Thursday, September 6, 2018

நவபுகா வாசனை



மொட்டுகள் விரிந்து விரிந்து
மலைமுகடுகளை மூடிக்கொண்டிருந்தன.
எரிமலை வெடித்துச் சிதறியதில் பூத்த
நவுபுகா மலர்கள்
மச்சபுராணத்தை எழுத முடியாமல்
உதிர்ந்து போகின்றன.
மலைமுகடுகளில் எதிரொலிக்கும் அவன் குரல்
அவள் ஆவியைத் தொட்டு எழுப்புகிறது.
அவள் மீண்டும் உயிர்த்தெழுகிறாள்.
குகைகளில் உறங்கிக்கொண்டிருந்த
பெண் தெய்வங்கள் 
அருவிகளில் நீராடி 
ஆடை மாற்றிக்கொள்கிறார்கள்.
ஐம்பூதங்களும் தலைவிரித்தாடுகின்றன.
இயற்கையின் குருஷேத்திரம்
இன்னும் முடியவில்லை.
கடலா தீவா..
பெருங்கடலை தீவு என்ன செய்துவிடமுடியும்?
கடலின் ஆராவாரமும் ஆர்ப்பாட்டமும்
இன்னும் அடங்கவில்லை…
எரிமலை வெடித்துச் சிதறிய தீவுகள்
கடலுக்குள் அடங்காத காமத்துடன்
கரையேறுகின்றன.
காதலர் பிரிவின் சாட்சியாக
பாதி மலர் கடற்கரையிலும்
மீதி மலர் மலைமுகடிலுமாக பூத்திருக்கும்
நவபுகா மலர்கள்..
ஒவ்வொரு மலையிலும் ஒரு காதல் கதை..
ஒவ்வொரு மலையிலும் கோவில் கட்டி குடியிருக்காத
பெண் தெய்வங்கள்..
மதமாற்ற காலனிய புயலில் அனாதைகளாகிவிட்டார்கள்.
அலைகளின் ஆட்டம் மீனின் பாய்ச்சல்
காற்றின் குரலாய் மரக்குடிசைகள் ஆடுகின்றன.
அவள் பாடலில்
என்னை மீட்டெடுத்தேன்.
ருத்திராட்ச காடுகளில்
அவன் காலடி ஒசை.
ஓம் ஒம் ஒம்..
கடலின் ஓசையும் 
காற்றின் ஓசையும்
ஓம் ஒம் ஓம்..
அவன் சடைமுடியில் சூடிய நட்சத்திரங்கள்
கொற்றவையின் சினம் தணிக்க
முடியாமல் தடுமாறுகின்றன.
எரிமலை அவளுக்காக பூக்களைத் தூவுகிறது.
நிலம் நடுங்கிக்கொண்டே இருக்கிறது.
பூதகணங்கள் அவள் கண்ணசைவுக்காக காத்திருக்கின்றன.
தணியுமோ அவள் தாகம்?
கனியுமோ அவள் இதயம்!
காத்திருக்கிறது காலதேவனின்
நவபுகா வாசனை.
(க்வாயி தீவின் நினைவுகளில்.. )

No comments:

Post a Comment