக்க
தேர்வு செய்யப்பட்ட இந்திய விவசாயிகளில் இவரும்
ஒருவர்.

உணவு அரசியலானது
வெங்காயம் அரசியலானது.
வெங்காயம் பகற்கொள்ளையானது.
வெங்காயம் கொலையும் செய்கிறது...


இப்போது தான் ஒரு கிலோ வெங்காயம்
வாங்கி வந்தேன். விலை …?
வேண்டாம்..
ரொம்பவும் கனக்கிறது.. வாங்கிவந்த வெங்காயம்..





No comments:

Post a Comment