Thursday, September 20, 2018

அம்மாவின் வாசனை..




ஒளியில் பிறந்த நட்சத்திரங்கள்
இருளை விலக்கி வைத்துவிட்டன.
உன்னை எரித்த தீயின் மிச்சம்
என்னைச் சுற்றி இன்னும் அணையாமல்.
தீயைத் தீயால்  அணைக்கும் தீ நாக்குகள்
அமாவாசையை இருளிடமிருந்து
விலகச் சொல்கின்றன.
என் மீது வீசும் உன் கருவறைவாசனையை
அவர்களால் துடைத்தெடுக்க முடியாமல்
தோற்றுப்போகிறார்கள்.
அவர்களின் பஞ்சாயத்து தீர்மானிக்கிறது
இனி 
மழைநீரிலிருந்து  ஈரம் விலகட்டும்..
அரசாணைகள் அந்தப்புரத்திலிருந்து வருகின்றன
அவர்களுக்கு குடைப்பிடித்து நடந்த என் நிழல்
என்னை விட்டு விலகுகிறது.
இடியும் மின்னலுமாய்  வானம்.
கருக்கொண்ட கார்மேகத்தில்
முகம் மறைக்கும் உன் மூக்கூத்தி
என்னைப் பரவசமூட்டுகிறது.
அம்மா என்று அலறல் கேட்டு
இடி இடிக்கிறது..
மின்னல் விழுந்த மரமாய்
என் கவிதைகள் சரியும் தருணம்
எங்கிருந்தோ பறந்து வந்த அந்தப் பறவை
அது…. நீ.. !
நீ தானே அம்மா..!!
விடியலைச் சுமந்திருக்கும் இருட்டிலிருந்து
பூவின் இதழ்கள் விரிகின்றன.


No comments:

Post a Comment