Tuesday, September 11, 2018

சூர்யா@நட்புமண்டலம்.11




சூர்யா..
உன்னை ஏன் சந்தேகத்தில் பிடித்தார்கள்?
என்ன செய்தாய்..இந்த நாட்டிற்கு எதிராக?
இரவோடு இரவாக உன்னைப் பிடித்துக் கொண்டு போனார்கள்
என்று உன் தோழர்கள் சொன்னார்கள்.
நீ என்ன ஆனாய்? 
உன்னை அவர்கள் என்ன செய்தார்கள்?
எதுவும் தெரியாமல் கழிந்த இருண்ட நாட்கள்
நீ செய்தது குற்றமா..?
நீ போராடத் தெரிந்தவன்..
உன் களத்தில் சிந்தப்பட்ட ரத்தங்களுக்கு கறைகள் கிடையாது.
இன்னும் சிலர் சொன்னார்கள்..
நீ சிறையில் இல்லை
தலைமறைவாகிவிட்டாய் என்று.
எனக்கென்னவோ இரண்டாவது செய்தியில் தான் நம்பிக்கை.
காரணம் நீ அனுப்பிய புத்தகங்கள்..
துண்டுச் சீட்டுகள்
பத்திரிகைகள்..
அப்படியான ஒரு புத்தகம்.. என் வாசலுக்கு வந்தது.
"அம்மாளைக் கும்பிடுகிறானுகள்"
படிக்க படிக்க ...சூர்யா...
நம்பவே முடியலைடா..
நான் முதல் முறையாக "ஓர் இந்தியன்" என்று 
சொல்லிக்கொள்ள வெட்கப்பட்ட
தருணங்கள் அவை.
என் முகத்தில் அப்பி இருக்கும் இந்தியன் என்ற 
கருப்பு மையை எடுத்து இந்து மகாசமுத்திரத்தில்
கரைத்துவிட துடித்தன
என் கைகள்.
தேசியம் இல்லாத தேசத்தில் 
(Nation without the Nationality)
ஆள்பவர்களுக்கு கொடிப்பிடிக்கவே 
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம்.
கண்டி வெகுதூரமில்லை
கடலும் மிக ஆளமில்லை என்று அரபிக்கடலோரம்
முழக்கமிட்டது. (கவிஞர் கலைக்கூத்தன் கவிதை வரிகள்)
நான் அந்தக் கூட்டத்தில் 
“நீ அகதி அல்ல” என்று கத்தினேன்.
என் குரல் ஏழு கடல் தாண்டி
ஏழு கண்டங்கள் தாண்டி அந்த எட்டாவது கண்டத்திலும்
எதிரொலிப்பதாக ஒரு பாவனையில்..
நீ அகதி அல்ல!
நம்மைப் பிரித்து நிற்பது 
இந்து- 
சமுத்திரம் மட்டுமல்ல 
சட்டமும் தான்.. 
உன்னைப் பார்க்காமல் இருக்கவேண்டுமென
சட்டம் போட்டு ஜெயித்தவர்கள்
உன்னை - நான் 
நினைக்காமல் 
இருக்கவேண்டுமென 
சட்டம் போட்டு 
நித்தமும் 
தோற்றுக்கொண்டுருக்கிறார்கள்
நீ- 
குண்டு மழைகளில் 
நனைந்தபோது 
என் பூமி 
இங்கே 
வறண்டு போனது.
நீ- 
இருட்டில் 
விழித்துக் கொண்டிருக்கின்றாய்.. 
இங்கே- 
பகலில் கூட 
என் கண்கள் 
கருப்பு துணியால் 
கட்டப் பட்டிருக்கின்ற..
நம் - 
இருவர் உலகமும் 
இருண்டு போனதால் 
நம் - 
கனவுகள் கூட 
பதுங்கு குழியில்..
நீ- 
விடியலுக்காக 
காத்திருக்கின்றாய்.. 
நான் 
வெளிச்சமெல்லாம் 
விடியலல்ல 
என்பதால் 
உனக்காக 
விழித்திருக்கின்றேன்..
நீ-அகதி 
என்று எழுதியது 
என் சட்டம்..! 
நீ- அண்ணன் 
என்று துடிக்கிறது 
என் ரத்தம்…!!
அரபிக்கடலோரம் எங்கள் குரல் ஆர்ப்பரித்தது.
சொற்களைச் சூடேற்றி குளிர்காய்ந்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதினோம்.
எங்களை நாங்களும் போராளிகள் என்று
சொல்லிக்கொண்டோம்.!! (வெட்கக்கேடு)
சொற்களின் ஒலிக்குப்பைகளைக் கேட்டு கேட்டு
மரத்துப் போன எம் செவிகளுக்கு
உன் மவுனம் புரியவில்லை!
நீ மட்டும் தான்
சொற்களைக் கடந்து சென்றாய்.
உன் காலடியோசையில் 
காடுகள் செழித்தன.
எதை ,யாரை வெல்ல வேண்டும் என்று இந்த இனம்
ஒரு தலைமுறையில்.. தன் வாழ்க்கையைத் தொலைத்ததோ
உன்னையும் என்னையும் இணைத்த நம்
தந்தையர் தலைமுறையில் போராடியதோ...,
அந்தப் போராட்டம் ..
நம் தலைமுறையில் திசைமாறிப் போய்விட்டது.
இன்று நம் இனம் கூடுகள் இல்லாத குஞ்சுகளாய்..
காக்கையின் கூட்டில் பொறித்த குயிலின் குஞ்சுகளாய்..
வலிக்கின்றது சூர்யா..
நீயாவது போராடுகின்றாய்..
உன் மனசாட்சியை அடகு வைக்காமல்,
எந்தச் சட்டத்திற்கும் பயப்படாமல்,
எந்த உறவுகளிலும் உன் சுயமிழக்காமல்,
நாளையப் பற்றிய பயத்தில் 
இன்றைய நியாயங்களை
அடகு வைக்காமல்
நீ நீயாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்.
நான்....??????????

No comments:

Post a Comment